நகர்ந்து கொண்டேயிருக்கும் உயிருள்ள கோள்

லதாவின் ‘யாருக்கும் இல்லாத பாலை’ யின் கவிதைகளை ‘பொருள் மயக்கின் அழகியல்  (Aesthetics of ambiguity)’ என்று அடையாளப்படுத்துகிறார் எம்.ஏ.நுஃமான். கூடவே, ‘நேசத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் பயணிக்கும் கவிதைகள்’ எனச் சொல்லும் அவர், இதைக் கண்டடைந்ததற்கான வழித்தடங்களையும் இந்தத் தொகுதிக்கான பின்னுரையில் குறிப்பிடுகிறார். லதாவின் உணர்தல் தீவிர நிலை, சாதாரண நிலை, அதி தீவிர நிலை என மூன்று நிலைகளில் வெளிப்பாடு கொள்கிறது. இதற்கான காரணங்களும் நியாயங்களும் லதாவிற்குள்ளிருக்கிறது. இந்த நியாயங்களும் காரணங்களுமே லதாவை இந்த மூன்று நிலைகளிலும் இயங்க வைக்கின்றன. இந்த மூன்று நிலைகளின் பிரதிபலிப்பையே இந்தக் கவிதைகளில் காண்கிறோம்.


 லதா, நீண்டகாலமாகச் சிங்கப்பூரில் வாழ்ந்தாலும் அவருடைய மனம் ஈழத்திலேயே, அதன் பாடுகளுக்குள்ளேயே சிக்கியுள்ளது. இது பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு – அதிலும் புலம்பெயர்ந்து வாழ்வோருக்குரிய பொது இயல்பாகியிருக்கிறது. ஒரு சில விலக்குகள் உண்டு. எனவே பெரும்பாலானோரைப்போல லதாவும் ஈழ நிலவரங்களின் பாதிப்புகளையிட்ட உணர்வுந்தலுக்கு உள்ளாகியிருக்கிறார். இந்தத் தொகுப்பின் முதற் கவிதையான “யாருக்கும் இல்லாத பாலை” யின் “போர் களைத்து நிற்கிறாள்” என்ற முதல் வரியே இதற்கு சாட்சி. இது அதிதீவிர நிலையின் வெளிப்பாடு. இதை ஒத்த பிற கவிதைகள் பலவும் இதிலுண்டு. குருஷேத்திரம், துர்க்கை, விலக்கப்பட முடியாதவள், முகம், எல்லாமே, தனித்த தலைவன் எனத் தொடர்கிறது இந்த வரிசை. அநேகமாக நான்காம் கட்ட ஈழப்போர்க்காலத்தில் எழுதப்பட்டவை இந்த வரிசைக் கவிதைகள். நான்காம் கட்ட ஈழப்போர் என்பது இன்றைய வழக்கில் ஈழப்போராட்டத்தின் இறுதிப்போராகும். அதன் நேரடிப் பிரதிபலிப்புகள் தவிர்க்க முடியாமல் பெரும்பாலான ஈழத்தமிழர்களைப்போல லதாவையும் கொந்தளிக்க வைக்கின்றன. தனித்த தலைவன் என்ற கவிதை இதை நேரடியாகவே காட்டுகிறது. போரின் முடிவில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியின் பிரதிபலிப்பு,
 
ஆடையோ காலணியோ கூட
இன்றி
எல்லா அடையாளங்களுடனும்
உயிர் துறந்த 
அவனது வெற்றுடல்
…………………………..
………………………….
 
திறந்திருந்த விழிகளில்
பதிவாகியிருந்த கடைசிக் காட்சியும்
தெளிவற்று இருந்தது  
 
வெடித்த தலையுடன் 
காட்சிப் பொருளான 
அவனுக்கென 
அச்சமும் அதிர்ச்சியும் மரத்திருந்த மக்களிடம் 
ஒரு சொட்டுக் கண்ணீரும்
மீந்திருக்கவில்லை.
 
ஆண்ட மண்ணில்
எரிவதற்கும் வாய்ப்பில்லை
 
நினைவுக் கூட்டமும் 
மாவீரர் பட்டமும் இன்றி
தனித்துப் போனான் 
அப்பெரும் தலைவன்.
 

