எம்.கே குமார் சிறுகதைகள்

தமிழ் நாட்டுக்கு வெளியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளில் தமிழ் இலக்கியம் தொடர்ந்து நிலையான இடத்தைப் பெற்றுள்ளது. ஆயினும் ஒப்பீட்டளவில் சிங்கப்பூர் இலக்கியம், மலேசிய இலக்கியம் என்று தனித்த அடையாளங்களைப் பெறுவதில் இன்றும் பின்தங்கியே உள்ளது. ஆனால் சிங்கப்பூர் படைப்புகளை ஐரோப்பிய, ஆஸ்திரேலிய பெருநிலங்களில் குடியேறிய தமிழ் எழுத்தாளர்களின் புலம்பெயர் இலக்கியங்களோடு ஒப்பிட்டு வாசிக்கலாம். சிங்கப்பூரில் வரலாற்றுக் காலம் தொட்டே புலம்பெயர் மக்களின் புழக்கம் என்பது அதன் தனித்த அடையாளங்களில் ஒன்று.

வரலாற்று அடிப்படையில் சிங்கப்பூர் பழைய மலாயாவின் ஒரு பகுதியாக இருந்து தனிநாடாக மாறிய தீவாகும். ஆனாலும் மலாயாவின் பெருநிலத்திற்கு தோட்ட தொழிலாளர்களாக பெரிய அளவில் தென்னிந்திய தொழிலாளர்கள் குடி பெயர்ந்ததுபோல் சிங்கப்பூருக்கு குடிபெயரவில்லை. காரணம், சிங்கப்பூர் ஆங்கிலேய வருகைக்கு முன்னமே நுசந்தாரா தீவுக்கூட்டங்களில் துறைமுகத் தீவாக இருந்தது. மீன்பிடிக் கிராமமாக இருந்தாலும் சிங்கப்பூருக்கு 1552 ஆம் ஆண்டிலேயே பல நாட்டு கப்பல் போக்குவரத்து இருந்ததை ஃபிரன்சிஸ் ஃசேவியர் தம் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகின்றார்.  பிறகு அத்தீவை ஸ்டாம்ஃபோர்ட் ராபிள்ஸ்  தன் முயற்சியால் உலக புகழ்பெற்ற துறைமுகமாக மேம்படுத்தினார். ஆனால் ஆங்கிலேயர்கள் விவசாயத்தைவிட பிற தொழில்களுக்கு அங்கு வாய்ப்புளை அதிகம் உருவாக்கினர்.  பின்னர் பினாங்கு தீவைப் போன்றே சிங்கப்பூரும் ஆங்கிலேயர்களின் சொர்க்கபுரியாகவும், நிர்வாக மையமாகவும், பல்லின மக்கள் வாழும் நவீன வர்த்தக நகரமாகவும் வளர்ந்தது. ஆகவே சிங்கபூருக்கு குடிபெயர்ந்த தமிழர்கள் மலாயா போல தோட்டத்தொழிலில் அதிகம் ஈடுபடவில்லை. மாறாக உடல் உழைப்பு தொழிலாளிகளாகவும், துறைமுக தொழிலாளிகளாகவும்,  வர்த்தகத்திலும் பிற நிர்வாக பொறுப்புகளிலும் அவர்கள் இருந்தனர். மலேசியாவைப் போலவே, இலங்கை, மலையாள கங்காணிகள், உயர் அதிகாரிகளையும் ஆங்கிலேயர்கள் இங்கு கொண்டு வந்தனர்.

பினாங்கு தீவுக்கு அடுத்து, சிங்கப்பூர் ஆங்கிலேயர்களின் சொர்க்கபுரியாகவும், நிர்வாக மையமாகவும், பல்லின மக்கள் வாழும் நவீன வர்த்தக நகரமாகவும் வளர்ந்தது. ஆகவே சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த தமிழர்களில் பெரும் அளவிலான தொழிலாளர்களுடன் பின்னர் நவீன சிங்கப்பூரின் துரித வளர்ச்சியின் காரணமாக மனிதவள தேவையை ஈடுசெய்ய திறன்சார் ஊழியர்களையும் அடிப்படை சேவை தொழிலாளிகளையும் பல நாடுகளில் இருந்தும் வரவழைத்தது. இந்தோனேசியா, மலேசியா, பிலிபைன்ஸ், இந்தியா, இலங்கை, பங்களாதேசம், பாகிஸ்தான், நேப்பால், சீனா, மியன்மார் என பல்வேறு நாட்டு மக்களும் பல்வேறு வேலைகளுக்காக சிங்கப்பூரில் குடியேறினர். வேலை பெர்மிட் பெற்று சிங்கப்பூரில் குறிப்பிட்ட காலம் வேலை செய்து பொருள் சேர்த்துக்கொண்டு தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புதல் அவர்களின் திட்டம். ஆயினும், சிங்கப்பூரின் குடிமக்களுக்கு இணையாக குடியேறிகளும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிந்த சூழலில் பல குடியேறிகள் சிங்கப்பூர் குடியுரிமை பெற்று அந்நாட்டின் குடிமக்களாக மாறினர். இவ்வாறு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ சிங்கப்பூரில் வாழ நேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலர் இலக்கியத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். அடிப்படைக் கலை இலக்கிய ஆர்வத்தின் பேரிலும் தமிழ் நாட்டில் பெற்ற அடிப்படை இலக்கிய புரிதல்களின் தொடர்ச்சியாகவும் அவர்களின் இலக்கிய செயல்பாடுகள் அமைந்தன.      

சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் சிங்கப்பூரில் தமிழ் அழிந்தும் மறைந்தும் போய்விடாமல் காப்பாற்றிக் கொடுக்கும் பெரும் பணியைச் செய்தவர்களாவர். பெருநகர வளர்ச்சியில் இருந்து தாய்மொழியை காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் கொடுப்பதில் அவர்கள் கவனமாக இருந்துள்ளனர். சிங்கப்பூர் அரசு நான்கு மொழிகளை அதிகார மொழிகளாக கொண்ட நாடு என்பதால் தமிழை அரசின் ஆதரவுடன் வளர்த்துச் செல்வதில் அவர்களுக்கு ஊக்கம் இருந்தது. நாளிதழ்கள் வழியும் தமிழக இலக்கிய தொடர்புகள் வழியும் சங்கங்களும் குழுக்களும் அமைத்து மரபு இலக்கியங்களையும் வெகுஜன இலக்கியங்களையும் தொடர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் அவை சிங்கப்பூர் இலக்கியம் என்ற தனி இடத்தை பெற்றவை அல்ல. பொதுவான வெகுஜன எழுத்தாகவும் தமிழ் நாட்டு வெகுமக்கள் எழுத்துகளின் தாக்கத்தில் உருவாகி வந்த படைப்புகளாகவும் அவை இருந்தன.

மலேசியாவில் காணப்படும் தோட்ட வாழ்க்கையும், கம்பங்களும், விவசாய பின்னணிகளும் அரசியல் போராட்டங்ளும் போர்க்கால நினைவுகளும் மலேசியப் படைப்புகளில் அதன் திணை அடையாளங்களாக வலுவாக அமைந்துள்ளன. ஒரே நிலத்தில் மூன்று நான்கு தலைமுறைகளாக வாழ்ந்த மக்களின் அகம் அந்த நிலத்தோடு பிணைந்து கிடப்பதை அவர்களின் எழுத்தின் வழி அறியமுடியும். மலேசிய எழுத்தாளர்கள் இங்கு நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து இந்த மண்ணில் வலுவாக காலூன்றியதுபோல சிங்கை எழுத்தாளர்களின் வாழ்க்கை அமையவில்லை. எழுத்தாளர்கள் வேலைக் காலம் முடிந்து மீண்டும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விடுவதும் புதியவர்கள் சிங்கப்பூருக்கு வேலை செய்ய வந்துசேர்வதோடு இலக்கிய ஆர்வத்தில் எழுதத் தொடங்குவதும் சிங்கப்பூரில் தொடர்கின்றது. இன்று சிங்கப்பூரில் தொடர்ந்து எழுதி இலக்கிய பரப்பை உருவாக்கியிருக்கும் எழுத்தாளர்களில் பத்துக்கு ஒன்பது பேர் வேலை நிமித்தம் சிங்கப்பூருக்கு கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களின் எழுத்துகளே இன்று சிங்கப்பூர் நவீன எழுத்தின் முகமாக ஆகியிருக்கின்றது. சிந்துராஜ் பொன்ராஜ், எம்.கே குமார், நீதிபாண்டி, லதா, அழகுநிலா, உமாகதிர், ஹேமா, ரமா சுரேஷ், இந்திரஜித், ஜெயந்தி சங்கர், நெப்போலியன், பிச்சினிக்காடு இளங்கோ, ஷாநவாஸ், மாதங்கி, சித்ரா ரமேஷ், சிவானந்தம் நீலகண்டன், சுபா செந்தில்குமார் என ஒரு வரிசை எழுத்தாளர்களை இன்றைய சிங்கப்பூரின் நவீன எழுத்தாளர்கள் என்று கூறலாம். இவர்களில் சிந்துராஜ் தவிர மற்றவர்கள் தமிழ் நாட்டில் இருந்து வேலை நிமித்தம் சிங்கப்பூருக்கு வந்து குடியேறியவர்கள். லதா, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்திருந்தாலும் இடைநிலைக்கல்வியை சிங்கப்பூரில் பயின்றவர். சிங்கப்பூர் கல்வியின் வழி இலக்கியத்தை அடைந்தவர். ஆகவே சிங்கப்பூர் படைப்புகளை புலம்பெயர் இலக்கியம் என்ற கண்ணோட்டத்தில் அணுகுவதே சரியாக இருக்கும்.

