‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்: வரலாறும் புனைவும்’ என்ற கட்டுரைத் தொகுதி இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சிவானந்தம் நீலகண்டனால் படைக்கப்பட்டுள்ளது. முதலாவது சிங்கைநேசன் தமிழ் வார இதழின் தரவுகளின் அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டில் சிங்கைத் தமிழர்களின் வாழ்வியல் பதிவு. அடுத்தது சிங்கப்பூர்த் தமிழ்ப் புனைவின் பதிவு.
இதில் இரண்டாவது பகுதியைச் சார்ந்தே எனது பார்வை அமைந்துள்ளது.
சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் என்பதைச் சிங்கப்பூர் மண்ணின் மணம் கமழும் வகையில் – சிங்கப்பூர்ப் பின்னணியைச் சித்தரிக்கும் வகையில் – சிங்கப்பூரர்களால் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகளால் எழுதப்படுகின்ற இலக்கியம் என வரையறுக்கலாம்.
சிங்கப்பூர் தனிக் குடியரசு நாடாக 1965இல் தோற்றம் கண்டது. அந்த நிலையில் நோக்கினால் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் என்பது குறுகிய கால வரலாறு கொண்டதாகத் தோன்றும். எனினும் சிங்கப்பூர் பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சியில் இருந்தபோது, அதாவது 1887ஆம் ஆண்டிலேயே தமிழ் இலக்கியம் சிங்கப்பூரில் தோன்றிவிட்டதாக செ.மதிவாணன் என்பவர் குறிப்பிடுகின்றார். இந்நிலையில் வைத்து ஆராயும்போது சிங்கைத் தமிழ் இலக்கியம் ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட கால வரலாற்றினைக் கொண்டது எனலாம்.
இதன் அடிப்படையிலேயேதான் இந்நூலின் கட்டுரையாளர் சிங்கைத் தமிழ்ப் புனைவுகள் குறித்த ஆய்வுகளின் தரவுகளை முன்வைக்கின்றார்.
இவ்வாய்வு சிங்கைத் தமிழ்ப் புனைவுகளின் முழுப் பார்வையாக இல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள்களை மட்டும் மையப்படுத்தி அமைகிறது. அவ்வகையில் ஜப்பானியர் ஆட்சிக் கால பதிவு, வெளிநாட்டுப் பணிப்பெண்கள், பாலியல், தொன்மம், குற்றமும் தண்டனையும் என ஐந்து கருப்பொருள்களைச் சார்ந்து மட்டும் சிவானந்தத்தின் ஆய்வு அமைகிறது.
சிங்கையில் ஜப்பானியர் ஆட்சிக் கால போராட்டங்களையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் தமிழ்ப் புனைவுகளின் தேடலாகச் சிவானந்தத்தின் முதல் கட்டுரை அமைந்துள்ளது. பல மூலங்களிலிருந்து வரலாற்றுக் குறிப்புகளை மேற்கோளாகக் கொண்டு இக்கட்டுரை படைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் அடிப்படையில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்கு வழித்தடம் அமைக்கும் அரிய முயற்சி இது. ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில் சிங்கப்பூர் இலக்கியத்திற்குத் தனித்த அடையாளத்தை நிறுவ முயல்வது கட்டுரையாளரின் ஆய்வு போக்கில் புலனாகிறது. அதே வேளை, அக்காலத்தில் மலேசிய அல்லது மலாயா இலக்கியச் செயல்பாடுகளைச் சார்ந்து சிங்கை இலக்கியப் போக்கு அமையவில்லை என்பதைத் தெளிவாகப் பிரித்துக் காட்டவும் முனைந்திருக்கின்றார் சிவானந்தம்.
