சிங்கப்பூரில் 1942 தொடங்கி 1945 வரை நீடித்த ஜப்பானியராட்சியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சொல்லிச் செல்கிறது வாழைமர நோட்டு. அந்த மூன்றரை ஆண்டுக்கால ஜப்பானியராட்சி வரலாற்றின் இருண்டப்பக்கங்களையும் அவலங்களையும் முன்னிறுத்தி பேசுகிறது இந்த நூல். சரியாகச் சொல்வதென்றால் அந்த வரலாற்றின் விடுபட்ட பக்கங்களையும் இணைத்து மிக நேர்த்தியாகவும் விரிவாகவும் இந்நூலின் வழி அதன் ஆசிரியர் ஹேமா பேசுகிறார். தான் புலம்பெயர்ந்த நாட்டின் முக்கியமான காலக்கட்டமொன்றின் வரலாற்று தரவுகளைப் பல மூலங்களிலிருந்து திரட்டி விரிவாக அளித்திருக்கிறார். 2020 ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசின் அபுனைவு எழுத்துக்கான சிறந்த புத்தகமாக அது தேர்வு பெற்றிருக்கிறது.
பொதுவாகவே, கொடூரமான தண்டனைகள், பஞ்சக்கால உணவுகள் ஆகியவையே ஜப்பானியராட்சியைப் பற்றிய நமது அறிமுகமாக இருந்திருக்கின்றன. பல இடங்களில் அவை வரலாற்றுக்குறிப்புகளாக மட்டுமே கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் விரிவான நூல்கள் உள்ளன. இருண்ட வரலாற்றில் நிலைபெற்றுவிட்ட காலத்தை மக்கள் கடந்து வந்த வாழ்வனுபவங்களையும் உணர்வுகளையும் புனைவுக்கே உரிய மொழியில் எழுத்தாளர் வெளிப்படுத்தியிருப்பது இந்நூலின் சிறப்பு. கட்டுரையில் தகவல்களைத் தொகுத்துத் தரும் இறுக்கமின்றி, மனிதர்களின் அக உணர்வுகளைப் புனைவாசிரியனாக இருந்து கடத்திச் செல்கிறார் எனலாம். அவ்வகையில் தமிழுக்கு இந்நூல் முக்கிய வரவு.
நூலை இருபகுதிகளாகப் பிரித்துள்ளார் ஹேமா. முதல் பகுதியில் ஜப்பானியர்கள் சிங்கப்பூரை கைப்பற்றும் வரை நடந்த போர் முறைகளையும், இருதரப்பின் தந்திரங்களையும், அவரவர் வெற்றி தோல்விக்கான சாதக பாதகங்களையும், உள்ளூரில் நடந்த சிக்கல்களையும் துல்லியமாகப் பதிவாக்கியுள்ளார். இரண்டாம் பகுதி, ஜப்பானியர்கள் சிங்கப்பூரை பிரிட்டிஷாரிடம் இருந்து கைப்பற்றியதில் இருந்து தொடங்குகிறது. சமாதானப் பேச்சுக்கு இடமில்லாமல் வன்முறை பரவிய காலத்தில் படபடப்போடு வர்ணிக்கிறார்.
பிரிட்டனின் ராணுவக் காப்பரண்களைத் தகர்த்துச் சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றுகிறது. தங்கள் நிலப்பகுதிக்கு முற்றிலும் மாறான தட்பவெப்ப நிலையை எதிர்கொள்ள முடியாமல் திணறும் ஆஸ்திரேலியப் படையைத் தோற்கடித்துச் சிங்கப்பூருக்குள் நுழைகின்றது. 130000 நேசநாட்டுப் படைவீரர்கள் முன் 30000 வீரர்களை மட்டுமே கொண்ட ஜப்பானியர் படை சாமுராய் படைவீரர்களுக்கே உரிய மன உறுதியுடன் எதிர்க்கொள்கிறது. அதுபோலவே நேச நாட்டு படைகளின் அரைக்கால் சட்டை மலாயா காடுகளில் புகுந்து செல்ல சிக்கலாக இருந்தது, ஜப்பானியர் கட்டைவிரல் பிரித்த காலணி வகை வழுக்கலான காட்டுப்பாதைகளில் ஊன்றி செல்ல ஏற்றதாக அமைந்தது, காடு மின்மினிப்பூச்சிகளால் மட்டுமே ஒளி கொண்டிருந்தது, போன்ற நுண்தகவல்கள் இந்நூலை வாசிக்கும் ஆர்வத்தை குறைக்காமல் உள்ளது.
