விடுதலை

நீண்ட மௌனத்திலேயே கரைந்தது பொழுது. எதிர் சோபாவில் அமர்ந்திருந்த கதிரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு சொல்லும் எழவில்லை. சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு ஓவியத்தையே நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படியொரு அசாத்தியமான சூழ்நிலையில், ஏதாவது ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டேயிருப்பது அலையும் எண்ணங்களை ஒருமுகப்படுத்த உதவுகிறது. அந்த ஓவியம் பழைய பாணி ஓவியம்தான். அரிதானதும் அல்ல. அந்தியின் காவிநிற வானப்பின்புலத்தில் அகண்ட சமுத்திரத்தில் ஒரு சிறிய படகு. வெட்டிப்போடப்பட்ட நகத்தின் துண்டைப்போல வளைந்திருந்தது அந்தப் படகு. அதில் துடுப்பு வலிக்கும் படகோட்டி. அவனது சட்டையற்ற கரிய உடலில் அந்திச் செம்மை பளபளத்தது. 

சுவர்க்கடிகாரத்தின் முள் நகரும் சப்தம் ஒரு ரயிலின் சப்தத்தைப் போல எனக்குக் கேட்டது. சற்றுத் தள்ளி சுவர்மூலையின் தரையில் அமர்ந்திருந்தான் ஜெயகுமார். அவனது முகமே வீங்கியிருந்தது. கண்கள் ஒரு பெரும் பழத்தைப் போல எடைகொண்டு இருந்தது. கண்ணீர் இல்லை. அது வற்றிப் போயிருக்கும். இரண்டு நாட்களாக அழுதுகொண்டிருக்கிறான். இன்று காலையில் இருந்து சற்றுப் பரவாயில்லை. அழுகை நின்றுபோயிருந்தது. ஆனாலும், ஏதாவது ஒரு நினைவு சட்டென்று அவன் முகத்தில் துக்கத்தைப் பொங்க வைத்துக் கொண்டிருந்தது. ஊதுகுழல் காற்று, அடுப்பின் அனலை எழுப்புவது போல. காலையில் நாங்கள் வாங்கிவந்த சாப்பாடு தொடப்படாமலே இருந்தது. கண்ணுக்குத் தெரியாத பேரிருப்பாக நிசப்தமும் எங்கள் அருகிலேயே அமர்ந்திருப்பது போலிருந்தது. கதிர்தான் முதலில் பேசினான். அந்தச் சப்தத்தைக் கேட்டு கிட்டத்தட்ட நான் உலுக்கி விழுந்தேன்.

“எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல..” என்றான்.

இந்த வாக்கியமே எனக்குப் பிழையெனப்பட்டது. பெரும் துக்கத்தில் இருக்கும் ஒருவனைப் பார்க்கவரும்போது முதலில் எல்லோரும் இப்படித்தான் துவங்குகிறார்கள்.

நம் சூழலில் சொல்லிச் சொல்லிப் புளித்துப்போன இந்த வாக்கியம் ஒரு தேய்வழக்காக மாறிப்போயிருந்தாலும், பெரும்பாலும் அது அனுபவமின்மையைத்தான் குறிக்கிறது என எண்ணிக்கொண்டேன். தன் வீட்டில் ஒரு மாபெரும் துக்கத்தை முன்னரே அனுபவித்த ஒருவர் இப்போது இங்கிருந்தால் இப்படியொரு வாக்கியத்தோடு பேசத் துவங்க மாட்டார். நானோ அல்லது கதிரோ கூட குடும்பத்தின் ஒருவரின் சாவை இதுவரை சந்திக்க நேர்ந்ததில்லை. ஒருவேளை அப்படியொரு பெருந்துக்கம் ஒன்று எங்களுக்கு நேர்ந்தால் அப்போது எப்படி எதிர்வினையாற்றுவோம் என்பதை இப்போது நினைத்தும் பார்க்க முடியவில்லை. இந்த வீட்டில் இப்படியொரு சூழ்நிலையில் வயசாளி எவராவது இருந்திருந்தால் வேறு மாதிரி பேசியிருப்பார். அவரது ஒவ்வொரு வார்த்தையின்பின்னும் அனுபவத்தின் கனம் ஏறியிருக்கும். தேய்வழக்குகளுக்கு அங்கு இடமில்லை. ஆனால், வேலை செய்யவந்த இந்த சிங்கப்பூரில் அவர்களை எங்கே தேடுவது?

கதிர் அடுத்த வார்த்தையை உதிர்ப்பதற்குள் அவனை இடைவெட்டினேன்.

“அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்டா..” என்றேன்.

“யோசிக்கிறதுக்கு ஒண்ணும் இல்லடா. அண்ணனத்தான் கொள்ளிவைக்கச் சொல்லணும்” என்றான் ஜெயகுமார்.

வேறு வழியில்லை. அந்த முடிவைத்தான் இந்நேரம் ஊரிலுள்ள அவனது சகோதரரும் யோசித்திருப்பார்.

கதிர் பேசவிரும்பினான்.  “விதியப் பாரு.. இங்கிருந்து ஃப்ளைட் ஏறினா நாலு மணிநேரத்துல ஊருக்குப் போயிடலாம். இப்ப அதுவும் முடியாமப் போச்சு.. ஏர்போர்ட்டயெல்லாம் மூடிவச்சிருக்கான்.”

