உயிர்மரம்

1

பூத்த மலர் சொரியும் பூவனத்தில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். எல்லாம் குழந்தைகளும் சிறார் சிறுமிகளும். சிதறும் நெல்மணி கொத்தும் பறவைகள் என ஓசை. அங்கு அவர்கள் யாருக்கும் பெயரில்லை, பெயர் வைக்கும் வழக்கமும் அப்பொழுதில்லை. பெரிய உடல் கொண்டிருந்தவர்கள், விளையாடும் அக்குழந்தைகளை குட்டித் திரளாகவே பார்த்தனர். மக்கள் தங்களையும் திரளாகவே உணர்ந்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரும் அனிச்சையாக அருகிலும் பின்னும் பார்த்துத் தாங்கள் என்று உணர்ந்தபடி இருந்தனர். அங்கு தனியர்கள் என எவருமில்லை.

விளையாடுமிடம் சுற்றிலும் மரங்களால் சூழப்பட்டு, புல்லும் பூப்புதர்களும் மட்டும் மண்டிய வட்ட வெளியாக இருந்தது. நூறு பெருமரத் தொகை நிற்கும் அளவிற்கிருந்தது, குடில்களுக்கு முன் இருந்த அக் குலமுற்ற வெளி. மாலையின் சூரியப் பொன்னொளி மரங்களைக் கிழித்துக் கதிர்பாய்ச்ச, அது தரும் ஒளியையும் நிழலையும் முகத்திலும் உடலிலும் மாற்றி மாற்றி வாங்கியபடி குழந்தைகள் ஓடியாடினர். மரங்கள் அற்றதாக இருந்தாலும் முற்ற வெளி பல வண்ணப் பூச்செடிகள் மண்டியதாகயிருந்தது. அம்மக்கள் பூக்களை அகற்றகூடா வழக்கம் கொண்டிருந்தனர்.

சிறுவர்கள் விளையாடிய விளையாட்டு ஒருவரையொருவர் அடிப்பதும் பிடித்துத் தள்ளிக்கொள்வதும்தான். தனித்த இருவர்களும், அதேபோல் இரு கூட்டங்களாகவும் பிரித்தாடினர். முழுபலத்தாலும் தாக்கும் வெறியுடன் அடித்தாடவில்லை என்றாலும் அந்த அடிகள் வலி தருவதாகவேயிருந்தது. வலிதாளாதச் சில சிறுவர்கள் ஒதுங்கிப்போய் ஓய்வெடுத்துப் பின் மீண்டும் வந்தனர். தனித்து அடித்துக்கொள்ளும் இருவர்கள் அணுக்கமானவர்கள் என்று தெரிந்தது. மேலும் அடித்தாடி ஓய்ந்து சலித்த இருவர்கள் அணியென சேர்ந்து மறுவரை தாக்கியாடினர். அங்கு விளையாடிய அனைவருமே தடுக்கித்தடுக்கி விழுந்தனர். அப்படி விழுவதற்கு அவர்களே மகிழ்குரல் எழுப்பினர். தடுக்கி விழுந்தவர்களைக் கேலிப்பதாய்ப் பிறர் ஓடிப்போய் அவர்களை தாக்கினர். அதிலிருந்து அடுத்த அடித்தாடல் ஒன்று துவங்கியது. ஆட்டதில் புண்பட்டுப் பயந்தோடிய சிலர் ஓடி சென்று நின்ற இடத்தில் புதுவர் ஒருவரோடு அடித்தாடத்துவக்கினர். அம்மக்களுக்கு முந்தைய கணத்தின் நினைவே மிக சில தூரம் தான் நீடித்தது.

குழந்தைகள் என்றில்லை அங்கு பெரியவர்களின் நடையில்கூட அந்தத் தடுக்கல் இருந்தது. சற்றே உடல் கூனியிருந்த அம்மக்கள் கையிரண்டிலும் சமமான விசுரலின்றி இரு கால்களையும் ஒரே சமயம் எடுத்து வைத்து விடுவது போல் சிறு குதியுடன் நடந்தனர். நிலம் தொடும் தங்கள் காலடிகளைப் பார்த்தபடிதான் அவர்களால் நடக்க முடிந்தது. வேட்டை சென்ற ஆண்கள் திரும்பும் அச்சமயம், அவ்வெளிக்குள் பெண்கள் சிலர் நின்றிருக்க சிலர் கால்விரித்தமர்ந்து கைமகவுக்கு முலை கொடுத்திருந்தனர். விளையாடும் குழந்தைகள் நோக்கிப், பறவைக்கென அவர்கள் ஓசை எழுப்ப, தொலைவில் காவலுக்கு விட்டுச் செல்லப்பட்ட ஆண்கள் குடி வாயில்களில் கூட்டாகக் கோலேந்தி அமர்ந்திருந்தனர்.

அங்கு குழந்தைகளுக்குக் குறிப்பிட்டுத் தாய் தந்தை என்று எவருமில்லை. குல முதல்வர் ஒருவரே இருந்தார். குடும்பம் என்ற அமைப்பில்லை. ஏனென்றால் அங்கு வாழ்க்கை என்பது நிரந்தரமில்லை. குல மூத்தான் நிலையும் இயல்பென ஒருவர் அமைய அனைவரும் அதை உணர்வென ஏற்றனர். இணையானவர்களுக்குள் தருணங்களில் மூளும் மூர்க்கத்தாக்குதல்களின் வெற்றி அதை முடிவு செய்தது.

சின்னக் குழந்தைகள் ஆடையாக எதையும் அணிந்திருக்கவில்லை. பெரியவர்களும் சற்று வளர்ந்துவிட்ட சிறார்சிறுமிகளும் மைய உறுப்பை மறைக்கும் தோல் பட்டை ஒன்றை இடை சுற்றி செல்லும் தோல் நார் ஒன்றில் பொருத்தியிருந்தனர். மக்கள் மற்றும் குழந்தைகளின் இடது தோள்பட்டையில் பெயர் எனச் சுட்டும் குறி ஒன்று பொறிக்கப்பட்டிருந்தது. வலது தோள்பட்டையில் எல்லோருக்கும் குலத்தைக் குறிக்கும் ஒற்றை மலர் மொட்டுக் குறி பொறிக்கப்பட்டிருந்தது. இடத்தோளில், பிறந்த ஒவ்வொரு மகவும் தொடர் இருவெயில் இருமழை காலம் கடந்த பின், எந்த உறுப்பு அவர்களில் எடுப்பாகவும் புடைப்பாகவும் இருக்கிறதோ அது அவர்களைச் சுட்டும் தனிக்குறியாக பொறிக்கப்பட்டது.

பல், காது, வயிறு, மையஉறுப்பு போன்ற தனிக் குறிகொண்டவர்கள் அங்கு இருந்தனர். குறி பொறிப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தங்கள் உத்தேசிக்கும் குறியுறுப்பைத் தொட்டுக் காட்டியப் படி இருப்பார்கள். இறுதியில் குல மூத்தானே அதை முடிவு செய்வார். அந்த இடைப்பட்ட காலத்தைக் கடக்காது இறக்கும் குழந்தைகளும் உறுப்பில் குறையுடன் பிறக்கும் குழந்தைகளும் தனிக்குறி குலக்குறி இன்றி, எல்லையில் உள்ள காட்டாறில்  மூத்தானால் விடப்பட்டன. அதைப் பார்க்க முடியாத பறவைகள் கரைமரக் கிளை விட்டுப் பறந்தகன்றன.

பெண் குழந்தைகள் அனைவரும் நடுவே வட்டமாக வெளிவிட்டு, அதை சுற்றிக் கால்விரித்தமர்ந்து விளையாடினார். அவர்களுக்கு நடுவில் அந்த வட்டத்தின் மையத்தில் பல வண்ணங்களில் பூக்கள் குவியலாக நிறைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குள் தேரும் முறை ஒன்றிருந்தது. அதனடிப்படையில் வட்டத்திலிருந்து எழுந்தோடும் சிறுமி தனக்கான வண்ணப்பூவைப் பறித்து வந்து அந்த மையத்தில் கொட்டினாள். ஒருசமயத்தில் ஒருவர் மட்டுமே பூப்பறிக்க ஓடினர். இறுதியில் மையத்தில் யாருடைய மலர் அதிகம் நிறைந்திருக்கிறதோ அவளே வெற்றியாளர். குவித்திருக்கும் பூக்கள் அனைத்தையும் அவள் அள்ளிச் செல்லலாம் என்பது கணக்கு.

சிறுமி ஒருத்தி அவ்வட்டத்திலிருந்து எழுந்து பூப்பறிக்க ஓடினாள். பறித்து முடிந்ததும் அவள் உள்ளங்கை நிறைந்த மலர்களை வணங்குவதுபோல் நெரித்தபடி திரும்பி பெண்கள் திசை நோக்கி அல்லாமல் ஆண்கள் திசை நோக்கி ஓடி வந்தாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த முதல் மீசை அரும்பிய இளைஞன் ஒருவனின் முன் வந்து நின்று, செவ்வரியோடி நீர் தேங்கி நின்ற தன் கண்களால் அவன் கண் நோக்கிப் பார்த்த அவள், தன் இடக்கால் நுனியழுத்தி மேல் தூக்கிப் பின்னங்கால் மணிகட்டை அவனிடம் காட்டினாள். அங்கு ரத்த துளியிருந்தது. அவன் அனைத்தையும் உணர்ந்த கணம் தலைதூக்கி அவள் கைக்கொண்ட மலர்ப் புதர் நோக்கினான். அம்மலர் புதருக்கு சற்று முன், நேற்று பெயர்க் குறி பெற்ற சிறு குழந்தை ஒன்று தன் சிறுநீர் நனைத்த மண்ணை எடுத்து அதைக் கை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது. அதை நெருங்கியபடி, நெளிந்து கடந்து மறுமலர் புதருக்குள் சென்றது அவளைத் தீண்டிய கருநாகம்.

அவள் அவனிடம் வந்து நின்று தன் காலை காட்டிய கணமே சுற்றியிருந்த மக்கள் அதைச் சித்தத்தால் உணர்ந்து அடுத்த கணம் நாகத்தை பார்த்தும் விட்டனர். ஒற்றைப் பெருங்குரலில் அந்நாகம் சுட்டி “உ” “உ” “உ” என்று அலறினர்.

அதற்கு மத்தியில் அந்தச் சிறுமி ஓடி மலர் குவியலில் தன் கனகாம்பரப் பூக்களை கொட்டினாள். ஆட்டத்தில் அவள் மலர்களே வென்றன.

2

கதைக்காகக், கைக்குறி அடிப்படையில் இடத்தோளில் கண்கள் பொறிக்கப்பட்டு நாகம் தீண்டி இறந்த சிறுமி கன்னி. அவள் போய் நின்ற இளைஞன் மூக்குக் குறி கொண்ட மூக்கன். நாகம் நெருங்கி சென்ற சிறு குழந்தை துடை குறி கொண்ட துடையன்.

