சிசில் ராஜேந்திரா: உள்நாட்டில் புறக்கணிக்கப்பட்டு, உலக அளவில் கொண்டாடப்படும் கவிஞர்

முன்னோட்டம்

மனிதனின் அடிப்படை உரிமைகளில் மிக முக்கியமான ஒன்று கருத்து சுதந்திரம். ஒருவர் தன் கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த மற்றும் கற்பிக்க எவ்வித தணிக்கையும் தடையும் இல்லாமல்  செயல்பட முடியுமானால் அதுவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எனப்படுகிறது. மலேசியாவில் பெரும்பாலான நாடுகளைப் போலவே பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு வந்தாலும் அவை சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே செயல்படுகின்றன. இவற்றுள் விமர்சனங்களும் அடங்கும். மலேசியாவில் பல விடயங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாகப் பார்க்கப்படுவதால் அதனுடைய குறைநிறைகளை சுட்டிக்காட்ட முடியாத சூழ்நிலை நிலவுகின்றது.

பல ஆண்டுகளாக, பாதுகாப்பு, இன நல்லிணக்கம் மற்றும் பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் மலேசியாவில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதாகவே தோன்றுகிறது. இதனால் ஓவியர்கள், இசை கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என பல முக்கியமான படைப்பாளிகளின் படைப்புகளும் திறைமைகளும் பெரியளவில் மக்களைச் சென்றடையாமல் அதிகாரத்தில் இருப்பவர்களால் நிராகரிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் அதுகுறித்தெல்லாம் கவலையின்றி மிகச்சில கலைஞர்களை தங்கள் நோக்கத்தில் இருந்து வழுவாமல் நிலைக்கின்றனர்.

சிசில் ராஜேந்திரா- தொடக்க காலம்

உலக அளவில் போற்றப்பட்டு, மலேசியாவில் பல சர்ச்சைக்குரிய படைப்புகளை வழங்கி இன்றளவும் தன் கொள்கையில் மாறாமல் தொடர்ந்து தைரியமாக தன் படைப்புகளில் சமூக சிக்கல்களை முன்னிருத்தி எழுதி வரும் கவிஞர்களில் ஒருவர் சிசில் இராஜேந்திரா. வழக்கறிஞர்-கவிஞர் என்று அழைக்கப்படும் சிசில் ராஜேந்திரா, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து எழுதியவர். மலேசியாவின் வளர்ச்சி, அதன் சுற்றுச்சூழல் அமைப்பு, இதனால் கடுமையாக பாதித்த மக்களின் வாழ்வாதாரம் எனத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவர் தொழில் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்றும் சூழ்நிலை சந்தர்ப்பங்களினால் உருவாகிய கவிஞர் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

சிசில் ராஜேந்திரா 1941 ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் பிறந்து, அப்போது மீன்பிடி கிராமமாக இருந்த தஞ்சோங் தொக்கோங் (Tanjong Tokong) கிராமத்தில் தன் குழந்தைப் பருவத்தை கழித்தார். பின்நாட்களில் இக்கிராமம் வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்பட்டதாக அவர் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு “The Hills and The Sea” என்ற கவிதைவழி தன் கிராமத்திற்கு ஏற்பட்ட நிலையை பதிவு செய்துள்ளார். 2017ஆம் ஆண்டு விருது பெற்ற ஒளிப்பதிவரான ஆண்ட்ரூ என்ஜி (Andrew Ng) என்பவர் இக்கவிதையால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, இடம்பெயர்ந்த மீனவர்களின் அவல நிலை குறித்த உணர்வுபூர்வமான ஆவணப்படம் ஒன்றை அதே தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

சிசில் ராஜேந்திரா தனது ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி படிப்பை செயின்ட் சேவியர் பள்ளியில் முடித்தார். பின், சிங்கப்பூரில் அமைந்திருந்த மலாயாப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயில தொடங்கினார். அவர் குடும்ப கட்டாயத்தின் காரணமாகவே சட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தனது பல்கலைக்கழக நாட்களின் பெரும்பகுதியை விளையாட்டு மைதானத்தில் கழித்தார். இரண்டு வருடங்கள் பல்கலைக் கழக வாழ்க்கையில் சட்டக்கல்வியின் மீது உள்ள நாட்டம் குறைந்து கவனம் முழுதும் மற்ற மற்ற நடவடிக்கைகளின் மேல் ஈர்க்கப்பட்ட நிலையில் மூன்று வருடங்களுக்குள் தனது சட்டப் படிப்பை முடித்துவிட வேண்டும் என்ற கடுமையான அறிவுறுத்தலுடன் அவர் லண்டனுக்கு அனுப்பப்பட்டார்.