ஜப்பானியர் ஆக்கிரமிப்புக்குப் பிந்திய முதல் தமிழ்ப் புனைவு என்ற கட்டுரையில் 1953இல் புதுமைதாசன் எழுதிய ‘வாழ முடியாதவள்’ என்ற சிறுகதையே ஜப்பானியர் கால சிக்கல்களைக் காட்டும் சிங்கையின் முதல் படைப்பு என வலியுறுத்தி எழுதியுள்ளார் கட்டுரையாளர். 1953இல் சிங்கை இன்னும் பிரிட்டிஷாரின் ஆட்சியில் மலாயா கூட்டமைப்பின் கீழ் இருந்த காலம். இக்காலத்தில் சிங்கை இன்னும் தனி நாடு என்ற தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் புதுமைதாசனின் இப்படைப்பைச் சிங்கப்பூர் எனும் தனி நாட்டின் படைப்பு என்று குறிப்பிடுவது ஏற்புடைமை அல்ல என்றே தோன்றுகிறது. அதே வேளை, அதே காலத்தில் எழுந்த ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலப் போராட்டங்களின் பின்னணியைக் கொண்டு படைக்கப்பட்ட மேலும் இரு படைப்புகளைக் குறிப்பிட்டுள்ளார். அவை மலேசியாவின் கோலாலம்பூரிலும் கோலாகங்சாரிலும் வாழ்ந்த மலேசிய எழுத்தாளர்களின் படைப்பு என எழுதுகிறார். சிங்கைப் படைப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் சூழலில் வலுக்கட்டாயமாக மலேசியர்களின் படைப்புகளைச் சுட்டிக்காட்டி எழுதுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதில் கட்டுரையாளரின் நோக்கம் என்ன என்பதையும் யூகத்தின் அடிப்படையில் அறியமுடிகின்றது. 1950களில் சிங்கை இன்னும் விடுதலை பெற்ற தனிநாடு அங்கீகாரம் பெறாத நிலையில் சிங்கையின் தமிழ்ப் புனைவுகலத்திற்குத் தனித்த அடையாளத்தைக் கொடுக்க முயலுவதாகவே தோன்றுகிறது.
சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகியது 1965ஆம் ஆண்டாக இருக்கும்போது 1953இல் எழுதப்பட்ட படைப்பைச் சிங்கப்பூரின் ஜப்பானியர் கால வரலாற்றைப் பதிவு செய்த முதல் சிறுகதை என்பது நெருடலை ஏற்படுத்துகிறது.
ஜப்பானிய கால வாழ்வியலைப் பதிவு செய்யும் சிங்கைத் தமிழ்ப் புனைவுகளை ஒன்று, இரண்டு, மூன்று என வரிசைப் படுத்திப் பதிவு செய்யும் கட்டுரையாளர் முக்கிய வரலாற்றுக் குறிப்புகளைக் கவனிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இலக்கியப் புனைவின் வரலாற்றைத் தொகுக்கும் முயற்சியாக அமைந்துள்ள இக்கட்டுரையில் படைப்புகள் வெளியிடப்பட்ட துல்லியமான ஆண்டுகளைக் குறிப்பிடுதலே ஏற்புடைமைக்கு வலுவாக அமையும். அந்த வகையில் முதல் இரண்டு படைப்புகளுக்கு மட்டும் ஆண்டுகளைக் குறிப்பிட்ட கட்டுரையாளர் பிற படைப்புகளுக்குக் குறிப்பிடாதது பலவீனமே.
அடுத்ததாக, போர் காலத்தைப் பதிவு செய்கின்ற புனைவுகளுக்குப் போரிலக்கியம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார் கட்டுரையாசிரியர். இச்சொல்லின் பயன்பாடு கவனிக்கத்தக்கது; விவாதத்திற்குரியது. போரிலக்கியம் என்றச் சொல்லை மிகச் சாதாரணமாகப் பயன்படுத்திவிட்டுக் கடந்துவிட முடியாது. இச்சொல்லாக்கத்தின் வரைவு என்ன என்பதையும் விளக்கி இருக்கவேண்டும். மேலும், போரிலக்கியம் என்ற இலக்கிய வகைப்பாடு எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்ற தெளிவும் இங்கு அவசியமாகிறது.
