கடந்து வந்த பாதை – தி சிராங்கூன் டைம்ஸ்

சிங்கப்பூர் தனிநாடாக மலர்ந்து, அரைநூற்றாண்டு கடந்து, தன் பொன்விழா தேசிய தினத்தை 9 ஆகஸ்ட் 2015இல் கொண்டாடியது. அந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழும் தன்னம்பிக்கையுடன் ‘சிங்கைத் தமிழரின் சிறப்பு’ என்ற முழக்கவரியுடன் 32 பக்க அச்சிதழாகத் தன் முதலடியை எடுத்து வைத்தது. நான், எம்.கே. குமார், பாரதி மூர்த்தியப்பன் ஆகியோர் ஆசிரியர்  குழுவில் இருந்தோம். 

அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ ஓரிரு இதழ்கள் வெளிவந்து அம்முயற்சி நின்றுபோனதால் இம்முறை ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்ற அதீத கவனம் எங்களுக்கு இருந்தது. இலக்கியம், சமூகம், மொழி, பண்பாடு, வரலாறு இவற்றை ஒட்டியே பயணிக்கவேண்டும் என்பதைத் தீர்க்கமாக முடிவு செய்துகொண்டோம். இதழ் மெதுவாக வளர்ச்சியடைந்தாலும் பரவாயில்லை ஆனால் வெற்றுப் பொழுதுபோக்கு இதழாக ஆகிவிடக்கூடாது என்ற நிறுவனர் எம்.ஏ. முஸ்தபாவின் அறிவுரை எங்களை வழிநடத்தியது. நிறுவனர் அளித்த பொருளாதார உதவி எங்களுக்கு உறுதுணையாக இருந்த அதே வேளையில் இதழியலில் எந்த முன்னனுபவமும் இல்லாத ஆசிரியர் குழு என்பதால் முடிவுகள் எடுப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டோம்.

சிறுகதை, கவிதை, பத்தி, கட்டுரை, நேர்காணல், நூலறிமுகம் என வழக்கமான அம்சங்களையே சிராங்கூன் டைம்ஸும் கொண்டிருந்தாலும் அவற்றில் தரத்தைக்கூட்டி இதழை வேறுபடுத்திக்காட்ட முயன்றோம்; வாசகர் மனதில் இடம்பிடிக்க முயன்றோம். ஓரளவுக்கு வெற்றியும் பெற்றோம். எடுத்துக்காட்டாக ஆய்வாளர் பாலபாஸ்கரனின் நொபொரு கராஷிமா, கு.அழகிரிசாமி குறித்த கட்டுரைகளைச் சொல்லலாம். ‘கல்வெட்டுகளிலிருந்து அரச வெற்றிகள் பற்றிக்கேட்கும் உரத்த குரலை மட்டுமின்றி அவற்றிலிருந்து வரும் முனகல்களையும் கேட்க வேண்டும்’ என்பதை கராஷிமாவின் சித்தாந்தமாக பாலபாஸ்கரன் எழுதியிருந்தது தமிழாய்வு குறித்தும் உணர்ச்சிகரமாகவும் ஆர்வமூட்டக்கூடிய வகையிலும் எழுதமுடியும் என்பதை மெய்ப்பித்தது. அதைப்போலவே கு.அழகிரிசாமி டொரியான் பழத்தின் மீதும் மலாயா இலக்கியத்தின் மீதும் கொண்டிருந்த காதலை பாலபாஸ்கரன் விவரித்திருந்த கட்டுரை வெளிவந்தபோது சிங்கப்பூர் இலக்கிய ஆர்வலர்களிடையே பேசுபொருளானது.

முதல் ஓராண்டு நிறைவதற்குள், எண்ணிக்கை அதிகமில்லை என்றாலும்கூட, சிராங்கூன் டைம்ஸ் தனக்கென வாசகர்களை உருவாக்கியிருந்தது. அடுத்த இதழ் எப்போது வெளியாகும் என்ற விசாரிப்புகள் எங்களை ஊக்கப்படுத்தின. இக்காலகட்டத்தில் அழகுநிலா, சிவானந்தம் நீலகண்டன், பாண்டிதுரை ஆகியோர் தமது சிறப்பான புனைவு, அபுனைவுப் படைப்புகளைத் தொடர்ந்து அளித்து வந்தனர். முதலாண்டு நிறைவில் அவர்களையும் ஆசிரியர் குழுவில் இணைத்துக் குழுவை வலுப்படுத்திக்கொண்டோம். 