லண்டன் வாழ்க்கை

லண்டனில் அமைந்திருந்த லிங்கனின் வழக்கறிஞர் விடுதியில் (Lincoln’s Inn) சேர்ந்து 1964ஆம் ஆண்டு தன் சட்டக்கல்வியை தொடர்ந்தார். சட்டம் படிக்க ஆர்வம் இல்லையெனினும் கடுமையான முயற்சிக்குப் பிறகு 18 மாதங்களுக்குள் தன் முதல் பாகம் சட்டப்படிப்பை முடித்தார்.

1965 இல் “எம்ப்ரியோ” (Embryo) என்ற தலைப்பில் அவர் தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். லண்டனில் கவிதை புத்தகம் வெளியிட்ட முதல் மலேசியர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அவர் லண்டன் கவிதை வட்டத்தில் இயங்கி வருபவர்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கினார். மேலும் அவர் தனது படிப்பை முழுவதுமாக கைவிட்டு, கவிதை கலந்துரையாடல் கூட்டங்கள் மற்றும் கேளிக்கை கூட்டங்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

சட்டக்கல்வியை முழுமையாக முடித்துவிட்டு சீக்கிரம் வீடு திரும்ப வேண்டி தன் குடும்பத்தினரிடமிருந்து அவருக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த போதிலும் அவர் லண்டனில் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் அதிக நேரம் புத்தகக் கடை, சினிமா திரையரங்கம், நாடகக்கொட்டகை மற்றும் கேளிக்கை மையங்களில் கழித்து வந்தார்.

வார இறுதி நாட்களில் வியட்நாம் போருக்கு எதிராக டிராஃபல்கர் ஸ்குயர் (Trafalgar Square) எனும் சதுகத்தில் நடைப்பெற்ற போராட்டம், ஆப்பிரிக்காவின் விடுதலைக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டம், கிரீஸ் மற்றும் அர்ஜென்டினாவில் நிகழ்ந்து வந்த சர்வாதிகாரத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள், நெல்சன் மண்டேலா மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடந்து வந்த தீண்டாமை ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவாக என்று நிகழ்ந்து வந்த பல போராட்டங்களில் சிசில் இராஜேந்திரா தவறாமல் கலந்து கொண்டார். அக்காலக்கட்டத்தில் பிரிட்டன் நாட்டில் பரவலாக வளர்ந்து கொண்டிருந்த நிற தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் (Black Consciousness Movement – Anti-Apartheid Activist Movement) அவருடைய ஈடுபாடு மென்மேலும் அதிகரித்தது.

தன் வாழ்வாதாரத்திற்காக தபால்காரர், சமையல்காரர், திரைக்கதை எழுத்தாளர், தூதுவர் மற்றும் தொழிற்சாலை தொழிலாளி என தான் படித்த படிப்புக்கு முற்றிலும் அப்பார்பட்ட வேலைகளில் பணியாற்றினார். அவர் தனது கோடைகால நாட்களில் பெரும்பகுதியான நேரம் ஐரோப்பாவில் உள்ள கலைக்கூடங்கள் மற்றும் புத்தகக் கடைகளிலேயே கழித்தார்.

இரண்டு வருடம் சட்டக்கல்வியில் இருந்து முற்றிலுமாக விலகி இருந்த நிலையில், 1968-ஆம் ஆண்டும் தன்னுடைய இறுதி கட்ட சட்டக்கல்வியை முடிக்க அவர் மீண்டும் லிங்கனின் வழக்கறிஞர் விடுதிக்குச் (Lincoln’s Inn) சென்றார். பின், சட்டக்கல்வியை முடித்த அவர் 1969ஆம் ஆண்டு மலேசியா திரும்பினார். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் அமைதிருக்கும் சில சட்ட நிறுவனங்களில் இருந்து அவருக்கு சட்டம் பழக வாய்ப்புகள் வந்தன. எனினும், ஓர் எழுத்தாளராக தனது திறமைகளை இன்னும் மெருகேற்ற வேண்டும் என்று உணர்ந்த செசில் இராஜேந்திரா, மீண்டும் லண்டனுக்குச் செல்ல முடிவு செய்தார்.

