பூஜாஅன் ஹாத்திக்கு

1985 – ஆம் ஆண்டில் ஐந்தாம் படிவம் பயின்ற தமிழ்மொழிக் கழக மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டி, அந்தக் காலகட்டத் தமிழ்மொழிக் கழக மாணவத் தலைவன் பாஸ்கரன் பழைய மாணவர்கள் வாட்சப் குழுவின் மூலம் அழைப்பு விடுத்திருந்தான். அந்தக் குரல் பதிவை எனக்கு அனுப்பி வைத்திருந்தாள் தனலட்சுமி. “வாட்சப் குழுவில் சேர்கிறாயா?” என்கிற கேள்வியும் உடன் இருந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவள் குரலில் எப்போதும் இருக்கும் துள்ளலை உணர்ந்தேன். நானும் அப்படிப் பேசக்கூடியவள்தான் இரண்டு மூன்று முறைகுரல் பதிவில்முயன்று பார்த்து வராததால் டைப் செய்தே அனுப்பினேன்.

தனலட்சுமிக்கு வாட்சாப்பில் ’யெஸ்’ சொல்வதற்கு முன் ‘யாரெல்லாம் அந்தக் குழுவில் இருக்கிறார்கள்?’ என்கிற கேள்வியை  அனுப்பி வைத்தேன். அவளின் பட்டியல் நீண்டது. கணேசன், வாசன், தேவா, தங்கராஜூ, சங்கரன், மாலதி, விஷாலி, யசோதா, மேரி, கோகிலா, தமிழ்ச்செல்வி, ஹேமா, பத்மா, நாதன்… என்று நிறைய பெயர்களைச் சொன்னாள்.  “குழுவில் சேர்ந்தால் உனக்குத் தெரியும், கிட்டத்தட்ட ஐம்பது பேர் இருக்கிறார்கள்”என்று மீண்டும் குரல் பதிவை அனுப்பினாள்.அவளது இளமையான துள்ளல் குரல் இம்முறை கொஞ்சம் கடுப்பேற்றியது. வாட்சாப்பை அடைக்கும் முன்பு’மேலும் 1985- இல்பயின்ற படிவம் ஐந்து இந்திய மாணவர்கள் பலரைத் தேடி அழைத்துக்கொண்டு இருப்பதாக’ டைப் செய்து அனுப்பியிருந்தாள்.

அப்போது அவள் கண்கள் எப்படி விரிந்திருக்கும் எனக் கற்பனை செய்து பார்த்தேன். இரட்டை ஜடை பின்னலிட்டு எப்போதும் பளிச்சென்று அழகாக இருக்கும் அவள் பள்ளிக் காலத்தில் ஆண் மாணவர்களின் கனவு தேவதை. பள்ளி வாழ்க்கை முடிந்து கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகியும் பாஸ்கரனோடு தொடர்ந்து நட்பில் இருப்பது வியப்புதான். முதலில் கணவனிடம் அனுமதி கேட்கலாமா என யோசித்தேன். அவசியம் இல்லை என முடிவெடுத்துக்கொண்டேன். அதிக பட்சம் “உன் மூஞ்சிய இந்த வயசுல காட்டப்போறியா?”என்பார், அப்படிச் சொல்வதில் அவருக்கு ஒரு தனிச் சந்தோசம்.

நான் தயங்கியபடி “பரமேஸ்வரி குழுவில்  இருக்கின்றாளா?”என்று கேட்டேன். அவள் பதில் வர தாமதமாகவும் பதற்றமானது. தனலட்சுமிக்குரகசியங்கள் கிடையாது. பள்ளி காலத்தில் பாஸ்கரனுடன் காதல் என்ற கிசுகிசுவையெல்லாம் எளிதாகக் கடந்து வந்தவள்.இந்த வயதில்என் கேள்வி அவளை எரிச்சலடைய வைக்குமா என யோசித்தேன். முப்பது நிமிடத்திற்குப் பின் பதில் வந்தது. ‘யார் பரமேஸ்வரி.? எந்த வகுப்பு? தமிழ்மொழிக் கழகத்தில் இருந்தாளா? நம்ம வயதா? எனக்கு ஞாபகமே இல்லை.’ என அடுத்தடுத்த சொற்றொடர்கள்.

மனதிற்குத் தெம்பாக இருந்தது. ‘வாட்சப் குழு’ வில் இணைந்து கொண்டேன். ஆனால் சந்திப்புக்குச் சம்மதம் சொல்லவில்லை. எதுவோ தடுத்தது.

பரமேஸ்வரியின் நினைப்பு வந்ததும் எவ்வித வசதியும் இல்லாமல் நாங்கள் வசித்த ரூமா பாஞ்சாங் வீடமைப்புப் பகுதி நினைவுக்கு வந்தது. கால்களில் பிசுபிசுப்பு ஒட்டிக்கொண்டதுபோல சாக்கில் துடைத்துக்கொண்டேன்.  

அந்த ரூமா பாஞ்சாங் பகுதி உருவான கதை கொடுமையானது. புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட பெரிய பெரிய வீடுகள் மைனிங் நிலத்திற்குச் சொந்தமானது என்பதால், அதன் உரிமையாளர் தமக்கு நிலம் வேண்டும் என்று சொன்னபோது யாரும் அங்கிருந்து செல்வதற்குத் தயாராக இல்லை. அப்போது அருகில் இருந்த சிறிய ஆற்றை பெரிய டிரக்டர்களைக் கொண்டு ஈயம் எடுப்பதாகச் சொல்லிக் குடைய ஆரம்பித்தார்கள். அந்த ஆறு பெரிது ஆக ஆக அடை மழை பெய்தால் மண் சரிவை ஏற்படுத்தி அங்குள்ள வீடுகளை நிலம் இரையாக்கிக்கொள்ளும்.  இதற்குப் பயந்து வேறு வழி இல்லாமல், அவர்கள் கட்டிக்கொடுத்த மோசமான வரிசை வீடுகளுக்குக் குடி புகுந்தோம். முதலில் தற்காலிக வரிசை வீடு என்றார்கள். ஆனால் காலப்போக்கில் அந்த வீடே நிரந்தரமானது.      