இரண்டாமாண்டில் நாங்கள் புதிதாகச் செய்த முயற்சி மொழிபெயர்ப்பு. அதுவரை பாரதி மூர்த்தியப்பன் மொழிபெயர்த்த ஒன்றிரண்டு உள்ளூர்க் கவிதைகளை வெளியிட்டதைத் தவிர்த்து வேறு மொழிபெயர்ப்புப் படைப்புகள் இடம்பெற்றதில்லை. சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைக்குத் தேவையானவை என்று நாங்கள் கருதும் ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட விரும்பினோம். 

நல்வாய்ப்பாக கொள்கை ஆய்வுக் கழகத்தில் சிறப்பு ஆலோசகராக இருந்த திரு.அருண் மகிழ்நன் அம்முயற்சி வெற்றிபெற வழிவகுத்தார். சிங்கப்பூரின் கொள்கை ஆய்வுக் கழகக் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட அனுமதி பெற்றுத் தந்தார். அந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் இதழுக்கு மேலும் ஒரு வண்ணத்தைக் கூட்டின. சிங்கப்பூரின் மையப்பெருந்தீவு எவ்வாறு அதன் சிறுதீவுகளையெல்லாம் உண்டுசெரித்து வளர்ந்துள்ளது என்று விவரிக்கும் ‘மறையும் தீவுகளில் மலரும் தடங்கள்’ என்ற மொழிபெயர்ப்புக் கட்டுரையை ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். சிவானந்தம் நீலகண்டனும் அஷ்வினி செல்வராஜும் அப்பணியைத் திறம்படச் செய்தனர். அப்போது எங்கள் முழக்கவரியும் ‘சிங்கைத் தமிழரின் சிந்தனை’ என மாற்றம் கண்டிருந்தது. கனமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகளே ஓர் இதழின் முகத்தை வலுவாக மாற்றும் சக்தி கொண்டவை என மெல்ல மெல்ல அறிந்தோம்.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழுக்கென பிரத்தியேகமாக எழுதப்பட்ட உள்ளூர்ப் புனைவுகளைப் பெறுவது சவாலாக இருக்கும் என்பது நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால், சிரமங்களுக்கு இடையிலும் தொடர்ந்து எங்களுக்கு நல்ல கதைகள் கிடைத்தன. எம்.கே.குமாரின் நல்லிணக்கம், சித்துராஜ் பொன்ராஜின் அநாகதம், உமா கதிரின் மார்க்கும் ரேச்சலும், ஹேமாவின் அவளுக்கென்று ஒருதினம் என இன்று பலராலும் நினைவூகூறப்படும் சிறுகதைகள் அக்காலகட்டத்தில் சிராங்கூன் டைம்ஸில் வெளியான கதைகளே. தகுந்த தளம் உருவாகும்போது அதற்கேற்ற புனைவுகள் இயல்பாக அங்கு வந்தடையும் என இப்புனைவுகளின் வரவு உணர்த்தியது. படைப்புகளின் வரவு அதிகரித்ததால் இதழுக்கு 48 பக்கங்களாகக் கூட்டிக்கொண்டோம். சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரியமும் சிராங்கூன் டைம்ஸ் இதழ்களை வாங்கி ஆதரவு நல்கியது. அடுத்தடுத்து எங்களுக்கான பாதை விரிவாகியபடியே சென்றது.

இரண்டாமாண்டு நிறைவில் சத்யா, சித்ரா ரமேஷ், விஜய், அஷ்வினி என்று மேலும் நால்வர் ஆசிரியர் குழுவிலும் இன்னபிற இதழ்த் தயாரிப்பு வேலைகளிலும் இணைந்து கொண்டதால் தரத்தில் சமரசரம் செய்துக்கொள்ளாமல் வேகத்தைக் கூட்ட முடிந்தது.

மூன்றாமாண்டு தொடங்கிய சில மாதங்களில் பொறுப்பாசிரியர் பதவி உருவாக்கப்பட்டது. சிவானந்தம் நீலகண்டன் முதல் பொறுப்பாசிரியராக ஆனார். சில தீவிர இலக்கிய விமர்சனங்களையும் விவாதங்களையும் முன்னெடுத்தார். சிங்கப்பூர்ப் பெண் படைப்பாளிகளின் எழுத்துகளை முன்வைத்து ம.நவீனுக்கும் அவருக்கும் இடையே நடந்த காரசாரமான விவாதங்கள் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இதழின் அனைத்துப் படைப்புகளையும் சிங்கப்பூரில் வசிப்பவர்களிடமிருந்தே பெறவேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்துச் செயல்படுத்தினார். ஒவ்வொரு இதழிலும் பெரும்பான்மை எண்ணிக்கையிலான படைப்புகள் ஆசிரியர் குழுவுக்கு வெளியேயிருந்து வரவேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தினார்.

