புதிய படைப்பாளிகள் சிறப்பிதழ்: ஒரு பார்வை

வல்லினம் ஜூன் 2007 முதல் மலேசியாவிலிருந்து  வெளிவரும் ஒரு முக்கியமான இலக்கிய இதழ். தொடக்கத்தில் அச்சிதழாக வரத் தொடங்கி 2009 முதல் இணைய இதழாகியுள்ளது. இதுவரை 51 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் உருவானதைக் குறித்த ஒரு சுவாரஸ்யமான கட்டுரை இணைய இதழின் முகப்பில் உள்ளது. ஒரு இலக்கிய இதழைத் திட்டமிட்டு நடத்துவதில் உள்ள ஆர்வம், உழைப்பு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளையும் வல்லினம் இதழும் சந்தித்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ‘சொல் புதிது’ இதழை நடத்திய அனுபவத்தை அந்தக் கட்டுரை நினைவுபடுத்தியது. மலேசிய எழுத்தாளர்களின் பங்களிப்புடன் உலகெங்கிலுமுள்ள படைப்பாளிகளின் எழுத்துகளையும் வல்லினம் தொடர்ந்து வெளியிடுகிறது.

செப்டம்பர் 2021 இதழ் ‘புதிய படைப்பாளிகளின் கதைகளுடன் வெளியானது. கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுதி வரும் இளம் படைப்பாளர்களுடைய கதைகள். அதில் சிலரது கதைகள் முதன்முதலாக வெளியாயின. வல்லினத்தின் முக்கியமான ஒரு முயற்சி இது. புதிய படைப்பாளிகளுக்கான களத்தை அமைத்துத் தருவதென்பது ஒரு இதழின் அடிப்படைக் கடமை.

புதிய படைப்பாளிகள் சிறப்பிதழில் பங்களித்துள்ளவர்களில் ஓரிருவரின் கதைகளைத் தவிர பிறரது கதைகளை முதன்முறையாக நான் வாசிக்கிறேன். இந்தக் கதைகளைக் குறித்த உரையாடல் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களின் மனப்போக்கையும் கதையை அணுகும் விதத்தையும் விளங்கிக் கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

புனை கதை எழுதப்பட்ட பிறகே வாசிக்கப்படுகிறது. நாம் வாசிப்பது நிகழ்ந்து முடிந்த ஒன்றை. அதன் உருவாக்கத்தில் இருப்பது ஒருவர் மட்டுமே. எழுத்தாளன். அந்த வேளையில் கதை நிகழ்கிறது, மொழியின் வழியாக அதை எழுத்தாளன் நிகழ்த்துகிறான். ஒரு கருவியாக மட்டுமே.

எனவே, அது இப்படி அமைந்திருக்கலாம், இதுபோல எழுதியிருக்கலாம் என்று சொல்வதெல்லாம் ஒரு வகையில் போஸ்ட் மார்டம்தான். ஆனால் இந்த உரையாடல், இதில் பரிமாறப்படும் கருத்துகள் அடுத்து எழுதப் போகும் கதைக்கு உருவாக்கத்தில் மறைமுகமாக உதவக்கூடும். கதையின் உருவம் (body) நுட்பங்கள் (technique) சார்ந்து சில தெளிவுகளைத் தரக்கூடும்.

கதையின் உருவம், மொழி, வெளிப்பாடு சார்ந்து இங்கு விவாதிக்கப்படும் சில விதிகள் கறாரானவை அல்ல. எல்லா கதைத் தளங்களுக்கும் கருப்பொருட்களுக்கும் பொருந்துபவையும் அல்ல. ஒருவித வழிகாட்டுதல்கள் மட்டுமே. ஒவ்வொரு கதையும் எழுதப்படும்போது தனக்கான விதிகளை தானே உருவாக்கிக்கொள்ளும். அவ்விதிகள் கச்சிதமாக அமைவது எழுதுபவனின் பயிற்சியையும் முயற்சியையும் வாசிப்பையும் பொறுத்தது.

ஏற்கனவே சிறுகதைகளைக் குறித்த எனது முந்தைய கட்டுரைகளில் சொல்லியிருப்பதுபோல இன்று புனைவெழுத்தாளர்களுக்கான வெளி மிக விரிவானது. விரைவானதும்கூட. எழுதியதை உடனடியாக உலகெங்கும் உள்ள வாசகர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய வசதி வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொரு இணைய இதழிலும் குறைந்தது பத்து கதைகள் இடம் பெறுகின்றன. அதில் சரிபாதி புதியவர்களின் கதைகள்.

இதிலுள்ள சவால், இத்தனை பேருக்கு நடுவில் தன்னுடைய கதையை தனித்துவப்படுத்துவதும் வாசிக்கச் செய்வதும்தான். கதை வெளியானவுடன் அதைப் பற்றிய ஒரு கவனம் உருவாகும்போது கூடுதலாக சிலபேர் வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அந்த கவனத்தைப் பெறுவதுதான் புதிய எழுத்தாளர்களுக்கான பெரும் சவால். அப்படியொரு கவன ஈர்ப்பை நிகழ்த்தும் வகையில் கதைகள் அமையவேண்டும். பிற கதைகளிலிருந்து தன்னை தனித்துவப்படுத்திக்கொள்ளும் தகுதிகளைக் கொண்டிருக்கவேண்டும். மின்னி மறையும் எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு நடுவில் அக்கதை தனித்துவத்துடன் ஒளிர்ந்து நிற்கவேண்டும். முக்கியமானது, அந்த எழுத்தாளரின் பெயர் திரும்பத் திரும்ப நினைவில் வந்து மோதும்படியான கதையாக அது அமைந்திருக்கவேண்டும். இன்று எழுதிவரும் எண்ணற்ற புதிய எழுத்தாளர்களிடையே மயிலன் ஜி சின்னப்பனும் பா.திருச்செந்தாழையும் கவனம் பெற்றது அப்படித்தான்.