கழிவறை வசதி, குழாய் நீர் வசதி, மின்சாரம், பேருந்து வசதி, கோவில்  என எதுவும் இல்லாத இடம் அது. கழிவுநீர் தேக்கத்தால் எப்போதும் ஒருவித துர்நாற்றம் மூக்கைத் துளைக்கும். போகப்போக அதுவும் பழகிப்போனது எங்களுக்கு.  

எனக்கு அது நரகம்.

நான் தான் `கேஸ் லைட்’ ஏற்றிவைக்க வேண்டும்.  தண்ணீர் கொண்டு வர கொசுக் கடியில் குழாயடியில் காத்துக்கிடக்க வேண்டும். தங்கைகள் கழிவறை செல்லவேண்டும் என்றால் நான் தான் அவர்களை இரவு பகல் பாராமல் பக்கத்தில் இருக்கின்ற லாலான்புல் பாசாவிற்கு அழைத்துச் செல்லவேண்டும். அந்தச் சிறிய வீட்டில் பாட்டியும் எங்களோடு இருந்தார். பாட்டியுடன் நான் எனது இரண்டு அக்காள்கள் மற்றும் இரண்டு தங்கைகள் என அனைவரும் ஒரே அறையில் கீழே பாய் போட்டு படுத்துக்கொள்வோம். பாட்டி மட்டும் சிறிய கட்டிலில் படுத்துக் கொள்வார். அம்மா அப்பா வரவேற்பு அறையில்  தரையில் பாய் விரித்துப் படுத்துக்கொள்வார்கள். அப்பா லாரி ஓட்டுனர் என்பதால், வார இறுதில் தான் வீட்டில் இருப்பார்.

காற்று புக முடியாத அளவிற்கு அடைசலான அறை அது. கடுமையான வெப்பம் இரவு வேளையை நரகமாக்கும்.  

எனக்கும் பாட்டிக்கும் அடிக்கடி சண்டை வரும். என்னைக் கண்டால் பாட்டிக்கு அறவே பிடிக்காது. அக்காக்கள் இருவரும் பதினோரு பன்னிரண்டு வயதிலேயே வயதுக்கு வந்து மஞ்சள் பூசி குளித்து லட்சுமி கடாட்சமாக இருப்பார்கள். நான் பதினைந்து வயது ஆகியும் பருவம் எய்தாத பெண்ணாக இருப்பதால், பாட்டி இதை காரணங்காட்டி  என்னைத் திட்டிக்கொண்டே இருப்பார். 

“இவ முழு பொண்ணா ஆவாமலே இருப்பா போலருக்கு. திங்கறதெல்லாம் எங்கே போகுதுன்னு தெர்ல… சோவ பிடிச்சிக் கெடக்கரா… சோவச்சி. உங்கப்பன் அம்மா ஒன்ன வைச்சிக்கிட்டு என்ன பண்ணப்போறாங்கன்னு தெர்ல…. தங்கச்சிக்காரிகளும் வயசுக்கு வந்திருவாளுங்க போலருக்கு… ஐஞ்சு பொம்பளபிள்ளைகள வைச்சுக்கிட்டு எம்மவன் ஆண்டியா போயிருவான் போல… இதுல இவ வேற இன்னும் வயசுக்கே வரல…”என என்னைப் பார்க்கும் போதெல்லாம் தாளிப்பில் போட்ட கடுகு மாதிரி வெடிப்பாள்.

பாட்டி என்னை இப்படித் திட்டுவதற்குக் காரணமும் உண்டு. பாட்டி சுருட்டு பிடிப்பார். சுருட்டை எப்போதும் நான்தான்  வாங்கி வரவேண்டும். எங்கள் குடியிருப்பு மோசமாக இருந்தாலும் தோழிகளுடன் இருக்கும்போது நான் மகிழ்ச்சியாக இருந்தேன். அவர்களுடன் பாண்டி, பல்லாங்குழி, கல்லாங்காய், கயிறுதாண்டுதல் என ஆர்வமாக விளையாடிக் கொண்டிருக்கும்போது, அப்பா பாட்டிக்கு சுருட்டு வாங்கி வரச் சொல்வார். அது எனக்கு மிகுந்த எரிச்சலை உண்டு பண்ணும். கோபத்துடன் கடைக்கு விரைந்து, சுருட்டுகளை வாங்கி கொண்டு அதே கோபத்துடன் பாட்டியில் முகத்தில் சுருட்டுகளை வீசியெறிவேன். கெட்டவார்த்தைகளைக் கொண்டு என்னைத் திட்டி தீர்ப்பார். தட்டுத் தடுமாறி கீழே சிதறிய சுருட்டுகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு நான் செய்த காரியத்தை அப்பாவிடம் ஒன்றுக்கு இரண்டாகச் சொல்லி என்னை அடி வாங்க வைப்பார்.

இரவெல்லாம் தூங்காமல் சுருட்டு பிடித்துக்கொண்டு புகையை ஊதித் தள்ளிக்கொண்டிருப்பார் பாட்டி. அந்தச் சுருட்டு வாடை எனக்குப்பிடிக்காது. “பாட்டி காலையிலே ஸ்கூல் போணும். சுருட்டு பிடிக்காம தூங்கு.”என்று பலமுறை சண்டை போடுவேன். இதை அம்மாவிடமும் சொல்வேன். மாமியார் மருமகள் சண்டையும் வரும்.   பாட்டியின் கோபம் உச்சத்தை அடையும். கூடுதலாக சாபமும் விடுவார். சிறுக்கி, மூதேவி, மூளி, பீடை, முண்டம் வயசுக்கு வராமல் விலையாகாமல் கெடக்கப்போறா பாரு… என்றெல்லாம்  திட்டிக்கொண்டே இருப்பார்.

