ஒப்புரவு

பாலம் ஏறிய சிறிது  தூரத்தில், இடது கை கட்டை விரலைக் கவிழ்த்து சைகை காட்டியபடி இருவர் நின்றிருந்தார்கள். தலைகவிழ்ந்த சாலை வெள்ளை விளக்கின் வெளிச்சத்தில் ஒரு இளைஞனும், ஒரு நடுத்தர வயது பெண்ணும்  தனித் தனியாக உதவி கேட்டது தெரிந்தது.  அவன் கையைக் காட்டிய விதமா அல்லது அவன் உடலில் தெரிந்த நிலைகொள்ளாத தன்மையா எனப் புரியவில்லை, அனிச்சையாக வண்டியை  அந்தப் பெண்ணைத் தவிர்த்து, இளைஞன் அருகில் சென்று நிறுத்தினான் ரிஷி.

காரின் ஜன்னலைத் திறந்து அவனை அருகில் வருமாறு சைகையில்  அழைத்தான். ஐயன்-மேன் படம் போட்ட வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்திருந்தான்.  மார்புக்கு  குறுக்காக இருந்த தோள்பை கயிறை வீணைத் தந்தியை  வாசிப்பது போல தேய்த்தபடி பரபரப்பாக ஓடி வந்தான். 

சில மணிநேரம் முன்பு வாரிப் படிந்திருந்த தடயத்தைக் காட்டிய,  ஆங்காங்கு   சிதறிய  முள் தொகை போன்ற பழுப்பு நிற தலைமுடி, பரபரத்தபடி ஒளிவிடும் கண்கள்.  இணையான சிங்கப்பற்கள் தெரிய,  அடுத்த சொல்லுக்கு சிரிக்கத் தயாராக இருந்த அந்த இளைஞனை விலக்கத் தோன்றவில்லை.

“எங்க?” என்றான் ரிஷி.

“போற வழியிலே, ஏதாவது இனிப்பு கடையிலே ரெண்டு நிமிஷம், அப்புறமா செங்குந்தர் கோட்டம் கோயில்லே விட்டிருங்கண்ணா”

வேஷ்டி அணிந்திருந்தாலும், தன்னை அந்த இளைஞன் அண்ணா என்றது ஆறுதலாக இருந்தது.  அங்கிள் என சொல்லும்போது மனதில் சுருக்கென வலி தோன்றும். முகத்தைக் கண்ணாடியில் பார்த்தான் ரிஷி. அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை. தொழில் அலைக்கழித்ததில் முன்புறம் மட்டும் முடி கொஞ்சம் கொட்டியிருந்தது.

வழக்கமான  பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் தவிர  சினிமா தியேட்டர், விளையாட்டு மைதானம், விழா மண்டபங்கள், ஏன் ஒருமுறை வழியில்  கைபிசைந்தபடி ஆட்டோ கிடைக்காமல் பதட்டமாக நின்றவரை சாவு வீடு வரை இறக்கி விட்டிருக்கிறான், ஆனால் கோயிலுக்கு இதுதான் முதன் முறை. ரிஷிக்கும் கோயிலுக்குப் போனால்தான் என்ன என்று தோன்றியது.

“சரி உள்ளே ஏறுங்க!”

காரின் இடது முன்  கதவினைத் திறந்தபடி, ஒரு துள்ளலுடன் அவன் உள்ளே வந்து அமர்ந்தான்.

ரிஷி செல்லும் பயணப்பாதையில் பல பேருந்து நிறுத்தங்கள் வரும். பிதுங்கித்  திணறும் பேருந்துகள், அங்கு நூறடி தள்ளியபடி விருப்பமின்றி நிற்கும். கலைந்து  சேர்ந்தபடி, நிமிடந்தோறும் வடிவம் மாறியபடி பொறுமையின் விளிம்பில்  ஒரு கூட்டம் அங்கு காத்திருக்கும். அந்தத் திரளிலிருந்து விலகி நின்று,  கட்டைவிரலை கவிழ்த்து, மற்ற விரல்களை மடக்கி ஒரு சிலர்  பயணிக்க உதவிகேட்பார்கள். அதில் ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தன்னுடன் அழைத்துச் செல்வது அவனது வழக்கம்.