வல்லினம் சிறப்பிதழில் வெளிவந்திருக்கும் பதிமூன்று கதைகளுமே நல்ல வாசிப்புத்தன்மையைக் கொண்டுள்ளன. கதை வடிவிலும் மொழியிலும் கச்சிதமும் செறிவும் கூடி வந்துள்ளன. வாசிப்பை இடையூறு செய்யும் வகையிலான வாக்கியக் குழப்பங்களையோ இலக்கணப் பிழைகளையோ காண முடியவில்லை. இதெல்லாம் அத்தனை முக்கியமா என்று கேட்டால், சீரான வாசிப்பை உறுதிப்படுத்துவதுதான் ஒரு புனைவெழுத்தின் முதல் தகுதி என்பது என் எண்ணம். இந்தக் கதைகளை எழுதியிருக்கும் பலருக்கும் கதையை சரியாகச் சொல்லத் தெரிந்திருக்கிறது.

புதியவர்களின் சிறப்பிதழுக்காக இக்கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கும் ம.நவீன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவின் உழைப்பும் கதைத் தேர்வில் அவர்கள் காட்டியிருக்கும் அக்கறையும் பாராட்டுக்குரியது. சிறப்பிதழ் என்பதற்காக கதைகளின் எண்ணிக்கையில் மட்டும் கவனம் செலுத்தாமல் தகுதியான கதைகளை மட்டுமே பரிசீலித்து, தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பதினான்கு கதைகள் ஒவ்வொன்றுமே தனித்துவமானவை, வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டவை, சொல்முறையிலும் மொழியிலும் வெவ்வேறானவை. ஒரே இதழில் அமைந்த, வெவ்வேறு தன்மைகள் கொண்ட கதைகள் என்பது இதழுக்கு மட்டுமல்லாமல் பிற கதைகளுக்கும் உரிய இடத்தை உறுதிசெய்யும் சாத்தியத்தையும் கொண்டிருக்கின்றன. கதைகள் ஒவ்வொன்றும் இன்னொரு கதையின் இடைவெளியை இட்டுநிரப்புகின்றன. ஒன்றையொன்று பூர்த்தி செய்துகொள்கின்றன.

பலரும் தொடக்கநிலையில் இருப்பவர்கள், சிலருக்கு முதல் கதைகள். ஆனால் இவர்கள் அசாதாரணமான கதைக்களங்களை துணிச்சலுடன் அணுகியிருப்பது வியப்பளிக்கிறது. நம்பிக்கையைத் தருகிறது.

மனிதன் தன் மரணத்துக்குப் பின் தனக்கொரு தொடர்ச்சியை விரும்புபவன். நிரந்தரமற்ற இவ்வுலகில் தன்னை மரணமற்றவனாக நிலையானவனாக உணர அந்தத் தொடர்ச்சி அவனுக்குத் தேவைப்படுகிறது. அவனது வாழ்வின் மொத்த இலக்குமே அதுதான்.  “பேரன் பேத்திகளின் நினைவில் இருக்கும்வரை அழிவில்லை” என்ற உணர்வே பாசமாக கொஞ்சலாக மாறுகிறது.

இந்திய மரபில் நீத்தார் சடங்கு மிக முக்கியமானது. முந்தைய தலைமுறையுடனான தொடர்பை உறுதிப்படுத்தும் தவிர்க்கமுடியாத கண்ணியாகக் கருதப்படும் ஒன்று.

ஒரு சிறுகதை இவ்வாறான ஒரு அடிப்படை உணர்வைத் தீண்டும்போது உடனடியாக அந்தக் கதையுடனான உளப்பூர்வமான பிணைப்பு ஏற்பட்டுவிடுகிறது. தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களால் திரும்பத் திரும்ப எழுதப்பட்டபோதும் அந்த உணர்ச்சி மழுங்குவதில்லை. கதை அந்தப் புள்ளியைத் தொட்டவுடனே மனம் மேலும் தீவிரத்துடன் பொங்குகிறது. 

நீத்தார் சடங்கை அடிப்படையாகக்கொண்டு மனத்தின் ஆழங்களை ஊடுருவிப் பார்க்கும் கதை பாலாஜி பிருத்விராஜின் ‘அனல் அவித்தல்’. திருத்தமான சொல்முறை, பிசகின்றி கச்சிதமாக உணர்ச்சிகளை சரியான அளவில் கடத்தும்படியான உரையாடல்கள், மிகுதியான கொதிப்புகளோ வெதும்பல்களோ இல்லாத சித்தரிப்பு என அனைத்துக் கூறுகளும் சரிவர அமைந்திருக்கும் ஒன்று.

0

புலன்களைக்கொண்டே நாம் இந்த உலகை அறிகிறோம். அந்த அறிதல் மனத்தின் ஆழத்தில் படிந்து உருவாக்கும் சித்திரங்கள் விசித்திரமானவை. நாம் சோர்ந்திருக்கும் சில வேளைகளில் தன்னிச்சையாக அவை மேலெழுந்து பல்வேறு உணர்வுநிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்லும். இயல்பான, சாதாரண நிலையில் அவ்வாறான அனுபவம் சிறு சலனம்போல விலகிச் சென்றுவிடும். சமயங்களில் கனவாக உருப்பெற்று கலைந்து மறையும். ஆனால், கடுமையான உளச் சிக்கல்களுக்கு ஆட்பட்டிருக்கும் சூழலில் அவ்வாறான அனுபவங்களும் அவற்றைக் கொண்டு நமக்குள் படிந்திருக்கும் ஆழமான கற்பனைகளும் சேர்ந்து புதியதொரு உலகத்துக்குள் இட்டுச் சென்று அதனையே நம்பவும் கட்டாயப்படுத்தும்.

இவ்வாறான உளவியல் அனுபவங்கள் புனைகதைகளுக்கான எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டவை. அவ்வாறான ஒரு சாத்தியத்தைக் களமாகக் கொண்டது த.குமரனின் ‘சிறுத்தை’.

ஆழ்மனத்துள் கிடக்கும் அச்சம் புறத்தில் முரட்டு தைரியமாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும். எச்சரிக்கைகளை புறந்தள்ளும். சாகசவாதியாக உருப்பெருக்கிக் காட்டும். இந்த மனக்கோலங்களை அதனை நம்பகத்தன்மையுடன் துலக்கிக் காட்டும் காட்சிச் சித்தரிப்புமாய் அமைந்திருக்கும் விதத்தினால் இக்கதை கவர்கிறது.

