வாசகர் வட்டமும் என் வட்டமும்

படைப்பிலக்கியத்தை எவ்வாறு சென்றடைய முடியும்? எத்தகைய அளவீடுகள் கொண்டு அவற்றை மதிப்பீடு செய்யப் போகிறோம்? இத்தகைய கேள்விகள் 1980களில் இருந்த சிங்கப்பூர் இளைஞர்களுக்கும் இருந்திருக்கும். அதாவது உலகியல் அக்கறையுடன் மட்டும் நிறைவு கொள்ளாத ஒரு சிலருக்கு.

இளையராஜா பாடல்கள், கமல், ரஜினி திரைப்படங்கள், நதியா வளையல்கள், காதணிகள் திரையிசை கேசட்டுகள், வீடியோக்கள், திரையரங்குகளில் வரிசை பிடித்து டிக்கெட் வாங்கி சாதனை செய்த சாதனையாளர்கள் என மேம்போக்கான ரசனைகளையும் வாழ்க்கை முறைகளையும் தாண்டி வேறு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்ற தேடல் இருந்திருக்கும்.

ஒத்த இசைவுடைய மக்கள் என்றாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இணைவார்கள் என்ற ஒரு கணக்கியல் தரவின்படி அப்படி ஓர் அசாதரண நிகழ்வு நடந்தது.

1980களின் மத்தியில் சில இளைஞர்கள் இவ்வாறு சந்தித்து தாம் படித்த கதைகளையும் புதினங்களையும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். அவர்கள்தான் வாசகர் வட்டத்தின் தொடக்ககால உறுப்பினர்கள். அதில் ஒரு சிலர் சிலபல கதைகள், கவிதைகள் எழுதி தேசிய அளவில் அங்கீகாரமும் பெற்றனர். இவர்களில் ரெ.பாண்டியன், ராஜராமன், ராஜசேகர், விஜயன், அரவிந்தன், சூர்யரத்னா, புருஷோத்தமன் போன்றோர் இருந்தனர். தோ பாயோ சமூக மன்றங்களில் சந்தித்து இவர்கள் தங்கள் இலக்கிய ரசனைகளைப் பகிர்ந்துகொண்டனர். அச்சந்திப்புகள் இளமைத் துடிப்புக்குரிய சலசலப்புகளோடு தொடர்ந்தன. 

மாதம் ஒரு முறை நடைபெற்ற இச்சந்திப்புகளில் சில மூத்த எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர். திரு நா.கோவிந்தசாமி, திரு இராம கண்ணபிரான் போன்றோர் அதில் அடங்குவர். தமிழ் நாட்டு எழுத்தாளர்களும் சிங்கப்பூருக்கு வருகை தந்தபோது இக்குழுவினருடன் உரையாடல் நடத்தினர். 

1988ஆம் வருடம் தொடங்கிய இக்குழு இரண்டு ஆண்டுகளில் செயல்படாமல் போனது. வாழ்வியல் நெருக்கடிகளில் படிப்பு, வேலை, குடும்பம்  போன்றவற்றால் இலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டது. சிலர் வாழ்க்கையினூடாக வாசிப்பைத் தொடர்ந்தனர். ஆனால் அவை குறித்து நண்பர்களிடையே பகிர்ந்து உரையாடலைத் தொடரும் நிலை ஏற்படவில்லை.

2000ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒத்திசைவு கொண்ட  நண்பர்கள் குழு ஒன்றிணைந்து ‘வாசகர் வட்டம்’ என்ற அமைப்புக்கு மீண்டும் உயிர் கொடுத்து இயங்கத் தொடங்கியது. அதனை உருவாக்க மீண்டும் ரெ.பாண்டியன் முயற்சி எடுத்தார். அவருக்கு ஆதரவாக சுப்ரமணியம் ரமேஷ்  வாசகர் வட்டத்தைத் தொடர்ந்து நடத்தத் தொடங்கினார்.

இடைப்பட்ட பதினைந்து ஆண்டுகளில் புதிய வேலை வாய்ப்புகள், வெளிநாட்டுத் திறனாளர்களுக்குக்  கதவுகளைத் திறந்துவிட்ட குடி நுழைவுச் சட்ட மாற்றங்கள்  சிங்கப்பூர்த் தமிழ்ச் சூழலிலும் இலக்கியச் சூழலிலும் வெளிப்பட்டது. வாசகர் வட்டத்தில் தமிழ் நாட்டிலிருந்து தமிழாசிரியர்களாக பணி செய்ய வந்த தமிழ் ஆர்வலர்கள், மேலும் தமிழ் நாட்டிலிருந்து குடியேறிய புதிய மனிதர்களால் வாசகர் வட்டம் பெரிய இலக்கியவட்டமாகியது.

