செந்தாழை

கெம்பித்தாய்கள், குண்டா வாளால் ஒருவனின் தலையைச் சீவி மக்கள் கூடுமிடத்தில் வைப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள். இரத்தம் உறைந்த கழுத்து, சீவிய நுங்கு போல் கண்கள் துருத்திக்கொண்டு ஏக்கத்துடன் நம்மைப் பார்க்கின்றன. இன்னும் கடலில் மிதக்கும் பிணங்கள்… அவை கரையொதுங்கியதும், நாய் இழுத்துக்கொண்டு வருபவற்றை வந்துவேடிக்கை பார்ப்பவர்களிடத்தில் கூறுவதெல்லாம் என்ன… கவனமாக இருங்கள்… கவனமாக இருங்கள்…வெளியே வரவேண்டாம்…பத்திரமாக வீட்டிற்குள் இருங்கள்… எந்நேரமானாலும் உங்கள் வீட்டுக் கதவை விசாரணை என்ற பெயரில் ஜப்பானிய சிப்பாய்கள் உடைப்பார்கள்…

அவர்கள் வெவ்வேறு வடிவங்களில் பயத்தினை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தனர். நகரத்தின் முக்கிய பகுதிகளில் குண்டுகளை வெடித்து எரியவிடுவதன் மூலம். கட்டிடத்தின் கூர்மையான மூக்குக் கூரைளின் நுனியைத் தொட்டுவிடும் தூரத்தில் போர் விமானங்களைப் பறக்கவிடுவதன் மூலம். சட்டென அவை மக்களின் மூளைக்குள் புகுந்துகொண்டன. அவர்களைப் பித்துநிலைக்குத் தள்ளியது. காதுகளைப் பொத்திக்கொண்டு வீட்டு மூலையில் அமர்ந்துக்கொண்டனர். பெரிய ராணுவ லாரி, ஒலிப்பெருக்கி மூலம், ‘தகுந்த சான்றுகளோடு மைதானத்திற்கு வந்து விடுங்கள். நற்குடிமகன் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என அறிவித்துக்கொண்டே வருகிறது. பிரசுரங்கள், அறிவிப்புப்பலகைகள் வாயிலாக மக்கள் கூடுமிடங்களில் அறிவிப்பு குரல் கேட்டுக்கொண்டே வருகிறது.

ஜப்பானிய மொழியில் டாய் கென்ஷோ என்றார்கள் – சீன பாஷையில் சூக் சிங், தமிழில் பரிசுத்தப்படுத்துதல் என்று பொருள். புதிய ஆட்சிக்கு எதிராகக் கருதுபவர்களைக் களையெடுக்கும் முயற்சி. அது ஜாலான் புசார் மைதானத்தின் மையப்பகுதி. முள்வேலி முகாம்களில் நிற்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் முதுகில் சுட்டெரிக்கும் வெயில். ராணுவ ஒழுங்கை அதட்டல் மூலம் ஏற்படுத்தும் தலையில் கேன்வாஸ் துணியும் கட்டைத்துப்பாக்கியுமாய் ராணுவச் சிப்பந்திகள் எனப் பதட்டம் ஒருபுறம், மறுபுறம் செவ்வந்திப்பூ இலச்சினையைத்தாங்கி நடக்கும் ராணுவ அணிவகுப்பு, பூட்ஸ் கால்கள் வீதியில் அழுத்தமாக மண்ணில் மிதித்து நடந்துசென்றன. அவர்களைப் பக்கவாட்டு வீதிகளில் கத்தரிக்கப்பட்ட வட்டச் சிவப்புத் துணியைக் கம்புகளில் கட்டி மக்கள் வரவேற்றுக்கொண்டிருந்தனர்.

சந்தைக்கு அருகே நான் பணிபுரியும் பழமண்டியின் கிட்டங்கியின், பழுப்பேறிய சுவருக்கு எதிராக இருக்கும் வெட்டப்பட்ட தலை, அதன் துருத்திய கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன.

