சிறுத்தை

“அண்ணா, நான் திவ்யா பேசுறேன். அவருக்கு உடம்பு சரியில்லை’’ என்ற குரல் பதிவைக் கேட்டதும் கைகள் நடுங்கின. சட்டெனச் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தினேன். “மாலனுக்கு என்னா ஆச்சி?” எனக் குரல் பதிவை அனுப்பினேன். திவ்யாவிடம் பதில் இல்லை. அந்த அமைதி என்னைக் குடைந்தது.

நான் செல்லத்தான் வேண்டும். நண்பன் என்பதற்காக இல்லாவிட்டாலும் என் தொழில் தர்மம் என ஒன்று உள்ளது.

உண்மையில் என் வேலையை நான் உள்ளத்திலிருந்துதான் செய்கிறேன். சொல்லப்போனால் இது ஒரு சேவை. உளவியல் துறையில் படிப்பை  முடித்த பின்னர் சிறைக்கைதிகளின் மனக்கொதிப்புகளைப் போக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டிருந்தது. கொஞ்ச நாட்களில் தனியார் கிளினிக் ஒன்றும் தொடங்க இருந்தேன். மனைவியின் மண்டையை உடைத்தவன், அண்ணன் தம்பிகளின் கழுத்தை நெரித்தவன், போன்ற குடும்பத் தகராறுகளில் ஈடுபட்டக் குற்றங்களுக்காக உள்ளே வந்தவர்களுடன் உரையாடல் செய்து அவர்களைச் சரி செய்வதுதான் என் வேலை.

என்னால் கையாளப்படும் கைதிகள் பெரும்பாலும் மறுபடியும் சிறைச்சாலைக்கு வருவதில்லை. இலாகாவிலும் நல்ல பெயர் எனக்கு. கொஞ்ச நாளில் ஊடகப் பிரபலமாகவும் ஆகிவிட்டிருந்தேன். தனிப்பட்ட முறையில் பலர் தங்களது உளவியல் பிரச்சனைகளுக்கு உதவ என்னை அழைப்பதுண்டு.

அன்று நிறைய வேலை. அதிகம் சோர்ந்திருந்தேன். அன்று அலுவலகத்தில் நான் பார்த்துப் பேசியக் கைதிகள் மொத்தமே மூவர்தான். ஆனால், அந்த மூவரைச் சமாளிக்க நாக்குத் தள்ளிவிட்டது.

புதிய எண்களிலிருந்து வந்த அழைப்பை எடுக்கவே வேண்டாம் என்றுதான் நினைத்தேன். தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. இந்த அழைப்பும் கூட அப்படியான ஒன்றுதான் என எண்ணித் தட்டிக் கழிக்க நினைத்தேன். ஆனால் திவ்யாவின் ஒரு குரல் பதிவில் என் அத்தனை பிடிவாதங்களும் தளர்ந்தன.  

மாலனைப் பார்த்து சரியாக ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘மாலன்’, என நவீனப் படுத்திக்கொண்ட அவனது உண்மையானப் பெயர் திருமாலன். எப்போதும் தன்னை முற்போக்காய்க் காட்டிக்கொள்ள முயல்பவன். கல்லூரியில் எங்கள் எல்லோரை விடவும் மூன்று வயது மூத்தவன். எங்கள் முன் சற்றும் குறையாத மிடுக்குடனே இருப்பான். கொஞ்சமும் உணராத நேரத்தில் எங்களின் தலைக்கட்டாக தன்னை நிறுவிக் கொண்டான். அவனுடன் பல முறை சின்ன சின்ன வாக்குவாதங்கள் நடந்து முடிந்துள்ளன.

படிப்பு முடிந்து அவரவருக்கான வேலைகளைத் தேடும் துரிதத்தில் இருந்தபோது மலை ஏறும் திட்டத்தை மாலன்தான் முன்மொழிந்தான். மலையேற்றம் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. நெடுந்தூர ஓட்ட வீரர்கள் கூட சுருண்டு விழுந்ததை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். இதில் நான் கொஞ்சம் அனுபவசாலி. அதனால்தான் நண்பர்கள் குழுவாக என்னைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த மட்டில், சக்திக்கு உட்பட்டச் சிகரங்களின் உச்சியில் நின்று படங்கள் எடுத்து ஊருக்குக் காட்ட வேண்டும்.

மந்திமலை ஏறத் திட்டமிட்டதற்குப் பிரதானக் காரணம் நான்தான். மந்திமலை எனக்கு அத்துப்படி. காட்டுக்குள் தொலைந்துப் போனால் கூடக் கவலை இல்லை. ஆயினும் மந்திமலை ஏற வந்தவர்கள் தடம்மாறிப் போய் கண்டு பிடிக்க முடியாமல், இறந்து போய்க் கண்டெடுக்கப்பட்டும் உள்ளனர். வெளிநாட்டவர்களின் வருகை குறைவுதான். மலேசிய மலையேறிகளின் மத்தியில் மந்திமலை பிரபலமானது.

