‘ஏன்மா… நவுறு. பொண்ணு, மருமயன், பேத்திலாம் வந்துருக்காங்க பாரு. வழிவுடு’
‘சுபத்துரா, அம்மாவ பாத்தியலா…’
‘காசிக்கு அந்தப்புரம் காசரளி பூந்தோட்டம்,
நாங்க கண்டா வருவோமுன்னு கதவடச்சி போனியோ,
சைஞ்சிக்கு அந்தப்புரம் செவ்வரளி பூந்தோட்டம்,
நாங்க தெரிஞ்சா வருவோமுன்னு செடிதாப்பா போட்டியோ…’
என்று சின்னதங்கச்சி பாடிக்கொண்டிருந்தாள்.
‘ஆயாவ, வாயாமுடி வெளியகொண்டு போய் உட்காரவை’
‘நல்ல மனுசி… எடுக்க, பிடிக்க இல்லாம, யாருக்கும் எந்த கஷ்டமும் தராம செத்துபோச்சி’
‘ஏன்பா மாலயெல்லாம் வெளிய, வெச்சதுக்கு அப்பரம் போடுப்பா’
‘வெளிய பென்ச் போட்டாச்சா?’
‘ஆயா, கால சரியாபுடி, தூக்குபா… தூக்கு… ஆளெள்ளாம் வௌகிகோங்க… வெளகு’
‘நெல கால்ல பாத்து… தலைய தட்டபோது… கீழ வைக்காம பாத்து’
‘குனிஞ்சிபோ…போ… பாத்து’
“சொன்னேன்ல… தட்டுச்சா…”
‘கீழ வைச்சிறாத, சட்டுனு கையமாத்துப்பா, தலையதேச்சுவிடு’
‘குனிஞ்சிபோனு சொன்னியே, கீழ உக்காந்துதான் எத்துனுபோனும் போல… நெலக்காலு அவ்ளோ சிருசா இருக்கு’
பல்வேறு கட்டளைகள், சிணுங்கல்கள், சிந்தல்களுக்கிடையில் லச்சுமியும் விரலில் நகம் கடித்தபடி வெளியே வந்தாள்.
அந்த வாசல் மரியாதை எதிர்பார்க்காமல் அனுமதிப்பதும், விடைகொடுப்பதும் அவளை மட்டும்தான். 3ஆம் வகுப்பு படிக்கும் அவள் பரீட்சை விடுமுறைக்கு அம்மாச்சியை பார்க்கவருவாள். விடுமுறை அவளுக்குப் பிடித்தமானது. பள்ளியில் அதிகம் ஆசிரியரால் தண்டிக்கப்படும் அவள் பாட்டி வீட்டில்தான் சந்தோசமாக இருந்தாள். பொதுவாகவே பாடம் நடத்துகையில் தூங்கிவிடுவாள். இல்லையென்றால் நண்பர்களுக்குக் குரங்கு, மாடு போன்றவற்றை வைத்துக் கதைகளைச் சொல்லிகொண்டிருப்பாள். அவளைக் கண்டிக்க ஆசிரியர்கள் அவளின் கதையில் வரும் விலங்குகளின் பெயரை வைத்தே திட்டுவார்கள். சிலர், ‘கிழவி மாதிரி பேசு, படிப்பில ஒண்ணும் காணும்’ என்பார்கள்.
நண்பர்களும் அவளை அதிகம்தான் கேலி செய்தனர். ஒன்று முதல் பத்துக்குமேல் எண்கள் அவளுக்கு தெரியாது என்பதைத் தெரிந்துகொண்டு நண்பர்கள் ஒருமுறை ‘நூறு ரூபா பெருசா? இல்ல ஐம்பது ரூபா பெருசா?’ என்றுகேட்டனர். பெரிதாக இழுத்துச் சொன்னதால் ‘ஐம்பதுரூபாதான்’ என்றாள். அனைவரும் சிரிக்க தொடங்கியவுடன் அவள் உதடுகளை ‘பூ’ என்று சொல்வதுபோல குவித்து முகத்தைத் திருப்பிகொண்டாள்.
அப்போதெல்லாம் அவளுக்குப் பாட்டி வீடே நினைவுக்கு வரும். தூம்பியைப் பிடித்து நூல் கட்டி பறக்க விடுவது, மண்ணைத் தோண்டி புழு எடுத்து அத வெட்டி கொக்கில கோத்து மீன் பிடிப்பது எனத் தனக்குத் தெரிந்த எதுவும் நண்பர்களுக்குத் தெரியாததைச் சொல்லி பதிலுக்குக் கேலி செய்தாள்.
