கீரவாணி

காலையிலிருந்தே ஒரே காற்றும் மழையுமாக இருந்தது. சங்கீத வகுப்பு இருக்கும் நாளில் மழை பெய்தால் எனக்கு கொஞ்சம் சலிப்பு வரும். காரணம் சங்கீத ஆசிரியர் ஈப்போ மாநிலத்தைச் சேர்ந்தவர். குளிர் தாங்க மாட்டார். அதுவும் 1997-இல் கேமரன் மலை பசுமை மாறாமல் இருந்தக் காலம். “எப்படிதான் இந்தக் குளிருல இருக்கீங்களோ? அதுவும் குளிர் சட்டைக் கூட போடாம எப்படிதான் குளிர் தாங்குகிறீங்க?” என்பது அவரின் வழக்கமான கேள்வி. அவர் சாதாரண நாளிளேயே இரண்டு குளிர் சட்டையை அணிந்து பற்கள் நடுங்கியவாறுதான் சங்கீதம் கற்றுக் கொடுப்பார். அதுவும் மழை பெய்தால் சொல்லவே வேண்டாம். அதிகம் கஷ்டப்படுவார்.

கோயில் ழுழுக்க மழை சாரலால் நனைந்திருக்கும். பாய்களை ஒன்றன் மேல் ஒன்றாக தரையில் போட்டு சங்கீத டீச்சரைக் குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்வோம். ஆனால், எங்களால் மழை பெய்யும் போது அடிக்கும் காற்றிடமிருந்து டீச்சரைக் காப்பாற்றவே முடியாது. கிருதிகளைப் பாடும்போது குளிர் காற்று அடித்தால், ராகத்தை மேலும் நீளமாக இழுத்து… இ இ இ… என்று பற்களைக் கடித்துக் கொண்டு தாளம் போடும் கைகளை ஒன்றாகச் சேர்த்து உடலைச் சுருக்கி உள்ளே இழுத்துக் கொள்வார். ராகங்களை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போது இந்தக் காற்று அதை அவசுரமாக்கும். கற்றலைத் தடை செய்து சலிப்படைய வைக்கும். அதனாலேயே புதன் கிழமைகளில் மழை வரக் கூடாது என காலையில் பள்ளிக்குச் செல்லும் போதே வானத்தைப் பார்த்துக் கொண்டே செல்வேன். கேமரன் மலையில் வெயில் அடித்தால்தான் ஆச்சரியம். இருப்பினும் காற்றும் மழையும் வராமலிருக்க வேண்டுவேன்.

மழைக் காலங்களில் பள்ளி முடிந்து சலிப்புடன் திரும்புவதை அம்மா அறிந்துகொள்வார். அவருக்கு என் மன ஓட்டம் புரியும். “காலையிலேருந்து மழை, இன்னைக்கு சங்கீத டிச்சர் நல்ல குளிர்ல நடுங்கப் போறாங்க” என்பார். அதன் பிறகு டீச்சர் வருகையை மெல்ல மெல்ல எனக்கு உணர்த்துவதுதான் அவர் வேலை. “டீச்சர் ஃபோன் செஞ்சாங்க. ஈப்போவிலிருந்து கிளம்பிட்டாங்கலாம்.” என்பார். “இன்னைக்கு பாதையில் ஒரு பிரச்சனையும் இல்லன்னு பஸ் டிரைவர் ஜிக்கி சொன்னார்” என என்னை உற்சாகப் படுத்துவார்.

அப்போதெல்லாம், கைத்தொலைப்பேசி இல்லை. ஈப்போவிலிருந்து கிளம்பும் முன் வீட்டுத் தொலைப்பேசிக்குச் சங்கீத ஆசிரியர் அழைத்து, அவர் கிளம்பிவருவதாகக் கூறுவது வழக்கம். அந்த அழைப்பு, கேமரன் மலைக்கு வரும் குறுகலான பாதையில் மண் சரிவு, மூங்கில் கிளைகளின் சரிவு அல்லது விபத்து நடந்திருக்கிறதா என தகவல்களைக் கேட்கவும்தான். அப்போது நாங்கள் தங்கியிருந்தது கடைவீடு. வீட்டின் சன்னலிலிருந்து பார்த்தால், பேருந்து நிலையம் தெரியும். தாப்பாவிலிருந்து வரும் முதல் பஸ் ஏறக்குறைய 10 மணியளவில் ‘தானா ராத்தா’வைச் சேரும். 10 மணிக்கு வரும் பஸ், தாமதமானால் பாதையில் ஏதேனும் பிரச்சனையுள்ளது என்று பஸ் வரும் வரை வீட்டு வேலைகளுக்கு நடுவில் சன்னலையே பார்த்துக் கொண்டிருப்பார் அம்மா. தாமதமான பஸ் வந்து சேர்ந்தவுடன் உடனே சென்று பஸ் ஓட்டுபவரிடம் பாதையில் என்ன பிரச்சனை? ஏன் தாமதம் எனக் கேட்பார். இப்படி ஒவ்வொரு புதன் கிழமைகளும் அம்மாவின் வேலை பஸ்ஸை பார்த்து சங்கீத டீச்சரிடம் தகவல் சொல்வது. பாதையில் எந்த ஒரு பிரச்சைனையும் இல்லையென்றால் டிச்சரின் அடுத்தக் கேள்வி மழை பெய்கிறதா? காற்று பலமாக வீசுகிறதா? குளிராக இருக்கிறதா என்பதுதான். அம்மாவும் ஈப்போவைச் சேர்ந்தவர். அவரும் சதா குளிர்ச் சட்டையிலும் காலுறையுடனும்தான் இருப்பார். திருமணமாகிக் கேமரன் வந்து பல வருடங்கள் ஆகியும் அவர் உடல் குளிருக்குப் பழகாமல் இருந்தது.

சிலசமயங்களில் அம்மா ஆசிரியரைச் சமாதானம் படுத்த “இன்று நல்ல வெயில், போட்ட துணியெல்லாம் காஞ்சிருச்சி, நீங்க தைரியமாக வரலாம் டீச்சர்” என்பார். அவரிடம் ஈப்போவிலேயே சங்கீதம் பயிலும் மாணவர்கள் அதிகம். ஆகையால், அவர் வாரந்தோறும் ஈப்போவிலிருந்து கேமரன் மலைக்கு வந்து சங்கீதம் சொல்லித் தர வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஒரு நடன நிகழ்ச்சியில் சந்தித்து என் பெற்றோர்களின் விண்ணப்பத்திற்கிணங்க சங்கீத வகுப்பு நடத்த ஒப்புக் கொண்டார். ஒவ்வொருமுறையும் தன் இரு குழந்தைகளையும் பணிப்பெண்ணின் பாதுகாப்பில் விட்டுவிட்டே மலை ஏறி வருவார். ஏறக்குறைய மூன்று மணி நேரம் மலை பாதையில் பயணித்த குளிரிலும் களைப்பிலும் எங்களுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுப்பார். பிறகு மீண்டும் 3 மணி நேரம் பயணித்து தன் வீட்டை அடைவார்.

