மரணக்குழி

1

உறக்கத்தின் நடுவே போரோலத்தின் கதறல் கேட்டு விழிப்பு தட்டியது. இமைகள் இரண்டும் ஒட்டிக், கண்கள் திறக்க மறுத்தன. குழிக்குள் நான்கைந்து நாட்களாக உட்கார்ந்துக் கொண்டே தூங்கியதால் வந்த அயர்ச்சி. கண்களை நன்றாகத் திறந்தபோது மொத்த காடும் இருளால் சூழ்ந்திருந்தது. மூக்கின் முதல் சுவாச உணர்வு வந்ததும் மழை நீரில் பட்டு அழுகிய உணவின் வாடை நாசியை நிறைத்தது. பிணந் தின்னி கழுகுகள் உடலை கொத்தும் சத்தம் தூக்கத்திலும் காதில் கேட்டது. ஒரு கூகையின் ‘ஃபௌ… ஃபௌ…’ கதறல், நான் இருந்த குழிக்கு அருகே குண்டு விழுந்து கருகிய நிலையில் இருந்த சில்வர் ஓக் மரத்தின் மேல் இருந்து எழுந்தது.

நள்ளிரவைக் கடந்திருக்கலாம். வானத்தில் நட்சத்திரங்கள் மறைய தொடங்கியிருந்தன. தூக்கத்தில் பெரும் ஓலமாக கேட்ட சத்தம் மெல்லிய கேவலாக இப்போது அருகே கேட்டது. நான் குழியில் இருந்து வெளியே வராமல் கவனமாகச் செவிக் கூர்ந்து, சத்தம் வந்த திசையை நோக்கிக் காதை வைத்தேன். என் இடது பக்கமிருந்த மரத்திற்கு அப்பால் உள்ள குழியில் இருந்து வந்தது அழுகையின் குரல். நான் ‘ஷூ’ என்றேன். அச்சத்தத்தை எழுப்பக்கூட என்னுடலில் தெம்பில்லை. ஆனால் பயம் அதையெல்லாம் அறியாது. ‘ஷூ’ என்றவுடன் உடல் தளர்ந்தது. காய்ந்த தொண்டை கூசி இருமல் வந்தது. எனக்கு அவனை நினைத்து எரிச்சலாக இருந்தது. நான் பினாங்கில் இருந்து இந்த மலைக்காட்டிற்குள் ஓடி வந்து, இந்தக் குழியில் பதுங்கும் முன் பக்கத்து குழியில் மிரண்டிருந்த அவன் விழிகள் மட்டும் மின்னல் வெட்டில் கண்ணில் பட்டன.

இவை யாரோ பதுங்குவதற்காக வெட்டிய குழிகள். இப்போது அவர்கள் உயிருடன் இருப்பார்களா? அல்லது தப்பிச் சென்றிருப்பார்களா? என பலவாறாக நினைவுகள் எழுந்தன. அப்படி ஓடி வரும்போது அங்கு ஏராளமான குழிகள் இருந்ததைப் பார்த்தேன். சிலவற்றில் நாட்கணக்கான பிணங்கள் அழுகி கிடந்தன.

அவன் இங்கே வந்து வாரம் ஒன்றைக் கடந்திருக்கலாம். அவனைப் பிணமென நினைக்கும்படி அதனுள் கிடந்தான். நான் முதலில் அவன் குழியில்தான் பதுங்க நினைத்தேன். மிரண்டு வெறித்திருந்த அவன் விழிகள் மட்டும் என் மனதிற்குள் ஓடியது. அழுகையின் சத்தம் எழுவதும் பின் தணிவதுமாக இருந்தது.

இன்னும் மூன்று, நான்கு நாட்களில் நிலைமை சீராகிவிட்டால் கீழே இறங்கி விடலாம். ஆனால் போர் முடியும் வரை பினாங்கை கடக்க இயலாது. இங்கே இந்த பினாங்கு தீவில் யார் யாருக்கு எதிரி என்றில்லாமல் நான்கு திசைகளில் இருந்தும் குண்டு வந்து விழுந்த வண்ணம் இருந்தன. ஜப்பான் படை வீசிய குண்டில் இருந்து தப்பித்தவன் பிரித்தானிய படையின் துப்பாக்கி சூட்டில் சிக்கி மடிகிறான். உயிர் தப்பித்தவர்கள் பெரும்பாலும் இந்த தீவின் மேற்கு பக்கம் உள்ள மலைக்காட்டில் பதுங்கிவிட்டனர். இந்த மலையிலும் குண்டுகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. யாருக்கான குண்டு எப்போது வருமென்று நிச்சயமில்லாமல் எல்லோரும் பதுங்கியிருந்தனர்.

ஜப்பான் படை போக்குவரத்து அனைத்தையும் ரத்து செய்ய விரும்பியது. பட்டர்வொர்த் ரயில் நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த ரயில் பெட்டியின் மீது குண்டு வீசப்பட்டது. ரப்பர் காடுகள் கொளுத்தப்பட்டன. ஜார்ஜ்டவுனில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. இரண்டு படைகளுக்கும் எதிராக நடந்த கண்மூடி தனமான தாக்குதலில் ஊரில் இருந்த எல்லோரும் நாலாபுறமாக சிதறி ஓடினர். நான் அந்த ரயில் நிலையத்தில் இருந்து ஓடி வந்த போது அவன் பக்கத்து குழியில் இருந்தான். 

