அணைத்தல்

கைப்பேசித் திரையில் முகத்தைப் பார்த்தபோது கண்ணிமைகள் தடித்துப் போயிருப்பது தெரிந்தது. இரண்டு மாதமாகவே சரியான தூக்கமில்லாமல் அலைகிறேன். சுகுமாறன் அங்கிள் மறுபடியும் வேலையில் சேர அழைத்ததற்கும் பார்க்கலாம் என்று சொல்லி விட்டேன். இன்று அம்மாவுக்கு எப்படியும் குணமாகிவிடும் என எனக்குள் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தேன்.

கண்களைக் கசக்கி விட்டு அமர்ந்தேன். காலையிலேயே தூக்கம் குறித்த பயம் எழுந்துவிடுகிறது. எதை எதையோ யோசித்துக் கொண்டு எல்லாவற்றையும் மறக்க முயல்கிறேன். நீண்ட பெருமூச்சில் எல்லாம் கலைந்து போய் தன்னுணர்வை மீட்டுக் கொண்டு வருகிறது. முன்புறம் காற்சட்டையில் வயிற்றுப்பகுதியோடு செருகியிருந்த தடித்தக் கடித உறையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். சுகுமாறன் அங்கிள் சொன்ன அடுக்குமாடியின் கீழ்தளத்துப் படியில்தான் காலையிலிருந்தே உட்கார்ந்திருக்கிறேன். துருபிடித்து உடைந்து போயிருந்த இரும்பு கைப்பிடிகளில் கயிற்றை வைத்துப் பிணைத்திருந்தார்கள். அண்ணனை எப்படியும் பார்த்துவிட வேண்டும்.

விளக்கின்றி இருண்டிருந்த படிக்கட்டில் மக்கிப்போனப் பொருளின் வாடை வீசிக் கொண்டிருந்தது. அவ்வப்போது திறந்த கைப்பேசியின் திரையிலிருந்த வெளிச்சம், இருளுக்குள் மெல்லியதாக ஊடுருவி அச்சத்தைக் குறைத்தது. வாட்சாப்பில் முன்னெப்போதோ வந்திருக்கும் செய்திகளை நகர்த்திக் கொண்டே இரு மாதங்கள் பின் சென்றேன். மனம் எதை தேடுகிறது எனத் தெரியும்; விரல்களுக்கும் தெரியும். குமார் அண்ணனிடம் இருந்து கடைசியாக வந்திருந்த குரல் பதிவை இயக்கினேன். இரண்டு மாதமாகவே பல முறை அதை ஓடவிட்டுப் பாதி வரை கேட்டு விட்டு மூடிவிடுகிறேன். இன்றும் முழுமையாகக் கேட்கும் திட்டமில்லை.

சின்னம்மா கிழவியின் மகள் வழி பேரன்தான் குமார் அண்ணன். நாங்கள் வசித்த சீனக்கம்பத்தில்தான் சின்னம்மா கிழவி இருந்தாள். மகள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பின் குமார் அண்ணனைச் சின்னம்மா கிழவிதான் வளர்த்து ஆளாக்கினாள். பக்கத்திலிருந்த சீன உணவுக்கடையில் மங்கு கழுவும் வேலை செய்து வந்தாள்.

மேடேறியிருக்கும் முன் தலை முடியை இறுக்கமாக இழுத்து கித்தாவால் கொண்டைப் போட்டிருப்பாள். சின்னம்மா கிழவி வாய் திறந்தாலே சாபமும் வசையுமாகவே இருக்கும். ‘அது வாயில வுழுவாதிங்கடா… சண்ட போட்ட மூணு மாசத்துலே தங்கம்மாவுக்கு கரு நிக்காமப் போச்சு’ என அம்மா எப்பொழுதும் நினைவுபடுத்துவார்.