மந்தி மலை குறித்த வெவ்வேறு செவிவழிக் கதைகள், சிறுத்தைகள் பற்றிய ஊகங்கள், கதைகள், மாயாவி சமூகம், காதல் மரங்கள், இனுவு பிரார்த்தனை என கதையின் மாயத்தன்மைக்கு உரமேற்றும் பல்வேறு விவரங்கள் கதைக்கு செறிவூட்டியுள்ளன.

குறிப்பிட்ட ஒன்றைப் பற்றிய பேராவலும் அதன் ஆழத்தில் திரளும் அச்சமும் கூடி அதுவாகவே தன்னை பாவித்துக்கொள்ளும் மனப்பிறழ்வு நிலையைச் சொல்லும் பல கதைகளின் முடிவை எளிதில் ஊகிக்க முடியும். இந்தக் கதையிலும் அது நிகழ்ந்திருக்கிறது. 

0

கிராமத்து மனிதர்களின் எளிமையும் இயல்புமான சித்திரத்தினூடாக அவர்களிடையே நிலவும் உறவின் ஆழம் அதிலுள்ள உள் விரிசல்கள் இரண்டையும் மிக நுட்பமாக சொல்லும் கதை பிரானாவின் ‘வெண்ணப்புட்டு’.

பிள்ளைகள், குடும்பம், உறவுகள் என்று மனிதன் தன்னை ஒரு சமூக விலங்காக அடையாளப்படுத்திக்கொள்ள முனைந்தபோதும் உண்மையில் அது பாவனைதான். அந்த பாவனையை அவன் அசலென்று நம்புந்தோறும் அவனுக்குள் இருக்கும் ஆதி உணர்வுகள் மறைந்திருக்கும் அல்லது வலுவிழந்திருக்கும். அவனது வெளிப்பாடுகளை நடவடிக்கைகளை செய்கைகளை பகுத்தபடியே செல்லும்போது இறுதியில் எஞ்சி நிற்பது சுயநலம் அல்லாது வேறொன்றில்லை. அதுவே உயிரியல்பு.

இத்தனை உக்கிரமான யதார்த்தத்தை வெளிப்படையாகச் சொல்வதை நம்மால் தாங்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடிவது அனைத்தின் மீதான நம்பிக்கையையும் குலைத்து ஒன்றுமில்லாக்கிவிடும் என்பதால்தான் கலை தன் பாவனைகளைக்கொண்டு அதனை பசப்பி வெளிப்படுத்துகிறது. வெறுமையின் மீதான வண்ணங்களைத் தூவுகிறது.

இந்தக் கதையை சிறுமியின் கோணத்தில் சித்தரிப்பதுமே அப்படியொரு பாவனைதான். அதுவே இக்கதையை எளிமையாக அணுக உதவுகிறது.

பழைய வாழ்க்கை முறையில் தம்பதிகளுக்கு இடையிலிருக்கும் அன்யோன்னியம், கருப்பு வெள்ளைப் படங்கள், தாத்தாவின் காளிவேஷம், கருப்புக் கண்ணாடி போன்ற விவரணைகள் கதையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் அதே வேளையில் நகரவாழ்வின் நெருக்கடிகளை விவரிக்காமல் பூடகமாக உணர்த்தியிருக்கிறது. 

சிறுமியை வசீகரிக்கும் உறவுகள் உலவும் கிராமம் சார்ந்த புறச் சித்திரங்களை இன்னும் சில வரிகளில் அழுத்தமாக தந்திருக்க முடியும்.

கதையின் தொடக்கத்தில் ஒன்றும் இறுதியில் ஒன்றுமாக கிராமியப் பாடல் அமைந்திருக்கிறது. சுவாரஸ்யமான பாடல்கள். முதல் கதை எழுதுபவர்களின் ஆர்வம் இவ்வாறான சில நுட்பங்களை கைகொள்வதில் ஆச்சரியமில்லை. தொடர்ந்து வாசிக்கும்போது, எழுதும்போது நல்லவொருகதைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது தன்னாலேயே புரிந்துவிடும்.

தமிழ்ச் சிறுகதையில் கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் உள்ளிட்டோரின் கதைகள் வழியாக நாம் அறிந்திருக்கும் களங்கமின்மையும் எளிமையுமான சிறுவர்களின் உலகம் எத்தனை தூய்மையானது, நிபந்தனைகளற்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

0

நவீன இளைஞர்களின் மன உலகம், பாலியல் சார்ந்த மிகைக் கற்பனை இவ்விரண்டையும் இணைத்துப் பார்க்கும் கதை பிரசன்ன கிருஷ்ணனின் ‘நட்சத்திரங்களின் வாக்குமூலம்’.

பலவீனமான உணர்வமைப்புகளின் மீதமைந்த வாழ்வின் உள்ளீடற்ற தன்மையின் உடலியல் வெளிப்பாடுகளும் அது தருகிற அச்சமும் விளக்க முடியாதது. ஒரு காட்சியாக, அது தரும் அதிர்ச்சியாக, அந்த அதிர்ச்சியின் விளைவாக ஏற்படும் உடலின் கோளாறாக, அதன் விளைவாக ஏற்படும் மனச் சரிவுகளை நுட்பமாகவும் விரிவாகவும் சித்தரித்திருக்கிறது. முன்னும் பின்னுமாக சம்பவங்களை நகர்த்தியிருப்பதன் வழியாக கதையின் சுவாரஸ்யம் கூடியிருக்கிறது. அதேபோல கதையின் முடிவு சற்றும் எதிர்பாராததாய் நம்ப இயலாததாய் அமைந்திருக்கிறது. தீர்வற்ற ஒரு மனச் சரிவு எந்த எல்லைக்கும் ஒருவனை கொண்டு செல்லும் என்பதை மட்டுமே பதிலாக வைத்துக்கொள்ள முடியும்.

புதிதாக எழுத முனையும் இளைஞர்களில் சிலர் கதையை கவனப்படுத்தும்பொருட்டு கலவியின் புற இயக்கங்களை ஒரு அம்சமாக கதையில் சேர்க்க முனைவதுண்டு. உடனடி கவன ஈர்ப்பை அக்கதைகள் தருகின்றன என்ற ஆர்வமே அத்தகைய உத்தியை நாடச் செய்கிறது.