நான் எப்போதும் சோர்வாக இருப்பதால், என்னை `சோவச்சி’ என்ற பட்டப்பெயர் கொண்டு அழைப்பார் பாட்டி. வீட்டில் வருடத்திற்கு ஒரு குழந்தை என்பதால் ஒரு வயது வித்தியாசத்தில் அக்கா தங்கைகளாக நாங்கள் இருந்தோம். தங்கைகளும் என்னைவிட உயரமாக வளர்ந்துவிட்ட போதிலும் நான் மட்டும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தையாகவே காணப்படுவேன்.

எனக்குப் பதினைந்து வயதானபோது, தங்கை வயதுக்கு வந்துவிட்டாள். வீட்டில் பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டாள் அம்மா அவர்களுக்கு உள்ளாடை வாங்கிக்கொடுப்பார். தங்கையே  மார்புக்கச்சை போடும் பருவத்திற்கு வந்துவிட்ட போதிலும் எனக்கு அது இன்னும் வாய்க்கவில்லை என்பது  மிகுந்த வருத்தம் கொடுத்தது.  ஒருமுறை அறையில் தனியாக இருக்கும் போது, அக்காவின் `ப்ரா’ ஒன்றை அணிந்துகொண்டு காலியாக இருக்கும் இடத்தில் சிறிய துணி ஒன்றைப் பந்துபோல் சுருட்டி  உள்ளே வைத்துத் திணித்து கண்ணாடியில் முன்னழகைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். பாட்டி பார்த்துவிட்டார். சும்மாவே திட்டுவார். இப்போது கேட்கவே வேண்டாம். ‘சௌக்கிட் ரோட்’ பெண்களை எல்லாம் துணைக்கு அழைத்துக்கொண்டார். “அரிப்பாடி உனக்கு…”என்றெல்லாம் கேட்டு அசிங்கப்படுத்தினார். அன்று முழுவதும் நான் அழுதுக்கொண்டிருந்தேன். சில நாட்கள் உண்ண முடியவில்லை. அவமானமாக இருந்தது. எப்படி வலிக்காமல் சாகலாம் என்ற எண்ணமெல்லாம் வந்தது.

கால ஓட்டத்தில் அக்காகளுக்கு வேலைகள் கிடைத்துவிட்டதால் என் பொறுப்பு அதிகரித்தது.  விறகு எடுக்கப்போகவும், தண்ணீர் எடுக்கப்போகவும், பால்மரம் சீவும் அம்மாவிற்கு உதவி செய்யவும், வீட்டில் யாருக்காவது காய்ச்சல் என்றால் ராணுவ வீரர்களின் கேம்’மிற்கு மருத்துவரைப் பார்க்க அழைத்துச் செல்லவும் எனப் பல பொறுப்புகள். தங்கைகள் எல்லார் பார்வையிலும் சிறுமிகளாக இருந்தனர். நான் மெல்ல மெல்ல என்னைப் பெண் இல்லை என நம்பத் தொடங்கியபோதுதான் பரமேஸ் அறிமுகமானாள். 

அப்போது வகுப்பில் இஸ்லாம் கல்வி போதிக்கப்பட்டு கொண்டிருந்தது. இஸ்லாம் கல்வி பயிலாத மற்ற இனத்து மாணவர்களை ஒன்றாகத் திரட்டி `சிவிக்’ பாடம் நடத்துவார் தலைமையாசிரியர். மூன்று வகுப்பு மாணவர்கள் ஒரே வகுப்பில் அமர்ந்து அப்பாடத்தைப் பயில்வோம். ஒரு நாள் `சிவிக்’ வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது எனக்குத் திடீரென்று உடலில் ஒருவித சோர்வு ஏற்பட்டது.  உடல்வலியும் சேர்ந்துக்கொண்டது. இடுப்புப் பகுதியில் யாரோ  குத்துவது போல் வலி வர ஆரம்பித்தது. மலம் கழிக்க வேண்டும் போலவும் இருந்தது. ஆசிரியரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு கழிவறை பக்கம் செல்ல எழுந்தபோது, பின்பக்கமாக ஓடி வந்து என்னை அணைத்துக்கொண்டு, ஆசிரியரிடம் எதையோ சிசுகிசுத்துவிட்டு, கழிவறைக்கு அழைத்துச் சென்றவள் பரமேஸ்.

நான் பூப்பெய்திருந்தேன். பள்ளிச் சீருடையின் பின்பக்கம் ரத்தக்கறை. ஆசிரியர்களைச் சந்தித்துப் பள்ளிக்கு விடுப்பு வாங்கிக்கொண்ட பரமேஸ் அவளின் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றாள். பள்ளியில் இருந்து இருநூறு மீட்டரில் அவளின் வீடு.  

பெரிய அழகிய வீடு அது. பொருட்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டுச் சுத்தமாக இருக்கும் அலமாரி. சுவரில் குடும்பப் பரம்பரையை பறைசாற்றும் கருப்பு வெள்ளைப் புகைப் படங்கள். அவளுக்கென்று தனி அறை. மணக்கும் பூஜை அறை, தூய்மையான சமையலறை. குளியலறை  கழிவறை என எல்லா வசதிகளையும் கொண்ட வீடு. எனக்கு அவளின் வீடு மிகவும் பிடித்துப் போனது. அங்கே அவளும் அவளின் அம்மா மட்டுமே தங்கியிருந்தார்கள். அப்பா இல்லை. வேறொரு திருமணம் செய்துகொண்டு பிரிந்து விட்டதாகச் சொன்னாள் பரமேஸ்.