சோழிங்கநல்லூரிலிருந்து, பாடியநல்லூருக்கான அவன் செல்லும் பாதை மாநகரின் உச்சமான நெருக்கடி தரும் சந்திகள் வழியாகச் செல்வது. அதற்கு இடையேயான  தனியான கார் பயணத்தில்,  கூடுதலாக ஒரு பேச்சுத்துணை, அவனடையும்  ஒரு நாளின் அழுத்தங்களை ஓரளவுக்கு இலகுவாக்கும். ஆனால், அப்போதைய மனநிலையில் முதலில் யாரையும் ஏற்றிச்செல்லும் எண்ணம் இல்லை. கொஞ்சம் கூடுதல் தனிமை தேவைப்பட்டது.

அன்று அதிகாலை மூன்று மணிமுதல் விடியல் வரை, ஹோமப் புகையின் நடுவில் இருந்தான் ரிஷி. மகேஷ் அழைத்து வருவதாகச் சொல்லியிருந்த உதவியாள் வரவில்லை. கழுத்து மாலையுடன் முழங்காலுயரத்திற்கு அடுக்கப்பட்டிருந்த, தொன்னைகளை ஒவ்வொன்றாக பிரித்து அவனே அடுக்கினான். அய்யர் வழிகாட்டியபடி, தொன்னையில் மாற்றப்பட்ட அவிர்பாகங்களை ஒவ்வொன்றாக உச்சாடனம் செய்து வேள்வித் தீயில் கொட்டியதால்  இரு கைகளுடன் வாயும் சேர்ந்து வலித்து ஓய்ந்து போயிருந்தது. .ஒரு நாளைக்கென்று ரிஷிக்கு அருளப்பட்ட மொத்த ஆற்றலையும், இடைவிடாத வேலைப்பளு, உறிஞ்சி எடுத்த நாள் அது.

தீவினையை விலக்குவதற்கான அந்த ஹோம பூஜையில் நம்பிக்கை இல்லை என்றவனை வற்புத்தி எல்லா ஏற்பாடுகளையும் செய்தது மகேஷ்தான். கடைசி வரை அவன் ஏனோ வரவில்லை. தொலைபேசியிலும் எந்த தகவலும் இல்லை.  இடுப்பு வேஷ்டி அவிழுவதற்கான அறிகுறியுடன் உடலில் ஓட்டி இருப்பது போல, மகேஷின் போக்கு ரிஷியின் கவனத்தைக் கலைத்தபடி இருந்தது.

அவன் தன் அசல் யோசனையை முதலாகக் கொண்டு, ஐந்து வருடம் முன்பு ஒரு குறு மென்பொருள் வணிக நிறுவனத்தைத் துவக்கினான். ஒத்த நோக்கத்துடன் அவனுடன் இணைந்த மகேஷ், தந்த ஊக்கத்தினாலும், பண உதவியாலும், அவர்களுடைய அந்த கூட்டு நிறுவனம் தடையில்லாமல் வளர்ந்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை வளர்ச்சிப் பாதையில் இருந்த அந்த நிறுவனம், அடுத்த கட்டத்துக்கான மேலெழுதலின் விளிம்பில் இருந்தது. ஆனால் இன்று, உலகின் பார்வையிலிருந்து  மறைத்துக், காட்டுக்குள் விரும்பி கட்டிய கனவு வீட்டின் மீது திடீரென்று எரிகல் விழுந்ததுபோல, நிறுவனத்தை விற்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறான்.