உடலின் காமத்தை வாசித்து கிளர்ச்சி கொள்ளும் காலம் இப்போதில்லை. அதற்கான கற்பனைக்கெட்டா சாத்தியங்களுடன் எல்லையற்ற ஊடகவெளி திறந்து கிடக்கிறது. ஆனால் காட்சிகளால் தொட முடியாத மனத்தின் ஆழங்களை இலக்கியம் மட்டுமே அடைய முடியும். காமத்தின் அக ஆழங்களை அதன் இருளை அதன் அடைபட்டிருக்கும் வாசல்களை முட்டி முட்டித் திறக்க முயலலாம். இன்னும் எத்தனை பேர் வேண்டுமானாலும் எழுதிப் பார்க்கலாம்.

0

போர்ச் சூழலில் போருக்குத் தொடர்பற்ற ஒருவன் மரணத்துக்கு அஞ்சிக் கிடப்பதும் அவனை அதிலிருந்து இன்னொருவன் நம்பிக்கையளித்து மீட்பதுமான அடர்த்தியான கதை ஜி.எஸ்.எஸ்.நவீனின் ‘மரணக்குழி’.

இனி மீட்பில்லை என்று தன்னையே கைவிட்டுவிட்ட நிராதரவற்ற நிலையில் ஒரு சொல் அனைத்தையும் மாற்றிவிடும். கைகொடுத்து மேலே தூக்கிவிடும். அதுவரையிலும் எதுவுமே தெரியாத இருளினூடே சிறு துளி வெளிச்சத்தைக் காட்டும். அங்கிருந்து அனைத்தும் மாறிவிடும். அந்தக் குறிப்பிட்டத் தருணம் வந்தமையும்போது அதை கைகொண்டுவிட்டால் இன்னொரு வாழ்க்கை.

உண்மையில் இது மரணக்குழி இல்லை. அன்றாட வாழ்வின் ஒரு குறியீடாகத்தான் அமைந்திருக்கிறது. எப்போதுமே அச்சுறுத்தும் சாத்தியங்களை கொண்டிருக்கும் வாழ்வில் இப்படி ஒரு குரல், ஒரு சொல் நம்மை தேற்றித் தர வாய்ப்பிருக்கிறது. அதிலிருந்து மீண்டு விடும் சாத்தியம் உள்ளது.

நவீனின் முந்தைய சில கதைகளைப் படித்திருக்கிறேன். அடர்த்தியான மொழியும் செறிவான வாக்கிய அமைப்பையும் கொண்டவை. ஒவ்வொரு வார்த்தையையும் வாசகன் உள்வாங்கியபடியே நகரும் கூரிய கவனத்தைக் கோருபவை. சூழலையும் பின்னணியையும் வலுவாகக் கொண்டிருப்பவை. ஆனால் இதற்கு நேர்மாறாக அவரது உரையாடல் மொழி மிக இயல்பானது. மண் மணம் கொண்டது. இவ்விரண்டும் இணையும் போது கதை தன்னளவில் உறுதிப்பட்டுவிடுகிறது.

குணா கவியழகன், சயந்தன், அனோஜன், அகர முதல்வன் உள்ளிட்ட ஈழ எழுத்தாளர்கள் பலரது கதைகளையும் நினைவுக்கு வரச் செய்தது இக்கதை.

0

உருவகக் கதை என்று எண்ணும்படியான உபதலைப்புகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டது விஜயகுமாரின் ‘ம்ருகமோக்ஷம்’. உண்மையில் உருவகக் கதைகள் மிக எளிமையான வடிவையும் மொழியையும் கொண்டவை, இக்கதை அவ்வாறன்றி அடர்த்தியான மொழியையும் கட்டமைப்பையும் கொண்டிருக்கிறது.

வழக்கமான, இயல்பான மொழியைக் கொண்ட கதைகளுக்கு நடுவே தத்துவத்தின், யோகத்தின் சொல் மொழியைக் கொண்ட ஒன்று. இந்தக் கதையின் ஆதாரம் தத்துவம். மனித வாழ்வின் பல்வேறு நிலைகளை வேற்றுயிர்களின் வடிவினைக்கொண்டு விளக்க அல்லது விளங்கிக் கொள்ள முயலும் ஒன்று.

வழக்கமான கதையைப் படிப்பதுபோல இந்தக் கதையை வாசிக்க இயலாது. மிகவும் நுட்பமான சொல்லாடலை ஒவ்வொன்றாகப் பிரித்துப் புரிந்துகொண்டே முன்னகர முடியும். யோகத்தின் கூறுகளையும் தத்துவத்தின் அடிப்படைகளையும் உருவகங்களின் வழியாக ஒரு புனைகதையாக மாற்றுவதென்பதே சவாலான முயற்சி. அதைத் துணிச்சலுடன் முயன்றுள்ளது இக்கதை.

இதுபோன்ற தத்துவ விசாரங்களை ஒரு சிறுகதைக்குள் அமைப்பதில் விபத்தாக முடியும் சிக்கல் உண்டு.

இந்தக் கதையை இன்னொரு கோணத்தில் ஒரு விஞ்ஞானக் கதையாக அல்லது சூழலியல் கதையாகவும் அணுக முடியும்.

0

குற்றவுணர்ச்சி ஒரு நிழலாகி தொடர்ந்துத் துரத்தி வரும் மனநிலையை அடிப்படையாகக் கொண்டது ஹரிராஸ்குமார் ஹரிஹரனின் ‘வெண்நாகம். இந்திய மரபில் பாம்பு முக்கியமான ஒரு படிமம். உளவியல் ஆராய்ச்சியிலும் பாம்பின் இடம் அதேயளவு முக்கியமானது. திரும்பத் திரும்ப வெவ்வேறு வடிவில் படிமமாகவும் குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிற்பம், ஓவியம், கவிதை என அனைத்து கலை வடிவங்களிலும் பாம்பின் உருவம் முக்கியமான இடத்தை வகித்துள்ளது. காமத்தின் குறியீடாகவும் இது கருதப்படும் இது கனவுகளின் பல்வேறு தோற்ற நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் ஒன்று.