“மண்புழுவ ரெண்டா வெட்டுனாலும் சாவாது தெரியுமா?” என்றாள்.
அந்தச் சிறுவன் முகம் சுழித்தபடி, ‘ச்சி… நீ அதெல்லாம் தொட்டியா? நா போய் பச்சைய தொடுறேன்’ என்று ஓடினான்.
அவள் தன் சிறகுகளை ஒடுக்கிகொண்டு, விடுமுறையை எதிர்பார்த்து, நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பாள். தக்காளி பெட்டிகளை அடுக்கிவைத்தது போல இருக்கும் அடுக்குமாடி கட்டங்களில் அவள் பறக்க இடமில்லை. அவள் சிறகை விரிக்க அம்மாச்சி வீடே சரியான இடம்.
லட்சுமி கால் கொலுசின் சத்தம் ‘ஜல்ஜல்ஜல்’ என அதிர பாட்டி வீட்டைச் சுற்றிச் – சுற்றி ஓடுவாள். அந்தச் சத்தம் பக்கத்து வீட்டில் இருக்கும் சின்னதங்கச்சிக்கு இடியாய் இடித்தாலும் வேலம்மாலுக்கு, இசையாய் இனித்தது.
சின்னதங்கச்சி எல்லோருக்குமே சின்னதங்கச்சிதான். ஏனென்றால் அவள் பெயரே சின்னதங்கச்சி. வேலம்மாளுக்கும் அவளுக்கும் மூன்று வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருமையில்தான் இருவரும் பேசிக்கொள்வர்கள். பள்ளிகளில் கொலுசுக்கு அனுமதியில்லை என்பதால் அம்மாச்சி வீட்டிலேயே அது சாத்தியம். அதுமட்டுமா, அவளின் கேள்வியே புரியாத கேள்விகளுக்கும், வார்த்தைகள் புரியாத பாடலுக்கும் அங்குதான் முக்கியதுவமளிக்கப்பட்டது.
அவளால் வேலம்மாளுக்கும் சின்னதங்கச்சிக்கும் வாய்சண்டைதான். சின்னதங்கச்சி வீட்டிலிருந்து ஆட்டுக்குட்டியைத் தூக்கிகொண்டு போய்விடுவாள். வெள்ளச்சி நாய் கழுத்தில் கயிற்றைக் கட்டி ‘வா வாக்கிங்போலாம்’ என்று முழு சக்தியையும் பயன்டுத்தி அதன் கால்கள் தேய்ந்தபடி இழுத்துச் செல்வாள். அவளைக் கண்டதும் அது கால் இடுக்கில் வாலை வைத்துக்கொண்டு ஓடிவிடும். கண்ணு குட்டிக்கு பொட்டுவைத்து, எங்கிருந்தோ எடுத்து வந்த காய்ந்த மாலையை போட்டு, ‘சாமி காப்பாத்து’ என்று கும்பிட்டபடி தரையில் விழுந்து விடுவாள். பொழுதுவிடிந்ததும், மாமா வீட்டிலிருந்து கிளம்பி தெருநடுவில் இருக்கும் அம்மாச்சி வீட்டிற்கு வரும்போதே விளையாட்டு ஆரம்பித்துவிடும். எப்பொழுதும் ஏதோ ஒன்றை தரையில் தேயதேய இழுத்து கொண்டு நடப்பாள்.
லச்சுமிக்கு கடைசியாகப் பாட்டி வீட்டிலிருந்து புறப்பட்ட நாள் நினைவில் உண்டு. அன்று விடியற்காலை 6 மணிக்கு அவளின் சின்னவயிறு பசித்தது.
மாமா வீட்டிலிருந்து நுங்கு வண்டியை உருட்டியபடி அம்மாச்சி வீட்டை அடைந்தாள். வாசலில் உட்கார்ந்திருந்த அம்மாச்சியிடம் தலைகீழாகக் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தைப் பார்த்து ‘டைம், பத்தோகுலாக் ஆகுது, இன்னும் சாப்படலையா? இரு அம்மாச்சி நா சாப்பாடு போடுறேன்’ என்று உள்ளே சென்று சாமான்களை உருட்டினாள்.
லட்சுமி எதை தொடக்கூடாது என்று வேலம்மாள் நினைக்கிறாளோ, அதையே சரியாக எடுப்பாள். அவள் எதையும் போட்டுடைப்பதற்கு முன் வேலம்மாள் தடுக்க நினைத்தாள், ஆனால் அது சாத்தியமில்லை.
