புதுக்கவிதை நதிக்கரை: ஓர் எதிர்வினை

‘புதுக்கவிதை நதிக்கரை’ என்ற இணைய சந்திப்பின் காணொலியைப் பார்க்க நேர்ந்தது. ஊரடங்கு காலத்தில் இவ்வாறான நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது முக்கியமானது. அவ்வகையில் கவிஞர் மனஹரன் மற்றும் சுதந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஆனால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதோடு மட்டுமல்லாமல் தரமான பேச்சாளர்களை, ஆய்வாளர்களை அடையாளம் கண்டு நிகழ்ச்சியைக் கட்டமைத்தால் இதுபோன்ற முயற்சிகள் மேலும் சிறந்த பலனைக் கொடுக்கும். 

‘புதுக்கவிதை நதிக்கரையில்’ என்ற மூன்று மணி நேர நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தைப் பார்த்தவுடன், இது 1970-களில் நடந்திருக்க வேண்டிய நிகழ்ச்சியென்றுதான் முதலில் தோன்றியது. நிகழ்ச்சியை ஒட்டி எனக்கு பல்வேறு கருத்துகள் இருந்தாலும் ஆய்வுக் கட்டுரைகள் என்ற அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட உரைகளுக்கே நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. காரணம் அவையே மீள் ஆய்வின்றி மறுபடி மறுபடி பேசப்பட்டு வரலாறாக மாற்றியமைக்கப்படும். பல நூல்களில் அச்சாகி அதுவே இறுதி உண்மையாக நிறுவப்படும். 

திருமதி ராஜம் அவர்களின் கட்டுரையை முதலில் பாராட்ட வேண்டும். இதற்கு முன்பு கருணாகரன் ‘உலகத் தமிழ்ச்சங்க’ சந்திப்பில் மலேசிய சிறுகதைகள் குறித்து வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாட்டுடன் கட்டுரை சமர்ப்பித்ததை நான் செவிமடுத்துள்ளேன். ஆய்வு கட்டுரைகளில் இந்த மனநிலை இழிவானது, கண்டிக்கத்தக்கது. ஆய்வுகளில் சுய விருப்பு வெறுப்புக்கு இடமில்லை. அவ்வகையில் திருமதி ராஜம் அவர்கள் காய்தல் உவத்தல் இன்றி கட்டுரை படைத்துள்ளார். ஆனால், புதுக் கவிதை குறித்து முதுகலை வரை பட்டப்படிப்பை முடித்துள்ளவர் மலேசிய புதுக்கவிதை வளர்ச்சிக்கு எம்.ஏ.இளஞ்செல்வனுடன் துணைநின்ற நீலவண்ணனை,  ‘நிலாவண்ணன்’ என்பதும், ம.நவீனை – ‘மா.நவீன்’ என்பதும் வியப்பானது. வருங்காலத்தில் அதை அவர் திருத்திக்கொள்வார் என்று நம்புவோம். காரணம் பெயர்களும் ஆண்டுகளும் ஆய்வுகளில் முக்கியமானவை. 

திருமதி ராஜம் அவர்கள் தன் ஆய்வுக் கட்டுரையில் நிறுவ விரும்புவது ஒன்றுதான். எழுத்தாளர் சங்கம் மேற்கொண்ட 16 புதுக்கவிதை கருத்தரங்கினால் மலேசிய கவிதை போக்கில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. மலேசியப் புதுக்கவிதை வளர்ச்சிக்கு எழுத்தாளர் சங்கத்தின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக அப்போது இயக்கத்தில் செயலாளராக இருந்த பெ.ராஜேந்திரனின் சேவை அளப்பரியது என்பதுதான். ஆய்வென்றால் அதற்கு நிரூபணம் வேண்டும். எனவே, மறுமலர்ச்சியைக் காட்ட அவர் ‘மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய கருத்தரங்குகளில் பட்டைத்தீட்டப்பட்ட ஓர் இளைஞர் குழு புதுக் கவிதையின் நீட்சியான நவீன கவிதைகளில் தீவிர தேடலைத் தொடங்கினர்’ என்கிறார். பின்னர் அப்படியான இளைஞர்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறார். திருமதி ராஜம் அவர்களின் இந்தக் கூற்றின் பின் உள்ள அரசியல் வெகு எளிதாகப் புரிந்துக்கொள்ளக்கூடியது. 