போராட்ட குணமும் இயக்க வாழ்க்கையும்

லண்டனுக்குச் சென்ற அவர் அங்கு தீவிரமாக செயல்பட்டு வந்த பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International), தீண்டாமை ஒழிப்பு இயக்கம் (Anti Apartheid Movement), குடியுரிமைகளுக்கான தேசிய சபை (National Council for Civil Liberties) கருப்பின மக்களின் தீண்டாமை குறித்த விழிப்புணர்வு குழுக்கள் (black awareness groups) மற்றும் கருப்பின மக்களின் கல்விக்காக இலவச பல்கலைக்கழகம் (Free University of Black Studies) போன்ற மனிதவுரிமை சார்ந்த குழுக்களில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தி கொண்டார். அதே சமயம் அவர் மாணவர் கிறிஸ்தவ இயக்கம் (Student Christian Movement – SCM) மற்றும் ஐக்கிய பேரரசின் சமூக உறவுகள் ஆணையம் (United Kingdom Community Relations Commission) உடன் சேர்ந்து சட்ட அலுவலராக பணியாற்றினார். சிறைச்சாலைகளுக்குச் சென்று பார்வையிடுவது, நீதிமன்ற வழக்குகளில் கலந்துகொள்வது, பிணை ஆணை ஏற்பாடு செய்தல், சட்டரீதியான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல் போன்றவை அவருடைய தலையாய பணியாக இருந்தது.

1970ஆம் ஆண்டு லண்டன் தேனீர் விடுதியில் “Historic Black Voices Forum” என்ற பெயரில் கறுப்பின மக்களுக்கான மன்றம் ஒன்றை நிறுவினார். அங்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசைக்கலைஞர்களின் படைப்புகள் மற்றும் “Galaxy Of Third World Activities” என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கப்பட்டன. வளர்ந்து வரும் நாடுகளின் நிலையை கவிதை மற்றும் இசை ஊடாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தன் நண்பர்களுடன் சேர்ந்து “Third World” என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை உருவாக்கினார். “Third World” இசைக்குழு லண்டனில் விரிவடைய தொடங்கிய பின் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. பிபிசி (British Broadcasting Corporation – BBC) மற்றும் “நியு இன்டர்நேஷனலிஸ்ட்” (New Internationalist) போன்ற பிரபலமான தளங்களிலும் “Third World” இசைக்குழுவின் படைப்புகள் இடம்பெற்றன.

1972ஆம் ஆண்டு, இங்கிலாந்து பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பயன்படுத்துவதற்காக இக்குழுவின் படைப்புகள் “An Anthology of 3rd World Poetry” எனும் தலைப்பில் தொகுக்கப்பட வேண்டி சிசில் இராஜேந்திரா அவர்களுக்கு கோரிக்கை விடப்பட்டது. இத்தொகுப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் (West Indies) உள்ள சிறந்த கவிஞர்களின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. 1972ஆம் வருடம் அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான மற்றும் குறிப்பிடதக்க ஆண்டாக கருதப்படுகிறது.

சட்ட ஆலோசனை மையம்

1976ஆம் ஆண்டு அவர் மீண்டும் மலேசியாவிற்குத் திரும்பினார். அப்போதைய மலேசிய இந்திய காங்கிரசு தலைவரும், மாநில செயற்குழு மன்றத் தலைவருமான டத்தோ தி சுப்பையாவிற்கு கீழ் “மெஸ்ஸர் சுப்பையா & கோ” (Messrs Subbiah & Co) என்ற நிறுவனத்தில் பணியாற்றினார்.

சில வழக்கறிஞர்கள், இரண்டு விவசாயிகள் மற்றும் ஒரு சமூக ஆர்வலரின் ஆதரவோடு பினாங்கு சட்ட ஆலோசனை மையம் (Penang Legal Advisory Centre – PLAC) என்ற பெயரில் 1980இல் நாட்டின் முதல் கிராமப்புற சட்ட உதவி மையத்தைத் தொடங்கினார் சிசில் ராஜேந்திரா. விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியினர்களின் உரிமை (சகாங் தாசி வழக்கு – Sagong Tasi case), நிலத்தில் இருந்து அகற்றவற்றவர்கள் (கம்போங் புவா பாலா வழக்கு – Kampong Buah Pala), புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் எனப் பல தரப்பினரின் சிக்கலான வழக்குகளுக்கு இந்த சட்ட ஆலோசனை மையம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

பயான் லெபாஸ் கிராமத்தில் ஒரு மரக் குடிசையின் கீழ் செயல்பட்டு வந்த பினாங்கு சட்ட ஆலோசனை மையத்தின் (Penang Legal Advisory Centre – PLAC) செயல்பாடுகள் பொதுநலவாயம் சட்டக் கல்வி சபை (Commonwealth Legal Education Association) மற்றும் சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கத்தால் (International Bar Association) வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும், கம்போடியா, கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் சட்ட உதவித் திட்டங்களைத் தொடக்கி வைக்க அழைக்கப்பட்டார்.