அது பிரிட்டிஷ் ஆட்சி காலம், அவனை முதன்முதலில் துறைமுகத்தில்தான் சந்தித்தேன். கப்பலுக்குச் சரக்கு ஏற்றும் பணி. இருவரும் அடுத்தடுத்து வரிசையில் இரும்பு கம்பிகளுக்குப் பின்னால் வரிசையில் காத்திருந்தோம். யானை ஏற்றும் பணி. கதவு திறந்ததற்குப் பின்னால் நானும் அவனும் ஒரு யானையை நோக்கிச் சென்றோம். அதன் பெயர் பேபி. அதனை விலைக்கு வாங்கிய ஐரோப்பிய துரை, பயணம் போகவேண்டிய அவசரத்தில் இருந்தான். இருவரையும் விரட்டிக்கொண்டிருந்தான். அதன் காது மடல்கள் வண்ணத்துப்பூச்சியின் இறகுகளைப் போல் விசிறிக்கொண்டே இருந்தது. உடல் மெலிந்து அதன் வயிறு சராசரி யானையை விட காற்றுப்போன பலூன் போல் சுருங்கி பரிதாபமாக இருந்தது. மனம் ஒரு யானையாக முறிந்த கிளையைப் பிடித்துக்கொண்டு அடியாழத்தில் மிதந்துக்கொண்டே இருந்தது. அகத்தில் குலுங்கிக்கொண்டிருந்த திரவம் ஒன்றன் மீது ஒன்றாக நினைவுகளை தேய்த்து சவக்கார குமிழாக பால்யம் மெல்ல மண்சடக்கின் வழியாக ஊர்ந்து செல்கிறது. குச்சிக்காடு பல்வரிசையாய் லயங்கள், கன்னங்கள் சுருங்கிய கருப்பு மனிதர்கள், உயரே கித்தா காடுகளுக்கு மேலாய் தெரியும் பாலிங்காடு – தாய்லாந்து எல்லையிலிருந்து அவ்வப்போது குச்சிக்காட்டிற்குள் இறங்கும் காட்டுயானைகள்.

நான்கு கால்களுக்குச் குறுக்கே கயிறுகளாலும் சங்கிலியாலும் பிணைக்கப்பட்ட பேபியை, வின்ச் (winch) கப்பலுக்கும் தரைக்கும் நடுவே இடைவெளி  அந்தரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கி நிறுத்திக்கொண்டிருந்தது. அதன் கண்களைப்பார்த்துக்கொண்டே காலையில் கலயத்தில் கொண்டுவந்திருந்த கஞ்சியும், சின்னவெங்காயமும், ஊசிமிளகாயும் பிளாச்சான் அரைத்த துவையலையும் என் கைகள் பிசைந்து கொண்டிருந்தன.

தூரத்தில் கயிறுகளை வடம்போல் சுற்றிக்கொண்டிருந்த அவனின் வாற்கோதுமை நிறமேனியை மதிய வெயில் மேலும் சிவப்பாக்கியது. தூரத்தில் இருந்து, தண்ணீருக்குள் எழும் குரல் போல் என்னிடம் அவன் திரும்பி கேட்டான், “..இந்த யானையை எதற்காக வெளிநாடு ஏற்றுகிறார்கள் ?”, அதற்கு நான் “அது வாங்குபவனின் உரிமை, உரிமையாளன் விற்பனைப்பொருள் மீது எதை வேண்டுமானாலும் நிகழ்த்த உரிமைப்பெற்றவனாகிறான். உயர் அடுக்கு மாளிகையில் ஐரோப்பிய துரைமார்களின் வேட்டைச் சாகசங்களை நினைவூட்ட இதன் தலை அலங்காரமாக இருக்கலாம் அல்லது மின்சாரம் பாய்ச்சி அறிவியல் சோதனைகளுக்கு உட்படுத்தலாம் அல்லது மனிதர்களுக்கு கொடுக்குமுன் மருந்துகளை அதற்கு கொடுத்துச் சோதித்துப்பார்க்கலாம் அல்லது கால்கடுக்க மன்னர்கள் ஊர்வலத்தில் முன்னே அழைத்துச்செல்லலாம் அல்லது நம்மைப்போல ஏதாவது துரைக்கு முன் கையைக் கட்டி.. இல்லையில்லை.. தும்பிக்கையைத் தூக்கி நிற்கலாம் “ என்றதும் அவன் சிரித்தேவிட்டான்.

