1-காக தூதன்
முன்வினையின் காரணமாக பருந்தால் வேட்டையாடப்பட்டு பாதி உடலை இழந்த குருவியைக் காகம் ஒன்று பராமரித்துக்கொண்டிருந்தது. குருவியின் உயிர் விசை பாதி உடலிலும் பாதி வெளியிலும் கிடந்து அதிர்ந்துகொண்டிருந்தது துடியாக. காகம் உணவும் நீரும் குருவிக்கு அளித்து அதை நிழலில் கிடத்தி பார்த்துக்கொண்டது.
பிரக்ஞை மீண்ட குருவி காகத்தின் அருகாமையைக் கண்டு தன் இறுதிக்காலத்தை ஊகித்து மௌனமாகக் கிடந்தது. கிடந்த குருவிக்கு ஒரு கேள்வி உதித்தது. அது காகத்தைப் பார்த்து வினவியது. “ஐயா, தங்கள் செயலுக்கு பின் உள்ள அறம்தான் என்ன? நான் தங்களுக்கு உணவாகக்கூடியவன். இருப்பினும் என்னைப் பராமரிக்க காரணம் யாது?”
காகம் சொன்னது, “நண்பனே, நானும் முன்பு ஒருநாள் உன்னைப்போலவே உடல் சிதறிக் கிடந்தவன்தான். அன்று காகமாகிய நான் என் சட்டகத்திற்கு வெளியே சிறிய சஞ்சாரம் செய்து வந்தேன். அப்போதிருந்து நான் காகமாகவும் காகம் அல்லாதவனாகவும் உணர்கிறேன். அவ்வாய்ப்பு உனக்கும் திறந்தே உள்ளது. அதனால் உன்னை அப்படியே விட்டுச் செல்ல மனம் இல்லை. ஓய்வு எடு. உனக்கு இப்போது ஓய்வு முக்கியம்.”
ஆர்வமும் உத்வேகமும் கூடியதால் உயிர் ஆசை கிளர்ந்து குருவி தீனமான குரலில் கேட்டது. “மேலும் சொல்லுங்கள். நிறுத்திக்கொள்ளாதீர்கள். அது என்ன சட்டகம் தாண்டுதல்? காகம் அல்லாதவன்?”
சிறிதுநேரம் மெளனமாக இருந்தது காகம். நிசப்தமான அந்த இடைவெளியால் குருவி மீண்டும் பிரக்ஞை இழந்து அதன் கண்கள் கவிழச் சென்றன. அதை உணர்ந்த காகம் “சொல்கிறேன் கேள்….” என்றது. குருவி கண் விழித்து அகம் விழித்துக் கேட்கலானது.
“காட்டு விலங்கால் அடிபட்ட நான் உடல் சிதறி உயிர் விரவி ஒரு மொட்டைப் பாறையின்மீது நெடுநேரம் கிடந்தேன். அப்போது வானிலிருந்து தொன்மையான பாடல் ஒன்று அசரீரியாக என்னுள் வந்து விழுந்தது. அது உண்மையா, உளமயக்கா என்று எனக்கு புரிபடவில்லை. ஆனால் அப்பாடல் என் நினைவில் நீங்காத ரீங்காரமாக ஒலித்தது. அப்பாடலோடு நான் கிடந்தேன்.”
எம்பிக் குதித்தவர்கள்
அப்பால் பார்த்தவர்கள்
அப்பால் பார்த்தவர்களுக்கு என்று
ஒரு பொது பாஷை உள்ளது
அந்தப் பொது பாஷையில்
கதைத்தவர்கள் அனைவரும்
அப்பால் பார்த்தவர்களே.
எல்லை தாண்டியவர்களுக்கு
வேறொரு எல்லை
அங்கு பார்த்தவர்கள்
இங்கு நகர்ந்து அமர்கிறார்கள்
இப்பால் வாழ்ந்தாலும்
அவர்கள்
அப்பாலுக்கு உரியவர்கள்
அப்பால் செல்ல
அப்பாலிருந்து ஒரு கை உதவும்
“முடங்கியே கிடந்த என்னை விடுவிக்க ககனமார்கி ஒருவர் வந்து எனக்கு அவரின் கதை ஒன்றைச் சொன்னார். அதை உமக்கும் உரைக்கிறேன் கேள்.” பகுதி புனைந்தும் பகுதி நினைந்தும் காகம் சொல்லலாயிற்று.
2-அப்பால் பார்த்த ஞமலி
ககனமார்கி சொன்னார், எனக்கு ஒரு எஜமானர் இருந்தார். அவர் ஊர்க்காவலர். அவருக்கு துணைக்காவலன் நான். அவர் யோகி, தியானி. சில நாட்கள் தொடர் தியானத்தில் இருப்பார். அப்படி இருக்கும்போது நான் அவருக்கும் ஊருக்கும் சேர்த்து காவல் இருப்பேன். எங்கள் கிராமம் மலை அடிவாரத்தில் இருந்ததினால் நாங்கள் காவல் காப்பது காட்டு விலங்குகளிடம் இருந்துதான். யானை, பன்றி, மான், எருமை போன்றவை பயிர்களை நாசம் செய்யும். சிங்கம், சிறுத்தை, புலி, கரடி உயிர்களை நாசம் செய்யும். அவைகளிடம் இருந்து ஊரைக்காப்பது எங்கள் அறமாக இருந்தது. என் எஜமானர் ஒரு மனிதர், ஆகையால் என்னைவிட மேம்பட்டவர். நான் அவருடனேயே இருந்தேன். அவர் கால்களுக்கு அடியில். என் உடல் அவரை எந்நேரமும் உரசிக்கொண்டே இருக்கும். என் எஜமானர் சாப்பிடுகிறாரோ, இல்லையோ எனக்கு நாச்சோறு வைத்துவிடுவார். நான் குரைத்து குரைத்து பல வன விலங்குகளின் ஊர் பிரவேசத்தைத் தடுத்துள்ளேன். பல விலங்குகளிடம் நேரடியாகச் சண்டை செய்துள்ளேன். அன்றெல்லாம் எனக்கு இன்றிருக்கும் உள்ளொளி நிகழவில்லை. நான் காவல் காப்பேன். அவருக்கும் ஊருக்கும் விசுவாசமாக இருப்பேன். அவ்வளவே.