‘இருவறேன்… இருவறேன்…’ என்றுகுனிந்தபடி வீட்டிற்குள் ஓடினாள் வேலம்மாள். அதற்குள் அரிசி மாவு ஜாடியை எட்டி எடுத்து கீழே போட்டுடைத்துவிட்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். லட்சுமி ஆள்காட்டி விரலைப் பல்லில் கடித்தபடி, தலையை உயர்த்தாமல் கண்களை மட்டும் மேல் நிறுத்தி வேலம்மாளைப் பார்த்தாள்.
சிறிது நேர அமைதிக்குபின் வேலம்மாள் மீதமிருந்த மாவை எடுத்து கூடவே அங்கிருந்த வெல்லம், கடலைபருப்பு, ஏலக்காய் என எடுத்து ஜன்னல் வெளிச்சத்தில் உறுதிசெய்து கொண்டு வெளியே சென்றாள். புடவையைப் பின்னால் பிடித்தபடி கூடவே லட்சுமி நடந்தாள்.
வெளியே இருந்த விறகடுப்பைப் பற்றவைத்து, பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, ஒருபிடி கடலைப் பருப்பை போட்டாள். பருப்பு அரைபதம் வந்தவுடன் விறகைவெளி இழுத்துத் தீயைக் குறைத்து தண்ணீர் விட்டுக் கரைத்த மீதமாவை நூல்போல் பாத்திரத்தில் கிளறியபடி ஊற்றினாள்.
குழந்தை தன்னை மறந்து பாத்திரத்தில் வீங்கி வெடிக்கும் கூப்பலங்களை பார்த்து கொண்டிருந்தபோது அதில் வெல்லத்தைச் சேர்த்தாள்.
வெல்லம் கரைந்து ஊடுருவி பொன்நிறத்தை அடைந்தபோது ஏலக்காய் சிறிது உப்பு சேர்த்து இறக்கினாள். அங்கிருந்த மண்திண்ணையில் வைக்கோல்பரப்பி அதன்மேல் துணிவிரித்து மூடியகையால் ஆங்காங்கே அழுத்தி கூழ்செய்து அதில் ஊற்றி உலறவிட்டாள்
அது தயாராகும் நேரத்தில், வேலம்மா, குழந்தைக்குப் பல்பொடியால் பல்துலக்கிவிட்டு, முகம்கழுவி, எண்ணை தேய்த்து தலைபின்ன தொடங்கினாள்.
குழந்தை, ‘அம்மாச்சி நீ என்ன சமைக்கிற’ என்றாள்.
‘வெண்ணபுட்டு’ என்றாள் வேலம்மா
‘அப்படீன்னா? எப்படியிருக்கம், கட்லட் மாதிரியா?
‘தலைய திருப்பாத,’ என்று தலையைத் தட்டினாள்.
‘கட்டு – லேட்டா… அது என்னது. அத எப்படி செய்யனும்’ என்றாள் வேலம்மா.
‘அதெல்லாம் செய்ய முடியாது. சென்ஜாலும் நல்லா இருக்காது. கடையில்தான் வாங்கனும்’ என்றாள் குழந்தை.
“கடகாரனால் மட்டும்தான் நல்லா செய்ய முடியுமா? அது எப்படி அவனால வீட்டுல இருக்க பொட்டச்சிங்கள விட நல்லா செய்யமுடியுது?’ என்றாள் வேலம்மா.
‘அதெல்லாம் தெரியாது, அது அந்த தெருமொனைல இருக்குற இந்திகாரன் கடையிலதான் நல்லா இருக்கும்’
‘ஓ… ஓ…’
‘ஆமா, அதான் அங்க நல்லாருக்கும், பர்கர் ஒரு கடையில் நல்லாருக்கும், பிரியாணி ஒருகடையில் நல்லாருக்கும்’
‘எல்லா தீனி கடையும் தெரியுமா?’ என்றாள் வேலம்மா.
‘கொஞ்சம் தெரியும், மத்ததெல்லாம் போன்ல சொன்னாலுமே எடுத்துட்டு வந்துடுவாங்க’
‘நல்ல மனுசாலுங்கலாதான் இருக்காங்க’ என்றாள் வேலம்மா.
தலைவாரி கொள்ளும்போது நடந்த இந்த அறிவு பரிமாற்றத்தின் போதே உணவு தயாராகிவிட்டது.