அங்கேயே குளித்துவிட்டு அவளின் துணிகளைப் போட்டுக்கொண்டேன். “எனக்கு உன்னுடைய `ப்ரா’ இருந்தால் கொடு,”என்றேன். வாய்விட்டுச் சிரித்தாள். “இப்போதான் உனக்கு  அது எட்டியே பார்க்குது.,, அதற்குள் ப்ரா வா? என்னுடையது உனக்குச் சேராது”என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள். எனக்கு, ஏன் கேட்டோம் என்று அவமானமாக இருந்தது. நான் இன்னும் முழு பெண்ணாகவில்லையா எனக்குழம்பிப்போனேன்.

வீடு திரும்பியவுடன், பாட்டி என்னைக் கேள்விகளால் துளைத்து எடுத்தார். ’எத்தனை மணிக்கு வந்தது? யார் முதலில் பார்த்தது? எவ்வளவு வந்தது? தீட்டுடன் எங்கே போனாய்? அந்த வீட்டில் ஆம்பளை யாராச்சும் இருந்தாங்களா? எந்த ஆம்பள முகத்திலும் முழிக்கல இல்ல!?’ என ஆரம்பித்து, “இவள மொதல்ல பள்ளிக்கூடத்தில் இருந்து நிப்பாட்டு, அடங்காபிடாரி  இவ… மஞ்சதண்ணிய கலக்கி ஊத்து அவமேல…”என்றெல்லாம் அம்மாவிடம் முனக ஆரம்பித்துவிட்டார். பிறகு சில சடங்குகள் எல்லாம் நடைபெற்றது. ஒரு வாரம் பள்ளிக்கு விடவில்லை.

அன்று முதல் பரமேஸ் எனது நெருங்கிய தோழி ஆனாள்.  அவள் மலாய்மொழி பள்ளியில் இருந்து வந்ததால், என்னைவிட ஒரு வயது சிறியவள். நான் அவளிடம் பழக ஆரம்பித்ததும் சிலர் என் காதில் அவள் ஒரு `தோம் பாய்’ எனக் கிசுகிசுத்தனர். அப்படியென்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. பின்னர்தான்  அவள் ஆண்போல நடை உடை பாவனைகளைக் கொண்டவள் எனப் புரிந்தது. பிறப்பால் பெண் என்றாலும் செய்கையால் ஆண் தன்மை அதிகம் உள்ளவள். என்னைப் பின்பக்கம் இருந்து அணைத்துக்கொள்வாள். அப்படி  அணைக்கையில் அடிக்கடி எனது  மார்பை பிடிப்பது அவளின் வழக்கம். இதனால் அவளைத்  திட்டியும் இருக்கிறேன். அது கூச்சத்தினாலா அல்லது கோபத்தினாலா என இப்போது தெளிவாக யோசிக்க முடியவில்லை.

நான் அவளிடம் நெருங்கி பழக வேறொரு காரணம் இருந்தது. அவள் மலாய் மொழியில் நல்ல புலமை பெற்றவள். பிரபல மலாய்ப் பாடகர் சுடிர்மானின் பரம ரசிகை அவள். அவரின் பாடல்களை அடிக்கடி பாடுவாள். அவரின் அனைத்து பாடல் ஆல்பம்களை வாங்கி சேகரித்து வைத்திருப்பாள். நடக்கும்போதே அவரின் பாடல்களைப் பாடிக்கொண்டு கைகளை வீசியவாறு அவர் போலவே நடப்பாள். ‘பூஜாஹன் ஹாத்திக்கு மரிலா’ என்கிற பாடலை ஆசிரியர் தினத்தன்று மேடையில் பாடி பலரதுப் பாராட்டுகளைப் பெற்றவள்.நானும் வேகமாகக் கைதட்டி அவளுக்கு முத்தம் கொடுத்தேன்.“பாடல் உனக்காகப் பாடினேன்.” என்றவள் மறுபடியும் எனக்கு முத்தமிட்டபோது என்னவோ போல ஆனது.நான் அப்பாடலை தமிழில் அர்த்தம் கொண்டு அன்று முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன்.

‘வாவா என் மனங்கவர்ந்தவளே வா…என் அன்பையெல்லாம் உன் மேல் பொழிகிறேன்’

மலாய் மொழியை மலாய்க்காரர்கள் பேசுவது போல் பேசுவாள் பரமேஸ். “உன் தாய் மொழி என்ன மலாயா? பேருதான் பரமேஸ்வரி… பேச்சப்பாரு… மலாய்க்காரி போல…”என்று ஆண் மாணவர்கள் கிண்டல் செய்வார்கள். அவளுக்கு அது ஒரு பொருட்டாகவே இருக்காது. அவள் எந்த ஆண்கள் கூட்டத்திலும் புகுவாள். “ஏய் வந்தேன்னா, தூக்கி போட்டு மெதிச்சிருவேன்.”என்பாள். நான் தூரமாக ஒடுங்கி நிற்பேன்.

பரமேஸ், ஆண்கள் போல் முடி வெட்டிக்கொள்வாள். ஆண்கள் அணிகிற காலணிகள் அணிவாள்.  ஆண்கள் போல புத்தகப் பையைப் பின்புறம் மாட்டிக்கொள்வாள்.

நரகச் சூழலான எங்கள் வீட்டுச் சூழலிலிருந்து தற்காலிக நிவாரணம் பெற பரமேஸ் வீட்டிற்கு அடிக்கடி செல்லத் தொடங்கினேன். வீட்டில் பரீட்சைக்குப் படிக்கிறேன் என்று சொல்லிவிட்டு பரமேஸ் வீட்டில் தங்கி விடிய விடிய வீடியோ படம் பார்ப்பேன். இருவரும் சேர்ந்து எல்லா சினிமா படங்களையும் பார்ப்போம். பாக்கியராஜ் படங்கள் மிகவும் பிடிக்கும். `முந்தானை முடிச்சு’ படத்தைப் பலமுறை பார்த்தோம். அந்த முனகல் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவள் என்னைப் பார்த்து ஆண்கள் செய்வதுபோல் கண்ணடிப்பாள்.  அவள் விரல்கள் என் உடலில் எப்போதும் எங்கேவது சீண்டிக்கொண்டே இருக்கும். நான் அதை விளையாட்டாக மாற்றப்பழகினேன்.