இப்போது அவன் அழுகையின் ஒலி அளவைக் கூட்டியிருந்தான். அழுகை என்றில்லாமல் கேவலாக மாறியிருந்தது. வெறும் உயிரச்சத்தின் அழுகுரல் என இப்போது படவில்லை. நான் பார்த்த போதே அவன் அந்த நிலையை கடந்துவிட்டிருந்தான்.

என் வாயை அவன் குழியிருந்த இடது பக்கம் திருப்பி, “எங்க ஊர்ல இப்டி குழிக்குள்ள இருக்கறது ஒரு வெளாட்டு” என்றேன். குரல் உடைந்து வெளிவந்தது. என் குரல் எழுவதை கேட்க எனக்கே வித்தியாசமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை என் குரல் உடையாமல் தெளிவாக, “ஒனக்கு குழியடி சித்தர் தெரியுமா? இதெல்லாத்தையும் ஒரு சடங்கா நெனச்சிக்க” என்றேன். எதிர் முனையில் இருந்து பதில் எழவில்லை. அந்தக் கேவல் ஒலி மட்டும் மயில் அகவுவது போல் அதே இடைவேளையில் அந்த திசையில் இருந்து வந்தது. “பிள்ள நாஞ் சொல்லுதது கேக்குதா. எனக்காண்டி ஒசரம் கேக்கேன் நீ பதிலு பேச வேணா ஆனா கரையாம இருடே” என்றேன். என் பேச்சு எனக்கே எதிரொலிப்பது போல் இருந்தது. ஆனால் என் பேச்சு அவன் காதிற்கு எட்டியதாக இல்லை. காதை நன்றாக அவன் திசையில் வைத்து கேட்டேன். இப்போது அவன் அழுகைக்கான அர்த்தம் புரிந்தது. இன்னும் ஒரு நாள் அப்படியே விட்டால் அவன் அந்த குழியிலேயே இறக்கக் கூடும். உயிர் பிரிய போவதை அறிவிக்கும் இறுதி மூச்சின் வெளிப்பாடு அவை. இத்தனை பெருஞ் சத்தம் என் உயிருக்கும் ஆபத்து. விடிவதற்குள் அவன் இறக்க வேண்டும். இல்லை அமைதியாக வேண்டும்.   

நான் தலையை மட்டும் வெளியில் நீட்டிப் பார்த்தேன். இருள் மொத்தமாக அப்பியிருந்தது. குழியில் இருந்து மேலே வந்ததும் காட்டின் அழுகிய வாடை குமட்டலை ஏற்படுத்தியது. விடுவிடுவென ஓடியது உடும்பாக இருக்க வேண்டும். அதன் வாயில் ஏதோ கவ்வியிருந்தது. அங்கிருந்த பிணங்களின் வீச்சமும், உதிர்ந்த இலை சருகுகளும், மழை நீரின் தேக்கமும் காட்டிற்கே உரிய மணத்தைக் களைத்து புது வாடையை உண்டாக்கியது. அனைத்திற்கும் மேலாக எழுந்த மல வாடை என் குடலைப் பிரட்டியது. வயிற்றுள் ஒன்றுமில்லாததால் எதுவும் வெளியே வரவில்லை. அவனிருந்த குழி பக்கம் நாசியை திருப்ப இயலாத வண்ணம் வீச்சம் எழுந்தது. காட்டைச் சுற்றி கண்களை அலைய விட்டேன். சிறிய எலிகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன. எந்த நொடியிலும் குண்டு வந்து விழலாம் என்ற பதட்டத்துடனே அந்த இருளில் குழிகள் நிசப்தத்தில் தென்பட்டன. நான் கண் இமைக்கும் நேரத்தில் எழுந்து பாய்ந்து அவன் குழிக்குள் சென்று என்னை மூடிக் கொண்டேன்.

அவன் உடல் பிணம் போல அந்தக் குழிக்குள் இருந்தது. கண்கள் கீழிறங்கி இருந்தன. அவன் என்னை விரட்டுவது போல் கையசைத்தான். அந்தக் கைகளும் எழ மறுத்தன. என்னை இங்கு சுற்றும் கழுகாகக் கற்பனை செய்திருக்கிறான். நான் அவன் கை நாடியைத் தொட்டுப் பார்த்தேன். நாடி துடிப்பு நன்றாக இறங்கியிருந்தது. பித்த நாடி குறைந்து, கப நாடி ஓங்கி அடித்தது. மிஞ்சி போனால் இன்னும் அரை நாள் உயிர் தாங்கலாம் என்ற நிலையிலேயே இருந்தான்.