உலகிலுள்ள பாம்பு வகைகளில் குறிப்பிட்ட சில வகை மட்டுமே நச்சுத் தன்மை கொண்டவை என்று உரக்கச் சொல்லப்பட்டாலும்கூட பாம்பின் மீது நம் ஆதி மனம் கொண்டுள்ள அச்சம் இன்னும் விலகியபாடில்லை.

அரவத்தின் மீதான அச்சத்தை, அது தரும் மனக்குழப்பத்தைத் தொட்டுச் செல்லும் இக்கதைக்குள் நுட்பமாக அமைந்திருக்கும் காமம் கதையின் முக்கிய புள்ளியாகும்.

0

மிக நுட்பமான அந்தரங்கமான உணர்வின் அடிப்படையில் புனைகதைக்குரிய பூடகத்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும் கதை ஸ்ரீவிஜியின் ‘பூஜா அன் ஹாத்திக்கு’.

இரு பெண்களுக்கிடையிலான அக்கறைமிக்க, உளப்பூர்வமான உறவு, இன்னவென்று வகைப்படுத்த முடியாத அதன் ஆழம், வேறுவிதமாக அதைப் புரிந்துகொள்வதில் உள்ள சாத்தியம், சட்டென்று அது துண்டுபட்டுப்போகும் யதார்த்தம் என பல்வேறு கோணங்களையும் மிக எளிமையான விதத்தில் நகர்த்திச் செல்கிறது இந்தக் கதை.

சிறிது கவனம் பிசகினாலும் வேறு விதமாக அர்த்தமாகிவிடும் அபாயம் கொண்ட கதைக்களம் கவனமாகவும் கச்சிதமாகவும் கையாளப்பட்டுள்ளது. சொல்லியிருப்பதைவிடவும் சொல்லாமல் விட்டதில் நிறைய சாத்தியங்களைக் கதையின் இடைவெளியில் நிரப்ப முடிந்திருக்கிறது.

பெண்களின் உலகம், உடல் சார்ந்த அவர்களது கவனம், கவலைகள், கண்காணிப்பு என எல்லா விஷயங்களையும் கதையோட்டம் கவனத்தில் கொண்டுள்ளது. அதே சமயத்தில் அவை பிரச்சாரத் தொனியில்  அமையவில்லை என்பது முக்கியமானது.

இதுபோன்ற நுட்பமான கதைக்கருவைக் கொண்டிருக்கும் கதைகளில் கதாபாத்திரங்களும் கதைச் சூழலும் உயிர்ப்புடன் அமைவது முக்கியமானது. அதுவே கதையின் மேற்பரப்பில் வெளிப்பட்டிருக்காத ஆழங்களுக்கு வாசகனை இட்டுச் செல்ல உதவும். இக்கதையில் அது இயல்பாக அமைந்திருக்கிறது.

0

கைகளில் உருளும் கலைடாஸ்கோப் நொடிக்கு நொடி வண்ணங்களையும் வடிவங்களையும் உருமாற்றிக் கொண்டேயிருக்கும். மனமும் அப்படித்தான். ஓரிடத்தில் கால்கொள்ளாது ஒன்றை அடுத்து இன்னொன்று என தாவியபடியிருக்கும். அதன் போக்குகளையும் நிலைதடுமாற்றங்களையும் உற்றறியவே அறிவியலும் உளவியலும் யோகமும் பல்வேறு துறைகளும் தொடர்ந்து முயல்கின்றன. மனத்தின் ஆழத்தை அறியும் முயற்சியின் ஒரு பகுதியே இலக்கியமும் கலையும்.

அரவிந் குமாரின் ‘அணைத்தல்’ கதையும் மனத்தின் பல்வேறு நிறங்களையும் நிலைகளையும் சுட்டிக் காட்ட முனைகிறது. அறம், நீதி, கடமை, நியாயம் என்று வெவ்வேறு மதிப்பீடுகளை சார்ந்து ஒட்டுமொத்த சமூகத்தின் வரையறைகளை பொதுவாகவே ஏற்றுக் கொண்டிருந்தபோதும் தனிப்பட்ட ஒரு சூழ்நிலையில், காரண காரிய தர்க்கம் எதுவுமில்லாமல் தனக்கான ஒரு உறுதியுடன் அவற்றை மீறுவதோ அல்லது பொருட்படுத்தாமல் இருப்பதோ நடப்பதற்கான சாத்தியங்கள் எப்போதும் உண்டு. அந்தந்த சூழ்நிலையில் குறிப்பிட்ட அந்த நேரத்துக்கான மதிப்பீடு அது. அதில் பொதுவான மதிப்பீடுகள் செல்லுபடியாகாது. இது ஏன் இப்படி நிகழ்கிறது என்பதற்கான பதிலும் இல்லை. வினைப்பயன், பாவம் போன்றவை வரையறைக்குள் இருத்துவதற்கான சில கருவிகளாகச் சொல்லப்பட்டபோதும் எல்லா நேரங்களிலும் அவை செல்லுபடியாவதில்லை.

அணைத்தல்’ கதையின் உள்ளடுக்குகள் இவ்வாறான தர்க்கங்களைத் தொடர்ந்து அடுக்கிச் செல்கின்றன. கதையில் உள்ள சின்னஞ்சிறு கதாபாத்திரங்களும்கூட தமக்கான தர்க்கத்துடன் கதையின் ஒட்டுமொத்த உரையாடலுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

சீராகத் தொடங்கி அடுத்தடுத்த கதையின் அடுக்குகள் இயல்பாக விரிந்து கச்சிதமாக முடியும் இக்கதையின் இன்னொரு முக்கியமான பலம் மலேசியப் பின்னணி.

0

தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் பலசமயங்களில் சுவாரஸ்யமானவை. விநோதமானவை. அதுவரையிலும் விடை தெரியாமல் முட்டி மோதிக்கொண்டிருக்கும் ஒரு புதிரை சுலபமாகத் திறந்து காட்ட வல்லவை. நடந்து முடிந்த பிறகு அது அப்படித்தான் நடந்ததா என்றே சந்தேகம் எழும். அந்த நேரத்தில் இருந்த நம் மனநெருக்கடியைத் தெரிந்துகொண்டு அப்படியொரு சம்பவம் நடந்ததா என்றுகூட நினைக்கத் தோன்றும்.