நீதியின் மேல் நம்பிக்கை

சிசில் இராஜேந்திரா அவர்கள் வாக்குப்பதிவு மூலம் மலேசிய வழக்கறிஞர் மன்ற பொறுப்புகளில் நியமிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர், வழக்கறிஞர் கழகத்தின் தேசிய சட்ட உதவி குழுவின் தலைவராக பொறுப்பேற்றார். அக்காலக்கட்டத்தில் வழக்கறிஞர் மன்றத்தில் வெகுவாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த கோலாலம்பூர் மேலாதிக்கத்தை உடைத்த முதல் நபர் சிசில் இராஜேந்திரா அவர்களே என சொல்லப்படுகிறது. திரு. புரவலன் முத்து ராமன் மற்றும் திரு. சிவராசா ராசையா போன்ற வழக்கறிஞர்களின் துணையுடன் நாடு முழுவதும் சென்று, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சட்ட உதவி மையம் திறக்க வலியுறுத்தினார். பின், 2000ஆம் ஆண்டு மூடுந்து மூலமாக பல இடங்களுக்கு சென்று நடமாடும் சட்ட உதவி மையமாகவும் இத்திட்டம் செயப்பட்டுள்ளது. மக்களுக்கான சட்ட உதவி என்பது தொண்டு கிடையாது மாறாக அது ஒவ்வொரு மக்களின் அடிப்படை மனித உரிமை என்று சிசில் இராஜேந்திரா அவர்கள் தீர்கமாக நம்புகிறார்.

1984 ஆம் ஆண்டு, முதல் தேசிய சட்ட உதவி மாநாட்டை (National Legal Aid Conference) “ராயல் சிலாங்கூர் கிளப்பில்” (Royal Selangor Club) சிசில் இராஜேந்திரா அவர்கள் ஏற்பாடு செய்தார். மேலும், வழக்கறிஞர் கழகம் (Bar Council) மற்றும் சட்ட உதவி பணியகம் (Biro Bantuan Guaman) கோலாலம்பூரில் முதல் இரண்டு சர்வதேச சட்ட உதவி மாநாடுகளை ஏற்று நடத்த வலியுறுத்தினார்.

அவருடைய தலைமைத்துவ காலத்தில், அவர் பல சட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் முன்னெடுத்துள்ளார். அதில் குறிப்பிடதக்க ஒன்று 1988ஆம் ஆண்டு நடந்த “நீதித்துறையை காப்பாற்று” (Save the Judiciary) எனும் பிரச்சாரம். அதனை தொடர்ந்து, உள் பாதுகாப்புச் சட்டம் 1960 (No Detention Without Trial) மற்றும் விசாரணையின்றி தடுத்து வைக்க அனுமதிக்கும் அனைத்து வகையான சட்டங்களையும் அகற்ற வேண்டி கையெடுக்கப்பட்டதுதான் “விசாரணை இல்லாமல் தடுப்பு இல்லை” (No Detention Without Trial) என்ற பிரச்சாரம்

மனித உரிமை தினத்தை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 10ஆம் திகதி வழக்கறிஞர்கள் கழகத்தில் “Festival of Rights” என்னும் விழா சிசில் அவர்களின் முயற்சியினாலேயே கொண்டாடப்படத் தொடங்கியது. மலேசியாவின் மிகவும் மதிப்பிற்குரிய வழக்கறிஞரான ராஜா அஜீஸ் அட்ரூஸின் (Raja Aziz Addruse) அவர்களின் கோரிக்கையை ஏற்று, சிசில் இராஜேந்திரா இரண்டு முறை தேசிய மனித உரிமைகள் சங்கத்தின் (HAKAM) தலைவராக பணியாற்றினார்.

அவர் ஒரு போதும் சட்டத்தின் மீது ஆர்வம் கொண்டதில்லை ஆனால் நீதியின் மேல் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதாக தன் நேர்காணலில் கூறுகிறார். தான் சட்டத்துறைக்குள் வந்த காரணம் இதன் வழியாவது சக மனிதருக்கு தன்னால் முடிந்த அளவு நீதி கிடைக்க ஏதாவது செய்ய முடியும் என்று எண்ணியதாக குறிப்பிடுகிறார்.

இலக்கிய மனம்

இது போன்று மனித உரிமைகளுக்காக பல முன்னெடுப்புகளை கொண்டு வந்த  சிசில் இராஜேந்திரா  இலக்கிய மனதிலிருந்தும் விடுபடாமல் நிறைய கவிதைகளையும் எழுதியுள்ளார். அதில் பல கவிதைகள் சர்ச்சைக் குரியவையாக இருந்துள்ளன. ரிஃபெல் தன் விமர்சன குறிப்பில் சிசில் ராஜேந்திராவை மலேசியாவின் மிகச்சிறந்த ஆங்கில கவி என்று முன்னிருத்துகிறார். நஷாரெத்,  சிசில் ராஜேந்திராவை எந்த அரசியல் கோட்பாடுகளுக்கும் ஆட்படாமல் துணிச்சலுடன் எல்லாவித மனித விரோத போக்குகளையும் எதிர்க்கும் மனம் கொண்டவர் என்று புகழ்கின்றார்.