ஒருமுறை என் காதுகளில் வந்து “நீ அவ்வளவு பெண்மையாகத் தெரிகிறாய்”என்றாள். என்னை அதுவரை யாரும் அப்படிச் சொல்லியதில்லை என்பதால் சிலிர்ப்பாக உணர்ந்தேன். நான் ஒன்றும் பேசாமல் சிரித்து வைத்தேன். என் வெட்கம் என் பெண்மையை அதிகரித்துக் காட்டக்கூடும் என நினைத்துக்கொண்டேன்.

அவளது வீடு எனக்குச் சொர்க்கம் ஆனது. சுதந்திரமாக இருந்தது.

ஒருமுறை பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு, அவளின் வீட்டிற்குக் காலை பத்து மணிக்குச் சென்றுவிட்டோம். அப்போது அவளின் அம்மா வீட்டில் இருந்தார். எங்களுக்கு அதிர்ச்சி. அவள் அம்மா வழக்கறிஞர் அலுவலகத்தில் டைப்பிஸ்ட் .  நாங்கள் நுழையும்போது மணி மாமா வின் மோட்டார் வாகனமும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  பரமேஸுக்கு அவர் மாமா என்பதால் நானும் அவரை மாமா என்பேன். கைலி கட்டியிருந்த மணி மாமா அம்மா அறையின் கட்டிலில் உட்கார்ந்திருந்தார். அம்மா கீழே அவரின் காலடியில் உட்கார்ந்திருந்தார். மணி மாமாவின் காலில் சுளுக்கு எடுத்துவிட்டதாக அம்மா சொன்னார். நாங்கள் இருவரும் பரமேஸின் அறையில் புகுந்து கொண்டோம். பிறகு மாமாவின் மோட்டார் சத்தம் கேட்டது. அம்மாவும் புறப்பட்டு அவருடன் வேலைக்குச் சென்றுவிட்டார்.

மணி மாமா அம்மாவின் நிஜ தம்பி அல்ல.  நல்ல நண்பர். அரசியல் செல்வாக்கு உடையவர். அப்பாவை விட்டு விலகியபோது விவாகரத்து விவகாரம், பரமேஸை பார்த்துக்கொள்வது, இந்த வீடு வாங்குவதற்கு அம்மாவிற்கு உதவியாய் இருந்தது. ஆண் துணை இல்லாத வீட்டில் அம்மாவிற்கு பல வழிகளில் பக்கபலமாக நிற்பது என எல்லாவற்றிற்கும் மணி மாமாதான் தூண்.

மணி மாமா ஒரு நாத்திகவாதி. வழிபாடு செய்யமாட்டார். இருப்பினும் அம்மாவை அடிக்கடி அழைத்துக்கொண்டு பேராக் உலுபெர்னாம் எஸ்டேட் காட்டுக் காளி கோவில் ஒன்றிற்குக் குறி சொல்லும் சாமியார் ஒருவரைப் பார்க்கச் செல்வார். இதில் அம்மாவிற்கும் அதிக ஈடுபாடு இருப்பதால் அம்மாவும் அவருடன் செல்வார். பிரிந்துசென்ற கணவன் செய்த செய்வினை மாய மந்திரம் எல்லாம் வெளியே எடுத்து அம்மாவை காத்துக் கொண்டிருப்பது மணி மாமா அழைத்துச் செல்லும் பில்லி சூன்ய சாமியாரின் அருள்தான்.

அம்மாவும் மணி மாமாவும் நள்ளிரவில் வீடு திரும்பினால், மணி மாமா அவரின் வீட்டிற்குச் செல்லமாட்டார். வீட்டில் இருந்து அவரது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து “இன்று அக்காவுடன் தங்கி விடுகிறேன்,”என்று சொல்லி அங்கேயே தங்கிவிடுவார்.  சில நாட்களில் இருவரும் வீடு திரும்புவது கிடையாது. காளி கோவிலுக்குச் சென்று பூஜைகள் எல்லாம் முடிய நேரமானால், அருள்வாக்கு சாமியின் வீட்டில் தங்கிக்கொள்வார்கள். இப்படித் தங்கிக்கொள்கிற நாளில் பரமேஸ் என்னிடம் கெஞ்சி அவளுடன் வந்து தங்கிக் கொள்ளுமாறு  வற்புறுத்துவாள். எனக்கும் இந்த நரகச் சூழலில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பதால் பரமேஸ் வீட்டில் தங்குவதற்கு அம்மாவிடம் அனுமதி கேட்டு போராடுவேன்.

எஸ்.பி.எம் பரீட்சைக்குப் படிக்க வேண்டும். வீட்டில் அமைதி இல்லை. படிப்பு ஏறமாட்டேங்கிறது. பரமேஸ் வீடு நல்ல வசதி. எல்லாமும் இருக்கும் என பல காரணங்களைச் சொல்வேன். “நான் போகட்டுமா?”என்று மன்றாடி கேட்டுக்கொள்ளும்போது  அம்மா சம்மதம் தெரிவிப்பார். இருப்பினும் நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் படிப்பது இல்லை. மணி மாமா அம்மாவின் அறை அலமாரியில் பதுக்கி வைத்திருக்கின்ற ப்ளூபிலிமை பரமேஸ் எடுத்து வருவாள். இருவரும் பார்ப்போம். விடிய விடியப் பார்த்து விட்டு மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்து விடுவோம்.