சின்னம்மா கிழவி என்னிடம் எப்பொழுதுமே கிண்டலுடன் பேசுவாள். அப்பாவின் கைலியைக் கட்டிக் கொண்டு அவள் வீட்டு வழியே நடந்து செல்லும் போதெல்லாம் “அறுத்துப் போட்டியா” எனக் கேட்பாள்.  பாட்டி வீட்டில் கையில் ஆட்டுக்குட்டியுடன் ஏசு இருக்கும் பழைய காலண்டர் படம்தான் அவள் கிருஸ்து என்பதற்கான கடைசி சாட்சியாக இருந்தது. அதற்குப் பக்கத்திலே மதுரை வீரன், சிவன், விநாயகர் என வரிசையாகச் சாமிப்படங்கள் இருக்கும். அந்தப் படங்களை எல்லாம் குமார் அண்ணன்தான் எடுத்து வந்து வைத்திருந்தார். மாதமொரு வெள்ளிக்கிழமையில் சாமியாடும்போது சாமி கும்பிடுவதோடு சரி. மற்ற நாட்களில் சாமிமேடையில் இருக்கும் விளக்கில் பாட்டித்தான் விளக்கேற்றுவாள். கடையில் மங்குகளைக் கழுவுவதைப் போல விளக்கேற்றுவதையும் வேலையாகவே செய்தாள்.

இரவு பத்து மணியானாலே குடித்து விட்டுத் தள்ளாடி வரும் குமார் அண்ணனை வாய்க்கு வந்தபடி ஏசுவாள். “நானும் வண்ட வண்டையாத்தான் கேக்குறன்… கால சுத்தி கழுத்துல ஒக்காருது நாயி,” எனக் கத்துவாள்.  சின்னம்மா கிழவியும் குமார் அண்ணனும் பேசத் தொடங்கிய ஓரிரு நிமிடத்திலே சண்டை தொடங்கிவிடும். இருவருக்கும் பெரும்பாலும் எந்தப் பேச்சும் இருக்காது. பேரனைத் தேடி யார் வந்தாலும் “பொறுக்கி தின்ன போயிருக்கான்” எனக் கத்துவாள்.

அப்படி ஒரு நாள் வாக்குவாதத்தில் ஈடுபட, குமார் அண்ணன் வீசிய ரம்பம் சரியாகச் சின்னம்மா கிழவியின் நெஞ்சு  மேல் விழுந்துவிட்டது. சின்னம்மா கிழவியின் சுருங்கி போயிருந்த நெஞ்சுப்பகுதியில் தோல் கிழிந்து சட்டையெல்லாம் ரத்தத்தால் நனைந்து போய்விட்டது.

“டேய்… நீ மண்ணா போயிருவடா… நெஞ்செறிஞ்சு சொல்றன்டா,” எனக் கைகளில் ரத்தம் வழியச் சொன்னாள். பக்கத்து வீட்டு அப்போய் அண்ணன்தான் பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தார். அப்போய் அண்ணன் போலிஸில் புகார் கொடுத்ததால் குமார் அண்ணனைக் கைது செய்தார்கள். மறுநாள் காலையிலே, இனிமேல் அப்படியெல்லாம் செய்ய மாட்டான் என்று உத்திரவாதம் கொடுத்துச் சின்னம்மா கிழவி, குமார் அண்ணனை விடுதலை செய்து வந்தாள். “நீ அவன் கையாலேதான் மொத்துப் பட்டு சாவப்போற” என அப்போய் அண்ணன் கிழவியிடம் சொன்னார்.

அண்ணன் மீது எல்லாருக்கும் ஒரு பயம் இருந்தது. அவர் யாருக்கும் அடங்கிப்போவதில்லை. ஆனால் அவரை தெருவில் இழுத்து வைத்து சுகுமாறன் அங்கிள் அடித்தபோதுதான் எல்லாருக்கும் அவர் மீது இளக்காரமானது.

தன் வீட்டில் சுருட்டப்பட்டிருந்த பாய்க்குள், குமார் அண்ணன் ஒளிந்திருந்தார் என சுகுமாறன் அங்கிள் அடித்து உதைத்தபோது தெருவே நின்று வேடிக்கை பார்த்தது. அண்ணன் அடியைத் தடுக்கவில்லை. திரும்ப சண்டையிடவும் இல்லை. எல்லாவற்றையும் பொறுமையாக வாங்கிக்கொண்டார். அன்றுதான், அது வரையில் ஜன்னலில் மட்டுமே முகம் காட்டி வந்த சுகுமாறனின் மனைவி கன்னியம்மாவை முதன்முறையாக வெளியில் பார்த்தேன்.