வாழ்வின் முக்கியமான ஒரு முடிவை எதிர்நோக்கியிருக்கும் ஒருவன். அப்போதுதான் தன்னுடைய வெற்றிப் பாதையில் முதலடி எடுத்து வைத்திருக்கும் இன்னொருவன். இருவரையும் ஒரு தற்செயல் பயணம் சந்திக்கச் செய்கிறது. இயல்பான உரையாடல். அது நடந்து முடியும்போது முதலாமவனுக்கும் ஒரு தெளிவு பிறக்கிறது.

தன் கனவு நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கப்போகும் பெரும் தொழிலதிபரை அந்த இளைஞன் எப்படி தன்வசப்படுத்தினான் என்பதைச் சொல்வதாக முடியும் கதை சிவமணியத்தின் ‘ஒப்புரவு’.

சீரான கதை. சிக்கலில்லாத சித்தரிப்பு. இருவருக்கும் இடையிலான உரையாடலின்போது எழும் மனஉணர்வுகளை வெளிக்காட்டுவதுபோல புறச் சித்தரிப்புகள். உதாரணமாக,

தொழிலதிபர்களுக்குகுருவை வெளிப்படையாத் தேடுறதுலேயோ, அவங்கிட்ட யோசனை கேட்குறதுலேயோ நெறைய தயக்கம் இருக்கு. அதுவே அவங்களுக்கு. பணிஞ்சபடி பேசுற  என்னை மாதிரியான ஆட்கள் கிட்டே யோசனை கேட்கிறதுலே பெரிய தயக்கமில்லை.”

வேகமாக வீசிய எதிர்காற்று, மணலை அள்ளி எடுத்து வண்டியின் முன்கண்ணாடியில் கொட்டியது. ரிஷி சன்னமாக நிலைதவறினான்காரின் கண்ணாடியில் தண்ணீர் தெளித்துஇணை துடைப்பான்களை இயக்கித் தெளிவானான்.

பொதுவாகவே புதிய ஒரு நபரைக் கண்டதும் நம் மனம் அவரை சற்று கீழானவராகவே எடைபோடும். அது மனித இயல்பு. அவரது மேதமை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும்போது முதலில் அதை ஒப்புக்கொள்ள மறுத்து பொறாமையும் அலட்சியமும் தலைதூக்கும். இதை அவர் பொருட்படுத்தாமல் தன்னியல்பில் இருக்கும்போது ஒரு நொடியில் தணிந்து அவரை இணக்கமாக உணரத் தொடங்குவோம்.

இந்த உணர்வுகளை கதை மிக இயல்பாக கையாண்டிருக்கிறது.

மேலாண்மை நுட்பங்களை கதையில் சொல்லும்போது ஒருவித lecturing tone அமைவதுண்டு. ஆனால், இதுபோன்ற கதைகளில் அதைத் தவிர்க்க முடியாது. கதையின் வாசிப்புக்கு ஊறு செய்யாமலிருந்தால் போதும்.

இந்தக் கதையின் இன்னொரு முக்கியமான அம்சம் கதையின் முடிவு. காரில் அவன் ஏறும்போது அவன் கோவில் அடையாளத்தைச் சொன்னதும் அவன் கோவிலுக்குத்தான் போகிறான் என்று இவன் எண்ணுகிறான். அப்போதிருந்த மனநிலையில் தானுமே கோயிலுக்குப் போகலாம் என்று தீர்மானிக்கிறான்.

ஆனால், வந்தவன் கோயிலருகில் இறங்கி ஒரு உணவு விடுதியை நோக்கி நடக்கிறான், நண்பர்களுடன் விருந்துக்காக.

இதுவுமே இவன் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.

ஒரு குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், இந்தக் கதையின் கடைசி பத்தி இல்லாமல் இருந்தால் கதையின் முடிவு இன்னும் அழுத்தமாக அமைந்திருக்கும். இப்போது இருப்பது வலிந்து சேர்க்கப்பட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

0

போர்க் குரல்கள் இல்லாத இலங்கைக் கதை ப்னாஸ்ஹாசிமின் ‘காவல்காரன்’. வாசிக்க சற்று சிரமப்படும்படியான மொழியில் அவ்வளவாய் பழக்கப்படாத சொற்களின் பின்னணியில் அமைந்தது. நமக்குப் பழக்கமில்லாத ஒரு புலத்தில் கதை நிகழும்போது வாசிப்புக்கு சற்று கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளும் அவசியத்தை வலியுறுத்துகிறது.

கதையின் களம் மாந்திரீகம் சார்ந்தது என்பது அடுத்த சவால். மாந்திரீக விஷயங்களில் ஆர்வம்கொண்ட ஒருவன் அதைத் தேடிப் போய் அதிலேயே தொலைந்துபோவதுதான் கதையின் மையம். 

பொதுவாகவே இதுபோன்ற மாந்திரீக விஷயங்களை பகுத்துணர்ந்து புரிந்துகொள்வதோ விளக்குவதோ சாத்தியமில்லை. விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சிக்குப் பின்னும், மனிதனின் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களின் மீதான நம்பிக்கை என்பது அப்படியேதான் இருக்கிறது. இன்னும் நமது கலை, இலக்கிய வடிவங்களில் இதுபோன்ற அம்சங்களுக்கு கணிசமான இடம் இருக்கிறது. மாந்திரீகம் ஒரு இலக்கிய வகைமையாகவே இருக்கிறது. அதிபுனைவுக்கு பொருத்தமான களம் என்பது கூடுதல் பலம். மாய யதார்த்தம், மீமெய்மை என்று பல்வேறு விதமான அணுகுமுறைகளில் சொல்லப்படுகிறது. உலகெங்கும் ஏராளமான கதைகள் எழுதப்படுகின்றன, வாசிக்கப்படுகின்றன.