கன்னியின் இறப்புச் சடங்குக்கு மக்கள் ஒருக்கம் செய்து கொண்டிருந்த போது மூக்கன் பித்தும் வெறியும் கொண்டவனாக உடல் துடிக்க அலறிக் கொண்டிருந்தான். பூக்களை அழிக்கக்கூடாது என்ற முறை மீறி அப்புதர்களை அழிக்க வேல்கோல் எடுத்தோடினான். மூத்தவர்கள் அவனை மரித்து அடித்து திமிரியவனைச் சக்கை என்றாக்கிக் குடிலில் கொண்டுவந்து கிடத்தினர்.

சூரியனுக்கு மழைக்கு மின்னும் ஒளிக்கு அதிரும் இடிக்கு கொல்வனவற்கு காப்பவனுற்க்கு கல்லுறைந்தவர்களுக்கு சடங்குகள் கொண்டிருந்த அம்மக்கள் தங்களுக்கு என்று கொண்டிருந்தது இறப்புச் சடங்கு ஒன்றைத்தான்.

இறப்புச் சடங்கு குடில்கள் சுற்றியிருக்கும் குலகுடியின் நடுவில் நுழையும் வாய் கொண்டிருந்த குகைக்குள் நடக்கும். அவர்கள் நிகழ்விற்கான ஒருக்கம் அனைத்தும் அந்தி இறங்குவதற்குள் முடிந்திருந்தனர். எரியூட்டு சடங்கு முடிந்து குகை வாய் வழி வெளி வரும்பொழுது, இரவு நீங்கி விடிந்திருக்கும் என்ற கணக்கிருந்தது. மேலும் நாளுக்கு இறப்பு ஒரு உடலைக் கடக்கலாம், ஆகையால் அந்தியிலேயே அவர்கள் குகை நுழைவர். ஆண்கள் பந்தம் ஏந்தி உள் சென்று வரும் வரை குகை வாயிலிருந்து சற்று உள்ளே குந்தியிருந்து அவர்கள் வருவதற்காக விடிவதைப் பார்த்துக் காத்திருந்தபார்கள் பெண்கள்.

குலம் குகை வாயிலில் குடியிருந்தது, ஆண்களின் பெரு நிறை ஒன்று சடங்குக்கான பொருட்களை ஏந்திப் பந்த ஒளியுடன் குகை நுழைந்தது. சடங்குக்கான பொருட்கள், மர ஏந்தல்களில் குறிஞ்சி சிணுங்கி தவிர மரம் செடி கொடி புல் என நிலத்தில் பூத்த பறிக்க முடிந்த மலர்கள் அனைத்தும். மற்றும் காய்ந்தகாய் குடுவைகளில் உதிரம். மேலும் ஏந்தல்களில் கடும்பாறைகளில் காய்ந்த சுள்ளிகள். இவை மூன்றும் ஏந்திய ஆண்கள் பந்தத்துடன் குகைக்குள் முன்னால் சென்றபடியிருந்தனர். எரியூட்டும் குகை முடிவில் நீர் சிறு குளம் அளவுக்கே இருந்தது.

குகை வாயில் முன், இடது புறம் நின்றிருந்தது பொன் நிறத்தில் பூ பூக்கும் பெரு மரம். ஆண்கள் அதைச் சுற்றி பந்தம் ஏந்தி நிற்க அதன் மேல் சாய்த்து அமர்த்தப்பட்டிருந்து அசைவு இல்லாமல்லான கன்னியின் உடல். அவள் அருகே காவல் என வேல்கோல் ஏந்தி நின்றான் குல முதல்வன். வெகு நேரம் அப்படி நின்று விட்டுக் குனிந்து தன் இடை நாரில் பொருத்திய கூர்கல்லால் அவளின் மணிகட்டை அறுத்தான். பின் குடிமுதல்வன் தன் மணிகட்டைக் கீறி உதிரத்தை உயிரற்ற உடலின் நெற்றியில் திலகமாய் இட்டு அந்த உடலை தூக்கி தன் வேல் ஏந்திய வலக்கை தோள் மீது வைத்து இடக்கையில் பந்தம் ஏந்தி குகை நுழைந்தான். குலம் குல ஓசை எழுப்பிய படி தொடர்ந்தது.

எரியெழுந்து அடங்கும் வரை ஒவ்வொருவரும் குகைக்குள் இருக்க வேண்டும் என்பது அங்கு மாறா முறை. ஒருவர் மட்டுமே ஒரு சமயம் நுழைய முடியும் குகை வாய் அது. மூத்த ஆள் உடல் சுமந்து பந்தம் ஏந்தி முன்செல்ல, அதைத் தொடர்ந்து ஆண்கள் வேல்கோல் ஏந்தி அதைக் கீழே குத்தி ஓசை எழுப்பிய படி பின் சென்றனர். இடைவெளி விட்டு தலைவிரித்துப் பெண்கள் நிரையென சென்றனர். இச்சமயம் யாரும் குகையன்றி எங்குமிருக்கக் கூடாது என்பதால் குழந்தைகள், பெண்கள் இடையிலும் கைப்பிடியிலும் இருந்தனர். குகை வர மறுத்த மூக்கன் மீண்டும் அடித்து மூர்ச்சையாக்கப்பட்டு இணையனின் தோள்சாய்த்து உடனழைத்துச் செல்லப்பட்டான்.

தோற்று வாயிலிருந்து குகை மேல் செல்லச்செல்ல குடைவென சீராக அகலம் விரிந்தபடி சென்றது. இரையின் குடல் என சரும அடுக்குகளும் வளைனெளிவும் கொண்டு நீண்டிருந்த குகையில் ஆங்காங்கு இடை நிறையும் வரை நீர் தேங்கி இருந்தது. பல் நடுங்கச் செய்யும் குளிர் நீர் பாறை இடுக்குகளூடே கசிந்தபடி இருக்க, சில இடங்களில் உடல் ஒடுக்கி தோள் திருப்பி உட்புக வேண்டியடியிருந்த அளவுக்கே பாதையிருந்தது. நிலம் அதிர காலூன்றி ஓடும் செங்குத்து இறக்கங்களையும் கையூன்றி மேல் நடக்கும் ஏற்றங்களையும் கொண்டதாக இருந்தது அப்பாதை. ஒருவர் தோள் மருவர் பிடித்து சுற்றி மேலேறவேண்டிய மரமேரும் கொடி போன்ற சுழல் பாதைகளும் சில இடங்களிலிருந்தன. மேலும் குகைப்பாதையைப் பகுக்கும் வழவழப்போடு மின்னும் அடர் கருநிற பாறைகள் தூணெனப் பாதை வகுத்து நின்றன. அப்பிரிவிலும் பிரியாது மக்கள் ஒற்றைப் பாதையிலேயே சென்றனர். பந்த ஒளியில் பெருகி எழும் தங்கள் நிழலுக்குள் கால் எடுத்து வைத்து அவர்கள் நடந்தனர்.

அந்த குகையில் இருபுறமும் நீண்டு செல்லும் பெரு உடல் ஒன்று வரையப்பட்டிருந்தது. அந்த உடலுக்குள் புவியில் இப்பெருவெளியில் காண முடிந்ததும் காண முடியாததுமான பலவற்றின் வரையல்கள் இருந்தன. குகைவாயிலின் இடப்புறமிருந்து சென்ற நீள் உடல் குகையிறுதி மையத்தில் நாகத்தின் பத்தியாகி விரிந்து குகையின் மேல் பரப்பில் நா நீட்டி குடை என கவிந்திருந்தது. வலப்புறமிருந்து சென்ற உடல் அப்பாம்பின் பத்திக்குச் சற்று முன் அதன் கழுத்தில் தன் வாலை இணைத்துக் கொண்டது. அது ஒற்றை நாகத்தின் உடல். அந்த பெரு ஓவியத்துக்குள் மீதி ** அனைத்தும் வரையப்பட்டிருந்தது. அந்த நாகவுடல் குகைக்குள் முடிந்துவிடவில்லை, குகை வாயில் இருபுறமும் அது வெளிநோக்கி நீட்டி விடப் பட்டிருந்தது. வரைந்து முடியாத ஓவியம் போல். பாதி உடல் இருளாகவும் மீதி உடல் ஒளியாகவும். பாதி இருப்பாகவும் மீதி இன்மையாகவும். பாதி உடல் குகைகுள்ளும் மீதி வெளிக்குள்ளும். அந்த உதிர நிற வரையல்களை பந்த ஒளியில் செல்லும் அம்மக்கள் எப்பொழுதும் கண் கொடுத்து பார்ப்பதில்லையானாலும் அவர்கள் கனவுகளில் ஓவ்வொன்றையும் நெருங்கி கண்டு அதிர்ந்து எழுந்து ஏன் என்று அறியாது விழித்தனர்.

குகையின் இறுதி மையத்தில் உதிரத்தால் உடல் கழுவி, நீரால் பின் கழுவி, ஏழு ஏந்தல் மலர் தூவி, சுள்ளி கொண்டு எரியெழுப்பப்பட்டாள் கண் குறி கொண்ட கன்னி.

குகை இருளுக்குள்ளிருந்து வெளி வந்தவர்கள் இறங்கிப் பரவி நிற்கும் பேரொளி தாள முடியாது கண்களில் நீர் வடித்தபடி கருவறையிலிருந்து வெளிவந்த புதுமகவென வீரிட்டு அழுதபடி இருளிலிருந்து ஒளிக்குள் வந்தனர். குல மூத்தானின் கையிலிருந்த பந்த ஒளி பெரு ஒளி நுழைகையில் அதில் கலந்து ஒன்றென்றாகியது. கொள்ளியிட்ட அவ்வொற்றைப் பந்தத்தை தனியெனச் சென்று எல்லையிலிருந்த சிற்றாற்றில் விட்டார் மூத்தான். அதன் பின் அவர்கள் சடங்கில் ரத்தத்துகாகப் பலியிட்ட விலங்கு ஊன்களைச் சுட்டு உண்டனர். அம்மக்கள் அடுத்த இறப்புக்காகக் குகை நுழையும் போது அங்கு மிஞ்சியிருக்கும் உடல் எச்சங்களை ஏந்தலில் எடுத்து வந்து அதையும் ஆற்றில் விடவேண்டும்.

கன்னியின் இறப்புச் சடங்கின் ஒட்டு மொத்தத்திலும் மூக்கன் விழித்தபோதெல்லாம் துள்ளிக் குதித்தான், உயிர் திரட்டி அடிவயிற்றிலிருந்து அம்மக்கள் கேட்டிராத ஒலிகளில் ஓங்காரமிட்டான். இதுபோல், இறப்பொன்றுக்கு யாரும் வெகுண்டெழ அத்திரள் கண்டதில்லை என்பதால், தீயது என அவனை அடித்து மூர்ச்சையாக்கி உடனழைத்துச் சென்றபடியிருந்தனர். ஆனால் கன்னி இறந்து மூன்றாவது நாள் அவன் அவ்வூரிலிருந்து இல்லாமல் ஆனான், எல்லைக்குள்ளிருந்து காணாமல் போனான். அதுவும் திரள் முன்பார்க்காத ஒன்று.