1997-இல் கேமரன் மலை பாதை கொஞ்சம் கரடு முரடாகதான் இருக்கும். சங்கீத ஆசிரியரின் கணவருக்கும் அவர் அம்மாவிற்கும் அவர் இவ்வளவு தூரம் வந்து சங்கீதம் சொல்லித் தருவதில் இஷ்டம் இல்லை. சங்கீதத்தைச் சொல்லிக் கொடுக்க, அதன் புகழைப் பரப்ப தூரம், நேரம், பணம், பயணம் போன்ற விஷயங்களை ஒரு தடையாக அவர் பார்த்ததில்லை. அவர் மட்டுமில்லை எல்லாக் கலைஞர்களும் அப்படிதான். நேரம், காலம், லாபம், நஷ்டம் எல்லாம் பார்க்காமல் கலைக்காகப் பணியாற்றுவார்கள். அப்படி என் வாழ்க்கையில் நிறைய பேரைச் சந்தித்திருக்கிறேன். உலகியல் வாழ்க்கையிலுள்ள தடைகளைத் தாண்டி வந்து சங்கீத வகுப்பு நடத்தும் ஆசிரியருக்கு மழையும் அது கொண்டு வரும் குளிர் காற்றும்தான் பெரும் சுமையாக இருந்தது. ஆனால் அவரின் போதனையில் எந்தக் குறையும் இருக்காது. ஒவ்வொரு வாரமும் சங்கீத டீச்சரின் அழகு கூடிக்கொண்டே போவதாகத் தோன்றும். அதற்கு காரணம் அவரின் முக அழகு இல்லை, அவருள் இருக்கும் இசையால். போதனையால் வெளிபடும் இசை மீண்டும் திரண்டு அவருள் நிறைவதாகத் தோன்றும். மழை பெய்யாமல் இருந்தால் சங்கீத வகுப்பு மிகவும் சுவாரசியமாகப் போகும். ஆனால் இன்று அப்படி இருக்கப்போவதில்லை.

“காலையிலேருந்து மழ மா… டீச்சருக்குக் குளிரும்… அவங்க குளிருல செய்யும் செய்கையைப் பார்த்து சிரிப்பும் கேலியுமா இன்னைக்கு சங்கீத வகுப்புல இருக்கப் போகுது” என அம்மாவிடம் சலிப்புடன் சொன்னேன்.

மதிய உணவிற்குப் பிறகு, முதல் வாரம் சங்கீத வகுப்பில் கற்றப் பாடத்தை மீள்பார்வை செய்தேன். சரளி வரிசையில் தொடங்கி அப்பர் ஸ்தாயி வரிசை வரை பயிற்சி செய்வது வழக்கம். அதற்குப் பிறகு சில கிருதிகளைப் பாடி பழகுவேன். சங்கீத டீச்சர் இதுவரை கற்ற எந்தப் பாடலை வேண்டுமானாலும் கேட்பார். கேட்கும்போது நன்றாகப் பாடவில்லையென்றால் அவர் இவ்வளவு தடைக்கு மத்தியில் வகுப்பு நடத்தும் அவசியத்தையும் நேரத்தின் அவசியத்தையும் பேச தொடங்கிவிடுவார். நான் மட்டுமில்லை என்னுடன் சங்கீதம் பயின்ற எல்லாம் நண்பர்களும் ஆசிரியர் பேசுவதைவிட பாடுவதையே அதிகமாக ரசிப்போம். மாலை 5 மணியிலிருந்து 6.30 மணி வரை சங்கீத வகுப்பு நடக்கும். பெரும்பாலும் 6 மணிக்கெல்லாம் பனி இறங்க ஆரம்பிக்கும். சங்கீத வகுப்பு மலைமேல் இருக்கும் முருகன் கோயிலில் நடக்கும். பனி இறங்குகையில் சுவரங்களையும் கிருதிகளையும் பாடுவது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். இன்று நினைத்தால் கூட மனதில் நெகிழ்கிறது. பனி இறங்கும் போது சங்கீத ஆசிரியர், “இதப்பார்க்கதான் இவ்வளவு கஷ்டப்பட்டு வறேன்” என்பார். ஸ்ருதி பெட்டியிலிருந்து வரும் நாதம் பனியுடன் கலந்து, எல்லாவற்றையும் மறக்க வைக்கும். பனியில் மிதக்க வைக்கும். முகத்தில் புன்னகையை வரவழைக்கும். மனம் பல அலைக்கழிப்புகளில் இருந்து விடை பெறும். இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில் என நினைக்க வைக்கும். ஆனால், மழை வந்தால் பனி வராது. பனியைப் பார்க்க முடியாமல் போய்விடும். மழை வரக்கூடாது என்று நினைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

பனி இறங்கும் தருவாயில் திட்டு வாங்கினால், அந்த அழகை ரசிக்க முடியாமல் போய்விடும் என்பதால் கடந்த வாரத்தின் பாடங்களை எப்போதும் முறையாக மீள்பார்வை செய்துக் கொள்வேன். என்னுடன் பயின்ற என் நண்பர்களும் இதே சிந்தைனையுடன்தான் இருப்பார்கள். ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் என்னுடன் சங்கீதம் பயிலும் நண்பர்கள் எல்லோரும் பள்ளியில் ஓய்வு நேரத்தில் கடந்த வார வகுப்பில் படித்ததை மீள்பார்வை செய்து கொண்டே சாப்பிடுவோம். புதன் கிழமைகளில் மட்டும் ஒன்று கூடுவோம். மற்ற நாளில் பார்த்து ‘ஹை’, சொல்வதுடன் சரி. எங்களின் நண்பர்கள் வட்டம் வெவ்வேறாக இருந்தது. வயது வேறுபாடு, சமய வேறுபாடு, என பல வேறுபாடுகள். ஆனால் சங்கீதம் எங்களை ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் ஒன்று சேர்க்கும். நாங்கள் மீள்பார்வை செய்வது ஆசிரியரிடமிருந்து திட்டுவாங்காமல் இருக்க மட்டுமில்லை, சங்கீதம் எங்களில் கலந்திருப்பதை எல்லோரும் உணர்ந்திருந்தோம்.

என்னுடன் சங்கீதம் பயின்றவர்களில் சிலர் சிறுவயதிலிருந்தே பியானோ, வயலின், வீணை, தபெலா போன்ற இசைக் கருவிகளையும் கற்றுக் கொண்டிருந்தனர். சங்கீத ஸ்வரங்கள், ராகங்கள், சங்கீதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் எல்லாம் மிக எளிதாகப் புரிந்து கொள்வதுடன் மிக திறமையாகப் பாடுபவர்களாவும் இருந்தனர். சங்கீத ஆசிரியர் இதை நன்கு உணர்ந்திருந்தார். பொதுவாகக் கலைஞர்களுக்குத் தனக்குத் தெரிந்த கலையை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க மிகவும் பிடிக்கும். அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுச் சேர்க்க வேண்டும் என எண்ணம் இருக்கும். அதுவும் தனக்குக் கிடைத்த மாணவர்கள் ஆர்வமிக்கவர்களாவும் பாடும் திறன் பெற்றவர்களாகவும் அதிலும் குடும்பப் பின்னணியில் சங்கீதப் போக்கு உள்ள மாணவர்கள் கிடைத்தால் எந்த குருவும் தவற விடமாட்டார்கள். சங்கீத டீச்சருக்கு நாங்கள் அப்படியாகத்தான் இருந்தோம். என்னுடன் சங்கீதம் பயின்ற நண்பர்கள் தங்களின் இசை ஞானத்தை நாட்டியத்தில், இசை கருவிகளில், விளையாட்டில், கல்வித்துறையில் மற்றும் அன்றாட வாழ்விலும் அமல்படுத்துவோம். அதைச் சங்கீத டீச்சர் அறிந்திருந்தார். சங்கீத டீச்சர் எப்போதும் எங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மாக்கள் எனக் கூறுவார்.