எழுத்தாளர் சங்கம் மேற்கொண்ட அந்த முயற்சியால் மலேசிய புதுக் கவிதை சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை அவர்களே உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தொகுத்துள்ள நூல்களில் உள்ள கவிதைகளை வாசித்தாலே அவை காலத்தால் எவ்வளவு பிந்தியவை என உணர முடியும். எனவே, எங்கோ விளைந்த பயிரைத் தனது நாற்றங்கால்களிலிருந்து சென்றவை  எனச் சொல்வதின் மூலமே அவர்களால் அந்த வெறுமையை சரிகட்ட முடியும்.  தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய கவிதை பட்டறைகளில் பட்டைதீட்டப்பட்ட இளைஞர் குழு என திருமதி ராஜம் குறிப்பிடுவது  மலேசியாவில் நவீன கவிதைகளின் வீச்சு அதிகரிக்க காரணியாக இருந்த சிற்றிதழ் செயல்பாட்டாளர்கள் அனைவரையும்தான். அவர்கள் அனைவரும் மலேசிய எழுத்தாளர் சங்க முன்னெடுப்பில் இருந்து சென்றவர்கள் என்பதன் மூலம் அது எளிதாகிறது. அப்படி அவர்கள் கொடுத்திருந்த பட்டியலில் என் பெயரும் இருந்ததால் அதை கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டியுள்ளது.

நான் எழுத்துலகிற்கு வந்தது கவிதையின் வழிதான். முதல் கவிதை வானம்பாடியில் வெளி வந்தபோது குதூகலித்து, ஞாயிறு நாளேடுகளுக்கும் தென்றல், நயனம், இதயம், தூதன் போன்ற மாத வார இதழ்களுக்கும் அனுப்பினேன். பா.அ.சிவத்தின் கவிதைப் புத்தக வெளியீட்டு விழாவில் இலக்கிய வட்டத்தின் நட்பு கிடைத்தது. தேநீர் கடைகளில் நாங்கள் இலக்கியம் பகிர்ந்தோம். யுவராஜன், ம.நவீன், சிவா பெரியண்ணன், சந்துரு போன்றோரின் நட்பு கிடைத்ததையெண்ணி உள்ளம் பூரித்தது. அடுத்த நகர்வு வடிவம் பெறுவதற்கு முன்புதான் தென்றல் ஆசிரியர் வித்யாசாகர் ‘விருட்சம் மாலை’ என்ற  கவிதை கலந்துரையாடலுக்கு அழைத்தார். அதன்  பின்னர்தான் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.இராஜேந்திரன் நடத்திய கவிதை கலந்துரையாடலிலும் கலந்துகொண்டேன். இரண்டிற்கும் ஓரிரு முறைதான் சென்றேன். இதில் தென்றல் விருட்சம் மாலை சற்று மேம்பட்டது. அன்றைய நவீன கவிதைகளை ஒட்டி உரையாட வாய்ப்பு வழங்கினர். கவிதைப் பயணத்தில் பாதி தூரம் கடந்துவிட்டப் பிறகு மறுபடியும் ஆரம்ப கோட்டிற்கு வாருங்கலென எழுத்தாளர் சங்கம் பாடம் நடத்தத் தொடங்கினர். எனக்கு இது எரிச்சலை ஊட்டியது. அரைவை இயந்திரத்தில் ஒரே மசாலாவை மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டே இருந்தனர். கலந்துரையாடலிலும் கருத்தரங்குகளிலும் அடிக்கடி காணாமல் போக வைத்தனர். இது நமக்கானதல்ல என்று தோன்றவே நான் பங்கேற்பதை நிறுத்திக்கொண்டேன். 