ஆதிக்கத்துக்குட்படுகிற நாட்டு மக்களின் வாழ்வியல் நடைமுறைகளில் ஊடுருவி புதிய எஜமானர்களின் மீதான விசுவாசத்தை நிலைநிறுத்த ஜப்பான் முயல்கிறது. ஜப்பானிய வீரர்கள் முன் மக்களைக் கீழ்படிந்து வணங்கச்செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். தங்கள் மத நம்பிக்கைகளுக்கு முரணாக ஜப்பானிய மன்னர் இருக்கும் திசையான வடகிழக்குத் திசையில் தலைவணங்க செய்யப்படுகின்றனர். அவ்வாறே, பயிற்றுமொழியாக ஜப்பான் மொழி பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. வணிகக்கட்டிடங்களில் ஜப்பான் மொழி கட்டாயமாக்கப்படுகிறது. ஜப்பானின் நேரத்துக்கேற்ப சிங்கப்பூரின் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. ஜப்பானிய தேசப்பற்றுப் பாடல்களும் படங்களும் ஒளிபரப்பப்படுகின்றன. உணவு பஞ்சத்தால் தலைதூக்குகின்ற கொள்ளையர்களைப் பிடித்துத் தலையைத் துண்டித்துப் பொது மக்கள் முன்னிலையில் வைக்கின்றனர். இவ்வாறாக, பொதுமக்களிடையே உயிரச்சத்தை ஏற்படுத்தும் தண்டனையைச் சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூவின் தன்வரலாற்று நூலில் இருந்து நேரடி வாழ்வனுபவமாக முன்வைக்கிறார்.
வரலாற்றின் இக்கட்டுகள், கையறு நிலையின்முன் மனிதன் முன்னிறுத்தப்படும் போதெல்லாம் உயிர்த்திருப்பதற்கான வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறான். பஞ்சம், போர் போன்ற வரலாற்றுச் சூழல்கள் மீள மீள இதனை உறுதி செய்கிறது புதிய ஆட்சியாளர்களான ஜப்பானியர்களை வரவேற்பதற்காகச் சிங்கப்பூர் பெண்கள் வீட்டில் இருக்கும் துண்டுத்துணிகளை வெட்டிச் சிவப்பு வட்டம் வைத்த ஜப்பான் கொடியைத் தயாரிக்கின்றனர். ஆட்சியாளர்களை உற்சாகப்படுத்தும் முயற்சிக்குப் பின் மறைந்திருப்பது புதியச் சூழலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் உயிர்வேட்கையே.
ஜப்பான் சிங்கப்பூரைக் கைப்பற்றுவதற்கான போரில் ஈடுபடும் போதே கப்பல் பயணத்துக்கான நீண்ட வரிசைகளில் நின்று தாய்நாட்டுக்குச் செல்ல வெள்ளையர்கள் முயல்கின்றனர். அந்தக் கப்பல்களைப் பாதி வழியிலே குண்டுவீசி ஜப்பான் படைகள் தகர்க்கின்றன. சிங்கப்பூரிலே எஞ்சியிருக்கும் வெள்ளையர் குடும்பங்கள் சிறைக் கைதிகளாகச் சாங்கி சிறையில் அடைக்கப்படுகின்றனர். 