கையைக் கழுவிவிட்டு, இடுப்பில் இருந்த சுருட்டை எடுத்துப் பற்றவைத்தேன். எனது கருத்த உதடுகள் மேற்கொண்டு என்ன பேசப்போகிறது என அவன் காத்திருந்தான். “உனக்கு யானைப்பகை தெரியுமா” என்றேன். தெரியாது என்று தலையாட்டினான்.”..மிருகங்களில் மிகுந்த நுண்ணறிவுமிக்கது யானை. இலகுவாக வசப்படுத்திவிடலாம். சிறுகுழந்தையைப்போல் யானை பாகனிடம் விளையாடும் பாங்கு தனிரகம். அதேபோல் இலகுவாகப் புரிந்துக்கொள்ள முடியா விலங்கும் யானைதான். அதே பாகன் காடுகளில் மிதிப்பட்டு இறந்துகிடப்பதைக் கண்டுள்ளாயா” என்று கேட்டுவிட்டு அமைதியாக இருந்தேன்.

ஆழத்தில் மூழ்கிய யானை, மெல்ல மெல்ல கிளையைப் பிடித்துக்கொண்டே எனக்குள் முன்னேறியது. திரவம் இப்போது  மெல்ல சூடாகியது. நள்ளிரவு லயங்களில் புகுந்த யானைகள் நிகழ்த்திய கோரத்தாண்டவம்… அதன் கண்கள்… வனத்திற்கும் நிலத்திற்கும் நடுவே நிகழும் சமன்குலைவு. அதன் தூண்கால்கள் மின்னல்போல வெட்டி சரித்தது. ஆண்டான், அடிமை, கங்காணி, துரை என காண்போரிடம் எந்த பாகுபாடும் இல்லை. யானை அடக்கும் மந்திரம் தெரிந்த  ஒரேயொரு மனிதர் அப்பாவைக்கூட விட்டுவைக்கவில்லை. மலமேட்டு முனியை வேண்டிக்கொண்டே இறந்தவர்கள் ஏராளம். திரும்பிப்பார்க்காமல் வீடுகளிலிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடியவர்களில் அம்மாவும் ஒருத்தி. கள்ளுக்கடை தாண்டி ஓடிக்கொண்டிருக்கையில், அவளது தோளில் சாய்ந்துகிடந்தவன்,  தலையைத் தூக்கி உயர்ந்த மரங்களையும் சிதறியோடும் பறவைகளையும் அரைவட்ட நிலா வெளிச்சத்தில் பார்த்தேன். காடு வாயில் நெருப்பு கங்கத்துடன் யானையாக உருமாறியிருந்தது.

அவன் என் கைகளைப் பிடித்து, ஏன் உடல் இவ்வளவு சுடுகிறது என்றான். நரம்புக்கிளைகளில் ஓடிய யானை  மெல்ல என்னை விடுவித்தது. இப்போது  உடல்  குளிர்ந்திருந்தது. அந்தரத்தில் பேபி  சப்தமாக

பிளிறிக்கொண்டிருந்தது. குனிந்து அவனது இடுப்பை பார்த்தேன். சுருக்குப்பையில் தங்க நாணயங்கள் ‘க்லிங்’ என ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. அதனைப்பிடித்து ஆட்டிக்கொண்டே நான்,

“உனக்கு யானையை வசியப்படுத்தும் மந்திரம் தெரியுமா?”

“தெரியாது. உனக்கு ? …” என்றான்.

“தெரியும்… ஆனால் யானைக்கு முன் ஒரு உண்மை உண்டு. தான் யானையென தன்னையறிவது. அது தெரிந்துவிட்டால் எந்த மந்திரமும் யானையைக் கட்டுப்படுத்த முடியாது” என்று சிரித்தேன். மீண்டும் நாணயங்கள் ‘க்லிங்..க்லிங்’ என்றன.

