“எத்தனை முறை சொல்லிவிட்டேன், உனக்கு வலதுமூளை செயல்படவில்லையா இல்லை இடதுமூளையா? இல்லை இரண்டுமே இல்லையா?”
லீனா காம்பிலிருந்து நேராக நிறுத்தியிருந்த ஒரு பூ உதிர்வதைப்போல ஒரே நொடியில் படக்கென்று காலையெடுத்து இடதுபுறம்வைத்து குதிரையின் மீதிருந்து கீழே இறங்கினாள்.
பூசா எனப்படும் அக்குதிரையின் கழுத்துக்கு நேர்கோடாய் வலதுபக்கத்தில் நின்றிருந்த அலெக்ஸ் அதன் முன்பக்கமாய் சுற்றி குதிரையின் இடதுபக்கம் இறங்கிய லீனாவைப் பார்க்க அவசரமாய் ஓடிவந்தான்.
குதிரையின் மேலேயும் கீழேயும் ஏறியிறங்க வைக்கப்படும் காலடிமேசையைக் காலால் எத்தியவாறு லீனா அவனைக் கடந்து ஓரமாய்ச் சென்று நின்றாள்.
ஒருநொடி பூசா அவனைப் பார்த்து நகைப்பது போலிருந்தது. அலெக்ஸ் அதனை முறைத்துப் பார்த்தான். உண்மையில் இப்போது அது நகைத்தது. அதன் பற்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆசைகள் ஒளி விடுவதைப்போல திறந்து மூடின. ’இன்னும் எத்தனை பாடுதான் படப்போகிறாய் அலெக்ஸா?’ என்று பூசா அவனைக் கேட்டது. சத்தம்தான் வரவில்லை.
” கோபித்துக்கொண்டாயா லீனா?” என்றான் அவளருகில் வந்து.
அமைதியாக தன் கைப்பை, தொப்பி உள்ளிட்டவைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். உடனே இங்கிருந்து கிளம்பவேண்டும் என்று அவள் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் இவ்வளவு நேரம் இந்த கைப்பையையும் காலணியையும் மாட்டிக்கொண்டும் கழட்டிக்கொண்டும் இருக்கமாட்டாள். குதிரைச்சவாரிக்கென மாட்டியிருந்த நீண்ட காலணியைக் கழட்ட முடியாததைப்போல பாசாங்கு செய்துகொண்டிருந்தாள்.
இந்த குதிரைச் சவாரியை கற்றுக்கொள்ளாமல் ஒருபோதும் இவள் என்னையும் இந்தக்குதிரையையும் நீங்கப்போவதில்லை. குதிரைச் சவாரியைக் கற்றுக்கொடுக்க மட்டுமே என்னைத் தோழனாக நினைக்கிறாள். எப்படியாவது இந்தக்குதிரையை சவாரி செய்யக்கற்றுக்கொண்டு அதை ஓட்டவேண்டும் என்பது மட்டுமே அவளுக்கு இலக்கு. “ம்ம்ம்… நான்?” யோசித்துக்கொண்டே மீண்டும் அவளிடம் கேட்டான் அலெக்ஸ்.
“கோபித்துக்கொண்டாயா லீனா? உன்னை நான் திட்டவில்லையே பிறகேன் கோபம்?”
“திட்டவில்லை. ஆனால் அறிவிருக்கிறதா என்று கேட்டாய், அவ்வளவுதான். அதுவும் இன்று மூன்றுமுறை. எனக்கு குதிரையைப் பயிற்றுவிக்க உனக்கு விருப்பம் இல்லையெனில் சொல்லிவிடு. நான் குதிரைச் சவாரியை கற்றுக்கொள்வதை விட்டுவிடுகிறேன். என்னை இப்படியெல்லாம் திட்டாதே. ஏதேதோ மனதில் வைத்துக்கொண்டுதான் இவ்வாறு என்னை நீ புண்படுத்துகிறாய்.”