“மத்த நேரத்துல இந்தத் தொலைவு ஒண்ணும் வசதிகுறைச்சலில்லை. இன்னும் சொல்லப்போனா எங்கண்ணனுக்கு சென்னைல கல்யாணம் வைச்சப்ப, நான் இங்கிருந்து நாலு மணிநேரத்துல கல்யாண மண்டபம் போய் சேர்ந்துட்டேன். ஊரில் இருந்து முதல் நாள் ராத்திரி கிளம்பின எங்க சித்தப்பன் கல்யாணம் முடிஞ்சப்பிறகுதான் வந்து சேர்ந்தாரு..”

நான் அவனை முறைத்ததும்.. கதிர் பேச்சை மாற்றினான். 

“கண்ணுக்குக் தெரியாத ஒரு கிருமி.. பாரு.. என்ன அட்டூழியம் பண்ணுது. ஒரு பய வெளிய போவ முடியலை.. இதுக்கு முன்னாடி எமர்ஜென்ஸி காலத்துலதான் இந்த மாதிரி ஒரு பதட்டமும் வீட்ட விட்டு வெளியே போகமுடியாத நிலைமை இருந்ததுன்னு ஊர்ல பேசிக்கிறாங்க..வீட்டுக்குள்ளேயே இன்னும் எத்தனை நாள் அடஞ்சு கிடக்கணும்னு தெரியல.. இப்ப ஒண்ணுமே பண்ண முடியாதாடா..?”

“உண்மையச் சொல்லப்போனா ஒண்ணுமே பண்ண முடியாது. சூழ்நிலை அப்படியிருக்குது. எமர்ஜென்ஸி ஃப்ளைட், கார்கோ ஃப்ளைட், அப்புறம் இந்தியன் எம்பஸி வரை மோதிப்பாத்தாச்சு.. ட்விட்டர்ல வெளியுறவுத்துறை அமைச்சர் வரை கேட்டும் பாத்தாச்சு.. யாராலுமே உதவி செய்ய முடியாத சூழ்நிலை..” என்றேன்.

“என் நேரம் அப்படி.. கடைசியா அப்பா முகத்தப் பாக்ககூடாதுன்னு எழுதியிருக்கு போல.. பின்னால நெனச்சுக் கூடப் பாக்க முடியாதேடா. அப்பன் முகம் சாகுறப்ப எப்படி இருந்ததுன்னு?”, சொல்லிவிட்டு விசும்பத் துவங்கினான் ஜெயகுமார்.

மற்ற நேரங்களில் இந்த விதி, நேரம் போன்ற சொற்களெல்லாம் என்னிடம் எந்தத் தாக்கத்தையும் உண்டாக்கியதில்லை. இப்போது திடீரென்று இந்தச் சொற்களுக்கெல்லாம் முன்னெப்போதும் இல்லாத எடை கூடியிருந்தது. நானே இப்போது இவற்றையெல்லாம் நம்பத் துவங்கிவிட்டேன் போலும். 

ஜெயகுமாருக்கு சில வருடங்களாகவே தனிமை பழகிப்போயிருந்தது. சிங்கப்பூர் வீட்டில் அவன் ஒருவன்தான் இருக்கிறான். நண்பர்கள் யாரையும் உடன் வைத்துக்கொள்ளவுமில்லை. ஊரில் இருக்கும் மனைவி குழந்தைகள் விடுமுறைக்கு வருவதற்காக வீட்டை யாருடனும் பங்கிடாமல் வைத்திருக்கிறான். நாங்கள் அவ்வப்போது வந்து செல்வதுண்டு.

“இந்த மாதிரி சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது.. இப்படியொரு காலத்தப் புரிஞ்சுக்கவே முடியல.. சிங்கப்பூருல இருந்து நானும் போகமுடியல.. சென்னையில இருந்து பொண்டாட்டி பிள்ளைங்களும் ஊருக்குப் போக முடியல.. காத்துல பூராவும் ஒப்பாரியும் ஓலமுமா கேக்குது. எத்தன பேர வாழ வைச்ச மனுஷன்.. அவரு பேரச் சொன்னாப் போதும். ஊருல குழந்தைக்கும் தெரியும். செத்து ரெண்டாவது நாள். மொத்தமா பத்து பேர்கூட வீட்டுல இல்ல. எப்பவுமே வீட்டச்சுத்தி பத்து முப்பது பேர் இருப்பாங்க. ஆனா, இப்படிப்பட்ட நேரத்துல ஒருத்தரையுங் காணோம். போகும்போது ஒருத்தரும் இல்லாமப் போறாரு. நாம எதையெல்லாம் சாதாரணமா நெனக்கிறோமோ அதெல்லாம் உண்மையில சாதாரணமானதில்லைங்கிறது இப்படிப்பட்ட நேரத்துலதான் தெரியுது…”

“ஒரு வருஷமாவே ரெண்டு கிட்னியும் ஃபெய்லியர் ஆகி முழு டயாலிஸிஸ்லதான் ஓடிட்டு இருந்தது. கொஞ்ச நாளாவே எனக்கு மனசுல ஒரு பதட்டம் இருந்துட்டிருந்தது. நாலு நாளுக்கு முன்னாடி அவரோட பேச்சு சுத்தமா நின்னுபோச்சு. ஆனாலும் அவர் துக்கத்தோட எந்த சுவடும் இல்லாமத்தான் இருந்திருக்காரு. வலிக்கும்போது மட்டும் முகத்தச் சுருக்கி ஏதோ சொல்ல முயற்சி பண்ணிருக்காரு. ஆனா, எதுவுமே பேச முடியலை.  கடைசியா மூச்சுத்திணறல் அதிகமாகி எல்லாம் முடிஞ்சுபோச்சு.” சொல்லிவிட்டு மீண்டும் தூரத்தைப் பார்த்தான் ஜெயகுமார்.