அருகே சுற்றி நோட்டமிட்டேன். காடு மொத்தமும்  கருகி இருந்த அந்த பகுதியில் சிறிய துத்தி செடிகளும், சிறு புற்களுமே  இருட்டில் கண்ணில் பட்டன. வேகமாக ஓடி சென்று ஒரு எட்டில் கைக்கு சிக்கிய துத்தி செடிகளை முழு பலத்துடன் பறித்துக் கொண்டு, மீண்டும் அவன் குழிக்குள் சென்றேன். இலையை நன்றாக கசக்கி அதன் சாறை அவன் நாசி, வாய் வழியாக உள்ளே விட்டேன். முதலில் உணர்ச்சியில்லாமல் அதனைப் பெற்றுக் கொண்டிருந்த அவன் நாக்கு பின் உத்வேகத்துடன் வெளியில் நீட்டி பெற்றுக் கொண்டது. மிஞ்சியிருந்த இலைகளை அவன் வாய்க்குள் திணித்து சவைக்க சொன்னேன். அவன் உயிர் துடிப்பு மெல்ல மீண்டது. 

அவனை அறியாமல் ‘ம்கூம்…’ என்ற கேவல் ஒலி அவனிடம் எழுந்து மறைந்தன. அவன் எழுப்பும் இந்த கேவல் சத்தமே எந்த தடங்களும் இல்லாமல் ஒரு குண்டு வந்து எங்கள் திசையில் விழ போதுமானது. ஜப்பானியர்கள் எங்கும் இருக்கலாம். அவர்களுக்குக் குண்டுகளைப் போட ஒரு சத்தம் போதும். மேலும் அவர்கள் சைக்கிள்களில் பயணம் செய்வதாகக் கேள்விப்பட்டேன். இந்தச் சரிவு பாதை அவர்கள் பயணத்துக்குத் தோதாகவே பட்டது. பிரித்தானிய படைகள் வான் வெளியில் இருந்து குண்டுகளை எறிந்தனர். 

அவனிடம், “கேவாத டே எல்லாஞ் செரியாயிடும்” என்றேன். அவன் வலது கையில் ஏதோ காகிதம் போல் தென்பட்டது இருட்டில் எனக்கு மங்கலாகத் தெரிந்தது. சிவந்திருந்த அவன் விழிகள் அந்தக் காகிதத்தையே நோக்கிக் கொண்டிருந்தன. அவனருகில் சென்று அமர்ந்து அந்த வெள்ளைத் தாளைப் பார்த்தேன். அதில் மஞ்சள் நிறத்தில் பிஞ்சு கையொன்றின் அச்சு மட்டும் இருந்தது. அவன் குழந்தையாக இருக்கலாம். திரும்பி அவன் முகத்தை அருகில் பார்த்தேன். எந்தச் சலனமும் இல்லாத சிறுவனின் முகம் போல் மாறியிருந்தது. அவன் விழிகள் அசையாமல் அந்தத் தாளை பார்த்திருந்தன.   

நான், “இங்கருந்து எங்க போறது. போர் முடியுற வரைக்கும் இங்கருந்து போறது கஷ்டம்” என்றேன், என் குரல் இன்னும் சீராகவில்லை. அதே பாதி உடைந்தே ஒலித்தது. வாயிலிருந்து நாற்றம் வந்தது. சத்தத்தை குறைத்து குழியை விட்டு ஒலி வெளியே போகாத வண்ணம் பேசினேன். அவன் மிகவும் பயந்திருக்கிறான். அவன் இப்போதிருக்கும் நிலை அவனுக்கு புரிந்துவிட்டது. நான் பேசினால் தன்னை நிதானமாக்க முயற்சிக்கலாம்.

“எங்கூர்ல நா பூசாரியாக்கும். நாஞ் சொல்லுதேன் கேளு ஒனக்கு ஒரு கேடும் வரமா ஊர் போய் சேருவ.” என என் இடுப்பு மடிப்பில் இருந்த விபூதியை அவன் நெற்றியில் இட்டேன். இந்த நான்கு நாட்கள் பயம் வரும்போதெல்லாம் அதைதான் இறுக்கப் பிடித்துக்கொண்டேன். பசிவந்தால் ஒரு துளியை நாக்கில் வைத்து பசி தீர்ந்ததாக நினைத்துக்கொள்வேன். இப்போதும் அவனுக்குக் கிள்ளிக்கொடுத்தேன். 

“எல்லாம் பழக்கந்தான். பிள்ள… இப்டி குழிக்குள்ள இருக்கது சடங்காக்கும். எங்க ஊர்ல குழியடி சித்தரு இப்டி தான் ஒரு மட்டம் குழிக்குள்ள எறங்குனாரு பாத்துக்க. அதுக்கும் பொறவு இத ஒரு சடங்கா எங்கூர்ல செய்வாக” என்றேன். அவன் திரும்பி என்னைக் கவனிக்கத் தொடங்கினான். கண்கள் கீழே இறங்கிய படி இருந்தது.

நான், “எனக்கு திருநெவேலி பக்கம் ஆழ்வார்குறிச்சியாக்கும். எங்க ஊர் குழியடி குளத்தூர் சுடலை மாடன் கோவில்ல நடக்குற சடங்காக்கும் இது. குழியடி சித்தரு வந்து அந்த குழிக்குள்ள இருந்ததாக்கும் ஐதீகம், அவரு வந்து ஒக்காந்தத நானே கண்ணால பாத்திருக்கேன். அதெ ஓரொருத்தரும் ஒரு சடங்கா செய்வாக. நாம ஒத்தையில ஆடுற ஆட்டம், நாம குழிக்குள்ள போய் உக்காந்து வெளிய மூடிக்கிடனும். மரணக்குழின்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க.” என்றேன்.