தமிழில் கவிதை மரபு நெடியது, வளமானது. பாரதியார் காலத்தில் வசனக் கவிதைகள் என அழைக்கப்பட்டு, புதுக்கவிதையாக கா.ந.சு. மூலம் பெயரிடப்பட்டு, எழுபதுகளிலேயே நவீனக் கவிதை என பல்வேறு சிற்றிதழ்களால் முன்னெடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் பிற மொழி நவீன கவிதைகளும் நவீனக் கவிதைகள் குறித்த உரையாடல்களும் அதே காலகட்டத்தில் சிற்றிதழ்களில் மொழிபெயர்க்கப்பட்டு, பெரும் அலையை உண்டாக்கிய ஒரு மரபில் அதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை துளியும் அறியாமல், தமிழக வானம்பாடி குழுவினரின் கவிதை பாணியை முப்பது வருடங்களுக்குப் பிறகும் பட்டறைகளில் சுமந்து கொண்டிருந்தவர்களால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது?

அந்தப் பின்தங்கிய நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றதோ ஓரிரு முறைதான். அதற்குள் பட்டைத்தீட்டப்பட்டேன், கூர்மைப்படுத்தப்பட்டேன் என்று சொல்வது எவ்வகையில் நியாயம்? மேலும், மூன்று மாதம் நாளிதழ்களில் வருகின்ற கவிதைகளைத் தொகுத்து அதை ஒட்டி திறனாய்வு செய்வதென்பது எழுத்தாளர் சங்கத்தின் செயல் திட்டம். அந்தச் செயல் திட்டத்திற்கு கவிஞர்கள் எப்படிப் பொறுப்பாக முடியும். அப்படி ஒரு திட்டம் வகுத்து அம்மாதத்தின் சிறந்த கவிதையென இவர்களாகத் தேர்ந்தெடுப்பதாலும் அவற்றின் குறை நிறைகளை விவாதிப்பதாலும் குறிப்பிட்ட அந்தக் கவிஞர் தன்னளவில் வளம் பெற்றார் என இவர்களாக நம்புவதை எப்படி பொதுமைப்படுத்த முடியும்? காலம்தான் இதற்கெல்லாம் பதில் சொல்லுமெனில் பட்டறைகளின் காலம் முடிந்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவற்றால் எவ்வித பலனும் இல்லை என்பதைதானே கண்கூடாகக் காண முடிகின்றது.

இதே நிகழ்ச்சியில் வாணிஜெயம் அவர்களும் புதுக்கவிதை நவீனக் கவிதை எனப் பல்வேறாக குழப்பிப் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் குழப்பமான உரை என்றால் அது வாணிஜெயம் அவர்களுடையதுதான். நிகழ்ச்சியில் அவரது தலைப்பு ‘இன்று’. அதவாது இன்று நவீன கவிதைகளின் போக்கு எப்படி உள்ளது என்பதை விளக்க வேண்டும். ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன் கோ.புண்ணியவான் எழுதிய ‘இவன் நட்ட மரங்கள்’ கவிதையை இன்னும் ஒப்புவிக்கிறார். அதோடு, ‘தமிழகத்தில் வானம்பாடி இயக்கத்தின் வரவே நவீனக் கவிதைகளைக் கொண்டாட வைத்தது’ என்கிறார். இது அபத்தமான கருத்து. தமிழின் கவிதை மரபு அறிந்த யாரும் இதைக் கேட்டால் வியப்படைவார்கள். கருத்துகளை முன்னிலைப்படுத்திய வானம்பாடி கவிதைகளைக் கடந்து கவித்துவ அனுபவங்களைக் கொண்ட நவீனக் கவிதைகளின் வீச்சு எங்கோ சென்றுவிட்டது. தமிழில் சிறந்த கவிஞர்களின் தொகுப்பாக வந்துள்ள ‘கொங்குதேர் வாழ்க்கை 2’ போன்ற பெருந்தொகுப்புகளை வாசித்தாலாவது அந்த நீண்ட மரபின் முக்கிய கவிஞர்களை அறியலாம். அல்லது வல்லிக்கண்ணன் அவர்களின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூலையாவது வாசிக்கலாம். இப்படி எதையும் வாசிக்காமல்  ‘புதுக்கவிதை தோற்றம், வளர்ச்சி என புரிந்துகொண்டால் புதுக்கவிதை நவீன கவிதை எனப் போர்த்தொடுக்கும் நமது எண்ணம் மாறுபடலாம்’ என்கிறார். முதலில் புதுக்கவிதை – நவீனக்கவிதை என யார் போர்த்தொடுத்தது? அப்படி ஒரு நிகழ்வு தமிழ் இலக்கியத்தில் நடந்துள்ளதா என்ன?