வெவ்வேறு கோணங்களில் இருந்த புட்டைத் துணியில் இருந்து உதிர்த்து, ‘முதல்ல தாத்தாவுக்கு தான்’ என்று ஒரு சிலதை எடுத்து பதனெட்டாம் படியான் படத்தின் முன் இலையில் வைத்து கற்புரம் ஏற்றினாள். குழந்தை கற்பூரம் சீக்கிரம் அணைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அணைந்தவுடன் இலையை நோக்கி பாய்ந்தாள். வேலம்மாள் குழந்தையின் கையைப் பிடித்து ‘தாத்தாவுக்கு படச்சதுல இனிப்பு கம்மியா இருக்கும், நா வேற தர்றேன்.
‘ஏன் தாத்தா இதுல இருக்குற இனிப்ப மட்டும் சாப்பிடுறாரு’ கேள்விக்கு விடை கிடைக்கும் முன் வெண்ணபுட்டு கிடைத்ததால் கேள்வியைக் காற்றோடு விட்டு விட்டாள். எந்தக் கடையிலும் வாங்க முடியாத அந்தச் சுவையால் அவள் வழக்கத்தை விட அதிகமாக உண்டாள். அவள் தன் சின்ன வயிற்றை தொட்டுபார்த்து.
‘இதோ இங்க கொஞ்ச இடம் காலியாயிருக்கு இன்னும் ஒன்னு தா அம்மாச்சி’ என்று வாங்கி முகம் முழுவதும் தின்றபடி தாத்தாவின் படத்தை உற்றுபார்த்தாள்.
‘அம்மாச்சி இது யாரு?’ என்றாள்.
‘நம்ம தாத்தாதான் வருசம்கூட ஆகல, அதுகுல்ல மறந்துட்டியலா?’
தாத்தாவா இது. நீ என்ன ஏமாத்துற, தாத்தா கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு ஹீரோ மாதிரி இருப்பாரு. இதுயாரோ’.
‘அடிப்போடி, கண் ஆபரேஷன் பண்ணதால் கருப்பு கண்ணாடி போட்டிருந்தாரு, நா எதார்த்தமா நல்லா இருக்குனு சொல்லபோய், பட்டணத்துலயிருந்து வாங்கியாந்து கடைசி வர போட்டிருந்தாரு. இந்த ஃபோட்டோ அவரு சின்ன வயசுல காளிவேசம் கட்டி ஆடுனப்போ ஞாபகமா எடுத்தது’
‘இருவரேன்’
ஒரு இரும்பு பெட்டியை திறந்து அதிலிருந்து ஃப்ரேம் போட்ட பழைய போட்டோ ஒன்றை எடுத்தாள் வேலம்மா.
புகைப்படம் ஓரங்களில் மரச்சட்டங்கள் செல்லரித்து, படம் மேலிருந்த கண்ணாடியோடு ஒட்டிக்கொண்டு, பழைய புத்தகத்தின் வாசனையோடு இருந்தது.
அந்தப் புகைப்படத்தில் பெருங்கூட்டமே இருந்தது.
‘இதபாத்தியலா?’ என்றாள் வேலம்மா.
‘நீ எங்க இருக்க அம்மாச்சி இதுல?’
‘அது நான்தான்னானு கண்டுபிடிக்க எனக்கு நாளாச்சி, அதோ அந்தக் கடைசில நிக்கரது நான்தான், இடுப்புல இருங்குறது உங்க அம்மா பக்கத்துல என்னவிட ஓசரமா இருக்குறது உன்மாமா’
‘நல்லா தேடிபாரு, இதமாதிரி ஒண்ணு உங்கவீட்டுலயும் இருக்கலாம்’
‘இல்ல, நாதான் எல்லா போட்டோக்கும் மீச, தாடி, பொட்டு வரஞ்சியிருக்கேனே, இதமாதிரி ஒண்ணு இல்லையே’
‘இதுல நான் எங்க அம்மாச்சி’ விடைதெரிந்தாலும் அம்மாச்சி கூறும் பொய்யை ரசிப்பதற்கு இது போன்ற கேள்விகளை கேட்பாள்.
‘அடிபோடி, நீதான் ஒண்ணுக்கு போவ போய்டியே, மறந்திட்டியலோ?’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
குழந்தை சிரித்துக்கொண்டே, “தாத்தா வெண்ணபுட்டு சாப்புடுவாறா?” என்றாள்.