சுவாரசியத்தில் நான் உரத்து பேசிவிட்டதாகத் தோன்றவும் மெல்ல தலையை எக்கி மேலே பார்த்தேன். முன்பு ஓடிய உடும்பு ஒரு அழுகிய உடலில் இருந்து எதையோ இழுத்துக்கொண்டிருந்தது. மீண்டும் குழிக்குள் பதுங்கி குரலைச் சன்னமாக்கினேன்.

அவன் “ம்…” என்றான். நான் சொல்வது அவனை அறியாமல் அவனுள் சென்று கொண்டிருந்தது. உயிர் போகும் அவஸ்தை எழும் சமயத்தில் அதனை இலகுவாக்க ஒரு பிடிப்பு நமக்கு தேவையாகிறது. “எனக்கு அப்ப வயசு ஒரு ஆறு இல்ல ஏழு இருக்குங் கேட்டியா. பொடியனாட்டம் ஊரச் சுத்தி வந்திகிட்டு கெடந்தேன். எங்க ஊரு சொடல மாடங் கோயிலு தான் நாங்க சுத்தி வார இடமாக்கும். அப்ப அப்பாவுக்கு கோயிலுல தாஞ் சோலி. அப்ப அதுக்கு பேரு குளத்தூர் சொடல மாடனாக்கும். குழியடின்ற பேரு பரமசிவம் பிள்ள பக்கதில இருக்குத குழிக்குள்ள யெறங்கின பொறவ வந்த பேராக்கும். பிள்ளையோட பேரு குழியடி சித்தன்னு மாரி போச்சு, சொடல மாடன் குழியடி சொடல மாடனா ஆயிட்டாரு.” என்றேன். நிதானமாக பேச முயற்சித்தேன்.

“நீ நெனைக்கித மாரி பரமசிவம் பிள்ள ஊர்ல அத்தன லேசு பட்ட ஆள் இல்ல கேட்டியா. ஊத்துமல ஜெமீன்ல இருந்து எட்டயாபுரம் ஜெமீன் வரைக்கும் பிள்ள தான் கணக்கு பிள்ளையா இருந்தாரு பாத்துக்க. ஜெமீன் கணக்கு வழக்கெல்லாம் இவரு போய் பாக்குத சோலி எல்லாயில்ல இவரு வீடு தேடி வந்தா பாத்து கொடுப்பாரு. ஊர்ல ஒரு சொல்லு பிள்ளைய மீறி நடக்காது. சொத்துபத்துன்னா திருநெவேலி ஜில்லாவுலயே அவரு கணக்கா சொத்து வச்ச ஆள் இல்லேன்னா பாத்துக்க. பிள்ளைக்கு மூனு சம்சாரமாக்கும். மூனுத்துக்கும் சேத்து எட்டு பிள்ளையலு. இது போக பிள்ளைக்கு வேற தொடுக்கும் உண்டுன்னு ஊருக்குள்ள சலசலத்துப்பாக. ஆனா எதையும் பிள்ள மின்னாடி பேசிக்கிட முடியாது. பேசுதவன் ஒடம்பு மறுநா பொணமா தான் கெடக்கும். பிள்ள, கிட்ட போவ முடியாத ஆளா இருந்த சமயம் அப்ப. ஒரு நா என்ன நெனச்சாரோ தெரியல, ஒடம்புல ஒட்டு துணியில்லாம விடுவிடுன்னு வந்தவரு ஊருக்கு தெக்கால இருக்க சொடல மாடன் கோவிலு பின்னாடி உள்ள குழிக்குள்ள போய் ஒக்காந்து தன்ன மூடிக்கிட்டாரு. மொத நாளு ஏதோ புத்திகெட்டு வெளாடுதாருன்னு எல்லாரு விட்டுபுட்டாக. ஆனா மூனாம் நாளு வரைக்கு ஆள் வெளியில வரலன்னதும் அவக குடும்பத்துக்கு புத்திமுட்டி பெயிட்டு. எல்லாரு வந்து கூட ஆரம்பிச்சிட்டாவ. பிள்ள குழிக்குள்ளயிருந்து ஒரு அசைவையுங் காணும். மூனு சம்சாரமுல்லா ஒன்னு மத்தத ஏச ஆரம்பிச்சிது. ஓரொருத்தரு சொந்த காரங்க வந்து கூட ஆரம்பிச்சாவ. பிள்ள வச்ச சொத்து கணக்கு அம்புட்டுல்லா. ஏச்சு பேச்சுக்கு பிள்ள மசியலன்னு எல்லாத்துக்கும் பிடிபட்டு போச்சி. எல்லா ஒன்னு கூடி ஒப்பாரி, அஞ்சாம் நாள் வரைக்கும் பிள்ளையிட்ட இருந்து பேச்சு மூச்சு இல்ல பாத்துக்க. ஆனா குழிக்குள்ள ஒரு பய யெறங்கல சாமி குத்தன்னு அம்புட்டு பயம். ஏழாம் நாத்து எல்லா அவா அவா சொலிய பாக்க பெயிட்டாவ. அதுக்கு பொறவ குழி பக்கத்துல யாரு சீண்டுததில்ல உள்ளுக்க இருந்து பொண வாட வீசும். நாப்பத்தி எட்டாந் நாத்து பிள்ள எந்திச்சி வெளியில வந்தாரு. அப்ப நா அங்கண நின்னு பாத்துக்கிட்டு இருக்கேன் கேட்டியா. அவரு ஒடலு வத்தி போய் கூடாட்டம் கெடக்குது. மீச தாடிலாம் வெளுத்து புளுதி படிஞ்சு வெளிய வந்து நின்னாரு. என்ன பாத்து சிரிக்க ஆரம்பிச்சாரு. சிரிப்பு சத்தங் கூடிக்கிட்டே போச்சு. சிரிச்சிக்கிட்டே கோயில் சுத்தி வந்தாரு. நா ஓடி போய் ஊரக்குள்ள ஆள கூட்டியாந்தேன். ஊர் கூடி நின்னு வேடிக்க பாக்குது, சிரிச்சிட்டே நேரா ஓட ஆரம்பிச்சிட்டாரு. ஓடி போய் சிவசைலம் மலைக்குள்ள மறைஞ்சிட்டாரு பாத்துக்க.” என்றேன்.

