ஜன்னலில்லாத மேல் அறையின் விரிப்பு மெத்தையில் அவன் படுத்த முதுகுப்புற இடவின் வியர்வைக்கோடு அழுந்தியிருந்தது. அழுக்காயிருந்த தலையணை உறையில் முகம் புதைத்தபடி இருந்தான். ஏதோ கருகி மணக்கும் வாசனை கும்மென்று அடைத்த போது இதற்கு முன்னர் தெருவில் யாரோ கொதிக்கும் என்ஜின் எண்ணெய்யை ஊற்றிய நாய் துடிதுடித்த போது பொசுங்கிய மயிர்த்தோலின் வாசனை அவனுக்கு நினைவுக்கு வந்தது.
ஜன்னலைப் பொருத்த அளவெடுத்து விடப்பட்ட கற்சுவரின் திறந்த பகுதியிலிருந்து காற்றுக்கு வெடவெடன ஆடுகிற துண்டுச் சீலையில் பல்லிகள் ஓடின. அவனுக்குத் தெரிந்து அவனது பாடசாலை இலவச சீருடைக் கால்சட்டைத்துணியது. அவன் உம்மாதான் மிச்சமாகக்கிடந்த துணியைக் காலை வெயில் தெரியாமல் சுருண்டு படுக்காதேயென்று கட்டிவிட்டிருந்தாள். டேபிள் ஃபேனும் கழுவாத தேநீர்க் கோப்பையுடன் சிகரட் பெட்டியின் உள்ளே பாதி திறந்த ஈயத்தாளில் சிந்திய புகையிலைத் துருவல்களும் மெத்தையும் மட்டுமிருக்கும் பூச்சிடாத அறையில் குண்டு பல்பு ஒரு மூலையில் வயரோடு தொங்கும். செருப்பு சோடி கிடக்கும் மூலையில் தும்புத்தடி தேய்ந்த மீதி தும்புகளை பொறுக்கி கூடு கட்ட காகம் நடந்து வரும்.
அவன் தங்கைக்கு திருமணமானதில் மச்சானுக்கு அசௌகரியமாயிருக்குமென்று மேல் தட்டில் இருந்த ஒரே அறைக்கு தகட்டு கதவொன்றை மாட்டி செட்டிலாகியிருந்தான். கீழே நின்ற முருங்கை மரத்தின் கிளைகள் மின்சார வாரியத்திடமிருந்து தப்பி மேல் தளத்து தகட்டு கதவை மூடி செறிவாய் வளர்ந்திருந்தன.
அவன் தெருவில் இரவில் மாட்டுப்பட்டியொன்றை யாரோ சாய்த்து மேய்த்துச் செல்லுகிற காலடிச்சத்தங்கள் நெருங்கி வருவது போல அவனுக்கு கேட்டன. பட்டியென்றால் இருநூறு மாடுகளாவது இருக்கும். ஒன்றை ஒன்று நெருக்கி மோதுவதும் கத்துவதும் காதைப்பிளக்கும். இதற்கு முன்னரும் பலதடவை கேட்டதுண்டு. இம்முறை மணிச்சத்தம் கிண் கிண்ணென்று காதைத்துருத்தின. மாடொன்று வீதியோரம் மண்டியிருக்கும் புல்லை எப்போதாவது தின்ன வருவதையே ஆர்வத்தோடு பார்க்கிற நகர்ப்புற தெருவில் இரவில் யாரும் மாட்டுப்பட்டியைச் சாய்க்க வாய்ப்பே இல்லை. மாட்டுப்பட்டிகளைப் பார்க்க வயல்புறமாகப் பல மைல்கள் செல்ல வேண்டிய ஊரில் இரவில் எப்படி ஒரு பட்டியும் மேய்ப்பனும் ஹேய், ஹு வெனும் விரட்டலையும் கேட்க முடியும். காலை எழுந்து பார்த்தால் மாட்டுச்சாணியோ கால்தடங்களோ எதுவுமே இருக்காது. இம்முறை அவனுக்கு நடுக்கம் அதிகமாகி, தெரிந்த குர்ஆன் வசனங்களை ஓதியப்படியிருந்தான்.