2004 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய நூலகம் ஆதரவுக்கரம் நீட்டி அங் மோ கியோ நூலகத்தின் முதல் தளத்தில் டோமேட்டோ அறையில் மீண்டும் வாசகர் வட்டம் கூட்டங்கள் நடைபெறத் தொடங்கின. இதற்கான வாசகர்களை ஒருங்கிணைக்கும் பெருமுயற்சியில் நண்பர்கள் ஒன்றிணைந்தனர். 

மாதம் ஒரு முறை சந்திக்கும்போது எது குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானித்து அந்த சிறுகதை/ நாவல்/ நாடகம்/ கவிதை இப்படி எதுவாக இருந்தாலும் அவற்றை வாசகர்களுக்கு பிரதி எடுத்து கொடுத்து அனைவரும் படித்து வந்து கலந்துரையாடல் நடத்தி ஒவ்வொரு வாசகர் கருத்துகளையும் பதிவு செய்து அவற்றை தட்டச்சு செய்து வலைப்பூவில் (vasagarvattam.blogspot.com) பதிவேற்றம் செய்து வந்தனர். 

2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டவலைப்பூ நான்கு ஆண்டுகள் உயிர்ப்போடு இருந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய வாசகர் வந்தால் இரண்டு பழகிய வாசகர்கள் காணாமல் போயினர். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று பல தலைப்புகளில் உரையாடல்கள் நடைபெற்றன.

இந்நிலையில்தான் நேற்றிருந்தோம் – சிங்கப்பூர் நினைவலைகள் என்ற நிகழ்ச்சி பெரிய வரவேற்பு பெற்றது. சிங்கப்பூரில் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள் இளம் பருவத்து நினைவுகளையும் அப்போதைய வாழ்க்கைச் சூழல், கல்வி, சமூகம் இவை குறித்து தங்கள் நினைவுகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டனர். திரு இராம கண்ணபிரான், திரு பன்னீர் செல்வம், திரு பொன் சுந்தரராஜு, திருமதி நூர்ஜஹான்சுலைமான், திரு எம்.கே. நாராயணன் போன்றோர் இதில் தங்கள் பங்களிப்பைச் செய்தனர்.

இது அறிவார்த்தமாகச் சிந்திப்பவர்களுக்கான குழுவாக இணைந்தாலும் அந்தக்குழுவில் யார் இருக்கலாம் என்ற முடிவைத் தீர்மானிக்க இயலவில்லை. அதனால் துடிப்புடன் இயங்கிய குழுவினரில் சிலர் மெல்ல விலகினர். ஒரு சிலர் இந்தக் குழு நீர்த்துப் போனது போல் உணர்ந்தனர். சுப்ரமணியம் ரமேஷ்  ஊரை விட்டுக் கிளம்பினார். மீண்டும் வாசகர் வட்டத்தை யார் நடத்துவது என்ற கேள்வியுடன் தொடர்ந்தது.

2009ஆம் ஆண்டிலிருந்து வாசகர்களை ஒருங்கிணைத்து மாதாமாதம் வழி நடத்தியவர் முனைவர் திரு எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி. ஆனால் வாழ்வியல் நெருக்கடிகளால் அவராலும் வாசகர் வட்டத்தைத் தொடர்ந்து நடத்த இயலவில்லை. இந்த நிலையில்தான் 2012ஆம் ஆண்டு மூத்த எழுத்தாளர் திரு இராம கண்ணபிரான் என்னிடம் வாசகர் வட்டத்தைத் தொடர்ந்து ஒருங்கிணைத்து நடத்த முடியுமா என்று கேட்டார்.

அப்போது நானும் இலக்கில்லாமல் தேவையற்ற வேலைகளுக்கு தேவைக்கு மேல் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருந்தேன். வாசிப்புப் பழக்கம் இருப்பது மட்டும்தான் வாசகர் வட்டத்தின் முக்கிய இலக்கு என்ற அளவில் நான் ஒருங்கிணைத்து மாதாமாதம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யத்தொடங்கினேன். அருமையான ஒரு குழுவும் அமைந்தது. அது அந்த நேரத்தில் பெற்ற வரம் என்று நினைத்துக்கொள்கிறேன்.