என வெளிப்படுத்தப்படுகிறது. இது லதாவின் அரசியற் பார்வையையும் சாய்வையும் சொல்லிவிடுகிறது. ஈழப்போராட்டத்தின்பால் அவருக்குள்ள ஈர்ப்பையும் அதை முன்னெடுத்த தரப்புகளில் ஒன்றான புலிகளின் மீதான கரிசனையையும் உணர்த்துகிறது. இத்தகைய உணர்வானது அவரை தீவிர, அதிதீவிர நிலைக்குத் தள்ளுகிறது. பொதுவாகவே அரசியல் கவிதைகளில் ஒரு தீவிரத்தன்மை இயல்பாகியிருப்பதுண்டு. சில சமயங்களில் அது அதிதீவிர நிலைக்குச் செல்வதுமுண்டு. அதுவும் நெருக்கடி நிலை அல்லது போர் போன்ற சூழலில் இது நிச்சயமாகவே அதிதீவிர நிலையைச் சென்றடையும். இதனால் இந்த அதிதீவிர நிலைக்கவிதைகளில் சில நேர்ப்பொருளில் பேச முற்படுகின்றன. அதிதீவிர நிலையின் குணாம்சமே அதுதான். அதனுடைய குரல் அநேகமாக உரத்த தொனியிலேயே ஒலிப்பது. ஒரு சில கவிதைகளில் நுஃமான் குறிப்பிடுவதைப்போல பொருள் மயக்கும் அழகியலில் வெளிப்படுகின்றன. அதிலொன்று ’விலக்கப்பட முடியாதவள்’ என்ற கவிதையாகும். பாஞ்சாலியின் சபதத்தை மையப்படுத்திப் போரின் நிலையைப் பேச முற்படும் இந்தக்கவிதையின் இறுதிவரிகள் ஆழ்படிமங்களின் வழியே சிக்கலடைந்த போரின் நிலையைச் சுட்டுகிறது. 


“ஒருக்களித்த கதவின் வழி
ஒற்றைத் துணியையும் நழுவ விட்டாள்
 
விடியல் எங்கும் 
விரவிக் கிடந்தன மயிர்கள்.

 
இந்த வரிகளைத் தொட்டுக் கவிதையை விரித்துப் பொருள் விளக்குவதற்கு இங்கே நான் முற்படவில்லை. அத்தகைய அணுகுமுறை தவறானது. கவிதையின் சாத்தியங்களை அது மறுதலிப்பதாகி விடும். ஆனாலும் இங்கே இந்த வரிகளின் கொந்தளிப்பைப் பற்றிச் சொல்லியாக வேண்டியுள்ளது. ஒற்றைத்துணியையும் நழுவ விட்டாள் என்பது கையறு நிலை. இது போரின் இறுதிக் கட்டம் உருவாக்கிய அவலமாகும். தொடர்ந்து வரும் விடியல் எங்கும் / விரவிக் கிடந்தன மயிர்கள் என்பது மிஞ்சியது மயிர்தான் என்றாகிறது. அந்த மயிர் சிக்கலும் சிடுக்கும் மிக்கதாகியது. அதுவும் எதிர்பார்க்கப்பட்ட விடியலில். இன்றைய ஈழப்போராட்டத்தின் நிலையும் இதுவே. சிக்கலடைந்த கையறு நிலை. இதை லதா கழிவிரக்கத்துடன் பார்க்கிறாரா அல்லது ஆற்றாமையுடன் நோக்குகிறாரா? இல்லை, உட்கனலும் கோபத்தில் உள்ளோடும் கேலிப்படுத்தலாக வெளிப்படுத்துகிறாரா என்றால் ஏதொன்றாகவும் எல்லாமாகவும் உள்ளது. இந்த இடத்தில் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருவது ஜெயமோகனின் “பத்மவியூகம்”. திரெளபதியின் சபதமே (முடிக்கப்படாமல் விரிந்தலையும் கூந்தலே) சுபத்திரையின் மைந்தன் அபிமன்யு உள்பட பலரையும் பலியெடுத்துத் துயரை பேருருவாகப் பெய்து விடுகிறது என்றுணர்த்துகிறது பத்மவியூகம். ஆனால் மகாபாரதத்தின் நோக்கு நிலை வேறு. அது பாண்டவரின் வெற்றியில் சென்று சேர்கிறது.
 