“அக்கா வெளிய வந்தாள்னா, சொல்லுடா” என்று கடையில் பார்க்கும் போதெல்லாம் சுகுமாறன் அண்ணன் சொல்வார். நான் அப்படி அவரை எங்கும் பார்த்ததில்லை என்பதால் எதுவும் சொன்னதில்லை. மேலும் அக்கா ஏன் வெளியில் வரக்கூடாது என்ற குழப்பமும் இருந்தது. ஆனால் சுகுமாறன் அங்களிடம் கேட்க தைரியம் இல்லை. அப்பாவுடன் இயல்பாக “வாடா, போடா” எனப் பேசும் சுகுமாறன் அங்கிளுக்குத் திருமணமாகி அப்போதுதான் ஐந்து மாதம் ஆகியிருந்தது. கன்னியம்மா அக்காவின் முகமெல்லாம் வீங்கி போயிருந்தது. அதற்குப் பிறகுதான் கம்பத்து வீட்டை விட்டுச் சின்னம்மா கிழவி காலி செய்தாள். நாங்களும் அதற்கடுத்த ஆண்டே பக்கத்து தாமானிலே இருந்த வீடொன்றுக்கு மாறி போன பின் சின்னம்மா கிழவியைப் பற்றிய செய்திகள் எதுவும் தெரியாமலே இருந்தது. 

எஸ் பி எம் தேர்வு முடிந்தப் பின், சுகுமாறன் அங்கிள் லாரியில் உதவியாளராகச் சேர்ந்தேன். லாரிகளை வழக்கமாக நிறுத்தும் இடத்தில்தான் குமார் அண்ணனை மறுபடியும் பார்த்தேன். சுகுமாறன் அங்கிள் கூட மிக இயல்பாக குமார் அண்ணனிடம் பேசியது வியப்பாக இருந்தது. முதலில் பார்த்தவுடனே, “மீசையெல்லாம் மொளச்ச பெரிய ஆம்பளாயிட்ட,” எனத் தோள் மேல் கைபோட்டு இயல்பாகப் பேசினார்.

காலையில் ஆறு மணிக்குக் கிடங்குக்குச் சென்று குடிநீர் புட்டிகளை லாரியில் ஏற்ற வேண்டும். அதன் பிறகு பகல் முழுவதும் நகரத்தின் கடைகளில் பெட்டிகளை இறக்கிவைத்து விட்டு இரவில்தான் வேலை முடியும். ஒவ்வொரு நாளும் கைப்பேசியில் எதாவது சிக்கலுடன் வந்து எனக்காகக் குமார் அண்ணன் காத்திருக்கத் தொடங்கினார்.  அவர் கையில் இருந்த  நவீன கைப்பேசியின் நுட்பங்கள் அவரை குழப்பிவிட்டன. என்னிடம் கேட்டுக் கேட்டுப் பயன்படுத்தினார். கூடுதலாக அவரின் இந்தோனேசிய தோழிகளின் பேச்சுகளை விளங்கிக் கொள்ளவும் என் உதவி அவருக்குத் தேவைப் பட்டது. 

“தம்பி…இந்த  ஃப்ரோஃவைல் படத்த எப்படிடா மாத்துறது… ? என்றோ

“இவ என்னா சொல்றா….? ஒனக்கு வெளங்குதா…? என்றோ

“இந்த அக்காவுண்ட் நம்பர்ல நூறு வெள்ளி போட்டு விடேன்” என்றோ

ஏதாவது ஒரு வேலையோடு எனக்குக் காத்திருந்தார். இடையிடையே அவருக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. அதில் ஓர் அழகிய இந்தோனேசிய பெண்மணியின் பலவகையான படங்களையும் குரல் பதிவுகளையும் நான் பார்த்துள்ளேன். அதை என்னை அதிகம் திறக்கவிட மாட்டார்.

“எவன் வீட்டுப் பொம்பளயோ கூட்டிக்கிட்டு வந்து குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான்… இவன விட பத்து வயசு கூடயாம் அந்தப் புள்ளைக்கு… கெழவி கூட மங்கு கழுவுற வேல செஞ்சவளாம்…கெழவி வீட்ட விட்டுத் தொரத்திட்டா… இப்பா என்னான்னா ரெண்டே மாசத்துல வீட்டுக்குள்ள சேத்துக்கிட்டு ஒக்காந்திருக்கா” என சுகுமாறன் அங்கிள் சொன்னார். அவருக்கு குமார் அண்ணனின் மேல் இன்னும் கோவம் இருப்பது அவ்வப்போது இப்படி வெளிபடும். அவர் இல்லாதபோது நல்லதாக எதுவும் சொன்னதில்லை.