அக்காலகட்டத்தில் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ தன் முதல் 25 இதழ்களை நிறைவு செய்திருந்ததால் அவ்விதழ்களில் அறிமுகமான 50 படைப்பாளிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுடன் ‘காலச்சிறகு’ என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது. அத்தொகுப்பை சிங்கை இலக்கிய உலகில் சிராங்கூன் டைம்ஸ் ஏற்படுத்தியிருந்த எழுச்சியின் அடையாளமாகக் குறிப்பிடலாம். சிறுகதைச் சிறப்பிதழ் ஒன்றும் (மார்ச் 2018) கொண்டுவரப்பட்டது. பயணக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. குறுகிய காலத்தில் சிராங்கூன் டைம்ஸ் சிங்கப்பூர் நவீன இலக்கியத்தின் ஓர் முகமாக உருவாகி வந்ததை நாங்களே ஆச்சரியமாக கவனித்தோம்.

மூன்றாமாண்டின் குறிப்பிடத்தக்க சிறப்பு முயற்சியாக, பல்கலைக் கழக வளாகங்களுள் மட்டுமே வளையவந்துகொண்டிருந்த ஆய்வுக்கட்டுரைகளைத் தேடிப்பிடித்து வெளிக்கொணர்ந்து தமிழ்ச் சமூகத்தின் பார்வைக்குக் கிடைக்கச் செய்ததைச் சொல்லலாம். பதாரியாவின் ‘மகுதூம் சாயபு யார்?’ கட்டுரை ஓர் எடுத்துக்காட்டு. அறிவுசார் முயற்சிகள் அனைத்தும் வெகுமக்களிடம் சேர நாங்கள் எடுத்த முயற்சிகள் நல்ல பலனைக் கொடுத்தது. இவை இதழியல் முயற்சி மட்டுமல்ல அதன்வழி ஒரு பண்பாட்டை நிறுவும் செயல்பாடு என்ற தெளிவு ஏற்பட்டது.

ஏப்ரல் 2018 இதழில் மஹேஷ்குமார் பொறுப்பாசிரியராகப் பதவியேற்றார்; இன்றுவரை தொடர்கிறார். ஆசிரியர் குழுவில் அனைவருமே தன்னார்வத்தில் பணியாற்றுபவர்கள் என்பதால் அவரவர் சொந்த வாழ்க்கை நெருக்கடிகளுக்கேற்ப தொடர்ந்து பல இணைவுகளும் விலகல்களும் இருந்தாலும் சிராங்கூன் டைம்ஸின் வளர்ச்சி முன்னும்பின்னுமாக இல்லாமல் தொடர்ந்து முன்சென்று கொண்டிருப்பது எவ்விதப் பொருளாதாரப் பயனும் இல்லாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்குழு நண்பர்கள் கொடுத்துவரும் ஆதரவால்தான். அவர்களின் உழைப்பு சிராங்கூன் டைம்ஸ் வரலாற்றில் நீங்காத இடம்பெறுகிறது. 

‘உதிரிப்பூக்கள்’ என்ற செய்திக்கொத்தையும் மொழிபெயர்ப்புக் கவிதையையும் மஹேஷ் ஒவ்வோர் இதழிலும் இடம்பெறச்செய்தார். காலவோட்டத்தில் இவருடைய மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. அதோடு பழந்தமிழிலக்கிய, சிங்கை வரலாற்றுத் தொடர்களை வெளியிட ஆரம்பித்தோம். சிங்கை இலக்கியம் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வெளியாயின. பல படைப்புகள் அங்கீகாரத்தையும் பெற்றன.