நினைவில் வைத்துக் கொள்ள இயலாத அளவுக்கு மந்திமலை உச்சிக்குச் சென்று அங்கிருந்துத் தெரியும் கடலையும் குட்டிக்குட்டித்  தீவுகளையும் பார்த்து, இரசித்து, இலயித்திருக்கிறேன். என்னைக் கேட்டால் காடும் மலையும் நாம் பலப்பரீட்சை செய்துகொள்வதற்கான இடம் மட்டுமே கிடையாது. வனத்தின்பால் என் மனம் போன அந்த முதல் நொடி எனக்கு உண்மையிலேயே நினைவில் இல்லை. காடு என்பது வெறும் மண்ணாலும் மரங்களாலும் உருவான இன்னொரு நிலப்பரப்பு மட்டும் இல்லை. அது இன்னோர் உலகம்.

மந்திமலையின் உச்சியைச் சாரசரியாக ஐந்து மணி நேரத்துக்குள் தொட்டுவிடலாம். உச்சியைச் சேர ஒரு கிலோ மீட்டர் இருக்கும் போது காதல் மரங்கள் தென்படும். உச்சியை நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகளில் அதுவும் ஒன்று. முழுக்க இளமஞ்சள் நிறத்திலான பெரிய, உயர்ந்த இரண்டு மரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இருக்கும். பண்டைய காலத்தில் யாரோ ஒரு காதல் சோடி சபிக்கப்பட்டுக் காட்டுக்குள் மரங்களாகி விட்டார்கள் என்ற கதை மலையடிவாரத்தில் வசிக்கும் சிலர் சொல்லித்தான் தெரிய வந்தது. அதனால்தான் அம்மரங்களை காதல் மரங்கள் என்றே அடையாளப்படுத்திப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருக்கும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் யாரோ தமிழ் மன்னர்களால் மந்திமலைப் பகுதியும் அதன் சுற்றுவட்டாரமும் ஆட்சி செய்யப்பட்டு வந்ததாம். மந்திமலைக் காட்டிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து கருமந்திகள் அட்டகாசங்கள் செய்யுமாம். அதைக் கட்டுப்படுத்த மனிதர்களால் பழக்கப் படுத்தப்பட்ட சிறுத்தைகள் காட்டுக்குள் ஏவப்பட்டனவாம். அவ்வாறு ஏவப்பட்ட சிறுத்தைக் கூட்டங்கள் இன்றளவும் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனவாம். கருமந்திகளின் தொந்தரவுகளை முழுமையாகத் துடைத்தொழிக்க இயலாது போகவே ஒரு தமிழ் மன்னன் இம்மலைக்கு மந்திமலை என்றே பெயர் வைத்துவிட்டானாம். மலையில் அதிகாரப்பூர்வமானப் பெயரும் ‘Bukit Manthi’ தான். தவிர, காட்டுக்குள் மந்திக் குரங்குகள் இருப்பதையும், சிறுத்தைகள் இல்லை என்பதையும் வனத்துறை உறுதிபடுத்தியுள்ளது.

மந்திமலையில் புராணக்கதைகளுக்குச் சான்றுகள் இல்லை. இது தலைமுறைத் தலைமுறையாக இங்குள்ள தமிழர்களால் மாத்திரமே பேசப்பட்டு வரும் கதை.

காதல் மரங்கள் நின்றிருக்கும் இடத்தின் பின்புறம் இருபது அடி ஆழத்தில், இடிபாடுகளுக்கு இடையில் பாழடைந்தப் பழங்காலத்து வீடுகளும், அரண் போன்றச் சுவர்களும் இருக்கும். அவை அதிகளவில் யாராலும் கண்டுக்கொள்ளப் படுவதில்லை.

மந்திமலை வனத்துறையினர் கூறுவது போல அவை கம்யூனிசத்து காலக் கட்டிடங்கள் என்பதும், அவை அவர்கள் காட்டில் பதுங்கி வாழ அமைத்துக் கொண்டவை என்பதும் உண்மை அல்ல என்றார் மலையடிவாரத்தில் வசிக்கும் இளநீர் கொள்முதல் வியாபாரி ஒருவர். அவர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் காட்டில் திரிவதாக நம்பப்படும் சிறுத்தைகள் குறித்து வேறு ஒரு கதை இருந்தது.

மந்திமலைக் காட்டுக்குள் ஒரு மாயாவி சமூகம் வாழ்கிறது. ஆனால் அவர்கள் பூனியான்கள் இல்லை. காட்டுக்குள் தகாதவைச் செய்வோரை வழிமாறச்  செய்து, அவர்களைக் கொன்று, அவர்களின் இருதயத்தை மட்டும் பிய்த்து எடுத்து எறிந்துவிடும் ‘கும்பாங்’ சமூகத்தினர்கள் அவர்கள். அவர்களின் எதிரியாகக் கருதப்படுபவர்களைக் கொல்வதற்குச் சிறுத்தைப் புலியின் உருவம் மாற தந்திரம்  பயின்றவர்கள். தவிர, காட்டுக்கு வெளியே வாழ்பவர்களுக்கு எந்தப் பாதிப்போ, அபாயமோ விளைவிக்காத கும்பாங் சமூகத்தினர்களை வன தேவதைகளாகவே பலர் பாவிக்கின்றனர், என அவர் சொல்கையில் குரல் தழுதழுத்திருந்தது. அவரின் தாத்தா பலமுறை அவர்களின் நடமாட்டத்தை எதேச்சையாகப் பார்த்துள்ளாராம். எனக்கோ இக்கதை எல்லாம் முதலில் ஏதோ  திரைப்படத்தில் பார்த்துள்ளது போல் பிரக்ஞை உண்டாயிற்று.