இங்கே இந்தக் கவிதை ஜெயமோகனுடைய பத்மவியூகத்துடன் முழுதாக இணைவதைக் காண முடிகிறது. சபதமொன்று எப்படிப் பேரழிவையும் பெருந்துயரையும் தந்து முடிகிறது என்பதை.
 
முதுகில் எரிந்தது கூந்தல் 
படுகளம் முடியும் வரை 
அள்ளி முடிக்கவும் முடியாது என்ற பின் அடுத்து வரும் வரிகள், 
 
“ஒருக்களித்த கதவின் வழி
ஒற்றைத் துணியையும் நழுவ விட்டாள் 
 
விடியல் எங்கும் 
விரவிக் கிடந்தன மயிர்கள். 

 என்றால் அள்ளி முடிக்க முடியாத கூந்தலே விடியல் எங்கும் விரவிக்கிடக்கும் படியாயிற்று என. ஈழப்போராட்டமும் அப்படித்தான் பிடிவாதங்களின் கூரினால் அழிந்தவொன்று. அழிந்த பின் மயிர்ச்சிக்கல்களாகி சிக்கெடுக்கக் கடினமாக இருக்கும் ஒன்றாக.

இதை ஒத்ததாகவே குருஷேத்திரம் என்ற கவிதையில் வரும் இறுதி அடிகளான
 
பிள்ளைகளை 
நாடு தின்னக் கொடுத்த
அன்னையரின் பஞ்சடைந்த கண்களிலும் 
அவர்களின் கோணிப் பைக்குள்
நிறைந்துள்ள
குழந்தைகளுக்கான கதைகளிலும் 
எக்களிக்கிறது
இன்னும் ஏவப்படாத 
பிரம்மாஸ்திரம் 

 
என்பது இறுதியில் எல்லா வெறியும் அன்னையரின் துயரை, அவர்களுடைய ஆற்றாமையைத்தான் தந்து முடிகின்றன என்பதை உணர்த்துகிறது. போர் எப்போதும் பெண்களையும் குழந்தைகளையுமே பெருந்துயரில் தள்ளுகிறது. அவர்களே ஆயுதமேந்தாமல் பலிகொள்ளப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மையும் வரலாற்றுத் துயரமுமாகும். இது வரலாற்றுத் துயரம் மட்டுமல்ல சமகால நிலவரமும் அதுதான். இந்த இடங்களில் லதா போர் வெறுப்பாளராக உணரப்படுகிறார். அவருள் மேலோங்கியொலிப்பது போரின் விளைவான அவலமும் துயரமுமே. இதை அவர் தீவிர நிலையிலும் அதிதீவிர நிலையிலும் உணர்ந்ததைப்போல நம்மையும் உணர வைக்கிறார். இதற்கு மேலும் ஒன்றாக இரண்டாவது காலனியத்துவத்தின் சில காட்சிகள் என்ற கவிதையைச் சொல்ல முடியும். 
 
ஏங்கிக் கிடக்கிறது சோதனைச் சாவடி
சிங்களத்துக்குக் கீழே
தமிழ் 
வழியெங்கும்…
 
……………..
……………..
 
பாலையில் முளைத்திருந்த 
வெள்ளைப் புத்தர்
கார்த்திகைப் பூ
சூடியிருந்தார்
……………………………..
……………………………..
 
முள் குத்தாமல் 
கம்பியை லாவகமாகப் பிடித்தபடி
மணிக்கணக்காக முகம் காட்டப் 
பழகியிருந்தனர்
மக்கள்