பட்டி தொலையக்கேட்டதும் ஜன்னல் சீலையை உதறி கீழே பார்த்தான். காற்று வீசாத நிலவு நாளில் தெருச்சந்தி மட்டுமல்லாது மற்றைய ஒழுங்கைகளும் அழகாக தெரிந்தன. நயிமாவின் பொது மதிலுக்கு அப்பால் பூனைகள் வரிசையாக படுத்திருந்தன. தெருச்சந்தியிலிருந்து தொங்கும் மின்விளக்கின் மேல் தொங்கவிடப்பட்ட பழைய இரப்பர் கலனின் மேல் ஒரு காகம் நிற்பதைப் பார்த்தான். வழக்கமான காகங்களை விடவும் அளவில் பெரியதாயிருந்த அந்த காகத்தின் கண்கள் சற்று பிரகாசிப்பது தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக எங்கிருந்தோ வந்த நாய்கள் கூட்டம் கூட்டமாக அமைதியாகக் கீழே சுற்றி நின்று அந்தக் காகத்தையே பார்த்து நின்றன. சிறியதும் பெரியதுமாக கிட்டத்தட்ட அக்கறைப்பற்றிலிருந்த எல்லா நாய்களும் கூடிவிட்ட தெருவை விறுவிறுக்கச் சிமிட்டாமல் பார்த்தது மட்டும்தான் நினைவிருந்தது. காலையில் முகம் கழுவும் போது அவன் உம்மாவும் ஏதோ வழக்கமான சங்கதி போல அது காவல்காரன் டா தம்பி என்று விட்டுவிட்டாள்.
அவனுக்குத் தெரிந்து அந்த தெரு திரும்பி சந்தியில் ஒரு ஒழுங்கையோடு முடியும் இடத்தில் பெரிய வளவு உண்டு. இரவு நேரத்தில் சத்தங்கள், ஊளைகள், பெண் முனகல்கள் என கேட்பது சாதாரணம். தெரு திரும்பும் இடத்திலிருந்து முதல் இருவீடுகளும் ஒரு காலத்தில் ஒரே பெரிய வளவாக இருந்த போது பரிசாரியால் காவலிடப்பட்டிருக்கின்றன. மந்திரங்களை அச்சிரத்தகட்டில் எழுதி போத்தலில் போட்டு நான்கு மூலைகளிலும் புதைத்துவிடுவதாகப் பெரியவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறான். அப்படிக் காவலிடப்பட்ட வளவுகளைத் தீயச் சக்திகளோ சூனியமோ செய்வினையோ அண்டாது. இரவு நேரங்களில் அந்த வளவுகளில் வெள்ளை பெனியன், சாரம் உடுத்த பெரியவர்கள் நிற்பதைப் போல உருவங்களைப் பலரும் கண்டிருந்ததாகச் சொல்லியிருப்பர். அப்படிக் காவலிடப்பட்ட வளவுகள் உள்ள இடங்களில் அதற்குப் பக்கத்து வீடுகளில் இப்படியான மாட்டுப்பட்டி சத்தம், மாட்டுவண்டியின் சத்தம், சைக்கிளை மிதிக்கிற சத்தமெல்லாம் கேட்பது வழமையாயிரு..க்கும். காவல் செய்த வளவுகளிலிருந்து பக்கத்து வளவுகளுக்கு இரவு நேரத்தில் கல்லும் மண்ணும் வீசப்படுவது அடிக்கடி நடக்கும்.
“மசாகினாத்தாட்ட நம்முட தகட்டு பெரல் கெடக்குது. கண நாளாய் பெய்த்து, அவ வாங்கிட்டு போய். போய் வாங்கிட்டு வாடா தம்பி…” உம்மா அவசரப்படுத்தினாள். வேலை கிடைக்குமட்டும் இத்தியாதி ஏவல் சேவைகள் இருக்கத்தான் செய்யுமென்று கிளம்பினான். மசாகினாவின் பழைய வீட்டில் அவள் உம்மா வெளி விறாந்தையில் காலாற சாய்ந்திருந்தாள். வயது மூப்பில் மெலிந்து ஒரு குழந்தையாய் மாறியவளைக் கண்டதும் பாவமாயிருந்தது. முன்னரெல்லாம் சாந்தா மாமிட்ட பால் பழம் குடிக்க ஆர்வமாகப் போவான். விறாந்தையில் வரிசையாகக் குடிக்க பிள்ளைகள் அமர்ந்திருப்பர். பிறந்து இறந்த குழந்தைகளின் ஞாபகார்த்தமாகத் தேங்காய் பால், பவுடர் பால், வாழைப் பழம் ஈச்சம் பழம் கலந்து பால் பழம் டம்ளரில் குழந்தைகளுக்கு கொடுப்பர். குடிக்கும் பிள்ளைகளின் முகத்தில் இறந்த பிள்ளைகளின் சிரிப்பை காணமுடியும் போல அந்தத் தாய்மார்களுக்கு. ஆறு பிள்ளை பிறந்து இறந்து ஏழாவதாக மசாகினா பிறந்த கதை அவனுக்கு தெரியும். சாந்தா மாமியிடம் பேச்சுவாக்கில் காவல்காரச் சங்கதியையும் கேட்டுப் பார்த்தான். சுருங்கிய வெள்ளைத்தோலோடு மாமியின் கைகளைத் தடவியபடி மாமியிடம் நயீமாவின் வளவுக்கு ஏன் காவல் போட்டார்களென்று கேட்டான். வெள்ளைப்புடவையிலிருந்து நடுங்கிய குரலில் சாந்தா மாமி சொன்னதைக் கேட்டான்.