இந்த வகைமையில் தமிழில் குறிப்பிடத்தகுந்த கதைகள் வெளியாகியுள்ளபோதும் அதிகமும் அவை எழுதப்படுவதில்லை. புதிய எழுத்தாளர் ஒருவர் அப்படியொரு கதையை எழுத முனைந்திருப்பது பாராட்டுக்குரியது.

0

சிறுகதையின் தொடக்கம் மிக முக்கியமானது என்பது பாலபாடம். நல்ல கச்சிதமானத் தொடக்கத்துடன் கூடிய கதை வாசகர்களை உடனடியாக உள்ளிழுத்துக் கொள்ளும். ‘இரத்தம் உறைந்த கழுத்து, சீவிய நுங்குபோல் கண்கள்’ என்று கதை தொடங்கும்போதே நம் புலன்கள் அனைத்தும் ஒன்று குவிந்து கதையில் ஒன்றிவிடுகின்றன.

போருக்குப் பின்பான இறுக்கமான காலகட்டத்தில் நடக்கும்  செந்தாழை கதையின் தொடக்கம் இது. முகமது ரியாஸ் எழுதியது.

தங்க நாணயங்களுக்காக நம்பி வந்தவனையும் அவன் மனைவியையும் ஜப்பானிய இராணுவத்திடம் காட்டிக் கொடுப்பவனின் கதை. அவனது குற்றவுணர்ச்சியே வெட்டி வைத்தத் தலையையும் அதன் கண்களையும் கண்டு அஞ்சுகின்றன.

மனத்தின் இருண்ட அடுக்குகளை நோக்கிச் செல்லும் கதைகள் தனித்துவம் வாய்ந்தவை. எழுதி எழுதி விலக்க முடியாத மர்மம் அது. புதுமைப்பித்தனிலிருந்து இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை தொடர்ந்து அதை முயல்கிறார்கள்.

இதுபோன்ற  கதைகளின் புறச் சூழல் பொருந்தி அமைவது முக்கியமானது. போருக்குப் பின் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிற நகரம். இராணுவத்திடம் சிக்கிவிடக்கூடாது என்று அஞ்சும் மக்கள். எப்படியாவது தப்பிச் சென்றுவிடவேண்டும் என்ற தவிப்பு. பிழைப்புக்காக கிடைக்கும்வேலையை செய்யவேண்டிய நிர்ப்பந்தம். கதைசொல்லியின் மீதான அவளது ஈர்ப்பு. ஆனால் கதைசொல்லியின் மனத்துள் மறைந்திருந்த கள்ளம்.  இத்தனையையும் கதையின் ஓட்டத்தில் அடுக்கடுக்காக இறுக்கமாக அமைந்திருப்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு.

இதற்கு நடுவே அன்னாசிப் பழ சாகுபடி, நண்டு சமைப்பது போன்ற விவரணைகளும் கதையின் வாசிப்புத்தன்மையை சற்றும் குலைக்காது அதை மேலும் சுவாரஸ்யப்படுத்துவதாக அமைந்துள்ளன.

கதையின் ஒற்றை வரி போகிற போக்கில் வருகிறது.

யானைக்கு முன் ஒரு உண்மை உண்டு. தான் யானையென தன்னையறிவது. அது தெரிந்துவிட்டால் எந்த மந்திரமும் யானையைக் கட்டுப்படுத்த முடியாதுஎன்று சிரித்தேன். மீண்டும் நாணயங்கள்க்லிங்..க்லிங்என்றன.

இரண்டாவது முறையாக அல்லது மூன்றாவது முறையாகப் படிக்கும்போதுதான் எத்தனை அழுத்தமான அர்த்தம் பொதிந்த வரி என்பது தெரிய வருகிறது.

ஒவ்வொருவரும் அடுத்தவரை எடைபோட்டு அவர்களை அறியவே முற்படுகிறோம். நாம் யாரென அறிந்துகொள்ளும் முனைப்பு பெரும்பாலும் இருப்பதில்லை. அப்படி அறியும்போது நம்மைப் பற்றிய உண்மைகள் அத்தனை உவப்பானதாக இருப்பதில்லை. எத்தனை மலினங்கள், கயமைகள், பொய்மைகளை உள்ளடக்கி மறைத்திருக்கிறோம் என்பதை அப்படியே நேருக்கு நேர் ஒப்புக்கொள்ளும் துணிவு இருப்பதில்லை.

கதைசொல்லி அந்த நாணயங்களின் மீது ஆசை வைத்தது தொடக்கத்திலிருந்தே அவன் திட்டமா? அல்லது அந்தக் கணத்தில் நிகழ்ந்ததா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

மலேசியாவில் செந்தாழை எனப்படும் அன்னாசி கதையின் ஒரு அழுத்தமான படிமமாக திரண்டு நின்று கதையை உயரமான இன்னொரு தளத்துக்கு நகர்த்திவிடுகிறது.

0

மனித குலத்தின் ஆதி நாட்களை அவன் வாழ்க்கைப் போக்கை அதில் கிளைத்த மோதல்களை அகம் மெல்ல மேலெழுந்து  மூடுவதை என பெரும் ஒரு சித்திரத்தைக் காட்டுகிறது பிரதீப் கென்னடியின் ‘உயிர் மரம்’ குறுநாவல்.

உறுப்புகளின் குறிகளைத் தாங்கியவர்களுடைய பெயராக அந்த உறுப்புகளே நிலைப்பதில் தொடங்கி ஒவ்வொரு அடுக்காக விரிகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ராகுல சாங்கிருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலை இந்தியிலிருந்து மொழிபெயர்த்தேன். குகைவழி, சமூகத்திலிருந்து தொடங்கி இந்திய சுதந்திரத்தின் காலகட்டம் வரைக்குமான மனித குல வரலாறு சுவாரஸ்யமான கதையாக விவரிக்கப்பட்டிருக்கும் முக்கியமான நூல். இந்தக் குறுநாவலைப் படிக்கும்போது அதுதான் நினைவில் எழுந்தது.

சவாலான கதைக்களம். அதற்கேற்ற அடக்கமான சீரான கதைமொழி. சொற்களையும்கூட மிகப் பொருத்தமாக தெரிவு செய்திருக்கிறார். நிறைய புதிய சொற்களையும் உருவாக்கியிருக்கிறார்.