ஜப்பானியர் காலப் புனைவுகளின் உள்ளடக்கம் குறித்த கட்டுரையாளரின் பார்வை துல்லியமாகவே அமைந்துள்ளது. சுதந்திரம் பெற்றும் ‘வாழ முடியாதவள்’ தொடங்கி மாய யதார்த்தத்தின் ‘இரைச்சல்’ என்ற கட்டுரை வரை ஜப்பானியக் காலத்தின் பல்வேறு நிலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தன் கட்டுரையின்வழி விளக்குகிறார். ஜப்பானியர் கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர்கள் வரலாற்றுப் புனைவு, மாய யதார்த்த புனைவு, வணிக ரீதியிலான புனைவு எனப் பலதரப்பட்ட நிலையில் புனைவுகள் எழுதப்பட்டுள்ளதை அடையாளப்படுத்துகிறார் கட்டுரையாளர். மேலும் முடிவுரையில் இப்படைப்புகள் குறித்த ஒட்டுமொத்தப் பார்வையாக, எண்ணிக்கையிலும் சரி, போர்க்காலத்தின் மானுடத் தடுமாற்றங்களை வெளிக்கொண்டு வருவதிலும் சரி இன்னும் செய்ய வேண்டியது அதிகமிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது எனக் கட்டுரையாளர் கூறியிருப்பது ஜப்பானியக் கால பதிவுகள் பற்றிய சிங்கப்பூர் புனைவுகளின் போதாமைகளைக் காட்டுகின்றன. இது கட்டுரையாளருக்கு சிங்கை இலக்கியத்தின் மீது இருக்கின்ற கடப்பாட்டையும் அக்கறையையும் காட்டுகிறது.
வெளிநாட்டுப் பணிப்பெண்கள் பற்றிய சிங்கை எழுத்தாளர்களின் புனைவுகள் குறித்த அலசல் சிங்கப்பூர் தமிழ்ப் புனைவு என்ற பகுதியின் இரண்டாவது கட்டுரையாக அமைகிறது. சிங்கை போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் வெளிநாட்டுப் பணிப்பெண்களின் தேவை மிக அவசியமான ஒன்றாக அமைவதாகக் கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். அதிகரிக்கும் பொருளாதார தேவைகள் கருதி 1970களின் இறுதியில்தான் வெளிநாட்டுப் பணிபெண்கள் தருவிக்கப்படுகிறார்கள். அந்தக் காலம் தொட்டு, சிங்கைச் சமூக வாழ்க்கை முறையில் வெளிநாட்டுப் பணிப்பெண்களின் தாக்கம் புதியதோர் இயல்பைப் படைத்துக் கொடுக்கிறது. இத்தாக்கம் அந்நாட்டில் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சார்ந்த புதிய சமூக ஒழுகலை உருவாக்குகிறது. அந்த வாழ்வியல், ஆதிக்கச் சமூகத்தின் பிடியில் இயங்கும்போது வாழ்க்கை போராட்டக் களமாவது இயல்பான ஒன்றுதான். அந்தக் களத்தின் வாழ்வியலை ஆதிக்கச் சமூகத்தின் இரும்புத் திரையிலிருந்து மீட்டு உலகுக்கு அம்பலப்படுத்துவது புனைவுகள்தான்.
இத்தகைய விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்த சிங்கைப் புனைவுகளின் பதிவுகள் அவசியம் என்பதைக் கருதியே கட்டுரையாளர் இக்கட்டுரைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
1978இல் வெளிநாட்டுப் பணிப்பெண்களை வீட்டுவேலைகளுக்காகத் தருவித்துக் கொள்ளும் அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும், அப்பணிப்பெண்களின் வாழ்க்கைப் பதிவுகளை அடுத்த 15 ஆண்டுகள்வரை சிங்கைத் தமிழ்ப் புனைவுலகம் பதிப்பிக்கவில்லை என்று கட்டுரையாளர் விளக்குகிறார். இந்த இடைவெளிக்கான காரணங்களாக, அக்காலத்தில் சிங்கை எழுத்தாளர்களுக்கு வெளிநாட்டுப் பணிபெண்கள் வாழ்க்கை குறித்த அனுபவங்கள் இல்லாமையும் மேலும் சிங்கைத் தமிழ்ப் புனைவுலகத்தில் ஏற்பட்ட தொய்வையும் முன் வைக்கின்றார்.
முதல் கட்டுரையில், ஜப்பான் காலப் புனைவுகளை வரிசைப்படுத்தும்போது பல கதைகளில் எழுதப்பட்ட ஆண்டுகள் குறிப்பிடப்படாமல் இருந்தன. அந்நிலை இந்தக் கட்டுரையில் காணப்படவில்லை. பெரும்பாலும் எல்லாக் கதைகளுக்கும் எழுதப்பட்ட ஆண்டைக் குறிப்பிட்டுள்ளார் கட்டுரையாளர்.