‘இதையெல்லாமா கணக்கு வைத்துக்கொண்டிருப்பாள். ஏதேதோ மனதில் வைத்துக்கொண்டிருக்கிறேனாம். பாசாங்குக்காரி. இந்தக் குதிரையை நேசிப்பதில் நூறில் ஒருமடங்காவது என்னை நேசித்தாலென்ன? என்னைக் கண்டுகொண்டால் என்ன? எப்படி மேலே வருவது என்றறியாது கிணற்றுக்குள் விழுந்து சுற்றிச்சுற்றி வரும் பாம்பொன்றைப்போல இவளையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் என்ன இவளுக்குத் தோன்றவில்லை. ஏன் என் காதல் இவளிடம் இல்லை. என்னைப்போல யாராவது இவளை நேசிக்கமுடியுமா? என்ன சொன்னால் புரியும் என் அன்பு? என்ன சொன்னால் இவள் என்னை நேசிப்பாள்?’ என்று நினைத்துக்கொண்டே சொன்னான்.
“ம்ம்… உனக்கும் அதுதான் இலக்கு. நான் யாரோ ஒருவன். உனக்கு குதிரைச் சவாரியைக் கற்றுக்கொள்ளவேண்டும் அவ்வளவுதான். ஏற்கனவே நீ சொன்னதைப்போல, இந்தக்குதிரையின்மீதேறி ஒரு இராஜகுமாரியைப்போல இங்கே வலம் வரவேண்டும், அதுதான் உன் இலக்கு. உன் இலக்கு தீர்ந்ததும் என்னை விட்டுவிட்டுப்போய்விடுவாய். நான் யாரோவாகிவிடுவேன். உனக்கு நான் யாரோ? உன் தேவைகள் தீர்ந்ததும் நீ அடையவேண்டியவற்றை அடைந்ததும் நான் யாரோ உனக்கு!”
“அலெக்ஸ், வார்த்தைகளை வீசாதே. குதிரை கற்றுக்கொடுக்க இங்கு நீ மட்டும் இல்லை. உன்னிடம் மட்டும் குதிரைகள் இல்லை. இந்த டர்ஃப் கிளப் வளாகம் முழுவதும் குதிரைகள் உள்ளன. மணிக்கு, நாளுக்கு என்று வாடகைக்குக் குதிரைகள் கிடைக்கின்றன. என்னால் பழகிக்கொள்ள முடியும். உனக்கு விருப்பம் இல்லை என்றால் போ. நான் பார்த்துக்கொள்கிறேன். நண்பன் என்ற முறையில் உன்னைக்கேட்டேன். வெள்ளைக்கார பயிற்சியாளர்களைக்கூட பார்த்தேன் இங்கு” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்தாள்.
“அதைத்தான் நானும் நினைக்கிறேன், ஒரு வெள்ளைக்காரச் சீமாட்டிகூட தனக்குக் குதிரைச் சவாரி கற்றுக்கொடுக்க முடியுமா என்று என்னைக் கேட்டாள். என் தலைமுடியும் குதிரையின் பிடரிமுடியைப்போல நெளிந்து குழைவதாகச் சொன்னாள். அவளுக்காவது முயற்சி செய்து கற்றுக்கொடுக்கலாம். வேறு அனுகூலங்களும் கிடைக்க வாய்ப்பிருக்கலாம்”
லீனா சட்டென்று தன் ஷூவைக் கழட்டி வீசினாள். நான் கிளம்புகிறேன். இனி நாம் சந்திக்கவேண்டாம். பை.
“ஒரு நிமிடம்.! என்னிடம் நீ சொல்லிவிட்டுச் செல்லவேண்டாம். பூசாவிடம் சொல்லிவிட்டுச்செல். அது நம்மைவிடப்புத்திசாலி. அதற்கு நம் உடல்மொழி புரியும். நம் கோபங்கள் தெரியும். மனிதர்களைக் குதிரைகள்தான் ஆளுகின்றன. குதிரையின் நுணுக்கங்களை அறிந்து அதன் மீதேறியவனே இவ்வுலகை வென்றான். இப்போதுகூட அதனைப் பார். அது எவ்வாறு உன்னையும் என்னையும் பார்த்துச் சிரிக்கிறது…” என்றான்.
லீனா அவன்மீதிருந்த வெறுப்போடு பூசாவை நிமிர்ந்து பார்த்தாள்.
பூசா கனைத்தது. அவளைப் பார்த்துக் கண்ணடிப்பதைப்போலிருந்தது. ’மேலே வா, ஏறி என்மீது அமர்ந்து என்னை இயக்கு’ என்று சொல்வதைப்போலிருந்தது. ‘சந்தர்ப்பங்களை நழுவவிடாதே’ என்றும் அவளிடம் கெஞ்சுவதைப்போலிருந்தது.