எனக்கு அண்ணனின் மேல் பிரமிப்பு இருந்தது. கம்பத்தில் இருந்ததைவிட இப்போது கொஞ்சம் வசதி அவர் கையிலும் கழுத்திலும் தெரிந்தது. சட்டைக்கு வெளியே தொந்தி பிதுங்கிக் கொண்டிருந்தது.

அதோடு குமார் அண்ணன்தான் அப்பா கேட்டிருந்த பத்தாயிரம் வெள்ளி கடனை மூன்றே நாளில் தயார் செய்து கொடுத்தார்.

ரவாங்கிலிருந்த அப்பாவின் நண்பர் ‘எவ்வளவு போடுறோமோ… அதவிட டபுள் காசுடா’ எனச் சொல்லி முதலீட்டுத் திட்டமொன்றில் பணம் செலுத்தச் சொல்லியிருந்தார். வாட்சாப் குழுவொன்றில் ஆயிரம் வெள்ளி போட்ட மறுவாரமே இரண்டாயிரம் வெள்ளி அப்பாவுக்குக் கிடைத்திருந்தது. அப்பாவின் ஆசை வார்த்தையால்தான் குமார் அண்ணனிடம் கேட்டேன். “ரெண்டு வாரத்துக்குள்ளே முழுசா கொடுத்துருவேன்… உங்களுக்கு வேணா ஐந்நூறு வெள்ளி சேத்து தறேன்” என்றதும் குமார் அண்ணன் “எங்கையில அவ்ளோ தொக இருக்காதுடா. ஒரு இன்டோன் இருக்கான் கேட்டுப் பாக்கிறேன்’’என்றார். 

மூன்று நாள் சென்று பழுப்பு நிற கடித உறையில் கட்டாகப் பணத்தைக் கொடுத்தார்.

“டேய்… என் கூட கெலாங்குல வேல பாக்குற இந்தோனேசியாக்காரன் உஜாங்கோட காசுடா…ரெண்டு வாரத்துல கொடுத்துருடா…மந்திரம்தெரிஞ்சவன்… கொடுக்கலன்னா நேரா சூனியம் வச்சுருவான்” என்று எச்சரித்த பிறகுதான் பணத்தைக் கொடுத்தார்.

பணம் செலுத்திய இரண்டாவது நாளே அந்தப் புலனக்குழு கலைக்கப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் அப்பா இன்னும் பலரிடம் கடன் வாங்கி இருபதாயிரமாகப் போட்டிருந்தது தெரிந்தது. இரண்டு வாரம் தாண்டியதும், குமார் அண்ணனின் குரல் தொனியே மாறிக் கொண்டிருந்தது. “டேய், அடுத்து வீட்டுக்கு வந்து நாறக்கேள்வி கேட்டுப்புடுவேன்… உனக்கு தெரியும்… அவன்கிட்ட சொன்னா போதும்… குடும்பத்தோட முடிச்சிருவான்… பாத்துக்கோ” என்றார். அவரைத் தவிர்ப்பதற்காக வழக்கமாக லாரி நிற்கும் இடத்திற்கு முன்னரே இறங்கி வீட்டுக்கு நடந்து செல்லத் தொடங்கினேன். வீட்டுக்கே வந்து குமார் அண்ணன் கத்தத்தொடங்கினார். “டேய், அப்பன் மவன் ரெண்டு பேருக்கும் ஒரு கட்டுத்தான… கதயே முடிச்சிருவான், நான் பாக்காத ஆள் இல்ல” என அப்பாவிடமே கத்தினார்.

இரண்டு முறையும் நூறு, இருநூறு என்று சொற்பத்தொகையைக் கொடுத்து அப்பா அனுப்பினார். குமார் அண்ணன் மந்திரம் என்று சொன்னது அம்மாவைப் பாடாய் படுத்திவிட்டது. குமார் அண்ணனைக்கூட பணம் கொடுத்துக் கொஞ்ச நாட்களுக்குச் சமாதானம் செய்யலாம். ஆனால், இந்தோனேசியக்காரனை நேரடியாகப் பார்த்துச் சொன்னால்தான் மந்திரத்திலிருந்து தப்ப முடியும் என உறுதியாகத் தெரிந்தது. உஜாங்கை நேரில் பார்த்துச் சொல்லிவிடலாம் என குமார் அண்ணனுக்குத் தெரியாமல் தொழிற்சாலைக்குச் சென்றேன்.