600 கைதிகள் மட்டுமே அடைக்கமுடிந்த இடத்தில் 3000 பேரை கைதிகளாக அடைக்கின்றனர். ஆண்களுக்கான தனிக்கட்டிடமும் பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான தனிக்கட்டிடமும் ஒதுக்கப்படுகிறது. சிங்கப்பூரை ஆண்டுவந்த மக்கள் சிறைக்கைதிகளாக மாறுகின்றனர். இந்த நெருக்கடியிலிருந்து மீள தங்களுக்குள்ளே உணவு சமைப்பதற்கு, பயிரிடுவதற்கு எனத் தனித்தனிக் குழுவை அமைத்துக் கொள்கின்றனர். உடலுழைப்பாலும், போதிய உணவில்லாமலும் நலிவுற்றப் போதும் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள ஆடல்பாடலையும் நாடகத்தையும் நடத்துகின்றனர். சிறையிலே நூலகமொன்றை உருவாக்கிக் கொண்டு பாடங்களைக் கற்றுக் கொடுத்துப் பல்கலைக்கழகம் என்ற அளவில் விரிவுபடுத்திக் கொள்கின்றனர். தங்களுக்குள்ளே புழங்கி கொள்ளும் வகையில் இருவாரத்துக்கு ஒருமுறை வெளிவரும் நாளிதழ் ஒன்றையும் வெளியிடுகின்றனர். இதனை ஜப்பானிய காவலர்களும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தங்கள் ஆதிக்கத்துக்குட்படுகிற நாட்டில் தங்கள் மொழியையும், பழக்கவழக்கங்களையும் திணிக்கும் ஜப்பானியர்களும் கலையை வேடிக்கைக்காக அனுமதிக்கின்றனர் என்பது நகைமுரண். கலையும் இலக்கியமும் நெருக்கடிகளின் போது மனிதனுக்கான மீட்பராக இருக்கிறது. ஜெயமோகனின் உரையொன்றில் கலை வழியே தனக்கான விடுதலையை ஏற்படுத்திக் கொண்டதைச் சொல்லும் சிறைச் சுவரில் தான் வரைந்த ஓவியத்தின் வழியே தனக்கான விடுதலையைக் கண்டடைந்த ஓவியன் ஒருவனின் கதையைக் கூறியிருப்பார். இக்கட்டுகளின் கலையே மானுட அகத்துக்கு விடுதலையுணர்வை அளிக்கிறது.
போரில் உயிர் நீத்த ஜப்பானிய வீரர்களின் நினைவாலயமான சியோனன் சுரெய்டா (Syonan Chureito) என்னும் நினைவிடம் கட்ட ஜப்பானிடம் சரணடைந்த பிரிட்டன் போர் கைதிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அந்தக் கட்டுமானப்பணியில் ஈடுபடும் ஸ்டான்லி வாரன் கடுமையான உடலுழைப்பால் நலிவுற்றுச் சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுகிறார். மருத்துவமனையாக மாற்றப்படும் ராணுவத்தளத்தில் புனித லூக் தேவாலயம் அமைக்கப்படுகிறது. இந்தத் தேவாலயத்தின் உருவாக்கம் அவருக்கான ஆன்ம மீட்பாக மாறுகிறது. தேவாலயத்தின் சுவர்களில் கிடைத்த சுண்ணாம்பு கட்டிகளைக் கொண்டு வண்ணச் சாயத்தை உருவாக்கி முடியைத் தூரிகையாக்கிக் குழந்தை ஏசுவின் சித்திரத்தை வரைகிறார். இந்த ஓவியங்களே அவரை நோய்மையிலிருந்து மீளச் செய்து உளப்பிறழ்வு ஏற்படாமல் உயிரைப் பிடித்து நிறுத்துகிறது. அதைப் போன்றே ஆடம் பூங்காவில் உருவாக்கப்படுகின்ற தேவப்பீடத்தில் ஏசுவின் கல்லறைக்கு முன்னால் அழுது கொண்டிருக்கும் மேரி மாக்டெலினின் சித்திரத்தை கேப்டன் ஆண்ட்ரூஸ் வரைகிறார். இப்படியாகத் தங்களுக்கான மீட்பர்களை கலையின் வழி உருவாக்கியபடியே மனிதர்கள் இக்கட்டுகளைக் கடந்திருக்கிறார்கள்.