1993 பாத்தேறல் இளமாறனின் அலைவாசை (சபலம்) என்ற சிறுகதையே வெளிநாட்டுப் பணிபெண்கள் வாழ்க்கையைப் பேசுகின்ற முதல் சிறுகதையாகக் கட்டுரையாளர் குறிப்பிடுள்ளார். அக்கதையில் எழுத்தாளரின் பார்வையிலிருந்தே வெளிநாட்டுப் பணிப்பெண்களைக் கருவாகக் கொண்டு எழுதும் போக்கு உருவானதற்கான காரணத்தை முன்வைக்கின்றார். பணிப்பெண்களுடனான நட்பு, சிறுவயதில் பணிப்பெண்களின் வாழ்க்கை குறித்த பட்டறிவு மற்றும் உள்நாட்டுப் போரால் சிதைந்த ஈழத் தமிழ்ப்பெண்களின் கடல் கடந்து வாழும் அவலம் ஆகிய புறத்தாக்கமும் அகவெழுச்சியுமே காரணங்களாக அமைகின்றன. இக்காலத்தில் எழுதப்பட்ட கதைகள் வெளிநாட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு வரும் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் தொல்லைகளைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது என்பதைக் கட்டுரையாளர் விளக்கும் கதைகளின்வழி அறிய முடிகிறது.
அடுத்த நிலையில், இரண்டாயிரத்தாம் ஆண்டுகளில் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் குறித்த கதைகள் அதிகம் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதைகளைக் கட்டுரையாளர் வகைப்படுத்தும் நுட்பம் கவனத்திற்குரியது. இக்காலத்தில் எழுதப்பட்ட கதைகள் கற்புத் தொடர்பான சிக்கலிலிருந்து வெளிப்பட்டு முதலாளிகளுக்கும் பணிப்பெண்களுக்குமான வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். அக்கதைகளை வெண்மைக் கதைகள், கருப்புவெள்ளைக் கதைகள் மற்றும் சாம்பல் கதைகள் என மூன்றாக வகைப்படுத்துகின்றார்.
இக்கதைகளைக் கருப்பு, வெள்ளை, சாம்பல் என நிற குறியீடுகளைக் கொண்டு வகைப்படுத்தியதற்கான அறிவியல் விளக்கங்கள் சேர்த்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். இவ்வாறாக வகைப்படுத்தும் முறை ஏதேனும் இலக்கியத் திறனாய்வு கோட்பாட்டால் பரிந்துரைக்கப்பட்டதாகவோ அல்லது மானிடவியல் ஆய்வு அணுகுமுறையைச் சார்ந்ததாகவோ இருந்திருந்தால் வகைப்பாட்டின் ஏற்புடைமை வலுவாக அமைந்திருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் இவ்வகைப்பாட்டைக் கட்டுரையாளரின் எழுத்தாக்கத் திறனாக மட்டுமே கொள்ள முடிகிறது.
அடுத்ததாக, முதலாளி – வெளிநாட்டுப்பணிப்பெண் போராட்டம் என்ற இருமையைத் தாண்டி வெளிநாட்டுப் பணிபெண்களின் பல்வேறு வாழ்க்கைச் சூழல்களை வெளிப்படுத்திய பல சிறந்த கதைகளும் எழுதப்பட்டுள்ளதைச் சான்றுகளோடு நிறுவுகிறார் கட்டுரையாளர். இதில் வெளிநாட்டுப் பணிப்பெண்களின் கல்வி, வளர்ச்சி, காதல், அவலம், கலப்புத் திருமணம் போன்ற வாழ்க்கைப் பதிவுகள் நாவலாகவும் சிறுகதைகளாகவும் புனைவாக்கப்பட்டுள்ளதை முன் வைக்கின்றார்.
இப்பகுதியில் கட்டுரையாளர் குறிப்பிட்ட புனைவுகளில் அதிகமாகப் பிலிப்பினோ நாட்டைச் சார்ந்த வெளிநாட்டுப் பணிபெண்கள் முக்கியக் கதைப்பாத்திரங்களாக இடம்பெறுவதைக் காண முடிகின்றது. இதற்கான காரண காரியத் தொடர்பைக் கட்டுரையாளர் கவனத்தில் கொண்டு விளக்கி இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். ஏன் பிலிப்பினோ நாட்டைச் சார்ந்த பணிப்பெண்கள் புனைவுகளில் முதன்மை பெறுகிறார்கள் என்பதற்கான தேடல் இக்கட்டுரைக்கு அவசியம் எனப் படுகிறது. இது கட்டுரையாளரின் ஆய்வில் இன்னொரு பரப்பை விரியச் செய்திருக்கும்.