அவனிடமிருந்த கேவல் விட்டிருந்தாலும், அவன் மௌனம் என்னை மேலும் பேசத் தூண்டியது, “பிள்ள, எல்லா ஒரு தெய்வத்தோட கணக்காக்கும். அதுனால நா எதையும் மனசில போட்டிகிறதில்ல கேட்டியா. எதுனாலும் செரி டே, நான் குழியடி மாடன் கிட்ட விட்டு போடுவேன். எல்லாம் அத்தோட கணக்குல்லா. அதுக்கு மின்னாடி நாம என்னத்த மசிரு செய்யிதது.” என்றேன்.

கூகையின் ஒலி மறைந்திருந்தது. பறவைகளின் சலசலப்பு சத்தம் தொலைவில் கேட்டது. இரவு மறையும் தருணத்திற்கான அறிகுறிகள் அவை. பிணந் தின்னி கழுகுகளின் கொத்தும் சத்தம் விடாமல் எழுந்தது. அவன் இறப்பை என்னால் தள்ளிப்போட முடியுமே தவிர இந்த காட்டிற்குள் இருந்து வெளியேறினால்தான் அவனைக் காப்பாற்ற முடியும். அது இன்னும் இரண்டொரு நாளில் நிகழ சாத்தியமில்லை. அதனை அவனும் அறிந்திருந்தான் என்பது அவன் உடல் நிலைத்திருந்த விதத்தில் தெரிந்தது.

நான் பேசுவது அவன் இறுதியை தள்ளி போட மட்டும் உதவியது. அதனால் என்னால் முடியும் வரை பேசினேன். “இப்டி குழிக்குள்ள இருக்கது நாம விதிய தெரிஞ்சிக்கது மட்டுமில்ல கேட்டியா. இத நாஞ் சொல்லலே, சிவசைலம் மலைக்கு போன குழியடி சித்தராக்கும் சொன்னது. பின்ன அவர பத்தி ஒவ்வொரு நாத்தைக்கு ஒவ்வொரு கத வரும். அவர மலைக்கு மேல பாத்தேன்னு ஒருத்தஞ் சொல்லுவான். பாபநாசத்துல் பாத்ததா ஒருத்தஞ் சொல்லுவான். அவர நா ஒரு நாளு சிவசைலம் மலைக்குள்ள போறப்ப பாத்தேன். காட்டுக்குள்ள சுத்திக்கிட்டிருந்தவரு என்ன பாத்து சிரிச்சாரு. நாங் கிட்டக்க போனேன். ‘பிள்ளலா என்ன குழிக்குள்ள யிருந்து வாரப்ப பாத்தது’ ன்னு கேட்டாரு. பின்ன என்ன அங்கருந்து போக சொல்லிப்புட்டு காட்டுக்குள்ள நடக்க ஆரம்பிச்சிட்டாரு. போனவரு பாடிக்கிட்டே போனாரு, ‘மண் அகன்றேன், பொன் அகன்றேன், பசி அகன்றேன், பிணி அகன்றேன்… அகலாதது ஒன்றினோடு எஞ்சினேன், இனி அதகன்ற பின் அவனைக் காண்பேன்’ ன்னு பாடிக்கிட்டே மறைஞ்சிட்டாரு.” என்றேன்.

அவன் அந்த காகிதத்தை கைக்குள் வைத்து பொத்திக் கொண்டு நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“டுவீக்க்க்க்…” என்ற சத்தத்துடன் ஒரு கருங்குருவி எங்கள் தலைக்கு மேல் பறந்தது. இந்தக் காட்டில் இன்னும் பறவைகள் இருப்பது அதிசயமாக இருந்தது. மேலே பார்த்தேன் நன்றாக விடியத் தொடங்கியிருந்தது. காடு மொத்தமும் கருகியிருந்ததால் வெளிச்சம் ஊடுருவ அத்தனை கஷ்டம் ஏற்படவில்லை. அவன் முகம் தெளிவாக தெரிந்தது. ஒல்லியான முகம் நீர் கோர்த்து வீக்கம் கண்டிருந்தது. என் பேச்சின் மூலம் அவன் சமாதானம் அடைவதும் தெரிந்தது. அவன் உடல் தளர்வதும். சுற்றி பார்த்தேன் மொத்த துத்தி செடியையும் பிடுங்கியிருந்தேன். கருகிய சாம்பல் மட்டுமே அந்தக் காட்டில் மிச்சமிருந்தன. கையில் மிஞ்சியிருந்த இலைகளை அவன் வாயில் கொடுத்தேன். இதற்கு மேல் நான் செய்வதற்கு ஒன்றுமிருக்கவில்லை அவன் விதியை என்னால் சிறிது நேரமே பிடித்துவைக்க முடிந்தது. நான் எழுந்து என் குழிக்குச் செல்ல விரும்பினேன். அதே கண நேர வேகத்தில் பாய்ந்து மறைய வேண்டும்.