3

அச்சமும் மூர்க்கமும் தன் ஒற்றை இயல்பெனக் கொண்டிருந்தது அக்குலம். இடிக்கு ஒற்றைத் திரளென அஞ்சி நடுங்கி வான் நோக்கி ஒற்றைப் பெருங்குரல் எழுப்பியது. அஞ்சும் முகம் பார்க்கும் ஒருவர் தான் மேலும் அஞ்சினார். அது எழுப்பும் ஒலியைவிட தான் இன்னும் பெரும் ஒலி எழுப்பினார். புயல் நடுங்கும் மரங்களாக அவர்கள் தொகுப்பாக அஞ்சி நடுங்கி அலைக்கழிந்தனர். அச்சத்தின் உச்சியில் மூர்க்க வெறி கொண்டு உதிரம் வரும்படி தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர். அதை குல மூத்தான் தாக்கித் தடுத்தார். குலமூத்தானின் முதன்மை வேலையே திரளுக்குள் மூளும் சண்டைகளை அடித்து இல்லாமல் ஆக்குவதுதான். கட்டற்று உருண்டோடும் காய் என தங்கள் கட்டுப்பாடிழந்து அப்பேரிருள் நோக்கி அடித்துச் செல்லப்பட்டனர் பித்தான திரள்பிரிந்த சில தனியர்கள். இரவு நோக்கியோடும் அத்தனியர்கள் மக்களால் அடித்து மூர்ச்சையாக்கப்பட்டனர்.

கிழப்பருவம் கண்ட ஒருவரும் அந்நிலத்திலில்லை. விலங்குகளில் மரம் வாழும் குரங்குகள் மட்டும் அந்நிலை அடைந்திருந்தன. இறப்பு கணம் கணம் நிகழும் நிலம் அது. உடலிருந்து உயிர் பிரிந்தபடியிருக்கும் பெருவெளி. அம்மக்கள் உலகைக், கொல்வது கொல்லாதது என்று பிரித்திருந்தனர். அவர்களுக்குப் புரிந்த வாழ்வு அது ஒன்றே. அங்கிருந்த பிரிவினையும் அது ஒன்றே. கொல்லுவது கொல்லாதது. உண்மையில் கொல்லாதது என்று அங்கு எதுவுமேயில்லை. சில பூக்கள் கொன்றன, சில கனி காய்கள் கொன்றன. காற்று கொன்றது. உரு தெரியாதவை நோயாக வந்து கொன்றது. உணவின்மை என்னும் இருப்பின்மை கொன்றது. குல எல்லை தாண்டி காட்டில் நடக்கும் வேட்டையில் குல ஒலியெழுப்பா அன்னியர்கள் மனிதர்களாலேயே கொல்லப்பட்டனர். எலிகளைப் பூனைகள், புல்லை மான்கள், புலிகள் அனைத்தையும். புழுவைக் கொன்றன அனைத்தும், அனைத்தையும் கொன்றது நாகம். கொம்பு கொண்ட பெரு வேழம் முதல் கொடுக்கு கொண்ட சிறு தேள் வரை. நஞ்சாகும் சிறு இலை முதல் நீராகும் மழைப்பெரு வெள்ளம் வரை அனைத்தும் அம்மக்களைக் கொன்றன. சில ஈக்கள் கொன்றன. குடிலில் உடன் வாழும் பல்லி கொன்றது. நாற் திசைகளிலும் நரிகள் இருந்தன. காப்பது, கொல்லாதது என்று ஒன்றையும் அவர்கள் கண்கள் அவ்வெளியில் காணவில்லை. சூரியனும் நிலவும் அந்தக் கொலைவெளிக்குச் சாட்சியாக இருந்தன. அவையும் கொலை செய்தன. அங்கு மனிதர்கள் கொல்வதில் கனிந்திருக்கும் மறுபகுதி நோக்கிக் கையெடுத்துக் குவித்தனர் அல்லது கனிந்ததின் மறுபகுதியான கொல்வது நோக்கி. அந்த மக்களிடம் இருந்த அர்த்தம் கொண்ட சொல் இரண்டே அது “அ” மற்றும் “உ”. அ அன்னத்தையும் உ கொல்வதையும் சுட்டியது. அவும் உவும் அப்பெருவெளியைச் சுட்டியது.

மூக்கன் கொல்வதையெல்லாம் கொல்லவே ஊர் விட்டுப் பிரிந்திருந்தான். இல்லாமல் ஆக்குவதை எல்லாம் இல்லாமல் ஆக்க. அதன் வழியாக அழிவின்மை அடைய. முதல் மீசையில் ஊர் நீங்கியவன் முகத்தில் அடர்மயிராவது வரை கொல்வதையெல்லாம் கொன்றபடி இருந்தான். கொல்வதோ பசுமையும் நீலமும் இருளையும் போல் முடிவற்றது என்பதால் வெகு தூரம் செல்லாதவனாய் அவன் ஓரிடத்திலே சுற்றி வந்தான். அவன் கொல்லாத உடல் கொண்ட வடிவம் ஒன்றுமில்லை என்றானது. உதிரமும் உடலில் ஒட்டிக் காய்ந்த சதை துணுக்குகளுடன், அவன் மரக்கிளைகளில் இரவுகளில் அலறியபடியிருந்தான். கொன்று முடியாது என்று அவன் சித்தம் உணரவே இல்லை. பெரு அலை எதிர்த்து நீந்தி முன்னேறுபவன் போல் அவன் ஒற்றை இடத்தில் கிடந்தான். காடு மின்னி அதிரும் மழை நாள் ஒன்றில் அவன் உடல் புடைக்க எழுப்பிய ஓசை மேல் எழவில்லை அவன் செவிக்கே அது செல்லவில்லை.

மூக்கன் மலையளவுக்கு பாம்பு நெளியும் புற்றைக் கண்டபோது, கொல்வதன் முடிவின்மையைக் கண்டு திரும்பி எதிர் திசையோடி உச்சவிசையில் பெரும்பாறை ஒன்றில் தலைமுட்டி உதிரம் வழிய நிலம் விழுந்தான். தன்னை உணராது நெடு நேரம் கிடந்த அவன், தன் உடலுக்குள் கிழே அடியாழம் வரை சென்றபடியிருந்தான், பாதாள இருளின் இறுதி நுனியில் தன்னை இருளென்று உணர்ந்து உடலைப் பிரிதொன்றாகப் பார்த்தான். பின் தன் உடல் கடந்து உச்சிபோய் தான் ஒளியென்றாகி உடலை வெறோன்றாக பார்த்தான். உடல்விட்டு உதிரும் கணம் அழைப்பெனத் தன்னைக் கலைத்த ஒன்றால் உடல் வந்து, கண்வழி விழித்தான். மூக்கன் கண்விழித்தபோது மரக்கிளை குரங்கொன்று எரிந்த கருநீல சிறு பழம் அவன் முகம் வந்து அறைந்தது.

அப்பழம் எடுத்து உண்ட படி நடக்க துவங்கிய மூக்கன் எதிர்ப்பட்ட குகையொன்றில், ஓசையின்றி ஒளியின்றி காட்டில் அவன் கால் மிதித்து வளைந்த செடி மரமாகும் காலம் வரை வாழ்ந்தான். அதன் பின் நிலம் சென்று வழி முட்டி நிற்கும் எல்லை வரை நடந்தான். மரங்களே அற்று ஒளி இறங்கியிருக்கும் வெறும் வெளிகளை நடந்து கடந்தான். கரையமர்ந்து விலங்கு பார்த்து நீந்தக் கற்றான். அலையடிக்கும் பெரு நீர் வெளியில் நெடுந்தூரம் நீந்திப் பார்த்து அது கடக்கமுடியாது என்று கண்டுகொண்டான். வெண்பனிமூடி மலைதொடர் ஏறி உச்சிச் சிவப்பைப் பார்த்தவன் அதையும் கடக்கமுடியாது என்று கண்டு கொண்டான். ஆனால் ஒவ்வொரு முறையும் அகம் உடைத்து உண்மை அவனை வேறொன்றாக்கியதால் கடல் முன்னும் மலை முன்னும் வான் பார்க்கும் மரமென அமர்ந்திருந்தான். நீரிலிருந்தும் பனியிலிருந்தும் பறந்து வரும் பறவைகளைக் கொண்டு அவன் அறிந்து கொண்டான் அப்பாலிருக்கும் நிலத்தை. நடந்து கடந்தபடியிருக்கும் பொழுது மூக்கன் பார்த்தபடியிருந்தான் குலம்குலமாக மனித திரள்களை.

தன்னையறிந்து நிலவாழ்வையும் பெருவெளியையும் அறிந்த மூக்கன் இரண்டு குறிஞ்சிகளுக்குப் பிறகு முதலில் தான் கடந்த காட்டாற்றின் கரையில் நின்று தன் ஊரைப் பார்த்தான்.

4

துடையனுக்கு முதல் மீசை அரும்புகையில் அவன் குலமுதல்வன் ஆக வேண்டிய நிலை உருவாகியிருந்தது. தொடர்ந்து மூன்று நீள்வெயில் நீள்மழை நீடித்தன, உடற்துளைகள் அனைத்திலும் உதிரம் போகும் பெருநோய் ஒன்றில் அத்திரளில் உயிர்கள் ஆற்றிலிருந்து அள்ள முடிந்த மீன்கள் என எஞ்சியிருந்தன. ஒரு நாளுக்குப் பல உடல்கள் குகை மையத்தில் திரள் என தீயில் எரியூட்டப்பட்டன. ஆற்றுக்கும் குகைக்கும் பந்தம் ஏந்தி நடப்பதே அப்பொழுது ஒரே வேலையாக இருந்தது துடையனுக்கு. நோய் முடிந்தபின், ஊர் எல்லையில் மொத்தத்துக்குமான ஒற்றைப் பெருங்கல் நாட்டப்பட்டு, அதன் முன் பறித்த ஆழ் குழியில் குகை நிறைந்து கிடந்த எஞ்சிய மொத்த எலும்புகள், ஒன்றாகத் தலை உடல் கை கால் என அடுக்கி அதன் மேல் உதிரம் ஊற்றிப் புதைக்கப்பட்டது. அடுத்து ஒரு ஆண்டு மலர் பூக்கும் வரை அக்கல்லுக்குத் தினம் உதிரம் உணவாகக் கொடுக்கப்பட்டது.