அன்று அவனோடு ஏற்பட்ட பழக்கம், இருவரும் பல இடங்களில் ஒன்றாக வேலைப்பார்த்தோம். இறுதியாக இந்த அன்னாசி கிட்டங்கியில் வேலைப்பார்த்த காலத்தில்தான் ஜப்பானியர்கள் இங்கே நுழைந்திருந்தார்கள். வெப்பமும் நிழலும் சரிசமமாக இருக்க வேண்டிய வெப்பமண்டல பழம் அன்னாசி. இரப்பர் மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக அன்னாசியை விளைவித்து லாபம் கண்டு கொழுத்த வியாபாரிகளுள் எங்களது முதலாளியும் ஒருவர். அன்னாசிப்பழச் செடியில் துளிர்விடும் கூர்மையான இழைகளின் நார்கள், சீனப்பட்டு நெசவில் இடம்பிடித்த பழைய வியாபாரம் இப்போது இல்லை. நீண்டநாட்கள் கெடாமல் பதப்படுத்திய அன்னாசிப்பழதுண்டுகள் டின்களில் அடைத்து விற்கும் வியாபாரம் தற்போது கனஜோராக ஜரோப்பிய மார்கெட்களில் சூடுபிடித்துள்ளது. அன்னாசி டின்கள் ஏற்றுமதி செய்யும் வணிகம், ரப்பர் தொழிலுக்கு அடுத்தபடியாய் துரைமார்களுக்குக் கைகொடுத்தது. முன்பு கித்தா மரங்களுக்கு நடுவே ஊடுபயிரிலிருந்து மானாவரிப்பயிராக உயர்வு பெற்றது. முதலாளிக்குத் தனியாக அன்னாசிப்பழத் தோட்டம் செலதார் ஆற்றுப்படுகையில் மூன்று ஏக்கரில் இருந்தது. மூன்றடி இடைவெளி, இரட்டை வரிசையில் பொன்னிறத்தில் பழம், பச்சை தாழைகளுக்கு நடுவே கனிந்து கிடந்தது. கூர்மையான இலைகளும், பக்கவாட்டில் சிராய்வு முட்களுக்கும், பொன்னிறத்தில் காய்த்து செந்நீர் விடும் காய்களை அணில், பறவைகள் கடித்துவிடாமல் இருக்க அவன் வாழைப்பட்டை கொண்டு கட்டிவைத்துவிடுவான். பெருத்த பழங்களில்  இயல்பிலேயே நோய்எதிர்ப்பு சக்திமிக்க அமிலங்கள் நிறைந்திருப்பதால் இதன் மகசூல் குறைந்தபட்ச உத்திராவாதம் கொண்டவை. இருவரும் பழுத்த அன்னாசிப்பழங்களைப் பறித்து மாட்டுவண்டியில் ஏற்றி தெலோங் பிளாங்கா கிட்டங்கிக்கு ஏற்றிவருவதுண்டு. கிட்டங்கியில் தேங்காய் குவியலுக்கு அடுத்தாற்போல் மலைபோல் குவிந்துக்கிடக்கும் அன்னாசிப் பழங்களைத் தரம்பிரித்து ஹைஸ்த்தீரிட்டில் உள்ள கூகாய் கம்பெனிக்கு அனுப்பிவைப்போம்.

அவன் கிடைக்கும் ஊதியத்தில் சிறிது சிறிதாக சேர்த்து அடகு கடையில் தங்கநாணயங்களை வாங்கி சேமித்து வைத்திருந்தான். அவனது மனைவி பேரழகி. மெலிந்த உடல் தேகமும், வில்வளைந்த புருவமும், விரிந்த உதடுகளும், கார் குழலைமுடித்து சுற்றிய கொண்டையும், பேய்விரட்டும் மாதங்களில் போடும் சீனநாடகங்களில் வரும் ராணி கதாப்பாத்திரத்தை நினைவூட்டும். அவளின் குரும்பை மார்பு காண்பவர்களை வசியம் செய்தது. ஆற்றில் பிரம்பு கூண்டுவைத்து நண்டுகளைப்பிடித்து கம்போங்கில் விற்பாள். அவள் எந்த ஆணையும் சட்டை செய்ததில்லை. இன்னும் குழந்தையில்லையா எனும் உச்சிக்கொட்டும் ஆண்களின் கிண்டல்களைக் கூட இடக்கையால் புறந்தள்ளுபவளாக இருந்தாள்.