ஒருமுறை மணி மாமா என்னிடம்… “நீ பரமேஸ் அம்மாவ அம்மான்னு கூப்பிடறே, நான் அம்மாவுடைய தம்பி. அப்போ நான் உனக்கு தாய்மாமன். நீ எனக்கு மொற பொண்ணு”என்றார். அவரின் பார்வை எனக்குப் பயத்தை உண்டு பண்ணியது.  நான் மிரண்டு போனேன். “அந்நியன் என்றைக்கும் அண்ணனோ நல்ல உறவோ ஆக முடியாது, வாய்ப்பு கிடைத்தால் கைவைப்பான் ஜாக்கிரதை.”என்று அடிக்கடி பாட்டி சொல்வாள். அது எனக்கு அப்போது ஞாபகத்திற்கு வந்தது. மணி மாமாவை எனக்குப் பிடிக்காமல் போனது.  மணி மாமா இருக்கும் போது நான் அங்கு செல்வதைத் தவிர்த்து வந்தேன். இதை நான் பரமேஸிடமும் கூறினேன். அவள் அதை அலட்சியம் செய்தாள். “சரி வேண்டாம். அவர் இருந்தால் வராதே!”என்று மட்டும் சொல்லி அதை அப்போதே மறந்து போனாள். எனக்கு கொஞ்ச காலம் மணி மாமாவின் நினைப்பு இருந்தது. நான் விரும்பாத ஒன்றை ஏன் நினைக்கிறேன் என்று குழம்பினேன். நான் யாரோ சிலருக்கு அழகாகத் தெரிவது மகிழ்சியளித்தது.

கொஞ்சம் கொஞ்சமாக நான் அவளின் நகலாக மாறிக்கொண்டிருந்தேன்.  அவள் போல் சிரிப்பது. அவள் போல் மலாய் கலந்த தமிழ் பேசுவது. சுடிர்மான் பாடல்களைக் கேட்பது. மலாய் நாவல்களை வாசிப்பது. ஆண்கள் போல் குதித்துக் குதித்து நடப்பது  என அவளின் பழக்கவழக்கங்கள் சில எனக்குள் புக ஆரம்பித்தன. இதைப் பாட்டி கண்டுபிடித்து விட்டார். எச்சரித்து எரிச்சலூட்டினார். “எந்த சிறுக்கிமவளோட பாவன இது.? நடிக்கிறியா நீ, உன்னியெல்லாம் அதுமேலேயே மெதிமெதின்னு மெதிக்கணும்… மேனாமினுக்கி… அரிப்பெடுத்த தட்டுவாணி”என்றெல்லாம் திட்டுவார். 

பாஸ்கரன் அழைத்தபோது நினைவுகளில் இருந்து மீண்டேன். நேரடி சந்திப்புக்கு முன்பே இப்படி ஓரிரு வார்த்தைகள் பேசுவது நல்லதாகவே தோன்றியது. நலம் விசாரித்தான். எத்தனைக்குழந்தைகள்? என்ன செய்கிறார்கள் அவர்கள்? கணவன் என்ன வேலை செய்கிறார்? மற்றும் அவனின் குடும்பம் குழந்தைகள் மனைவி வேலை என எல்லாமும் பகிர்ந்தான். நல்ல உரையாடலாக அது அமைந்தது.  நான் அவனிடம் நல்ல படியாகவே என் கணவரைப் பற்றி சொல்லி வைத்தேன்.பின்னர் சுவரில் இருந்த என் கல்யாணப்படத்தைப் பார்த்தபோது அதெல்லாம் உண்மைதானா எனத் தோன்றியது. செல்லமாகச் சொல்வதுபோல அடுக்கப்படும் வசைகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன.

ஒன்றுகூடல் நிகழ்விற்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய குரல் பதிவுகள் வாட்சாப்பில் குவிய ஆரம்பித்தன. இடையிடையே ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டார்கள். பழைய காதல் கதைகளைப் பற்றி பேசி கிண்டலடித்துக் கொண்டார்கள். எதுவரை படித்தார்கள், இப்போது என்ன செய்கிறார்கள் போன்றவற்றையும் பகிர்ந்து கொண்டார்கள்.

வாட்சாபில் நிறைய கதைகள் பேசினார்கள். தினமும் காலை, மதியம், மாலை இரவு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன. பொழுது நன்கு கழிவதாக சிலர் சிலாகித்தார்கள். இந்த நட்பு வட்டம் சாகும் வரை தொடர வேண்டும் என்று சிலர் நாடக வசனம் எல்லாம் பேசினார்கள்.  அப்படி சிலர் என் எண்ணைத் தனியாக எடுத்து ஓரிரு வார்த்தைகள் சொல்வதுண்டு. ஏதாவது சம்பவத்தை நினைவு கூர்ந்து நானா அது என்பதை உறுதி செய்வார்கள்.

அப்படிதான் கோகிலா என்னிடம் தனியாக வந்து, “நீ தானே பரமேஸ் கூட்டாளி?”கேட்டாள்.  “ஆம்.”என்றேன். “பரமேஸ் எங்கே?”என்று கேட்டாள். எனக்கு இந்தக் கேள்வி பிடிக்கவில்லை. ஏன் என்னிடம் அவளைப் பற்றி விசாரிக்க வேண்டும்? பரமேஸ் இவளிடம் எதையாவது பகிர்ந்திருப்பாளா? என யோசித்தேன்.  பள்ளியில் படிக்கும்போது நட்பு இருந்தது. பின்பு அது காணாமல் போனது என்பதைச் சொல்லி, அவளுக்கு பரமேஸ் பற்றி ஏதாவது தெரியுமா? என்று கேட்டேன். “இல்லை. அவள் பள்ளியில் உன்னைச் சுற்றிக் கொண்டிருந்தது தெரியும் மற்றபடி அவளைப் பற்றிய தகவல் எதுவும் இதுவரையில் தெரியவில்லை. அதனால்தான் கேட்டேன்,”என்றாள்.