நோய்க் காலத்தில் ஒருபுறம் உயிர்கள் செத்து மடிய மறுபுறம் குழந்தைகள் பிறந்தபடியே இருந்தமையால் அக்குலத்தில் சிறு குழந்தைகளே பெரும் பகுதி இருந்தனர். துடையனே அங்கு ஆண்களில் மூத்தவனும் வலுகொண்டவனுமாக இருந்தான். முதல்வனாகிவிட்ட வெகு பகல்களும் இரவுகளும் கடந்த பின்தான், அவன் தான் குடிமுதல்வன் என்பதையே உணர்ந்தான். வேட்டைக்குப் போய் பழகும் முன்னரே வெறும் சில சிறுவர் துணையுடன் பெருஉணவு வேட்டையாட வேண்டிய நிலையில் இருந்தது குலம்.

அன்று கரு நாகம் நெருங்கிக் கடந்து சென்ற போது அதைநோக்கிப் பிடிக்கத் தன் பிஞ்சுக் கைகள் நீட்டிய சிறு மகவாகயிருந்த தோளில் துடைக்குறி பெற்ற துடையன், வளர்ந்ததும் இயல்பிலேயே வீரமூம் அச்சமின்மையும் தீரா ஆற்றலும் கொண்டிருந்தவனாக இருந்தான். துடையன் மிக விரைவாக நோயில் அழிந்திருந்த அக்குலத்தைக் கட்டி எழுப்பி விட்டான். அடுத்த குறுஞ்சியில் அக்குலம் ஊர் முற்றம் சுற்றி குடில்களால் நிறைந்திருந்தது. உடல் பெருத்த அம்மக்கள் நிலமதிர நடந்தனர். இறப்புக்காகக் குகை செல்லும் வழக்கம் இருந்து கொண்டுதான் இருந்தாலும், ஒரு முழு நிலவுக்குக் குறைந்தது ஒரு குழந்தைக்காவது துடையனால் பெயர் குறி இடும்படி நிலைமையிருந்தது. அப்பெருநோயில் கொத்தாக இல்லாமலானவர்களைக் குடிமுதல்வனாக எரியூட்டிய அவன், தான் பெயர் குறியிடவேண்டிய நாளில் ஒரு துள்ளலுடனிருந்தான். ஆனால் குடிமுதல்வனாக அவன் தான் செய்ய வேண்டிய ஒரு செயலை வழக்கம் மீறி மறுத்துவிட்டான். பெயர்க் குறி இடுவதற்கான காலத்தைக் கடக்கமுடியாது இறக்கும் குழந்தைகளையும் உடல்குறையோடு பிறந்த குழந்தைகளையும் முதல்வனாக அவன் சென்று பெருக்கெடுத்தோடும் எல்லை ஆற்றில் விடாமல் வேறு யாராவது விட்டனர். அப்பொழுது அவன் ஊர் ஒதுங்கித் தொலைவில் நின்று அதைப் பார்ப்பான்.

அன்று ஊரில் பிறந்த போதே இறந்து பிறந்திருந்தது ஒரு சிறு மகவு. துடையனிடம் சிலர் சென்று அதை உடலால் ஓசையால் அவனுக்கு உணர்த்தியபோது விலங்கென உறுமி அவர்களுக்குக் கோல் எடுத்துக் காட்டி அகற்றினான். ஆண்கள் நிரை தொடர வேட்டை வரிசையில் அவனுக்கு அடுத்து நிற்கும் பல் குறி கொண்ட ஆண் அக்குழந்தையை ஏந்தி ஆறு நோக்கிச் சென்றான். தொலைவில் ஒரு மர நிழலில் அதைப் பார்த்தபடி நின்றிருந்தான் துடையன். சுழித்தோடும் காட்டாற்றில் இடுப்பளவு சென்று அவர்கள் அக்குழந்தையைக் கைவிட்ட கணம், எதிர்க்கரையிலிருந்து எங்கிருந்தென தெரியாத உருவமொன்று நீருக்குள் பாய்ந்தது. அவர்கள் உ உ என அலறி கரையேறுவதற்குள், அதைப் பார்த்திருந்த துடையன் வேட்டையில் மட்டும் குடியேறும் மரங்களைக் கிழித்துச் செல்லும் ஓட்டத்தின் வேகத்தில் மிருகமென வந்து புலன்கள் விழித்து நின்றான்.

அவர்கள் நின்ற கரை அருகே நீருக்குள்ளிருந்து அவ்வுருவம் மீன்னெனத் துள்ளியெழுந்த கணம் அது மூக்கன் என்பதை துடையன் உணர்ந்து உளம்நடுங்கி உடல் அதிர நின்றிருந்தான். ஓற்றை நிகழ்வென நீர்விட்டுக் கரைபாய்ந்து, பின்னல் கைவிரித்து தலைமுறுக்கி எருதென தன் நெஞ்சு நோக்கி ஒரே முட்டில் வீழ்த்தி முடிக்க வந்த மூக்கனிடம், நிலம் தொட உடல் படுத்து தன்னை இரையென ஒப்புக்கொடுத்தான் துடையன். சுற்றியிருந்த ஆண்கள் நீரெழுந்த அவ்வுருவம் நோக்கித் தங்கள் ஆயுதங்களை இறுக்கும் முன்பே இவையனைத்தும் நடந்து முடிந்திருந்தது. அவர்களும் நிலம் பணிந்து மூக்கனுக்கு இரை என்றாகிக் கொண்டனர்.

ஆண்கள் பின்வர மிருக உறுமலில் குல ஓசை எழுப்பியபடி ஊர் முற்றம் நுழைந்த மூக்கனைக் குலமே சூழ நின்று பார்த்தது. பார்த்த கணமே அத்திரள் அது மூக்கன் என்று உணர்ந்து கொண்டது. குலமே குல ஓசையெழுப்ப குல முதல்வனாக மூக்கன் இரண்டு குறிஞ்சிகளுக்கு பின் ஊருக்குள் உள் நுழைந்தான்.

5

மூக்கன் கை நீட்டி உறுமி துடையனை வேல்கோல் எறியச் செய்தான். அக்கோல் கொண்டு ஊர் மையவெளியிலிருந்த அக்கனகாம்பரப் பூப்புதரை முற்றழித்தான். முன்னடி எடுத்துவைக்காது அக்குலமே கூக்குரலிட்டது. பெண்கள் ஒருவரரோடொருவர் ஒட்டி உடல் குறுக்கிக் கொண்டனர். துடையன் பல்கிட்டித்து நடுங்கினான். வான் நோக்கி அலறிய மூக்கன் கோலால் ஆண்களைத் தாக்கி நெஞ்சுதைத்து வீழ்த்தினான். உதைக்கும் முறையே இல்லாத அம்மக்கள், நிலைத்து அடியெடுத்து நிலமதிர நடக்கும் அவனை இருள் என அஞ்சினர். அடிபடா ஆண்கள் அலறியோடினர். குழந்தைகள் குடில்களுக்குள் ஓடித் தாய் வயிறு என அங்கு அடரிருள் தேடி அதில் தங்களை ஒடுக்கிக் கொண்டனர். பெண்கள் நடுங்கிக் கைகளை ஒன்றோடொன்று பற்றி உடலொடுங்கி தரை வீழ்ந்தனர். மூக்கன் தலையோடு விட்ட புலியறை ஒன்றில் துடையன் மூர்ச்சையாகி விழுந்தான். மனிதர் நிமிர்ந்து நிற்காது தரையொட்டிக் கிடந்த அவ்வெளியை நடந்து கடந்த துடையன் குடிமையத்திலிருந்த குகைக்குள் நுழைந்தான்.

அறியா நிலம் சென்று வந்த மூக்கனை இருள் சென்று வந்தவனாகவே மக்கள் பார்த்தனர். அவனும் புடை வேர்கள் என நரம்புகள் புடைத்து இறுகியதிரும் தசைகள் கொண்டவனாய்க் கருநிற மர வைரம் என்றிருந்தான். பந்த ஒளியின்றி குகைக்குள் சென்று அங்கேயே தங்கிவிட்டிருந்த துடையன் சில தினங்களுக்கு ஒருமுறை உணவுக்காக வெளி வந்தான். காட்டுக்குள் சென்று மர ஏந்தல் நிறைய கனிகள் கொண்டு வந்து ஊர் முற்றத்திலமர்ந்து உண்டான். அப்பொழுது அங்கு அம்மக்கள் உணவுக்காக எரிக்கும் ஊனை நீர் ஊற்றி அணைத்து விட்டுக் குகை மீண்டான். வெளி வந்து குகை உள் செல்லும் நாளில் பெண் ஒருத்தியை உடனழைத்து சென்று புணர்ந்தனுப்பினான். குடில் வந்து கிடக்கும் அப்பெண்கள் உடல் மீண்டெழ சில பகலிரவுகள் எடுத்து கொண்டனர். இரு முழு நிலவுக் காலம் குகைக்குள் இருள் என இருக்கும் அவன் செய்யும் ஒரே நடவடிக்கை அது இரண்டும் மட்டுமாகவே இருந்ததனால் அம்மக்கள் அவனை மறந்து விட்டு பழைய இயல்பு மீண்டனர். குழந்தைகள் விளையாடத் துவங்கியதைப் பெண்களால் தடுக்கமுடியவில்லை. துடையனின் தலைமையில் காட்டில் வேட்டை நடந்தது. ஆனால் அம்மக்கள் ஒவ்வொருவருக்கும் அடியாழத்தில் இருளில் ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வு வந்துவிட்டிருந்தது.

மூக்கன் வந்ததிலிருந்து இரண்டாவது முழு நிலவில் அசைவற்ற உடலொன்றுக்கான இறப்புச் சடங்குக்கு ஒருக்கம் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது குகைக்குள்ளிருந்து வெளிவந்த மூக்கன், குகை முற்ற மரத்தில் சாய்த்திருந்த அவ்வுடலை இரையென இழுத்துக் கொண்டுபோய் ஊர் மையத்தில் உடலை வெறும் தரையில் கிடத்தி ஒற்றைச் சடங்கின்றி ஊன் எண்ணெயூற்றி அதை எரித்தான். மாரறைந்து குடிலுக்குள் ஓடிய பெண்களை அடித்துக் குழல் பற்றியிழுத்து அவ்வெரி முன் அமர்த்தினான். பெருங்குரல் ஓங்காரமிட்டபடி இருந்த அவர்களை அவ்வெரி, உணவெரிக்கும் தீ என தன்னைக் காட்டி மௌனமாக்கி, மீண்டும் உடல் எரிக்கும் தீயாகி அரண்டலரச் செய்தது.