புலம்பெயர் இலக்கியப் படைப்புகள் பிற படைப்புகளில் இருந்து வேறுபடும் இடம் அதன் திணை சார்ந்த பிடிப்பின்மைதான். புலம்பெயர் எழுத்துகளின் மிக முக்கியமான கூறாக இருப்பது, பல்லின மக்களின் உறவுகளைக் கவனித்து அதன்வழி மனித மனங்களின் அபத்தங்களையும் முரண்களையும் எழுதுவதாகும். ஆயினும், தங்களுக்கு முற்றிலும் அந்நியமான நிலத்தையும் பண்பாட்டையும் வெளிப்புறமாக மட்டும் காணும் படைப்புகளில் சுற்றுலாத்தன்மை வந்து அமர்ந்துவிடுவது இயல்பு. மேலும் பண்பாடுகளையும் நாட்டு நிர்வாக முறைகளையும் ஒப்பிட்டு மேல், கீழ் என்று அடுக்குவதும்கூட இலக்கியத்துக்கு தேவையற்றவையே. அவ்வகை படைப்புகள், வெகுஜனப் படைப்புகளாகவோ அல்லது மேம்போக்கான எழுத்துகளாவோ தேங்கிவிடுகின்றன. ஆனால் அதைக் கடந்து அப்புதிய பண்பாட்டையும் மக்களையும் அகவயமாக அணுகும் போதும் அதன் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும்போதும் மேம்பட்ட படைப்புகளைப் படைக்க முடிகின்றது. அவ்வகையான இலக்கிய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் சிங்கப்பூர் எழுத்தாளர் எம்.கே குமார்.      

சிங்கப்பூரின் நவீன எழுத்தாளர்களில் ஒருவரான எம்.கே குமார் தனது சிறுகதைகளின் வழி நன்கு அறியப்பட்ட எழுத்தாளராவார். இதுவரை மூன்று சிறுகதை தொகுப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். இவற்றில்,  5:12 (2007) ஓந்தி (2019) தொகுப்புகளில் மொத்தம் 21 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஒரு குறுநாவலையும் ஓந்தியில் இணைத்துள்ளார். இந்த இரண்டு தொகுப்புகளும் சிங்கப்பூரை பின்புலமாகக் கொண்டவை என்பதோடு சிங்கப்பூரின் தொழில்மய வாழ்க்கையை புனைவிற்குள் கொண்டுவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு சிங்கப்பூரின் தொழில்மய நகரங்களுக்கு எதிராக இன்னும் எஞ்சியிருக்கும் காடுகளையும் தன் புனைவுகளில் காட்டியிருக்கின்றார். பரபரப்புமிக்க பெருநகர வாழ்வில் கவனிக்கப்படாத உதிரி மனிதர்களையே தனது முதன்மைக் கதை மாந்தர்களாகக் கொண்டு கதைகளை எழுதியுள்ளார். 

நிறுவனங்களில் பணிபுரிவோர், தொழிற்சாலை ஊழியர், வாடகை கார் ஓட்டுனர், வாயிற் காப்பாளர், துறைமுகப் பணியாளர், வீட்டுப் பணிப்பெண்கள், பணி ஓய்வுபெற்ற முதியவர்கள், ஆண் பாலியல் தொழிலாளி, என பலதரப்பட்ட கடைநிலை மனிதர்களை மையமிட்ட கதைகளாக அவை அமைந்துள்ளன. மேலும் சிங்கப்பூரின் இயல்புக்கு ஏற்ப பல்லின மக்களை தன் கதைகளுக்குள் எம்.கே.குமார் கொண்டுவந்துள்ளார். சிங்கப்பூரின் இருண்ட பகுதிகளையும் பிறழ்வான காமம், தனிமை, அதீத காதல், போன்ற கூர்மையான கருப்பொருள்களையும் புனைவாக்கியிருக்கின்றார். 

எம்.கே.குமார் இத்தொகுப்புகளில் இணைத்திருக்குக்கும் கதைகள் சில குறிப்பிடத்தக்க கதைகளாகவும் சில கலையமைதி கைகூடாதவையாகவும் இருப்பதைக் கவனிக்க முடிகின்றது. பல கதைகள் நல்ல கருப்பொருள், பாத்திர வார்ப்பு, விவரிப்பு போன்றவை இருந்தும் கதையை முடிக்கும் இடத்திலோ, கூறும் மொழியாலோ, அதிகப்படியான பூடகத்தன்மையாலோ அது எட்ட வேண்டிய உயரத்தைத் தொடமுடியாது போய்விடுகிறது. தீவிரமாக எழும் அலை சட்டெனச் சுருங்கி அடங்கிவிடுவதுபோல பல கதைகள் காத்திரமாகத் தொடங்கி பல தடுமாற்றங்களுடன் சென்று முடிகின்றன. நல்ல சிறுகதையின் இயல்பு அது முழுமையாக வெளிப்படாமலும் அதிகமாக மூடிவைக்கப்படாமலும் இருக்க வேண்டும். வாசகன் கதையைப் பிடித்து இழுத்து அதன் முடிச்சுகளைக் களைய ஒரு நூல் துணுக்கு எங்காவது இருக்கும் போதுதான் அக்கதை விரிவான உரையாடலை நிகழ்த்துகின்றது. அப்படியான கதைகளே வாசகனுக்குள் புகுந்து விரிவாக்கம் காணுகின்றன.