அதிரும் முகத்தசைகளும் கொந்தளிக்கும் தொண்டைக்குழியும் அவனுக்குள் எரிகின்ற அக்னியை அடையாளங்காட்டின. மீண்டும் ஆரம்பித்தான். “விவசாயத்துல நஷ்டம் வரும்போதெல்லாம் மத்தவங்க பொலம்பிட்டு இருக்கும் போது அவர் மட்டும் அடுத்த வேலையப் பாக்க போயிருவார். நான் சின்ன வயசா இருக்கையிலேயே எனக்கு இதெல்லாம் பிடிபடாது. எப்படிப்பா இப்படியொரு நஷ்டத்துல வேதனைப்படாம இருக்கீங்கனு கேக்கும்போதெல்லாம், “எல்லாருக்கும் உண்டானதுதானப்பா நமக்கும். வானமும் மண்ணும் ஒண்ணுபோலத்தான கொடுக்குது. கொடுக்கும்போது வாங்கிக்கிறோம். பொய்ச்சுப் போகும்போது திகைக்காம இருந்துக்கணும்”னு சொல்லிட்டுப் போயிடுவார். “நம்ம ஊரு ஆத்துல போன வருசம் வெள்ளம் பொங்கிப்போய் பாலத்த மூடற அளவு தண்ணி போச்சு. இப்பப் போய் பாத்தா உண்மையில அங்க ஒரு ஆறு இருந்துச்சான்னு சந்தேகமே வரும். ஆனா, தண்ணி இல்லாமப் போயிட்டதாலேயே அது ஆறு இல்லைனு சொல்லிடமுடியாது. மறுபடியும் மழை வரும். மறுபடியும் வெள்ளம் வரும். அடுத்த வருசம், இல்லன்னா அதுக்கு அடுத்த வருசம். இது இயற்கையோட விதி. அதனால எந்த நிலைமையும் நிரந்தரமானதில்ல. மாறும். எல்லாம் மாறும்”னு சொல்லிட்டேயிருப்பார். நிஜத்துல அவர் சொன்னதுதான் நடக்கும். அடுத்த வருசமோ அல்லது அதுக்கும் அடுத்த வருசமோ மழை நெறைஞ்சு பெய்யும். காடு கரையெல்லாம் ஈரமாயிருக்கும்”.. சொல்லிவிட்டு அருகிலிருந்த கூஜாவிலிருந்து தண்ணீர் குடித்தான்.

நீரைப் பற்றிப் பேசியதாலோ என்னவோ அவன் கொஞ்சம் ஆசுவாசமாக இருப்பது போலிருந்தது. இந்தப் புள்ளியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவனை இயல்புக்கு கொண்டுவரமுடியுமா என்று யோசித்தேன். முடிந்தவரை தத்துவார்த்தமாகப் பேசுவது என முடிவெடுத்தேன். தத்துவம் எப்படிப்பட்ட துயரிலிருந்தும் மனிதனை ஆற்றுப்படுத்தும் என  கேள்விப்பட்டிருந்தேன்.

மெல்ல ஆரம்பித்தேன், “அப்படீன்னா மனுச வாழ்க்கைகும் இந்த விதி பொருந்துமா? சுகமும் துக்கமும் மாறி மாறித்தான் வரணுமா?”

“அப்படித்தானே சொல்றாங்க”, என்றான் கதிர்.

நான் விடவில்லை. “மரணத்துக்கு மறுபக்கம் என்ன? மறுபிறப்பா? பிறப்பும் இறப்பும் சுத்திச்சுத்தி சங்கிலித்தொடர் போல வர்றதுதான் வாழ்க்கையா? அப்படின்னா பிறப்புக்கும் இறப்புக்கும் என்ன அர்த்தம்? ஒரு அர்த்தமும் இல்லையா?” 

கதிருக்கு முகத்தில் எரிச்சலைக் காட்டினான். “அர்த்தத்தயெல்லாம் எதுக்காகத் தேடணும். அதத் தேடக்கூடாதுன்னுதான் இயற்கையும் நெனக்கிது போல. எதுக்குத்தான் யாராலத்தான் அர்த்தம் சொல்ல முடியும். நீயும் நானும் சிங்கப்பூருக்கு வந்ததுக்கு என்ன அர்த்தம்? இப்போ வீட்ட விட்டுக்கூட வெளிய போக முடியாததுக்கு என்ன அர்த்தம்? ஊரே பொறாமப்படுற அளவுக்கு வாழ்ந்த பெரிய பைலட் ஒருத்தன் இப்போ டாக்ஸி ஓட்டிட்டு இருக்கான் தெரியுமா?. அதுக்கு என்ன அர்த்தம்? அப்பா செத்ததுக்கு போக முடியாம இங்க இருந்தே போன் வழியா எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கானே, இதுக்கு என்ன அர்த்தம்? பிறப்பும், இறப்பும், ஏன்.. இந்த வாழ்க்கையில நடக்கற எதுக்குமே ஒரு அர்த்தமுமில்லங்கறதுதான் நிஜம்”, என்றான்.

“ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுங்கிறது எவ்வளவு எளிமையாகவும் அர்த்தபூர்வமாகவும் இருக்குது. அதுபோல இந்த உலகத்துல எல்லா விஷயமும் இருந்துட்டா எவ்வளவு அழகாயிருக்கும்”, என்றேன்.