மனித வரலாறு ஒரு பெரிய விருட்சமென விரிந்து தழைத்து உதிர்ந்து மூப்படைந்து மீண்டும் தழைத்து வளரும் ஒன்று என்ற கற்பனை தரும் எழுச்சியை ‘உயிர்மரம்’ என்ற சொல் சாத்தியப்படுத்துகிறது.

எத்தனை முறை மரத்தைப் பார்த்தாலும் சலிப்பதில்லை. ஒரே மரம் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புத்தம் புதிதாகவும் வேறு தினுசாகவும் தெரியும் விந்தையை விளக்க முடியாது.

மனித வரலாற்றின் ஒவ்வொரு ஏடும் அப்படியான வியப்புகளை உள்ளடக்கியது. இன்று இத்தனை காலத்துக்குப் பின் நமது அன்றாட புழக்கத்தில் உள்ள பழக்கங்களை அவை எப்படி தொடங்கியிருக்கும் என்று யோசிப்பதும் ஆச்சரியமானது. மனித சமூக வரலாற்றின் பல்வேறு சாத்தியங்கள் இதுபோன்ற சிந்தனைகளிளும் புனைவுகளிலும் இருந்தே உருவாகியிருக்க முடியும்.

0

இக்கதைகளைத் தவிர, ‘கீரவாணி’ என்ற பத்தியும் இச்சிறப்பிதழில் இடம் பெற்றுள்ளது.

ராகத்துக்கும் உணர்ச்சிகளுக்கும் உள்ள தொடர்புகளைக் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மனோதத்துவ முறையிலும் இசை நுட்பங்களின் அடிப்படையிலும் அதைப் பகுத்தாயும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சாஸ்திரீய சங்கீதத்தை உயரியதாகவும் சினிமா தொடர்பான இசையை அவ்வாறல்லாத ஒன்றாகவும் அணுகும் மனோபாவமும், உயர்ந்தது தாழ்ந்தது என்ற வாதங்களும் முடிவை எட்டாது வெவ்வேறு குரல்களில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பவை. கலையின் தூய்மைவாதம் குறித்த தர்க்கங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மேலெழுந்து புதிய குரல்களில் புதிய சட்டகங்களைக்கொண்டு ஒலித்துக் கொண்டுதான் உள்ளன.

கீர்த்தனைகளைப் பாடுவது உயர்வானது என்றும் அதே ராகத்தில் அமைந்த சினிமா பாடலைப் பாடுவது கூடாது என்பதுமான கருத்தோட்டத்தின் அடிப்படையிலான விவாதத்தை இந்தப் பத்தி ஒரு அனுபவக் கதையாக முன்வைக்கிறது. 

கலை எந்த வடிவிலும் இருக்கலாம், கற்றுக் கொள்ள எதுவும் இருப்பின் அதில் உயர்வு தாழ்ச்சி எதுவும் கிடையாது என்பது அடிப்படை. அதைத்தான் இந்தப் பத்தியில் சரளமாகவும் பிசிறில்லாமலும் ஒரு தேர்ந்த புனைகதைபோல எழுதப்பட்டுள்ளது.

அம்மாவுக்கும் மகளுக்குமான தலைமுறை இடைவெளி, ரசனை மாற்றமே கீர்த்தனைக்கும் சினிமா இசைக்குமான இடைவெளியாக முரணாக அமைகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் இசை ஆசிரியருக்கும் சினிமாப் பாடல்களுக்குமான உறவு, அதன் முரண்கள் என்று இரு சரடையும் இதில் இணைக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருவகையில் இந்தப் பத்தி இளையராஜாவுக்கான புகழாரங்களில் ஒன்று.

மோகமுள் நாவலில் இடம் பெற்றுள்ள கீர்த்தனைகளை, ராகங்கள் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு பொருந்தும்படி அமைத்துள்ளார் தி.ஜா என்று சொல்லப்படுகிறது. இசை தெரிந்தவர்களிடம் விரிவாக அதைக் குறித்து விசாரித்தால் நாவலுக்கு இன்னும் அது வலுசேர்க்கக் கூடும்.

0

இக்கதைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது பொதுவான சில அம்சங்களை கண்டுணர முடிகிறது.

உளவியல் சிக்கல்கள் (சிறுத்தை, வெண்நாகம்), காமம் (நட்சத்திரங்களின் வாக்குமூலம், பூஜா அன் ஹாத்திக்கு), மரணம் (அனல் அவித்தல், மரணக்குழி), போர்ச் சூழல் (மரணக்குழி, செந்தாழை), வரலாறு (ம்ருகமோக்ஷம், உயிர்மரம்), நாட்டார் மரபின் சரடு (காவல்காரன், ம்ருகமோக்ஷம்), மாய யதார்த்தம் (காவல்காரன்) போன்ற பல்வேறு தளங்களையும் இக்கதைகள் தொட்டு நிற்கின்றன.

ஏற்கனவே எழுதப்பட்ட கதைக்களங்களாக அல்லாமல் புதியவற்றை எழுதும் முனைப்பைப் பார்க்க முடிகிறது. முன்பே எழுதப்பட்டிருந்த கதைகளை வேறு வடிவத்தில் புதிய மொழியில் எழுதவேண்டும் என்ற முயற்சி தெரிகிறது.

இதன் ஆசிரியர்கள் அனைவருக்குமே கதையை சீராக சொல்லத் தெரிந்திருக்கிறது. கதைக்குத் தேவையான புறச்சூழலை நேர்த்தியாகச் சித்தரித்திருப்பதுடன் வலுவான கதாபாத்திரங்களை அழுத்தமான அடையாளங்களுடன் உருவாக்கவும் வாய்த்திருக்கிறது.

வல்லினம் இந்த முயற்சியின் வழியாக நம்பிக்கைதரும் சில கதாசிரியர்களின் பெயர்களை தமிழ்ச் சிறுகதைப் புலத்துக்கு அறிமுகப்படுத்தியிருப்பதே இந்தச் சிறப்பிதழின் சாதனை என்று தயக்கமின்றி சொல்லலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...