எந்த நெருக்கடியிலும் ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தைக் காலம் தாழ்த்தி வழங்கக் கூடாது என்பது ரிஷியின் உறுதிமொழி. கடந்த காலாண்டில், மென்பொருளை வாங்க ஒத்துக்கொண்ட சில பெரிய வாடிக்கையாளர்கள் தெளிவான காரணமில்லாமல் கடைசி கட்டத்தில் பின்வாங்கினார்கள்.  ஊதியச் செலவுக்காக, மகேஷ் அறிமுகப்படுத்திய ஒரு பைனான்ஸியரை நம்பி பெரிய தொகையைக் கடனாக வாங்கி மாட்டிக்கொண்டான்.

அதுநாள் வரை நெருக்கடிகளில் துணையாக இருந்து வந்த மகேஷ், இப்போதெல்லாம் தன் மனதின் மென்மையான பாகங்களில் சொல் கயிற்றினால் இறுக்க  கட்டி இழுத்து, அவனை ஆட்டுவிக்கும் வித்தைக்காரன் போல மாறிவிட்டான். கனவு ததும்பியபடி,  பற்று வைத்து உழைத்த  அத்தனை  கணங்களும் கண் முன் சிதைந்து விழப்போகிறது. அவன் நிறுவனம் சொற்பத் தொகைக்காக விற்கப்படுவதைத் தவிர்க்க போராடுகிறான்.

அவனுடைய மொத்த ஆளுமைத்திறனையும், உச்சபட்ச படைப்பாற்றலையும் படையலாகக் கோரும் ஒரு முக்கியமான ‘மீட்டிங்’  நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதை நினைக்கும்போதெல்லாம் பதற்றம் கூடியது. கோயிலுக்குச் செல்லும் யோசனை வந்தது நல்லதாகிப்போனது.

அந்த மனநிலையை மாற்ற நினைத்தான்.

“என்ன ஏதும் சந்தோஷமான விஷயமா?” என ரிஷி கேட்டான்.

அவன் முகமெல்லாம் பல் தெரிய “இப்போதான் ஒரு மீட்டிங் முடிச்சிட்டு வாரேன்” என்றான்.

“மீட்டிங்கா?”

“மீட்டிங்கனா, என்ன சொல்றது..ம்ம். கிட்டத் தட்ட ஒரு இன்டர்வியூ மாதிரி”

“ஓ வேலை கிடைச்சிடுச்சா? வாழ்த்துக்கள்’”

“அப்படியில்ல”

ஒருவேளை அலுவலகத்தில் ஏற்கனவே வேலையிலிருக்கும், வலுவான நபரின் சிபாரிசு  இருந்திருக்கும்.  அதனால் நியமன முடிவு தெரிந்த கொண்டாட்டமாகக் கூட  இருக்கலாம் என ரிஷி நினைத்துக்கொண்டான். அவன் உற்சாகம் வேலை சார்ந்தது எனத் தெரிந்தபிறகு தொடர்ந்து பேச மனம் வரவில்லை. 

வானொலியை முடுக்கினான்.

“மூணு மாசம் விடாம துரத்தி, இன்னிக்குதான் தெரிஞ்சவர் வழியா ஒரு அரைமணி நேரம்  சந்திக்க முடிஞ்சிது” ,எனச்  சொல்லி ஒரு இடைவெளி விட்டு  ‘தொழிலதிபர் சூரஜை’ என அழுத்தி அந்த பேரைக் கூறினான்.

கேள்விக்குறிக்கான முகபாவத்துடன்  திரும்பிப் பார்த்தான் ரிஷி.  யாரைச் சொல்கிறேன் எனச்  சரியாக புரியவில்லை என அறிந்து கொண்ட அந்த இளைஞன்.

“சூரஜ் பத்மநாபன் , அவரோட ஒரு பிட்ச் மீட்டிங்”

கிணற்றாழத்துக்குள் குப்புற விழுந்த அவனின் முதுகு சதையில் பாதாளக் கரண்டியால் கொக்கி போட்டு வெளியே இழுத்தது போல இருந்தது. அவசரமாக வானொலியை அடைத்தான்.