ஒருமுறை அவனது கம்போங்கிற்கு சென்றிருந்தேன். நாற்காலியில் சாய்ந்தவண்ணம் அவள் நேவிகட்டை புகைத்துக்கொண்டிருந்தாள். “வா… சாப்பிடுறாயா?” என்றாள். வீட்டுத்தாழ்வாரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பிரம்பு கூடையில் நண்டுகள் ஒன்றோடொன்று இழுத்துக்கொள்ளும் சத்தம், கூடையை உலுக்கிக்கொண்டிருந்தது. கடல் முகத்துவாரத்தில் பிடிப்பட்ட சைலா எனும் கொழுத்த நண்டுகள் அவை. தகுந்த தீனி கிடைக்காவிட்டால் ஒன்றையொன்று சண்டையிட்டு இறந்ததை மற்றொன்று உணவாக உட்கொள்ளும்.  நீண்ட குடைகம்பிபோல் கெத்தேம் குத்துக்கம்பியை விட்டு ஒரு நண்டை வெளியே எடுத்தாள். அதன் கால்களைக் கொடுக்குடன் சடம்பால் பின்னிவிட்டாள்.  அதன் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.

நுரைநொதித்துக்கொண்டிருக்கும் மேல் ஓட்டின் முனையில் மீண்டும் சிறிய குத்துக்கம்பியை விட்டு அழுத்தினாள். ஓடு  தனியாக பெயர்ந்தது. “..கொதிக்கும் நீரில் உயிர்நண்டுகளை போட்டு சாகடிப்பது ஒரு ரகம், ஆனால் சுவையிருக்காது ..” என உள்ளிருக்கும் கருப்பு மையைத் தன் விரலால் சுரண்டி, பூபோல் படர்ந்திருந்து உள்செதில்களை பிரித்தெறிந்தாள். தூக்கியெறிந்த செதில்களை வாசலில் மேய்ந்துக்கொண்டிருந்த கோழிகள் முகர்ந்து பார்த்தன. மூங்கில் பட்டிக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் வெள்ளைப்பன்றி, தன் குட்டிகளுக்கு பாலூட்ட குட்டிகள் முயங்கி வீச் வீச் என கத்திக்கொண்டிருந்தன. குத்துப்பட்ட நண்டின் உயிர் அடங்கியது. சுத்தம் செய்த சதைத்துண்டுகளை அடுப்பில் ஏற்றி இஞ்சி,பூண்டு துண்டுகளோடு வதக்கி ஊசிமிளகாய் தக்காளி சாஸ் விட்டதும் மணம் குடிசையை நிறைத்தது. பெயரென்ன ? என்றேன் சில்லிகிராப் என்றாள். இன்னொரு முறை கிட்டங்கிக்குச் சமைத்து எடுத்து வா என்றேன். சிலநேரம் எனக்கும் அவனுக்கும் சேர்த்தே உணவு எடுத்து வருவாள். 

சோதனைச்சாவடியில் முத்திரை தாள்கள் தீர்ந்து போனதால், வரிசையில் நின்றவர்களின் உடம்பில் சாப் அடித்தார்கள். அதை அவ்வப்போது அழிந்துவிட்டதா என ஆடையை விலக்கிப் பார்த்துக்கொண்டார்கள். கம்யூனிஸ்ட்கள், ஜப்பானியர்களுக்கு எதிராக உளவு பார்ப்பவர்கள் என தரம்வாரியாக முள்வேலி முகாம்களில் சலித்தெடுக்கப்பட்டவர்களில் உடலில் பச்சைக்குத்தியவர்களும், ஆங்கிலம் எழுதப்படிக்க தெரிந்தவர்களும் உள்ளடக்கம். முகாம்களில் ‘களை’ என அறியப்பட்டவர்களை தாங்கிய வாகனம், சாங்கி, பிடோக், பொங்கோல், காத்தோங், தானே மேரா, ப்ளாகாங் மத்தி கடற்கரைக்கு சென்றன. லாரியிலிருந்து இறக்கிவிடப்பட்ட கைதிகள் பின்னால் கைகளைப் பிணைத்துக்கொண்டு கடலுக்குள் இறங்கி மரணத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். மரணம் கடலைப்போல் விரிந்தது. புல்லட் குண்டுகள் அவர்களைக் கடலின் மேற்பரப்பில் பிணங்களாக மிதக்க வைத்தன.