இவரது கவிதைகள் இயல்பாகவே அரசியல் தன்மை வாய்ந்தவை.  அதிகாரதரப்பின் அலட்சிய போக்குகளை விமர்சிப்பதும் அரசாங்கத்தின் சார்பு தன்மைகளை சாடுவதும் இவரது கவிதைகளின் தீவிர வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன.

உதாரணத்துக்கு To My Country என்ற கவிதையில் சிசில் தன்னை ஒரு கவிஞனாக அரசின் சிறுமைகளையும் போதாமைகளையும் கேள்வி கேட்கும் உரிமை உள்ளவன் என்று தெளிவு படுத்துகிறார். மேலும் தனக்கு நாட்டின் மீது இருக்கும் அக்கறையினால்தான் தன் விமர்சனங்களை முன் வைப்பதாக சொல்கின்றார்.

“தி கிங்டம் ஆஃப் பர்ப்லேயா” (The Kingdom of Purplaya) என்ற தலைப்பில் அவர் எழுதி அலிரான் பத்திரிகையில் (Majalah Aliran) வெளிவந்த கவிதை இதற்கு உகந்த எடுத்துக்காட்டாக அமையும். இக்கவிதை தீபகற்ப மலேசியாவின் பூர்வீக மக்கள் மலாய் இனத்தவர் அல்ல என்பது போல் சித்தரிக்கின்றன என்று குற்றம் சாட்டி சிசில் இராஜேந்திராவுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டனர். மேலும், டாக்டர் ஹசன் அகமது என்பவர் உத்துசான் மலேசியா என்ற நாளிதழில் எழுதிய கட்டுரையில் இந்தக் கவிதை தேசிய அரசியலமைப்பை சீரழிக்கிறது, நாட்டின் வரலாற்றை மறுக்கும் வகையில் உள்ளது, பூர்வீக மக்களான மலாய்க்காரர்களின் நிலைப்பாட்டை மற்றும் மலாய் சிறப்பு உரிமைகளை கேள்விக்குள்ளாக்குகிறது என பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். ஆனால், சிசில் ராஜேந்திராவின் இந்த கவிதை பொதுவானது மற்றும் விரிவானது என்றும் உலகெங்கிலும் உள்ள உயரடுக்கினரை (Elite) உள்ளடக்கியது என்றும் குறிப்பிடுகிறார். இது பாலஸ்தீன் (Palestin), ஜிம்பாப்வே (Zimbabwe), ஃபிஜி (Fiji), சிங்கப்பூர் (Singapore) ஆகியவற்றுடன் தொடர்புடையது, மலேசியாவில் மலாய்க்காரர்களின் நிலைக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார். எனினும், இக்கவிதை எழுதிய செயலைத் தேசத் துரோகமாக கருதிய சிலர் அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால், அவர் அதிகாரிகளால் விசாரணைக்கு பல முறை அழைக்கப்பட்டுள்ளார்.

சிசில் இராஜேந்திரா அவர்கள் மொத்தமாக 25 புத்தகங்களை எழுதியுள்ளார். அவருடைய கவிதைகள் சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில், ஜெர்மன், பிரஞ்சு, சீனம், தமிழ், தகலாகு மொழி (Tagalog), எஸ்கிமோ (Esquimaux), மற்றும் ஜப்பானிய மொழி (Japanese) உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ராஜேந்திரா முதன்முதலில் வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்பான “எம்ப்ரியோ” (Embryo) (1965) மற்றும் அதன் அடுத்த தொகுப்பான “ஈரோஸ் அண்ட் ஆஷஸ்” (Eros and Ashes) (1975) ஆகியவை காதல் மற்றும் தனிமை ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. பின், 1978ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட “போன்ஸ் அன்ட் ஃபெதெர்ஸ்” (Bones and Feathers) சுற்றுச்சூழல் சீரழிவு, வறுமை மற்றும் ஒடுக்குமுறை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் கவிதை தொகுப்பு ஆகும். சிசில் ராஜேந்திரா எழுதிய ரோ பென் ஆஃப் ரோஜாஸ்: தி ரோஸ் சான் ஸ்டோரி (2013) என்ற நாவல், ஒரு மலேசிய நடனக் கலைஞரின் வாழ்க்கை வரலாறு பற்றியது. 1950 முதல் 1970 வரை கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த ஒரு சீன ஸ்ட்ரிப்டீஸ் நடனக் கலைஞரின் (Chinese striptease dancer) வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் ஆகும். மலேசியாவில் சர்ச்சைக்குரிய பேசவோ எழுதவோ விலக்கப்பட்ட ஒரு ஸ்ட்ரிப்டீஸ் நடனக் கலைஞரை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு எழுதப்பட்டது இந்நாவலின் தனித்துவமாக பார்க்கப்படுகிறது. 1980களில் அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் மலேசியாவை மட்டுமல்ல, மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் சமூகப் பிரச்சினைகளைச் சார்ந்தும் இருந்துள்ளது.