வானம்பாடி கவிஞர்களை புதுக்கவிஞர்களாகவும் எழுத்து மரபில் வந்தவர்களை நவீன கவிஞர்களாகவும் இவராக வகுத்துக்கொண்டதில் எழுந்த கருத்து அது என ஊகிக்க வாய்ப்பினைக் கொடுக்கிறார் வாணி ஜெயம். வசன கவிதை, புதுக்கவிதை, உரைவீச்சு, நவீன கவிதை என்பதெல்லாம் அந்தந்தக் காலத்தில் எழுந்த பெயர்களே அன்றி அவை தனித்தனி குடும்பங்கள் அல்ல. இதில் வானம்பாடி கவிஞர்கள் கவிதைகளை எளிமைப்படுத்தினர். பிரச்சார தொனியில் தங்கள் குரலை உரத்து ஒலித்தனர். அது வெகுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், புதுக்கவிதை அல்லது நவீன கவிதை என்று எந்தப்பெயரை வைத்து அழைத்தாலும் அந்த வரிசையில் வானம்பாடி கவிஞர்கள் இடம்பெறுவது குறைவு என்பதை பெருந்தொகுப்புகளை ஆய்வு செய்தாலே தெரிந்துவிடும். எனவே இது புதுக்கவிதை x நவீனக்கவிதை போரல்ல. மேடைகளுக்காக சொல்லடுக்குகளை வைத்துள்ள வானம்பாடி கவிஞர்களில் இருந்து, கவித்துவத்தை மீட்கும் குரல். இப்படி எவ்வித தெளிவும் இல்லாததால் வாசிக்கப்பட்ட அவரது கட்டுரை உளறலாகவே முடிந்தது.

இவை ஒருபுறமிருக்க, கவிதைக்கு யாரும் வழிகாட்டியாக இருக்க முடியுமா? மற்றவர்களைப்பற்றி தெரியவில்லை. உண்மையில் எனக்கு கவிதை ஆசானாக யாருமே எந்த அமைப்புமே இருந்ததில்லை. அந்தக் காலக் கட்டத்தில் மாதந்தோறும் தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்துக்கொண்டிருந்த தீராநதி, காலச்சுவடு, கணையாழி, உன்னதம், சிற்றேடு, கசடதபற, ஞானரதம், இலக்கிய வட்டம், உயிரெழுத்து மற்றும் உயிர்மை இவைதான் என்னைப் பட்டைத்தீட்டின, கூர்மைப்படுத்தின. அக்காலகட்டத்தில் உருவான பா.அ.சிவம், ம.நவீன் போன்றவர்களுக்கும் அப்படிதான் என அவர்களுடன் நெருங்கி பழகியதில் அறிந்துள்ளேன். இந்த சிற்றிதழ்களின் ஒரு சதவீத புழங்குபொருள் கூட பெ.இராஜேந்திரனின் கலந்துரையாடலிலோ கருத்தரங்கிலோ காணக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் அவர் முன்னெடுக்க விரும்பியது அவரது குறைந்த இலக்கிய பரிச்சயத்தில் அறிமுகமான வானம்பாடி கவிஞர்களையும் அதன் சாயலில் எழுதும் வைரமுத்துவையும். 