பாலியல் ஒழுக்க விழுமியங்களும் மீறல்ளும் என்ற மூன்றாவது கட்டுரை, இதற்குமுன் கண்ட கட்டுரைகளைக் காட்டிலும் நிறைவுடையதாக அமைகின்றது.
பாலியலைக் கருவாகக் கொண்டு படைக்கப்படும் சிங்கைத் தமிழ்ப் புனைவுகளின் வளர்ச்சியையும் அதன் போக்கையும் மிகச் செறிவாக படைத்துள்ளார் கட்டுரையாளர். பாலியல் சார்ந்த புனைவுகளை எழுதத் தயங்கிய காலந்தொட்டு அதனைத் தீவிரமாக உரையாடத் தொடங்கிய எழுச்சி வரை அமைந்த போக்கினை இக்கட்டுரை விளக்குகிறது.
சிங்கையின் பாலியல் சார்ந்த புனைவுகளின் வளர்ச்சிக்குப் புதுமைப்பித்தனின் கதை முன்னோடியாக இருந்துள்ளதைக் காணமுடிகின்றது. 1950களின் ஆரம்பத்தில் ‘விபரீத ஆசை’ என்ற கதைப்பற்றிய உரையாடல்கள்வழி சிங்கையில் பாலியல் புனைவுகள் குறித்த தீவிர இலக்கியம் முன்னெடுக்கப்படுகிறது. தொடர்ந்து 1956 தொடங்கி இவ்வகை புனைவுகளில் எழுத்தாளர்கள் மெல்ல-மெல்ல ஈடுபாடு காட்டத் தொடங்குகின்றனர். இருப்பினும் பாலியல் சார்ந்த சமூகச் சிக்கல்களை முன் வைத்தே படைப்புகள் வெளிவந்துள்ளன. மரபார்ந்த பாலியல் விழுமியங்கள் சிதையா வண்ணம் மிகக் கவனமாகப் படைப்புகளை வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து, 1970களில் இவ்வகைப் புனைவுகள் மேலும் தீவிரம் அடைவதைக் காண முடிகின்றது. பாலியல் சார்ந்த புதிய பேசுபொருள்கள் புனைவுகளில் உள்ளடக்கங்களாகின. பாலின மாற்றம் மற்றும் முதிர்ப்பிராயக் காமம் ஆகிய இரு புதிய பேசுபொருள்கள் பெரும்பாலான கதைகளை அலங்கரிக்கின்றன எனக் கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார்.
மூன்றாம் காலக் கட்டமாக (2015-2018), இவ்வகை புனைவுகளின் தீவிரம் உக்கிரமான உடைவுகளையும் சில பாய்ச்சல்களையும் ஏற்ப்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றார். மரபார்ந்த ஒழுக்க விழுமியங்கள் உடைபட்டு, பேசத் தயங்கி வந்த பாலியல் விடயங்கள் மிக யதார்த்தமாக முன்வைக்கப் படுகின்றன. பாலியல் சார்ந்து சமூகம் கட்டமைத்து வைத்த விழுமியங்களில் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாது ஒலிக்கிறது. அதே வேளை எழுத்தாளர்கள் தங்களின் புனைவுகளில் எந்தத் தீர்ப்புகளையும் வழங்காது வாசகனிடமே முடிவை விட்டுவிட்டு விலகிக் கொள்ளும் போக்கினைக் காண முடிவதாக கட்டுரையாளர் விளக்குகிறார்.
முதல் இரண்டு காலக்கட்டஙகளில் எழுதப்பட்ட புனைவுகளுக்குப் பின்னணியில் புதுமைப்பித்தன் மற்றும் ஜெயகாந்தனின் எழுத்துக்கள் வழிகாட்டியாக அமைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இரண்டாம் காலக்கட்டதிற்கும் மூன்றாம் காலக்கட்டத்திற்கும் இடைவெளி ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள். இந்தக் கால இடைவெளியில் மூன்றாம் காலக்கட்டத்தின் தீவிரம் உக்கிரத்தை அடைந்ததாகக் கூறுகின்றார் கட்டுரையாளர். இந்த உக்கிரத்திற்கான காரணத்தை முன் வைத்திருந்தால் மூன்றாம் காலக்கட்டத்தின் தீவிர வளர்ச்சியை மேலும் ஆழமாக நுகர்ந்திருக்க முடியும்.