நான் அசந்த ஒருநாள், தியானத்தில் அமர்ந்திருந்த என் எஜமானரைப் புலி ஒன்று அடித்து இழுத்துச் சென்றது. நான் குரைத்துக்கொண்டு பின் சென்றேன். புலி அவரைப் போட்டுவிட்டு ஓடிவிட்டது. நான் ஊர் சென்று கிராமவாசிகளிடம் குரைத்து, கத்தி, உறுமி, வாலாட்டி, குறிப்புணர்த்தி அவர்களைக் கூட்டி வருவதற்குள் நீண்ட நேரம் ஆகிவிட்டது. அதுவரை அவர் ஒரு பாறையின் மீது வான் நோக்கி கிடந்தார். யாருடனோ பேசிக்கொண்டிருப்பதுபோல வாயசைத்துக்கொண்டு இருந்தார். கிராமத்தினர் வந்து அவரை வீடு கொண்டு சேர்த்தனர். பாதி உடலுடன் பாதி உயிர் அதிர்வுடன் ஐந்து நாட்கள் உயிருடன் இருந்தார். அறம் தவறிய நான் அருகிலேயே படுத்திருந்தேன். எனக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. இறுதிநாளில் அவருக்கும் தெரிந்துவிட்டது. நான் அருகில் இருந்து அவரை அனுப்பி வைத்தேன். ஒவ்வொன்றாக அவர் நிறுத்திக்கொண்டு வருவதை அருகில் இருந்து கவனித்தேன். உடற்செயலை, மனச்செயலை, ஞாபகங்களை, ஞாபகங்களின் கலசமாகிய உணர்வுகளை, உறுப்புகளை, உஷ்ணத்தை இறுதியாக உயிரை என்று.
அப்படி விட்டுக்கொண்டு வரும்போது ஏதோ ஒரு கணத்தில் எனக்காகக் கவலைப்பட்டார். அப்புறம் இல்லாமல் போனார். அவர் இருப்பையும் இல்லாமையும் நான் துல்லியமாக அறிந்தேன். அந்த இல்லாமையோடு நான் பூரணமாக இருந்தேன்.
அவர் உடல் பிரியும்போது என்னை ஒரு மின்னல் கீற்றுபோல் தடவி சென்றார். ஒரு க்ஷணப்பொழுது நான் மனிதனாக உணர்ந்தேன். அந்த நிமிர்வு, அந்தத் தெளிவு, அந்த மொழி, அந்த வீச்சு, அந்த வியன் திறப்பு. அணுவிலும் அணுவான மெல்லியதிலும் மெல்லியதான சூக்குமத்திலும் சூக்குமமான அந்த க்ஷணம். கடவுளர்களுக்கே உண்டான ஒளி. அது என்னை நிறைத்துத் தழுவிக் கழுவி சென்றது.
அருவத்திற்கும் உருவத்திற்கும் இடைப்பட்ட அந்த இருப்பு ஒரு விதையாக என்னில் விழுந்தது. அப்பால் பார்த்துவிட்டேன். இனி நாயென வாழ்வதெப்படி.
என்னுள் விழுந்த அந்த விதை என்னை முழுதும் நிறைத்திருந்தது. என் எல்லைகள் மீறி வெளியே சிந்திக்கொண்டிருந்தது. அதன் பாரம் தாங்க முடியவில்லை. அதன் ஒளி உயிர் கூசியது. மனிதத் தெளிவை நாய் உடல் கொள்வதில்லை. கலம் கொள்ளா அமுதப்பெருக்கு. அந்த பேரனுபவம் அதன் சாத்திய எல்லை வரை நீண்டு, தங்கி, பின்பு சுருங்கியது.
அப்புறம் மனிதர்கள் வந்தார்கள். இன்னும் கொஞ்சம் மனிதர்கள் வந்தார்கள். பந்தல் அமைத்தார்கள். கூடி நின்று அழுதார்கள். எல்லோரும் சாப்பிட்டார்கள். மீண்டும் அழுதார்கள். மீண்டும் சாப்பிட்டார்கள். அப்புறம் என் எஜமானரைத் தூக்கிச் சென்றார்கள். நான் வெளியே வந்தேன். அனைவரையும் அனைத்தையும் அந்நியமாக உணர்ந்தேன். இனி இங்கு நான் இருக்கலாகாது. என் கால்கள் இருப்பு கொள்ளாமல் என்னை இழுத்துச் சென்றன. நான் கூட சென்றேன்.
நான் செல்லும் பாதைகள் என் கால்கள் மட்டுமே அறிந்திருந்தன. என் இருப்பை நான் மீண்டும் உணர்கையில் நான் வேறெங்கோ இருந்தேன். வேறு மனிதர்கள், வேறு நகரம், வேறு நிலம், வேறு காற்று. எல்லாம் அந்நியமாக. இனி ஒருபோதும் நான் பழையவன் கிடையாது. அந்த மகா அனுபவம் ஒரு விதையாக எண்ணில் விழுந்துவிட்டது. அது ஒன்றே துணையென என் மீதி வாழ்வை நான் எதிர்கொள்ள விழைந்தேன்.
நான் சென்ற இடங்களில் எல்லாம் உணவு கிடைத்தது. உறங்க இடம் கிடைத்தது. புது புது பிரதேசங்கள். பாதசாரிகளோடு சில நாட்கள். யாத்திரீகர்களோடு சில நாட்கள் என கழிந்தன. என் இனத்தவர்களுடன் ஒரு விலக்கம். கண்டால் ஒதுங்கிவிடுவேன்.