வழக்கம் போல ஓய்வு நேரத்தில் சங்கீதம் பயிலும் நண்பர்களுடன் சிற்றுண்டியில் கூடினோம். கடந்த வாரம் ‘கீரவாணி’ ராகத்தைப் பற்றிய தகவல்களை ஆசிரியர் தேடச் சொல்லியிருந்தார். அப்போது இணையம் கைத்தொலைப்பேசி போன்ற வசதியெல்லாம் இல்லை. தகவலைத் தேடுவதென்றால் ஒன்று நூலகத்திற்குச் செல்லவேண்டும் அல்லது அதன் தகவல் தெரிந்திருப்பவர்களைச் சந்தித்து தகவலைத் திரட்ட வேண்டும். அப்படி தகவல் தெரிந்திருப்பவர்களைத் தேடி கண்டுபிடுத்துச் சென்றால், தகவல்களைப் பகிர்ந்து உதவும் மனப்பான்மை எல்லோருக்கும் இருப்பதில்லை. ஆக, ஒட்டு மொத்த சங்கீத தகவலின் வளமாக எங்களுக்கு விமல் இருந்தான்.  விமலின் அம்மா, பாமா ஆண்டி கர்நாடக நாட்டைச் சேர்ந்தவர். கன்னடம் அவர் தாய்மொழி. ஆனால் சென்னையில் படித்ததால் தமிழ் நன்றாகப் பேசுவார்கள். கர்நாடக நாட்டைச் சேர்ந்தவருக்குக் கர்நாடக சங்கீத்தைப் பற்றி தெரியாமல் இருக்குமா? ஒரு தகவல் பெட்டகம் போல இருந்தார் விமலின் அம்மா. அவர் கூறும் தகவல்கள் சங்கீத டீச்சரையே அவ்வப்போது ஆச்சரியமாக்கும். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவரிடம் பதில் இருக்கும். பதில் மட்டும் சொல்லாமல் பாடியும் காட்டுவார். மற்ற இசையுடன் ஒப்பிட்டும் காட்டுவார். பாமா ஆண்டி பேசும் போதெல்லாம் வாயைக் பிளந்து கேட்பதுதான் வேலை. விமலின் வீட்டில் கர்நாடகப் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும். கிட்டத்தட்ட பாமா ஆண்டி கர்நாடக சங்கீதத்தைச் சுவாசிப்பவர் எனலாம். சங்கீத்தை முறையாகக் கற்கவும் அவனுக்கு ஒரு குரு வேண்டும் என்பதால் விமலைச் சங்கீத வகுப்பிற்கு அனுப்பினார். கன்னடம் தாய் மொழியாக இருக்கும் விமலுக்கு தமிழ் புரியும். ஆனால் பேச மாட்டான். ஆங்கிலத்தில்தான் பேசுவான். ஆனால் அறிவு கொழுந்து. படிப்பினில் மட்டுமில்லை சங்கீதத்திலும்தான். பியானோவில் சொல்லவே வேண்டாம்; சிறப்பாக வாசிப்பான். அவனின் அம்மா சாதத்துடன் சங்கீதத்தையும் ஊட்டியிருக்கக் கூடும்.

கீரவாணியைப் பற்றி அவன் எங்களிடம் பகிர்வதற்கு முன் “ஆசிரியர் கீரவாணியைப் பற்றிக் கேட்க இந்த மேடம்தான் காரணம்” என என்னைப் பார்த்து கைக்காட்டினான். நண்பர்கள் அனைவரும் சிரித்தனர்.

டீச்சருக்குக் குளிரும் போதெல்லாம் சுட சுட சீரகத் தண்ணீர் குடிப்பது வழக்கம். அம்மா எப்போதும் சுடுநீர் குடுவையில் சீரகத் தண்ணீரை டீச்சருக்குக் கொண்டு வருவார். கடந்த வாரம், சீரகத் தண்ணீர் கொடுக்கையில் கையில் மருதாணி ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “வாணி! எங்க நடனம் ஆடினாய்?” என கேட்டார்.

“துர்கா பூஜையில் ஆடினேன்” என்றேன்.

“என்ன பாட்டுக்கு ஆடினாய்?” என்றார்.

“தேவி நீயே துணையெனும் பாடலுக்கு ஆடினேன் டீச்சர்” என்றேன்.

“அடடே, பாபநாசம் சிவன் இயற்றியது. அது என்ன ராகமுனு தெரியுமா?” எனக் கேட்டார் டீச்சர்.

இந்தக் கேள்வி சங்கீத டீச்சரிடமிருந்து வரும் என எனக்குத் தெரியும். டீச்சரிடம் நல்ல பெயரை எடுக்க உடனே “கீரவாணி! தாளம் ஆதி” என்றேன். நடன குரு ஒரு கிருதியைச் சொல்லிக் கொடுக்கும் போது அதன் ராகத்தையும் தாளத்தையும் பற்றிதான் முதலில் சொல்லுவார். கிருதுக்கு அபிநயம் பிடித்து ஆடுவதெல்லாம் பிறகுதான்; ஒரு நர்த்தகிக்கு ஆடப்போகும் பாடலின் ராகம் முதலில் தெரிய வேண்டும். ஒவ்வொரு ராகத்திற்கும் லக்ஷணங்கள் உண்டு. அதை அறிந்து வைத்திருந்தால்தான் அதற்கேற்ப மன உணர்வுகள் ஏற்பட்டுப் பாவங்களாக வெளிப்படுத்த முடியும். இல்லையேல் வீரமான ராகத்திற்குக் கோழையாக ஆடுவது, சோகமான ராகத்திற்குச் சந்தோஷமாக ஆடுவது போன்ற வேடிக்கைகள் நிகழும். இசை அருவமானது. அது இன்னொரு அருவமானவற்றைதான் தேடி அடையும். இசை நினைவாற்றலை அதிகரிக்கும், சகிப்புத்தன்மையை உருவாக்கும், மனநிலையை அமைதிபடுத்தும், பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் குறைக்கும், சோர்வைத் தவிர்க்கும், வலிகளைக் குறைக்கும், மேலும் திறன்மிக்க செயல்பட துணைப்புரியும் என நிறைய ஆய்வுகள் கூறுகின்றன. இவையனைத்தும் அருவமானது. அருவமாக இருக்கும் இசை ஒருவர் மன உணர்வுகளுக்கேற்ப தனது உருவத்தை உருவாக்கிக் கொள்ளும். இசை ஏற்படுத்தும் மன உணர்வுகளினால் மனிதர்களிடம் சில மாற்றங்கள் நிகழும். அந்த மாற்றம் சில அசைவுகளைக் கொண்டு வரும். கண்களில், கைகளில், கால்களில், முகத்தில் நிகழும். அப்படியான அசைவுகள் நாட்டியமாகலாம், செயல்பாடுகளில் இருக்கலாம், சமையலாகக்கூட இருக்கலாம். ஆனால் இசை கண்டிப்பாக உடலிலும் மனதிலும் தாக்கத்தை உருவாக்கி வெளிபடும். அவ்வகையில் அருவமான இசைக்கு உருவம் கொடுத்தால் அது கண்டிப்பாக நாட்டியமாகத்தான் இருக்கும் என நினைத்துக் கொள்வேன். நான் ஒரு இசையைதான் சமர்ப்பிக்கிறேன் என்று ஆடும்போதெல்லாம் தோன்றும். நாட்டியம் இல்லாமல் இசையைச் சமர்ப்பிக்கலாம் ஆனால் இசையில்லாமல் நாட்டியத்தைச் சமர்ப்பிக்கவே முடியாது. வெறும் தாளத்திற்கு மட்டும் ஆடினாலும் அது இசையில்தான் சேரும். ஆக, இசையின் மூலம் வரும் பாடலுக்குத்தான் ஆடுகிறேன். ஆகையால் எந்தப் பாடலுக்கு ஆடுகிறோமோ அதன் அத்தனை அம்சங்களையும் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு பாடலைப் பற்றி முதலில் தெரிய வேண்டியவை இரண்டு. ஒன்று ராகம் மற்றொன்று தாளம். ஆக, நடன குருவே மறந்தாலும் நான் என்ன ராகத்திற்கு ஆடுகிறேன் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். ஒரு நர்த்தகிக்குத் தாளம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. காரணம் நடனம் ஆடுகையில் கால்கள் முழுக்க தாளத்தைதான் பிரதிபலிக்கும். தாளம் ஓடினால் ஆடவே முடியாது. ஆக இவை இரண்டும் ஒரு நர்த்தகிக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அதில் தவறே செய்யக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பேன்.