முகமறியாத அந்நியர்கள் இருவரை இணைய வைத்து, ஒருவர் தன் பொருளைப் பேரம் பேசி விற்க, அடுத்தவர் வாங்குவதை எளிதாக்கும் பல அலைபேசி ஆப்கள், கடந்த சில வருடங்களாக மென்பொருள் வணிக சந்தையில் அடுத்தடுத்து வந்திருக்கின்றன. அந்த  சந்தையில் எழுபது சத வணிகத்தை கைப்பற்றியபடி பூதாகரமாக வளர்ந்திருக்கும்  நிறுவனம் சூரஜுடையது.

அதே அந்நியர்களிடையே, பொருட்களை விற்பதற்கு மாற்றாகத் தற்காலிக வாடகைக்கு விடுவதற்கான சேவையைத் தருவது ரிஷியின் நிறுவனம். குறுநிறுவனங்கள் என்னும் சிறு மலைகள் பலவற்றை விழுங்கிய சூரஜ், எதிர்காலத்தில் போட்டியாளராக வாய்ப்பிருக்கும்  ரிஷியின் நிறுவனத்தை இன்றே வாங்கி உள்ளிழுத்து, அழிக்க அத்தனை வழிகளிலும் வலை விரித்தாகிவி்ட்டது. 

நாளை ரிஷிக்கு இதே சூரஜுடன்தான்  மீட்டிங்.

“என்னோட சில ஐடியாக்களை அவரோட புதிய அலுவலகத்துலே சோதனை முறைலே செஞ்சு பாக்க சம்மதிச்சிருக்காரு. உங்களுக்கு அவரைத் தெரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்” என்றான் இளைஞன்.

அடுத்து கூறப்போகும் சொற்களைக் கவனமாக மனதுக்குள் சரிபார்த்தபடி

“கேள்விப்பட்டிருக்கேன். சுயம்புவா வளர்ந்து வருகிற  இளம் நட்சத்திர தொழில்முனைவர். எஸ்.எஸ் நிறுவனத்தோட தலைமை நிர்வாக அதிகாரி. விகடன்லே கூட பேட்டி வந்திருக்கு” என்றான் ரிஷி

“ஆமா. நிறைய பத்திரிகைகள்லே தொழில்வள ஊக்கக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதிட்டு வாராரு”

‘செங்குந்தர் கோட்டம் கோயிலுக்குச் சீக்கிரம் செல்லக்கூடாது என காரின் முடுக்கு கால்பதிப்பானின் அழுத்தத்தைக் குறைத்தான்.

“அவருக்கிட்ட மீட்டிங்ளே பேசின அந்த ஐடியாக்கள் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?”

தாழப் பறக்கும் மயில் மீது அமர்ந்திருப்பது போல கார் சங்கடமில்லாமல் நகர்ந்தது.

“அந்த காலத்துலே அரசனுக்கு ஏதாவது விஷயத்துலே தடையிருந்தா,  ஒரு குருவையோ, துறவியையோ கேட்டு அவங்க சொல்ற யோசனைப்படி நடப்பாங்க. இந்த நவீன காலத்து அரசர்களான தொழிலதிபர்களுக்கு,  குருவை வெளிப்படையாத் தேடுறதுலேயோ, அவங்கிட்ட யோசனை கேட்குறதுலேயோ நெறைய தயக்கம் இருக்கு. அதுவே அவங்களுக்கு.பணிஞ்சபடி பேசுற  என்னை மாதிரியான ஆட்கள் கிட்டே யோசனை கேட்கிறதுலே பெரிய தயக்கமில்லை.”

வேகமாக வீசிய எதிர்காற்று, மணலை அள்ளி எடுத்து வண்டியின் முன்கண்ணாடியில் கொட்டியது. ரிஷி சன்னமாக நிலைதவறினான்.  காரின் கண்ணாடியில் தண்ணீர் தெளித்து,  இணை துடைப்பான்களை இயக்கித் தெளிவானான்.