இந்நிலை சிங்கைத் தமிழ்ப் புனைவுலகம் தீவிர இலக்கிய நுகர்ச்சிக்குத் தயாராகிவிட்டதை அறியமுடின்கிறது. பாலியல் சார்ந்த விடயங்களைப் புனைவுகளில் தீவிரம் காட்டிவிட்டால் அது தீவிர இலக்கியத்திற்கான வளர்ச்சியா என்ற கேள்வி எழாமல் இல்லை. இக்கேள்விக்குப் பதில் தேடுவதற்கு முன் பாலியல் சார்ந்த புனைவுகள் குறித்த தெளிவிருந்தால் மட்டுமே இவ்வுரையாடலின் மெய்யியலை அறிய முடியும். வெறும் பாலியல் சார்ந்த உடல், உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்த படைப்புகள் தீவிர இலக்கியப் படைப்புகளாகாது. மாறாக பாலியல் சார்ந்த மரபார்ந்த ஒழுக்க விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்துவது, பாலியல் உளத்தியலை உரையாடுவது, ஆண் பெண் பாலின விடுதலைகளைப் பேசுவது போன்ற பாலியல் அறிவியலை தீவிரமாகப் பேசுவதையே தீவிர இலக்கியமாகக் கொள்ள வேண்டும். அவ்வகையில் இக்கட்டுரையில் சிவானந்தம் தொகுத்து வழங்கிய குறிப்புகளைக் காணும்போது சிங்கைத் தமிழ்ப் புனைவுலகம் உலக இலக்கிய வளர்ச்சியோடு சேர்ந்து பயணிக்கும் நிலைக்கு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.
சிங்கைத் தமிழ்ப் புனைவுலக வரலாற்று அலசலில் அடுத்து அடையாளப்படுத்தப்பட்டிருப்பது தொன்மங்களைச் சார்ந்து எழுதும் போக்கு. 20ஆம் நூற்றாண்டில் தொன்மங்களை மீளுருவாக்கம் செய்து எழுதும் போக்கு மேலை நாடுகளின் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒரு காலக்கட்டம். இக்காலக்கட்டத்தில் பல்வேறுவிதங்களில் தொன்மங்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டதாகக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். இவ்வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.
ஆனால் 20ஆம் நூற்றாண்டு சிங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தொன்மம் சார்ந்த புனைவாக்கச் சிந்தனை முற்றிலும் இல்லாமல் இருந்திருக்கிறது. அக்காலத்தின் உலக இலக்கிய வளர்ச்சியோடு ஒட்டி ஒழுகாத போக்கில் சிங்கை தமிழ்ப் புனைவுலகம் இருந்திருக்கிறது.
இதற்கு யூகத்தின் அடிப்படையில் இரண்டு காரணங்களை முன் வைக்கின்றார் கட்டுரையாளர். முதலாவது தமிழ்ச் சிங்கைப் புனைவுலகம் கோ.சாரங்கபாணியை அரவணைத்துச் சென்ற போக்கு. 1930களில் அவரின் தமிழ் வளர்ச்சி முன்னெடுப்புகள் சார்ந்து சிங்கைத் தமிழ்ப் புனைவுலகம் இயங்கியதாகக் குறிப்பிடப்படுகின்றது. இதில் முக்கியமாக அவரின் பிடியில் இயங்கிய ‘தமிழ்முரசு’ நாளேட்டின் செயல்பாடுகள் தொன்மம் சார்ந்த புனைவுகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. திராவிட இயக்கத்தின் கொள்கையுடைய கோ.சாரங்கபாணி இக்கொள்கைகளைச் செயலாற்றுவதில், மிகக் கவனத்தோடும் மிதவாதத்தோடும் செயல்பட்டிருக்கின்றார் என்பதாலேயே இவ்வகைப் புனைவுகளுக்கு 20ஆம் நூற்றாண்டில் வெற்றிடம் உருவாகியது எனக் கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார்.