ஒருநாள் வேறொரு நாய் என்னைப் பின் தொடர்ந்தது. என் ஓயாத நடைக்கு ஈடுகொடுத்து வந்தது. எப்போது இருந்து என் பின்னால் வருகிறது என்று தெரியவில்லை. நான் சமீபமாகத்தான் அதை உணர்ந்தேன். நின்றால் நிற்கிறது. நடந்தால் நடக்கிறது. வாலாட்டுகிறது. நான் பார்த்தால் உடல் குலைந்து, மல்லாந்து படுக்கிறது. முனகல், கேவல் என்று ஏதேதோ சத்தமிடுகிறது. புரள்கிறது, எழுகிறது, புரள்கிறது. அதைக் கவனிக்காவிட்டால் அருகில் வந்து குரைந்துப் பார்க்கிறது. அதைப் பார்த்ததிலிருந்து வெளியுலக வாழ்வு என்னைக் கவ்விக்கொண்டது. இதுநாள் வரை தடுப்புக்கு அடங்காத காற்றுபோல சுத்தி வந்தேன். உயர் ஞானங்கள் நொதிக்கும் கலமாக. இப்போது அன்றாடங்கள் என்னை உரச ஆரம்பித்துவிட்டது. அதைப் பொருட்படுத்த வேண்டியதாகிவிட்டது. அதை விரட்டிவிட வேண்டும் என்று நினைத்த உடனேயே அதைக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணமும் சேர்ந்து வந்தது. ஒரு துண்டு பிரக்ஞையை அதன் மீது வைத்தேன். அந்த வால் ஏன் இவ்வளவு ஆடுகிறது. நாக்கு இவ்வளவு நீளம் நீண்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நொடிக்கொரு முறை கவனம் மாற வேண்டுமா?
நான் மனித மனத்துடன் பரிட்சயப்பட்டவன். அதன் விசாலங்களை எட்டிப் பார்த்தவன். இனி நாயின் உலகில் எனக்கு வேலை இல்லை. இதை இன்னொரு நாய்க்கு புரியவைக்க இயலுமா? “இதோ பார் நான் நாய் இல்லை. என் தோற்றம் உன்னை ஏமாற்றலாம். ஆனால் நான் நாய் இல்லை. நன்றாக உற்றுப் பார். என் கண்களைப் பார். நான் காணும் நிறங்களை உன்னால் காணவியலாது. நான் கேட்கும் ஒலி உனக்கு விளங்காது. என் வால் ஆடுவதே இல்லை. என் நிதானம் உனக்கு புரிகிறதா?” அது ஒரு நிமிடம் என்னைப் புரியாதது போல் பார்த்துவிட்டுச் சட்டென்று என் கால்களினூடாகப் படுத்து குலைந்து, குரைத்து விளையாட்டுக் காட்டியது.
என் அகத்தின் விசாலத்தைப் புறத்தில் இருந்து ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. என்னால் நம்ப முடியவில்லை. வேறு வழி இல்லாமல் அதற்குப் போக்கு காண்பித்துக்கொண்டு என் வழி தொடர்ந்தேன்.
வாழ்வில் புதிய பரிமாணம் தேடிச் சென்றுகொண்டிருக்கும் எனக்கு ஏதோ என் பழைய வாழ்வைக் கூட அழைத்து செல்வதுபோல் இருந்தது. நாயின் வாழ்வை நாய் வெறுத்தால் ஒழிய நாய்க்கு மனித உலகம் திறந்துகொள்வதில்லை. நான் நாயின் வாழ்வை அதன் அருகாமையை வெறுத்தேன். ஆனால் கூட்டிக்கொண்டு திரிந்தேன்.
நேரமாகிவிட்டால் உணவைப் பற்றி சிந்தித்தேன். அதற்கு இடம் வேண்டுமே. இரவானால் உறைவிடம் தேடினேன். அதற்கு இடம் வேண்டுமே. புரத்திடம் இருந்து காத்துக்கொண்டேன். அப்புறம் புரத்திடம் உசாவ ஆரம்பித்தேன். மீண்டும் வெளி உலகுடன் சமரசம் ஒப்பதம். இவை அனைத்தும் தவிர்த்த நாட்கள் பழைய வரலாறு போல் ஆகிவிட்டது. என்றாலும் என்னுள் இருக்கும் விதை அதே கனத்துடன் தான் இருக்கிறது. தீவிரமான பாதையில் ஆபத்துக்கள் உள்ளன. இந்த மத்திய பாதைதான் சரியானது. எதுவரை? மின்னல்போல் அந்த மனித மனம் தன்னைக் காட்டி மறைத்துக்கொண்டது. விதையென என்னில் விழுந்து இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கிறது. அது விழிக்கும்வரை. அது முளைக்கும்வரை. அந்தப் பேரருள் வெறும் அனுபவமாக என் நினைவின் அடுக்குகளில் தற்சமயம் அமர்ந்திருக்கிறது. அது மட்டும் நிகழும் உண்மையாகி விட்டால் என் இந்த வாழ்வு நிறைவுறும். அதுவரை நான் இந்த நாயின் வேடத்தைப் பூசித்தான் ஆகவேண்டும். யதார்த்தத்தில் இதைக் கையாண்டுதான் ஆகவேண்டும்.
நாளையின் சாத்தியத்தையும் நேற்றைய சங்கிலியையும் இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தேன்.
3-தனித்தலையும் கேழல்
காடுகள் கிராமங்கள் நகரங்கள் என்று எல்லாப் பாதைகளிலும் நடந்தேன். ஒரு நகரத்தின் எல்லையில் கூட்டம் கூட்டமாகப் பன்றிகள் தங்கியிருந்தன. அதன் அருகாமையில் சில நாட்கள் நானும் தங்கியிருந்தேன். அவைகளுடன் நகர் திரிந்தால் சுலபமாக உணவு கிடைக்கும். எல்லாப் பன்றிகளும் பன்றி போலவே இருந்தது. அதன் அமரல் சத்தம் ஒரேபோல். குட்டிகள் குட்டிகள் போல். வளர்ந்தன வளர்ந்தவைபோல். வயதானவை இறப்பவைபோல். ஒரு நாயாக இருந்து பன்றிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு அந்திப்பொழுதில் கூட்டத்தில் ஒரே ஒரு பன்றி என்னைப் பார்த்தது. அதன் கண்களை ஒரு க்ஷணம்தான் சந்தித்திருப்பேன். அதை நான் அறிந்துகொண்டேன். அரை வினாடி என் பிரக்ஞையை சுற்றலில் விட்டது. அதை நான் மோப்பம் பிடித்தேன். அது மனித மனம் கண்ட கண்கள். எனக்கு நடந்தது அதற்கும் நடந்திருக்க வேண்டும். அதற்கும் அந்த விதை விழுந்திருக்க வேண்டும். என் பிரக்ஞை மீளுவதற்குள் அது கூட்டத்தில் நுழைந்து மறைந்தது. நான் எழுந்து நின்று பன்றிகள் அருகில் சென்று கண்களை அலையவிட்டேன். காணவில்லை.