அது மீன்களின் சதைகளை அரைத்து உருண்டைகளாகத் தயாரிக்கும் தொழிற்சாலை. மீன்களின் அழுகிப் போன வாடை வீசிக் கொண்டிருந்தது. அங்குப் பெரும்பாலும் பெண்கள்தான் வேலை செய்தார்கள். உஜாங் என்று யாராவது இங்கு வேலை செய்கிறார்களா என இந்தோனேசியப் பெண்ணொருத்தியிடம் கேட்டேன். இந்தோனேசிய நாடகங்களில் வரும் பரிதாபத்துக்குரிய ஏழை கதாநாயகியைப் போல அழகாக இருந்தாள். அவளைக் குமார் அண்ணனின் வாட்சாப்பில் முன்னரே பார்த்திருந்தேன். எனவே இயல்பாக அவளிடம் பேச மனம் எழுந்தது. 

அப்படி அங்கு யாருமில்லை என அவள் சொன்னாள். என்னைப் பார்த்தவுடன் குமாரை உனக்குத் தெரியுமா எனக் கேட்டாள். அவளைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி சேமிப்பிலிருந்த பணத்தைக் கேட்டிருக்கிறார். அதன் பிறகு, அவரைப் பார்க்க முடியவில்லை, எங்கிருந்தாலும் வந்து பார்க்க சொல் என்று அழுது கொண்டே சொன்னாள்.

மறுநாள் காலையில், வேலையிலிருந்த போது குமார் அண்ணனின் குரல் பதிவு வந்திருந்தது. அதனை இரவில் கேட்கலாம் என்றிருந்தேன். எப்பொழுதும் இறங்கும் இடத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது குரல் பதிவைக் கேட்டேன். குமார் அண்ணன் கடுமையான குரலில் பழைய கதையைச் சொல்லத் தொடங்கினார் “டேய்… வெளயாட்டா உனக்கு… நீ கொடுக்கலன்னு வையி… இந்தோனேசியக்காரன வச்சி… உன்ன முண்டக்கட்டையா நடுரோட்டுல நடக்கவச்சு கொளம் குட்டையில தள்ளுற மாரி செய்யுறன்னா  இல்லயாண்ணு பாருடா… தெரிஞ்சவனேன்னு காசு வாங்கி கொடுத்தா… இன்னொன்னு சொல்லுறேன் கேட்டுக்கோ….” எனத் தொடங்கியபோது அடைத்தேன். அந்த இன்னொன்று என்னவென்று அறிய ஆவலோ தைரியமோ வரவில்லை என்பதை விட அவர் மிரட்டல்களை அலட்சியம் செய்யத் தொடங்கியிருந்தேன்.

அதன் பிறகும் சில நாட்கள் அண்ணன் குரல் பதிவுகளை அனுப்பிக் கொண்டிருந்தார். தொடங்கியதுமே கெட்ட வார்த்தைகள் தெரித்து விழும். நான் அதன் பின் அண்ணனின் எண்ணை முடக்கிவைத்து விட்டேன்.

சுகுமாறன் சின்னம்மா பாட்டியைப் அடுக்குமாடி வீடொன்றின் கீழ் பார்த்தாகச் சொன்னார். சின்னம்மா பாட்டி மீண்டும் குமார் அண்ணனை வீட்டில் அனுமதித்திருப்பாள் என ஊகித்தேன். அப்பா நேற்று காலையிலே பழுப்பு நிறக் கடித உறையில் பணத்தை வைத்துக் கொடுத்தார். குமார் அண்ணனின் முன் பணத்தை வீசியெறிந்துவிட்டு வருவதைப் பற்றிய கனவுகளை வழிநெடுகிலும் யோசித்துக் கொண்டு வந்தேன். அடுக்குமாடியை நெருங்கியதும் கடித உறையைத் திறந்து பார்த்தேன். பச்சை நிறத்தில் சீராக அடுக்கப்பட்டிருந்த ஐம்பது வெள்ளி நோட்டுகளைப் பார்த்ததும் மெல்லிய சிலிர்ப்பொன்று எழுந்தது. பணத்தை எடுத்து வயிற்றில் செருகிக் கொண்டு படியிலே அமர்ந்துவிட்டேன். அப்படியே பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிடலாம் என்று நினைக்கும் போதெல்லாம் அப்பாவின் இறுகிப்போன முகம் நினைவில் வந்தது. இன்று எப்படியாவது பார்த்துக் கையிலிருக்கும் பணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். இந்த பணம் மீண்டும் வீட்டுக்குள் போவதை அப்பாவும் அம்மாவும் விரும்ப மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். 