அவனுக்கு இங்கே ஜப்பானியர்களால் உருவாகியிருக்கும் அசாதரண சூழல் குறித்து பெரிய அச்சமிருந்தது. ராணுவத்திடம் எப்படியும் சிக்கலாம். அப்படி சிக்கினால் கையிலிருக்கும் தங்கநாணயங்களை லஞ்சமாக கொடுத்து தப்பித்துக்கொள்ளும் யோசனை இருந்தது.  இருவரும் இரவே வசிக்கும் கம்போங்கில் தப்பித்திருந்தனர். தெருவில் சிக்கியவர்கள் – ஜப்பானியர்களுக்கு மரம் ஏற தெரியாது என காட்டுமரங்களில் ஒளிந்துக்கிடந்தவர்கள் என தேடிப்பிடித்து ராணுவத்தினர் வாகனங்களில் ஏற்றினார்கள். முரண்டுபிடித்தவர்களை அதே இடத்தில் சுட்டுப்பொசுக்கினார்கள்.

அன்றிரவு, அவனும் அவனது மனைவியும் கம்போங்கிலிருந்து தப்பித்துக் கிட்டங்கிக்குள் பதுங்கிக்கொண்டார்கள். தனிமரமாக நான் கிட்டங்கிக்குள்ளே வாழ்வதால் அவர்களுக்கு அந்த யோசனை பிறந்திருக்கலாம். இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. தோட்டத்திலிருந்து வந்த தேங்காய்களும், அன்னாசிப்பழ குவியல்களுக்கு பின்னால் விரிப்பில் படுத்துறங்கும் இருவருக்கும் தேவையான உணவுகளை அவ்வப்போது வெளியிலிருந்து வாங்கிக்கொடுத்து விடுவேன். வெளிச்சூழலை அவ்வப்போது கவனித்து  இருவருக்கும் தெரிவித்துக்கொண்டிருந்தேன். ஐஎன்ஏவில் சிலர் எனக்கு பழக்கம் என்பதால், வெளியே போய் வருவதில் சிக்கல் ஏதுமில்லை. தங்குதடையின்றி கிடைக்கும் தகவல்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டேன்.

இரவு சாப்பிட்டு விட்டு, கிட்டங்கிக்குப் பின்னால் இருந்த குட்டையருகே அமர்ந்திருந்தேன். சாராயம் இருக்கா என்றாள். “ம்ம்” என்றவனாக சந்தையில் வாங்கி வைத்திருந்த சாராய கேனை எடுப்பதற்காகச் சுவரில் இருந்த தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு அறைக்குள் நடந்தேன். ஏதோ ஒரு அமைதி பனிப்போல் என்னிடம் உறைந்திருப்பதாய் அவள் உணர்ந்தாள். கிட்டங்கியின் பழைய இரும்பு பொருட்கள் கிடக்கும் அறைக்குள் நுழைந்ததும், பின்னால் வெளிச்சத்தில் மற்றொரு உருவம். திரும்பி பார்ப்பதற்குள் முதுகுக்குப் பின்னால் என் தோள்களின் மீது ஏறி தழுவிக்கொண்டாள்.. காது மடல்களைக் கடித்தவள், பின்பு முன்பக்கமாய் பரவி உதட்டை கவ்விக்கொண்டு, மூர்க்கமான காட்டெருது பாய்வது போல் என் உடல் மீது முழுவதுமாக அவள் விசையை செலுத்தினாள். சட்டை பிளவுகளில் தெரிந்த அவளது மார்பில் புழுப்போல் நான் ஊர்ந்துபோக ஆரம்பித்ததேன். உடல் பின்னி இழையோடிய அசைவுகளின் மூலம் அறையில் கிடந்த அடுக்கிவைக்கப்பட்டிருந்த இரும்பு டின்கள் உருள ஆரம்பித்தன. ‘ஷ்ஷ்..’ என என் வாயைப்பொத்தியவள், அவன் அமர்ந்திருந்த கிட்டங்கியின் முகப்பு அறை நோக்கி விரலை நீட்டினாள். என் காதில் மீண்டும் மெலிதாய்க் கடித்துவிட்டு, ‘ஆடைகளை சரிசெய்தவள், ஏறிட்டு பார்த்தாள். நான் பதில் ஏதும் கூறாமல் முதுகை திருப்பி மறுபக்கம் படுத்தேன்..