“பிள்ள கவலப் படாம இருக்கணும். இந்த குழி உன் தெய்வத்த உனக்கு காட்ட வந்ததுன்னு நெனச்சிக்கோ. பேசாம ஒக்காந்திரி” என்றேன்.

நான் சொல்ல வருவது அவனுக்கு புரிந்தது. அவன் மீண்டும் காகிதத்தைப் பார்த்தான். நான் கையில் எடுத்தபோது தடுக்கவில்லை. “பையனோடே” எனக் கேட்டேன். அவன் ஆம் என்பது போல் தலையசைத்தான். அவன் கண்கள்  மேலெழுந்து அதிலேயே நிலைத்திருந்தன.

நான், “இந்த கை தான் உன் சாமின்னு நெனச்சிக்கோ. இந்த குழியில இது தான் ஒனக்கு காப்பு, பதறாம இரி. மரணக்குழிக்குள்ள உயிரு போறத கண்டுகிட்டவன் வாழ்ந்துபுடுவான் பாத்துக்க” என்றேன். என் பேச்சால் சீண்டப்பட்டு வெடுக்கென என்னைப் பார்த்துத் திரும்பினான்.

“அந்த சித்தரு நெசமாலும் எந்திச்சு போனாரா?” எனக் கேட்டான். பேச முடியாமல் அவனிடமிருந்து சொல் எழுந்தது.

நான், “ஆமா” என்றேன். “அவரு என்ன பாடுனாரு” எனக் கேட்டான். நான் அதனை திரும்ப பாடி காட்டினேன்.

பின் தத்தளிக்கும் குரலில், “நான் இனி இங்க இந்தக் குழிக்குள்ள இருக்க போறதில்ல நா போறேன்” என்றான். எனக்கு ஒரு கணம் திக்கென்றது. அவன் கண்களைப் பார்த்தேன். அழுது சிவப்பேறிய கண்களின் உள்ளே அமைந்த நிலைத்த தன்மை அதிலிருந்தது. இப்போது உறுதியுடன், “நான் போவணும்” என்றான். என்னால் பதில் பேச இயலவில்லை. சிறிது மௌனம் காத்தேன்.

பின் என் கையிலிருந்த விபூதியை எடுத்து மீண்டும் அவன் நெற்றியில் இட்டு, “பெயிட்டு வாடே.” என்றேன்.

காகிதத்தை மடித்து அவன் பைக்குள் வைத்து தவழ்ந்த வண்ணம் மேலேறி சென்றான். இரண்டடியில் விழுந்துவிடுபவன் போல் இருந்தான். என் தலை மட்டும் மேலேறி அவன் செல்லும் திசையை நோக்கிக் கொண்டிருந்தன. குழியடி குளத்தூர் சுடலையை வேண்டிக் கொண்டேன். முதலில் தவழ்ந்து சென்றவன் பின் காலடி தள்ளாடி மெல்ல அடிவைத்து சென்றான். அவன் சென்று மறையும் வரை அவனை வெறித்திருந்தேன்.

நான் அதே குழிக்குள் அடுத்த மூன்று நாள் இருந்து அதன்பின்னே வெளியே வந்தேன்.

பினாங்கிலிருந்து வெளியே செல்லவே மூன்று வருடம் ஆகியது. அங்குள்ள வண்டிமலச்சம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தேன். போர் முடிந்து நான் நாடு திரும்பும் முன் வருடம் ஏழு ஓடியிருந்தது. ஆழ்வார்குறிச்சிக்கு நான் திரும்பியிருந்தேன். மீண்டும் குழியடி சுடலை மாடன் கோவிலுக்கு.

2

நான் கோவில் தின்ணையில் படுத்திருந்தேன். காலை நன்றாக புலரக்கூட இல்லை. ஒரு நடுவயதுகாரன் வந்து என்னை எழுப்பினான். உடன் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவனை அழைத்து வந்திருந்தான்.

என்னிடம் வந்து, “என்ன அடையாளம் தெரியுதா” என்றான். எனக்கு சட்டென ஓர்மை வரவில்லை.

“சட்டுன்னு நாவகம் வரல்ல, வயசாவுதுல்லா” என்றேன். அவன் சட்டை பையில் மடித்து வைத்திருந்த அந்த வெள்ளை காகிதத்தை என்னிடம் நீட்டினான். மஞ்சளேறி இருந்த காகிதத்தில் அந்த பிஞ்சு கையின் தடம் திட்டுதிட்டாக இருந்தது. பினாங்கின் மரணக்குழி மனதுள் எழுந்தது.