கதிர், “அப்படியொரு எளிமையான உலகம் அமஞ்சிறக்கூடாதுங்குறதும் இயற்கையோட ஒரு விதியாயிருக்கும். நம்மச் சுத்தி நடக்குற எல்லாமே நமக்குப் புரியக்கூடாததாக இருந்தாகணும்னு தீர்மானம் பண்ணுறது யாரு? கடவுளா?”, என்றான்.

மீண்டும் மௌனம். எங்களை ஸ்தம்பிக்கச் செய்ய “கடவுள்” என்ற சொல் போதுமானதாகயிருந்தது. எங்கெங்கோ சென்று எதையெதையோ யோசித்தாலும் கடைசியில் இங்கு வந்துதான் முட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் புரிந்துகொண்டுதான் ஆகவேண்டுமா? ஏன் ஒன்றை நம்பக்கூடாது? எதையும் பகுத்து அறிந்துதான் புரிந்துகொள்ளவேண்டும் என்ற அறிவியலின் விதியை வாழ்வின் எல்லா சட்டகங்களுக்குள்ளும் வலியப் பொருத்திக்கொள்கிறோமா? நம்புபவனுக்குக் கிடைக்கும் ஒரு நிம்மதியுணர்வு ஏன் புரிந்துகொள்ள முயற்சிப்பவனுக்குக்   கிடைப்பதில்லை? வாழ்க்கை ஏன் தத்துவபூர்வமாக அணுகினால் எளிமையாகவும் தர்க்கபூர்வமாக அணுகினால் கடினமாகவும் இருக்கிறது? 

யோசிப்பதை விட்டுவிட்டு கிச்சனுக்குள் சென்று ஏதாவது சமையல் செய்யலாம் என்று முயற்சித்தேன். அவர்கள் இருவரும் இடத்தைவிட்டு சிறிதும் நகரவில்லை. ஜெயகுமார் மட்டும் வீடியோ காலில் அண்ணனிடமும் மனைவியிடமும் பேசிக்கொண்டிருந்தான். பெண்களும் குழந்தைகளும் அழுவது அவனது ஹெட்போனைத் தாண்டி எனக்குக் கேட்டது. 

என்ன சமையல் செய்வது என்று யோசிப்பதெல்லாம் இல்லை. பிரம்மச்சாரிகளுக்கேயுரிய வழக்கப்படி, எண்ணெய்ச் சட்டியில் காய்ந்த எண்ணெயில், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுத்தானதும், தக்காளித்துண்டங்களைப் போட்டு வதக்கிக் கொண்டேயிருக்கும்போதுதான் ஒரு அரிய சிந்தனையின் வெளிச்சத்தோடு அன்றைய சமையல் குறித்த ஒரு திறப்பு கிடைக்கும். அதனைப் பின்தொடர்ந்து சென்றால் ஏதாவது உருப்படியாக சமைக்கலாம். மற்றபடி, என்ன சமைப்பது என முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யும்போதெல்லாம தவறாமல் சொதப்பி விடும்.

தக்காளியை வதக்கிக் கொண்டிருக்கும்போது, கதிர் கிச்சனுக்குள் நுழைந்தான். என்னருகில் வந்து மெல்லிய குரலில் “ சும்மா சொல்லக்கூடாது, வாசனை தூக்குது” என்றான்.

சம்பிரதாயமான இந்தப் பாராட்டுகளை நான் எப்போதும் பொருட்படுத்துவதில்லை. தனியாக வீட்டிலிருக்கும் நாங்கள் பெரும்பாலும் ருசிக்காக சாப்பிடுவதில்லை. பசிக்காகத்தான். ஆகையால், இவ்வகைப் பாராட்டுகள் பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை. 

அவனுக்கு பதில் சொல்லாமல், “சமையல் மனஅழுத்தத்தைக் குறைக்கும் ஒரு கருவி தெரியுமா?”, என்றேன். 

கதிர் “இருக்கலாம். அதனால்தான் பெண்கள் பெரிய துயரத்திலிருந்து கூட சீக்கிரம் மீண்டு வெளிய வந்துடுறாங்களா?”, என்றான். 

“அப்படியும் சொல்ல முடியாது. சமையலே முழு நேர வேலையாக இருந்தால் அது மேலும் அழுத்தத்தைக் கொண்டுவரும். பெண்கள் சமையலறையிலிருந்து வெளியே வரும்போதுதான் அவங்களுக்கு மன அழுத்தம் குறையும்.  மத்தபடி அவங்க துக்கத்திலிருந்து எப்படி வெளியே வர்றாங்கன்னு அவங்களத்தான் கேட்கணும்”, என்றேன்.

சிறிது நேரத்தில் சாதமும் தக்காளிப்பிரட்டலும் தயாரானது. மிகுந்த போராட்டத்துக்குப்பின் ஜெயகுமாரை சமையலறைக்கு வரவழைத்து சாப்பிட வைத்தோம். அவனால் சாப்பிட முடியவில்லை. எழுந்து போய்விட்டான்.