கேனில் இருந்து ஊற்றிய சாராயம், நெளிந்த மூன்று தகர டம்ளர்களிலிருந்தும் நெடி தூக்கலாக வர ஆரம்பித்தது. நான் மூக்கைப் பிடித்துக்கொண்டே ஒரு மிடறு அருந்தியவன், நறுக்கிய அன்னாசித் துண்டுகளில் ஒன்றை எடுத்துக்கடித்தேன். கிட்டங்கி சுவரில் மாட்டப்பட்ட தீப்பந்தம், பெரிய மஞ்சள் ஒளிவட்டத்தை அன்னாசிப் பழங்களுக்கு நடுவே அமர்ந்திருந்த மூவரையும் நோக்கிக் குவிந்திருந்தது.”..நீ கூறிய மமாரு ஷினோஷாகி சாப் விஷயம் உண்மையா” என்று ஜப்பானிய வெளியுறவு அதிகாரி பற்றிக் கேட்டான். அவரைப்போய்ச் சந்தித்தவர்களை வகைதொகை பாராமல் நற்குடிமகன் சான்றிதழை வழங்கிக்கொண்டிருந்தார். வாயில் இருந்த டம்ளரை தரையில் வைத்துவிட்டு ‘ம்’ என ஆமோதித்தேன். “..அப்படியென்றால் நாம் காலை இருவரும் அங்கே போய்ச்சேர்ந்துவிடலாம்” என அவளிடம் நம்பிக்கையுடன் கூறினான். நீண்டநாள் கிடப்பு சாராயம் என்பதால் நெடி அதிகம். இருவரின் முகமும் செந்நிறமாக மின்னியது. அவனே என் மெளனத்தை உடைப்பது போல் ஆரம்பித்தான். கையில் டம்ளரை எடுத்தவன், “என்னை சந்தேகிக்காதே.. நான் கம்யூனிஸ்டும் இல்லை… துப்புக்கொடுக்குற உளவாளியும் இல்லை… கிடைத்த காசையெல்லாம் கொஞ்சம் தங்கமா மாத்திவச்சிருக்கேன்…” என பையில் இருந்த மூங்கில் உருளையை உலுக்கி காண்பித்தான். உருளையான மூங்கிலில் ஒரு நாணயம் நுழையுமளவு துவாரம் தெரிந்தது. உள்ளே தங்ககாசுகள் குலுங்கின. “இவளைப்பார்… இவளுக்காகத்தான் நான் பயப்படுகிறேன். இவளைப் பார்த்தால் அவனுங்க சும்மா விடுவானுங்களா?” என்றான். நானும் ஆமாம்வென தலையாட்டி ஆமோதித்தேன். இடப்பக்கம் அமர்ந்திருந்தவள், “..உன்னை தான் மலை மாதிரி நம்பியிருக்கேன்” என அவள் கையைப்பிடித்தாள். மிருதுவான அவளது விரல்கள் எனது மணிக்கட்டை ரகசியமாக வருடின. அவன் முகத்தையும் பார்த்தேன். பின்பு அவள் விரலிடுக்கில் இருந்த நேவிகட் சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு எழுந்தேன். இருவரும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கிட்டங்கிப்பின்னால் இருக்கும் குட்டையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தேன்.  கிட்டங்கி பக்கவாட்டு சுவரில் தீப்பந்தங்களுடன் பூட்ஸ் கால்கள் ஏறிகுதிக்கும் சப்தம் கேட்டது. இருவரும் பயந்தவர்களாக மீண்டும் தேங்காய் மண்டிக்கு பின்னால் ஓடினார்கள்.