எம்.கே குமாரின் கதை சொல்லும் முறை பெரிதும் குறியீட்டு முறையிலும் பூடகத்தன்மை கொண்டதாகவும் இருக்கின்றது. அலுமினியப் பறவைகள், குலசாமி கணக்கு போன்ற ஒரு சில கதைகளைத் தவிர பெரும்பாலானவை நேரடி கதைகளாக இல்லாமல் உருவகங்களின் வழி குறிப்புணர்த்தும் முறையைக் கொண்டுள்ளன.

ஒப்புநோக்க ஓந்தி தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் 5:12 தொகுப்பில் உள்ள கதைகளைவிட மேம்பட்டவையாக உள்ளன. அப்பாசிகள், அலுமினியப் பறவைகள், சுழற்சி, நேர்மை போன்ற 5:12 தொகுப்பில் உள்ள கதைகளை எம்.கே குமாருக்கு சிங்கப்பூர் அறிமுகம் கிட்டிய தொடக்க கால கதைகள் என்று புரிந்துகொள்ள முடிகின்றது. அந்நிய நிலத்தின் புதுமைகளை வியப்பதும் ஒவ்வாமைகளை விளக்குவதும் இக்கதைகளில் அதிகம் தெரிகின்றன. ‘சுழற்சி’ கதையில் தவிர்க்க முடியாத சுற்றுப்பயணிக்கான கண்ணோட்டமும் விவரிப்பும் நிரம்பிக் கிடக்கின்றன.

‘அலுமினியப்பறவைகள்’, ‘அப்பாசிகள்’, ‘முன்சீட்’, ‘ஜோடி’ போன்ற கதைகள் முடிவில் அதிர்ச்சித் திருப்பங்களை வைக்கும் வெகுஜன எழுத்துமுறையால் கூர்மை இழக்கின்றன. முடிவில் மட்டுமே அதிரடித் திருப்பங்களை வைக்கும் உத்தி வெகுஜன வாசகருக்கானது. அது ஒரு விளையாட்டுப்போல செயல்படுவதோடு கதையின் வீரியத்தை இழக்கச் செய்துவிடும். இப்போது எழுதப்படும் பெரும்பகுதி குறுங்கதைகள் இந்த உக்தியாலேயே பிரபலம் அடைகின்றன. ‘அலுமினியப் பறவைகள்’ கதையின் முடிவில் திடீர் மரணம்,  அப்பாசிகள் கதையின் முடிவில் எதிர்பாரா மரணம், ஜோடி கதை முடிவில் ஒரே ஒரு சொல்லில் கதை சொல்லியின் பாலினம் வெளிப்படும் திருப்பம் போன்றவை கதையை தீவிரத்தன்மையில் இருந்து விலக்கி விடுகின்றன. ஜோடி கதையில் கதைசொல்லியின் பாலினம் தெரிவதால் ஏற்படும் வியப்பை நீக்கிவிட்டால் அந்த நீண்ட கடிதத்துக்கு எந்தச் சிறப்பும் இல்லாமல் ஆகிவிடும். ஆகவே, இதுபோன்ற திடீர் முடிவுகள் தரும் திடுக்கிடல் கதையை மேலதிக உரையாடலில் இருந்து துண்டித்து விடுகின்றது.

இதே தொகுப்பில் இடம்பெற்றுள்ள குலசாமி கணக்கு, மோர்கன் என்னும் ஆசான், துஞ்சலம் ஆகிய கதைகள் சிங்கப்பூர் தொழிலாளர் உலகை மையமாகக்கொண்ட கதைகளாகும். இவற்றில் துஞ்சலம் முக்கியமான சிறுகதை. வீட்டு வேலைக்கு தமிழ் நாட்டில் இருந்து ஏஜெண்டுகளால் கொண்டுவரப்படும் பெண்கள் சிங்கப்பூரில் எதிர்நோக்கும் சிக்கல்களை சித்தரிக்கும் இக்கதை சிக்கலான கதையாடலாகவும் அமைந்துள்ளது. ஆனாலும் எம்.கே.குமார் வெற்றிகரமாக இக்கதையை நுட்பமாகவே எழுதியுள்ளார். அதேபோன்று ‘பெருந்திணைமாணி’ கதையும் தமிழகத் தொழிலாளிகளை தன் காமத்திற்கு பயன்படுத்தும் அதிகாரியை பற்றியதாக அமைந்துள்ளது. இக்கதையும் விவரிப்பு முறையில் குறிப்பிடத்தக்க கதையாக அமைந்துள்ளது.  ‘பதிசதி விளையாட்டு’ கதையும் ஓந்தி தொகுப்பில் உள்ள ‘ருசி’ சிறுகதையும் ஒத்த மூலம் கொண்டவை. அவை இரண்டும் சிங்கப்பூர் அரசின் கெடுபிடி கட்டுப்பாடுகளை நாசூக்காக விமர்சிக்கின்றன. பதிசதி விளையாட்டு கதை வெளிநாட்டுத் தொழிலாளர் வேலை அனுமதியைத் தவறாக பயன்படுத்தி தங்கள் குடும்ப உறுப்பினரை சிங்கப்பூருக்குள் கொண்டுவரும் இரு நண்பர்களின் முயற்சிகளையும் அதன் விளைவுகளையும் வேடிக்கையாகச் சொல்கிறது. ஆனாலும் வெளி நாட்டவருக்கு அவ்வகையான கட்டுப்பாடுகள் தரும் மன அழுத்தங்கள் விரிவாக காட்டப்படவில்லை.