தாளமுடியாத் துடையன் வெறியொலி எழுப்பி விலங்கென மூக்கனை முட்ட பாய்ந்தான். கால் மடக்கி மூக்கன் முன் குனிந்து நின்று முட்ட வந்த தலையை நெஞ்சு நெருங்க அனுமதித்து, முட்டிவிட்டோம் என்று நினைக்கும் கணம், அவன் இரு புஜங்களையும் இருகைகளால் பற்றித் தூக்கிச் சுழற்றி காற்றில் பறக்க விட்டான். துடையன் எங்கோ இருளுக்குள் போய் விழந்தான். மூக்கன் எரி முன் கையசைத்துக் காலசைத்து குதிக்க, ஓசை எழுப்பாது எங்கோ கிடந்த துடையனை ஆண் திரள் பந்தம் எடுத்து ஓடித் தேடியது. குழந்தைகளைத் துடையன் அழைக்கவோ விரட்டவோ இல்லை ஆனால் சற்று நேரத்தில் அவர்களே வந்து அதைப் பார்த்து நின்றனர். அவர்கள் கண்களிலிருந்த சலனமின்மை கண்டு மேலும் களி வெறி கொண்டவனாகக் குதித்தாடினான் மூக்கன்.

அந்த இரவில் எரி சுற்றி அக்குலம் துயின்றுவிட மூக்கன் முழித்திருந்து தீயெரிக்கும் அவ்வுடலில் ஊன் எண்ணெய் ஊற்றி எரித்து முடித்தான். முதல் கதிர் எழுந்து மக்கள் விழித்தபோது, எஞ்சிய சாம்பல் மேல் நின்று மூக்கன் கைகால் அசைத்துக் குதித்து ஒற்றை எழுத்து ஓசையெழுப்பிக் காற்றில் உரு வரைந்து அத்திரள் நோக்கிப் பேசினான். இல்லாத ஒன்றை பார்க்கும் கண்களில் அம்மக்கள் அதைப் பார்த்தனர். மீரண்ட விழிகளால் பார்க்கும் அவர்களை எட்டியுதைத்து, உடலால், ஒற்றை எழுத்துச் சொல்லோசைகளால், காற்றில் வரையும் உருக்களால், மூக்கன் சொல்லிய ஒன்றையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தான். கிளைபிரித்த மரமென்றாகிப் பின் பெரு வேழம் என்றானான். அம்மரத்தை முட்டி வீழ்த்திப் பிளிறினான், பின் புலியென்றாகி அப்பெரு வேழத்தை ஒற்றை அடியில் விழ்தினான், அடுத்து மூக்கன் என்றாகி பின்னால் குலம் இருக்கும் உணர்வுடன் குல ஓசை எழுப்பியபடி வேல்கம்பெறிந்து அப்புலியைய் கொன்றழித்தான், இறுதியில் அந்த எரியிடத்தில் இரவு அவ்வுடல் கிடந்த வாகில் தானும் சற்று நேரம் கிடந்தான்.

துடையன் எழுந்து பாத்தபோது, இன்மை என அதைப் பார்க்கும் கண்களின் உடல்கள் சுற்றிலும் நடுங்கி கொண்டிருந்தது. அவன் சொல்வது இதுதானா என்று, தாங்களும் உடலசைத்து ஒலி எழுப்பி உரு வரைந்து காட்டும் துணிவு அங்கு எவருக்குமில்லை. எதிர் இருக்கும் திரள் பாறையில்லை என்று உணர்ந்தவனாய் மீண்டும் ஒன்றையே நிகழ்த்திக்காட்டினான் மூக்கன். மக்கள் வேர்த்து வடியும் அவன் உடலில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் குறியை மட்டும் விழிதொட்டபடியிருந்தனர்.

கோல்கொண்டு மண்ணில் வரைந்து காட்டினான் மூக்கன். மையத்தில் தன் குலத்தின் மலர் மொட்டுக் குறி வரைந்து, அதை சுற்றி வட்டம் போட்டு அடுத்ததில் இன்னொன்று வரைந்து அதில் வேறு குறி வரைந்தான். குறியும் வட்டமும் என்று பெரிதாகியபடி சென்ற போது, இறுதி வட்டத்திலிருந்து ஒவ்வொரு திசையிளும் கோடு கிழித்து அக்கோட்டை வானம் நோக்கி இழுத்து முடிவெளி என்று உணர்த்த முயன்றான். நிலைத்து அரண்ட விழிகள் எதிர்வினையாக இருந்தன.

தானே உதிரி உதிரியாக உணர்த்த முயல்கிறோமோ என்று சலித்திருந்த மூக்கன், வானில் பறந்து சென்ற பறவை நோக்கி வேல்கோல் எரிந்து வீழ்த்தி, இடைக்கூர்கல் எடுத்து அருகே இருந்த ஆனொருவனைக் கழுத்தறுத்து அத்திரள் முன் இரண்டயும் ஒன்றாகப் போட்டு எரியூட்டிவிட்டு தளர்ந்த நடையில் குகை நுழைந்தான்.

6

நெடுநாள் உணவின்றி குகைக்குள்ளிருந்த மூக்கன் மெலிந்து வற்றிய உடலுடன் வெளிறிய முகத்துடன் வெளிவந்தான். என்ன செய்வதென்றறியாது விழித்தது திரள். துடையன் மட்டும் நெருங்கி குகைவாயில் நின்ற அவனை நோக்கித் தலைதாழ்த்திச் சென்றான். கை நடுங்கி பின் இடுப்பதிர நின்ற துடையனின் தோளில் கைவைத்து தொட்டு மூக்கன் முன் சென்ற போது துடையன் மயிர்க்கூசி மூக்கனைப் பின் தொடர்ந்தான்.

குகைவிட்டு மீண்ட மூக்கன் மிகவும் மாறியிருந்தான். அதன் பின் அவன் அக்குகைக்குள் செல்லவில்லை. அடுத்த அரை குறிஞ்சிக் காலம் ஊர் குடில் ஒன்றிலேயே தனித்து இருந்தான். வெளிவந்த அவன் பெண்களைத் தொடவில்லை. உறவுகளின் போது அம்மக்களுக்கு அவனின் இறுப்பின் நினைவு வந்தது. குலத்தில் அடுத்த இறப்பு வந்த போது உடலைக் குகைக்குள் எடுத்துச் செல்லாமல் ஊரின் காலை வெயில் எல்லையில் நெடுந்தூரத்தில் இருந்த வட்டப் பாறையில் வைத்து எரியூட்டினான். அந்த வட்டப் பாறையைச் சுற்றிலும் மரங்கள் என பெருங்கல் தொகை நின்றது. அனைத்துச் சடங்குகளையும் குல மூத்தானாக மூக்கனே முன்னின்று செய்தான். மக்கள் குடில் விட்டு வரும் அவன் முகத்துக்காக ஏங்கியது தெரிந்தது. கனி உண்ணும் அவனுக்குப் பெண்களே அதைப் பறித்து வந்து வைத்தனர். வீணாகும் கனிகளைக் கொண்டு அவன் விருப்பங்களைக் கூட அவர்கள் அறிந்திருந்தார்கள். மூக்கன் மகவென அவ்வூரைப் பேணத் துவங்கினான். சிறுவரை வேட்டைக்கென அவன் அக்குலத்தை எதற்கோ பழக்கினான்.

மூக்கன் வழக்கம் மீறி அக்குகையிருந்த மலை மேல் சென்று தனிமையில் அமர்ந்திருக்கும் பழக்கம் கொண்டிருந்தான். மேலும் அவன் குழந்தைகைளை உடனழைத்துச் சென்று அவர்களுக்குச் சுற்றியும் காட்டி உடலசைத்துக் குரல் எழுப்பிக் காற்றில் உரு நிகழ்த்தி எதையோ உணர்த்திக் காட்டினான். உச்சியில் மூக்கன் செய்வதைத் துடையன் தரை நின்று பார்த்தான்.

ஊர் மையத்தில் நடக்கமுடியும் சிறு குழந்தை முதல், வேட்டை ஓடா ஆண் வரை அனைவரையும் இருவருவராகப் பிரித்து சண்டை பழக்கி திரள் உணர்வை பிரித்துத் தான் என்பதை உருவாக்க முயன்றான் மூக்கன். ஊர்சுற்றி முட்புதர் நட்டு கோட்டையமைத்தான். மண்ணூர்ந்து வருவதோ விசைகொண்டு பாய்ந்து வருவதோ அதைக் கடக்க முடியாது என்பதை விழித்த அத்திரளுக்கு விளக்கினான், அவை எப்படி அவ்வேலியில் மாட்டிக்கொள்ளும் என்பதை நடித்துக் காட்டினான். நாய்குடையென ஒற்றைப் பரப்பாக மண்டியிருந்த அக்குலதின் குடில்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடைவெளி விட்டுக் கட்டினான்.

அம்மக்கள் கூட்டம் கூட்டமாய் மரப்பட்டைக் குடில்களில் வாழ்ந்தனர். அவர்களைப் பத்துப்பேர் மட்டும் வாழ முடியும் குடில்களைக் கட்டிக் குடியமர்த்தினான்.. வெவ்வேறு குடிலுக்கும் சுற்றித் தனி வேலி அமைத்தான். இதுவரை மந்தையென கிடந்த அம்மக்கள் இரவுகளில் அக்குடிலில் தனிமை உணர்ந்து அரண்டனர். அதன் பின் பகல்களில் குடில் நுழையாது ஊர் முற்றத்தில் மந்தை என்றுகிடந்து மகிழ்ந்த்தனர்.

மூங்கில் வளைத்துத் தோலிழுத்துக் கட்டி அதில் சிறு வேல் பூட்டி, குறி தாக்கும் ஆயுதம் ஒன்றை உருவாக்கித் தானும் பயின்று அதை அம்மக்களுக்கும் பயிற்றுவித்தான் மூக்கன். மலையில் வளைந்த மரம் தூக்கியெறிந்த விலங்கிலிருந்து அவன் கண்டடைந்தது அது. கவையில் கல் கொண்டு எறிவதாக ஒரு ஆயுதம் தயாரித்து பின்பே அவன் வில்லைச் சென்றடைந்தான்.

நீந்துவதை அம்மக்களால் புரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. எவ்வளவு அடித்தும் நீருள் ஊன்றிய காலைத் தூக்க மறுத்தனர், கை வைத்து அக்காலைத் தூக்க முயன்றால் பெருங்குரலில் அலறி அனைத்தையும் மறந்து மூக்கன் விடுவது வரை அவனை ஓங்கி அறைந்தனர். துடையனே நீந்த மறுத்து அஞ்சி ஓடினான். வேட்டையில் கூடக் கொடி பற்றி ஒருவர் உடல் ஒருவர் கோர்த்துத் தான் அந்த மக்கள் நீரைக் கடந்தனர். அதுவும் வேறு வழியில்லை என்றால் குலமூத்தான் முன்சென்றால் மட்டுமே. இடுப்பளவு நீர், அறிந்த ஆறு, முதலை தடமில்லை என்றால்தான் அவர்கள் நீர் நிலையையே நெருங்கினர். இல்லையென்றால் மறுகரைக்கு மரம் வெட்டி விழ்த்தி அதில் நிரை என்று ஊர்ந்தனர். நீர் என்பது அவர்களுக்கு இருள் என்று உணர்ந்து கொண்ட மூக்கன் அவர்களின் அச்சம் போக்கப் பலகாலம் அக்காட்டாற்றில் பட்ட மரம் போட்டு மிதந்து சென்றான். பல காலம் பார்த்திருக்க முடியாத குழந்தைகள், பெண்கள் அறியாது அவனுடன் அதில் மிதக்க வேண்டும் என்றனர். ஒருமுறை ஏறிய குழந்தை அதில் மறுமுறை ஏறவில்லை.