தலைவர், செயலாளர், துணைத்தலைவர் என்ற அடைமொழிகள் எதுவும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தபோதும் பிறகு இந்த அடைமொழிகள் வந்து சேர்ந்த போதும் யார் ஒருங்கிணைக்கிறார்கள் என்பதை விட வாசகர் வட்டத்தின் மூலம் வாசிப்பு எப்படி விரிவடைந்தது என்பது முக்கியம் என்ற ஒரே  நோக்கத்தில் வாசகர் வட்டம் பல்வேறு முகங்களைக் கொண்டு வளர்ந்தது. சித்ரா ரமேஷ், ஷாநவாஸ், எம்.கே.குமார், அழகுநிலா, பாரதி மூர்த்தியப்பன் போன்றோர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக பல நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளில் வாசகர் வட்டம் சிங்கப்பூரில் பல வாசகர்கள் கவனத்துக்குரிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. பல புதிய வாசகர்கள் தங்கள் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தளம் அமைத்துக்கொடுத்திருக்கிறது.

காலச்சுவடு கண்ணன், லீனா மணிமேகலை, எஸ்.ராமகிருஷ்ணன், வேல ராமமூர்த்தி, சுகிர்த ராணி, பாலகுமாரன், நாகூர் ரூமி, மாலன், மனுஷ்யபுத்திரன், அய்யப்பமாதவன், கலாப்ரியா, இந்திரா சௌந்திரராஜன், சுப்ரபாரதி மணியம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கும் எழுத்தாளர்கள் வாசகர் வட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

வாசகர் வட்டம் எழுத்தாளர்களை வெற்றுப் புகழ்ச்சியில் மகிழ்விக்கும் களமாக இயங்கவில்லை. உண்மையான வாசிப்பும் அது குறித்தான நேர்மையான விமர்சனங்களும் இடம்பெறும். ஒருவருடைய  படைப்புகளை முழுமையாகப் படித்து வந்து அது குறித்து உரையாடுவது என்பதுதான் ஒரு எழுத்தாளருக்கு நாம் செய்யும் ஆக அதிகமான அங்கீகாரம். வாசகர் வட்டக் குழுவில் இருக்கும் அனைவரும் இத்தகைய அங்கீகாரத்தை எழுத்தாளர்களுக்குத் தருகிறார்கள். 

2013ஆம் ஆண்டிலிருந்து வாசகர் வட்ட ஆண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. தொடங்கப்பட்ட முதல் வருடம் திரு ஜெயமோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். உட்லண்ட்ஸ் நூலக அரங்கம் நிரம்பி வழிந்தது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஜோ.டி.குரூஸ், தமிழச்சி தங்கபாண்டியன், நாஞ்சில் நாடன், சாருநிவேதிதா, பவா செல்லதுரை, கவிஞர் தேவதேவன் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வாசகர் வட்ட ஆண்டு விழாவை சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க இலக்கியத் திருவிழாவாக மாற்றினர்.

வாசகர் வட்டம் நடத்தி வரும் படைப்பிலக்கியப் பயிலரங்குகளில் பலர் கலந்துகொண்டு பலனடைந்துள்ளனர். வாசகர் வட்ட ஆண்டு விழாவில் வருடந்தோறும் மூன்று முதல் நான்கு நூல் வெளியீடுகள் நடைபெறும். சித்ரா ரமேஷ், ஷாநவாஸ், எம்.கே.குமார், அழகு நிலா, ஆமருவி தேவநாதன், பால பாஸ்கரன்  போன்ற சிங்கப்பூர் படைப்பாளிகள் தங்கள் நூல் வெளியீடுகளை வாசகர் வட்டத்தின் மூலம் வெளியிட்டனர். இதில் குறிப்பிடத்தக்க, பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த நூல்களில் பாதிக்கு மேல் சிங்கப்பூரின் உயரிய பரிசான சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்குத் தேர்வானவை. அதில்  பாதிக்கும் மேல் பரிசுகள் வென்றன.

வாசகர் வட்டத்தின் எம்.கே.குமார் முயற்சியில் சிங்கப்பூர் பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பு நதிமிசை நகரும் கூழாங்கற்கள் என்ற தலைப்பில் வெளியீடு கண்டது. வாசகர் வட்டத்தின் சிறுகதைத் தொகுப்பான  இடமும் இருப்பும், காலச்சிறகு 25 என்ற கட்டுரைத்தொகுப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதுவரை கிட்டத்தட்ட 24 நூல்கள் வாசகர் வட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 5 நூல்கள் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு வென்றவை.