நாங்கள் ஹாலுக்குப் போனபோது ஜெயகுமார் சோபாவில் படுத்திருந்தான். நாங்கள் அவனருகில் தரையில் உட்கார்ந்துகொண்டோம். அவனை தற்காலிகமாகவேணும் இந்தத் துயரிலிருந்து ஆற்றுப்படுத்தவேண்டும். ஒருவேளை இந்தக் கிருமியின் தாக்குதல் இல்லாமல் இருந்து எல்லாமே இயல்பாக இருந்திருந்தால் அவன் இந்த நேரத்தில் ஊரில் இருந்திருப்பான்.  அவனைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்திருக்கும்.  அதுவே அவனை ஓரளவு மீட்டிருக்கும். ஒத்த உணர்வுடைய ஒரு கூட்டம் விரைவில் உச்சம் பெற்று அதே விரைவில் மீண்டும் கீழே இறங்கிவிடும். ஆனால் தனித்திருப்பவனின் துயர் அப்படியல்ல. அது காலம் செல்லச் செல்ல ஊதிப் பெருகி, கனத்து அவனை வெளியேறவிடாமல் அமிழ்த்திவிட்டிருக்கும். நாங்கள் இருவரும் இவ்வேளையில் அவனுடன் இருக்கிறோம். ஆகையால், எங்கள் பொறுப்பை உணர்ந்து அவனைத் துயரத்திலிருந்து கூடுமானவரை வெளியே எடுக்க வேண்டும். அவனின் துயரைக் கூட்டுவதல்ல, குறைப்பதே எங்களின் பணி இப்போது. முடிந்தவரை அவனைப் பேச வைக்க வேண்டும். அது அவனை எளிதாக்கும்.

நான் மீண்டும் பேச்சை விட்ட இடத்திலிருந்து துவங்கினேன். “ஏன் நாம நோயையும் சாவையும் அஞ்சுறோம்”?

நான் தொடர்ந்தேன், “ஏன்னா.. அது நம்மள குள்ளமாக்கிடுது. நம்ம ஆணவத்த காலிபண்ணி நம்மளயெல்லாம் ஒரு சின்னப் புள்ளியாக்கிடுது.  விண்வெளிக்கே போனாலும் கடைசியில நாம இது ரெண்டுக்கும் முன்னாடி சரணடஞ்சுதான் ஆகணும்.  மனுசன் ஆணவத்தால ஆனவன். ரத்தத்தப் போல அவன் உடம்பு முழுக்க ஆணவமும் ஓடறதாலே அவனால தன்னுடைய தோல்விய ஈஸியா ஒத்துக்க முடியறதுல்ல. தனக்கு சவாலா தனக்கும் மேலானதாக இருக்கக்கூடிய எல்லா விஷயத்தையும் ஜெயிக்க ஏங்குறான். அதுல கணிசமா ஜெயிக்கவும் செய்யுறான். அவன் இதுவரைக்கும் கண்டுபிடிச்ச எல்லாமும் ஒருவகையில இந்த ஆணவத்தோட வெற்றிதான். தனக்கும் மேலான எல்லா விஷயங்களையும் தன்னால ஜெயிக்க முடியுங்கிற பெருமிதம். ஆனாலும் அவன் தொடர்ச்சியா தோத்துப்போகிற ரெண்டு விஷயங்கள் இந்த நோயும் மரணமும்தான். அதனாலதான் தன்னுடைய மொத்த ஆணவத்தையும் கொட்டி மொத்த சக்தியையெல்லாம் திரட்டி இந்த ரெண்டோடையும் இடைவிடாம போராடிட்டு இருக்கான்”. 

கதிர் கைகளை நெட்டி முறித்தபடி கேட்டான்: “எதுக்கு போலீஸப் பாத்த குற்றவாளியப் போல மரணத்துக்கு அஞ்சணும்? மரணம் உண்மையில தண்டனையா என்ன?”

நான் “என்னைப் பொறுத்தவரை அது விடுதலையாத்தான் இருக்கமுடியும். சுத்தியிருக்குற நமக்குத்தான் அது பெருந்துக்கம். செத்தவங்களுக்கு உண்மையில அந்த மரணம் விடுதலையாகக்கூட இருக்கலாம் இல்லியா?”

அவர்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை.

நான் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஜெயகுமாரைப் பார்த்து, “தப்பா எடுத்துக்காதே ஜெயா, உங்கப்பாவப்பத்தி நீ சொன்னதவச்சுப் பாக்கும்போது அவர் ஒரு யதார்த்தவாதியா இருந்திருக்காருன்னு புரியுது. அவரோட மரணம் அவருக்கு ஒரு விடுதலையாகக்கூட இருந்திருக்கலாமே.. நோயோட போராட முடியாமப்போன அந்தக் கடைசி நொடியில அவர் தன்னோட சாவ ஒரு விடுதலையா நெனச்சிருக்கலாம் இல்லியா” என்றேன்.

கதிர் முகம்சுளித்தபடி என்னைப் பார்த்தான். 

நான் அதைப் பொருட்படுத்தாமல் ஜெயகுமாரின் முகத்தைப் பார்த்தேன். அவனது எதிர்வினைதான் இப்போது எனக்குத் தேவையாகயிருந்தது.