சிங்கப்பூர் இலக்கியப்பரிசு 2018, புனைவுப் பிரிவில் தகுதிப்பரிசை வென்ற எம்.கே.குமாரின் 5:12PM தொகுப்பிலிருக்கும் முக்கியமான கதைகள் முதலில் சிராங்கூன் டைம்ஸில் வெளியானவை.  சிங்கப்பூர் இலக்கியப்பரிசு 2020, அபுனைவுப் பிரிவில் இறுதிச்சுற்றில் இடம்பிடித்த அழகுநிலாவின் ‘சிறுகாட்டுச்சுனை’ என்ற கட்டுரை நூலின் பல கட்டுரைகள் முதலில் சிராங்கூன் டைம்ஸில்தான் வெளியானது. முத்தாய்ப்பாக அப்பிரிவில் இலக்கியப் பரிசை வென்ற ஹேமாவின் ‘வாழைமர நோட்டு’ முழுமையாகவே சிராங்கூன் டைம்ஸில் தொடராக வெளிவந்தது. பரிசு ஓர் படைப்புக்கான தரத்துக்கு அடையாளமாகாது எனினும் படைப்பாளி தொடர்ந்து இயங்க அதற்கேற்ற சூழல் அவசியமாகிறது. வளமான நிலத்தை ஒன்றிணைந்து உருவாக்கும்போது தரமான பயிர்கள் முளைவிடத் தொடங்குகின்றன. 

நான்காம், ஐந்தாம் ஆண்டுகளில் நம்பிக்கையுடனும் மேலதிகத் தெளிவுடனும் எங்கள் பயணம் தொடர்ந்தது. சிராங்கூன் டைம்ஸ் என்ற பெயர் சிங்கைத் தமிழ்ச்சமூகத்தில், குறிப்பாக இலக்கிய ஆர்வலர்களிடையே, நன்மதிப்பைப் பெற்றிருந்தது. சிவானந்தம் நீலகண்டன் ஒரு கட்டுரையில் எழுதியதைப்போல, ‘பொழுதுபோக்குப் பத்திரிகையாக ஆகவும் விரும்பாமல் தீவிர இலக்கிய இதழாக ஆகவும் இயலாமல்’ ஓர் இடைநிலை இதழாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை என்றாலும் அது ஒருவகையில் காலத்தின் தேவை, கட்டாயம் என்றுதான் சொல்லவேண்டும். மாற்றங்கள் ஓரிரவில் வருவதில்லை; அப்படி வந்தால் நிலைப்பதில்லை.

சிறப்பிதழ்கள் அதிகமாகக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் செயல்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறோம். இருப்பினும் தமிழ் இணையத்தின் தவிர்க்க இயலாத பெயரான நா.கோவிந்தசாமிக்கு ஒரு சிறப்பிதழை (மே 2019) எழுத்தாளர் கனகலதாவின் ஒத்துழைப்புடன் வெளியிட்டோம். ஐம்பதாம் இதழை, சிங்கப்பூர்த் தமிழர் அடையாளம், சிங்கப்பூரில் சாதியச் சுவடுகள் என்று சிக்கலான, தீவிரமான விஷயங்களை ஆராய்ந்த ஆய்வாளர்களின் விரிவான நேர்காணல்களுடன் கனமான இதழாக வெளியிட்டோம். 

செப்டம்பர் 2020 இதழிலிருந்து டி.ராஜரத்தினத்தின் வடிவமைப்பினால் சிராங்கூன் டைம்ஸ் புதுப்பொலிவு பெற்றுள்ளது. உருவம் மட்டுமின்றி உள்ளடக்கமும்தான். பேராசிரியர் வீரமணியின் கட்டுரைகள் சிங்கப்பூர் வரலாற்றில் இவ்வளவு இருக்கிறதா என்று வாசிப்போரை ஈர்த்துக்கொள்வதை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மணிமாலா மதியழகனின் ‘அஞ்சனா’ சிறுகதை, ஜமால் சேக்கின் ‘அசாபியா’ கட்டுரை, நித்திஷ் செந்தூர் ஒவ்வொரு இதழிலும் காட்டும் அறியப்படாத சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் பக்கங்கள் ஆகியவற்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் தரம் தொடர்ந்து மேம்படும் என்ற உறுதிப்பாட்டை வாசகர்களிடம் இத்தகைய படைப்புகளின் வழியாக மெய்ப்பித்து வருகிறோம். 

காலத்திற்கேற்ப ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மின்னிலக்க இதழைத் தற்போது இணையத்திலும் serangoontimes.com தளத்தில் வாசிக்கலாம். இதுவரை வெளியாகியுள்ள 65 இதழ்களும் இத்தளத்தின் ‘களஞ்சியம்’ பகுதியில் கிடைக்கின்றன. தற்போது 66ஆவது இதழ் தயாரிப்பில் உள்ளது. சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சமகால வரலாறும் இலக்கிய நாடித்துடிப்பும் முறையாகவும் பொறுப்பாகவும் இக்களஞ்சியத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்று துணிந்து சொல்வேன்.