“பன்றியாரே!.. நான் உங்களைப் பார்த்துவிட்டேன். உங்கள் கண்களைப் பார்த்துவிட்டேன். உங்கள் வாசனை எனக்குச் சொல்லிவிட்டது. உங்கள் நிலை எனக்குப் புரியும். நீங்கள் மனித மனம் கண்டவர். எனக்குத் தெரியும். தயைகூர்ந்து என் முன்னால் வாருங்கள்,” கத்தினேன்.
என் குரலைக் கேட்டு குட்டிப் பன்றிகள் அலறின. குட்டிப் பன்றிகள் அலறுவதால் என்னோடு சேர்ந்துகொண்டு பைரவனும் குரைத்தான். அவன் குரைப்பதைக் கேட்டு பெரிய பன்றிகள் பத்துப் பதினைந்து எங்களை விரட்டியது. பைரவன் முன்னால் ஓடினான். அவன் ஓடியதனால் நானும்கூட சேர்ந்து ஓடினேன்.
அந்த எல்லை தாண்டிய பன்றியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
அடுத்துவந்த அநேக நாட்களில் பன்றிக்கூட்டங்களைத் தூரத்திலிருந்து நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தோம். எல்லா பன்றிகளும் ஒன்றுபோலவே. என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏதாவது ஒரு பன்றி அவர்போல் இருக்கிறது என்று தோன்றிய உடனேயே அதன் உடல் மொழி இல்லை என்றுவிடுகிறது. பன்றியார் பன்றிக்கூட்டத்தில் மறைந்து வாழ்கிறார். அவரும் வெளிப்படுவதாக இல்லை. நானும் விடுவதாக இல்லை.
என்னைப்போல் இன்னொருவர். அவர் யார். அவர் அகம் என்னவாக இருக்கும். அவரது புற வாழ்வு என்ன. அவரது கேள்விகள் என்ன. அவரது அனுபவம் என்ன.
பெற்றுவந்த சட்டகத்திற்கு அப்பால் சென்று வந்தவரைப் பார்த்தவுடன் அவருடன் உசாவாமல் இருந்துவிட முடியுமா? பன்றியார் மறைபொருள்போல ஆகிவிட்டார். அவர் மறைய மறைய நான் தேடிக்கொண்டு இருக்கிறேன். நான் என்ன தேடுகிறேன் என்று தெரியாமலேயே பைரவன் என்னுடன் அங்குமிங்கும் வந்துகொண்டிருந்தான்.
இனிக் கிடைக்கவே மாட்டார் என்பதுபோல் ஆகிவிட்டது. ஓய்ந்து அமர்ந்திருந்த ஒரு இரவுவேளையில் தனித்து அலைந்துகொண்டிருந்த ஒரு பன்றியைப் பார்த்தேன். கிராமத்திற்கும் நகரத்திற்கும் அருகில் உள்ள குறுங்காட்டிற்குள் அது சென்றது. நான் பைரவனை ஏமாற்றி அவனை விடுத்து பன்றியார் பின்னால் சென்றேன். அவர் ஒரு பாறைமீது ஏறி நின்றார். நான் புதர் மறைத்தேன். நான் எட்டிப் பார்த்தேன் அவர் என் திசை நோக்கிப் பார்த்துக்கொண்டு இருந்தார். நான் வெளிப்பட்டேன். அவர் என்னை நோக்கி நின்றிருந்தார்.
இனி நானே நினைத்தாலும் ஓடிவிட முடியாது. நான் அவர் முன் சென்று நின்றேன்.
“வணங்குகிறேன்,” என்றேன்
“வணங்குகிறேன்,” என்றார்.
மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் நின்றேன். அவரும் ஒன்றும் சொல்லாமல் நின்றார்.
“உங்களை நான் இனம் கண்டுகொண்டேன்,” என்றேன்.
அவர், “கோடு தாண்டியவர்கள் அப்படித்தான். ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வார்கள். ஆனால் அவ்வளவே. அதற்குமேல் ஒன்றுமில்லை.”
“அப்படியானால் நம்மைப்போல் பலர் இருக்கிறார்களா?”
“பலர் இல்லை. சிலர். ஏனோ தெரியவில்லை, காந்தம்போல் ஒருவரை ஒருவர் இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.”
“நீங்கள் எத்தனை பேரை அவ்வாறு கண்டிருக்கிறீர்கள்?”
“ஒருசிலரை. அதனால் ஒரு உபகாரமும் இல்லை. நான் முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன். எம்மிடம் இருந்து உமக்கு ஒன்றும் கிட்டப்போவது இல்லை. சில நாட்களுக்கு ஒரு சிலாகிப்பு இருக்கும். அதுவும் காலாவதியாகி மறைந்துவிடும். எஞ்சுவது சலிப்பு மட்டும்தான்.”
“ஆனால் நான் என்ன வேண்டும் என்று சொல்லவில்லையே?”