 
என்பது அப்படியே போரின் முடிவுக்குப் பிறகான இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளை – அதுவும் குறிப்பாக வன்னிப் பகுதியை அப்படியே காண்பிக்கும் ஒன்று. இதேவேளை லதாவினுள் ஒரு தடுமாற்றத்தையும் தத்தளிப்பையும் காணக் கூடியதாக உள்ளது. ஒரு பக்கம் அவர் ஈழத்தமிழரின் போராட்டத்திலும் விடுதலைப் புலிகளின் மீதும் அபிமானம் கொண்டவராகத் தெரிகிறார். அதேவேளை போரின் விளைவுகளை வெறுத்து மறுதலிக்கிறார். இரண்டும் உண்மை. ஆனால் இந்த இரண்டையும் ஒன்றில் பொருத்திக் கொள்ள முடியாது. இதனால் லதாவின் மெய்யான நிலைப்பாடு என்னவாக இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. அப்படியென்றால் அவர் தனக்குள் முரண்படுகிறாரா? அந்த முரண்பாடு எதனால் எழுகிறது? என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த மாதிரித் தடுமாற்றங்கள் இன்று ஈழத்தமிழர்களிடம் பொதுவாகவே காணப்படும் ஒன்று. ஒரு பக்கத்தில் இன ஒடுக்குமுறையை எதிர்க்க வேண்டிய, அதற்கெதிரான போராட்டத்தையும் போரையும் ஆதரிக்க வேண்டிய நிலை. மறுபக்கத்தில் போரின் அனர்த்தத்தையும் அழிவையும் துயரத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்ற சூழல். இந்த இரண்டுக்கும் இடையிலான தடுமாற்றத்தையும் தத்தளிப்பையும் சமனிலைக்குலைவையும் இந்தத் தொகுதியின் கவிதைகள் சொல்கின்றன.
 
போர் பற்றிய மற்றும் இந்த அரசியலைப் பேசும் பெரும்பாலான கவிதைகளும் நேர்ப்பொருளில் எடுத்துரைப்பைக் கொண்டிருக்கின்றன. பொதுவாகவே அரசியற் கவிதைகளில் இத்தகைய தன்மை பலரிடத்திலும் வெளிப்படுவதுண்டு. சிலர் இதைக் கடந்து வேறு பரிமாணங்களில் தம்மை வெளிப்படுத்துவர். ஆனால், லதா தன்னுள் குமுறும் உணர்வுகளை அப்படியே பிரதியீடு செய்து விடுகிறார். இதுதான் அவருக்கு வாய்க்கிறது. சரியெனப்படுகிறது போலும். இதற்கு அவர் தன்னுடைய முன்னோடிகளை வழியாகக் காண்கிறார். குறிப்பாக சேரனை. சேரனுடைய கவிதைகளில் அரசியலை மையப்படுத்திப் பேசும் கவிதைகளின் சாயலை ஒத்ததாக இந்தக் கவிதைகளும் உள்ளன.


இதேவேளை பிற கவிதைகள் வேறு விதமாக அமைகின்றன. 


நிறுத்தாமல் அழுத குழந்தையுடன்
நீண்ட பயணம் செய்யும் வரை
எழுதிக் கொண்டுதானிருந்தேன்
வாழ்வின் அற்புதங்களை

என்ற தலைப்பில்லாத இந்தச் சிறிய கவிதை உட்பட மேலும் சில சிறிய கவிதைகள் அழுத்தமாக உள்ளன. கவிதையில் சிறியது பெரியது என்று சொல்லலாமோ என்ற கேள்வியும் உண்டு. அது கவிதையாக இருப்பது என்பதே முதற் தெரிவாக இருக்கும்போது சிறியது பெரியது என்ற அடையாளப்படுத்தல்கள் சில வேளைகளில் அவசியமற்று விடுகிறது. ஆனாலும் அதிக சொற்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் கவிதை உணர்த்தும் – கிளர்த்தும் உணர்வை விட சிலவேளை மிகக் குறைந்த சொற்களின் வழியே ஆழமான – அழுத்தமான உணர்வு தூண்டப்படுகிறது. பொருள் செறிவாகிறது. அதிக சொற்கள் களைப்படைய வைத்தும் விடுகின்றன. லதாவின் குறைந்த சொற்களைக் கொண்டு கட்டமைக்கும் கவிதைகள் அழகூட்டுகின்றன. இதற்குதாரணம்,


ஒரு வாழ்வுக்கும் மறுவாழ்வுக்கும்
இடையே நடக்கிறேன்
கனவு காமம் காதல் வாழ்தல்
கால் மாற்றித் தொடர்கிறேன்
அலையில் மிதக்கும் காற்றெனக் 
கனக்கிறது காலம்.