செவிவழியே இதையெல்லாம் கேள்விப்பட்டிருந்த என் நண்பர்கள் இறுதிவரை அரைமனதோடே இருந்தார்கள். மாலன் பயத்தைக் காட்டிக்கொள்ளவில்லை.

நாங்கள் திட்டமிட்ட நேரமோ என்னவோ நிலச்சரிவு ஏற்பட்டதின் காரணமாக இரண்டு மாதங்கள் மந்திமலை நுழைவு, வனத்துறையினரால் மூடப்பட்டு, பின் மீண்டும் பொது மக்களுக்குத் திறந்துவிட்டு அன்றுதான் இரண்டாம் நாள். இந்த இடைப்பட்ட காலத்தில் நண்பர்களின் ஆர்வம் வெவ்வேறு திசைகளில் சென்றிருந்தது. சிலருக்கு வேலை கிடைத்துவிட்டது. இரண்டு மாதத்தில் உடம்பு போட்டுவிட்டதாகச் சிலர் சொன்னார்கள். மலையேறுவதைக் காட்டிலும் அவர்களுக்கு ஈடுபட வெவ்வேறு பணிகள் நிறைந்துவிட்டன. மாலன் மட்டும் விடாப்பிடியாக இருந்தான். அவனுங்க வரலைன்னா என்ன… நாம மட்டும் போலாமே என்று நச்சரித்தான்.   அங்குச் சென்று சேர்ந்தபோது எங்களைத் தவிர வேறு எந்தக் குழுவினரும் அன்று மலை ஏற வராததற்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என்ற அச்சமே காரணமாக இருந்தது.

வனத்துறை அலுவலகத்தில் எங்கள் வருகையைப் பதிவு செய்துக்கொண்டோம். வாகனத்தை அங்கேயே நிறுத்தி வைத்திவிட்டுத் தத்தம் பைகளையும் மலையேற்றக் கருவிகளையும் எடுத்துக் கொண்டு நடந்தோம். மாலன் இயல்பாக இருந்தான். இரண்டு மாதத்தில் தாடியை நீளமாக வளர்த்திருந்தான்.

பொதுமக்களின் வாகனங்கள் உட்செல்ல அனுமதி இல்லை. அங்கிருந்து மலையேற்றம் துவங்கும் இடம் வந்து சேர இரண்டு கி.மீ நடந்தோம்.  அதுவரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

வியர்த்திருந்தோம். “Selamat mendaki – Bukit Manthi” என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதன் கீழே நின்று மலையேறிகள் எப்போதும் படம் பிடித்துக் கொள்வார்கள். அன்று மனிதர்களின் ஆரவாரம் அறவே இல்லை. பறவைகளின் ஒலியும் பூச்சிகளின் சத்தங்களும் மிகத் தெளிவாய் கேட்டன. அச்சூழலை கண்மூடி உள்வாங்கினேன். சுற்றியும் பச்சை. சற்றும் எதிர்பார விதமாய் மாலன் என் தோளை அழுத்தினான். அவனதுப் பார்வை ஆளுயரப் பாறை ஒன்றினைப் பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தது.

ஓர் உருவம். அது ஓர் ஆள். பாறையின் மீது அமர்ந்திருந்தபடி கையில் சிவப்பு பந்து போன்ற ஒன்றைப் பிடிந்திருந்தான். அது ஒழுகிக்கொண்டிருந்தது; துடித்துக் கொண்டிருந்தது. அக்காட்சியில் இருந்து பார்வையை விலக்கி , மீண்டும் திரும்பிப் பார்த்த போது சூன்யமாய் கிடந்தது பாறை.

நான் நிதானமாகவே இருந்தேன். பையச் சென்று அருகில் பார்த்தோம். ஒன்றுமே இல்லை. சற்றுத் தள்ளி மரக்கிளை ஒன்றின் மேல் ஆண் குரங்கு ஒன்று அழுகிய பழம் ஒன்றைப் பிடிந்திருந்தப்படி உட்காந்திருந்தது. அது எங்களைச் சட்டைச் செய்யவில்லை. மாலனின் பிடி தளர்ந்து என் தோளில் இருந்து சரிவதை உணர்ந்ததும் மௌனமாகச் சிரித்துக்கொண்டேன்.