‘இந்தக்குதிரை ஏன் என்னை இப்படிப் படுத்துகிறது? இந்தக்குதிரை மட்டும்தானா? இல்லை எல்லாக்குதிரையும் இப்படித்தானா? சிறிது பழக்கத்துக்குபின் ஏதோ ஒரு நெருக்கம் வந்துவிடுகிறது. அதன் அருகில் நிற்கும்போதும் அதனைத் தடவும்போதும் உடலுடன் உடல் உரசும்போதும் ஓர் ஆனந்தம் வருகிறது. அதன் உடலிலும் உணர்விலும் ஒரு தாளம் ஓடுவதைப்போல மனம் இசைக்குள்ளே மயங்கி நழுவுவதைப்போல அதனுடன் இணைந்துவிடுகிறது. குதிரை அழகியலும் இயங்குவியலும் மன ஓர்மையும் கொண்ட ஓர் அற்புதம்’ என்று நினைத்துக்கொண்டாள்.
அவள் அமைதியாகிவிட்டாள் என்று அலெக்ஸ் பூசாவைப்போல ஆனந்தம்கொண்டான்.
“பயிற்சியில் இன்னும் ஒரு மணி நேரமே மிச்சமிருக்கிறது. மீண்டும் முயற்சி செய். உன்னால் மிக எளிதாக சவாரி செய்யமுடியும். இந்த நான்கு வார காலத்துக்குள் உன்னைப்போல குதிரையைக் கையாளக் கற்றுக்கொண்டவர்களை நான் கண்டதில்லை. ஒன்று தெரிந்துகொள். நாம் எவ்வளவுதான் விரும்பினாலும், குதிரைக்கும் நம்மீது விருப்பமில்லாவிட்டால், ஒருபோதும் அக்குதிரையின்மீதேறி நாம் சவாரி செய்யமுடியாது. அது இருவருக்கும் அவஸ்தை. நம்மை அது கீழே தள்ளவே பார்க்கும். அதனைப் பரஸ்பரம் புரிந்துகொண்டால் குதிரை ஓட்டுவதைப்போல இலகுவானது எதுவுமில்லை.”
“நான் எவ்வளவு சொல்லியும் நீ புரிந்துகொள்ளவில்லை. குதிரையை காலுக்கருகில் அழுத்தாதே. அதற்கு நான் உன்னோடிருக்கிறேன் என்று அணைத்துக் காட்டினால் போதும். குதிரையின் மீது நேராக நிமிர்ந்து உடலின் எடை நடுவில் இருப்பதை உறுதி செய்கொள். குதிரை நாம் நினைப்பதைவிட பெரிய விலங்கு. குதிரை நாம் பார்ப்பதைவிட மிக மென்மையான விலங்கு.”
எல்லாவற்றையும் காதுகொடுத்து கேட்டபின், “நான் உன்னுடன் இப்போது பேச விரும்பவில்லை. ஒரு இடைவேளை எடுத்துக்கொள்கிறேன்” என்று அவனிடம் சொல்லிவிட்டு நடந்தாள் லீனா.
சேணத்தின் மீது கைவைத்து பூசாவை இழுத்து கழுத்துப்பகுதியில் தடவினான் அலெக்ஸ். அதன் மோவாயில் முத்தமிட்டான். பூசாவின் கண்கள் கூசியதுபோலும். கண்ணைச் சிமிட்டிக்கொண்டது.
அலெக்ஸ் புகித் தீமாவிற்கு அருகிலிருக்கும் அந்த தரைப்பங்களாவீட்டுக்கு வாடகைக்கு வந்த முதல் வாரத்தில் ஒருநாள் அவளைப் பார்த்தான். பட்டுப்பாவாடை சட்டையுடன் அவள் அப்போது வாடகைக் காரிலிருந்து இறங்கி அவன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள். இங்குதான் இருக்கிறாளா? ஆற்றோர அரசபங்களா ஒன்றில் அவன் எட்டிப் பார்ப்பதுபோல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒளியூறும் கூரையின் பகுதியொன்றில் பட்டுத்தெறித்த வெளிச்சத்துண்டொன்று அவள் காலடியில் கிடந்தது. போட்டிருந்த கால்சட்டை – மேலாடையுடன் கடகடவென்று ஏதோ எடுப்பவனைப்போல கீழே வந்தான். மிதந்தெழும் ஒளியின் சொரூபமாக கண்ணெதிரில் வந்து நின்றாள் அவள். பெயரோ தெரியாது. இந்த வீட்டுக்கும் அவளுக்கும் என்ன உறவோ அதுவும் புரியாது. ஆனால் அவள் அவன் எதிரில் நின்றாள். ஒரு கூரையின் இடுக்குகளைத்தாண்டி அறையில் மீண்டு நிற்கும் ஒளியைப்போல.