‘அலுவலக சூழல்லே பொருட்களை விரயமில்லாம முழுசா  பயன்பாட்டுக்குக் கொண்டு வரதுத்தான் என்னோட நோக்கம். ஒரு அலுவலகத்துலே முன் கதவிலேயிருந்து, கழிவறை வரை, பென் டிரைவிலேயிருந்து, மாஸ்டர் சர்வர் அறைவரை  ஒவ்வொரு இடத்திலேயும் ஏற்படுற  விரயத்தை ஆராய்ந்து அறியிறதும். அதை எப்படியெல்லாம் கட்டுப்படுத்த முடியும்ன்னு   முதலீட்டின்படி வரிசையா பட்டியலிடுறதும் என்னோட வேலை’

கவனக்குவிப்புக்கு உதவுற கலைப்பொருட்களை சரியான இடத்துலே பொருத்துறதுலே இருந்து, மறுசுழற்சி சாதனங்களோட சிபாரிசு,   குழாய்த் தண்ணீர் வேகத்தை கட்டுப்படுத்துற வால்வு, வாக்கூம் வைச்சு கழிவறையை சுத்தம் பண்றது,  மாதிரியான சின்ன சின்ன ஆனா நாளாக நாளாக முழுப்பயன் தருகிற ஐடியாக்கள்”

சற்று முன்னர் அறிமுகமாகிய, பெயர் கூட தெரியாத ஒருவரிடம் பேசுகிறோம் என்ற எந்த தயக்கமும் இல்லாமல் தொடர்ந்தான். ரிஷிக்கு இக்கால இளைஞர்களை எண்ணி ஆச்சரியமாகத்தான் இருந்தது. பல நூறு முறை பல நூறு பேரிடம் சொல்லிக் கூர்மையானது போலத் தோன்றியது அவனின்  பேச்சு.

“ஒரு பெரிய நிறுவனத்துலே இதெல்லாம் ரொம்ப சல்லிசான விரயங்களாச்சே.?” என்றான் ரிஷி

“சொல்லாதே காட்டுங்கிறதுதான், என்னோட மந்திரம்.  சூரஜ் எனக்கு கொடுத்த அரைமணி நேரத்துலே,  ஒரு சின்ன மாதிரிச் செயல் விளக்கம் காட்டி அவரைக் கவர்ந்துட்டேன்” என்றான் அந்த இளைஞன் துள்ளலுடன்.

ரிஷிக்கு அவன் மீது பெரிய மனவிலக்கம் உண்டானது. நூறு இளைஞர்களுக்கு மேல் நேர்முக கலந்துரையாடல் அறையில் சந்தித்த அனுபவம் உண்டு அவனுக்கு. அவர்கள் சமர்ப்பித்த செயல் விளக்க மாதிரிகள் பெரும்பாலும் நகலெடுத்த வெற்றுகள். அவைகளின் மீது பெரிய ஒவ்வாமை அவனுக்கு உண்டு. 

“அப்படி என்ன செஞ்சுக் காட்டுனே?” ஆர்வமில்லாமல் ரிஷி கேட்டான்.

“அவரோட அலுவலகத்துலே வேலை பார்க்குற என்னோட அறை நண்பன், ஒரு பேச்சோட நடுவி, அலுவலக நிகழ்ச்சியை அங்கலாய்ப்புடன் பகிர்ந்திருந்தான். பழனி, திருப்பதின்னு போய்ட்டு வாரவங்க அவங்களோட பிரசாதங்களை, வீட்ல விஷேஷம்னா இனிப்பு பெட்டிய அலுவலகத்துலே எல்லோரும்   சாப்பிட பொது மேசையிலே  வைக்கிறது வழக்கம்.  உணவகத்துலே  இனிப்பு இருக்கிறது, பகிர்ந்து சாப்பிடவும் என எல்லோருக்கும் பொதுத்தகவல் அனுப்பின அடுத்த பத்தாவது நிமிஷம் அந்தப் பெட்டி காலியாயிடும். முதல்லே வர பத்து பேர் மட்டும் மத்த தொண்ணூறு பேருக்கான பங்கையும் எடுத்து மொத்தத்தையும் காலி செஞ்சிடுவாங்க”

“ஆமா. அது மனிதனோட ஆதார குணம்தானே. வளங்கள் அனைத்தும் முதலில் கிடைக்கப் பெற்றவர்களால் வழித்து தின்னப்படும்”  என ஆங்கிலத்தில் சிரித்துக்கொண்டே சொன்னான் ரிஷி.