என்னை கட்டி அணைத்தான். அவன் அருகில் இருந்த பையனை என் காலில் விழுந்து ஆசி வாங்கினான். நான் இருவருக்கும் விபூதியிட்டு விட்டேன். அந்த சிறுவனை அருகில் அழைத்து, “உன் பெயரென்ன” என்றேன்.

அவன், “குழிந்திரன்” என்றான். நான் புன்னகைத்தேன்.

அப்போது தான் என்னுடன் இருந்த அவன் தந்தையின் பெயரையும் கேட்டு தெரிந்தேன். “சிவராம்” என்றான்.

சிவராம்,“நா அந்த குழிக்குள்ள இருந்தப்போ இவன் அம்மா பச்ச ஒடம்புகாரியாக்கும். இவன் மூனு மாசம்” என்றான்.

அவன் முகத்தில் இப்போது புன்னகை படர்ந்திருந்தது. முற்றிலும் புதிதானவனாக இருந்தான். உடல் நன்றாகப் பூசியிருந்தான். முடியெல்லாம் நரைக்க தொடங்கியிருந்தன. அன்று நான் பார்த்த மெலிந்த ஒல்லியான தேகம் மொத்தமாக மாறியிருந்தது. நான் சுடலை மாடனுக்கு அவன் கொண்டு வந்திருந்த புது துணி அணிவித்துப் பூஜை செய்து விபூதியிட்டேன்.

காலை சாப்பாட்டிற்கு ஊருக்குள் ஆள் சொல்லி அனுப்பியிருந்தேன். அவன் சொன்னான், “அன்னைக்கு அந்த காட்டுல எப்படி நடந்தேன்னு எனக்கே தெரியல… அது ஒரு தெய்வ அருள் தான்” என்றான். அந்தக் காட்டின் எல்லையில் மயங்கி கிடந்திருக்கிறான். அங்கு தப்பி வந்த ஒரு செட்டியார் தான் அவனைக் காப்பாற்றி ஒரு வருடம் உடன் வைத்து வைத்தியம் பார்த்து கோலா சிலாங்கூர் கூட்டி சென்றிருக்கிறார். அங்கிருந்து சுமத்ரா சென்று, சுமத்ராவில் இருந்து கப்பல் வழியாக பர்மாவை அடைந்து, அங்கிருந்து பெங்கால் என அவன் திரும்பி வந்த சாகசங்கள் அனைத்தையும் கூறினான். ஒவ்வொரு இடத்திலும் புது ஒருவனாக மாறியிருக்கிறான். ஆனால் அவன் எந்தச் சூழலிலும் சோரவில்லை. பயந்து பின்வாங்கவுமில்லை.

அவன், “அந்த சித்தர் குழிய காட்டுறீங்களா?” எனக் கேட்டான்.

நான் கோவிலுக்கு தென் திசையில் அமைந்திருந்த அந்தக் குழிக்குச் சென்று காட்டினேன். அருகே சென்று அதனையே பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் இருந்த அவன் பையனுக்கு அதனைக் காட்டி ஏதோ சொன்னான்.

பின் என்னிடம் திரும்பி “மரணக்குழி” என்றான்.

நான் “ஆமா” என்றேன். அவன் அதனையே வியப்புடன் திரும்ப திரும்ப பார்த்தான்.

“அவரு விட்டு போக நெனைச்ச யெடத்த புடிச்சி நீ வெளிய வந்துட்ட” என்றேன்.

அவன் சம்மதிப்பது போல் தலையசைத்தான். விழிகளை குழியில் இருந்து திருப்பவில்லை.

“மனுசனோட அத்தன இச்சையும் தாண்டி அந்த கணத்துல வந்து நின்ன இன்னொன்னு என்னது டே” என்றேன்.

அவன் பதில் பேசாமல் குழியை ஒருமுறை வலம் வந்தான். பின் என்னிடம் விடைப் பெற்று வெளியேறினான். போகும் போது குழிந்திரனின் கையை தன் வலது கரத்தால் இறுகப் பற்றிக் கொண்டு நடந்தான்.


ஜி.எஸ்.எஸ்.வி நவீன் 2020 முதல் எழுதி வருகிறார். பொதிகை மலைத் தொடரின் அடிவாரத்தில் வளர்ந்த இவரது புனைவுகளில் மலைகள் சார்ந்த களங்களே அதிகம் இடம்பெறுகின்றன. இவரது படைப்புகள் தொடர்ந்து வல்லினத்தில் பிரசுரமாகி வருகிறது. வரலாறு, நாட்டுபுறவியல், தொன்மம் சார்ந்து வாசிப்பதில் அறிவதில் ஆர்வம் கொண்டவர்.

மின்னஞ்சல் : gssvnavin@gmail.com

8 comments for “மரணக்குழி

  1. September 2, 2021 at 12:28 am

    இது ஜி எஸ் எஸ் வி நவீனின் இன்னொரு நல்ல கதை.கதையின் தொடக்கத்திலிருந்து கட்டி எழுப்பிக்கொண்டு வந்த இறுக்கமான சூழல் கடைசிவரை நீடித்தது. மாலாயா நிலத்தின் நிகழ்ந்த போர்க்காலத்தையும் குழியடி மாடன் கதையையும் இணைத்து கதை வலிமையுடன் நிறுவுகிறார். கதைக்கேற்ப ‘இருளும் மர்மமும்’ தன் படைப்பு மொழியால் செறிவாக்கியிருக்கிறார்.