“கோடு தாண்டியவர்கள் அனைவரும் வேண்டுவது ஒன்றுதான். நான் எச்சரிக்கிறேன். அந்தக் கேள்வியை விட்டொழிக. வேண்டாம். அது உன்னை உண்ணும் மிருகம். உன்னை நீயே அழித்துக்கொள்ளாதே. இவ்விடம் விட்டு நீ நீங்கு. எவ்விடம் இருந்து வந்தாயோ அங்கேயே செல். உன் சட்டகம் திறந்துகொண்டதால் நீ வெளியே வரவேண்டும் என்று கட்டாயம் இல்லை. அங்கேயே வாழ். அதுவாகவே இரு. எண்ணிப்பார். உனக்கு நிகழ்ந்தது வெறும் அனுபவம்தானே. மனித மனத்தில் விசாலத்தைச் சாத்தியத்தை சிறிது கண்டுவிட்டாய். அவ்வளவுதானே. உன் பழைய வாழ்வை வாழ்ந்துகொள் அல்லது நடித்துக்கொள். காலப்போக்கில் உன் அனுபவம் புகைமூட்டமாய் மறைந்து போகலாம். இனி நம்மால் முடிவது அது மட்டும்தான். வேண்டாம். நான் சொல்வதைக்கேள். ஆனால் நீ கேட்கமாட்டாய். ஏனென்றால் நான் கேட்கவில்லை. என் வாழ்நாளெல்லாம் இந்த வெற்று அனுபவத்துடன் அலைந்ததுதான் மிச்சம். இதோ நான் என் இனத்தாரிடமே தஞ்சம் வந்துவிட்டேன்.”
“ஆனால் தங்களைப் பார்த்தால் தங்களுக்குள் நிகழ்ந்தவையை சுருக்கிக்கொண்டவர்போல தெரியவில்லையே. அதை இன்னும் உயிர்ப்புடன் மீண்டும் மீண்டும் நிகழ்த்திக்கொண்டு இருக்கிறீர்கள். ஏன் சொல்கிறேன் என்றால் நானும் அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறேன்.”
“உண்மைதான்.” பெருமூச்சுவிட்டார்.
“உங்கள் அகம் எம்பிக் குதித்த அத்தருணத்தை என்னுடன் பகிர்ந்துகொள்ள இயலுமா?”
“ஏன்?”
எனக்கு ஏன் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஏதாவது சொல்லி அவர் அகம் நுழைய வேண்டும். “என் அனுபவத்துடன் ஒப்பிட.” என்றேன்.
சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்று தொடங்கினார். “வயது முதிர்ந்த பெண் ஒருத்தி என்னை வளர்த்து வந்தாள். வெகுகாலமாக என்னைப் பலியிடுவதற்காகத்தான் வளர்த்து வருகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. பலியிடும் நாள் வந்தது. ஊர் மக்கள் குழுமினர். என்னை இழுத்துச் சென்றார்கள். நான் உயிர் அலறினேன். என் மன்றாட்டை எவரும் புரிந்துகொள்ளவில்லை. இரத்த வீச்சம் எழும்பும் அந்த பலிபீடத்தின் முன் என்னை இழுத்துக்கட்டினார்கள். என் உயிர் வாங்கும் வாள் கொண்டுவரப்பட்டது. அதற்குமுன் பலியான உயிர்களின் அதிர்வு அங்கு குடிகொண்டிருந்த தெய்வத்தைத் துடியாக வைத்திருந்தது. வாள் ஓங்கும்போது என்னை வளர்த்தவள் ஒரு கேவலுடன் சரிந்து விழுந்து மடிந்தாள். அவள் உயிர் அதிர்வு என்னுள் நுழைந்து என்னை ஆக்கிரமித்து விலகியது. அந்த க்ஷணத்தில் நான் அவளாக இருந்து மீண்டேன். அந்த அனுபவமே என்னை இப்படியாக்கியது. அவ்வனுபவமே அன்று என்னைப் பன்றி இல்லை என்று உணரச்செய்தது. அவ்வனுபவத்தின் லட்ஜையில் சிலகாலம் மயக்கத்தில் வாழ்ந்தேன். அனுபவத்தின் வீரியம் குறைய குறைய வெறிகொண்டு அதைத் தேடி அலைந்தேன். அலையும்தோறும் அது விலகி சென்றது. மன்றாடினேன். உயிர் துடித்தேன். இன்று சலிப்பு என்னை முழுதும் ஆக்கிரமித்துள்ளது. நான் என்னவர்களைத் தேடி வந்து சரண்புகுந்து என் மிச்ச வாழ்வை பன்றியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். இதுவே எல்லை தாண்டியவர்களுக்கு நடக்கும்.”
அவர் சொல்வதைக் கேட்டவுடன் நான் இன்னும் விரைப்பாய் நின்றேன். ஆர்வம் தலையெங்கும் கிறுகிறுக்க வைத்தது. என் அகக்கணக்குகள் கூடி வந்தன. பன்றியாரைப் பார்த்தேன். அவர் பாறையின் மீது படுத்திருந்தார்.
உலகுக்கே அறிவிப்பதுபோல் அவரிடம் சொன்னேன், ” ஏறக்குறைய எனக்கும் இதுவே நடந்தது. எனது எஜமானர் துர்மரணம் எய்தினார். மீந்தும் வயதுடைய வலுவான தேகம் கொண்டவர். அவரது இறுதி நாட்களில் அவருடனேயே நான் இருந்தேன். அவர் உடல் நலிவதைக் கண்டேன். அவர் உயிர் அதிர்வும் உடலும் தளர்வாகப் பின்னப்பட்டு இருந்தது. அவர் ஒவ்வொரு செயல்பாடாக நிறுத்திக்கொண்டு வந்தார். அவர் உடல் எல்லைகளைத் தாண்டி விரியவும் சுருங்கவும் இருந்தார். அப்படி ஒரு விரிவின்போது நான் தற்செயலாக அவரின் எல்லைக்குள் வந்துவிட்டேன். நான் என்பதும் அவர் என்பதும் சில க்ஷணப்பொழுதுகள் வானவில் கலவை போல் கலந்து மீண்டோம். பிறகு அவர் உடல் விட்டிருந்தார். நான் அப்போது இருந்து நாயின் அடையாளம் தொலைத்தவன் ஆனேன்.” என்றேன்.
“………..”
“இதற்கெல்லாம் ஏதாவது காரணம் இருந்தாக வேண்டும். வெறும் தற்செயல் என்று எப்படி எடுத்துக்கொள்வது. நாவின்முன் உணவு என இவ்வனுபவம் அமர்ந்திருக்கும்போது எப்படி இதை நிராகரித்து வாழ்வு தொடர்வது.” என்றேன்.