அரை குறிஞ்சியில் அவன் அக்குலத்தின் புறத்தையும் அகத்தையும் முடியும் வரை மாற்றியிருந்தான். அவர்களின் செய்கைகள் மாறியிருந்தன அசைவுகள் மாறியிருந்தன. மரமென்றிருந்தவர்கள் அசையும் கிளையென்று ஆகியிருந்தனர். இறுதி வளர் நிலவு நாள் ஒன்றில் இரவை நீக்கி எழும் முதல் பொற்கதிர் வேளையில் மூக்கன் குல ஓசை எழுப்பிக் குலத்தை முற்றத்தில் கூட்டினான். மூக்கன் நடுவில் நிற்க உடலாலும் ஒலியாலும் அவன் பேசுவதை எதிர்பார்த்துக் கூட்டம் முற்ற வெளி சுற்றிக் கூடியது. மூக்கன் ஒரு ஒலியின்றி அக்கூட்டத்தை இரண்டாகப் பிரித்தான். தன் கையிலிருந்த ஊர் மூத்தான் வேல்கோலை, ஒளியனையும் திசை பிரிவில் நின்ற பல் குறி கொண்டவனிடம் கொடுத்துத், திரும்பி எதிர் திசையில் துடையனை நோக்கி நடந்தான். கோல் பெற்ற பல் குறி கொண்டவன் இன்னது என்றுணரும் முன்பே குலம் குலப்பேரொளி எழுப்பியது. மூக்கன் பின் சென்ற துடையன் தேங்கி நின்ற தன் திசை பிரிவை கால்மடக்கி கைசுட்டி உணர்த்தி உடன் அழைத்து சென்றான். மூக்கன் அவன் அமைத்த ஆயுத குடில் சென்று வில்லையும் வேலையும் பொதி நிறைய கல்லையும் எடுத்துக் கொண்டான். துடையனும் அதையே செய்து உடன் சென்றான். முட்டித் திகைத்த திரள், அனைத்தையும் அள்ளிச் சேர்த்து அவர்கள் பின்னால் சென்றது.

எல்லை காட்டாற்றை மூக்கன் தனியாகக் கடக்க, அவன் அடி பார்த்து துடையன் உடன் கடக்க, திரள் கைகோர்த்துக் கடந்தது.

7

அடுத்த நிலவற்ற நாளில் அவர்கள் மலைக்குன்று ஒன்றை அடைந்திருந்தனர். சுற்றிலும் மலைக்குன்று சூழ அதன் நடுவில் குலம் ஒன்று வாழ்வது மூக்கனுக்கு மட்டும்தான் தெரியும். கையில் வேலும், தோலில் வில்லும், வல இடையில் வில்லுக்கான சிறு வேலும், இட இடையில் கல்லும் கொண்டிருந்த ஆண்கள் அது வழக்கமான இரவு ஓய்வென்று எண்ணிப் படுத்துறங்கினர். வானோக்கிப் பார்த்து அமர்ந்திருந்த மூக்கனைப் பாறையில் தலைவைத்துப் படுத்தபடி பார்த்திருந்தான் துடையன். அந்தி அணையும் பொழுது குல எல்லைக்குள் இருக்கும் அம்மக்கள் பலகால பழக்கம் போல் இரவுகளில் காட்டுமிடத்தில் துயிலப் பழகியிருந்தனர். மூக்கன் உடனிருந்தால் அவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை ஆனால் அவனுக்கு அஞ்சி ஒடுங்கினர். இரு முறையில் அவன் உடல் அசைத்து ஒலியெழுப்பி உணர்த்த முயலும் ஒன்று புரியாது விழித்திருந்தால் மூக்கன் உதிரம் வழியும் அளவுக்குத் தாக்குபவனாக இருந்தான். புரியாதபோது தாங்கள் உடலசைத்து ஒலி எழுப்பி இதுதானா அவன் உணர்த்துவது என்று பதில் கேட்காதவர்களிடம் அதன்பின் மூக்கன் முகம் கொடுப்பதில்லை. அதனாலேயே ஒவ்வொருவரும் அவனை உற்று நோக்கினர்.

கனவினுள்ளிருந்த துடையனை மூக்கன் எழுப்பியபோது முதல் வெள்ளி முளைத்திருந்தது. நீலஇரவு திரையென முன் மறைத்திருந்தது. மூக்கன் குறிகாட்டத் துடையன் வேட்டையில் அமைதியை உணர்த்தும் குறியைக் காட்டிய படி ஒவ்வொருவரையும் எழுப்பினான். மூக்கன் ஆண்களை இருபகுப்பாகப் பிரித்து, துடையனின் தலைமையில் ஒவ்வொருவருக்கும் கையில் வில்கொடுத்து, இருளில் திசை காட்டி அக்குன்றின் உச்சி விளிம்பில் கீழ் நோக்கி நிற்கச் செய்தான். சற்று தொலைவில் சரிவில் அதே திசை நோக்கி வேல் கொண்டவர்களுக்கு முன்னால் தலைமையில் தான் நின்றான். மூக்கன் முன்பே வேட்டையில் வில்லும் வேலும் கொண்ட தாக்குதல் முறையைப் பழக்கி இருந்ததால் அனைவரும் தத்தமது இடமும் செயலும் உணர்ந்திருந்தனர். ஆனால் மூக்கனைத் தவிர அவர்கள் எவருக்கும் தாங்கள் எதைத் தாக்க போகிறோம் என்று தெரிந்திருக்கவில்லை.

முதல் பறவை ஒலியுடன் கிளைவிட்டுப் பறக்க, முதல் செவ்வொளி திரை விலக்கிய கணம், பாய்வதற்காக வயிற்றிலிருந்து அம்பு என ஓசை எழுப்பி முன்னோக்கிப் பாய்ந்தான் மூக்கன். அவனைத் தொடர்ந்து பாய்ந்தது வேல் கூட்டம். அக்கணமே இரண்டு கால்களையும் விரித்து வைத்து முட்டி மடக்கிக் காற்றில் புட்டம் வைத்தமர்ந்து வில்லில் வேல் வைத்து நாணிழுத்துத் தயாரானான் துடையன். அவனைத் தொடர்ந்து அதையே செய்தது வில் கூட்டம். சரிவிலிருந்து மூக்கன் நிலம் இறங்கிய கணம் அனைவரும் ஒன்றென ஒன்றை உணர்ந்தனர், அவர்கள் குறி வைத்திருப்பது ஒரு குலம், மூக்கன் நோக்கிச் சென்று கொண்டிருப்பது அக்குலத்தின் முற்றம்.

காடுகளில் ஒற்றைக் குல ஒலியெழுப்பா அன்னிய மனிதர்களை அவர்கள் கொல்லும் வழக்கமிருந்தது.ஆனால் ஒரு குலத்தின் மேல் வேல்கோல் எடுத்துச் சென்றதில்லை. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் வேட்டையாடி வாழும் அவர்கள் முதல்முறையாக சுற்றிலும் குன்று சூழ குகையும் குடிலும் கொண்டு இருக்கும் பிற குலம் ஒன்றைக் காண்கிறார்கள். ஓசை கேட்டு எதிர்குலம் இன்னதென்று உணர்வதற்குள் முற்றம் வந்த மூக்கனின் கூட்டம் எதிர் ஆண்திரள் கைகளில் கோல் இறுக்குவதற்குள் அவர்களில் முன்னின்ற பாதிப் பேரை வேல் பாய்ச்சியிருந்தனர். எதிரிகளை முன் நிரையை மூக்கனின் வேல் தாக்க பின் நிரையைத் துடையனின் வில் தாக்கியது. மூக்கன் “உ” “உ” என்றபடி ஒவ்வொருவரையும் குத்திப்பாய்ச்சி முன்னேறினான். உ என்பது அவர்கள் கொல்வதைச் சுட்டும் சொல். மூக்கன் தன் வேல் கூட்டத்திடம் எதிர் குலத்தை உ உ என்று சுட்டினான். குன்று மேல் துடையனும் அதையே சென்னான். வேட்டையில் ‘அ’ பயன்படுத்தி பழகியிருந்த அவர்களுக்கு ‘உ’ புதிதென்றாலும் அச்சொல் இதுவரை இல்லா வெறியையும் அதேபோல முன்பே பயன்படுத்தியிருந்த உணர்வையும் கொடுத்தது.

மூக்கன் நினைத்தது போல் பெண்கள் குடிலில் பதுங்கி விடவில்லை, ஒருபாதி குழந்தைகளுடன் குடிலில் கிடந்து அலற மற்றவர் குடிலிலிருந்து வேலும் கல்லும் எடுத்து குல முற்றம் வந்தனர். அதைக்கண்டு உளம்நடுங்கித் திகைத்த அவன் குன்றை நோக்கி வில்லெறிதலை நிறுத்த சென்னான். அதைப் பார்த்தும் முன்னுணர்தல் இல்லை என்பதால் புரியாத துடையனும் குழுவும் மூங்கிலை முன் தள்ளி தோல் நாணில் சிறு வேல் வைத்து இழுத்து பெண்களையும் குறி பார்த்து விட்டனர். ஒரு பெண் வேல் கொண்டு குத்தியதில் மூக்கனின் தோல் பொத்து ரத்தம் வடிந்தது. தன்னை குத்திய அவளை காத்தப்படி மூக்கன் போரிட்டதால் துடையனால் அவனை வேல் கொண்டு தாக்க முடியவில்லை. அக்குலத்தின் ஆண்கள் முற்றழிந்த போது மூக்கன் போர் முடிவுக்கான குறியொலி எழுப்பி குன்றிலிருந்தவர்களைக் கீழிறங்கச் செய்தான். எதிர் குலத்தில் ஆண்கள் எவரும் எஞ்சியவில்லை. களம் வந்த பெண்களில் மூக்கனைத் தாக்கிய ஒருத்தியே முழு உருப்புடன் இருந்தாள்.