இத்தொகுப்புகளில் ‘ஓந்தி’, ‘புலி’, ‘விஷம்’, ‘நல்லிணக்கம்’, போன்ற பல கதைகள் உருவகங்களைக் கொண்ட குறியீட்டு முறையிலும் பூடகத்தன்மையோடும் சொல்லப்பட்டுள்ளன. நேரடியாக விடயத்தைச் சொல்லாமல் ஒன்றில் ஒளித்து வைத்து கதை சொல்லும் குறியீட்டு உத்தி எம்.கே குமார் கதைகளில் கவரும் வகையில் இருந்தாலும் சில இடங்களில் குழப்பங்களையும் தெளிவின்மையையும் கொடுத்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக ‘தொல்குடி’ கதை இயல்பான நடையில் இருந்து மாயக்கதையாடலுக்குள் செல்வதனாலும் மோகனதாஸ்-கஸ்தூரி என்ற பெயர்களின் காரணமாகவும் குழப்பமான நிலையில் முடிந்துவிடுகின்றது. 5:12 சிறுகதை மீபுனைவு மொழியில் காந்தி கொலை செய்யப்பட்ட 5:12 நேரத்தை குறியீடாக கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. ஆகவே ‘தொல்குடி’ கதையை காந்தியின் மனதில் எழுந்து அடங்கும் காமம் பற்றிய கற்பனை உரையாடலாக வகைப்படுத்த முடியும் என்றாலும் அதற்கான விரிவாக்கமோ இடைவெளியோ இக்கதையில் இல்லை. மேலும் கதை முடிவில் உதிரியாக வரும் ‘ஏகலைவன்’ மேலும் குழப்பங்களையே தருகின்றான். ‘ஏகலைவன்’ என்பது இன்னொரு குறியீடு என்பதால் அதிகப்படியான குழப்பங்களோடு கதை முடிகின்றது.

‘ஓந்தி’ சிறுகதை வயோதிக காமம் பற்றிய கதையாகும். ஒரு முதியவர் வளர்க்கும் ஓந்தி என்பது அவருடலில் ஊர்ந்துகொண்டிருக்கும் காமத்தைக் குறிக்கும் குறியீடாக சிறப்பாக அமைந்துள்ளது. இக்கதை நிறைவான காட்சி விவரிப்புகளுடனும் கச்சிதமான மொழியுடனும் அமைந்துள்ளது. அதேபோல ‘நல்லிணக்கம்’ என்ற கதை சிங்கப்பூர் நகரவாசிகளின் இணைந்து பழகமுடியாத மனநிலையையும் சுயநலத்தையும் லாவகமாக விமர்சிக்கின்றது. அக்கதையில் குரங்கு பல்வேறு உரையாடல்களுக்கு இட்டுச் செல்லும் குறியீடாக பயன்படுகின்றது.

‘விஷம்’ கதையில் சிங்கப்பூருக்கு வரும் ஒரு அந்நிய தொழிலாளிக்கு தனிமையும் பிறர் மீதான சந்தேகமும் விஷமாக இருந்து அச்சமூட்டுவது குறியீடுகள் வழி சித்தரிக்கப்படுகின்றது. நாட்டு சாராயத்தையும் அதை கொடுத்து உபசரிக்கும் முதியவரையும் இக்கதை சிங்கப்பூர் சமூகத்தின் குறியீடுகளாகக் கொண்டுள்ளது.  சிங்கபூரின் நகரத் தனிமையில் வாழ்ந்து சலித்த ஒரு மனிதர் புதிய அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ள நினைப்பதை சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் ஒரு புதிய குடியேறியின் மனநிலையை இக்கதை காட்டுகிறது. ஆனாலும் நகரில் வாழ்ந்து, சலித்து தனிமையில் உழலும் ஒரு மனிதருக்கான உடல் மொழி அந்த முதியவருக்கு இல்லை. மாறாக அவர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். மேலும் கதை சொல்லி ஊருக்கு புதியவராக இருக்கும் பட்சத்தில் அவனது சந்தேகமும் அச்சமும் இயல்பானதுதானே என்ற எண்ணமும் எழுகின்றது. ஆகவே, உண்மையில், நகரில் வாழ்ந்து சலித்த மனிதரின் பார்வையில் இருந்து இக்கதை சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. அதன் வழி நகர மக்களின் இருப்பை மேலும் விரிவாக வாசகனுக்கு கடத்தியிருக்க முடியும்.         