தற்போது ஆறாம் ஆண்டு நடக்கிறது. இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் 65வது இதழுக்கான (ஜூன் 2021) வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. தமிழ் கற்பித்தல் குறித்தும், சட்டத்துறை குறித்தும் தங்கள் பார்வைகளுடன் இரண்டு உள்ளூர் இளையர்கள் புதிய கட்டுரையாளர்களாக அறிமுகமாகின்றனர். வரும் ஆகஸ்ட் இதழை சிங்கை இளையர் சிறப்பிதழாகக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த சில ஆண்டுகளுக்கான முன்னெடுப்புகளை விவாதித்து வருகிறோம். 

சிங்கப்பூர் ஒரு தனி நாடாக சொந்தக்காலில் நிற்கமுடியுமா என்ற ஐயத்தைப் பொய்யாக்கி நிமிர்ந்ததுபோல ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழும் ‘இன்னும் எத்தனை நாள்?’ என்ற ஏகடியப் பேச்சுகளைத் தன் தொடர்ந்த, அழுத்தமான செயல்பாடுகளால் காணாமற்போகச் செய்துவிட்டது. இதழ் அச்சாகும் சென்னையில் வெள்ளம் வந்தபோதும், கொரோனா கால ஊரடங்கின்போதும் தவிர ஒவ்வொரு மாதமும் தொய்வின்றி சிராங்கூன் டைம்ஸ் வெளியாகிக் கொண்டிருக்கிறது. 

தமிழ்க் குடும்பங்களில் தமிழ்மொழிப் புழக்கம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவரும் சிங்கப்பூரில் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ தாக்குப்பிடித்து எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறது. விவாதங்களை எழுப்பும், பதிவுசெய்யும் தளமாகச் செயல்பட்டுவருகிறது. தமிழ்ச் சமூகத்தின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்தால் எங்களால் இன்னும் ஊக்கத்துடன் செயல்படவியலும்.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ஸின் ஒவ்வொரு இதழையும் விதைகளாகப் பார்க்கும் நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா, அனுதினமும் அடுத்த இதழில் என்னென்ன படைப்புகள் என்று சிந்திக்கும், விவாதிக்கும் ஆசிரியர் குழு நண்பர்கள், தமிழுக்காகவும் தன்நிறைவுக்காகவும் மட்டுமே எழுதும் படைப்பாளிகள், ஒவ்வோர் இதழையும் விடாமல் வாசித்து குறைநிறைகளைச் சுட்டிக்காட்டும் நம் சமூகத்தின் வாசகர்கள், வழிகாட்டும் அறிவுஜீவிகள் ஆகியோரை நம்பியே எங்கள் பயணம் தொடர்கிறது.   

2 comments for “கடந்து வந்த பாதை – தி சிராங்கூன் டைம்ஸ்

  1. பொன் சுந்தரராசு
    July 2, 2021 at 5:38 pm

    சிங்கப்பூரில் ஓர் தமிழ் இதழ் தொடர்பு அறுபடாமல் திங்கள்தோறும் வெளிவருவதானது பாராட்டுக்கும் மீறிய வாழ்த்துக்கும் வணக்கத்திற்கும் உரியது. இது 1990களுக்குப் பிறகு சிங்கைக்கு வந்த திறனாளர்களாகிய ‘புதிய வருகையாளர்களால்’ சாத்தியமானது எனபதைக்கூறி, அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்!
    செய்ய முடியாது என்ற பலரும் எண்ணிய ஒரு செயலைச் செய்து காட்டிய சிறப்புக்குரியவர் நண்பர் ஷா நவாஸ் அவர்கள்.
    ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
    அதனை அவன்கண் விடல்’ என்ற குரல் மொழிக்கொப்ப ஷா நவாஸின் ஆற்றலை அறிந்து அவரை சிராங்கூன் டைம்ஸின் ஆசிரியராக நியமித்தது அவ்விதழின் நிறுவனர் திரு முஸ்தபா அவர்களின் தேர்வுத் திறனை வெளிப்படுத்துகிறது.
    அவர்கள் கூட்டணியில் சிராங்கூன் டைம்ஸ் தொடர்ந்து சிங்கை மண்ணில் தமிழ் முழக்கமிடும் என்று நம்பலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...