நயீமாவின் மூத்தப்பா மம்மாதம் பொடியார் ஒரு பரிசாரி. அந்தக் காலத்தில் செய்வினை செய்வது, குறி பார்ப்பது, அங்கம் ஏவி ஆளைக் கொலை செய்வதெல்லாம் பிரபல்யமாம். வாழை மடலில் மல்லிகைப்பூ, செப்புச்செம்பு, சோளம் பொறி, வாழைப் பழம் வைத்து மடைவைத்து மந்திரமோதி உருவேற்றி அங்கம் ஏவினால் அது நெருப்பு போல ஏவியவரைத்தேடிப் போய் கொல்லுமாம். சும்மா இருந்தவரை அங்கம் ஏவிக்கொன்றுவிட்டார்களென்று தெருவுக்கு ஒரு ஆளாவது அப்படி இறந்தவர்கள் இருக்குமாம். இப்படி ஏவுவது அங்கம் பண்ணுவதற்கென்று நெடியவன் என்று ஒரு பரிசாரி அப்போது படுபிரபல்யம். அதிலும் பெண் வசியத்தில் ஆள் உத்தரவாதம் எப்போதும் தவறியதில்லை. வசியம் பண்ணவேண்டிய பெண் உபயோகப்படுத்திய துணியில் குங்குமப் பூ மையால் மந்திரத்தை எழுதி வெண் குங்கிலிய தூபம் போட்டு அந்த துணியால் ஒரு விளக்குத்திரியை உருவாக்குவார். அந்த விளக்குத்திரியாலான அகல் விளக்கை ஆலிவ் நெய்யூற்றி எந்த பெண் யாருக்கு வசிய வேண்டுமோ அதை மெதுவாக உச்சரித்தவாறு இரவு நேரத்தில் அவள் தூங்கிய போது விளக்கேற்றி வரவேண்டும். திரி முழுதாக எரிந்து முடியும் வரை இதைச் செய்ய திரியின் நூல் முடிவதற்குள் ஆள் வசியமாகிவிடுமாம். அந்தக் காலத்தில் இப்போதிருக்கும் அக்கறைப்பற்று போல சனத்திரள் இல்லை. குறுகிய சந்துகளோ நெருங்கிய வீடுகளோ இருக்கவில்லை. போடியார்களின் பண்ணைகளுக்கு மம்மாதம் பொடியார் காவலிடுவதும் தொழில் பொறாமையில் வேறு யாராவது நெடியவனைக்கொண்டு காவலை வெட்டுவதும் அடிக்கடி நடப்பதுண்டு. நெடியவனும் அவர் மருமகனான திருஞானமும் மம்மாதம் பொடியாருக்குத் தொல்லை கொடுத்து வந்ததைக் காவல் போட்டு மறுநாளே வளவுகளின் மூலைகளில் இறந்து கிடக்கும் நீல நிறமான பெரிய காகங்கள் கட்டியம் கூறின. இவர்களுக்கிடையான போட்டியை ஊரிலிருந்த போடியார்மார்களே தூண்டிவிட்டனர். காலம் போகப் போக மம்மாதம் பொடியாரின் காவல் பலமற்றுப் போனதாக மக்கள் எண்ணத்துவங்க நொந்து போன அவர் தன் வாழ்நாளில் கற்ற முழுவித்தைகளையும் தாந்திரீகத்தையும் கொண்டு தானிருந்த வளவையே வலுவாகக் காவல் பண்ணினார். மறுநாளே இறந்தும் போனார். இந்தக் காவலை வெட்டவென நெடியவனும் திருஞானமும் எவ்வளவோ முயற்சி பண்ணிப்பார்த்தனர். ஆயிரத்து நூற்றி இருபத்தாறு மஹாதெய்வங்களின் மந்திர யந்திர மூலிக ஆவாஹனத்தையும் அதன் அதிசக்தி வாய்ந்த அஞ்சன மகா மந்திர வித்யையையும் ஏவிப்பார்த்தனர். நயீமாவின் வளவைத்தாண்ட முடியாமல் உருவேற்றம் பண்ணியதெல்லாமே அலைந்து திரிந்தன. இன்றும் திரிகின்றனவென சாந்தா மாமி சொன்ன கதைகள் அவனை துன்புறுத்தின. மம்மாதம் பொடியாரின் காவல்காரனைப் பார்த்து விடுவதென்று இரவெல்லாம் காத்திருந்தான். இறைச்சி கழுவியத் தண்ணீரை வாளியில் வைத்து ஜன்னலோரம் ஒட்டுக்கேட்டு யாராவது குடிக்கிறார்களா எனப் பார்த்தான்.