“அவரு பழைய சோத்தையும், பச்ச மிளகாயும் தான் கட்கிட்டு அழுவாரு.” சற்று அமைதிக்குப் பின். “அவர் வரவரைக்கும் முஞ்சுறதும் கஷ்டம்தான். பிள்ளைங்க இருக்க வீடுள்ள. காலைல 4:30க்கு எழுந்து வயலுக்கு கெளம்பிடுவாரு, வியர்வைல குளிச்சதுக்கு அப்புறம்தான் தண்ணிலகுளியல், கடைசி நிமிஷம் வரைக்கும் உழைச்சிதான் கொட்டுனாரு. எவ்வளவு வந்தாலும் இந்த கொட்டா வீட்டையும், பழயசோறையும்விடல” என்று நினைவுகளின் பின்னே ஓடி வார்த்தைகளை உதிர்த்தாள்.
‘அப்பறம் அம்மன் கோயிலுக்கு, ஒருநாள் தவறாது’
‘உனக்கு ஒரு வயசுல காச்சல் வந்து பெரிய டாக்டர் முடியாதுனு கைய விரிச்சப்போ, இந்த ஆத்தாகிட்டதான் கடைசிவர தீமிதிக்கிறேன் காப்பாத்திகுடுனு வேண்டிக்கினாரு. அதே மாதிரி வருசம் தவறாம செஞ்ஜாரு. உனக்கு சரியானதும் எங்ககீழ விட்டாரு, தூங்கும்போதுகூட மேலயே போட்டுதான் தூங்குவாரு, நியாபகம் இருக்கா?’
‘உம்ம்ம்… இந்த வீட்டு வெளிய, கட்டில்ல படுத்துகிட்டு நட்சத்ரத்த பாத்துகிட்டே தாத்தாவோட காதபிடிச்சிட்டு, கால அவர் மேல்போட்டு கிட்டு, அவர் சொல்லுற வெள்ளயானைகதை, முழு –முக்கா -அரை – கால் கதை எல்லாம் கேட்ருக்கேன்’
‘அட, அதெல்லாம் நியாபகத்துல இருக்கா….’
‘ இருக்கே, ஆமா இதுல தாத்தா எங்க இருக்காரு’
“இருக்கருதிலயே தெடகாத்திரமா என் வலது பக்கம் இருக்குறது தாத்தாதான். காளையையே மல்லுக்கட்டுவாரு, பருவத்துல உலகத்தையே பந்தையம் போட்டு ஜெயப்பாரு” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே குரல் உருகி கண்கள் கசிந்தன.
‘தாத்தா தெடகாத்திறமா இருக்காறா? அவர்தான் என்கிட்ட ரன்னிங் ரேஸ்ல தோத்துபோய்டாறே’
“அவராவது தோக்குறதாவது” என்று தன்னை மறந்து தலையில் தட்டினாள்.
“ஏன் தலையில் தட்டுற” என்றாள் சிணுங்கியபடி.
“அப்படிதான் அடிப்பேன். அவராவது தோக்குறதாவது” என மீண்டும் தலையில் தட்டப்போனாள்.
“நீ இன்னைக்கு என்னை எத்தனையாவது தெடவ அடிச்சிட்ட” என்று ஐந்தில் முன்று விரல்களை மடக்கி காண்பித்து வெடுக்கென்று எழுந்து ‘நா மாமா வீட்டுக்கு போறேன்’ என்று ஓட்டம் எடுத்தாள். அவள் அமர்ந்திருந்த இடத்தில் சிறு ஓட்டை வழியே தரையில் இருந்தமண் வெளியேற்றபட்டிருந்தது.
‘போ… நீ போறதால இப்போ யாருக்கு என்ன? நீ வாத்தியாகிட்ட வாங்காத அடியா… நா தொட்டாதான் ஏரிக்கிதா?’ என்று குழந்தை காதில் விழும் தொலைவுக்கு உரத்த குரலில் கத்தினாள். அவள் மீண்டும் வந்துவிடுவாள் என்றுதான் நாள் முழுவதும் நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு மறுநாள் பள்ளி தொடங்குகிறதென புறப்பட்டுவிட்டாள் என தகவல் வந்தது. ஆனால் சற்று நேரம் அவள் இருந்திருந்தால் ஒரு வாய் வெண்ணெய் புட்டை சாப்பிட்டிருக்கலாம் என நினைக்கும்போது வருத்தமாக இருந்தது.
அவள் சொன்னதில் என்ன தவறு. உண்மை அதுதானே என்று உதட்டோரம் சிரித்தாள் .
வேலம்மா “இந்தவயசுல இதெல்லாம் தேவையா” என்றதற்கு, அவரும் சிரித்துகொண்டே,
‘தோக்கறதுலதான் சந்தோசம் இருக்குனு தெரிஞ்சிக்க எனக்கு இத்தனவருசம் ஆச்சு’ என்று சொன்னது ஒரு கணம் கண் முன்னே வந்து சென்றது.