முற்போக்கு இலக்கியம் தமிழ் நாட்டில் முன்னுரிமை பெற்ற காலத்தில் தமிழ் நாட்டு இலக்கியத்திலும் தொன்ம கதையாடல்கள் இல்லாமலே இருந்துள்ளன. மலாயா சிங்கையிலும் முற்போக்கு இலக்கிய சிந்தனையே அதிகமும் இருந்தது. நாளிதழ்களின் படைப்புகள் வெகுஜன புனைவுகளாகவும் முற்போக்கு புனைவுகளாகவும் இருந்தன.
அடுத்ததாக இதிகாசங்களையும் தொன்மங்களையும் நவீன இலக்கியத்தின் பகுதியாக மீளுருவாக்கம் செய்யலாம் என்ற பிரக்ஞையின்மை காரணமாக இருக்கலாம் என மாலன் கூறியதாக எழுதுகிறார் கட்டுரையாளர்.
புதுமைபித்தனின் ‘விபரீத ஆசை’ சிங்கையில் தீவிரமாக விவாதிக்கப் பட்ட சூழலில் அவரின் ‘ஆற்றங்கரைப் பிள்ளையார்’ போன்ற கதைகள் விவாதிக்கப்படாமல் இருந்திருக்காது. ஆகவே தொன்ம கதைகள் உருவாக்கம் பற்றிய பிரங்ஞையில்லாமல் சிங்கை எழுத்தாளர்கள் இருந்திருப்பர் என்பது ஏற்பானதாக இல்லை. மாறாக ஜெயகாந்தன் வழி தாக்கத்தால் விளைந்த முற்போக்கு இலக்கிய கவர்ச்சியே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
இக்காலக்கட்டத்தில் மலேசியத் தமிழ்ப் புனைவுலத்தின் போக்கை ஒப்பீட்டளவில் சற்று அலசிப் பார்த்திருந்தால் இவ்வெற்றிடம் உருவாகியதற்கான காரணத்தை யூகம் அல்லாமல் சான்றுகளின் அடிப்படையில் முன்வைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
21ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் சிங்கைத் தமிழ்ப் புனைவுகளில் தொன்மங்களைச் மீளுருவாக்கம் செய்து எழுதும் போக்குத் தென்படுவதாகக் கட்டுரையாளர் முன்வைக்கின்றார். அதில் 2001இல் வெளியான ஜே.எம். சாலியின் ‘தரிசனம்’ என்ற தொகுப்பில் இடம்பெற்ற ‘காக்கா தரிசனம்’ என்ற கதையே இவ்வகை புனைவின் முதல் கதையாக அமைகிறது. இக்கதை குர்ஆனின் வரும் ஆபில்-காபில் உடன்பிறப்புகளின் வாழ்க்கையை மையப்படுத்திய மீளுருவாக்கப் புனைவாக அமைகின்றது. மேலும் அடுத்தடுத்து வந்த புனைவுகள் அதிகம் மகாபாரதக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட மீளுருவாக்கப் புனைவுகளாக அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது. இராமாயணம், சிலப்பதிகாரம், கௌதம புத்தர், வேதாளம் – விக்கிரமாதித்தன் போன்ற தொன்மக் கதைகளைக் கொண்டும் பல படைப்புகள் வந்துள்ளதைக் காண முடிகிறது. அதேவேளை, உள்நாட்டுத் தொன்மக் கதைகளைச் சார்ந்தும் குறிப்பிடத்தக்கப் படைப்புகள் வெளிவந்துள்ளதைக் குறிப்பிடுகின்றார் கட்டுரையாளர்.
20ஆம் நூற்றாண்டின் இடைவெளிக்குப் பின்பும் இவ்வகை இலக்கியப் புனைவுகள் குறிப்பிடத்தக்க அளவில் எழுதப்பட்டிருப்பது, சிங்கைத் தமிழ்ப் புனைவுலகத்தின் இலக்கியத் தாகத்தை மெய்பிக்கின்றது.
அடுத்த கட்டுரை குற்றமும் தண்டனையும். இவ்வகைப் புனைவுகளின் வரலாற்றை அலசுவதற்கு முன்பு குற்றமும் தண்டனையும் பற்றிய கட்டுரையாளரின் முன்னுரை கவர்கின்றது. மானுட வாழ்க்கையில் குற்றங்களும் தண்டனைகளும் வரையறைக்குட்படுத்தப்படும் கோணங்களை மிக ஆழமாக விவாதித்துள்ளது கட்டுரையாளரின் நுண்மாண் நுழைபுலத்தை மெய்ப்பிக்கின்றது.