தேவி நீயே துணையின் சரியான ராகத்தையும் தாளத்தையும் கூறியவுடன் சங்கீத டீச்சர், “பரவாயில்லையே… நன்கு தெரிந்து வைத்திருக்கிறாயே” என கூறியது அம்மாவிற்கு மிகவும் பெருமையாக இருந்திருக்கும். எனக்கும்தான். உடனே கீரவாணியின் அரோகணம் அவரோகணத்தைச் சங்கீத டீச்சர் பாட ஆரம்பித்தார். எல்லோரின் முகத்திலும் மகிழ்ச்சி. இசையின் தாகத்திற்குக் கிடைத்தப் பரிசாக இருந்தது.

எங்கள் அனைவரிடமும் குரல்பதிவு செய்யும் ‘வாக்மேன்’ இருக்கும். புதிய ராகங்களை அல்லது பாடலைப் பதிவு செய்து நாள்தோறும் கேட்டு அதன்படி பாடி பயிற்சிகள் செய்வதற்காக வைத்திருப்போம். உடனே ‘வாக்மேனை’  எடுத்து அவர் பாடுவதைப் பதிவு செய்தேன். இந்த மாதிரி பதிவு செய்த நிறைய ஒலிநாடாக்கள்  என் அறையில் இருந்தன. சங்கீதப் பாடங்கள், நாட்டிய ஜதிகள், நான் எனக்கென பாடிய பாடல்கள் என நிறைய பதிவு செய்து வைத்திருப்பேன். அவை பாடிப் பழக மிகவும் உதவியாக இருக்கும். குருவின் குரலைக் கேட்டு கொண்டே பயிற்சிகள் செய்தால், அவர் நம்முடன் இருப்பதைப் போன்ற உணர்வு கொடுக்கும். அதன் உணர்வு பயிற்சிகளைச் சிறப்பாகச் செய்ய உதவியாக இருக்கும்.  குருவின் குரல் ஒரு வகையான நேர்மறை எண்ண அதிர்வுகளை உருவாக்கும். அது மாணவர்களுக்கு மிகவும் முக்கியம்.

கீரவாணியின் அரோகணம் அவரோகணத்தை சங்கீத டீச்சர் பாடி முடிக்கும் வேளையில் 7 மணி பூஜைக்குக் கோயில் மணியை அடிக்க குருக்கள் சொன்னார். அது ராஞ்சை என்ற மாணவனின் பணி. வாரந்தோறும் அவன்தான் அதை விரும்பிச் செய்வான். சங்கீத வகுப்பை நிறைவு படுத்த ச… ப… ச… ப… ச…. என டீச்சரைத் தொடர்ந்து சொன்னோம். அடுத்த வாரம் கீரவாணியைப் பற்றி பேசலாம் அதனையொட்டித் தகவல் தேடிவருங்கள் என சொல்லி சங்கீத டீச்சர் கிளம்பினார். எங்கள் எல்லோரின் கண்களும் விமலையே பார்த்தது. அவன் தன்மூப்பாக கொஞ்சம் திமிராகச் சிரித்தான். ஒருநாள் அவனுக்குத் தெரியாத தகவலைக்கூறி அந்தத் திமிரை முறிக்க வேண்டும் என நினைப்பேன். அவனின் மிகையான நம்பிக்கைக்குக் காரணம் அவன் அம்மாவின் இசை அறிவு. உடனே கண்கள் பாமா ஆண்டியைத் தேடியது. வழக்கமாக சங்கீத வகுப்பு முடியும் முன்பே வந்து பூஜையில் கலந்து கொள்வார். அன்றைக்கு வர தாமதமானது. ஆண்டி வந்தவுடனே கீரவாணியைப் பற்றிக் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். எப்பொழுதும் சங்கீத வகுப்பு முடிந்ததும் ஒரு சிறிய பதற்றம் வரும். பள்ளி வீட்டுப்பாடத்தையொட்டிய பயம் அது. இன்றைக்கு எத்தனை வீட்டுப்பாடம் இருக்கிறது என சுபா என்ற தோழியிடம் கேட்டபடியே எண்ணங்களை மீட்டுக்கொண்டு பாயை மடித்து வைத்தோம்.

ராஞ்சை மணியடிக்க எழுந்தான். அவன் அடிக்கும் கோயில் மணியின் ஒலியின் சத்தம் மற்றவர்களைவிட கொஞ்சம் ஆழமான ஒலி கொடுக்கும். மணியின் ஓசை, எனக்கு இசை. ஒரு வகையான அழுத்தத்தை மனதில் ஏற்படுத்தும். அதை உணர நானும் சுபாவும் மணியடிக்கும் இடத்திற்கு வாரந்தோறும் செல்வோம். ராஞ்சை மணியடிக்க சுபா அதனை எண்ணுவாள். 21 முறை அடிக்க வேண்டும். நான் மணி ஒலி ஏற்படுத்தும் அந்த அதிர்வை உணர அமைதியாக நிற்பேன். மணியின் ஓசை/இசை ஏழு வினாடிகளுக்கு நமது மூளைக்குள் நின்று எதிரொலிகளை ஏற்படுத்தும் என்று சங்கீத ஆசிரியர் சொல்லியிருக்கிறார். பல உலோகங்களான கோயில் மணியின் ஒலி மனதுக்குள் ஊடுருவி, மூளையில் உள்ள வலது மற்றும் இடது பாகங்களை முழுமையாக தூண்டும். இதனால் நமது மூளை மிகவும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலை அடைகிறது. ஆகையால், மணியின் ஒலியை எப்போது கூர்ந்து கேட்க வேண்டும் என ஆசிரியர் சொன்னது ராஞ்சை மணியடிக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும். மணியடித்து முடித்ததும் பூஜை ஆரம்பமாகும். பூஜையில் கலந்துகொண்டு பிரசாதம் சாப்பிட்டு வீட்டிற்கு திரும்புவோம். அன்றைக்கு வெண்பொங்கல். அம்மாவும் நானும் பகிர்ந்து உண்டோம். ஆனால் மனதில் கீரவாணி ஓடிக்கொண்டே இருந்தது.

விமல் கீரவாணிக்கு நான்தான் காரணம் எனும் சொல்கையில் கொஞ்சம் கர்வம் வந்தது.  சுபா, “கீரவா…ணி, இரவிலே பகலிலே பாடவா… நீ, இதயமே உருகுதே…” எனும் பாடலை என்னைப் பார்த்துப் பாடினாள். என்னை எல்லோரும் வாணி என்றுதான் அழைப்பார்கள். அது எனக்கான பாடல் போன்று இருந்தது. எங்கோ கேட்ட ஞாபகம். எனக்கு சிறுவயதிலிருந்தே வரிகள் ஞாபகத்தில் வராது. அதன் ராகம் மூளையில் ஒலிக்கும். அவளை மீண்டும் பாட சொன்னேன். சுபா நன்றாகப் பாட கூடியவள். மீண்டும் பாடுகையில் கூடுதல் சங்கதியெல்லாம் போட்டு பாடி மனதை இழுத்தாள்.