“வாஸ்த்தவம் தான். இருக்கவேண்டும். இருக்கலாம். அப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால் என் ஒவ்வொரு முயற்சியும் தேடலும் பாறைமீது மோதும் பறவைபோல ஆகிவிட்டது.” பன்றியார் இறுதியாகச் சொன்னார், “சரி. இதற்குமேல் நாம் ஏதும் உரையாட வேண்டாம். இதனால் கிட்டப்போவது ஏதுமில்லை. நான் செல்கிறேன். மறுமுறை நாம் சந்திக்க மாட்டோம் என்று நம்புகிறேன். உண்மையிலேயே நான் உமக்காக வருந்துகிறேன். எமக்காகவும் வருந்துகிறேன்.” சொல்லிவிட்டுப் பாறையில் இருந்து இறங்கினார்.
“ஏன் என் நம்பிக்கையை உடைக்கிறீர்? இப்போது நான் என்ன செய்ய? எங்கு செல்ல?” என்றேன்.
“எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்” என்று அபத்தமாக ஏதோ சொல்லிவிட்டு இருளுக்குள் மறைந்தார்.
நான் விடியும் வரை அந்தக் குறுங்காட்டிற்குள்ளேயே இருந்தேன். மீண்டும் என் பழைய வாழ்விடம் நோக்கிச் செல்வதா? அல்லது மறுதிசை நோக்கித் தொடர்வதா? பழைய வாழ்விடம் என்பது பழைய வாழ்க்கை. தெரிந்த வாழ்க்கை. பழகிப்போனது. சுலபமானது. ஆச்சர்யம் அற்றது. அதிசயம் அற்றது. கேள்விகளே இல்லாதது. பதில்களினால் ஆனது. ஆனால்… ஆனால்.. ஒன்றே ஒன்றுதான் இடைஞ்சல். அங்கு இருந்து புறப்பட்டவன் அல்ல மீண்டும் அங்கு சென்று சேர்வது. அவன் மண்ணில் உலவும் நாய். நானோ வானில் புறப்பவன். என் இலக்கு வானில் உள்ளபோது மீண்டும் மண் தொடுவது என்பது மரணம். என் பிரக்ஞையின் உத்தரவு இல்லாமலேயே என் கால்கள் என்னை மறுதிசை நோக்கி இழுத்துச் சென்றன.
4-நிமிர்ந்தமர்ந்த கடுவன்
நீரோ ஆகாரமோ இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தேன். நிலங்கள் பல கடந்துபோகும் என்னைப் பொழுதுகள் பல கடந்து போனது. என் எண்ணமெல்லாம் அவ்வனுபவம் மட்டுமே. கேள்விகளாக மாறாத அவ்வனுபவம் மட்டுமே. ஒருவேளை அவ்வனுபவத்தைக் கேள்விகளாக மாற்றினால் அது வெறும் நினைவாகத் தங்கிவிடும். புனைவாகக் குறைந்துவிடும். மீண்டும் அவ்வனுபவம் தேவை. அங்கே அதிலே இருக்கும்போது என் கேள்விகள் உருவாகட்டும். அல்லது பதில்கள். அதுவரை ஓடுவேன். என் நான்கு கால்கள் முறிந்து விழுந்தாலும் நான் ஓடுவதை நிறுத்தப்போவது இல்லை. கால்கள் என்று என் சிந்தையில் வரும்போதே அவை நான்கு அல்ல எட்டு என்று உணர்ந்தேன். திரும்பிப் பார்க்கையில் பைரவன்.
புதியதாய்க் கிளம்பிய நான் என் பழைய வாழ்வைக் கூட கூட்டிச் செல்பவன் போல் ஆகிவிட்டேன்.
பைரவரின் முகம் பார்த்தவுடன் என் உளம் தளர்ந்தது. உடல் சோர்ந்தது. பசித்தது. நாங்கள் நின்ற இடம் ஒரு மலை அடிவாரம். சற்றுத் தொலைவில் ஒரு அடிவாரக் கோவில். அங்கு சென்றால் கிட்டும். நாங்கள் எட்டுக் கால்களுமாக இரு வயிறுகளுமாக அங்கு சென்றோம். அங்கே பல விதமான கடைகள் பல விதமான மனிதர்கள். ஆகையால் பல விதமான உணவுகள். பைரவன் எனக்கும் சேர்த்து சாப்பிட்டான். பிறகு ஒரு மரத்தடியில் தலை சாய்த்தான். எனக்கும் வயிறு நிறைந்திருந்தது. ஏதோ ஒரு சமரசம். அடிவாரம் முழுதும் மனிதர்கள், காக்கைகள், கழுதைகள், எருமைகள், குரங்குகள். அதிசயமாகப் பைரவனைத் தவிர இங்கு நாய் என்று வேறு எதுவும் இல்லை.
செல்வதற்கு பல இடம் ஆனால் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஆகையால் மலைப் படிக்கட்டுகளில் ஏறினேன். ஏறும்போது வந்த முதல் சந்நிதியில் சில எருமைகள் சில காகங்கள் இருந்தன. மந்தகதியாக ஒரு கூட்டமாக நின்று அசைபோட்டுக் கொண்டிருந்தன எருமைகள். எந்த ஒரு எருமையையும் பிரித்தறிய முடியாதபடி அவைகள் கூட்டுப் பாவனையோடு இருந்தன. அவைகள் மேல் காகங்கள் உண்ணி பொறுக்கிக்கொண்டு இருந்தன. காகங்களுக்குத் தெரிந்திருக்கும் ‘தான் காகம், இது எருமை’ என்று. ஆனால் எருமைகளுக்குத் தெரியுமா ‘தன் மேல் அமர்ந்திருக்கும் காகம், தான் இல்லையென்று’. எருமைகள் கிடக்கட்டும் எனக்கு தெரியுமா? எது எஜமானன் எது நான் என்று. எது அவர் வாழ்வு எது என் வாழ்வு என்று. இறந்தது யார். எஞ்சி இருப்பது யார். நான் அறியும் என் மனதின் ஒரு துண்டு என்னுடையது இல்லை. என்னைக் கொதிகலனாக வைத்திருக்கும் இந்த பிரக்ஞையை அறுத்து எறிந்தால் தான் என்ன. முடிந்தால் செய்திருக்க மாட்டேனா? இங்கேயும் எனக்குக் கிட்டப்போவதோ ஆகப்போவதோ ஒன்றும் இல்லை.