பதிலுக்கு சிரித்த அந்த இளைஞன்   “ஆமா. அது உண்மைதான்.  ஆனா அதே மனிதனைக்  கொஞ்சம் பொறுப்பானவன்னு  உணர வைக்கணும்.  சூரஜோட அனுமதியோட, அவரோட அலுவலக உணவக மேஜைலே, ஒரு பஞ்சாமிர்தம் டப்பாவையும், பக்கத்துலே ஒரு ஸ்பூனையும் வைச்சேன். அதுக்கு பக்கத்துலேயே ‘உங்கள் நண்பரின் முகத்தில்  ஒரு சின்ன புன்னகைக்கு காரணமாக இருங்கள்’ என்ற  ஸ்மைலியுடன் ஒரு குட்டிப் பதாகை வைக்கச் சொன்னேன். ஆச்சரியமா, அடுத்த கால் மணிநேரத்துலே மட்டும், இருபது, முப்பது இல்லை, அம்பது பேரு, அந்தக் குட்டி டப்பாலே இருக்கிற பிரசாதத்தை பகிர்ந்துகிட்டாங்க”

நகரின் புகழ்பெற்ற ஒரு இனிப்பகத்தின் வாயிலுக்கு வெளியே நிறுத்தினான் ரிஷி. உள்ளே சென்ற, அந்த இளைஞன், ஐந்தாறு மஞ்சள் டப்பாக்களுடன் திரும்பினான். பேரிச்சம்பழம் சேர்த்த ஒரு இனிப்புக் கட்டியை, ரிஷிக்கு வற்புறுத்தி  தந்து உண்ண வைத்தான்.

“பொறுப்பைப் பொதுவுடைமயாக்குனா விரயத்தைக் குறைக்கலாம்.” இம்முறை அந்த இளைஞன் ஆங்கிலத்தில் பேசினான். தன்னிடம் பேசுவதற்கென்றே கடையில் இருந்தபோது கைப்பேசியில் தேடி படித்திருக்கலாம் என நினைத்துக்கொண்டான் ரிஷி.

“நல்ல யோசனை. ஆனா சூரஜ், ஒரு இறுக்கமான இரும்பு மனிதன்னு கேள்விப்பட்டிருக்கேன்” என்றான் ரிஷி.

“இரும்பிலே இரும்பாலதான் துளையிடனும்” என்றவன் தானும் ஒரு இனிப்பை எடுத்து மென்றான்.

“சூரஜோட பேட்டி, மேடைப் பேச்சு வீடியோக்களை  ஒன்னு விடாம சேகரிச்சு பாத்தேன். ஒரு வார்த்தை விடாம, மொத்தமா ஒரு பைல்லே உரைநடையா மாத்திக்கிட்டேன். அதுலே இருந்து அவர் அதிகமா பயன்படுத்தின வார்த்தைகளை குறிச்சு வெச்சுகிட்டேன். எதிர்பார்த்தபடி அது உயிர்த்தன்மை, நேரடித்தன்மை, சுருக்கம் போன்ற நேர்மறை வார்த்தைகள்தான். அவரோட உரையாடும் போது எதேச்சையா  உதிருற மாதிரி இந்த சில வார்த்தைகள்  பேசினேன். அது மூலமா அவரோட தொடர்பு ஏற்பட இந்த வார்த்தைகள் எனக்கு உதவிச்சு”

சாலையின் குறுக்காக வந்த அரக்கு நிறப் பசுமாடு வழியை விடாமல் மறியல் செய்வது போல நின்றது. அழுத்தி ஒலித்த ஒலிப்பானின் ஒலிப்பிற்கு எதிர்வினையாற்றாமல், அது தான் விரும்பிய போக்கில் மெதுவாக கடந்து சென்றது.