இந்த வீட்டின் அறைகள் ஒருகாலத்தில் மஹாராஜாவின் அரண்மனையைப்போல பெரியதாக இருந்திருக்கவேண்டும். தூண்கள் அப்படித்தான் இருந்தன. உத்திரங்களில் பழைய சித்திரங்களும் வடிவும் கைகூடி நின்றன. ஒரு சித்திரத்தில் அலைதெரியும் ஆறோ குளமோ ஒன்றும், அதன் கரையில் காண்போரை மயக்குமோர் உடல்கொண்ட பெண்ணொருத்தி தலைமுடியை அலையாக்கிச் சித்திரமாய்க்கிடந்தாள். அவளின் மேல் சந்தனமும் முல்லையும் மணந்ததைப்போல பிரம்மையாடியது. தூரத்திலிருந்து முதலையொன்று வாயை நீட்டி ஏக்கத்தோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தது.
பெரியதான இந்தவீட்டை இப்போது எலிக்கூண்டுகள்போல ஒரே ஒரு வழியுடன் முடிந்த அளவுக்கு எங்கெல்லாம் குறுக்கமுடியுமோ அங்கெல்லாம் குறுக்கி தனித்தனி அறைகளாய் உலர்சுவரை வைத்து மாற்றிவிட்டார்கள். மூன்றுமாடி கொண்ட இந்தவீட்டில் எத்தனை அறைகள் இருக்கின்றன மொத்தம் எத்தனை பேர் இதில் தங்கி இருக்கிறார்கள் என்றெல்லாம் கண்டுபிடிக்கமுடியவில்லை. அத்தனை அறைகள். அவளும் அப்படியாக ஒரு அறையில்தான் இருக்கிறாள் என்று கண்டுகொண்டான்.
நான்கைந்து வாரங்களுக்குப் பின் அவளே அவனைத் தேடி வந்தாள். அவள் பெயர் லீனா என்றாள். பாகிஸ்தானிய அப்பாவிற்கும் கேரள அம்மாவிற்கும் பிறந்தவள் என்றும் சொல்லிக்கொண்டாள். இங்கே தங்கிப்படிப்பதாகவும் அண்மையில் சிங்கப்பூர் டர்ஃப் கிளப்பில் அவனைப்போல ஒருவனைப் பார்த்ததாகவும் சொன்னாள். அவனுடைய வேலை குதிரை சம்பந்தப்பட்டதா என்றும் ஆர்வத்தோடு வினவினாள்.
‘இதெல்லாம் அவன்கண்’ என்று உறுதியாக நம்புவதைப்போலிருந்த அலெக்ஸ், உலகின் பேரழகுக்குதிரையான அண்டாலூசியனைப் பார்ப்பதுபோல அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். இன்னும் பார்வையைச் சுருக்கி அவளுடைய மோவாயைப் பார்த்தான். குதிரையின் கழுத்துப்பகுதியையும் மோவாயையும் அவன் எப்போதும் ரசிப்பதுண்டு. பெண்களுக்கு கவர்ச்சியான அப்படி ஒன்று அமைவதில்லை என்பது அவன் எண்ணம்.
ஆனால், லீனாவிடம் அதைக் கண்டான். அஃதோர் பேரதிசயம் என நினைத்தான். கன்னத்திலிருந்து கொஞ்சம் கீழே விரிந்து மிக நீண்டதாகவும் ஆகிவிடாமல் சடக்கென்று சுருங்கிவிடாமலும் மிகத்துல்லியமான ஓரலகின் நிகழதிசயம் அது என்றும் அதிசயித்தான். கழுத்துக்கும் மோவாய்க்கும் இடையில் அவனுடைய பார்வைகள் எப்போதும் நிலைத்து நின்றன.