மந்திமலைக் காட்டில் எல்லாக் குரங்குகளும் அப்படி இல்லை. குரங்குகள் மனிதர்களின் மனோபாவம் அறியும். மலையேறுபவர்கள் மீது சிறு கனிகளைக் கொண்டு வீசியடிக்கும். தலையைக் குறி வைத்துச் சிறுநீர் கழிக்க முயலும். வழிப்பறி செய்யும்.  தனியாக வருவோரைத் துரத்திப் பயமுறுத்தும். பகடி செய்யும். நான் அவற்றால் பாதிக்கப் பட்டுள்ளேன்.

அந்த நாள் இன்னும் ஞாபகமிருக்கிறது. அப்போது தனியாகப் போயிருந்தேன். முள்வேலியைப் போன்ற இருபுறமும் இருந்தப் புதர்களைத் தாண்டிச் சில அடிகள்தான் வைத்திருப்பேன். ஐந்தாறு குரங்குகள் வழித்தடத்தை மறைத்து அமர்ந்திருந்தன. பெரும்பாலும் அவை கடந்துப் போக அபாயமற்றவை. கையில் ஊண்றுகோல் இருப்பதனால் தாக்க வரமாட்டா. சீண்டுவதைப் போலப் பாசாங்கித்தால் தெறித்து ஓடிக் காட்டுக்குள் மறைந்து விடும்.

ஆறு மணிக்குள் காட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் முழுக்க இருண்டுவிடும். வெளிச்சத்தை மரங்கள் மறைக்கும்.

குரங்குகள் என்னைப் பார்த்ததும் சீறின. நேரம் சரியில்லை. அவற்றுள் ஒன்று என்னை நோக்கி நகர்ந்து வந்தது. கோரைப் பற்கள் தெரிய முறைத்துக் கொண்டிருந்தது. என் மீது அது பாய்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும். தொடர்ந்து சண்டையிடவா? எப்படிச் சண்டையிடுவது? எதைக் கொண்டு அதைக் தாக்கலாம்? முதலில் எங்கே கடிபடுவேன் ? படுகாயங்களோடுத் தப்பிப்பேனா ? இறக்க நேருமா? நிதானித்தேன். என்னை ஆசுவாசப் படுத்தினேன். சொடுக்குப் போடும் நேரத்தில் கீழ் நோக்கித் தலைத்தெறிக்க ஓடினேன். ஓட்டம் மிக வேகமாக இருந்தது. நான் விழுந்துவிடாது ஓடியது கடவுள் செயல்.

சிறுவயதில் என் தம்பியைச் சீண்டுவதற்காக ‘அனுமார் பயலே!’ எனக்கூறி வருத்தியக் காட்சிகள் எல்லாம் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தன.

அதன் பின்னர் தனியாகச் செல்ல நேர்ந்தால் வெடிச் சத்தம் மட்டுமே கொடுக்கும் பொம்மைத் துப்பாக்கி உடன் கொண்டுச் செல்லத் துவங்கினேன். ஆனால் இன்று அதற்கானத் தேவை ஏற்படவேயில்லை. குரங்குகள் அதனை விளையாட்டுத் துப்பாக்கி எனக் கொஞ்ச காலத்திலேயே அடையாளம் கண்டிருந்தன.

காட்டுக்குள் ஒரு மணிநேரம் நடந்திருப்போம். சவாலான மேடு ஏற்றங்கள் எதிர்கொள்ள இன்னும் நேரம் இருக்கிறது. சூழல் கடும் வெயில்தான். காட்டுக்குள் வெக்கை பாதிப்பதில்லை. மலையேறுவதால் மட்டுமே வியர்க்கும்.

சட்டென கனமழைப் பெய்வது போல் சத்தம் கேட்க அவசர அவசரமாக மழையாடையை எடுத்து மாலன் மாட்டிக்கொண்டான். நான் அவனை நிறுத்த, எனை பைத்தியம் போல் பார்த்தான். அப்போது நாங்கள் நின்றிருந்தது மரங்களுக்கிடையே இடைவெளி குறைந்த அடர்ந்தக் காட்டுப் பகுதி. காற்றின் வீச்சு பலமாக, மரம், புதர்களுக்கு இடையே ஊடுருவ கனமழைச் சத்தம் தரும். சில நிமிடங்கள் வரை அச்சத்தம் நீள, தூரத்தில் மழை பெய்கிறதோ என, நம்பவைக்கும்.

தொடர்ந்து நடந்தோம். யாராலோ நான் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் எனத் தோன்றியது. மாலனும் அதை உணர்ந்திருக்க வேண்டும். பார்வையை ஆங்காங்கு வீசியபடி வந்தான். அவனுக்குச் சிறுத்தைப் புலியின் அச்சம் உள்ளதா எனக்கேட்டேன். இளக்காரமாகச் சிரித்தான். “புலி முன்னுக்கு சிறுத்தையெல்லாம்  சும்மா” என்றான். அப்போதுதான் கவனித்தேன். அவன் கையில் டைகர் பீர் டின் இருந்தது. மலையில் ஏறும் முன்பே நான் சொன்ன விதிகளை மறந்திருந்தான். அல்லது அலட்சியப்படுத்தியிருந்தான். காதல் மரங்களை அடைந்திருந்தபோது நான் மாலனின் மேல் முழு வெறுப்பில் இருந்தேன். ஆனால் அந்த வெறுப்பு ஒரு பறவையினால் சட்டென ஆச்சரியமாக மாறியது.