ஜெயகுமார் ஆத்திரப்படவில்லை. “அது எனக்குத் தெரியலயே… அவரோட சாவ அவர் தண்டனையா நெனைச்சாரா விடுதலையா நெனச்சாரான்னு இப்ப என்னால சொல்ல முடியல. ஒருவேளை விடுதலைன்னு நெனச்சிருந்தாருன்னா அத நெனச்சாவது ஆறுதலடையலாம். கடைசியா அவரால ஏதாவது பேச முடிஞ்சிருந்தா அதுல இருந்து நாம ஏதாவது அனுமானிச்சிருக்கலாம். ஆனா.. அவராலதான் கடைசி வரை பேசவே முடியலயே”, என்றான்

“அவரால பேச முடியாட்டி போனாலும் இதுக்கான பதில சம்பந்தப்பட்ட உன்னாலத் தேடமுடியும். உன் அப்பாவப் பத்தி, அவரோட ஒட்டுமொத்த வாழ்கையப் பத்தி, அவரும் நீயும் இதுவரைப் பேசிக்கிட்டது, அவருக்கும் உனக்கும் இடையில இருந்த அந்த பரஸ்பர உணர்வுப் பரிமாற்றம், இதை எல்லாத்தையும் அலசிப் பாத்தாத்தான் இதுக்கான பதில கண்டுபிடிக்க முடியும். உண்மையில, பதில தேடவேண்டிய அவசியம்கூட இல்லை. அத உணரணும். அப்படி எதையாவது உணர முடிஞ்சா அது இப்போதைக்கு உனக்கு பெரிய ஆறுதலா இருக்கும்”, என்றேன். 

ஜெயகுமார் மெல்ல தலையசைத்தான். அதன்பின் நினைவுகளில் மூழ்கிப்போனான். 

அவன் கண்கள் மட்டும் எதிரிலிருந்த சுவர் வெண்மையைப் பார்த்துக்கொண்டிருந்தன. ஆனால் அவனது பார்வை முழுக்க தூரத்தையும் காலத்தையும் ஊடுருவி அவனது அப்பாவுக்கருகே இருப்பதை எங்களால் உணர முடிந்தது. காலம் பிளந்து பிளந்து அவனுக்கு வழிவிட்டுக்கொண்டிருந்தது. நினைவுகள் செல்ல முடியாத தூரமும் காலமும் இல்லை. 

நேரம் செல்லச்செல்ல அவன் சிறிது தெம்பாக இருப்பது போலத் தோன்றியது. நெடுந்தூரம் உள்முகமாகச் சென்றிருப்பான், நினைவுகளின் பளபளக்கும் நீர்வெளியில் ஏதேதோ தேடிக்கொண்டிருக்கக்கூடும். தந்தையின் ஒட்டுமொத்த வாழ்வும், அவருடன் கழித்த பொழுதுகளும், உரையாடல்களும், மௌனங்களும், என விரிந்த ஒரு நினைவுப்புலத்தில். 

அதன்பின் அவனைத் தொந்தரவு செய்யாமல் சுவரில் சாய்ந்தபடியே நாங்கள் உறங்கிப்போனோம். இடையிடையே ஜெயகுமார் வீடியோ காலில் பேசிக்கொண்டிருப்பது தொலைதூரத்து விமானச் சத்தம் போல கேட்டுக்கொண்டிருந்தது.

விடிகாலையின் மெல்லிருட்டில் எழுந்துகொண்டேன். ஜெயகுமார் விழித்தபடியே சோபாவில் சாய்ந்திருந்தான். மழை கொட்டிக்கொண்டிருந்தது. ஆனாலும் எந்த சத்தமுமில்லை. ஆரவாரமற்ற பெருமழை. தூரத்தில் விளக்கு வெளிச்சத்தில் 45 டிகிரியில் மழை சாய்ந்து பெய்வதைப் பார்த்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். 

கிச்சனுக்குச் சென்று கருப்புத் தேநீர் தயாரித்தேன். திரும்பிப் பார்த்தால் ஜெயகுமார் நின்றிருந்தான். ஜன்னலோரம் நின்று, மழையைப் பார்த்தபடி தேநீர் குடித்தோம்.

ஜெயகுமார் அவனாகவே பேசினான், “ரொம்ப நேரம் யோசிச்சிட்டிருந்தேன். எத்தனையோ பொழுதுகள், எத்தனையோ வருஷங்கள் அவரோட இருந்திருக்கேன். எவ்வளவோ பேசியிருக்கோம். எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே அலசிப் பார்த்துட்டு இருந்தேன். கடைசியா ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. இத நான் ஏன் சுத்தமா மறந்திருந்தேன்னு எனக்கே தெரியல.