பதினெட்டாம்படியானுக்கு வயது ஏற-ஏற தேவையற்ற இலைகள் உதிர்ந்த மரத்தைப் போல் அவரைச் சுற்றி பொன்னிற காற்று வீசியது.
அவர் தன் மகன் திருமணத்தில் வெறுத்த சொந்தங்களை மகள் திருமணத்தில் சேர்த்து கொண்டார்.
மகன் கருணாகரன் கல்யாண பேச்சை எடுக்கும்போதே அவர்கள் இருந்த அதே வீதி முனையில் சகலவசதிகளோடு தனி வீடு கட்டிகொடுத்தார். சுபத்திரா கருணாகரனுக்கு பின் பதினெட்டு வருடங்கள் சென்று பிறந்து மழலை தன்மை மாறாத இருந்தபோதிலும், அண்ணனுக்குக் கிடைத்த சலுகைகளைப் பார்த்தவுடன் அவளுக்கும் கல்யாண ஆசை தொடங்கியது.
பதினெட்டாம்படியானுக்கு பேரபிள்ளைகள் பிறந்தபோது சுபத்திரா அவர்களோடு சேர்ந்து விளையாடுவதிலே பொழுதைக் கழித்தாள்.
சுபத்திரா செல்லம் காட்டி வளர்ந்ததால் சமையலை வாசம் பிடிக்க மட்டுமே தெரியும், சமைத்தால் கலவரம்தான். அவளுக்கு அப்படி ஒரு சூழ்நிலை அமைந்து, அவள் சமைத்த உணவை யாரேனும் சிறுகுறை சொன்னாலும்,
‘இங்கலாம் மனுசங்க இருப்பாங்களா?….என்ன யாருக்காச்சும் கட்டி குடுத்துடுங்க. எங்கயாவது போய்டுறேன்’ என்று கோபத்தின் மூலமாக மன ஆசையை வெளிப்படுத்துவாள்.
அவளின் விருப்பபடியே பட்டணத்தில் மாப்பிள்ளை பார்த்து குறைவின்றி கல்யாணம் நடத்திகொடுத்தார்.
சொத்து பிரிப்பதிலும் தனக்கென்று யோசிக்காமல் அனைத்தையும் சரிபாதியாக பிரித்து மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துவிட்டார்.
வேலம்மாள் அத்தருணத்தில் பதனெட்டாம்படியானைப் பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தம் புரிந்ததைப்போல் அவர், “நாங்க இருக்குற வீட்ட எங்களுக்கு பிறவு யாராவது எடுத்துகோங்க. அப்புறம் இதுல வேலம்மாளோட நகைய சேர்க்கல. ஏன்னா அது அவளோடது. அவளுக்கு அவங்க ஆத்தா கொடுத்தது, அவங்க ஆத்தாவுக்கு அவங்க ஆத்தா குடுத்தது. அதபத்தி நா முடிவு எடுக்கமாட்டேன். அது அவளோட விருப்பம்” என்றார்.
வேலம்மாளுக்குச் சொத்து பிரிப்பதிலேயே விருப்பமில்லை. அப்பாவின் தாராள மனதிற்கு முன்னால் அம்மாவின் பிடித்து கொடுக்கும் குணம், அவளை விரோதியாகவே பிள்ளைகள் முன்னால் காட்டியது.
சுபத்திரா பிரசவத்திற்கு வந்தபோது கூட அண்ணன் கருணாகரன் வீட்டிலேயே தங்கினாள். அவ்வப்போது அம்மா, அப்பாவைப் பார்க்க வீட்டிற்கு வரும்போது இத்தனைகாலம் இங்க எப்படிதான் இருந்தேனோ என்று தன்னைதானே கேட்டுகொள்வாள்.
ஆனால் அவளுக்கு பிறந்த லட்சமியோ நேர் எதிர். விடுமுறைக்கு வந்தாலே அம்மாச்சி வீடுதான். அவள் கண்களுக்கு அந்த வீடே ஒருவியப்புதான்.
ஓலைகூரை, ஒற்றைசெங்கல்சுவர், குறுகியவாசல்.
பொருட்களை உள்ளே வைத்தபின் வீட்டை கட்டியிருக்ககூடுமோ என்று அவளுக்கு தோன்றும்.