பாதுகாப்புச் சட்டம் குறித்து அங்கத தொனியில் எழுதப்பட்ட “தி எனிமல் என் இன்செச்ட் ஏக்ட்” (The Animal and Insect Act) என்னும் அவருடைய புகழ் பெற்ற கவிதை இணையத்தில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.  அதுமட்டுமின்றி, அரசு சாரா அமைப்பான பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International) 1995ஆம் ஆண்டு வெளியிட்ட  நாட்குறிப்புகளில் மற்றும் 1996ஆம் ஆண்டு வெளியிட்ட நாட்காட்டிகளில் இக்கவிதை வரிகளை அச்சிட்டிருந்தனர்.

மேலும், டைம் இதழ் (Time), நேஷனல் ஜியோகிராஃபிக் (National Geographic), ஆசியாவீக் (Asiaweek), ஆசியா பத்திரிகை (Asia Magazine), தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal), நியூ ஸ்டேட்ஸ்மேன் (New Statesman), தி அசாஹி ஷிம்பூன் (The Asahi Shimbun), தி கார்டியன் (The Guardian), ஃப எஸ்டன் எகொனொமிக் ரிவ்வியு (Far Eastern Economic Review), அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (United Nations High Commissioner for Refugees), ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children’s Fund), பிபிசி (BBC) மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) போன்ற பிரசுரங்களில் இவருடைய கவிதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி, வெளிநாடுகளில் பள்ளி பாடப்புத்தகங்கள், இடைநிலைக் கல்விக்கான பொதுச் சான்றிதழ் (General Certificate of Secondary Education), தேர்வுத் தாள்கள், சுற்றுச்சூழல் பிரசுரங்கள், மனித உரிமை ஆய்வுகள் போன்றவற்றிலும் தொடர்ந்து  அவருடைய கவிதைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

1993ஆம் ஆண்டு சிசில் இராஜேந்திரா அவர்கள் சுற்றுச்சூழல் தொடர்பாக எழுதிய கவிதைகளை வெளிநாடுகளில் அறிமுகப்படுத்துவதைத் தடுப்பதற்கான ஒரு செயலாக அவரது பாஸ்போர்ட்டை அரசாங்கம் ஆறு மாத கால தடுத்துவைத்திருந்தது. அதில் மிக முக்கியமான கவிதை “மழைக்காடுகளுக்கான இரங்கல்” (Requiem for a Rainforest). மலேசியாவில் பலர் இக்கவிதை மலேசியாவின் மரத் தொழில் துறைக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதியதன் விளைவாக இது நிகழ்ந்தது. மலேசிய அரசாங்கத்தின் இச்செயலைக் கண்டித்து பல நாடுகளில் இருந்து வெளியிடப்பட்ட கடுமையான கண்டனங்களுக்குப் பிறகே அவருடைய பாஸ்போர்ட் திருப்பிக் கொடுக்கப்பட்டது. தற்போது “மழைக்காடுகளுக்கான இரங்கல்” (Requiem for a Rainforest) கவிதை மலாய் மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டு நம் நாட்டு பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தின் (Green Curriculum) ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.

2004ஆம் ஆண்டு, முதல்முறையாக மலேசிய வாழ்நாள் மனிதநேய விருதை பெற்ற பெருமையும் இவரையே சாரும். 2011 ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய அவரது கவிதைகளை அங்கீகரிக்கும் விதமாக, டென்மார்க் நாட்டின் கலை மன்றம் “DIVA” (Danish International Visiting Artists) விருதைப் அவருக்கு வழங்கியது. மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து (Human Rights Commission of Malaysia – SUHAKAM) தனி மனித உரிமைகள் (Individual Human Rights Award) என்னும் விருது 2012ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில், சிசில் இராஜேந்திரா அவர்கள் பினாங்கு பாரம்பரிய அறக்கட்டளையால் (Penang Heritage Trust) “Living Heritage Treasure” என்று அங்கீகரிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு மலேசிய வழக்கறிஞர்கள் கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருதை (Malaysian Bar Lifetime Achievement Award) அவருக்கு வழங்கியது.