‘புலி’ என்ற கதையில் கதையோடு பொருந்தாத ‘தத்துவார்த்த’ உரையாடலும் (கார் பயணத்தின்போது) பாவனையான சித்தரிப்புகளும் கதையில் செயற்கைத்தன்மையைக் கொடுத்துவிடுகின்றன. புலி என்ற குறியீடு கதையின் முடிவில் மட்டும் கையாளப்பட்டுள்ளது, மிஸ் ராத்தியின் மனப்பிறழ்வாகவே வெளிப்படுகின்றது.  இதே கதையில் ‘கிளிங்’ என்றே கதைசொல்லியை மிஸ் ராத்தி அழைக்கிறாள். கிலிங் என்ற சொல் சிங்கையிலும் மலேசியாவிலும் இந்தியர்களைக் குறிப்பிடும் நையாண்டிச் சொல். அதற்கு வலுவான அரசியல் விமர்சனங்கள் உள்ளன. ஆனால், இக்கதையில் “கிளிங் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாதே பிறகு நான் ஏன் தப்பாக எண்ணப் போகிறேன்” என்று கதை சொல்லி சொல்வதோடு அச்சொல் வெறுமனே கடந்து சென்று விடுகின்றது.

‘ஆப்ரேஷன் அன்லிமிட்டெட்’ என்ற புனைவை அறிவியல் மொழியில் எம்.கே.குமார் முயன்று பார்த்துள்ளார். ஆனால் இது அறிவியல் புனைவு அல்ல. மாறாக இசையின் வழி மனித ஜீவிதம் தொடரும் என்ற மரபான கருத்தியலை தமது ரசனைக்கு ஏற்ற திரைப்பட பாடலோடு பிணைத்துக்கொண்டு ஒரு புனைவை எழுதியிருக்கிறார். மிக மேலான ஒரு கருத்தாடலை ஒர் இளையராஜா பாடல்வழி கடந்து செல்ல முயலும் வேடிக்கை முயற்சியாக இக்கதை அமைந்துள்ளது. இசையின் நுட்பங்களையும் அது மானுட இயக்கத்தை உயிர்ப்போடு கட்டியெழுப்பும் மாயத்தையும் இப்படி குறுக்கிச் சொல்லிவிட முடியாது என்பதே உண்மை.    

‘குலசாமி கணக்கு’ மிக நுட்பமான தொழிற்சாலை வேலை விவரிப்புகளைச் சொல்லும் கதை. மிகப்பெரிய தொழில்நுட்பத்தோடு செயல்படும் ஒரு நிறுவனத்தில், அந்நிய தொழிலாளிகளின் இடத்தை சற்றே வேடிக்கையோடு சொல்லும் கதை. கூடுதலாக பல இலட்சங்களைச் சம்பாதிக்க முனைப்பு காட்டும் முதலாளிகள் தங்கள் அடிமட்ட ஊழியர்களுக்கு கொடுக்கும் சொற்ப வெகுமதிகளையும் பேராசையின் காரணமாக முதலாளிகள் அடையும் இழப்பையும் பகடி செய்யும் கதையாகவும் இக்கதை அமைந்துள்ளது.  ஆனால் இக்கதையில் அந்நிய தொழிலாளி பழனிச்சாமிக்கு அதிக இடம் இல்லாமல் போய்விட்டது. அந்த கதாபாத்திரம் கதையில் இணையாமல் இருப்பது ஒரு குறை. பழனிச்சாமியை நீக்கிவிட்டாலும் அந்த கதையில் எந்தப் பெரிய பாதிப்பும் இல்லாத நிலையில்தான் இக்கதை அமைந்துள்ளது. 

சிங்கப்பூர் போன்ற பெரு நகரங்களுக்கு பிழைப்பு தேடிவரும் அந்நிய நாட்டவர்களின் வாழ்க்கை எதிர்பாரா திசைகளில் சென்று முடிந்துவிடும் ஆபத்தை ‘மரணம் பருகும் பறவை’ என்ற கதை சித்தரிக்கின்றது. தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு வந்த கதைசொல்லியும் இந்தோனேசியாவில் இருந்து வீட்டு வேலைக்கு வந்த நுசாந்தியும் கொள்ளும் காதலும் காமமும் அவர்களை மரணத்துக்கு இட்டுச் செல்கின்றது. இளம் தாயான நுசாந்தி கதைசொல்லியுடனான காமத்தில் திளைத்து அதில் இருந்து விடுபட விரும்பாமல் மரணத்தை ஏற்றுக் கொள்கிறாள். கதை சொல்லியையும் தற்கொலைக்குத் தூண்டுகின்றாள். இக்கதையில் கதை சொல்லியின் மனக் கொந்தளிப்புகளை எம்.கே.குமார் ஓரளவு சிறப்பாகவே எழுதியுள்ளார். அவரின் மொழி நடை இக்கதைக்கு பொருந்துகின்றது. ‘எலியும் பாம்பும்’ வேலை தேடி சிங்கப்பூர் வந்த வங்காளதேச இளைஞன் சில காரணங்களால் ஆண் பாலியல் தொழிலாளியாக ஆவதை மையமாகக்கொண்ட கதை. வீரிய மருந்தின் தாக்கத்தால் மதியிழந்த அவன் தன் பெண் வாடிக்கையாளரின் மகளையே வேட்டையாட முனைகிறான். நவீன  சிங்கப்பூரில் கைபேசியின் வழியே நடைபெரும் பாலியல் வணிகத்தையும் ஆண், பெண் பேதமின்றி உடல் தேவைக்கு இசைந்து போகும் பலதரப்பட்ட மக்களையும் இக்கதை நுட்பமாகச் சித்தரிக்கின்றது.    