“இன்னும் சுலபமான வழியிலே, அவரோட பிளாக்லே அவர் எழுயிருக்கிற கட்டுரைகளை நீங்க மொத்தமாவே பைல்லே எடுத்திருக்கலாமே”  எனக் கேட்டான் ரிஷி.

“சூரஜோட குறிப்புகளை வேறொரு எழுத்தாளர்தான் கட்டுரையா மாத்தியிருக்க வாய்ப்பு அதிகம்.  மாற்றம் செஞ்ச எழுத்தாளரோட மனதோட இணைப்பு மொழிதான் இந்தக் கட்டுரைகள்ளே அதிகம் இருந்திருக்கும். சூரஜோட ஆழ்மனதோட வெளிப்பாடு,  பேட்டிகள்ளேயும், நேரடியான உரைகள்ளேயும்தான் சொற்களாக வெளி வந்திருக்கும்”

இவன் பலேயான பயல் என நினைத்தான் ரிஷி. அவன் மீது சந்தேகம் கலந்த ஈர்ப்பு வந்தது.

“ஒரு வகையிலே இந்த வார்த்தைகளுக்கு எதிரா இருக்கிற வார்த்தைகள்தான் அவரோட பலவீனமா இருக்கும். ஏன்னா அந்த இடத்துக்கு வந்தவங்க அவங்க பலவீனத்தை எதிர்த்துப் போரிட்டுதான் வந்திருப்பாங்க. அதுதான் அவங்க பேச்சிலே திரும்பத் திரும்ப பயன்படுத்துற நேர்மறை வார்த்தைகளா உருமாறியிருக்கும்.” எனத் தொடர்ந்தான் அந்த இளைஞன்.

“வேலைக்கான அடிப்படைப் பயிற்சியை சிரத்தையா செஞ்சிருக்கீங்க. ஆனா தொழில் வட்டாரத்துலே, சூரஜைப் பத்தி வேற மாதிரி சொல்லுவாங்களே.  கிடைச்சா சூரியனையே பிடிச்சு,  துண்டு துண்டா வெட்டி வித்திடுவாருன்னு. அவர் இந்தச் சின்ன விஷயங்களை சோதிச்சு பாக்குறதுக்கு சம்மதிச்சிருக்காருங்கிறது  நம்பும்படியா இல்லை” அவனைச் சோதித்துப் புண்படுத்தும் நோக்கத்துடன் கேட்டான் ரிஷி.

‘சூரஜோட தனிப்பட்ட ஒரு பழக்கத்தை அவரோட நெருக்கமாக எனக்காக பயன்படுத்கிட்டேன்.’

‘என்ன?’

‘சூரஜுக்கு அவர் பிரியப்படுற எல்லாத்தையும் உள்ளங்கைக்குள்ள அடங்குற குட்டி மாதிரிகளாக மாத்துற பழக்கம் இருக்கு. புர்ஜ் கலிஃபா கட்டிடம்,  டெஸ்லா கார், பழைய காலத்து பீரங்கி மட்டுமில்ல, அவர் வாங்கி இணைச்ச எல்லா நிறுவனங்களோட முத்திரைகள், கட்டிடங்கள் என நெறைய  குட்டி மாதிரிகளை அலுவலக மேஜைலேயும், வீட்டு அறையிலேயும் நிரப்பி வைச்சிருக்கார். சென்னை கவின்கலை  கல்லூரியிலே இருந்து ஒரு மாணவனை வரவழைச்சு இந்த மாதிரிகளை தனக்காக செஞ்சிக்கிறார். அவரோட கார் டிரைவர் மூலமா இதை நான் தெரிஞ்சிகிட்டேன்’

ரிஷி ஒவ்வொரு வார்த்தையையும் சலனமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.