பெரிய காகங்களோ வெள்ளை பெனியனோ எதுவுமே தென்படவுமில்லை. இப்போதிருக்கும் பரிசாரிகளைப் போய் பார்த்தான். அவர்கள் மூலிகை பவுடர்களோடு தேன் தடவிக்கொடுக்கிற ஆசாமிகளாகவிருந்தனர். வேறெந்த சரக்குமில்லை. சாகாமத்தில் யாரோ ஒரு சாமியார் இருப்பதாக கேள்விப்பட்டுப் போனான். சங்கமன்கண்டியில் கருநாக்கு கிழவியிடம் கேட்டுப் பார்த்தான். கதிர்காமம், ஜெய்லானி, புங்குடுதீவென்று நாடெல்லாம் சுற்றினான். அவனுக்கு ஆபத்தில்லாத வரை அவன் அதை தேடுவதோ வெட்ட முயற்சிப்பதோ கூடாதென்பதைத் தான் எல்லோரும் சொல்லியிருந்தனர். அன்றைக்கு மின்விளக்கில் காகத்தின் வடிவில் உருவேற்றி இருந்ததை காவல்காரனின் உத்தரவுப்படி நாய்கள் குழுமி விரட்டியதாய் நம்பினான். காவலை வெட்டப் போனால் காவல்காரனை பார்த்துவிடலாம் எனத்தேடினான். மாந்திரீக தாந்திரீக முறைகளை பயின்று செய்து பார்த்தான். வீட்டில் சாப்பிடாமல் பச்சத் தண்ணீர் கூடக்குடிக்காமல் சடைவளர்த்தான். அவன் உடம்பில் வெண்குங்கிலிய வாசமடித்தது. குதிரை லாடத்தின் குறியீட்டைத் தகட்டுக் கதவில் எழுதி வைத்தான். இவன் போக்கைக் கண்ட தங்கையின் கணவர் ஒரு நாள் இவனை விரட்டி விட்டார். இவனால் தனக்கும் பிள்ளைகளுக்கும் கெடுதல் வந்துவிடுமென்று அஞ்சினார். உம்மாவாலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவள் அழுதாள். ‘ஆபத்து ரொட்டி’ சுட்டு நோன்பிருந்தாள். அவன் போக்கு மாறவே இல்லை.
***
சங்கமன்கண்டியில் புதிதாக வந்த பரிசாரியைப் பார்க்க காலையிலேயே சனம் குவிந்துவிடும். பரிசாரி அறைக்கு வெளியே கிரவல் மண் போட்டு உயர்த்திய தகட்டுக் கொட்டிலில் வரிசையாகக் கதிரையில் பலரும் காத்திருந்தனர். வெட்ட வெளியான காட்டுப்பகுதியில் உயர்ந்த மரமொன்றை ஒட்டியே பரிசாரியின் அறை இருக்கும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குப் பரிசாரி நடமாடுவதோ குளிப்பதோ தெரியாதவாறு பற்றை வளைத்து மண்டியிருக்கும். பரிசாரி வளவுக்குள் குறு ஆட்டுப்பட்டியும் நான்கைந்து கோழிகளும் மேயும். தண்ணீர் குடிக்க வைக்கப்பட்ட பெரிய தாங்கியின் கீழே தேங்கியத் தண்ணீரைக் குடிக்க கீரிப்பிள்ளை நரியெல்லாம் ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் வந்து போகும். அந்த உயர்ந்த மரத்தில் எப்போதும் ஒரு பெண் மயில் இருப்பதை பரிசாரியின் சக்தியென பலரும் நம்பத்துவங்கினர். வெயில் ஏறிய மஞ்சளில் கண்கள் சுழன்ற மயக்கத்தில் தன் மகனுக்காக உம்மா வந்திருந்தாள். மகன் போய் பதினொரு வருடமாகிவிட்டது. அவன் இருக்கிறானாவென்றே தெரியாததில் அவள் என்னவெல்லாம் செய்து தேடிப்பார்த்தாள். திக்வெல்லையில் வாப்பாவின் கூட்டாளி வீட்டுக்கு, மாதுறு ஓயாவில் இளையம்பி மாமா வீட்டுக்கு ஆள் அனுப்பி தேடிப்பார்த்தாள்.