கூரை ஓட்டை வழியே வரும் சூரிய ஒளியைத் தரையில் விடாமல் கையில் பிடித்து விளையாடுவாள். மழையில் ஒழுகும்போது பாத்திரத்தை ஆங்காங்கே வைத்துத் தன் பாதுகாப்பில் வீடே இருப்பதுபோல் பெருமிதம் கொள்வாள். குளிர்ந்த தரையில் கன்னத்தை வைத்துப் படுத்துகிடந்து, பின் அம்மாச்சியைக் கன்னத்தைத் தொட்டு பார்க்கசொல்லுவாள். தாத்தாவின் மார்போடு காதைவைத்து, மறுகாதை மூடிகொண்டு ‘தாத்தா ஏதாவதுபேசு’ என்றுசொல்லி, அவர் குரல் வேறுபடுவதை கேட்டுச்சிரிப்பாள்.
அவள் பட்டணத்தில் எங்கு இருந்தாலும், அவளது எண்ணங்கள் அம்மாச்சி வீட்டைச் சுற்றியே இருந்தது. தாத்தாவின் இழப்பை அவள் மனம் ஏற்று கொள்ளாமல் ஏற்றுக்கொண்டது.
வேலம்மாளையோ அவரது நினைவுகள் தினம்தினம் தின்றுகொண்டிருந்தது. முன்பெல்லாம் ஒரு ரூபாய் நாணயம்போல் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பாள். முதுமை பலவகையில் வெளிப்பட்டாலும் முடி வெகுகுறைவாகவே வெளுத்து இருந்தது. எலுமிச்சை அளவேயான கொண்டை, லொடலொட ஜாக்கெட் என இருந்தாள்.
பெரும்பாலான நேரங்களில் வேலம்மாள் தனிமையிலேயே இருப்பது போல தெரிந்தாலும். பதினெட்டாம்படியானின் நினைவுகள் உடன் இருந்தன. அந்த வீடு பதினெட்டாம்படியான் இறப்பிற்கு பிறகு இப்பொழுதுதான் நிறைந்திருக்கிறது.
அவர் இறந்த சிலநாட்களில் கருணாகரன் ‘இங்க ஒத்தையில ஏன் இருக்குற? அங்கவந்துடு, உன் ஒருத்திக்கா வீட்டுல எடமில்ல… அங்கதான் எல்லா வசதியும் இருக்கே’ என அழைத்தான்.
‘சடங்கெல்லாம் முடிஞ்சதும் வேணா தெருவுல இருக்குற போர்வேள்சு பொருள் இங்கபோட்டு வெச்சிக்காலம்’ என்றான்.
ஆனால், வேலம்மாள் அதை மறுத்துவிட்டாள்.
இரவோ, பகலோ உறக்கம் பிடிக்காமல் ஒருகாலைக் கைகளால் கட்டியபடி பேரமைதியோடு உட்கார்ந்திருப்பாள். திடீரென்று மனதை அடைக்கும் சோகத்தோடு, உருகியகுரலேடுத்து
‘பத்து ரூபா நோட்டு வாங்கி, பரலோகம் இங்குவாங்கி,
பத்துவரி எழுதி என்னோட பாரத்தை மேலெழுதி,
பறந்து வந்த கப்பலிலே நான் பக்கம் நின்னு போட்டேனே,
அத பார்த்து படிப்பாரில்லே, என்னோட பாரத்தைக் கேட்பாரில்லே‘
‘எட்டு ரூபா நோட்டு வாங்கி, எமலோகம் இங்குவாங்கி,
எட்டு வரி எழுத என்னோட இடைஞ்சலை மேலெழுதி
எழும்பி வந்த கப்பலிலே நான் எட்டிநின்னுபோட்டேனே,
அத எடுத்து படிப்பாரில்லே, என்னோட இடைஞ்சல கேட்பாரில்லே‘
என்று ஒப்பாரிபாடுவாள்
ஒரே வீதியில் மகன், மருமகள், 2 பேரன்கள் இருந்தும், வேலம்மாவை பார்க்க வாரத்திற்கு ஒரு முறைவருவதே அரிதாகி விட்டது.
இப்பொழுது யார் வந்தாலும் வேலம்மா பார்ப்பதாக இல்லை. அவள் கிளம்பிவிட்டாள். பதினெட்டாம்படியானுடன் கைபிடித்து சேர்ந்து சென்றால் பார்ப்பவர்கள் கேலிசெய்வார்கள் என்று, அவர் முன்னே செல்ல வேலம்மாள் பின்னே சென்றுவிட்டாள்.