வாசகர் வட்டம் எப்போதும் மலேசியாவின் நவீன இலக்கியச் சூழலுடனும் கைக்கோர்க்க விரும்பியது. அதன் அடிப்படையில் மலேசிய இலக்கியப் படைப்பாளிகளும் தங்கள் படைப்புகளை சிங்கப்பூரில் அறிமுகம் செய்ய களம் அமைத்துக் கொடுத்தது. வல்லினம் நண்பர்கள் குழு, கே.பாலமுருகன் போன்றோர் தங்கள் நூல்களை வாசகர் வட்டம் மூலம் அறிமுகம் செய்தனர். அதுபோல சிங்கப்பூர் மூத்த இலக்கியப் படைப்பாளிகளான திரு இராம. கண்ணபிரான், திரு பி.கிருஷ்ணன், திரு மா.இளங்கண்ணன் குறித்து ஆவணப்படங்களை உருவாக்க மலேசியாவிலிருந்து நவீன் எடுத்த முயற்சிக்கு வாசகர் வட்டம் ஆதரவுக்கரம் நீட்டியது. ஆவணப்படங்களை அமைச்சர் திரு ஈஸ்வரன் தலைமையில் வெளியிட்டதுடன் மூன்று படைப்பாளிகளையும் அழைத்து மரியாதை செய்தது. இப்படி இரு நாட்டுக்குமான அணுக்கமான இலக்கியத் தொடர்புகள் வாசகர் வட்டம் மூலம் சாத்தியமானது.

ஆண்டுதோறும் வாசகர் வட்டம் நடத்தி வரும் ஆண்டு விழா அதனை ஒட்டி நடத்தப்படும் பயிலரங்குகள், கலந்துரையாடல்கள் இவை சிங்கப்பூர் இலக்கியச் சூழலுக்கு சற்றே நெருங்கியும் நெருங்காமலும் இருந்து வருகின்றன. இந்தோனீசிய மழைக்காடுகளில் காற்றுடன் கலந்து வரும் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு தென் அமெரிக்கா கடலில் சுனாமி ஏற்படுத்தும் என்பது அறிவியல் உண்மை.

வாசகர் வட்டம் செய்து வரும் இந்த மிகச் சிறிய பங்களிப்பு சிங்கப்பூர் இலக்கியவாதிகளுக்கும் இளைய தலைமுறையினருக்கும் நவீன இலக்கியம் குறித்த அறிமுகத்தையும் அவை குறித்த புரிதலையும் ஏற்படுத்தியுள்ளது என்பது அகவயமானது. புறவயமாக வாசகர் வட்டம் குறித்து பல புரிதல்கள் இருந்தாலும் வாசகர் வட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும், உங்கள் தளத்தில் உங்களுக்கு இருக்கும் அங்கீகாரத்தை விட வேண்டாம் என்று பலர் தங்கள் ஆதரவைத் தருகிறார்கள். 

1 comment for “வாசகர் வட்டமும் என் வட்டமும்

  1. ELANGOVAN
    July 6, 2021 at 4:35 am

    “1980களின் மத்தியில் சில இளைஞர்கள் இவ்வாறு சந்தித்து தாம் படித்த கதைகளையும் புதினங்களையும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். அவர்கள்தான் வாசகர் வட்டத்தின் தொடக்ககால உறுப்பினர்கள். அதில் ஒரு சிலர் சிலபல கதைகள், கவிதைகள் எழுதி தேசிய அளவில் அங்கீகாரமும் பெற்றனர். இவர்களில் ரெ.பாண்டியன், ராஜராமன், ராஜசேகர், விஜயன், அரவிந்தன், இளங்கோவன், சூர்யரத்னா, புருஷோத்தமன் போன்றோர் இருந்தனர். தோ பாயோ சமூக மன்றங்களில் சந்தித்து இவர்கள் தங்கள் இலக்கிய ரசனைகளைப் பகிர்ந்துகொண்டனர். அச்சந்திப்புகள் இளமைத் துடிப்புக்குரிய சலசலப்புகளோடு தொடர்ந்தன.”
    ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
    Dear Navin

    There is an atrocious misinformation in this article. I had nothing to do with the then Vaasagar Vattam in Singapore. I was NEVER a part of Vaasagar Vattam in Singapore. I wonder who fabricated such a tale to convince Ms Chitra Ramesh. I take this very personally as offensive. Please amend at your end to remove my name asap from this article. Thank you.

    Elangovan
    Singapore

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...