“இளயம்மாட ஓடிப்போன பொடியன் எங்கயாம் டி”, என அவள் காதுபட பலரும் பேச ஆரம்பித்தனர். மகனைத் தேடி குறி பார்க்கலாமென்று சங்கமன்கண்டி வரை வந்திருந்தாள். எண்பத்தி நாலாம் நம்பராம். இப்போது தான் பதின்மூன்றாம் ஆள் உள்ள போயிருக்கிறதாம். கேட்டுத் தெரிந்து கொண்டாள். அங்கு வசியம் பண்ண, செய்வினை வைக்க, தாயத்து கட்ட, தந்திரக் கட்டு கட்டி பணம் வசியம் செய்ய, ஏவல், திருஷ்டி, சூனியத்திலிருந்து விலகவென பலரும் வந்திருந்தனர். இளையம்மாவின் நேரம் வரும் போது உள்ளே இருந்த ஒரு ஆள் வெளியே வந்தான். பெரும்பாலும் பரிசாரிக்கு சேவகம் செய்கிற அஸிஸ்டென்ட் ஆக இருக்கலாம்.
“ஒங்கொள பரிசாரி பாக்க மாட்டாராம். ஒங்க மகனோட எண்ணம் நிறைவேறினதும் அவரே ஒங்கொள தேடி வருவார். போய் வாங்கோ” என அடுத்த இலக்கமான எண்பத்தி ஐந்தைச் சத்தமாகச் சொன்னார்.
“வாப்பா, எண்ட மகன் எங்க எண்டு சொல்லுங்க மன, எண்ட சீதேவி, அவன கண்டுபுடிச்சி குடுங்க மன “
என உம்மா அழுதபடி வெளியேறியதை அவன் அறைக்குள்ளிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தான். தாந்திரீகத்துக்காகச் சங்கமன்கண்டியை தேர்ந்தெடுத்ததற்கும் ஒரு காரணம் இருந்தது. சங்கமன்கண்டியில் பெருங்கற்கால நாகர்களின் வழிபாட்டுத்தலங்களும் கல்லறைகளுமிருந்தன. பாறைகளில் குடையப்பட்ட நேர்த்தியான குழிகளில் ஆங்காங்கே தெரியும் நடுகற்களில் பூக்களை வைத்து வழிபாடுகளைச் செய்தான். கறுப்புக் கோழி, வெந்தயம் அகில் தூபம் வைத்துச் சடங்கு செய்தான். கி.மு மூன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் பேசிய நாகர்களின் ஈமத்தலங்களில் பிற இடங்களிலும் உலாவும் அதிஅற்புதமான மறைசக்திகளை திரட்டி மம்மாதம் பொடியாரின் காவலை வெட்டுவதையே எதிர்பார்த்திருந்தான். முஸ்லிம் தாந்திரீகத்தை இப்போது யாரும் நம்புவதில்லை. அதனால் அதனைச் செய்பவர்கள் அரிதாகிவிட்டிருந்தனர். அவனோ எல்லா மாந்திரீகத்தையும் கற்றுத் தேர்ந்தான். மகம் நட்சத்திரமும் பூராடன நட்சத்திரமும் பொருந்தி வரும் மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும். அந்நாளைக் காவல் வெட்ட குறித்திருந்தான்.