சிங்கைத் தமிழ்ப் புனைவுகளில் குற்றம் மற்றும் தண்டனை குறித்த பொதுவான வரையறைகளிலிருந்து விலகிப் படைக்கப்படும் குறிப்பிடத்தக்க இலக்கியச் சிந்தனைகளை அடையாளப்படுத்தும் முனைப்புடனே இக்கட்டுரையைப் படைத்துள்ளார் சிவானந்தம்.
“சட்டத்தின் கரங்களுக்கு அப்பாற்பட்டுக் குற்றங்களைக் காலம் தாழ்த்தாமல் மன்னித்து மீள்வதும், கண்ணீரினால் குற்றவுணர்ச்சியைக் கழுவிக்கொள்வதும், தடுமாற்றங்களையே மனித உறவுகளை மேம்படுத்தும் சாதனமாக ஆக்கிக் கொள்வதும், தண்டனைகளைக் கடவுளின் கருணையோடு இணைத்தும் விலக்கியும், இறப்பெனும் மாபெரும் சமப்படுத்தி எல்லாக் குற்றங்களையும் சித்திரக்குள்ளர்களாக்கிவிடுவதையும் திறம்படவும் செறிவாகவும் வெளிப்படுத்தியுள்ளன சிங்கப்பூர் தமிழ்ப் புனைவுகள்.”
என்றக் கூற்றுக் கட்டுரையாளரின் சிங்கைத் தமிழ்ப் புனைவுலகம் பற்றிய ஆழமான அவதானிப்பு.
சிங்கைத் தமிழ்ப் புனைவுலகத்தின் கருப்பொருள் ரீதியிலான அலசலே சிவானந்தத்தின் இக்கட்டுரைகள். இலக்கிய வகையில் புனைகதைகளில் (சிறுகதை, நாவல்) குறிப்பிடத்தக்க சில கருப்பொருள்களை மட்டும் மையப்படுத்தி அதன்வழி சிங்கை இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதியை ஆவணப்படுத்தியிருக்கிறார். இவர் ஆய்ந்து கொடுத்தது சிங்கை இலக்கிய வரலாற்றின் ஒரு கைப்பிடி அளவாகவே இருந்தாலும், அது அடுத்த அறுவடைக்கான உரமிட்ட மண்.
சிவானந்தனும் சரி அதற்கு முன்பு ஆய்வின் அடிப்படையில் சிங்கையின் தமிழ் இலக்கியத்தை வரலாற்று ஆய்வின் அடிப்படையில் தொகுத்தவர்களும் சரி 1965க்கு முற்பட்ட கால இலக்கியப் போக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்தே வரலாற்றைப் நிறுவ முயல்கின்றனர். சிங்கை தனிநாடு எனும் தகுதியை அடையாத காலத்திற்கு முற்பட்ட படைப்புகளைச் சிங்கை படைப்புகள் என சில அறிக்கை வடிவங்களை வைத்து நிறுவுகின்றனர். ஏற்புடையதுதான். இருப்பினும் 1965க்குப் பிறகு சிங்கையின் தமிழ் இலக்கியப் போக்கும் வளர்ச்சியும் குறித்த தனித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவ்வாய்வுகள்தான் சிங்கப்பூர் எனும் தனிக் குடியரசின் அசலான இலக்கிய வடிவத்தைக் காட்டும். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நடந்த அரசியல், சமுகவியல், பொருளியல் நடைமுறைகள் சிங்கைத் தமிழ் இலக்கியத்தின் தனித்த அடையாளத்தை உருபெறச் செய்திருக்கும். அந்த விதையிலிருந்து விளைந்த சுயம்புகளைத் தேடியப் பயணம் அசலானதாக அமைந்திருக்கும்.
காலச்சுவடு பதிப்பகம், தமிழகம்
இந்த நூல் வெளியாகி சுமார் இரண்டாண்டுகள் ஆகின்றன. முதல் விமர்சனம். சிறுநூலை கவனப்படுத்தியதற்காக இளம்பூரணன் கிராமணிக்கும் வல்லினத்திற்கும் என் நன்றி!