“லவ்லி சோங். அம்மாவுடன் கீரவாணியைப் பற்றிப் பேசுகையில் இந்தப் பாடலைதான் டேடி பாடினார்” என்றான் விமல்.

மருத்துவராக இருக்கும் விமலின் அப்பாவுக்கும் சங்கீதம் தெரியும். “ஏன் இந்தப் பாடலை எல்லாரும் பாடுகிறீர்கள்… இந்தப் பாடல் கீரவாணி ராகத்தில் அமைந்ததா இல்லை கீரவாணி சொல் வருவதால பாடுகிறீர்களா?” என்றேன்.

விமல் “இரண்டும்” என்றான்.

“உனக்கு இந்தப் பாடல் தெரியாதா? இளையராஜாவின் இசையில் 80-இல் வெளிவந்த பாடல். கார்த்திக்தான் ஹீரோ. ஹீரோயின் பானுப்பிரியா, வீட்டில் அந்தப் படம் இருக்கு” என்றான் ராஞ்சை.

“பானுப்பிரியா வா!” என் கண்கள் அகலமானது. அவர் ஒரு புகழ் பெற்ற குச்சுப்புடி நர்த்தகி. எனக்கு அவரின் கண்களை மிகவும் பிடிக்கும். அவரின் கண்கள் மட்டும் போதும். அவர் ஆடவே வேண்டாம். அவரிடமுள்ள நடன திறமையனைத்தும் அவர் கண்களிலேயே தெரியும். அந்த வாரம் இறுதியில் அம்மாவுக்குத் தெரியாமல் சுபாவை அழைத்துக் கொண்டு ராஞ்சை வீட்டிற்குச் சென்று அந்தப் பாடலைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது.

அம்மா கொடுத்த உணவு டப்பாவை திறந்துக் கொண்டே மீண்டும் பாடச் சொன்னேன். என்னைத் தவிர எல்லோரும் பாடினார்கள். இந்த முறை ஆலாபனையிலிருந்து பாடினார்கள். ஆலாபனையே ஏதோ செய்தது. தேவி நீயே துணை எனும் பாடலும் கீரவாணி, இரவிலே கனவிலே பாட வா நீ எனும் பாடலும் ஒரே மாதிரியாக இருக்கிறதா என இந்த முறை உற்றுக் கேட்டேன். உடனே மனம் நாட்டியத்திற்குத் தாவியது.

“பானுப்பிரியா இந்தப் பாடலுக்கு எப்படி ஆடியிருக்காங்க ராஞ்சை?” எனக் கேட்டேன்.

விமல் சலித்துக் கொண்டு “உங்களுக்கு கீரவாணி குறித்து தகவல் வேண்டுமா வேண்டாமா? கண்டதையும் பேசாமல் இருங்கள்” என ஆங்கிலத்தில் கூறினான்.

வேறு வழி இல்லை, அவன் சொல்வதைதான் கேட்க வேண்டும்.

“சொல்லு” என முகத்தைச் சுழித்துக் கொண்டே சொன்னாள் சுபா.

கீரவாணி ராகம் தியானத்தின்போது அதிகம் பயன்படும் ராகம். தியானம் செய்யும் ஆசிரமத்தில் கீரவாணி ராகம் ஒலித்துக் கொண்டே இருக்கும் என பாமா ஆண்டி சொன்னதாகச் சொன்னான் விமல். அதுமட்டுமின்றி இந்த ராகம் கருணை ரசத்தை மனதில் உருவாக்கும் என்றான். விமலின் அப்பா, மன அழுத்தம் கொண்டவர்களைச் சமநிலைப் படுத்த, இசை வழி சிகிச்சையில் கீரவாணி ராகத்தை இரவில் உறங்கும் முன் கேட்கச் சொல்வார் என்றான்.

உடனே கீரவாணியைக் கேட்க வேண்டும்போல இருந்தது. இணைய வசதி இல்லாத அக்காலத்தில் சங்கீத டீச்சர் பாடுவதைக் கேட்பது மட்டுமே ஒரே வழி. மாலை மணி 5 வரை காத்திருக்க வேண்டும். அதுவும் இன்றைக்குக் காலையிலிருந்து மழை. குளிருல டீச்சர் இந்த ராகத்தைப் பாடுவாரோ மாட்டாரோ என நினைக்கையில் ஓய்வு நேரம் முடிந்து மணி ஒலித்தது. அம்மா கொடுத்த இட்டிலியை வாயில் திணித்துக் கொண்டு வகுப்பறைக்கு நடந்தேன்.

விமல் என் பின்னாலிருந்து “எனக்கு கீரவாணியில் இன்னொரு பாடல் தெரியும்” என்றான். “அப்பா சொன்னார். சினிமா பாடல் தான். உனக்குத் தெரியனுமா?” என்றான்.

விமல் எல்லா தகவல்களையும் பகிர மாட்டான். சங்கீத டீச்சரிடம் நல்ல பெயர் எடுக்க வகுப்பின் போது எங்களுக்குச் சொல்லாத தகவல் ஒன்று சொல்லி வெறுப்பேற்றுவான்.

“நீ எல்லாத்தையும் எங்களிடம் சொல்ல மாட்டேல, எதையாவது எங்க கிட்ட இருந்து மறச்சி வைப்ப” எனக் கூறிக் கொண்டே வகுப்பறையை நோக்கி நடந்தேன்.

“என்னைத் தாலாட்டா வருவாளோ, நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ” என்று விமல் பாடினான்.

இந்தப் பாடல் எனக்குத் தெரியும். இதுவும் இளையராஜா இசையமைத்த பாடல்தான்.  இது சமீபத்தில் வந்த பாடல். அண்ணனுக்குப் பிடித்தப் பாடல். விமலிடம் “ஹரிஹரன்… இதுவும் கீரவாணியா?” என்றேன்.

விமலுக்கு ஹரிஹரனை ரொம்ப பிடிக்கும். அவரின் Colonial Cousins -யை கேட்டுக் கொண்டேதான் வீட்டில் படிப்பான். விமல் குதர்க்கமாகச்  சிரித்துக் கொண்டு சங்கீத வகுப்பில் பார்க்கலாம் என்று படியில் ஓடினான்.

எனக்கு இளையராஜாவின் கீரவாணி பாடல் மூளையில் ஓடிக்கொண்டே இருந்தது. பானுப்பிரியாவுக்காக இல்லை….

ஸ… நிஸரி… ஸ நி…
ஸ நிஸ மகம ரீ….

பத ஸ நிஸரி… ஸ நி…
ஸ நிஸ மகம ரீ…
பத ஸஸஸநி ரிரிரிஸ கககரி மமமக ப…
ஸ நி த ப ம க ரி ஸ நி… எனும் ஸரங்களின் ஒலிக்காக.

மணி 4.00 ஆகியும் மழை நிற்கவில்லை. அம்மாவுடன் சங்கீத வகுப்பிற்குச் சென்றேன். அம்மா பள்ளிக்கூடத்தைத் தவிர மற்ற எல்லா வகுப்பிற்கும் என்னுடன் வருவார். கலைகளின் மீது அவ்வளவு ஆர்வம் அவருக்கு. நான் பாடுவதையும் ஆடுவதையும் பார்க்காமல் பார்த்து ரசிப்பார். ஒருமுறைக் கூட என்னைப் பாராட்டி பேசியதேயில்லை ஆனால் அவரைப்போல வேறு யாரும் என்னை உற்சாகப்படுத்தியதும் இல்லை. கண்டிப்பானவர். அவர் கண்டிப்பில்தான் அவர் அன்பை உணர்ந்திருக்கிறேன். எல்லா அம்மாக்களும் அப்படிதான். நம்மிடம் கண்டிப்பாக இருந்தாலும் நாம் இல்லாத சமயத்தில் நம்மைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். என்னுடைய அம்மாவிற்கு இந்தப் பண்பு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். மழை காரணமாக ரஞ்சையும் சுபாவும் கொஞ்சம் சீக்கிரமாகவே கோயிலுக்கு வந்தனர். ரஞ்சையைப் பார்த்தவுடன் மீண்டும் இளையராஜாவின் கீரவாணி பாடல் காதில் ஒலித்தது. பாய்களை வேகமாக விரித்து அதில் அமர்ந்து அவனையும் சுபாவையும் பாடச் சொன்னேன். இந்த முறை அந்தப் பாடலின் வரிகளை அறிய. அப்போதுதான் என்னால் பாட முடியும் என்பதற்காக.