தனியாக என்னிடம்  பேசிய கோகிலா, பிறகு பொது வாட்சப் குழுவில், `பரமேஸ் எங்கே இருக்கிறாள்? அவளைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பகிருங்கள். அவளையும் குழுவில் இணைத்துக்கொள்ளலாம்.’ என்றாள்.

“ஓ பரமு..!! ஹா ஹா ஹா…”என்று சிரிக்கும் பொம்மைகள் போட்டான் கண்ணன்.

“யார் பரமேஸ்?”என சில நண்பர்கள்.

பாஸ்கரன், “எண்கள் கிடைத்தால் அழைத்துப் பார் தனம்.”என்றான்.

“பரமேஸ் நல்ல சரக்கு லா.”என்றான் சுப்ரா.

“பரமேஸ் ஆணழகி…”என்றான் கணேசன்.

“அவங்க அம்மா நிஜமான பெண்ணழகி.”என்றான் தாஸ்.

“ மணி என்று ஒருவன் கூடவே இருந்தானே, அவன் மாமா இல்ல, மாமா வேலை பார்ப்பவன்.. ஹாஹாஹா” என்றாள் குணசுந்தரி. 

“ஏன் இந்த வயசான காலத்துல அடுத்தவர கேலி பேசுவானேன்.”மேரி எச்சரித்தாள்

இதையொட்டி பல தகவல்கள் வந்துக்கொண்டிருந்தன. சிரித்தார்கள். பொம்மைகள் போட்டார்கள். நக்கலடித்தார்கள்.  நன்றாக போய்கொண்டிருந்த வாட்சப் குழுவில் தினம் ஒரு முறையாவது பரமேஸ் பேச்சு அடிப்பட்டது. எனக்கு அவள் நினைவுகள் அடிக்கடி வரத்தொடங்கின.

ஐந்தாம் படிவம் முட்டி மோதி எஸ்.பி.எம் பரீட்சை எழுதி முடித்தோம். நான் தேர்ச்சிபெறவில்லை. பரமேஸ் முக்கிய பாடமான மலாய் மொழியில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. அது எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியம். மலாய் மொழியில் திறன் பெற்றுச் சிறப்பாக மலாய் பேசும் அவளுக்கா இந்த கதி என ஆங்காங்கு பேச்சு அடிப்பட்டது. சிலர் அவள் பாடும் சுடிர்மான் பாடலைப் பாடி கிண்டல் செய்தனர். மலாய் மொழியில் தேர்ச்சி பெறவில்லை  என்றால் படிவம் ஆறுக்குச் செல்வதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. மிகுந்த மன உளைச்சலில்  இருந்தாள். அத்தோடு பள்ளி வாழ்வும் முடிவுக்கு வரும் தருவாயில் இருந்தது. இருவரும் பிரிகிற நேரமும் வந்தது.  அந்தத் தருணம் அவளின் தவிப்பு எனக்கு வியப்பாக இருந்தது. பிரிகிறோம் என்றதும், “இனி பார்க்க முடியாதா? என் வீட்டிற்கு வர மாட்டியா?”என்று கேட்டுக்கொண்டு, தேர்வு முடிவுடன் வீடு திரும்ப நினைக்கும் என்னை விடாமல் பெட்டாலிங் ஜெயா பழைய பட்டணப் பேருந்து  நிலையம் வரை தொடர்ந்து வந்தாள். என்னை மறந்துவிடாதே என்றாள். கண்கள் சிவக்க மூக்கில் நீர் ஒழுக அழுதாள்.  எனக்கு அந்த உணர்வு புதுவிதமாக இருந்தது. 

கம்பத்து நரகச் சூழலில் இருந்து விடுதலை பெற முடியாமல் போய்விட்டது என்று நினைக்கும்போது மட்டும் பரமேஸின் பிரிவு எனக்கு வருத்தத்தை அளித்தது. மற்றபடி வேறு  எந்த உணர்வும் என்னிடம் இல்லை. தேர்ச்சி அறிக்கையைப் பார்த்து வீட்டில் நடக்கப்போகும் கூத்தை எண்ணியே பயந்தேன்.

ஒருமாதம் கழித்து, பரமேஸ் என்னை அழைத்தாள். “வீட்டிற்கு வா. என்னுடன் ஒரே ஒரு நாள் தங்கிவிட்டுச் செல். உன் பிரிவை என்னால் ஏற்க முடியவில்லை. நிச்சயம் வரவேண்டும். காத்திருப்பேன் சாயாங்”என்று சொல்லி, தொலைபேசியை வைத்தாள். வீட்டு வரிசையில், கம்பத்து தலைவர் வீடு உள்ளது. அவரின் வீட்டில் மட்டும் தொலைபேசி வசதி இருக்கும். அந்த எண்களை முன்பு அவளிடம் கொடுத்திருந்தேன்.   

அதுவே நான் பரமேஸ் வீட்டில் கழித்த இறுதி இரவு. எங்களின் இறுதி சந்திப்பும் கூட.    

அதன் பிறகு நான் அவளை நினைத்ததில்லை. அல்லது நினைவில் எட்டிப்பார்க்கும் போது தவிர்த்திருந்தேன். இந்தப் புலனக்குழு எனக்கு கடும் இம்சையாக இருந்தது. விலகிவிடலாம் என்று கூட நினைத்தேன். அதை முன் பின் அறிவிக்காமல் செய்ய திட்டமிட்டிருந்தேன்.