அதுவரையிலும் நான் கண்டிராத வினோத வனப்புடையக் குருவி அது. முழுக்க ஊதா நிறம். காதல் மரங்களின் வேரின் மேல் அமர்ந்திருந்தது. உயிரோடு இருந்தும் அசைவற்றிருந்தது. மாலன் அதன் அருகில் போய் அமர்ந்துப் பார்த்தான். நான் தடுக்கவில்லை. விரலால் சீண்டினான். தடுக்க வேண்டியதாயிற்று.

“இருடா, பறக்குதானு பார்ப்போம்” என்றான். உள்ளங்கையில் அதை ஏந்த முயற்சித்தான். அது மெல்ல நகர்ந்து அவனைத் தவிர்த்தது. பலங்கொண்டு அதைக் கௌவித் தூக்கி காதல் மரங்களில் பின்புறத்துப் பள்ளத்தின் விளிம்பில் நின்றுகொண்டு மேல் நோக்கி வீசினான். எனக்கு பகீரென்றது. குருவி சற்றும் இறக்கைகளை விரிக்காது பள்ளத்தில் விழுந்து புதர்களுக்கு இடையே ஒரு கல்போல விழுந்து மறைந்தது.

சொல்லி வைத்தது போல் அதே போன்ற இன்னொருக் குருவி சற்றுப் பக்கத்தில் தென்பட்டது. அதற்கும் மாலனினால் விபரீதம் நேருமோ  என அஞ்சினேன். அதைப் பார்த்து, விரட்டுவது போல பாவனைச் செய்தான். அசையாது அமர்ந்திருந்தது. மாலன் இன்னொரு பியர் டின்னை எடுத்து கொஞ்சம் குடித்தான்.  பின்னர் குருவியின் அருகில் சென்று அதன் மேல் கொப்பளித்துத் துப்பினான். 

எனக்குப் பதறியது. நான் புதர்களுக்கிடையில் ரகசியமாக நகறும் கால்களின் சத்தத்தைக் கேட்டேன். அவை சிறுத்தையின் கால்கள். எங்கோ ஒளி வீசும் இரண்டு பூனை கண்கள் அவனை பார்த்து கொண்டிருந்ததை என்னால் மட்டும் உணர முடிந்தது. மாலனை அதட்ட துணிவு வரவில்லை. அவன் போதையில் இருந்தான். காட்டில் தேவையற்ற வாக்குவாதம் இருவருக்குமே நல்லதல்ல.

குருவி  தத்தியும் தாவியும் சென்று, முதல் குருவி விழுந்த அதே பள்ளத்தில் தானாகவே விழுந்தது. இதுவும் பறக்கவில்லை. மாலன் குனிந்து காலணியின் கயிற்றைச் சரி செய்தான். நான் நிலைக்குத்தி இருந்தேன்.

நான் நம்புகிற விடயங்கள் பற்றியும், மாலன் மறுக்கின்ற, ஏற்காத விடயங்கள் பற்றியும், ஒருவருக்கு ஒருவர் நன்கு தெரிந்துதான் வைத்திருந்தோம். ஒரு வகையில் பார்த்தால் இப்போது இந்தக் காட்டுக்கு நடுவில், மலைகளுக்கு இடையில், மாலன் இருப்பது என் பொறுப்பில்தான். அவன் செயல் என்னையும் பாதிக்கும்.

மாலனின் தலைக்கு மேல் ஏதோ ஒன்று நகர்ந்து போய் அமர்வது போல, காதல் மரத்துக் கிளை ஒன்று வளைந்து அசைந்து ஓய்ந்தது. மாலன் அதைக் கவனிக்கவில்லை. போதை அவன் இரத்தத்தில் வீரியமாகிக் கொண்டிருந்தது. கட்டுப்படாதவனைக் காப்பாற்றவாவது செய்ய வேண்டும். அப்போதைக்கு எனக்கிருந்த ஒரே வழி ‘இனுவு’ பிரார்த்தனைதான்.

இனுவு என்பது கையளவில் பென்சில் வடிவத்தில் இருக்கும் இரண்டு இரும்புக் குச்சிகள். அவை ஒன்றோடு ஒன்று தட்டப்படும் போது, கோயில் மணி போன்ற, ஆனால் கொஞ்சம் மென்மையாகவும், கூர்மையாகவும் எழக்கூடிய ‘திங்ங்ங்’ என்ற சத்தம் தரும். அது சரியாகப் பத்து வினாடிகள் தொடரும் அந்தச் சத்தம் நம்மைச் சுற்றி இருக்கும் தீய அலைகளை அகற்றி, நல்ல அலைகளை உண்டு பண்ணும்.