அவைகள் என்னைச் சட்டை செய்யவில்லை. எருமைகளைக் கடந்து மேலே ஏறினேன். இரண்டாம் சந்நிதியில் கழுதைகள் சில நின்றன. வெவ்வேறு நிறங்களினால் ஆனவை. சற்று நேரம் நின்று அவைகளைப் பார்த்தேன். ஏதோ ஒரு காலத்தில் தன் ஸ்வதர்மத்தை கைவிட்ட குதிரைகள் என்று பட்டது. இல்லையென்றால் கழுதைகளின் இருப்பை எப்படி புரிந்துகொள்வது? கழுதைகளின் இருப்பு இருக்கட்டும் என் இருப்பு என்ன?
வெறும் மிருகமாக இருந்த காலத்தில் உறக்கத்தில் இருப்பதுபோல் இருந்தும் இயற்றியும் வாழ்ந்தேன். மனுஷ்ய மனதின் சஞ்சாரத்திலிருந்து எதையோ எய்தத் துடிக்கிறேன். புலப்படாததை எய்தத் துடிக்கிறேன். என் எஜமானர் பரிசளித்துவிட்டுச் சென்ற துயரம் இது. இது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் துயரமா அல்லது தற்செயலின் துயரமா? மனம் கனத்திருந்தது. இவை அனைத்தும் எனக்கு புதிய உணர்வுகள். இருந்தும் ஏதோ ஜென்ம ஜென்மமாக என்மேல் படிந்திருந்தது போல.
தலையைத் தொங்கப்போட்டவாறு மேலே ஏறினேன். மேலே செல்ல செல்ல மூச்சு வழக்கத்திற்கு மாறாக வேகமாக இழுத்தது. உடல் களைத்து உணர்வுகள் அலையடிக்காமல் சமரசம் கொண்டிருந்தது. அந்தி கவிழ்வதுபோல் அந்த பரிட்சய வாசனை என்னை நிரப்பியது. பன்றிக் கூட்டங்களுக்கு நடுவில் இருந்த அந்த ஒற்றைப் பன்றியாருக்கு இருந்த அதே மணம். எஜமானர் உடல் விட்டு என்னை நிரப்பி வழிந்தோடியபோது இருந்த அதே மணம். பன்றியார் இங்கு எங்கே வந்தார். அதுவும் எனக்கு முன். அவர் மீண்டும் இனம் நீங்கினாரா? அல்லது… அல்லது… என் எஜமானரா? என் துயர் கண்டு வானிறங்கி வந்துள்ளாரா? அவர் விட்டுச் சென்ற மிச்ச பதங்களை மீட்டுச் செல்வாரா. நான் மீண்டும் நாயாய்ப் போவேனா? அப்படியானால் இதுவரை இருந்த நான்? இதுவரை வந்த நான்? இல்லை.. இல்லை.. பல எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்தன. ஆர்வம் பீறிட அங்குமிங்கும் பார்த்தேன். நான் தேடியவர்கள் யாரும் இல்லை. ஆனால் அந்த வாடை மலை முழுதும் வீசியடித்தது. என்னைப்போன்ற இன்னொன்றின் இருப்பு தன்னை உக்கிரமாக அறிவித்துக் கொண்டிருக்கிறது. நான் ஊகித்தவர்கள் அங்கு எங்கும் இல்லை. ஊகிப்பதை விடுத்து நிமிர்ந்து பார்த்தேன். எதிரில் ஒரு மொட்டைப் பாறையில் கண்கள் மூடி; கால்கள் மடக்கி; நிமிர்ந்து அமர்ந்திருந்தது ஒரு குரங்கு.
மலையின் மேல்காற்று இலகுவாக வீசிக்கொண்டிருக்க அதன் இனிமையில் லயித்திருப்பதுபோல குரங்கு அமர்ந்திருந்தது. கடைசியாக என்னைப்போல் ஒருவர். என் இருப்பு கொள்ளாமையை, தேடலை, தவிப்பைப் புரிந்துகொள்ள சாத்தியங்கூடிய ஒரு ஜீவன். நான் ஆர்வமிகுதியால் பாறையின் அருகில் சென்றேன். பாறையின் மீது ஏறமுடியாததால் அங்கேயே அமர்ந்து குரங்காரின் அருகாமையில் அவரின் அதிர்வு வட்டத்திற்குள் அமர்ந்து காத்திருந்தேன்.
என் இருப்பே அவருக்கு ஏதோ சஞ்சலத்தை உருவாக்கி இருக்கலாம். கண்களைத் திறந்து என்னை நோக்கினார். நான் எழுந்து நின்றேன். என்னை அறியாமலேயே என் வால் ஆடியது. கெஞ்சலான முனகல் ஒலி என்னில் இருந்து எழுந்தது. என்னைப் பார்க்கிறாரா அல்லது என்னை ஊடுருவி என் அனைத்தையும் பார்க்கிறாரா? பார்த்தவர் ஒன்றும் சொல்லாமல் எழுந்து அங்கிருந்து மலைக் காட்டிற்குள் செல்ல திரும்பினார். நான் பதட்டமாக “எஜமானரே…” என்று இறைஞ்சிக்கொண்டே எழுந்தேன். அவருக்குப் புரியுமோ புரியாதோ.
திரும்பியவர் அப்படியே நின்றார். அவர் முதுகு என்னை நோக்கி இருக்க, “தவறு..” என்றார்.
“என்ன தவறு எஜமானரே?”
“எஜமானர் என்று விளித்தது.” திரும்பினார்.
“மன்னியுங்கள். நான்..” என்று தொடங்கும்போது அவர் இடைமறித்து “என்னிடம் உமக்கு கிட்டப் போவது எதுவும் இல்லை.” அலை அலையாய் வருபவர்களை நான் பரிதாபமாகவே பார்க்கிறேன்.
“அலை அலையாய் வருகுகிறார்களா? அப்படியானால்..”