ஒரு முறை  நான் ஊருக்குப் போயிருந்தப்போ, சொந்தக்காரர் ஒருத்தர் இறந்து போனார். நானும் அப்பாவும் துக்கம் விசாரிக்கப்போனோம். திரும்பற வழியில “ பாவம்பா அவரு.. இன்னும் கொஞ்ச நாள் இருந்துருக்கலாம்ல” ன்னு சொன்னப்ப அப்பா என்னைப் பார்த்து சிரிச்சாரு. “ஜெயா, சர்வ நிச்சயமான ஒரு விஷயத்த நாம வெறுக்கவோ பயப்படவோ பரிதாபப்படவோ வேண்டியதில்ல. இந்த வேலுக்கு என்ன குறை. நல்லா வாழ்ந்தான். பசங்களயெல்லாம் நல்லா படிக்க வச்சு ஆளாக்கி விட்டான்.  காசி, மதுரான்னு சுத்தினான். நானும் அவனோடப் போயிருந்தேன். அங்க வயசானவங்க ஒரு கூட்டமே சாவுக்காகக் காத்திருக்காங்க தெரியுமா? உலக கடமையெல்லாம் முடிச்சுட்டு, இது போதும், இனி மறுஉலகத்துக்காக காத்திருக்கவேண்டியதுதான்னு முடிவு செஞ்சுட்டு சொந்த ஊருல இருந்து கிளம்பி காசிக்கு வந்துடறாங்க. முடிஞ்ச அளவு தான தருமம் செய்றாங்க. கடவுள நெனச்சுட்டு அங்கங்க இருக்குற ஆசிரமங்கள்ள தங்கிக்கிறாங்க. இது மாதிரி சாவுக்காகக் காத்திருக்கறவங்க தங்குறதுக்குன்னு நிறைய இடங்கள் அங்க இருக்கு. நாமெல்லாம் சாவுக்கு முதுகக் காட்டி வாழ்ந்திட்டே இருக்கணும்னு ஆசப்படுறோம். அவங்க வாழ்க்கைக்கு முதுகக் காட்டி சாவுக்கு முகம் காட்டி உட்கார்ந்திருக்காங்க. உண்மையில மரணத்த தியானிக்கிறாங்க. தினம் பஜனை பண்ணுறாங்க. பொறுமையா காத்திருக்காங்க. மரத்தில இருந்து ஒரு பழம் உதிர்ந்து போறது மாதிரி ஒருநாள் உதிர்ந்து போறாங்க. கங்கையோட கலந்துர்றாங்க.  அது அவங்களுக்குப் பெரிய விடுதலை. நம்மால அதப் புரிஞ்சுக்க முடியாது. ஏன்னா, நம்ம நதியோட இக்கரையில இருக்கோம். அவங்க அக்கரையில இருக்காங்க. இதெல்லாம் பாத்துட்டுத்தான் இந்த வேலு சில விஷயங்களப் பண்ணினான்.  கெட்ட பழக்கங்களையெல்லாம் நிப்பாட்டினான். தான் செஞ்ச சில தப்புகள சம்பந்தப்பட்டவங்ககிட்ட சொல்லி மன்னிப்பு கேட்டு கூடுமானவரை எல்லாத்தையும் சரிசெஞ்சான். தன்னுடைய சொந்த நிம்மதிக்காக செய்ய வேண்டிய சில விஷயங்களச் செஞ்சான். அதுக்குப் பிறகு அவனும் காத்திருக்க ஆரம்பிச்சான். இப்ப விடுதலையும் கிடச்சுருச்சு. ஒரே வித்தியாசம் அவன் கங்கைல கரையல. நம்ம ஊரு ஆத்துலதான் சாம்பலா கலந்தான். அதனாலென்ன? நீரெல்லாம் கங்கை. நிலமெல்லாம் காசின்னு சொல்லிட்டு சிரிச்சாரு”. 

“ஆனாலும் என்னால பொதுவா மரணத்தையே புரிஞ்சுக்க முடியலப்பா. அத ஏத்துக்கறது மனசுக்கு கஷ்டமா இருக்குன்னு நான் சொன்னேன்”.

அதுக்கு அவர் ஒரு விளக்கம் கொடுத்தாரு. “இத நான் சொல்லலப்பா. நம்ம மரபு சொல்லுது. எதுவுமே நிரப்பாத மண்பானைக்குள்ள என்னப்பா இருக்குது”ன்னு ஒரு கேள்வியக் கேட்டாரு.

“ஒண்ணுமேயில்ல”ன்னு நான் சொன்னேன்.

அவர் சிரிச்சுட்டே சொன்னாரு “அதுல ஆகாசம் இருக்கு. வெளி இருக்கு. பானை உடைஞ்சு போனா அதுக்குள்ள இருக்குற அந்த வெளி, வெட்ட வெளியோட கலந்துரும். ஆகாசம் ஆகாசத்தோட கலந்திரும்” .

சொல்லி முடித்து ஜெயகுமார் இப்போது என்னைப் பார்த்தான் “அப்பா சொன்னது அப்ப எனக்குப் புரியல. ஆனா இப்ப நல்லா புரியுது”.

உடனே நான் முகம் மலர்ந்தேன். 

எனக்கு உண்மையில் எதையோ உருப்படியாக சாதித்தது போல இருந்தது. பெருந்துக்கத்தில் இருந்தவனைச் சிறிது நேரத்திற்கேணும் ஆறுதல்படுத்த என்னால் முடிந்திருக்கிறது. 

ஆனாலும் ஜெயக்குமாரின் முகத்தில் எந்த மாறுதலுமில்லாதது எனக்குள் சிறிது திகைப்பை உண்டாக்கியது. 

மழையைப் பார்த்துக்கொண்டேயிருந்தவன், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தங்கச்சிட்ட பேசினேன். அவதான் சொன்னா, அப்பா சாகுறதுக்கு முன்னாடி கடைசி நிமிஷத்துல திக்கித் திக்கிச் சில வார்த்தைகள் பேசியிருக்காரு.. “இன்னும் கொஞ்ச நாள் கடவுள் என்ன வாழவைக்கக் கூடாதா? ஜெயாவப் பாக்காம சாகப் போறத நெனச்சாத்தான் வேதனையா இருக்கு”ன்னு சொல்லிட்டு செத்துருக்கார். இது தெரிஞ்சா நான் நிலைகுலைஞ்சுருவேன்னு நினைச்சு அண்ணன் எங்கிட்ட சொல்லாம மறைச்சுட்டார். அவளையுமறியாம தங்கச்சி எங்கிட்ட சொல்லிட்டா” என்றபடி என்னைப் பார்த்தான்.