சிங்கைப் படைப்புகள் பொதுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டவையாக இருப்பது இயல்பு. குடியேறிய எழுத்தாளர்களிடம் அரசியல் விமர்சனங்கள் இல்லாத மனநிலை மிக வலுவாக உள்ளது. அரசை விமர்சிப்பதில் மலேசியா உட்பட அரசாங்க ஊழியர்களுக்கு இருக்கின்ற தயக்கம் சிங்கப்பூரில் பணியின் காரணமாக குடியேறிய எழுத்தாளர்களுக்கும் இருப்பது இயல்பானதே. சில ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் முன்னால் பிரதமர் லீ குவான் யூ மறைவுக்குப் பின்னர் எழுத்தாளர் அ.மார்க்ஸ் லீ குவான் யூவின் பொருளாதார கொள்கைகளை மார்க்சிய கண்ணோட்டத்தில் விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். லீ குவான் யூ முதலாளித்துவ சிந்தனாவாதி என்பதோடு அடக்குமுறையின் வழி ஆட்சி செய்தவர் என்ற சாரத்தை அக்கட்டுரை கொண்டிருந்தது. அக்கட்டுரை சிங்கை எழுத்தாளர்களின் கடும் கண்டனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. லீ குவான் யூவால் தாங்கள் நல்வாழ்வு பெற்றோம் என்பதே உண்மை என்று பல குடியேறி எழுத்தாளர்களும் கடுமையாகவே கருத்துத் தெரிவித்தனர். சிங்கப்பூர் தேசிய அரசியலில் மட்டும் அல்லாது அங்குள்ள இந்தியர் அரசியலிலும் குடியேறி தமிழர்கள் ஆர்வம் காட்டுவது குறைவாகவே உள்ளது. ஆயினும் எம்.கே. குமார் சிங்கப்பூர் மக்களையும் குடியேறியவர்களையும் தன் கதைகளில் ஒப்பிட்டு விமர்சனங்களை வைப்பதைக் காண முடிகின்றது.

குலசாமி கணக்கு, மோர்கன் என்றொரு ஆசான், ருசி போன்ற கதைகளில் உள்நாட்டினரின் சோம்பேறித்தனத்தையும் வீண் பகட்டையும், பேராசையின் காரணமாக வரும் முட்டாள்தனத்தையும் பகடி செய்துள்ளார். ‘மோர்கன் என்றொரு ஆசான்’ என்ற கதை மிக நேரடியாகவே உள்நாட்டு தமிழர்களின் மெத்தனப் போக்கை விமர்சிக்கின்றது. மோர்கன் வாயிற் காவலராக வேலை செய்து கொண்டிருக்கும் கம்பனியின் முதலாளி சீனர். முப்பது வருடமாக காலை ஐந்து மணிக்கே அலுவலகம் வந்துவிடும் உழைப்பாளி. அதே நிறுவனத்தில் மெக்கானிக் வேலைக்கு வரும் தமிழ்நாட்டுத் தொழிலாளி செல்வம்,  மோர்கன் பார்க்கும் போதே தொழிலில் மெல்ல வளர்ந்து தனி நிறுவனம் தொடங்கும் உயர்நிலைக்குச் செல்கிறான். ஆனால் மோர்கன் வெட்டி காழ்ப்புகளையும் உள்ளூர்வாசிகள் மற்றவர்களைவிட மேம்பட்டவர்கள் என்ற டாம்பீகமும் பேசிக்கொண்டு காலம் கடத்துகிறார். குலசாமி கணக்கு கதையில் மிகப்பெரிய திட்டமிடலில் இருக்கும் உள்ளூர் ஆலை முதலாளிகள் மிகச் சாதாரண விடயத்தில் கோட்டை விடுகின்றனர். அந்நியத் தொழிலாளிக்கு தெரிந்துவிடும் ஒன்று பெரிய நிர்வாகிகளுக்குத் தெரியாமல் பெரும் இழப்பை கொண்டுவருகின்றது. ருசி கதையில் உள்ளூர்வாசிகளின் வெட்டிப் பேச்சுகளும் மற்றவரைச் சுரண்டி வாழும் கீழ்மைகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன.