  2. September 2, 2021 at 12:39 pm

    ஜிஎஸ் எஸ் வி நவீனின் இன்னொரு நல்ல கதை இது. மலாயாவில் மர்மமும் பதட்டமும் குறையாத மொழியில் எழுதிச் செல்கிறார். நாமே குழிக்குள் சிக்கிக்கொண்டு அவஸ்தைக்குள்ளாகிறோம். நல்ல கதை.

  3. Balaji Raju
    September 2, 2021 at 11:39 pm

    நவீனிடமிருந்து இன்னொரு அற்புதமான சிறுகதை. இக்கட்டான சிழலில் மனித அகம் எதைக்கொண்டு எழுகிறது என்ற கேள்வியை எழப்புகிறார். அவரிடமிருந்து தொடர்ந்து ஆழமான சிறுகதைகள் வந்தவண்ணமுள்ளன.

  4. Balaji Raju
    September 3, 2021 at 8:33 am

    நவீனிடமிருந்து இன்னொரு ஆழமான வாசிப்பனுபவம் தரும் சிறுகதை. மனிதர்களின் ஆதார நம்பிக்கைகள் பற்றிய கதை ஒன்றை மலேசிய வரலாற்றைத் தொட்டு அளித்திருக்கிறார். அவருடைய கதைகள் விரிவான வாசிப்புக்கானவை, அவருக்கும் வல்லினம் குழுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  5. Jayaram
    September 3, 2021 at 5:13 pm

    தொன்மத்தை வரலாற்றை கதையில் பயன்படுத்தி தொன்மத்திலிருந்து பெற்ற ஒரு தொடர்ச்சியும் அதிலிருந்து தற்போதைய வாழ்விற்குத் தேவையான ஒரு மீட்பு என்று இக்கதையை வாசித்தேன். ‘யாயும் ஞாயும்’ கதையையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வைத்தது. அதில் காதல் சிக்கலிலிருந்து விடுபடுவதற்குத் தேவையான ஒரு பிடிப்பை தொன்மம் அளித்தது. ‘மரணக்குழி’யில் மரணத்திலிருந்து மீள்வதற்கான ஒரு உத்வேகத்தை தொன்மம் அளிக்கிறது. ஆனால் முற்றிலும் வேறு களம்.

    மாடன், வில்லுப்பாட்டு என்று குறிப்பாக நாட்டுப்புற வழிபாடுகளில் குமரி மாவட்டத்தின் சாயல்கள் திருநெல்வேலியிலும் உள்ளதால் அந்நிலத்தின் கதைகளும் எனக்கு அணுக்கமானது. அதனாலேயே திருநெல்வேலியின் தொன்மம் அது சார்ந்த குழியடி சொடல மாடன், ஜெமீன், சிவசைலம் மலை எல்லாம் வருவதால் எனக்கு இக்கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கூடவே மலேசிய போர் சூழல் விவரணை. “டுவீக்க்க்…. ” என்ற சத்தத்துடன் ஒரு கருங்குருவி எங்கள் தலைக்கு மேல் பறந்தது. இந்த காட்டில் இன்னும் பறவைகள் இருப்பது அதிசயமாக இருந்தது’ போன்ற வரிகள் கதையின் மையத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

    வாழ்த்துக்கள் நவீன்!

  6. September 6, 2021 at 12:20 am

    அசாதாரணமான களத்தில் நிகழும் சிறுகதைக்கான சிக்கல் வாசகன் உள்ளே நுழைவதற்கான வாயில்கள் எளிதில் திறப்பதில்லை என்பதுதான். போர் பற்றிய கேள்விஞானம் மட்டுமே கொண்டவர்களுக்கு “எரிந்த காட்டில் எளிதாக ஊடுருவும் வெளிச்சம்” போன்ற நுண்மைகள் புலனனுபவமாக மாறி சூழலுக்குள் நுழைய உதவும் பிசிறற்ற சித்தரிப்புகள்.

    பரமசிவத்துக்கும் சிவராமுக்கும் அக்குழிகள் இரண்டும் மரணக்குழிகள் எனினும் ஒருவகையில் மறுபிறப்புக்கு வாயிலாக அமையும் கருக்குழிகள் எனலாம். ஒரு குழியை வாயிலாகக் கொண்டு பரமசிவம் உலகியல் வெற்றிகள் அனைத்தையும் உதறிச்செல்கிறார். அவர் உதறிய உலகியலை வலுவாகப் பற்றிக்கொண்டு சிவராம் உயிர் தப்புகிறார் என்ற கோணத்தில் வாசிக்க முடிந்தது. கதையின் முடிவில் பூசாரி முன்வைக்கும் பார்வைக்கோணம் இம்முடிவை அடைய ஒரு தூண்டல். எனினும், பரமசிவத்தின் பாடலை சிவராம் என்னவாக பொருள்கொண்டார் என்பதில் ஒரு இடைவெளி உள்ளது. அங்குதான் வாசகன் தன்னைப் புகுத்திக்கொள்ள முடியும்.

    மற்றொரு நல்ல கதைக்கு நன்றி நவீன்.

    அன்புடன்
    விஜயபாரதி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...