லட்சுமி பள்ளியின் இடையிலேயே அழைத்துவரப்பட்டு அம்மாச்சி ஊருக்கு கிளம்பும்போது, அவள் மனதில் எந்தக் கேள்வியும் இல்லை. அங்கு சென்றவுடன் முதலில் அம்மாச்சியை வெண்ணபுட்டை செய்து தர சொல்லி அதில் ஒன்றிரண்டை பாக்கெட்டில் போட்டு எடுத்து சென்று நண்பர்களிடம் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தாள். ஏனென்றால், பள்ளி வகுப்பின் போது வண்ண களிமண்ணை கொண்டு பாட புத்தகத்தில் வரும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நண்பர்களாக செய்து கொண்டிருக்கும் போது, லட்சுமி வெண்ண புட்டை செய்து கொண்டிருந்தாள். பாடப் புத்தகத்திற்குச் சம்மந்தம் இல்லாது, வெவ்வேறு கோணங்களில் இருந்த அதைப்பார்த்து நண்பர்கள் சிரித்தபோது, “இது வெண்ண புட்டு, இது இப்படிதான் இருக்கும்” என்றாள். அவர்களால் சிரிப்பை அடக்க முடியவே இல்லை. அவள் முக வாட்டத்தோடு வீட்டை அடைந்ததும் மடித்து வைக்கக் குவித்திருந்த காய வைத்த ஆடைகளில் முகம் புதைத்துப் படுத்துவிட்டாள். அதற்காக அம்மாவிடம் திட்டும் வாங்கினாள். இதனை அம்மாச்சியிடம் முறையிடுவதுதான் அவளின் முடிவு.
அதற்குள் அனைத்தும் முடிந்தாகிவிட்டது.
அண்ணன், தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கமேயில்லை.
‘எல்லாத்துலையும் சரிசமம்மா எதிர்பாத்தா இத்தொடபோக வேண்டியதுதான். நாளைக்கு உன்வீட்டு தேவைக்கு நான்தான் வரணும், செய்யணும்’ என்றான் கருணாகரன்.
சிறிதுநேர அமைதிக்கு பின், சுபத்திரா ஏதோ கண்டுபிடித்தது போல,
‘அய்யோ அண்ணே… அப்பாவுக்கு அப்பறம் அம்மாவ பாத்துகிட்டது நீங்கதான், எனக்கு எல்லாத்தையும் அப்பாவே செஞ்சிட்டாங்க நா எப்படினே வீட்டுல பங்கு கேப்பேன்’
‘நாம்ப பிறந்து வளர்ந்த இடம்’
தியாகம் செய்ததுபோல் பெருமூச்சு விட்டாள்.
‘அண்ணே உனக்கு ஞாபகம் இருக்கா? அம்மா சொல்லும், என் நகையயெல்லாம் போட்டு அழகு பாக்கதான் லட்சுமியே பேத்தியா பிறந்திருக்கான்னு’
“அது அப்போ சொன்னது” என்றான்.
‘அதுமட்டுமில்ல அந்த நகையெல்லாம் அம்மாவுக்கு அவங்க அம்மா, அவங்களுக்கு அவங்களோடு அம்மான்னு தலைமுறையா தொடர்ந்துவருது. இப்போ நான், அடுத்து என் பொண்ணு இப்படியே இது தொடரனும்னு நினைக்கிறேன்’
“எல்லாத்தையும் அப்படியே கடபுடிக்கணுமுன்னு இல்ல” என்றான் வெறுப்பாக.
“அப்படி இல்லன்னா லச்சுமி கடசியா அம்மா வீட்டுல இருக்கும்போது நகையெல்லாம் அவளுக்குதான்னு சொல்லியிருக்காங்க. ஆதானடி” என லட்சுமியைப் பார்த்துக்கேட்டாள்.
குழந்தை அப்போது வெண்ணபுட்டை நினைத்து கொண்டிருந்தாள். அம்மா சொல்வது ஒன்றும் புரியாவிட்டாலும் தலையாட்டி வைத்தாள்.
பிரானாவின் முதல் சிறுகதை இது. முப்பது வயது இளைஞரான இவர் சென்னையில் வசிக்கிறார். தகவல் தொழில்நுட்ப துறையில் பணி செய்கிறார்.
Very interesting. Like this vennaputtu story and the sweet.
வணக்கம், எழுத்தாளர் அருண்மொழி நங்கை அவர்களின் அரசிக்குப் பின் ஒரு நல்ல பாட்டி-பேத்தி சிறுகதை படித்த அனுபவம். ஒப்பாரிகளும், பாட்டி-பேத்தியின் பேச்சுகளும் கதையினுள், நல்ல ஈர்பைக் கொடுத்தது. வேலம்மாள் செய்த வெண்ன புட்டை வாசிக்கும் போது ஆட்டுப் பால் புட்டு கதை நினைவில் வந்து செல்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வணக்கம்.