“எனக்கு தெரியும் நீ கேட்பேனு, நீ இந்தப் பாடலைக் கேட்டதில்லையா? உன் வீட்டில் சினிமா பாட்ட கேக்க மாட்டிங்களா?” என வியப்பாக கேட்டான் ராஞ்சை.

“இல்ல, அம்மா கொஞ்சம் ஸ்டிரிக், நீங்க இரண்டு பேரும் பாடுங்க. சீக்கிரம்…. சீக்கிரம்…. டீச்சர் வந்துடுவாங்க…” என்றேன்.

அப்போது அம்மா, கோயிலில் தேங்கியிருந்த மழை நீரை துடைத்துக் கொண்டிருந்தார். “மழை சத்தத்தில் அம்மாவுக்கு கேட்காது பாடுங்க” என்றேன்.

ராஞ்சை ஆலாபனையிலிருந்து ஆரம்பித்தான். சுபாவும் பாடினாள். கீரவாணி கருணை ரசத்தைக் கொண்டு வரும் என்பது ஒரு கோட்பாடு. அது எல்லோருக்கும் பொருந்தாது. எப்போதும் ஒரு ராகத்தைக் கேட்கையில், எனக்கு என்ன தோன்றுகிறது எனக் கண்களை மூடி உற்றுக் கேட்பேன். அப்படி ஆராய்ச்சி செய்து கற்ற பாடங்கள் நிறைய. அவ்வகையில் இந்தப் பாடலின் ஆலாபனையில் வரும் ஸ்வரங்கள் எனக்குப் பெரும் ஈர்ப்பைக் கொடுத்தது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது. நான் என்னை மறந்து ஸரங்களுக்குள் பயணிப்பதை உணர்ந்தேன். ஸ்வரங்களுக்குப் பின் வரும் ஆ,ஆ,ஆ,ஆ எனும் ஆலாபனை மேலும் அந்த ராகத்தை உணர வைத்தது. இந்த ராகம் சோகமான பாடலுக்கு அதிகமாகப் பொருந்தும் என தோன்றியது. கண்களை மூடிக் கொண்டிருக்கையில், ராஞ்சை அவன் வாக்மேனில் இந்தப் பாடலை ஒலிப்பரப்பினான்.

“கேசட் கொண்டு வந்துருக்கியா?” என வியந்தேன்.

பொதுவாக ஒரு பாடலைக் கேட்பதற்கும் அதன் தன்மைகளை அறிந்து கேட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அது வரிகள் கொண்டு வரும் அர்த்தத்தைவிட சுவாரசியமாக இருக்கும். ஒலியை அதிகரித்து ஆலாபனையிலிருந்து பல்லவி வரைக்கும் கேட்டுக் கொண்டிருந்தேன். அனுபல்லவியைத் தொடராமல் மீண்டும் ஆலாபனைக்குச் சென்று மீண்டும் மீண்டும் கேட்டேன். கேட்க கேட்க ஒரு விஷயம் தென்பட்டது.

ராஞ்சை… “இந்த ராகத்தில் 7 ஸ்வரங்களும் உண்டு” என்றேன்.

எல்லா ராகத்திலும் 7 ஸ்வரங்களும் வராது. ராஞ்சையும் சுபாவும் அதை உறுதி செய்ய மீண்டும் ஆலபானையிலிருந்து கேட்டார்கள்.

“ஆமால…” என்றனர்.

“அப்போ 7 ஸ்வரங்களும் கொண்டிருப்பதால் கீரவாணி மேளகர்த்தா ராகம். யெஸ்!” என சொல்லி உற்சாகமானேன்.

சங்கீத ஆசிரியர் வந்ததும் இதை கூறி அசத்த வேண்டும் என்று சொல்லி மூவரும் சிரித்துக் கொண்டோம். விமலுக்குக் கூட தெரியாதென மனம் அசட்டுத்தனமாகக் கூறியது. ஆலாபனையிலிருந்து பல்லவிவரை மீண்டும் கேட்டோம். இந்த முறை மூவரும் பாட ஆரம்பித்தோம். மழை நின்றதுகூட தெரியாமல் மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டே இருந்தோம். எங்களின் பாடல் அம்மாவின் காதிற்கு எட்டியது. மழை நின்றவுடன் கோயில் நிசப்தமாகியிருக்கும். அதுகூட தெரியாமல் நாங்கள் பாடிக் கொண்டிருந்தோம். அம்மா, நான் சினிமா பாடல் பாடுவதை விரும்ப மாட்டார். படிப்பிலும் கலையிலும் கவனச் சிதைவு ஏற்படும் என சொல்லுவார். காதலைத் தவிர சினிமாவில் வேறு என்ன காட்டுகிறார்கள், இந்த வயதில் அதெல்லாம் தேவையில்லை என சொல்லுவார். அப்படிபட்டவரின் முன் சினிமா பாடலைப் பாடிக் கொண்டிருந்தேன். அதுவும் கோயிலில். என்னுடைய செயல் அம்மாவை மிகவும் கோபப்பட வைத்தது. கீரவாணி சுற்று சூழலை மறக்க வைத்திருந்தது. நான் ஆலாபனையைப் பாட ராஞ்சை பல்லவிப் பாடினான். பலமுறை கேட்டும் பாடலின் வரிகள் மனதில் நிற்கவில்லை, அதன் ஸ்வரங்கள்தான் பதிந்திருந்தது.

ராஞ்சைப் பாடி முடிக்க அம்மா கோயில் கொடிமரத்திலிருந்து “வாணி என்ன பன்னுற?” எனக் கொஞ்சம் உரக்கக் கேட்டார்.

திடுக்கிட்டது. அம்மாவின் உரத்த குரலால் கீரவாணியிலிருந்து வெளியானேன்.

“சினிமா பாட்டு பாடுறியா? அதுவும் கோயிலில… உனக்கு ஏது இந்த பாட்டு கேசட்?” என மழை நீரைத் துடைத்த துணியுடன் வேகமாக எங்களை நோக்கி நடந்து வந்தார் அம்மா.

“ராஞ்சையுடையது மா, கீரவாணி ராகத்தைத்தான் கேட்டேன்.” என்றேன்.

அம்மாவின் கோபம் ராஞ்சையின் மேல் திரும்பியது. சினிமா பாடலைப் பாடவா உன்ன சங்கீத வகுப்புக்கு அனுப்புறாங்க? அதுவும் வாணிய பாத்து, இரவிலே பகலிலே பாட வா நீனு பாடுற” என்றார். “அவளுக்குச் சினிமா பாடல் எல்லாம் தெரியாது, நீ எதையும் அவளுக்குச் சொல்லித் தர வேண்டாம். சினிமா பாடல் கேட்பதையெல்லாம் உங்க வீட்டில வைச்சுகோ. இரு உங்க அம்மாக்கிட்ட இத சொல்லுறேன்” என அம்மா ராஞ்சையைத் திட்டினார்.