தொடர்ந்து காதல், வல்லினம், மௌனம், அநங்கம் போன்ற இதழ்களில் என் கவிதைகள் இடம்பெற்று வந்தன. அன்றைய வெகுசன இதழ்கள் போல வெட்டுக்குத்து போடாமல் எழுதியதை அப்படியே வெளியிட்டனர். இவை இன்னொரு நல்ல அனுபவம். இதற்காகவேணும் இவர்கள் என் இதயத்தில் பச்சையம் போட்டிருக்கிறார்கள். 

இவர்களைத் தவிர  சிங்கை இளங்கோவனுடனான் உரையாடல் என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம்.  இருபது முப்பது ஆண்டுகளில் நிகழ்வுகளை சற்றேனும் பிசகாமல் நினைவுக்கூறக் கூடியவர். உலக இலக்கியங்களை உவகையோடு பேசுந்திறன் கொண்டவர். என்னை ஆச்சரியமடையச் செய்து பிரமிப்புக்கொள்ள வைத்தவர். அவரிடம் இலக்கிய அனலின்  தகிப்பு இருந்துக்  கொண்டேயிருந்ததை உணர்ர்ந்தேன். ஓர் இலக்கியவாதியிடம் இருக்க வேண்டியவை என்னென்ன என்பதை தன் புத்தகங்களின் வழி பறைசாற்றியவர். இவரைப் போன்ற ஓர் ஆசானையல்லவா நான் பெற்றிருக்க வேண்டும். செவிமடுத்துக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு இன்னும் நன்றியோடு இருக்கிறேன்.

கவிதையிலேயே உட்கார்ந்து கொண்டு இருக்காதீர்கள். மேலே கடந்து வாருங்கள் என்ற சீ.முத்துசாமி அவர்களின் கட்டளைக்குப் பிறகு கவிதை எழுதுவதை நிறுத்திக்கொண்டு சிறுகதை பக்கம்  கவனத்தைத் திருப்பினேன்.

ஒரு பொய்யை நூறு முறை சொல்லிக்கொண்டே இருந்தால் அது உண்மையாகிவிடும் என்ற போக்கினை பெ.இராஜேந்திரன் விட்டொழிக்க வேண்டும். ஒரு வேளை எழுத்தாளர் சங்க முன்னெடுப்பால் யாராவது ஓரிருவர் உருவாகியிருக்கலாம். தகுந்த ஆய்வின் மூலமாகத்தான் அவர்கள் அதை நிரூபிக்க முடியும்.  இதழ்களில் வந்த கவிதைளைத் தொகுத்து பட்டறை நடத்துவதும் அந்த கவிதைகள் குறித்து பேசுவதும் கவிஞர்களுக்கு அங்கீகாரமாக இருக்கலாம்; ஆனால் அது பட்டைதீட்டுதலாக இருக்க முடியாது. அந்த பட்டறைகளில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு வேண்டுமானால் அதனால் பயன் கிடைத்திருக்கலாம்.  அப்படி வளர்ந்தவர்கள் இருந்தால் அவர்களைக் கண்டடைந்து எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம்.  அவர்களை தனக்கிருக்கும் செல்வாக்கினாலும் தொடர்புகளாலும் பெ.இராஜேந்திரன் முன்னிலைப்படுத்துவதுதான் சரி. அவர்களும் நன்றி விசுவாசத்துடன் தங்களின் எஞ்சிய வாழ்நளை கழிக்கக்கூடும். ஆனால், நல்ல எழுத்தாளன் தனித்துவமானவன். இந்தப் பகட்டுகளில் இருந்து தப்பிச் செல்லவே விரும்புவான். அவனுக்கு புறத்தில் இருந்து கிடைக்கும் எந்தப் போலியான வெளிச்சமும் வேண்டாம். விருதுகளால் அவன் தன்னை அலங்கரித்துக்கொள்ள அலையவும் மாட்டான். தனக்குள் ஒளிரும் உண்மையால் மட்டுமே அவன் கவிதைகள் வரலாற்றில் வாழும். 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...