புறக்கணிப்புகளுக்கு துணிந்த பெருவாழ்வு

இராஜேந்திராவின் படைப்புகள் உலகளவில் பாராட்டப்படுவது மட்டுமின்றி “மலேசியாவின் சிறந்த கவிஞர்” என்று அங்கீகரிக்கப்படுகிறார். பல தரப்பினரிடம் இருந்து எவ்வளவு அழுத்தம் வந்தாலும் ஒரு போது தன் உரிமைகளையும் கொள்கைகளையும் கைவிடாமல் தொடர்ந்து சமக்கால சிக்கல்கள் குறித்து எழுதி வருகிறார். கவிதை எழுதுவதில் மிக முக்கியமான பங்களிப்பைச் சிசில் இராஜேந்திரா அவர்கள் வழங்கிய அளவுக்கு வேறு எவரும் வழங்கியது இல்லை என்று மலேசிய ஆங்கில இலக்கிய வட்டத்தில் குறிப்பிடுகின்றனர். மலேசியாவில் புறக்கணிக்கப்பட்டு, சர்வதேச அளவில் கொண்டாடப்படும் சிசில் ராஜேந்திராவின் கவிதைகள் 2005ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. வெற்றிபெறவில்லை என்றாலும், இந்த நியமனம் தனக்கு கிடைத்த பெரிய மரியாதை என்கிறார்.

மலேசியாவுக்கு வெளியில் இருந்து அதிக பாராட்டுக்களைப் பெற்றாலும், சிசில் ராஜேந்திராவை அவரது சொந்த நாட்டிலுள்ள இலக்கிய வட்டாரங்கள் அங்கீகரிக்கவில்லை என்பதே உண்மை. இவர் மலேசிய கவிஞர் என்று உலக அளவில் பார்க்கப்பட்டாலும் உள்ளூரில் அவரது கவிதைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரது படைப்புகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் மலேசியர்களுக்கு பயனளிப்பதை விட வெளிநாடுகளில் இயங்கும் கல்வித்துறைக்கு அதிகளவில் பயனளித்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

“என் படைப்புகளை விரும்பி படித்து ஆதரிக்கும் ஒரு சில உள்ளூர் மக்கள் இருந்தாலும் கூட, என் கவிதைக்கு இந்நாட்டில் ஒருபோதும் வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கு எனது கவிதைகளின் உள்ளடக்கம் காரணமாக இல்லை, மாறாக நான் ஆங்கிலத்தில் எழுதுகிறேன் என்பதே காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறேன். இங்கு ஆங்கிலத்தில் எழுதுவது தேசபக்தியை எதிர்க்கும் (anti–patriotic) செயலாக கருதப்படுகிறது” என்று அவர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். சில விமர்சகர்கள் சிசில் இராஜேந்திரா சமூகப் பிரச்சினைகளை தன் கவிதைகளின் மையக்கருவாக கொண்டு எழுதுவதன் வழி சுலபமாக மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம் என்ற சிந்தனையை கொண்டுள்ளார் என்கிறார்கள். அதற்கு “ஒருவருடைய படைப்பு புரிந்து கொள்ள முடியாத போதெல்லாம், உடனடியாக அந்த படைப்பாளி கவனத்தைத் தேடுகிறார் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்” என்கிறார் சிசில்.

80 வயது நிரம்பிய இவர் இன்று வரை தன் கொள்கைகளில் இருந்து தடுமாறாமல் பல தடைகள், குற்றச்சாட்டுகள், நிராகரிப்புகளைத் தாண்டி இயங்கிக் கொண்டிருக்கின்றார். இவருடைய இலக்கிய படைப்புகளுக்காக கொண்டாடத் தவறியது மலேசியாவின் மிகப் பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

சிசில் ராஜேந்திராவின் To My Country என்ற கவிதை தமிழில்

என் தேசத்திற்கு

தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்

எனக்கு அக்கறை இல்லையெனில்

உனது பல குறைகளைப்

பட்டியலிடத்

துணிய மாட்டேன்

உன்னில் சிறந்தவற்றை மட்டும் தேர்ந்து

மீதமுள்ளவற்றைப் புறக்கணித்து

உனது புகழை மட்டுமே

பாடிக் கொண்டிருந்திருப்பேன்

ஆனால் நான்

கனவுகள் மின்னும் கண்கள் கொண்ட

காதலன் அல்ல

உனது பல களங்கங்களை

என்னால் மறைக்க முடியாது

எனவே,

உன் பேராசை

உன் அடியாழத்து

முற்சார்புகள். . .

உனது குழந்தைகளின்

மரத்துப்போன உணர்வுகள்

உனது பலப்பல

இரக்கமின்மைகள்

ஆகியவற்றைக் கண்டு நான்

குறைபட்டுக் கொண்டால். . .