குமார் அண்ணனின் அழைப்புகளை எடுக்காமல்போன பிறகு மறுமுறை வீட்டுக்கு வந்து மிரட்டப்போக போலிஸில் புகார் செய்தேன். அவர் மீது ஏற்கனவே போலிஸ் கேஸ் இருந்ததால் மூன்று நாட்கள் உள்ளே வைத்துவிட்டு அனுப்பினார்கள். முற்றிலும் அவருடன் தொடர்பு இல்லாமல் இருந்த சமயத்தில்தான் ஒவ்வொரு சிக்கலாக நடக்கத் தொடங்கியது.

அப்பாவுக்குக் கார் விபத்தில் சிக்கி நெஞ்சுபகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. காரின் முன்பகுதி கண்ணாடித் துண்டுகள் நெஞ்சுப்பகுதியில் ஆழமாகக் குத்தியிருந்தன. ஐந்து நாட்களாகச் சுயநினைவின்றி இருந்தார். கண் விழித்தவுடன் “பின்னால வந்த வேனு இடிக்கப்போதுன்னு நல்லாவே தெரிஞ்சுச்சு… ஒன்னும் செய்ய முடியல… வேன்ல இருந்து எறங்கி பாக்குறானுங்க… இந்தோனேசியா பாசை பேசுறானுங்க… சட்டையெல்லாம் ரத்தமா இருந்துச்சு… சட்டைய கழட்டுறவன பாக்குறதுக்குள்ள… ஒன்னும் தெரியாம போச்சு” என்றார்.

மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து ஒரே மாதத்தில் அம்மாவின் முகத்தில் சுருக்கங்கள் விழுந்து வயது கூடிப்போனவராக மாறியிருந்தார். அதற்கிடையில், அம்மா இரு முறை தன் நகையை விற்றாவது குமார் அண்ணனுக்குப் பணத்தைக் கொடுத்துவிடச் சொன்னார். இந்தோனேசியா பெண்ணைப் பார்த்ததிலிருந்து குமார் அண்ணனின் மேல் ஏற்பட்டிருந்த கோபத்தால் அம்மா சொல்வதைப் பொருட்படுத்தாமல் இருந்தேன். அது கோபமா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு போமோ இல்லாதது கொஞ்சம் நெஞ்சுரத்தைக் கொடுத்தது. அப்பா வீட்டுக்குத் திரும்பியதிலிருந்து பேசுவதை ஏறக்குறைய முழுவதுமாகவே நிறுத்தியிருந்தார். எப்பொழுதும் எதையோ யோசித்த வாறே சுவரைப் பார்த்து அமர்ந்திருந்தார். அவர் வாயில் ஓயாமல் எதையோ உச்சரித்துக் கொண்டிருந்தார். இரவில் அறையில் படுக்காமல் அமர்ந்தவாறே நாற்காலியில் தூங்கினார். ஒரிரு முறை அலறலுடன் அப்பா எழுந்தமர்ந்ததை அம்மாவுடன் நானும் பார்த்திருந்தேன்.

இதெல்லாம் சரியாகிவிடும் என நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் அம்மாவுக்கு காலில் வெண் புள்ளிகள் வரத்தொடங்கின. புள்ளிகள் வந்த இடமெல்லாம் அம்மாவுக்கு சுரணை இல்லாமல் போனது. ஒன்றிரண்டு கிளினிக்கில் மருந்தெடுத்து பார்த்தும் பலனில்லை. மூலிகை மருந்துகள் எடுபடவில்லை. ஒவ்வொரு நாளும் வெண் புள்ளிகள் அதிகரித்தன. அவை மேலே ஏறிச்செல்லும் இடமெல்லாம் அம்மா சுரணையில்லை என்றார். நான் ஊசியால் குத்தி காட்டியபோது வலியில்லை என்றார்.