‘ஒரு போன்சாய் செடியை பரிசா கொடுக்குறது தான் அவருக்கு பொருத்தமான பரிசுன்னு முடிவு பண்ணேன். அவரோட அறைக்குள்ளே நுழைஞ்சு முதலறிமுகம் முடிஞ்ச உடனேயே அந்த பரிசை அவருக்குக் கொடுத்தேன். அவரோட மேஜையிலே  அணுக்கமா வைச்சிக்கிற அளவுக்கு ஒரு குட்டி வன்னி மரம். பராமரிப்புக்கு அதிகமா மெனக்கெடத் தேவையில்லாதது.  மண்ணோட அதன் வேர்களுக்கு இருக்கிற தொடர்பை  எந்த அளவுக்குக் கட்டுப்படுத்துறமோ அந்த அளவுக்குக் கண்ணுக்கு அழகா குறுந்தாவரமா நம்மள ஒட்டியபடி வளரும். அதன் வேர்களை நெருக்கமாக பின்தொடர்ந்து வளர வளர வெட்டி விடனும்ங்கிற குறிப்பு விளக்கத்தோட பரிசா தந்தேன். என்னோட பரிசை புன்னகையோட ஏத்துக்கிட்டார்.’

கனவிலிருந்து மீண்டது போல, ரிஷிக்குத்  தோன்றியது.

முதன்மை சாலைக்கு சற்று தள்ளியிருக்கும் ‘செங்குந்தர் கோட்டம்’ வரும் வரை பேச்சின்றி வண்டியை இயக்கினான். அவனை இறக்கிவிட்டபிறகு கோயிலுக்குச் செல்ல வேண்டுமா என்று தோன்றியது. அவ்வளவு சீக்கிரம் மனம் மாறுவதை அவனே வெறுப்பாக உணர்ந்தான். 

இளைஞன் கோயிலுக்குத் தன்னுடன் வராமல் அருகில் இருந்த உயர்தர உணவகம் நோக்கி நடப்பதைப் பார்த்து “கோயிலுக்கு வரலையா?” என ரிஷி கேட்டான்.

“இந்த கோயில் லேண்ட்மார்க்னாள இத அடையாளமா சொன்னேன். வேல கெடச்சதுல இன்னைக்கு ஃபிரண்ட்ஸோட பார்ட்டி” என்றவன் வேகமாக உணவகத்தில் நுழைந்தான்.

ஒரு மகிழமரம், கோயிலின் மதில் சுவரின் இடுக்குக்குள் அடங்க மறுத்து, சுவர் முழுக்க வியாபித்தபடி வளர்ந்திருந்தது. மண்ணைத் தொடாத அதன் வேர்க்கொத்து புடைத்து தொங்கியபடி இருந்தது. ரிஷியின் கார்க் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த முருகனின் திருவுருவப்படத்தில் இருந்து சாந்தமான புன்னகை வெளிப்பட்டது.


சிவக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட சிவமணியன் பிறந்தது மதுரையில்.  வசிப்பது சென்னையில். மென்பொருள் துறையில் வேலை. பொழுதுபோக்கிற்காக துவங்கிய வாசிப்பு, எழுத்தாளர் ஜெயமோகன்  தளத்தின் அறிமுகத்தால் தீவிரமானது.  தொடர்ச்சியாக விஷ்ணுபுரம் நண்பர்களின் அறிமுகமும், ஊட்டி இலக்கிய கூட்டங்களின் பங்கேற்பு, விவாதங்கள் வழியாக இலக்கிய அடிப்படைகளில் ஒரு புரிதலைப் பெற்றார். இலக்கிய வாசிப்பு கொடுத்த உற்சாகத்தால், தமிழ் – ஆங்கிலத்தில் மொழியாக்கங்கள் செய்துள்ளார். இது இவரது முதல் சிறுகதை.

முகநூல்: https://www.facebook.com/sivakumar.balachandran.58

3 comments for “ஒப்புரவு

  1. த. குமரன்
    September 6, 2021 at 7:17 pm

    ஓங்கி வளர்வது எதுவானாலும் திறம் அதை ஒடுக்க வல்லது, பொன்சாய்.
    நல்லக் கதை.
    தோழருக்கு வாழ்த்துகள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...