துடையன் பின் செல்ல மூக்கன் குடில்களுக்குள் சென்று பெண்களையும் குழந்தைகளையும் திரட்டி முற்றம் கொண்டு வந்து நிறுத்தியிருந்தான். அஞ்சி ஒலி எழுப்பியபடி அவர்கள் தங்களை அடித்துகொண்டனர், காணும் குழந்தைகள் மேலும் பெருங்குரல் எடுத்தன. மூக்கன் இரு முதிர்ந்த பெண்களை அடித்து முழு மூர்ச்சையாக்கிய போது சுற்றிலும் அமைதியானது. அம்மக்களின் குல குறியான திரள்விண்மீனைத் தீ கொண்டு அழித்து, தோல் பொசுங்காத இடத்தில் தங்களின் மலர் மொட்டை வரைந்தான். அம்மக்களுக்கு பெயர் குறியென்று எதுவுமிருக்கவில்லை, மூக்கனாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று போட்டு விட்டான். வேல் பாய்ச்சிய அவள் தோளில் புடைத்த இரு முலை வரைந்தான்.

வேலும் அம்பும் பாய்ந்த உடல்கள் முற்றம் நிறைந்து கிடக்க நிலம் ரத்தமும் சகதியுமாக இருந்தது. மூக்கன் தன் தோலில் வேல் பாய்ச்சிய அப்பெண்ணைக் குடில் அழைத்துச் சென்று புணர்ந்தான். அடுத்து அவன் மேல் ஏறி அவள் அவனைப் புணர்ந்தாள். இருவரும் இதனை நடத்தி முற்றம் வந்த போது அறை குறிஞ்சிக்குப் பின் அவன் உறவு கொண்ட அப்பெண்ணைத் திகைத்துப் பார்த்தபடி நின்றான் துடையன். அவள் சென்று முற்றத்திலிருந்த பெண் நிரையோடு சேர்ந்து கொண்டாள்.

குன்றிலிருந்ததாலும் எதிரிகளிடம் வில்லில்லை என்பதாலும் வில் கூட்டத்தில் ஒருவருக்கும் காயமில்லை. மூக்கன் இளைஞர்கள் கொண்டு வில் கூட்டத்தை நிறைத்திருந்தான். வேல் கூட்டத்தில் உறுப்பிழந்தவர்களின் உடல்கள் உயிற்றதாக ஆக்கப்பட்டன. குறியிட்ட அப்பெண்களையும் குழந்தைகளையும் மீதமிருந்த தங்கள் ஆண்களுடன் ஊர் நோக்கி அனுப்பிவிட்டு, துடையனை மட்டும் தன்னுடன் அழைத்துகொண்டு மூக்கன் திசைதெரிந்தவனாய் மீண்டும் காட்டுக்குள் நடந்தான்.

8

மூக்கனுடன் காடு நுழைந்த முதல் நாளே துடையனை விரியன் தீண்டியது. பாறை மேலேறி  தான் கால் வைத்து ஏறிய இடுக்கை பார்த்தபோது அது இடுக்கிலிருந்து தலை நீட்டிச் சொடுக்கி நா நீட்டியது. துடையன் அதை பார்த்து உ என்பதற்குள் அவனுக்கு முன் அப்பாறை மீது ஏறி நின்ற மூக்கன் அது தீண்டிய கால் விரலைத் துண்டாக்கியிருந்தான். துடையன் அஞ்சி அலறிப் போவதற்குள்ளே அவனை அடித்து மூர்ச்சையாக்கினான் மூக்கன். அவனைக் குகை கிடத்தி விரல் வெட்டிய இடத்தில் பிசின் வைத்து தீ வைத்துப் பொசுக்கி அது உலர விட்டான். இதோ இல்லாமல் ஆகப் போகிறோம் என்று அஞ்சிக்கிடந்த துடையன் இரண்டாவது முழு நிலவில் எழுந்து நடக்கத் துவங்கினான். அனைத்தும் புரிந்து குலத்தில் எத்தனை உடல்களுக்கு நா தீண்டியதும் சடங்குக்கு மலர் பார்க்க துவங்கியிருக்கிறோம் என்னும் நினைவு எழ மூக்கனுக்கு நெடுங்காலம் ஆகியது. அதன் பின்தான் துடையனின் கையிலும் காலிலும் இல்லாத விரல்களுக்கான, உடலில் தசையில்லாதிருந்த குழிகளுக்கான அர்த்தம் அவனுக்குப் புரிந்தது.

அரை குறிஞ்சிக் காலம் மூக்கன் பின்னால் துடையன் காடுகளில் அலைந்தான். துடையனை மூக்கன் செய்ய சொன்னதெல்லாம் ஒன்று மட்டும்தான் கொல்வதை எல்லாம் கொல்லச் சென்னான். மூக்கன் முதலில் ஊர் நீங்கிக் காடு நுழைந்து எதையெல்லாம் செய்தானோ அதையெல்லாம் துடையனும் செய்தான். அவர்கள் இருந்த இடத்தில் உ உ உ என்ற ஓசை காடு துளைத்தது. பத்தி விரித்து எழுந்த நாகம் ஒவ்வொன்றும் இரண்டு துண்டுகளாக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் உதிரமும் நிணமும் தன் உடலிலிருந்து நிலம் சொட்ட, வேல்கோல் ஏந்தி நடந்த துடையனின் முன்னால் வெறும் கை வீசி நடந்தான் மூக்கன். நடுங்கும் கைகளில் வேல் பிடித்து மிரண்ட விழிகளுடன்தான் ஒவ்வொரு ‘’உ’’ வையும் கொன்றான் துடையன்.

மரம் முட்டி அதன் வைரத்தில் தன் உடைந்த கொம்பு பாய்ந்து பிளிறியிருக்கும் ஒற்றைக் கொம்பு கொண்ட மதவேழத்தை மூக்கன் துடையனிடம் காட்டி அதைக் கொல்லச் சொன்ன போது, மலஜலம் கழித்து நிலம் வீழ்ந்தான் துடையன். கீழ் கிடந்த வேல் எடுத்து மிருகமென பாய்ந்து சென்ற மூக்கன், வேழம் அதை உணர்ந்து துதிக்கை தூக்குவதற்கு முன் பாய்ந்து அதில் கால் வைத்தேறி, ஒற்றைக் கொம்பு பற்றி எம்பி அதன் மத்தகம் மேல் அமர்ந்து, அமர்ந்த கணமே இருகையால் வேல் தூக்கி இறுக்கி அதன் உச்சியில் இறக்கினான்.

அந்த அந்தியிலேயே அவர்கள் மறுகரை தெரியாப் பெரு நதி முன் வந்து நின்றனர். முன் சொல்லின்றி மூக்கன் சுழித்தோடும் நீர் பெருக்கில் பாய்ந்து நீந்த, கரையில் உணரா விழிகளுடன் அதைப் பார்த்து நின்றான் துடையன். நேர்க்கோடென நீந்திச் செல்லும் மூக்கனின் உடலிலிருந்த உதிரச் சிகப்பை கரைத்துச் சென்றது அப்பெரும் நீர்ப்பெருக்கு. பொன்னொளிர் கனிந்து இருள் கவிந்தது. சிறு கருந்துளி என்று நீந்தி சென்றவன் சட்டென்று நீருக்குள் சென்றுவிட்டான், மேல் எழவில்லை. இல்லாமலாகிவிட்டான். அங்கு வெறும் பெரு நீர் சுழித்தோடியது. மொத்தத்தின் மேலும் இருள் கவிழ்ந்தது. நீல வானப் பறவை இருள் வானம் நுழைந்தது போலானான் அவன்.

கரையிலிருந்த மரமேறியமர்ந்து பார்த்திருந்த துடையன், மூக்கன் இல்லாமலாகிக் கொண்டான், தன்னை தனிமையில் விடுவதற்க்காகவே மூக்கன் அப்படி செய்தான் என்ற எண்ணம் கொண்டவனாய் இருள் நோக்கி அலறினான். கண்களில் வழியும் நீரை ஏன்னென்று அறியாது நாதொட்டு நக்கிப் பார்த்து அத்திரவத்தைக் கைதொட்டு எடுத்து அக்கருமையிலும் கண்களால் பார்க்க முயன்றான்.

உணவும் நீருமின்றி நீண்ட நாள் அம்மரமிருந்த துடையன், நிலவற்ற நாள் ஒன்றில் மரத்திலிருந்து மயங்கிக் கீழ் வீழ்ந்தான். ஸ்பரிசம் தொடும் உணர்வென்றை அடைந்து மூக்கனோ நாகமோ என்ற இரு எண்ணங்களுக்கடியில் அலறி பின் விழித்தான். அவன் முகம் நக்கி கொண்டிருந்த எருதின் சிறு மகவு அஞ்சி வெறித்துத் தொலைவிலிருந்த தன் கூட்டம் நோக்கியோடியது. பகலொளி கண்கூச தன்னந்தனிமைல் தான் கிடந்திருக்கும் நிலையுணர்ந்து மீண்டும் ஒலித்தான். அப்பொழுதுதான் கிளையமர்ந்த பறவைகள் மீண்டும் ஒலியெழுப்பி மரம்விட்டுப் பறந்தது. பாய்ந்தெழுந்த துடையன் மூக்கன் சென்று இல்லாமலான அவ்வாற்றைப் பார்த்த கணம் பெருங்குரலில் ஓசையிட்டபடி தோல்கிழிய உடலறைந்தபடி அரைக் குறிஞ்சிக் காலத்திற்கு பின் தன் அகமிருந்த ஊர் நோக்கி திரும்பி ஓடினான்.

9

குலத்தில் பெண்களில் மூக்கனுக்குப் பிறந்தவர்களை மக்களாலேயே தனியாக அடையாளம் காணமுடிந்தது. கனி நாவல் நிறத்திலிருந்த அவர்கள் எல்லோரும் தங்கள் இளமையிலிருந்தனர். அதில் ஒருவனான முதல் மீசை முளைத்திருந்த கண் குறி கொண்ட கண்ணன் குல முதல்வனாக இருந்தான். தொடர்ந்து அக்குலம் தங்கள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. எங்கிருந்து என்று தெரியாமல் வந்த இரண்டு குலங்கள் அவர்கள் மேல் போர் தாக்குதல் செய்திருந்தனர். கண்ணனுக்கு அத்தாக்குதலின் அர்த்தம் புரியவில்லை. அன்று மூக்கனுடன் போர் வேட்டை சென்று மீண்டவர்கள் மற்றும் கொண்டுவரபட்டவர்கள் உடலசைத்து ஒளியெழுப்பி நிகழ்வென நிகழ்த்திக் காட்டிய பொழுதுதான் கண்ணனுக்கு புரிந்து அத்தாக்குதல் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் என்று, அதேபோல பிற குலங்களை முற்றழிபதற்க்காக என்று.   அதில் நெஞ்சில் இறகுக் குறி கொண்ட குலம், கையில் வேலுடன் எருதுகள் மேலேறி வந்து தாக்கியது. தங்களிடம் வில் இருந்ததனால் மட்டுமே தாங்கள் உயிர் பிழைத்திருக்கிறோம் என்று அறிந்திருந்தான் கண்ணன். இரு முழுநிலவாகியும் வராத எருதைத் தேடி கொண்டுவர தான் காடு அனுப்பிய ஆண் நிரைக்காகக் குடில் வாயிலில் காத்திருப்பவனாக ஆகியிருந்தான் அவன்.