என் காதுகளில் வெப்பம் படர்ந்தது. ராஞ்சை, பதிலுக்கு ஒன்றும் பேசாமல், தலைகுனிந்தான். சுபாவிற்கு அம்மாவைப் பற்றி நன்கு தெரியும். அவளும் ஒன்றும் கூறவில்லை. ஆனால் அவர்களின் மெளனம் என் மனதைக் கனக்க வைத்தது. அவர்களின் முகத்தைப் பார்க்க மனம் வரவில்லை. அம்மா இப்படிதான் எனக்காக எல்லாவற்றையும் அவரே தீர்மானிப்பார். அம்மா எங்களைத் தீட்டி முடித்து கோயிலில் தேங்கி இருந்த மழை நீரை மீண்டும் துடைக்க அரம்பித்தார். ஆனால் அவரின் காது எங்களை நோக்கிதான் இருந்திருக்கும். விமல் மற்றும் நண்பர்கள் வகுப்புக்கு வர ஆரம்பித்தார்கள். எங்களின் மெளனம் அவர்களை ஆச்சரியமாக்கியது. சங்கீத டீச்சருக்குக் காத்திருக்கும் வேளையில் நிறைய பாடல்கள் பாடுவோம். எங்களின் முதல் ரசிகர் கோயில் குருக்கள். மாலைப் பூஜைக்குத் தயார் படுத்திக் கொண்டே எங்களின் பாடலைக் கேட்பார். சஷ்டியிலிருந்து தேவாரம் வரை பாடுவோம். சிலநேரங்களில் சில பாடல்களைக் கோரிக்கையாக விடுப்பார். நாங்களும் அதக்கேற்ப பாடுவோம். ஆனால் அன்று விமலும் மற்ற நண்பர்களும் மட்டும் பாடிக்கொண்டிருந்தனர். நாங்கள் மூவரும் பாடவில்லை. ராஞ்சை சட்டென்று கையில் வைத்திருந்த வால்க்மேனைப் பிடுங்கி அதிலிருந்த கீரவாணி பாடல் ஒலிநாடாவை எடுத்து பைக்குள் வைத்தான். அவனின் செயல் என்னை மேலும் சங்கோஜப்படுத்தியது. சுபா என்னிடமிருந்து கொஞ்சம் விலகி சென்று உட்கார்ந்தாள். எந்தக் கலையும் கற்பதற்கு முன் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அன்று மனம் அமைதியை இழந்திருந்தது. காலையிலிருந்து கீரவாணியைக் கேட்க ஆவலாக இருந்தேன் ஆனால் அம்மாவின் அர்த்தமற்ற கோபம் என்னைப் பாதித்தது. இனி சங்கீத டீச்சர் என்ன சொல்லிக் கொடுத்தாலும் மூளைக்கு எட்டப் போவதில்லை. அம்மாவின் மேல் கோவம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

சங்கீத டீச்சர் வந்தார். அன்று மஞ்சள் நிறப் புடவையுடன் வந்தார். அன்று கொஞ்சம் அதிக உற்சாகமாகத் தென்பட்டார். அவரின் அம்சமான முகமும் அவரின் உற்சாகமான பேச்சும் என் மனதைக் கொஞ்சம் அமைதிபடுத்தியது. அம்மா வழக்கம் போல சங்கீத டீச்சருடன் சகஜமாகப் பேசினார். சுடச் சுட சீரகத் தண்ணீரைக் குடித்துக் கொண்டே கீரவாணியைப் பற்றிய தகவல்களைக் கூறப் பணித்தார். கூட்டத்தில் பஜகோவிந்தம் போட்டால் டீச்சருக்குப் பிடிக்காது. ஆகையால் ஒருவர் பின் ஒருவராகப் பேச வேண்டும். விமல் முதலில் ஆரம்பித்தான். காலையில் சொன்ன எல்லா தகவல்களையும் விமலே சொல்லி முடித்தான். மற்றவர்களுக்கு வேறு எந்தக் கூடுதலான தகவலும் தெரியவில்லை. டீச்சர் வேறு ஏதாவது கீரவாணியைப் பற்றித் தெரியுமா என கேட்டபோது, சுபா என்னைப் பார்த்து “மேளகர்த்தா ராகமுன்னு சொல்லு” என்றாள். அதைச் சொல்ல மறந்திருந்தேன். நான் பயந்தாலும் என்னிடம் யாராவது உரத்து பேசினாலும் மிக எளிதான விஷயத்தைக் கூட மறந்துவிடுவேன். அது அம்மாவுக்கு நன்றாகத் தெரியும்.

சுபா,  “சொல்லு” என்றாள்.

ராஞ்சையை ஒருமுறைப் பார்த்தேன். அவன் என் பக்கமே திரும்பவில்லை. ஆசிரியர் சுபாவின் கிசு கிசுப்பைக் கேட்டு, “என்ன வாணி… சொல்லு” என்றார்.

“கீரவாணியில் 7 ஸ்வரங்களும் வருகிறது, அப்போ கீரவாணி மேளகர்த்தா ராகமாக இருக்க வேண்டும். சரியா டீச்சர்?” என்றேன்.

“வாவ்! இதை எப்படி கண்டுபிடிச்ச” என்றார்.

சுபா, “இளையராஜாவின் கீரவாணியின் பாடலின் மூலம் கண்டுபிடிச்சா” என்றாள்.

சினிமா பாடலைப் பாடியதற்காக அம்மாவிடம் திட்டு வாங்கியது சுபாவிற்கு பத்தவில்லை என நினைத்துக் கொண்டு மீண்டும் ராஞ்சையைப் பார்த்தேன். அவனின் கவனம் ஆசிரியரின் பதில் மேலிருந்தது. சங்கீத டீச்சர் கீரவாணி பாடலின் ஆலாபனையைப் பாலசுப்ரமணியம் மாதிரியே பாடினார். அருமையாக இருந்தது.

ஆசிரியரே சினிமா பாடலைப் பாடுறாங்க எனக் கோபத்துடன் அம்மாவைப் பார்த்தேன். கீரவாணியைப் பாடியப் பின், இதே ராகத்தில் அமைந்த அவருக்குப் பிடித்த இன்னொரு சினிமா பாடலை பாடிக் காட்டினார்.

‘காற்றில் எந்தன் கீதம்… காணாத ஒன்றை தேடுதே…’

அந்தப் பாடலும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கோ கேட்ட ஞாபகம். உள்ளுணர்வு என நினைத்துக் கொள்வேன். நாட்டியத்திலும் சங்கீத்திலும் எனக்கு உள்ளுணர்வு அதிகம் உண்டு.

ஆசிரியர் பாடி முடித்ததும் “சோகமான பாடல்” என்றாள் சுபா.

“ஆமாம், இளையராஜா அதிக சோகமானப் பாடல்களைக் கீரவாணியில்தான் இசை அமைத்திருக்கிறார்” என்றார் டீச்சர்.

“என்னென்ன பாடல்கள் டீச்சர்?” என ராஞ்சையின் குரல் கேட்டது. முகத்தில் இயல்பில்லை. ஆனால் அவன் பேசியது கனத்த மனதை கொஞ்சம் அமைதியாக்கியது. எனக்கும் பேசக் கொஞ்சம் தெம்பைக் கொடுத்தது.

ராஞ்சையின் கேள்விக்குப் பதில் கூறும் முன், “கீரவாணி ராகம் கருணை ரசத்தைக் கொண்டு வரும் என்று விமல் சொன்னானே டீச்சர். கருணை நீடித்தால் சோகம் ரசம் பிறக்கும் என பரதமுனி நாட்டிய சாஸ்திரத்தில் கூறியிருக்கிறார். அதனால்தான் இளையராஜா அதிக சோகமானப் பாடல்களைக் கீரவாணியில் இசையமைத்திருக்கிறார் என நினைக்கிறேன்” என்றேன்.