அவனுடைய வாழ்வில் நிறைய அதிசயங்கள் நடப்பதாய் நினைத்தான். மங்கோலிய அப்பாவிற்கும் இந்திய வம்சாவழி அம்மாவிற்கும் ஃபிஜியில் பிறந்த அவனுக்கு சிங்கப்பூரின் டர்ஃப் கிளப்பில் குதிரை பராமரிப்பாளனாக வேலை கிடைத்ததும், பல்வேறு வீடுகள் மாறி இப்போது இங்கு வந்ததும் இங்கே இவளைச் சந்தித்ததும் என எல்லாம் அதிசயங்கள்தான். அவளிடம் சொன்னால் சிரிப்பாள். ’என்னைக் கணக்குப் பண்ணுகிறாயோ?’ என்பாள். ‘இப்படியெல்லாம் கற்பனை கலந்து கவிதை நயமாய்ப் பேசி என்னையெல்லாம் உன்னால் கணக்குப்பண்ண முடியாது!’ என்றும் பீற்றிக்கொள்வாள்.
அவன் அமைதியாய் பார்ப்பான். ‘இல்லை நான் உன்னைக் காதலிக்கிறேன்!’ என்று சொல்வதற்குள், அவனை அறிந்ததுபோல, ‘நீ என் நண்பன். நண்பனாய் இருப்பதுதான் எனக்குப்பிடிக்கும் என்று அவனுடைய தோளில் தட்டிவிட்டுச்செல்வாள். அக்கணம் அவன் தன் கடிவாளத்தை இறுகப்பிடித்துக்கொள்வான். அவளைக் கண்ட பலமாதங்களாக இது நடந்துவருகிறது. ’குதிரை பறப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு முடவனைப்போலல்லவா நான் அவளைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்’ என்றும் நினைத்தான்.
அவளை அவன் நெருங்க நினைத்து முயற்சித்துக்கொண்டேயிருந்தான். ஆசையும் அன்பும் சந்தித்துகொள்ளும் பேச்சு முனைகளிலெல்லாம் அவள் அவனை நண்பனாக வரித்துக்கொண்டேயிருக்க, இருட்டில் தவறிய நாணயத்தைத் துலாவுவதைப்போல அவன் ஏதோ ஒன்றை அவளிடம் தேடியபடியே இருந்தான். சொல்ல முடியாமலும் தடுமாறினான்.
‘கடலடியில் மூழ்கி அழுந்தி அசைந்துகொண்டிருக்கும் படகைப்போல என்னுடைய மனம் அல்லலுறுகிறது. எதிர்க்காற்றில் சிறகடிக்கும் பறவைபோல நான் அவதியுறுகிறான். பெண்ணே, சூரியனைப்போல ஆற்றலும் நிலவைப்போல அழகும் கொண்டவளே என்ன செய்து உன்னை நான் சேரமுடியும்? என்ன செய்தால் என் அன்பு உன்னைச்சேரும்?’ என்று ஒரு கவிதையை எழுதி உருகிக்கொண்டிருந்தான்.
‘சென்று சேராத காதலும் அன்பும் கடலாய் கடலலைகளாய் மணற்குவியல்களாய் மீந்திருக்கின்றன போலும். சென்று சேராத முத்தங்களே காற்றாய் அலைக்களிக்கின்றனபோலும். அறியப்படாத நேசமே நிலமாய் வீழ்ந்திருக்கின்றனபோலும்!’ என்று ஒரு மாலை வேளையில் கவிதை எழுதித் தன் அறையின் கதவில் ஒட்டியிருந்தான்.
’பேரன்பின் ஒளிக்குமுன் வீழாத நட்சத்திரம் உண்டோ? பேரன்பின் சாரத்தில் வீசாத தென்றலுண்டோ? பேரன்பின் அழியாத ஈரத்தில் துளிர்க்காத விதையுண்டோ? பேரன்பின் மோனத்தில் நிகழாத ஞானமுண்டோ? பேரன்பின் ஆழத்தில் அசையாத உயிருண்டோ? பேரன்புக்குமுன் நிகழாத மாயம்தான் ஏதும் உண்டோ?’ என்றும் ஒருமுறை எழுதி அவள் பார்வைக்குப் படும்படி வைத்துவிட்டுச்சென்றிருந்தான்.
அவற்றையெல்லாம் நாட்காட்டியைக் கிழிப்பதுபோல சிறிதும் மனம் அழியாது லீனா கிழித்துவிட்டுச்சென்றிருந்தாள்.