ஜப்பான் சீனாவில் நிகழ்த்திய போரில் சீனாவுக்கு ஆதரவாகப் பண உதவி செய்த சீன மக்களைப் படுகொலை செய்கிறது ஜப்பானிய ராணுவம். சீன ஆடவர்களை “சூக் சிங்’’ என்ற அப்புறப்படுத்தலின் மூலம் விசாரணை செய்து ஆபதற்றவர்கள் என உத்தேசிக்கின்றவர்களுக்கு மட்டுமே முத்திரை வழங்கப்படுகிறது. அந்த முத்திரை உயிர்காப்பு முத்திரையாகவும் விளங்குகிறது. சிங்கப்பூரில் பிரிட்டனின் படைபலத்தைக் கண்டறியும் உளவாளியாக இருந்த மமொரு ஷினாசாகியே வெளியுறவு அதிகாரியாக இருந்து முப்பதாயிரம் இளைஞர்களுக்கு முத்திரைப் பத்திரம் வழங்கி உயிர் காக்கிறார். சீன மக்களின் உயிரைக் காக்க வெளிநாட்டுச் சீனர்கள் சங்கத்தைத் தொடங்கச் செய்து நன்கொடை பெற்றும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துகிறார். அதைப் போல மனநல மருத்துவமனையில் அவதியுறும் ஆங்கிலேய கைதிகளுக்குத் தேவையான உணவு, பணம், மருந்து, வானொலி என ரகசியமாக அளிக்கிறார் எலிசபெத் சாய். கெப்பல் துறைமுகத்தாக்குதலின் விசாரணையில் தடுத்து வைக்கப்படும் எலிசபெத்தும் அவரது கணவரும் 193 நாட்கள் மின்சாரம் பாய்ச்சிச் சித்திரவதை செய்யப்பட்டும் எந்த செய்தியும் வெளியிடாமல் காக்கின்றனர். இந்தச் சம்பவங்கள், ஜெர்மனில் நடந்த யூத இன மக்களின் அழித்தொழிப்பின் போது பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை அனுமதியளித்துக் காப்பாற்றும் ஷிண்டலர்லிஸ்ட் திரைப்படத்தை நினைவுபடுத்துவதாய் அமைந்தது. அந்தக் கையறு காலத்தின் முன்னும் வெளிப்பட்ட மனிதத்தின் சாட்சிகளை நுட்பமாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களில் அமெரிக்கப் படையினரால் வீசப்படுகிற அணுகுண்டினால் 185000 மக்கள் உயிரிழக்கின்றனர். உயிர்பிழைத்தவர்கள் அணுகுண்டிலிருந்து வெளியேறிய கதிரியக்கத்தின் தாக்கத்தால் பாதிப்புறுகின்றனர். இந்தக் கொடுந்தாக்குதலினால், ஜப்பான் எவ்வித நிபந்தனையுமின்றி சரணடைய ஒப்புக் கொள்கிறது. ஜப்பான் சரணடைந்தப் பின்னும் இயல்பு நிலைக்கு உடனடியாகத் திரும்ப முடியாத அளவுக்கு மக்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். சாங்கிச் சிறைச்சாலையில் கண்ணீருடன் தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றித் தேசிய பாடல் பாடி மீள்கின்றனர். அந்த இருண்ட நாளை நினைவுக்கூரும் வகையில் ஜப்பானியர்களிடம் வெள்ளையர்கள் சரணடைந்த பிப்ரவரி 15 அன்று பள்ளி மாணவர்கள் யுத்தக்கால உணவு வகைகளான மரவள்ளிக்கிழங்கு, அரிசிக்கஞ்சி ஆகியவற்றை உண்கின்றனர். இந்நிகழ்வு வரலாற்றின் இருண்ட பக்கங்களையும் நவீன சிங்கப்பூர் உட்செரித்துக் கொண்டு முன்னகர்கிறது என்பதற்கான சான்றாக அமைகிறது.
தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்து தான் வாழும் நிலத்தின் முக்கிய வரலாற்றைப் பல மூலங்களிலிருந்து திரட்டி அளித்திருக்கிறார் ஹேமா. பொருளியற் சுரண்டல், உயிரிழப்புகள், அகச்சோர்வு என இருண்ட பக்கங்களால் நிறைந்திருக்கும் காலக்கட்டமொன்றிலிருந்து மனிதர்கள் உயிர்விசையையும் மனிதத்தையும் காத்து முன்னகர்ந்த வரலாற்று அனுபவத்தை வாழைமர நோட்டு அளிக்கிறது.
நூலை வாங்க:
சிங்கப்பூர் / மலேசியா – வாட்சப் : 6581172415
தமிழகம்: 9194442442372
முகநூல்: https://www.facebook.com/hema.vl/
அருமை