என்னைப் பொறுத்துக்கொள் அன்பே

அன்பு மற்றும் வெறுப்பு

இரண்டும் ஒரே கொப்பரையில்

வார்த்தெடுக்கப்படுபவை

மற்றவர்களிடம் நாம்

பொருட்படுத்தாத தவறுகள்

நமது நேசத்துக்குரியவர்களிடம்

பேரழிவின் பகுதிகளாகத்

தோன்றுகின்றன

மிகநேசிக்கும் ஒன்றின்

மோசமான பகுதியை ஒருவனால்

வெறுக்கவே முடியும்

எனக்கு அக்கறை இல்லையெனில்

உனது பல குறைகளைப்

பட்டியலிடத்

துணிய மாட்டேன்

முகநூல்: https://www.facebook.com/pwinchessdinkie.winkie

மேற்கோள் பட்டியல்

Addison, K. (1982, September, 19). Cecil Rajendra: A Third World Poet and His Works. Retrieved from http://journeytoforever.org/keith_cecil.html

Bissme S. (2011, August, 08). With rhyme and reason. Retrieved from https://www.malaysianbar.org.my/article/news/legal-and-general-news/members-opinions/with-rhyme-and-reason

Carlow, C. (2009, December, 21). THE HOLLYWOOD FOREST STORY : AN ECOSOCIAL ART PRACTICE. Retrieved from https://hollywoodforest.com/2009/12/21/i-hear-of-press-conferences-of-petitions-of-signatures-of-campaigns-lobbying-but-no-words-will-come/#content-wrapper

Chen, L. B. (2001, April, 25). Angkara Kerajaan Purplaya, maruah tercabar? Retrieved from https://www.malaysiakini.com/columns/6829

Choi, R. (2015, July, 05). The Romantic Patient – Cecil Rajendra. Retrieved from https://hakam.org.my/wp/2015/07/05/the-romantic-patient-cecil-rajendra/

Ganesan, G. & Sabapathy, E. 2013. A Postcolonial Reading of Cecil Rajendra’s Selected Poems. Canadian Center of Science and Education 9(15): 60–71. https://pdfs.semanticscholar.org/8c9d/64f2a9fdb53b4e24dccdc9adba08de5cd115.pdf?_ga=2.108198983.477747584.1628084997-1588474260.1628084997

Loone, S. (2015, December, 14). Can politicians stomach the truth spoken by poets? Retrieved from https://www.malaysiakini.com/news/323301

Nademhopi, D. (2010, January, 11). Musings On Poets And Poetry. Retrieved from http://www.ipohecho.com.my/v2/2010/01/11/musings-on-poets-and-poetry/

Navaratnam, M. (2019, March, 18). Citation for Cecil Rajendra. Retrieved from https://www.malaysianbar.org.my/article/news/bar-news/news/citation-for-cecil-rajendra-recipient-of-the-malaysian-bar-lifetime-achievement-award-2019

Shangeetha, R.K. 2020. Voices of Malaysian Indian writers writing in English. Kajian Malaysia 38(2): 25–59. https://doi.org/10.21315/km2020.38.2.2

Sivanesan, S. (2001, May, 3). The colour purple. Retrieved from https://www.malaysiakini.com/letters/8228

Suhada Fadzil. & Zainor Izat Zainal. 2018. AT ODDS WITH EACH OTHER: DEVELOPMENT AND ENVIRONMENTAL SUSTAINABILITY IN CECIL RAJENDRA’S SELECTED POEMS. Journal of Language and Communication 5(2): 283–296.

Sukumaran, T. (2019, March, 16). Award for lawyer Cecil Rajendra, who spearheaded Malaysia’s first free legal aid clinic. Retrieved from https://www.scmp.com/week-asia/people/article/3002013/award-lawyer-cecil-rajendra-who-spearheaded-malaysias-first-free

The FMT. (2018, November, 22). Why snub writer-poet Cecil Rajendra at literary fest, ask supporters. Retrieved from https://www.freemalaysiatoday.com/category/nation/2018/11/22/why-snub-writer-poet-cecil-rajendra-at-literary-fest-ask-supporters/

Whitaker, R. (1993, August, 06). Malaysia denies passport to ‘anti-logging’ poet: Cecil Rajendra puts verse to work in his radical criticism of environmental destruction, writes Raymond Whitaker. Retrieved from https://www.independent.co.uk/news/world/malaysia-denies-passport-to-antilogging-poet-cecil-rajendra-puts-verse-to-work-in-his-radical-criticism-of-environmental-destruction-writes-raymond-whitaker-1459646.html

1 comment for “சிசில் ராஜேந்திரா: உள்நாட்டில் புறக்கணிக்கப்பட்டு, உலக அளவில் கொண்டாடப்படும் கவிஞர்

  1. Punithawathy Arjunan
    September 1, 2021 at 10:05 pm

    இப்படி ஓர் ஆளுமையைப் பற்றிய கட்டுரைக்குப் படித்ததைக்குப்பெருமைபடுகிறேன்.
    நன்றி அபிராமி அவர்களே.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...