அருமையான தகவல் என்று ஆசிரியர் கூறுகையில் மற்ற நண்பர்கள் கை தட்டிப் பாராட்டினார்கள்.

ராஞ்சை முகத்தை இறுக்கமாகவே வைத்திருந்தான். பூஜைக்கு முன் மணியடிக்கும் போது அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

உடனே, விமல் “இளையராஜாவிற்கு எப்படி நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள அபிநயம், ரசம் பற்றியெல்லாம் தெரியும்?” என்றான்.

எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் விமலுக்குத் தெரியாத ஒரே விஷயம் நாட்டியமும் அதைச் சார்ந்த விஷயங்களும்தான். எனக்கு அதுதான் தெரியும். என்னுடைய பலமும் அதுதான். அவனிடம் போட்டிப் போட எனக்கு இருக்கும் ஒரே ஆயுதம் நாட்டியம். சங்கீத டீச்சர் எதைக் கற்றுக் கொடுத்தாலும், அதற்கும் நாட்டியத்திற்கும் என்ன சம்பந்தங்கள் உண்டு என ஆராய தொடங்குவேன். என்னுடைய உள்ளுணர்வு எப்போதும் எனக்கு சரியான விடையைக் கொடுக்கும். அப்படி ஏதேனும் சம்பந்தப்படுத்தி டீச்சரிடன் சொன்னால் விமலுக்குப் பிடிக்காது. உடனே அதில் குற்றம் கண்டுப் பிடிப்பான். என்னைப் பேசவிடாமல் செய்வான். ஆனால் சங்கீத டீச்சருக்கு எங்களைச் சமாளிக்கத் தெரியும்.

சங்கீத ஆசிரியர், “இந்த மாதிரி மாணவர்களுக்காகத்தான் இவ்வளவு தூரத்திலிருந்து வந்து சொல்லி கொடுக்கிறேன். படிப்பதை  இப்படிதான் அமல்படுத்த வேண்டும். விமல், இளையராஜாவிற்கு நாட்டிய சாஸ்திரம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் ஒவ்வொரு ராகமும் எந்த மாதிரியான மன உணர்வுகளைக் கொண்டு வரும் என்பதை நன்கு அறிந்திருக்கக்கூடும். சினிமா படங்களில் வரும் காட்சிகளுக்கு ஏற்ப அவர் இசையை உருவாக்க வேண்டும். அந்த மன உணர்வை உருவாக்க வேண்டும். சோகமான காட்சியென்றால் சோகமான ராகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் காட்சியும் பாடலும் ஒன்றிணையும். இளையராஜாவிற்கு அபிநயம் பற்றி தெரியாமலிருந்திருக்கலாம், ஆனால் ஒவ்வொரு ராகங்களையும் கேட்கும்போது அது கொண்டு வரும் மன உணர்வைத் தெரிந்திருக்க வேண்டும். பல இசைக்கருவிகளை வாசிப்பதனால் மட்டும் அவர் இசையமைப்பாளர் இல்லை. ஒவ்வொரு ராகங்களும் கொண்டு வரும் மன உணர்வை அறிந்து அதைச் சரியான காட்சிக்குப் பயன்படுத்துவதாலும்தான் அவர் இசையமைப்பாளர். மனதில் பிறக்கும் கருணை உணர்வு நீடித்தால் சோகமாகத்தான் மாறும். வாணி சொல்வது இதற்கு பொருந்தும். எனவே, இருவரும் 50 – 50 என்றார்.”

மீண்டும் கண்கள் அம்மாவை நோக்கிச் சென்றது. அம்மாவின் கண்களில் கோபம் இல்லை. சங்கீத டீச்சரிடம் சொன்ன விஷ்யங்களைக் கேட்டு பெருமைப்பட்டிருக்கக்கூடும். ஆனாலும் பார்த்தும் பார்க்காததுபோல கோயில் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். சினிமா பாடலைப் பாடிய விஷயம் வீட்டிற்குச் சென்றும் தொடரும் என எனக்குத் தெரியும். அப்படி தொடர்ந்தால் அம்மாவிடம் ராகத்திற்கும் பாடலுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூறி விளக்க வேண்டும் என தோன்றியது.

அன்றைக்கு தியாகராஜ சுவாமிகள் இயற்றிய கலிகியுண்டேகதா எனும் கீரவாணி ராகத்தில் அமைந்த ஒரு புகழ் பெற்ற தெலுங்கு கிருதியை டீச்சர் சொல்லிக் கொடுத்தார். அன்றைய சங்கீத வகுப்பு இனிதே முடியும் தருவாயில் பனி இறங்கியது. காலையிலிருந்து மழை பெய்ததால் பனி வருவது சாத்தியமே இல்லை என அனைவருக்கும் தெரியும். ஆனால் அன்று அது நிகழ்ந்தது. எல்லோருக்கும் அது ஆச்சரியம். கீரவாணியால் உண்டான கருணை என நினைத்துக்கொண்டபோது விமல் என்னைப் பார்த்துச் சிரித்தான். 


கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி ஒரு பரதநாட்டிய கலைஞர். தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக பணிப் புரிகிறார். ‘அப்சரா ஆட்ஸ்’ எனும் வலைத்தளத்தில் இசை, நாட்டியம் மற்றும் யோகா போன்றவற்றின் அனுபவங்களை எழுதி வருகிறார். 

Blogspot: https://apsararts.blogspot.com/

Apsara Arts Youtube: https://www.youtube.com/channel/UCS2ZtzaEdQEXZGhQlKRJRfQ

5 comments for “கீரவாணி

  1. யதிராஜ ஜீவா
    September 2, 2021 at 11:50 am

    விவரணங்கள் வாசக மனதில் காட்சிப்படுத்துவதை மிக இயல்பாய் செய்கின்றன…”அவனின் அம்மா சாதத்துடன் சங்கீதத்தையும் ஊட்டியிருக்க வேண்டும் ” போன்ற வரிகள் அழகு… வாழ்த்துகள்…

  2. September 5, 2021 at 1:04 am

    இசை துறை சார்ந்து மிக ஆழமாக எழுதியிருக்கிறார். மிக அபூர்வமாகவே மலேசியாவில் இவ்வாறான கலைஞர்கள் காணக்கிடைக்கிறார்கள்.

  3. Johnson
    September 5, 2021 at 11:33 am

    அருமையான பதிவு. நீண்ட நாளுக்குப் பிறகு வாசிக்க ஒரு தூண்டல் கிட்டியது. நன்றி

  4. ஸ்ரீவிஜி
    September 5, 2021 at 5:33 pm

    பத்தி என்று அடையாளப்படுத்தியிருந்ததால் கர்நாடக சங்கீதம் பற்றிய கட்டுரையாக இருக்குமோ என்றிருந்தேன். அற்புதமான சிறுகதையை வாசித்த அனுபவம் ஏற்பட்டடது. கீரவாணி என்னைக் கிறங்கடிக்கும் ராகம். இளையராஜா இல்லாமல் இந்த ராகமெல்லாம் எளிய மக்களைச் சென்று சேருவதற்கு சாத்தியமில்லாமல் போயிருக்கும். அழகிய கேமரன்மலைச் சூழலை நம் முன் கொண்டுவந்து வாசித்து முடித்தவுடன் `காற்றில் எந்தன் கீதம்..’ என்கிற பாடல் அங்குள்ள ரோஜாவில் ஒட்டிய பனியாய் மனதில் ஒட்டிக்கொண்டு அசைபோட வைத்துவிட்டது. மெல்லிய கிளர்ச்சியை உணரமுடிந்தது. அருமை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...