நான் மாலனின் பக்கத்தில் சென்று நின்றுக்கொண்டு காதல் மரக் கிளைகளைப் பார்த்தவாறு இனுவுவை மூன்று முறைகள் மீட்டினேன். அதுவரையிலும் எங்களை சுற்றிக்கொண்டிருந்த தீய அலைகள் நீங்குவதைப் போல் உணர்ந்தேன். நான் சொல்லவில்லை என்றாலும், என்ன செய்கிறேன், எதற்குச் செய்கிறேன் என்பதெல்லாம் அவனுக்கும் தெரியும். என்னை மிகவும் கேவலமாக ஒரு பார்வைப் பார்த்தான். நக்கலாகச் சிரித்து ‘ திருந்தாத ஜென்மங்க’ என்று முணுமுணுத்தான்.

அந்த நிமிடம் அவனைக் கைவிட வேண்டுமென எனக்குள் குறுகுறுப்பு உண்டானது. அவனுக்குக் காட்டின் வீரியம் என்னவென்று நிரூபிக்க வேண்டுமென எண்ணிக்கொண்டேன்.

“எதுக்குடா இப்போ நடுக்காட்டில நின்னுக்கிட்டு, மியூசிக் போட்டுக்கிட்டு இருக்க?” என்று கூறி காலியாகிய மது டின்னை கீழே போட்டு  மிதித்தான். நான் ஒன்றும் சொல்லவில்லை. நடக்கப்போகும் விபரீதத்திற்காகக் காத்திருந்தேன்.

எனக்குப் பின்னால் இருந்தப் புதரிலிருந்து அசைவுகள் வெளிப்பட்டன. சருகுகள் நொறுங்கும் சத்தம் கேட்டது. நான் நினைத்த விபரீதம் நடக்கப் போகிறது. மாலன் இன்னொரு புதிய மது டின்னை எடுத்தான். இன்னும் கெடுநாள் இருந்தும் மது ருசிக்கவில்லை என வீசி எறிந்தான். இன்னொன்றை எடுத்தான். அதை உடைத்த வேகத்தில் குடித்து, மறுகணமே முகம் சுழிய கீழே துப்பினான்.

“ச்சப்புனு இருக்கு” என்றான். எனக்குள் குரூர சிரிப்பொன்று எழுந்தது.

மீண்டும் சருகுகள் நொறுங்கும் சத்தம். திரும்பிப் புதரைப் பீதிப் பெருக்கோடுப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் தலைக்கு மேலிருந்துப் பறந்து வந்து மாலன் உடைத்த இரண்டாவது மது டின் புதருக்குள்  விழுந்தது. புதரின் அசைவை அவனும் கவனித்திருக்க வேண்டும். என் பயத்திற்குச் சவால் விட, வேண்டுமென்றே டின்னை  புதருக்குள் வீசியடித்தான்.

கோபம், ஆற்றாமை என இன்னும் என்னென்னவோ எல்லாம் கலந்து ஏதோ ஒன்று என் முகத்தில் பிரதிபலிக்க, அருகில் வந்து மாலன் என் தோளில் கை போட்டான். அது எனக்கு அவமான உணர்ச்சியை உண்டாக்கியது. முகத்தில் சிரிப்பை வரவழைக்க முயன்றாலும் உடல் கனமாகியது.

“இங்க சிறுத்தைப் புலி இருக்குதானே? ஏன் இன்னும் வரலை. அடேக் பன்னலை? ரெண்டு பேரு தானே இருக்கோம். கூட்டமாகக் கூட இல்லையே? புதர் ஆடுனா பயப்படுறே ,புல் ஆடுனா பயப்படுறே, மரம் ஆடுனா பயப்படுறே, மயிர் ஆடுனாகூட பயப்படுவ போல?!” என்றான்.

என் மூக்குக்கண்ணாடி வியர்வையில் மறைந்திருந்தது. கழற்றித் துடைத்துக் கொண்டேன். அடுத்த நொடியில் நடக்கக்கூடிய விபரீதம் குறித்து என் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது.

“கோவப்படாம நான் சொல்றதைக் கேளு. இங்கப் புலியும் கிடையாது எலியும் கிடையாது. வனத்துறையிலேயே சொல்லிட்டாங்க, இங்க சிறுத்தைங்க இல்லைன்னு. உனக்கு மட்டும் சிறுத்தை இருக்குதுன்னு எப்படித் தெரியும்? இல்லை, சொன்னா நானும் தெரிஞ்சிக்குவேன், அதான் கேட்டேன். குறைஞ்ச பட்சம் சிறுத்தையோடக் காலடியாவதுக் காட்டு. பாக்குற எடத்தில எல்லாம் பன்டியோடக் கால் அச்சுதான் தெரியுது. ராத்திரி நேரத்தில் சாப்பாடு தேடி வெளிய வருதுங்க. ஒரு வேளை சிறுத்தை இருந்தா எப்படிப் பன்டிங்க இவ்வளவு சுதந்திரமா சுத்தும்?’’

நான் ஒன்றும் பேசவில்லை. பேச விரும்பவில்லை. எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி கொண்டிருந்தது. அதனால் நான் அமைதியாக வருகிறேன் என மாலன் நினைத்திருக்கலாம். மீண்டும் அவனாகவே பேசினான்.