குகை வாயில் பெருமரத்தில் ஒரு குறிஞ்சிக் மேற்ப்பட்ட காலம் துடையன் இடியிலும் மழையிலும் மரம் பற்றியிருந்ந்தான். அதன் கீழ் தனிக் குடில் அமைத்து அதில் இருந்தான் கண்ணன். ஊர் வந்து மரம் ஏறி அமர்ந்த துடையன் அதன்பின் கிழ் இறங்கவில்லை. தொண்டை கிழிந்து குரலில்லாமல் ஆவதுவரை வெளியையும் வானையும் இரவையும் நோக்கி உ உ உ என்று அலறினான். குரல் எழமுடியாது போனபின்னும் அவன் உ என்று கத்துகிறான் என்று உடலும் உணர்வும் காட்டியது. ஏந்தல்களில் மேல் செல்லும் கனிகளைப் பாதி உண்டு, வான் வெளியில் தான் மட்டும் பார்க்கும் கொலை உருவங்களின் மேல் எறிந்தபடியிருப்பான் துடையன். மண்னையே அவன் நெளிந்தூரும் உக்களாகத்தான் காண்கிறான் என்றும் அதனால்தான் அவன் மண்ணைவிட்டு மரத்தில் ஏறியிருக்கிறான் என்றும் அங்கு யாரும் அறிந்திருக்கவில்லை. ஒருக்கட்டத்திற்க்கு மேல் மரத்திலேயே இருக்கும் அவனை அம்மக்கள் மறந்தனர். இத்தனை ஆண்டுகளில் துடையனும் ஓங்காரத்தில் இருந்து மெளனம் நோக்கி சென்று சென்று கொண்டிருந்தான்.

கண்ணன் சிறுவனாக இருக்கும் பொழுதிலிருந்து துடையனைப் பிறரிடம் காட்டி ‘ஏன்’ ‘ஏன் அவர் மரத்தின் மேல் இருக்கிறார்’ என்று உடலசைவால் கேட்டபடி இருந்தான். அவர் மேல் கல் எறிந்து அவரை அலற வைத்து விளையாடினான். அதற்காகக் கண்ணன் பிறரால் முதன்முறையாக அடித்து கண்டிக்கப்பட்டான். ஒரு கட்டத்திற்கு மேல் துடையனைப் பற்றி அவன் கேட்டு கொண்டே இருப்பதைப் பொறுக்க முடியாத பெண்கள் அவர்களுக்குத் தெரிந்த ஒவ்வொன்றையும் அந்த அந்த இடத்திற்கே சென்று அவனுக்கு நிகழ்த்திக் காட்டினர்.  அப்படி கண்ணன் கன்னியை மூக்கனை துடையனைத் தெரிந்து கொண்டான். அதன் பின் அவனே மரம் இருப்பவரின் ஏந்தலுக்கான கனிகளைப் பறித்து வந்தான். இளைஞனான போது குல முதல்வனான கண்ணன் அம்மரத்தடியிலேயே குடில் அமைத்து அதில் இருந்தான்.

நீல திரை விலக்கி பொன்னொளிர் எழும் கணம் மரமிருந்து எழுந்த பறவை எழுப்பிய குரலில் விழித்துக் கொண்டான் தன் குடிலில் துயின்றிருந்த கண்ணன். எழுந்து வெளி வந்தவன் எருதுக்காகக் காடு போன கூட்டத்திற்காக ஊர் முற்றம் பார்த்தான். காவலிருந்தவர் குந்தி அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். குளிருக்கும் கொசுவுக்கும் அவர்கள் எழுப்பியிருந்த எரி அணைந்து கரியிலிருந்து புகை எழுந்து கொண்டிருந்தது. கண்ணன் தலை தூக்கி துடையர் இருந்த மரம் பார்த்தான். பொன் பூத்திருக்கும் அப்பெருமரத்தில் அமர்ந்திருந்த துடையனின் தலையிலும் முகத்திலும் நீண்டிருந்த வெண்முடி காற்றின் திசையில் அசைந்து கொண்டிருந்தது. முதன் முதலில் மக்கள் அந்த வெண் முடியை உணர்ந்த போது பெரும் குரலெடுத்தனர் உடலில் அறைந்து கொண்டனர். மக்கள் கை சுட்டிகாட்ட அந்த முடியை உணர்ந்த போது கண்ணன் அவரை படும்மரம் பருவத்தில் இலை உதிர்க்கும் மரம் என பார்த்தான். அப்பொழுது கண் வடிந்த திரவத்தை என்ன என்று தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

அப்புலர் காலையில் பொன் ஒளியை முகத்தில் வாங்கியபடி சிறு மகவென மரம் அணைத்துத் துயின்றிருக்கும் துடையரிடம் ஒரு மாறுதலைக் கண்டான் கண்ணன். அது, மரத்தை சுற்றிபிடித்திருந்த அவர் கைகள் வழக்கம் போல மரத்தை இறுக்கி இருக்கவில்லை, கோர்த்திருந்த இரு கைவிரல்களும் பிடிப்பின்றி நழுவியிருந்தது.  காற்றசைவில் மரத்துடன் அவர் கனியென அசைந்து கொண்டிருந்தார். அடுத்த காற்றில் மலர்களுடன் அவர் மரம் விட்டு உதிர்ந்த போது, ஓடி அவரைத் தன் நெஞ்சில் வாங்கி நிலம் விழுந்தான் கண்ணன்.

எல்லையில் துடையரின் உடலுக்கு சடங்கு செய்து எரியூட்டி ஊர் திரும்பிய போது. காடு சென்ற நிரையில் எஞ்சிய மூவர் ,கையில் எருதின் துள்ளும் சிறு மகவைக் கொடியில் பற்றியப் படி ஊர் முற்றம் நுழைந்தனர். கண்ணன் அதை பார்த்த கணமே அவர்கள் கன்றில் அகிடு வரும் இடம் தொட்டுப் பெண் என்று உணர்த்தினர். கன்றின் கழுத்து சுற்றிக் கட்டி பிடி நீண்டிருக்கும் கொடியைக் கண்ணன் பற்றிய போது அது தாய் என்று அவனில் முலைதேடியது. தன் விரலை அதன் வாய்க்கு கொடுத்தபடி தன் குடில் நோக்கி இழுக்க, திசை உணர்ந்து விட்ட அது அவனைக் குடில் நோக்கி இழுத்துச் சென்றது.

குல முதல்வனான தோலில் கண் குறி கொண்ட கண்ணன் பந்தமேந்தி குகை நுழைந்து பல காலம்  குகை வரையல்களைப் பார்த்தான். அவனின் கனவுகளில் அவை உயிர் கொண்டு எழுந்து வந்தன. இந்தக் கதைபோல் குகைக்குள் ஒரு கதையிருந்தது. அதிலிருந்து மேலும் கதைகள் முளைத்தெழுந்தது. ஒவ்வொரு கதையும் அது சொல்லும் உண்மையின் வலுவை நெருங்க முயன்றது.

கண்ணன் கன்னியையும் மூக்கனையும் துடையனையும் கல்லில் நிறுத்தினான். ஊர் முற்றத்தில் பேணி வளர்க்கப்பட்ட கனகாம்பரங்களுக்கு மத்தியில் கரு நிறக் கல்லில் நிறுவப்பட்டவள் கன்னி. கல்லிலிருந்து கையில் மலருடன் அவள் உருவம் புடைத்திருக்க தலை மேல் இரு நாகம் அவளைக் காத்தது. குகைவாயில் பெருமரத்தில் துடையன் நிறுவப்பட்டார். கல்லில் அவர் கால்மடக்கி கண்மூடி அமர்ந்திருக்க குடைவிரித்த மரம் அவர் தலைக்கு மேல் புடைத்திருந்தது. மூக்கன் குகை மையத்தில் பெரு நாகத்தின் பத்திக்கு அடியில் கற்சிதையில் உயிரசையும் கண்களோடு இருந்தார். குறையுடல் கொண்ட குழந்தைகளைத் தாங்கிய கற்கள் மூக்கனுக்குத் துணையாக சுற்றி நின்றன.

துடையரே உ இன்றி இறந்து அம்மக்கள் கண்ட முதல் மனிதர், முதல் மரணம். துடையர் இறந்த நாளில் சடங்குகள் முடித்து கன்று எருதுடன் குடில் வந்த கண்ணன், தான் பிறந்து முதல் துடையர் இருந்து மறைந்த அம்மரத்தைத் தனிமையில் அமர்ந்து பார்த்திருந்தான். அன்றிறவு எருதின் சிறு கன்றுக்குப் புல்போட்டு தன் குடில் முன் அதை கட்டி துயிலச் சென்ற கண்ணன், தன் கனவில் துடையரை நெஞ்சேந்தி நிலம் விழுந்தபோது அம்மரம் பொழிந்த பொற்பூக்கள் ஒவ்வென்றையும் அரு நெருங்கி கண்டான். தான் காற்றாகி மலரை அசைத்தான். தானே மலராகி தன் மீதே பொழிந்தான். மேலும் கண்ணன் மரணத்தைக் கருத்தாக கண்டுகொண்டான்.  மலர் மலர்ந்து மரம் விட்டுப் பொழிவது போல் மரணம். மலர்களோ முடிவற்றவை உயிர்களோ அழிவற்றவை. மலரோ உயிர் பூண்ட உரு. உயிர்கள் உதிர்வதில்லை உடலே உதிர்கிறது. மரமோ பெரு உயிர்,  இலையும் பூவும் கனியும் அதன் உயிர், என்று உணர்ந்தான். அக்கணம் கனவினுள் வானம் கிழியும் பேரோசையில் “ஓ” “ஓ” “ஓ” என்று கத்தினான். பின் ‘’ஆ” “ஆ” என்று கதறியழுதான். இறுதியில் “ம்” என்று கனிந்தான். கனவுக்கு வெளியே இருளுக்குள் அவன் துயின்று கிடந்த குடில்மேல் பெருமரம் பொழிவதற்காகவே தன் மலர்களை உதிர்த்தது. மலர் அவனுக்காக காம்புவிட்டு காற்றில் எழுந்தது. வெளியே எருதின் சிறு கன்று கனைக்கக் கண்ணன் விழித்துக்கொண்டான். கனவில் உணர்ந்ததை நனவில் உணர நெடுங்காலமனது.

***


பிரதீப் தஞ்சாவூர் மன்னார்குடி வழியில் உள்ள வடுவூர் தென்பாதியைச் சேர்ந்தவர். வயது 24. இளங்கலை சமூகவியல் படித்து முடித்துவிட்டு ஒரு இடைவேளைக்கு பின் மீண்டும் முதுகலைப் படிக்க போகிறார். இலக்கியம், தத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்.

மின்னஞ்சல்: pradeepkennedy1997@gmail.com

1 comment for “உயிர்மரம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...