குழுவில் அறிமுகமில்லாத சில நண்பர்களை பழைய மாணவர்கள் என்கிற பட்டியலில் இணைத்துக்கொண்டான் பாஸ்கரன். ஒன்றுகூடல் நிகழ்வு கூடிய விரைவில் நடைபெற விருப்பதால், அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்றன.  நிகழ்ச்சி பொறுப்புகளைப் பெரும்பாலும் ஆண்கள் ஏற்றுக்கொண்டார்கள். குழுவில் உள்ள நண்பன் ஒருவனுக்கு அரசியல் செல்வாக்கு  இருப்பதால் போர்ட்டிக்சனில் உள்ள  தங்குவிடுதியை இலவசமாகப் பெற்றுக்கொடுத்தான்.

உணவு, பரிசுப் பொருட்கள் மற்றும் இதர செலவுகளுக்கு  எல்லோரிடமும் பணம் வசூலிக்கப்படும் என்றார்கள். ஒருவருக்கு தலா ரிம150. வறுமையில் உள்ளவர்களுக்கு சிலர் பங்கிட்டு உதவி செய்து அக் கட்டணத்தைச் செலுத்தினார்கள். நான் கட்டணம் செலுத்தாமல் தாமதித்தேன். போகத்தான் வேண்டுமா என்று குழப்பமாக இருந்தது.

தங்கும் விடுதி, உணவு, ஒன்றுகூடி பேசுகிற திடல், யார் யார் உரை நிகழ்த்துவது, கராக்வ்கே,சிலைட்ஷோ செய்வதற்கு பழைய பள்ளிப் புகைப்படங்கள், எந்த ஆசிரியரை அழைக்கலாம், யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என எல்லாமும் தயார் நிலையில் இருந்தது.

வாட்சாப்பில் கிட்டத்தட்ட எண்பது பழைய மாணவர்கள் சேர்ந்திருப்பின், ஒன்றுகூடல் நிகழ்விற்கு  முப்பத்தெட்டு பேர் மட்டும் தங்களின் வருகையை உறுதி செய்து முன்பதிவு செய்திருந்தார்கள். நான் குழுவில் இருந்து நீங்கும் முன்பு முன்பதிவு செய்திருந்த வருகையாளர்களின் பட்டியலைப் பார்த்தேன்.

`பரமேஸ்வரி கிருஷ்ணதாஸ்’ பெயர் இருந்தது.

மனம் படபடத்தது. என் முடிவை மாற்றிக்கொண்டு வருகையாளர்களில் பெயரைப் பதிந்தேன். அதை நூறு முறைக்கு மேல் பார்த்துக்கொண்டேன். பின்னர் கைப்பேசியில் நான் தட்டி விட்ட சுடிர்மான் பாடலை ரம்மியமாக ஒலிக்க விட்டேன்.

`Marilah, marilah.. Pujaan hatiku marilah, kasih sayang kucurahkan semua.. ’


பல ஆண்டுகளாக வெகுசன இலக்கியச் சூழலில் இயங்கி வந்த ஶ்ரீவிஜி, வல்லினம் பரிச்சயம் வழி தீவிர இலக்கிய வாசிப்பில் கவனத்தைச் செலுத்தினார்.  அதன் வழியாக எது நல்ல இலக்கியம் என்பது குறித்த புரிதலை வளர்த்துக்கொண்டார். தரமான இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கியப்பின் எழுதுவதை நிறுத்திவிட்ட ஶ்ரீவிஜியின் இரண்டாவது வருகையாக இச்சிறுகதை அமைகிறது. இலக்கியப் பயணத்தில் நல்ல எழுத்து எது என்கிற புரிதல் வந்த பிறகு உதித்த இந்தச் சிறுகதை தான் எனது முதல் சிறுகதை என அவர் அறிவிப்பதில் மகிழ்கிறார்.

மின்னஞ்சல் : https://www.facebook.com/srivijivijaya

4 comments for “பூஜாஅன் ஹாத்திக்கு

  1. Jayaraman
    September 1, 2021 at 9:44 am

    Sri viji Vijaya …. I already told you… உங்கள் எழுத்து நடை நன்றாய் உள்ளது…. மேன் மேலும் இது போல் அருமையான கதைகளை எழுதுங்கள் வாழ்த்துகள். JRB

  2. September 1, 2021 at 11:02 pm

    கதை சம்பவத்தை விவரிப்பதுபோல நகர்ந்தாலும் பெண்ணுடல் சார்ந்த சிக்கலை தெளிவாகப் பேசிச் செல்கிறது. பெண்ணுடல் சார்ந்த பிரச்னையை ஒரு பெண் எழுதினால்தான் அதன் நுட்பம் வெளிப்படும் என்ற கருத்து இதுபோன்ற கதைகள் உறுதிபடுத்துகின்றன.அதிலும் பரமேசின் பிரச்னை அபூர்வமானது ஆனால் சொல்லப்பட வேண்டிய ஒன்று.அப்படிச் சொன்னால்தான் பிறவிகளில் ஆண் பெண் இருபாலர் மட்டுமல்ல மூன்றாம் பாலினமும் உண்டு , அவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப் பட வேண்டியவர்கள் அல்ல என்ற பொதுப்புத்திக்குப் போய்ச் சேரும். கதை சாதாரணமாகத் துவங்கினாலும் ஒர் உளவியல் பிரச்னையை புனைவின்வழி சொல்லிச் செல்கிறது. இது பாலியல் கதை, கொச்சை சொற்கள் என்று வகைப்படுத்தினால் கதையின் உண்மைப் பொருளை வாசகர்கள் புரிந்துணர மாட்டார்கள்.

  3. Guru moorthi
    September 5, 2021 at 2:58 pm

    மிக யதார்த்தமான, ஒளிவு மறைவு இல்லாத சொல்லாடல்கள்…அந்த கம்பத்துக்கே சென்று, அதன் மணத்தையும் நுகர்ந்த உணர்வு…நல்லா எழுதுறீங்க சகோ…தொடர்ந்து எழுதுங்க..

  4. Selvakumar
    October 9, 2021 at 6:23 pm

    நன்றாக எழுதுகிறீர்கள் சகோதரி. வாழ்த்துகள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...