“சரி. எல்லாத்தையும் விட்டுடுவோம். சிறுத்தைகள் இருக்குன்னே வெச்சிக்குவோம். அது எப்படி என்னை மட்டும் தனியா வந்து அட்டேக் பண்ணும். நல்லவன் யாரு, கெட்டவன் யாருன்னு அது எப்படிக் கண்டுப் பிடிக்கும்? சிறுத்தையை வெரட்டுறதுக்கு எதுக்கு பேய் ஓட்டுருவன் மாதிரி இரும்புக் குச்சியிலே மோதல்ல பெரிய மியூசிக் கம்போசர் மாதிரி என்னமோ பன்னிட்டு இருந்த? இங்க இருக்கறது பேயா, புலியா, அதை மொதல்ல முடிவு பண்ணிச் சொல்லு. நான் அதுக்கு ஏத்த மாதிரி பயந்துக்கிறேன். ஓகேவா?” என்று மாலன் முடித்தான். குடிகாரக் குப்பன். நிதானமும் தெளிவும் நிறைய இருக்க, அடக்கமும் கொஞ்சம் இருந்திருக்கலாம்.

அப்போதுதான் கொஞ்சம் வருத்தப்பட்டேன். காதல் மரங்கள் இருந்த இடத்தில், நான் பார்த்தச் சிறுத்தைப் புலியின் கால்தடத்தை இவனுக்குக் காட்டியிருக்க வேண்டும். பயந்து விடுவான் என்றுதான் சொல்லாமல் விட்டு விட்டேன். திரும்பப் போகையில் அவை அங்கேயே இருக்குமா என்ன? இந்நேரம் அழிக்கப்பட்டிருக்கும்.

மூன்றரை மணிக்கு மந்திமலை உச்சியை அடைந்தோம். பல நாள்கள் கழித்துக் காதலியைப் பார்ப்பது போல பரவசம் எனக்கு. மண்தரையில் அமர்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாலன் மிகச் சந்தோசமாக இருந்தான். ஆங்காங்கே நின்று நிழல் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தான். திவ்வியாவுக்குக் காணொளி அழைப்புச் செய்து எல்லாவற்றையும் காண்பித்தான். கைப்பேசியை என் பக்கம் திருப்ப நான் ஒரு ‘Hi’ சொல்லி வைத்தேன். மாலன் ஒரு பறவையைப் போல் ஆகிவிட்டவனாக தென்பட்டான்.

நான் அப்போதும் கடலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். “சம்திங் ராங் ! பாரேன், இந்த பீர் கெட்டுப் போகலை, என்றவனைத் திரும்பிப் பார்த்தேன். கையில் புதிதாகத் திறக்கப்பட்ட மது டின் வைத்திருந்தான். இதமானக் காற்று முகத்தோடு மோதிக் கொண்டிருந்தது. அவன் மீது எரிச்சல் பட்டு எனது உணர்வு நிலையைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

அதன் பின்னர் இறங்கும் வரை ஆங்காங்கு ரகசிய காலடித்தடங்கள் கேட்டன. எங்கிருந்தோ சிறுத்தையின் கண்கள் பாய்வதற்கு முன்பாக பதுங்குவதாகத் தோன்றியது. சிறுத்தை தோன்றினால் பரவாயில்லை எனும் மனநிலை மாறி அது எங்களை வந்து தாக்கினால் கூட தேவலாம் என நினைத்துக்கொண்டேன். அதற்கு வாகாக சில இடங்களில் நின்று நிதானித்துச் சென்றேன். சில இடங்களில் சுற்றி வளைத்துச் சென்றேன். மாலன் எல்லா இடத்திற்கும் மெல்லிய பாடலை முணுமுணுத்தபடியே வந்தான். அவன் ஏகாந்தம் எனக்கு கடுப்பை மூட்டியது.

“டேய் இது நால்ல எடம்டா.. இன்னொரு வாட்டி வருனும் … ஆனா நீ மந்திரம் மாயம் எல்லாம் பன்னுவியேன்னு நெனைச்சாதான் பயமா இருக்கு” என்று கூறிவிட்டு ஆர்பாட்டமாகச் சிரித்தான். அந்த நாளுக்குப் பின்னர் நான் அவனைச் சந்திக்கச் செல்வது இன்றுதான். அந்த நாளின் அவமானமும் வெறுப்பும் வீட்டை நெருங்க கசக்கத் தொடங்கியது.

வீடு இருண்டு குகைபோல இருந்தது. களையெல்லாம் ஒழுகிப் போய்விட்ட முகத்தோடு வாசலில் நின்று கொண்டிருந்தாள் திவ்யா. எங்கே அவள் வரவேற்றுவிடுவாளோ என்ற அச்சத்தில் நானாகவே வீட்டுக்குள் நுழைந்தேன்.

மாந்திரிகமும் மருத்துவமும் வீட்டைக் களைத்து போட்டிருந்தது. வரவேற்பறை முழுக்க ஒரு விநோதக் கெட்ட வாடையின் வியாபிப்பு. எனக்கு அத்தனை நெருக்கமான வீடு இப்போது முழுக்க அந்நியமாய்த் தோன்றியது.