எனக்கும் தூக்கத்தில் விநோதமான கனவுகள் வரத்தொடங்கின. அந்தக் கனவுகளில் அப்பாவும் நானும் மரத்தில் நிர்வாணமாகக் கட்டப்பட்டிருந்தோம். ஒவ்வொரு கனவிலும் குமார் அண்ணனின் குரல் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. அவரின் அருகில், இந்தோனேசியப் பெண்ணும் சிரித்துக் கொண்டே நின்றிருந்தாள். தொடர்ந்து நான்கைந்து நாட்களாகத் தூக்கமில்லாமல் லாரியில் தூங்கிவிழுந்த போது சுகுமாறன் அங்கிள் கூட ஏசினார். இருநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு படுக்கையில் கண்களை மூடிப்படுத்திருந்தபோதும் தூக்கம் வரவில்லை. ஒரு மாதத்திலே வேலையையும் விட்டு முழுமையாக அறையிலே இருக்க தொடங்கிவிட்டேன். கண்களை மூடினாலே கனவுகள் வரத்தொடங்கின. அறையிலிருந்து வெளிவந்து, அப்பாவைப் பார்ப்பதை எண்ணினாலே அச்சமூட்டுவதாக இருந்தது. குமார் அண்ணன் நிச்சயமாக இந்தோனேசியா போமோவைப் பார்த்து மந்திரம் செய்திருப்பார் என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

அம்மாவின் நகையை விற்ற போது எட்டாயிரம் வெள்ளி கிடைத்தது. இதை முதலில் குமார் அண்ணனிடம் கொடுத்து, அப்பாவைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்துவிட முடியும் என நம்பினேன். வலக்காலைக் கருப்பு நிறப் பூனையொன்று உரசிவிட்டு ஓடியது. அதன் பின்னாலே படியிலிருந்து எழுந்து நடந்து முதல் மாடிக்குச் சென்றேன். முதல் மாடியில் நைட்டி அணிந்திருந்த நடுத்தர வயது பெண்ணொருத்தியிடம் “குமார் வீடு தெரியுமா?” என்று கேட்டேன். குமார் அண்ணன் பெயரை உச்சரிக்க முடிந்ததே வியப்பாக இருந்தது.

அவள் “எந்த குமாரு?” எனக் கேட்டாள். பட்டென்று கைப்பேசியை எடுத்து, குமார் அண்ணனின் முகத்தைப் பெரிதுபடுத்திக் காட்டினேன். “அவந்தான் செத்துட்டானே… அந்தக் கெழவிதான் இருக்குது… அது கூட மனநெல சரியில்லாம பேயி மாரி உலாத்திக்கிட்டு அலையுது…செவன் இலெவன் முன்னால் இருந்தாலும் இருக்கும்…போயி பாருங்க” என்றார்.

படியிலிருந்து இறங்கும் போது அதுவரை உடலில் இருந்த பாரம் தனியாகப் பிரிந்து போவதைப் போன்று இருந்தது. குமார் அண்ணன் செத்துவிட்டார் என்பது எனக்கு அச்சத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே கொடுத்தது. படியின் கம்பி கைப்பிடியருகே கருப்புப் பூனை கால்களை நீட்டிப் படுத்திருந்தது. கடித உறையைத் தொட்டுப்பார்த்தேன். அடிவயிறு வலித்தது. கிழவியிடம் அதை கொடுப்பதுதான் நியாயம் எனத் தோன்றியது. அடுக்குமாடிக்குப் பின்னால் இருந்த செவன் இலெவன் கடைக்குச் சென்றேன்.

விரித்துப் போட்டிருந்த அட்டைப் பெட்டியில் சுருண்டு படுத்திருந்தது சின்னம்மா கிழவி எனப் பார்த்தவுடன் தெரிந்துவிட்டது. மூச்சு விடும் மெல்லிய உடலசைவு மட்டுமே அவள் உயிருடன் இருக்கிறாள் என்பதற்கான எஞ்சிய அடையாளமாக இருந்தது. அவளை எழுப்புவதும் பேசுவதும் முடியாததாகவே இருந்தது. முன்பக்கம் வெயிலடிப்பதால், தலையைப் பின் சாய்த்துப் படுத்திருந்தாள். அந்நிலையில் அவளிடம் அவ்வளவு பணத்தை எப்படிக் கொடுப்பது என யோசித்தேன். செவன் இலெவனில் இரு சோள ரொட்டிகளை வாங்கி வைத்துவிட்டு ஓரமாக நின்று கவனித்தேன்.