‘இன்று உன்னைச் சந்திக்கலாமா? ஓய்விலிருக்கிறாயா?’ என்று ஒரு நாளில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். மாலை சந்திப்போம் என்று இடத்தையும் நேரத்தையும் அனுப்பியிருந்தான் அலெக்ஸ்.
லீனா வந்துவிட்டாள். தன் பன்னிரண்டு குதிரைகளின் மேலெழுந்து பாய்ந்துவரும் கதிரைப்போல அவள் வந்துவிட்டாள். குதிரையின் குளம்படிகளைப்போல அவளின் குதிகால் செருப்புக்கு ஒரு தாளகதி உண்டு. அதை அவன் நன்கு அறிவான். நெகிழ்ந்தான். மனம் கடிவாளத்தை மீறியது.
லீனா வந்தாள். காலின்மீது காலைப்போட்டு ஒரு காலைச்சரிவாக்கி அவனெதிரில் அமர்ந்தாள்.
‘எந்தச் சிற்பியும் எந்த ஓவியனும் கொண்டுவரமுடியாத ஓரழகு இந்த மோவாயும் கழுத்தும். இறைவன் எவ்வளவு பெரியவன். எனக்காகப் படைத்திருக்கிறானோ? என்னருகில் கொண்டுவந்திருக்கிறானோ? நேரில் பார்க்கவைத்திருக்கிறானோ? அன்போடு அருகருகே பேச வைத்திருக்கிறானோ?’ அவனுடைய மனம் ஓடத்தொடங்கியது.
“உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும். ஓய்வாக இருக்கிறாயா?” என்றாள்.
“சொல். என்ன கேட்கவேண்டும் என்று சொல்.”
“என்மீது ஏதும் கோபமா உனக்கு?”
“இல்லை. அப்படியெல்லாம் இல்லை.”
“பிறகேன் இப்படி ஒரு அவஸ்தையான முகம். வாழ்வே அவஸ்தையும் நிராகரிப்பும் நிறைந்ததுபோல. வாழ்வே முடங்கிக்கிடக்கும் சுழியான சாக்கடைபோல!?”
“அப்படியெல்லாம் இல்லை. சொல். என்ன செய்யவேண்டும் நான்.? மன்னிக்கவும் உன்னைப்போல சிறப்பாக எனக்கு ஆங்கிலம் பேசவராது. என்ன வேண்டுமோ அதை நேரிடையாக சொல்.”
“சொல்லிவிடட்டுமா?”
அலெக்ஸ் தவித்தான். நிச்சயம் அவள் தன் காதலை ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையோடு தான் பறந்த சேணத்தை இறுக்கினான்.
“நீண்ட நாளாக எனக்கொரு ஆசை. ஒரு குதிரையின்மீது ஏறி நான் பயணிக்கவேண்டும். அதன் திசையில் பறந்துசெல்லவேண்டும். காற்றோடு காற்றாக, கட்டுப்பாடுகளின்றி அதன் மூக்கின் முனையில் இந்த உலகை இந்த பூமியை பின்னகர்த்தி அதனைத் தாவிச்செல்லவேண்டும். ஒரு தாவலில் என்னுள்ளிருக்கும் அனைத்தையும் விலகிச்செல்லவேண்டும். ஒரு குதிரையைப் பழக்கித்தருவாயா எனக்கு?” லீனா கண்களை விரித்தாள்.
கண்களில் மின்னலின் வேகம் சுடர்விட்டது.
‘குதிரையா? இவள் என்னைச்சோதிக்கிறாள். என்னையறிந்து நான் கேட்கப்போவதையறிந்து முன்னமே என்னைப் பழக்கிக்கொள்கிறாள். குதிரையைப் பழக்குமுன் சேணத்தைத் தயார்செய்கிறாள். என்னிடமிருந்து விலகுவதற்கே குதிரையைத்தேடுகிறாள் என்றெல்லாம் நினைத்தவாறு, “செய்யலாம், குதிரை பழகுவது கடினமில்லையே!” என்றான்.
இருக்கையிலிருந்து குதித்தவள், “நிஜமாகவா? நான் கற்றுக்கொள்ள முடியுமா? என் வாழ்வின் நீண்ட பேராசைகளில் ஒன்று. உதவுவாயா? உன்னை நான் சந்தித்ததும் அதற்குத்தான் என்று நினைக்கிறேன். என் ஆசை தீர்ந்துவிடும். செய்வாயா?”