“வியாபாரத்திலே அவருக்கு நிறைய எதிரிங்க, போட்டி அதிகம். யாரோதான் செஞ்சி வெச்சிட்டாங்க. எல்லாரும் கையை விரிச்சிட்டாங்க. இனிமேலே ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க” தரையைப் பார்த்தே பேசினாள் திவ்யா.

நான் திவ்யாவின் கைகளில் தென்பட்டக் கடிகளையும் கீறல் காயங்களையும் கவனித்தேன். அவை ஒரு மனிதச் செயலாகத் தோன்றவில்லை.

“தெளிவா பேசுறானா?” என்றேன்.

“ரொம்ப தெளிவா. தனக்கு வந்திருக்கிறது ஒரு வகைத் தோல் நோய். மந்திரவாதி வந்து என்னப் பண்ணுவான். என்னை ஏன் அவமானப் படுத்துறேன்னு அழறாரு’’ என அவளும் கண் கலங்கினாள்.

இதுபற்றி திவ்யா சில மாதங்களுக்கு முன்பே எனக்கு வாட்சப் செய்திருந்தாள். அவர்கள் தகுந்த மருத்துவர்களை அணுகியுள்ளதால் நான் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அது தவறோ என இப்போது தோன்றியது.

“நேத்து நைட்டு முழுக்க அவர் அறவே தூங்கலே. உங்க பெயரையே சொல்லிச் சொல்லி அழுதுகிட்டும் அப்பப்போ அலறிகிட்டும் இருந்தாரு. ‘விடச் சொல்லுடா ஐயோ! ஐயோ!’ அப்படின்னு உளறிகிட்டே இருந்தாரு.”

எழுந்து மாலனைப் பார்க்க அவன் அறைக்குப் போனேன். நிச்சயம் யாராலும் அவனை அவ்வளவு சீக்கிரம் எதிர்கொண்டு விட முடியாது. நான் அறைக்குள் நுழைந்த போது அவன் சுருண்டு படுத்திருந்தான்.

உடல் முழுக்க கரும்புள்ளிகள், செம்புள்ளிகள் பரவி என்னவென்றே தெரியாத வகையில் தோல் நோய் கண்டிருந்தது. தோலில் இயல்பு நிறம் மாறி உச்சி முதல் பாதம் வரை நீலம் பரவியிருந்தது. வெட்டி விடப்பட்டு ஒரு மாதமாவது இருக்கலாம். கைகால் நகங்கள் நீண்டு வளர்ந்திருந்தன. நான் அவற்றைத் தடவிப்பார்த்தேன். கூர்மையாக இருந்தன. சாதாரண நக வெட்டியால் வெட்ட முடியாது.

நான் எவ்வளவோ கூப்பிட்டுப் பார்த்தேன். அறவே எழவில்லை நன்றாகத் தூங்கியிருந்தான்.

அறையை விட்டு வெளியேற எண்ணி எழுந்து சில அடிகள்தான் வைத்திருப்பேன். ஒரு விலங்கின் உறுமல் சத்தம் என் பின்னிருந்துக் கேட்க தூக்கிவாரிப் போட்டது எனக்கு. திரும்பிப் பார்த்தேன். மாலன் குறட்டை விடத் துவங்கியிருந்தான்.

சாளரத்தின் திரைச்சீலை விலகி அறைக்குள் வெளிச்சம் புகுந்திருந்தது. அருகில் சென்று இரண்டு கைகளால் திரைச்சீலையை இழுத்து மூடினேன். மாலன் ஓய்வெடுக்கக் கொஞ்சம் இதமாக இருக்கும்.

வெளியேரும் முன் அறைக் கதவிடம் நின்று மாலனைப் பார்த்தேன். இரு சிறிய பச்சை நிற ஒளி சட்டென மின்னி மறைந்தது.


மரபு கவிதைகள் எழுதுவதன் வழி இலக்கியத்தில் ஈடுபட்டவர் த.குமரன். கூலிம் தியான ஆசிரமத்தின் நவீன இலக்கியக் கருத்துக் களங்களில் பங்கெடுத்து நவீன இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கினார். வல்லினத்தில் வழி இலக்கியம் குறித்த புரிதல்களை வலுப்படுத்திக்கொண்டார். சிங்கை சிறைச்சாலை துறையில் காவல் துறை அதிகாரியாகி பணியாற்றும் இவர் கவிதை போட்டிகளில் அதிகம் பங்கெடுத்து பரிசுகளும் வென்றுள்ளார். சில சிறுகதைகள் எழுதியுள்ளார்.

முகநூல் : https://www.facebook.com/kumaraa.kadaaram

2 comments for “சிறுத்தை

  1. September 2, 2021 at 9:38 pm

    கதை களத்துக்கேற்ற நடை. காட்டைப் பழித்ததால் மாலனுக்கு அந்த விநோத நோய் வந்திருப்பதை தர்க்கத்தோடு சொல்கிறார். காடு வளர்ந்து பிரம்மாண்டமாவதை எழுத்தின் வழி உணரமுடிகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...