6 comments for “விடுதலை

  1. July 3, 2021 at 12:23 pm

    இக்கதை மரணத்தில் உண்டாகும் கழிவிரக்கத்தை மையப்படுத்தாமல் அதன் தத்துவம் சார்ந்த பார்வையை சொல்லிசெல்வதே இதன் சிறப்பு. சமகாலச் சூழலில் மனிதன் எவ்வாறு இடையூறுக்குள்ளாகிறான் என்பதுகூட மையமில்லை. இக்கதையை வாசிக்கும்போது கணேஷ் பாபு வேதாந்தம் கற்றிருப்பாரோ என்ற சந்தேகம் உண்டாகிறது. அந்த அளவுக்கு மிகப் பொருத்தமாக உரையாடல் வழியாக தத்துவங்களை ஊடாட வைக்கிறார். எங்கேயும் துறுத்தல் இல்லை. கழிவிரக்கத்தைவிடவும் தத்துவ வார்ப்பு சிறப்பாக வந்திருக்கிறது. வாசிக்க வேன்டிய கதை.

  2. July 4, 2021 at 4:16 pm

    கணேஷ் பாபுவின் இந்தக் கதை முழுக்க முழுக்க தத்துவத் தளத்தில் இயங்குகிறது என்பதே இதன் சிறப்பு. அதவும் எங்கேயும் ஆசிரியர் குரலாக வலிந்து துருத்தவில்லை. தத்துவங்களே சிறுகதையின் கலைவெளிப்பாடாக வாசக மனம் அனுபவிக்கிறது. வேதாந்த வகுப்புக்குப் போனவர்களோ அல்லது வேதாந்த நூல்களைக் கற்றவர்களால்தான் இப்படி எழுத முடியும் என்பது என் கருத்து. ஆனாலும் திண்மையான வாழ்வனுபவம்கூட இந்த மாதிரி எழுத்துக்கு வலிமை சேர்க்கும். எங்கேயும் மரணம் பற்றிய மெல்லுணர்வை அவர் கையாளவில்லை. சமகால பெருந்தொற்றைக் காரணமாக வைத்து மாநுட நெருக்கடி மட்டும் கொஞ்ச உணரவைக்கிறார். ஆனால் அது மரண சார்ந்த மானுட சொல் வெளிபாட்டை குந்தகம் விளைவிக்காத அளவுக்குக் கதை நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.

  3. அரி. கார்த்திக்
    July 20, 2021 at 1:15 am

    வாழ்க்கையை இயல்பாக அணுகுவதை விட தர்க்கரீதியாக அணுகும் போது ஏன் மிகுந்த சிக்கலையும் வலியையும் உண்டாக்குவதாக இருக்கிறது ………. அற்புதமான வரிகள்

  4. Anand Swami
    July 20, 2021 at 10:35 pm

    இது ஒரு உன்னதமான கதை. என்றுமுள கேள்விகளை விவாதிக்கிறது. ஆழ்ந்த தரிசனத்தை முன்வைத்து அழகான மொழியில் கூரிய களன் அமைத்து முரன் விவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறது. நோய் மரணம் என மானுடத்தின் முன்னுள்ள தீர்க்கமுடியாத சவால்களை அணுகியும் நுணுகியும் ஆராய்கிறது. ஆழ்ந்த மெய்யியல் கருத்துக்களை கருதுகோள்களை இத்தனை அழகாக கதைக்குள் பதிந்து செல்வது மிகச் சவாலான ஒரு விஷயம். ஆசிரியர் கணேஷ் பாபு அவர்கள் இதை மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும் செய்துள்ளார்.

    கதைக்குள் தேர்ந்த குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொழி இலகுவாக நழுவிச் செல்கிறது. கனமான தத்துவத்தை, மரணம் குறித்த ஆராய்ச்சியை நோக்கி நம்மை எளிதாக நகர்த்தி விடுகிறார் ஆசிரியர். ஜெயமோகன் அவர்களின் ஒரு கதையை படித்ததைப் போன்ற ஒரு உணர்வை இந்த கதை ஏற்படுத்துகிறது. உரையாடல்களும் சொல்லாடல்களும் நறுக்குத் தெரித்தார் போல் உள்ளன.

    ஆசிரியருக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இதுபோல் மெய்யியல் சார்ந்த இன்னும் பல கதைகளை இனிவரும் காலங்களில் இவர் வடிக்க கூடும் என்றே தோன்றுகிறது. வாருங்கள் வாருங்கள் தமிழில் மேலும் மேலும் என உன்னதமான கதைகளை தாருங்கள் என உங்களை அழைக்கிறோம்!!

  5. July 29, 2021 at 3:38 pm

    மிக யதார்த்தமான ஆழமான கதை. அத்தனை கல்விக்கும் ஞானத்துக்கும் அப்பால் மனிதனை இயக்குவது ” நான் ” என்ற தன்மைதான் . நண்பனை துக்கத்தில் இருந்து மீட்டுவிட்டதாக அடையும் மெல்லிய கர்வம் ( துயரான சூழலிலிலும் தென்படும் நான் ) , வெளி வெளியை அடைதல் என தத்துவம் பேசுபவர் கடவுள் கொஞ்சம் கால நீட்டிப்பு தரலாகாதா என்ற ஏக்கம் , தன் பார்வையில் இருந்து அப்பாவின் மரணத்தை எதிர்கொள்ளும் மகன் என “நான்” என்பதில் இருந்து விடுதலை எவ்வளவு சிரமமான ஒன்று என கதை யதார்த்தமாக சொல்லிச் செல்கிறது

  6. subramani natarajan
    July 4, 2024 at 10:59 pm

    அத்வைதம்
    மூடிய பானை க்குள் உள்ள காற்று_
    வெளியில் உள்ள காற்று
    இரண்டும் ஒரே காற்று தான்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...