என்ற இந்தக் கவிதை. ஆறு வரிகளில் வாழ்வென்ற நெடும்பயண வழியில் நிகழ்வனவற்றைப் பேசிவிடுகிறது. அதன்போதான உணர்வுகளையும். இதைப்போல ஏனைய சிறிய கவிதைகளிலும் அமைதியும் ஆழமும் தொனிக்கின்றன. அன்பையும் காதலையும் சொல்வதற்கு ஒவ்வொருவருக்கும் ஏராளமாக உண்டு. நவீன கவிதை இதை வெவ்வேறு நிலைகளில் உணர முற்படுவதன் மூலம் இந்த உறவையும் அதன் புதிய நிலைகளையும் பேச விளைகிறது. பின் நவீனத்துவக் கவிதைகள் அன்பு, காதல், நேசம், பரிவு என்பவற்றை வெவ்வேறு நிலைகளில் நேராகவும் எதிராகவும் நிறுத்திப் புரிந்து கொள்ள முற்படுகின்றன. உள்ளே காரணத்தோடும் காரணமற்றும் சிதைந்து கொண்டிருக்கும் உறவுகளின் உள்ளேயும் மேலேயும் அது கொடியென ஊடுருவியும் மேவியும் படர்ந்து கொண்டிருக்கிறது. 
 
லதாவின் கவிதைகள் அரசியல் உணர்வில் தீவிரம் அதிதீவிரமாக உணர்வெழுச்சியைப் பிரதியிடுகின்றன. ஏனைய சந்தர்ப்பங்களில் சாதாரணமாக – ஆனால் ஆழத்தை நோக்கி விரிகின்றன. இந்த மூன்று தன்மைகளில் மூன்றாவதே அவருக்கான வழியாகத் தென்படுகிறது. அது காலம், இடம், பொருள் என்ற எல்லைகளுக்குள்ளும் வகைப்படுத்தல்களுக்குள்ளும் சிக்குண்டு முட்டி மோதாமல் அகன்ற பரப்பில் விரிவு கொண்டு நிகழ்கிறது. இந்த நிகழ்வுக்கு நிறுத்தமேயில்லை. அது தொடரி.
 
பொதுவாகக் கவிதைகளை ஒவ்வொருவரும் கண்டடைகின்ற பாதைகளும் முறைகளும் வேறு வேறாக இருப்பதுண்டு. அதற்கான சாத்தியங்களைக் கொண்டிருப்பது கவிதையின் இயல்பே. கவிதைக்கு மட்டுமல்ல, இலக்கியத்தின் பண்பும் அதுதான். உள்ளீடாகக் கொள்ளும் பொருளும் அதை உணரும் முறையும் உணர்த்தும் முறையும் இந்தச் சாத்தியங்களை உற்பவிக்கின்றன. இதில் முக்கியமானது உணர்தலும் உணர்த்துதலுமே. 
              
எந்தளவுக்கு ஆழமும் விரிவும் கொண்டதாக உணர்தல் உள்ளதோ அந்தளவுக்கு அந்தப் பொருள் ஒளிரும், துலங்கும். அதை வெளிப்படுத்தும்  (உணர்த்தும்) போதும் இந்த அளவுப் பிரமாணமும் பிரமாண்டமும் முக்கியம். இதில்தான் ஒரு கவிஞரின் சிறப்பும் அடையாளமும் நிகழ்கிறது. இந்த உணர்தலும் உணர்த்துதலுமே ஒவ்வொரு கவிஞரினதும் தனித்துவத்தைத் தீர்மானிக்கின்றன. இவையே நம்மைக் கவனிக்கவும் வைக்கின்றன. அதாவது எந்த வகையிலான வேறுபடுதல், என்னமாதிரியான சிறப்பு என்ற வகையில். 
 
லதாவின் தெரிவு எப்படியோ? இனி வரும் கவிதைகளின் நிறமும் குணமும் என்னவாக இருக்கும்? அவற்றின் புதிய பயண வெளிகள் எப்படியாக இருக்கும் என யோசிக்கிறேன். அப்படி யோசிப்பதற்கான புள்ளிகளை இங்கே லதா விட்டிருக்கிறார். அதாவது தான் நகர்ந்து கொண்டேயிருக்கும் ஒரு உயிருள்ள கோளென்று. ஆனாலும் அதன் திசையும் பயண வெளியும் எப்படியிருக்கும் என்று தெரியாததல்லவா!

க்ரியா பதிப்பகம்

நூலை ஆன்லைனில் வாங்க
 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...