“நிச்சயமாகச் செய்வேன். இதென்ன பெரிது? என்னைப் புரிந்துகொண்டாள் போதும். இதைவிட என்னவேண்டுமானாலும் செய்வேன்.! நாளையே செல்வோம். எத்தனை மணிக்கு என்னுடைய பணிநேரம் என்று பார்த்துக்கொள்கிறேன். உனக்குத் தெரிவிக்கிறேன். நாம் நிச்சயமாகச் செல்லலாம். உன் ஆசை தீரும்!”
அதற்குப்பிறகு, இரண்டு மாதங்களாக இருவரும் ஓய்வாக இருக்கும் நேரங்களைத் தேடி, கடந்த நான்கு வாரங்களாக லீனாவுக்குப் பயிற்சி கொடுத்து வந்திருந்தான் அலெக்ஸ்.
“குதிரை எல்லையில்லா சக்தியைக் கொண்டிருந்தாலும், எல்லா மிருகங்களைப்போலவே பயத்துடனும் மிரட்சியுடனும் வாழும் மிருகம். அதற்கு உடனடித்தேவை தம்மை நெருங்குபவர்கள் தம்மைத் துன்புறுத்தமாட்டார்கள் என்னும் தெளிவு. அதைத்தான் நாம் முதலில் செய்யவேண்டும். குதிரையின் பின்னிருந்து நெருங்கும்போது அது நம்மைத் துன்புறுத்த வருகிறான் என்னும் அச்சம்கொள்ளும். வெறிக்கும். குதிரையினுடைய பார்வை 360 டிகிரியிலும் சுழலும் தன்மை கொண்டது. குதிரையின் பார்வையில் நாம் இருக்கவேண்டியது அவசியம்” என்றான்.
இடது பாதத்தை ஸ்ட்ரைப்பில் வைத்து குதிரையில் இடதுபக்கத்திலிருந்து ஏறும் முறை முதல், மெதுவாக சேணத்தைத் தளர்த்தி உடலின் எடையை நேர்கோட்டில் வைத்து முட்டிக்கால்களை முன்னே குறுக்கி, தொடைகளை குதிரையின் பக்கங்களில் மெதுவாக அழுத்தி நான் உன்னோடிருக்கிறேன் எனும் குதிரையை ஆளும் முறையை அவளுக்குச் சொல்லிக்கொடுத்தான்.
“ஏன் எப்போதும் இந்தக் குதிரையையே எனக்குப் பயிற்றுத் தருகிறாய்?”
“ஏற்கனவே சொன்னதுதான். குதிரைக்குப் பயமும் மிரட்சியும் அதிகம். அதற்கு உன்னைப் பிடிக்கவேண்டும். மேலும் பூசா எனக்கு விசேசமானது”
“பூசா அதென்ன பெயர்?”
“உலகத்தைத் தன் குதிரையின் காலடியில் வைத்த மாவீரன் அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயரில் பாதி அது. நானே மாற்றி வைத்துக்கொண்டேன்.”
“நீ தான் அந்த அலெக்ஸாண்டரா? எல்லாக் குதிரையையும் நீ ஆண்டுவிடுவாயா?”
அமைதியாயிருந்தான்.
“குதிரையிலிருந்து நீ எப்போதாவது தவறி விழுந்திருக்கிறாயா?”
“நிறைய முறை. ஆனால் ஒவ்வொரு முறை விழும்போதும் எழுந்தவுடன் முதல்வேலையாக அதன் கழுத்தில் முத்தமிட்டுவிடுவேன். அது எனக்கும் அதற்குமான அதீத உறவு.”
“குதிரையின் மீதிருக்கும்போது நான் அதனுடன் இணைந்து குலுங்குகிறேன். என்னை ஏதோ ஒன்று உற்சாகப்படுத்துகிறது. என்ன அது?”
“நீ இன்னும் கன்னியாக இருக்கிறாய் என குதிரை நினைக்கிறதுபோலும்..”
திரும்பி முறைத்தாள்.
“இன்னும் ஓரிரு மாதங்களில் என் கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டுக் கிளம்பிவிடுவேன். அதற்குள்ளாவது இந்த அபலைக்கு குதிரையேற்றம் கற்றுக்கொடுத்துவிடுவீர்களா மகா மாமன்னர் அலெக்ஸாண்டரே?”