அவளது உடலில் மெல்லிய நடுக்கம் போன்ற அசைவு எழுந்தது. எண்ணெய் காணாமல் முறுக்கியப் பஞ்சுத்திரிகள் போன்று பரவியிருந்த முடிகளைச் சிலுப்பிக் கொண்டு வற்றிப் போன உடலை ஆனமட்டும் முன்னே உந்தி கொண்டு சாமியாடுபவளைப் போல வெறிக்கூச்சலிட்டாள். சட்டை பொத்தான்கள் கழன்று  நழுவியதைக் கூட பொருட்படுத்தாமல் உள்ளொடுங்கி போயிருந்த மார்புக்கூட்டின் துருத்தலுடன்  நின்று கொண்டிருந்தாள். வானத்தைப் பார்த்துக் கொண்டே “பிச்ச போடுங்கடான்னு கேட்டேனா… வந்துட்டானுங்க… சாப்பாடு அது இதுன்னு அவனுங்க மனசுல இருக்குற குப்பய வந்து கொட்டுறானுங்க…” அவளின் வார்த்தைகளைக் கேட்டு உள்ளூர நடுக்கமொன்று எடுக்கத் தொடங்கியிருந்தது. அருகிலிருந்த சோள ரொட்டிகள் இரண்டையும் சாலையில் தூக்கி எறிந்தாள். அவளின் கூப்பாடு கொஞ்சமும் ஓயாமல் இருந்தது. அவளின் முன்னால் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டு பேசத்தொடங்கலாம் என்று நினைத்து முன் சென்று அவளை அழைத்தேன். அவளருகே சென்று மீண்டும் மீண்டும் அவளை அழைத்துக் கொண்டிருந்தேன்.

அவள் உடலில் சீறலாக எழுந்த மூச்சுக்காற்றின் வெப்பம் உடலைச் சுட்டது. சின்னம்மா கிழவி நழுவிய சட்டையை மேலேற்றிக் கொண்டு அடித்தொண்டையில் கண்ணீர் பீறிட என்னை அணைத்துக் கொண்டாள். அவள் உடலின் வெப்பம் கொஞ்ச நேரத்தில் மெல்ல அடங்கி கொண்டிருந்தது. உடலிலிருந்த சன்னதம் முழுமையாக அடங்கியதைப் போல கைகளை விடுவித்துக் கொண்டு அட்டைப் பெட்டி விரிப்பில் உடல் குறுக்கிப் படுத்தாள். பணத்தை இப்போது கொடுக்கலாமா எனக் கைகளை விட்டேன்.

சாலையில் விழுந்த சோளரொட்டியின் மீது கார்களின் டயர்களேறி உள்ளிருந்த கீரிம் சாலையில் அப்பிக்கிடந்தது. கொஞ்ச நேரத்தில் ரொட்டியின் தடம் கொஞ்சம் கூட இல்லாமல் தார் சாலை தன் அசல் நிறத்துக்கு மாறியிருந்தது. மறுபடியும்  கடித உறையைக் காற்சட்டைப் பையில் திணித்துக் கொண்டு வீட்டுக்கு நடக்கத் தொடங்கினேன்.


குவாந்தான், பகாங் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கோலாலம்பூரின் தொடக்கப்பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். நவீனத் தமிழிலக்கிய ஆர்வமும் பரீட்சயமும் உள்ளவர். சிறுகதைகள் எழுத ஆர்வம் கொண்ட இவர், வல்லினம் சிறுகதை போட்டி, பேரவைக் கதைகள் போன்ற போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றிருக்கிறார். வல்லினம் இதழில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வருகிறார்.

முகநூல்: https://www.facebook.com/aravin.kumar.58

2 comments for “அணைத்தல்

  1. ஸ்ரீவிஜி
    September 6, 2021 at 8:58 am

    வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களில் அர்வினிடம் சிறந்த தமிழும் அதை கலையாக்கும் யுக்தியும் சிறப்பாக கைகூடுகிறது. மலேசிய மண்ணில் இலக்கியத்தில் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார். இக்கதையில் பணம் வாங்கியவரையும் உள்ளுணர்வு கொள்கிறது. பணம் பறித்துக்கொடுத்தவரையும் இயற்கைச் சாகடிக்கிறது. விரைவாக பணகாரர்கள் ஆகும் திட்டம் கொஞ்ச காலமாக மலேசியர்களை அலைகழித்து வருவது கண்கூடு. அதை கதையில் அழகாகச் சொல்லியிருக்கிறார். கர்மா பேசும் கதை. பாத்திரங்களின் படைப்பு ஒவ்வொரு நகர்விலும் உயிரோட்டமாக அமைகிறது.
    வாழ்த்துகள் அர்வின். தொடரட்டும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...