எம்.கே.குமார் கடுமையான உழைப்பைச் செலுத்தி பல தேடல்களுடன் சிறுகதைகளைக் கட்டமைத்திருந்தாலும் அடிப்படையான சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவது அவசியம் என்று நினைக்கிறேன். முதலாவதாக, அவர் கையாளும் மொழி அதிக அலங்காரத்தோடு இருப்பது வாசிப்பில் இடையூறாக அமைந்துவிடுகின்றது. ஒரே வாக்கியத்தில் பல இடங்களில் ‘போல’ சேர்த்து நீட்டிக்கொண்டு செல்வதைத் தவிர்க்கலாம். பல வாக்கியங்களில் ‘போல’ சேர்ப்பது அவரின் பாணியாக இருக்கின்றது.  மேலும் ‘பகலில் மரபுக்கவிதையாகவும் இரவில் புதுக்கவிதையாகவும் மாறும் அவளது கண்கள்’ என்பன போன்ற திரைப்பட பாணி உவமைகளும் துருத்தலாகத் தெரிகின்றன.

அதுபோலவே, சிறுகதை உரையாடல்கள் பலவும் நாடகபாணியில் இருப்பதையும் தவிர்க்கலாம். புலி, தொல்குடி என பல சிறுகதைகளில் உரையாடல் இயல்புநிலையில் அமையவில்லை. மேலும், உள்ளூர் மொழிகளில் பேசும்போது சட்டென்று தமிழிலும் பேசும் தமிழர் அல்லாத கதாபாத்திரங்கள் உயிர்காடு குறுநாவல் முழுதும் வருகின்றனர். “என்னா பிரச்சனை… அப்பா ஹால்?” என்று ஒரு மலாய் பெண் தன் கணவனிடம் பேசுகிறாள். இது உண்மையில் ஆரம்பக்கட்ட எழுத்தாளர்கள் செய்யும் பிழை. எம்.கே.குமார் இதுபோன்ற பிழைகளைத் தன் படைப்பில் அனுமதிக்கக்கூடாது. அந்த குறுநாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள மலாய்மொழி உரையாடல்களும் பேச்சு மொழி அல்ல. கூகள் மொழியாக்கம்போல பல இடங்களில் பிழையான பொருள் தருகின்றன. அவை மொத்தமுமே மீண்டும் மெய்ப்பு பார்க்கப்பட வேண்டியவை.   அதோடு, எம்.கே.குமாருக்கு உள்ளூர் தமிழர்களின் பேச்சு மொழி பிடிபடாமல் இருப்பதையும் காண முடிகின்றது. “என்னா ‘மீனும்’ குடிக்கிறீங்க?” என்று ஒரு கடைக்காரர் கேட்பதாக இருக்கிறது. பல இடங்களில் மலேசிய சிங்கப்பூர் தமிழர்கள் பயன்படுத்தும் ‘லா’ விகுதி செயற்கையாகப் புகுத்தப்பட்டுள்ளது. 

சிங்கப்பூர் நவீன இலக்கியத்தில் எம்.கே.குமாரின் சிறுகதைகள் புதிய திறப்புகளையும் புதிய கோணங்களையும் எடுத்துவைப்பவையாக இருக்கின்றன. அவை சிங்கப்பூரில் உழைக்கும் மக்களின் துயரங்களையும் இக்கட்டுகளையும் கோட்டோவியமாக வரைந்துகாட்டுகின்றன. சிங்கப்பூரின் நிலக்காட்சிகளை முடிந்த அளவு பதிவு செய்கின்றன. ஆயினும் சிறுகதைளை கலைநுட்பத்தோடு படைப்பதில் அவரிடம் தடுமாற்றம் தெரிகின்றது. அந்த தடுமாற்றங்களே வாசிப்பு அனுபவத்தை முழுமையடைய விடாமல் செய்துவிடுகின்றன. அதுவே அவருக்கு சிறுகதை படைப்பில் சவாலாக இருக்கும் என்று நம்புகின்றேன். ஆயினும் அந்த சவாலை எம்.கே. குமார் சுலபத்தில் வெற்றிகொள்ள முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கான சாத்தியங்கள் அனைத்தும் இவ்விரு தொகுப்புகளின் தெரிகின்றன.

யாவரும் பதிப்பகம், சென்னை

நூலை ஆன்லைன் மூலமாக வாங்க

2 comments for “எம்.கே குமார் சிறுகதைகள்

  1. July 2, 2021 at 3:26 pm

    எனக்கு குமாரின் கதைகளில் இழையோடும் எள்ளல் பிடித்திருக்கிறது. அவர் கதைகளுக்குள் பயனம் செய்ய இந்த சொல்முறை உதவுகிறது. உங்களின் சிறப்பான விமர்சனம் இது. கதைகளின் நுணுக்கங்களை தெளிவாகச் சொல்லிச் செல்கிறீர்கள் பாண்டியன்.

  2. எம்.கே.குமார்
    July 5, 2021 at 8:38 pm

    வல்லினத்தின் சிங்கப்பூர் சிறப்பிதழில் என்னுடைய சிறுகதைகளும் கவனம் கொள்ளப் பெற்றதில் மகிழ்ச்சி. நிறைகளும் குறைகளும்கொண்ட நீண்ட விமர்சனத்திற்கு நன்றி அ.பாண்டியன். வல்லினம் ஆசிரியர் குழுவினர்க்கும் நன்றி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...