“என்னைக் காதலனாய் ஏற்றுக்கொண்டால் நிச்சயம் செய்வேன்”
“அது ஒருபோதும் நிகழாது. நீ எனக்கு நண்பன். காதலைத்தாண்டிய நண்பன். அதுதான் எனக்குப் பெரிது”
அதற்குப்பின் இன்றைய நாளில் இருவரும் சந்தித்திருந்தார்கள். குதிரையின்மீது ஏறி அதனைச் செலுத்துவதில் முன்னேற்றம் கண்டிருந்தாள் லீனா. எப்படியாவது தன்னைக் காதலிக்க வைத்துவிடவேண்டும் என்பதில் முனைப்பாயிருந்தான் அலெக்ஸ்.
இடைவேளை முடிந்து லீனா வந்தாள். குதிரையின் நிதானமான குளம்படிச்சத்தங்கள்.
“உன்னை நிறையக் காயப்படுத்திவிட்டேன் போலும். மன்னித்துவிடு. நட்பாக இருந்திருக்கலாம். உன்னைப் பயிற்சியாளனாக ஆக்கிக்கொண்டது என் தவறு” என்றாள்.
“நானும் வெறும் பயிற்சியாளனாக இருந்திருக்கலாம். உன்னைப் புரிந்துகொள்ளாமல் மன அலைச்சலுக்குள் சிக்கிக்கொண்டேன் மன்னித்துவிடு” என்றான் அவன்.
“ஒரு சுற்று வருவோமா?” என்றாள் அவள்.
“நீ சென்றுவா. உனது ஆசை முதலில் தீரட்டும்” என்றான் அவன்.
நீர்க்கொடி ஒன்றை வானத்தை நோக்கி இழுத்து கொக்கின் தலையில் வைத்ததுபோல சடக்கென்று பூசாவின் நடு முதுகுப்பகுதியில் அமர்ந்தாள் லீனா. பூசா சிலிர்த்தது. இரு கைகளுக்கிடையிலிருந்த சேணத்தை சிறிது தளர்த்தி இரு கணுக்கால் பகுதிகளாலும் குதிரையை அணைத்தாள். பூசா முன்னோக்கி நகர்ந்தது. சட்டென்று அவள் கெண்டைக்கால் பகுதியால் குதிரையை உள்ளழுத்த, வேகமெடுக்க ஆரம்பித்தது அது. லீனா அதிர்ச்சியாவாள் அல்லது கீழே விழுந்துவிடுவாள் என்று ‘மெதுவாகப்போ’ என்று பின்னால் ஓடிவந்தான் அலெக்ஸ்.
ஒன்று, இரண்டு என மூன்று சுற்று வேகமாக வந்தவள், நான்காவது சுற்றில் அலெக்ஸை நோக்கி வந்தாள். பூசாவும் ஏதோ ஒன்றை உணர்ந்தவாறு கால்களை அழுத்தி முன்னே வந்துகொண்டிருந்தது. சேணத்தை ஒரு கைக்கு மாற்றிக்கொண்டு, குதிரையின் முன்னோக்கி நகர்ந்து, சட்டென்று அவன் எதிர்பாராவண்ணம் அவனைப் பிடித்து இழுத்து குதிரையோடு ஓடிவரச்செய்தாள் லீனா. குதிரையின் வேகத்துக்கு இணையாக ஓடி வந்தவன், ஓரிரு நொடிக்குள் தாவி குதிரையின் மீதமர்ந்தான் அவளோடு.
கண்டங்கள் தாண்டி, காலங்கள் தாண்டி செம்பட்டுப் போர்த்திய வனக்குதிரையொன்று பாய்ந்துகொண்டிருந்தது. அதன் ஒரேயொரு பிடரிமுடியை விரலிடுக்கில் தொட்டுக்கொண்டு அதனோடு இணைந்து பறந்துகொண்டிருந்தான் அவன்.
“நன்றி நண்பா, நான் உச்சத்தைத் தொட்டுவிட்டேன்” என்று கத்தினாள் லீனா. “நன்றி தோழி, நானும்” என்றவாறு காற்றில் பறந்த அவளுடைய பிடரி முடிக்கற்றைக்கருகில் சொன்னான் அவன்.
‘குதிரை அழகியலும் இயங்குவியலும் மன ஓர்மையும் கொண்ட ஓர் அற்புதம்’
உங்களைப் போலவே உங்கள் எழுத்துக்களும் அழகே…
Mm super sir.