***
முன்னரைப் போல தெருவில் நாய்கள் நடமாட்டம் இருக்கவில்லை. மணல் தெருவாய் இருந்த இடம் கொங்கிறீட்டு தெருவாக மாறி இருமருங்கிலும் நீர்தேங்கி பாசி ஏறியிருந்தது. வீட்டை எட்டிப் பார்த்தான். முருங்கை மரத்தை வெட்டிவிட்டார்கள். குதிரை லாடமோ தகட்டுக் கதவோ இல்லாமல் மேல் தளம் முற்றாக மாறி அறைகள் முளைத்திருந்தன. நயீமாவின் வளவைப் பார்க்காமல் கிழக்கு பார்த்து ஒரு செங்கல்லால் ஒரு குறியீட்டை வரைந்தான். இரண்டு பெரிய கோடுகள் கிழக்கு மேற்காக வடக்கு தெற்காக வரைந்து மேற்கு முனையில் ஒரு தளம் வரைந்துவிட்டான். மற்றைய எல்லா முனையிலும் வட்டமொன்றை வரைந்து மாட்டுக்கண்களை அதில் வைத்து மேற்கு தளத்தில் அமர்ந்து கொண்டான். கறுப்பு கோழியொன்றை மகாமகத்தின் நட்சத்திரத்தை பார்த்து அறுத்துக் கோடுகள் இடைவெட்டும் நடுவில் வைத்தான். ஒலிவ் குப்பி விளக்கைக் கையில் ஏந்தி மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தான். யாரோ அலறுகிற, பெண் முனகுகிற சத்தங்கள் கேட்டன. பெரிய காக்கைகள் தாழப்பறந்து வட்டமடித்தன. உச்சாடனம் சத்தமாக ஆரம்பித்ததும் காக்கைகள் தலையைக்கொத்தவும் உடலை நகத்தால் விறாண்டவும் செய்தன. உச்சாடனத்தை நிறுத்தாமல் எலுமிச்சை இரண்டு வெட்டிக் குப்பி விளக்கின் மேல் பிழிந்தான். மந்திரத்தை ஓதினான். கால்தடங்கள் கேட்டன. காவல் வெட்டுவதைக் குழப்ப எதுவேண்டுமானாலும் நடக்குமென்று அறிந்திருந்தான்.
“வாப்பா, சீதேவி, வா மன வீட்ட. நமக்கு இதுகள் தேவல்லடா தம்பி..” என உம்மாவின் குரல் கேட்டது.
“மச்சான், என்ன மன்னிச்சு ஊட்ட வாங்கோ, தங்கச்சி அழாத நாளே இல்ல…” என மச்சான் கெஞ்சுவது போலக் கேட்டது.
“மகன், தங்கம், என்ட மௌத்தான புள்ளைல ஒண்ட போலத்தான் நீயும். இதுகள உட்டுப்போட்டு வா ராசா…”
சாந்தா மாமி தூரத்தில் கூப்பிடுவது கேட்கிறது. மாட்டுப்பட்டி கலைந்து நாலாபுறமும் விரண்டோடுவது போல காலடிச்சத்தங்களால் நெருக்குவாரப்பட்டு மோதுவதை உணர்ந்தான். வட்டங்களில் வைக்கப்பட்ட மாட்டுக்கண்கள் சுழல ஆரம்பித்தன. மந்திரத்தை விடாது சொல்லச்சொல்ல காக்கைகள் கொத்தி ரத்தம் சொட்டியது. மயக்கம் போல மல்லாந்து விழுந்தான். அவனை எட்டிக்கடந்து வெள்ளைப்பெனியனோடு காவல்காரர்கள் வெளியேறுவதைப் பார்த்தான். காவல் வெட்டப்பட்டதற்க்குச் சாட்சியாகக் காக்கைகள் இறந்து விழுந்தன. மாட்டுக்கண்களிலிருந்து கறுப்பாக ஏதோ கருமுழி போல கசிந்தது. கடைசியாக வெளியேறிய காவல்காரன் சாயலில் அசலாக மம்மாதம் பொடியாரைப் போலவிருந்தான். அவன் சொன்னதைப்போல காவலை வெட்டி விட்டே வீட்டுக்குப் பிணமாகப் போனான்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அக்கறைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்ட சப்னாஸ் ஹாசிம், கவிஞராகவும் எழுத்தாளராகவும் தனது இலக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். ‘நிணக்கவிதைகளில் அப்பிய சொற்கள்’ என்கிற கவிதைத் தொகுப்பை வெள்ளாப்பு வெளி பதிப்பக வெளியீடாக கொண்டு வந்தார். பின் நவீனத்துவ இயங்கியலிலும் குறிப்பாக அபுனைவுகளில் ஆர்வம் காட்டி வருகின்றார். ஈழத்து எழுத்தாளுமைகளை மீள் வாசிப்பு செய்து ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
முகநூல்: https://www.facebook.com/safnas.hasim