                                                                                          ***

கிட்டங்கியின் பின்னாலிருந்த பாழடைந்த குட்டையில் பெரிய பாறாங்கல், தவம் போல் மூழ்கி கிடந்தது. சமீபத்தில் பெய்த மழையில் பக்கவாட்டு சுவரிலும், குட்டையிலும் பச்சைப்பூஞ்சைகள் படர்ந்து கிடந்தன. மவுண்ட்பேபர் மலையை வாய் பிளந்து பார்த்தாற் போல் கிடக்கும் கல்லுக்கு வயது பல நூற்றாண்டுகள் கூட இருக்கலாம். நீர்வட்டத்திற்கு மேலே தெரியும் அதன் கரியதலை, நீருக்குள் இறந்து கிடக்கும் ஒருவனின் உச்சிமண்டை நட்டிக்கொண்டிருப்பதை நினைவூட்டுகிறது. கிட்டங்கிச் சுவரில் ஈரம், ஒழுங்கற்ற ஓவியங்களாக பச்சைப் பூஞ்சணம் பூத்துக்கிடந்தது. ‘சலக்’ என ஒரு தவளை குட்டையில் எகிறிக்குதிக்க , என் நினைவைக் கலைத்துப்போட்டது.

மீண்டும் மூழ்கிகிடக்கும் கல்லை நோக்கி மனதை ஒருமுகப்படுத்தினேன். மரத்திற்குக் கீழே உதிர்ந்த மாம்பூக்கள் போல் கலைந்து கிடந்த பாசிப்பூஞ்சைகள் ஒன்றையொன்று விலகிச்செல்ல ஆரம்பித்திருந்தன. மீண்டும் மீண்டும் கொய்யப்பட்ட அவனது தலை நினைவுக்கு வருகிறது. அப்பாவியான முகம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.

எண்ணம் முழுதும் உயிரோடு பிடித்துப்போன அவளை என்ன செய்திருப்பார்கள் என்பதிலேயே குத்திநிற்கிறது. இருவரும் பிடிபட்டபோது ராணுவத்தில் கெம்பித்தாய் ஒருவன், தரையில் அழுதுக்கொண்டிருந்தவளை முழங்காலிட்டு, கையால் அவள் முகத்தை ஏந்தியவன் – அன்னாசிப்பழ கசடு ஏறிய அவள் கன்னங்களை நக்கினான். பலமாய்ச் சிரித்தவன், சிப்பந்திகளைச் சைகை காட்டி உயர்அதிகாரிகளின் ஜீப்பை நோக்கி அவளை இழுத்துப்போகக் கூறினான். ஆழ்ந்த மெளனமாய் அவளது மிச்ச சிகரெட்களை புகைத்துக்கொண்டிருந்த என்னை காறி உமிழ்ந்து விட்டுப்போனாள். இத்தனை வருடங்கள் ஓடியும் மாறாக்காட்சி.

ஏதோ நினைவுவந்தவனாய் குட்டைக்குள் தாவிக்குதித்தேன். நீர்வட்டத்தை பிளந்து கொண்டு நீரின் அடியாழம் வரை மூச்சடக்கி தேடினேன். ஏதும் தட்டுப்படவில்லை. மீண்டும் மூச்சடக்கி உள்ளே சென்றேன். மூழ்கிக்கிடந்த கல்லின் அடியில் கிடைத்தது. கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு தரையில் அள்ளிப்போட்டேன். உடைந்த கண்ணாடித்துண்டுகள் கையைக் கிழித்தது. அதனோடு கிடைத்த மூங்கில் உருளை உருண்டோடியது. முழுதும் பச்சையாக மாறிவிட்ட உருளையைத் தரையில் உடைத்தேன். தங்க நாணயங்கள் இரத்தம் தோய்ந்த எண்ணற்ற சித்திரங்களை வரைந்துக்கொண்டே, கிட்டங்கி உள்ளறைக்குள் ஓட ஆரம்பித்தன.

  • கெம்பித்தாய் – ஜப்பானிய ராணுவ அதிகாரி
  • சாப் – முத்திரை
  • ஐஎன்ஏ – இந்திய தேசிய ராணுவப்படை
  • கம்போங் – கிராமம்

கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரியாஸ் (புதுக்கோட்டை மாவட்டம்)  தொழில்நுட்ப துறையில் 9 ஆண்டுகளாக சிங்கப்பூர் வங்கியில் பணிபுரிகிறார்.வாசிப்பின் அவசியம் புரிய தொடங்கிய காலத்திலிருந்து எழுதவும் தொடங்கினார். இவரது சில சிறுகதைகள் தமிழ்முரசிலும் சிராங்கூன் டைம்ஸிலும் வெளிவந்துள்ளது.

முகநூல் https://www.facebook.com/mohamed.riyas.393

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...