“வேண்டாம். என்னைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்.” என்றார்
“எங்கே செல்வது? எனக்கு தஞ்சம் என்று யாரும் இல்லை. கருணை செய்யுங்கள். நீங்கள் யார். எனக்கான உங்கள் பதில் என்ன?
என்னைக் கூர்ந்து பார்த்த குரங்கார். “மன்னிக்கவும் நான் அறிஞனோ ஆசிரியனோ அல்ல. என் வினை முடியும் வரை; உடல் உதிரும் வரை இருந்துவிட்டுப் போவது மட்டுமே கர்மமாகக் கொண்டுள்ளவன். புதுவினையில் நான் ஈடுபடுவது இல்லை. என்னிடம் பதில் இருக்கிறது. ஆனால் அது என்னுடைய கேள்விக்கான பதில். உன் கேள்விக்கான பதில் உன்னிலிருந்து வரும். அதுவரை கேள்வியுடன் இரு.”
“…….”
குரங்கார் கேட்டார், “நீ எத்திசை நோக்கி சென்று கொண்டிருந்தாய்?”
“சூரியன் மறையும் திசை.”
“அப்படியானால் அங்கேயே செல்” என்றுவிட்டு மரக்கிளை தாவினார்.
“நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?” என்றேன்.
“கிளம்பிய இடத்திற்கே..” என்று விட்டுக் காடு மறைந்தார்.
5-நலம் செய்த நல்லரவம்
குறைவாகப் பேசி அதிகமாகச் சொல்லிச் சென்றவரிடம் என் புந்தி இன்னும் பேசிக்கொண்டுதான் இருந்தது. அவர் என்னுள் நிறைய பேசினார். அவரிடம் பேசிக்கொண்டே மீண்டும் மேலே ஏறினேன். அந்தி எழும்பி சாய்ந்தது. இரவு விரித்து படர்ந்து நிலைகொண்டு கரைந்து மறைந்தது. ஆதவன் எழும்போது மலையின் மணிமுடி மீது அமர்ந்திருந்தேன். பன்றியாரின் சங்கடமும் குரங்காரின் சலிப்பும் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. அங்கேயே அமர்ந்து அகாலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு வெளியே என் பிரக்ஞை பரவிக் கிடந்தது.
அப்போது மிக நீண்ட கருநாகம் ஒன்று என்னைப் புதருக்குள் இருந்து எட்டிப் பார்த்தது. அது தரையைச் சூக்குமமாக அதிரச்செய்தது. அந்த அதிர்ச்சியில் சுற்றி இருந்த சின்ன சின்ன உயிர்கள் எல்லாம் செயல் ஸ்தம்பித்தன. செயலை விழுங்கும் செயலை நான் மெய்மறந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். இனி எந்த இரையையும் அதன் எதிர்ப்பு இல்லாமல் கருநாகத்தால் எடுத்துக்கொள்ள முடியும். அரவம் என்னை நோக்கி வந்தது. நான் பார்த்துக்கொண்டு இருந்தேன். அரவம் என் கால் சுற்றியது. நான் அசைவின்றி இருந்தேன். அரவம் என் உடல் சுற்றியது. நான் அசையும் ஆதார உணர்வு இன்றி இருந்தேன். அரவம் என் தலை சுற்றியது. எஞ்சியிருந்த பய உணர்வும் என்னை விட்டு நீங்கியது.
நான், நான் மட்டுமாக இருந்தேன். நானின்றி வேறேதும் இல்லாமல். ஒழுகி ஒழுகி ஏதோ ஓடியது…. நினைவுகள் வழுக்கி வழுக்கி வழிந்தது…. உணர்வுகள் மேலும் கீழுமாக அதன் உச்ச விசையில் அலையடித்து ஓய்ந்து மறைந்தது…. பிரவாகத்தில், இருளில், கருமையில் நான் விரிந்து விரிந்து சென்றேன். சுருங்கி சுருங்கி மறைத்தேன. ஆழத்தில், ஆழத்தில், ஆழத்தில் என்று சென்றேன். நேர்க்கோட்டு நேரம் சிதறியது. பிறகு நான் அகப்படவில்லை. அரைக்ஷணமோ அனந்தகோடி ஆண்டுகளோ நான் அகப்படாமல் கரைந்திருந்தேன். சுகவதி சஞ்சாரம்.
எப்படி எப்போது என்று தெரியவில்லை. இல்லாத இடத்தில் ஒரு பய உணர்வு துளிர்த்தது. பயம் மட்டுமே இருந்தது. அதே பழைய பய உணர்வு. அதன் உக்கிரம் கூடிக் கூடி வந்தது. அதன் விசை பெருகியது. ஓடுகிறேன் அது என்னைத் துரத்துகிறது. மிதக்கும் என்னை அலையடிக்கிறது. கண் திறக்க வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு எண்ணம் என் புந்தியில் உதிக்க வேண்டும். ஏதாவது ஒரு எண்ணம். அழுத்தம் நிறைந்து நிறைந்து கூடி கூடி வெடிக்கும் துளி க்ஷணத்திற்கு முன் பொருளற்ற ஓசை ஒன்று எண்ணக் கீற்றாக என்னுள் துளிர்த்தது, அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அது சொல்லாக மாறும்போது பெருவெடிப்பாகக் கண்கள் திறந்தேன். வெளி உலகம் என் கொள்ளளவு மீறி என்னுள் பாய்ந்தது. பிறகு நான் பல மணி நேரம் ஊளை விட்டுக்கொண்டிருந்தேன் என்று அன்று என் அருகில் இருந்த குதிரையார் பின்னொரு நாளில் சொன்னார்.
6- இருகூறுள்ள அசுவதி
குதிரையார். ஆம் மட்டக்குதிரையார். அனைத்துமாகிய நானிலிருந்து சறுக்கி மீண்டும் சட்டகம் ஒடுங்கும் நானாக ஆனபின், நான் கண்ட முதல் காட்சி குதிரையார். அவர் என் முன் ஆர்வமாகவும் பணிவாகவும் நின்றிருந்தார். நான் பன்றியாரிடமும் குரங்காரிடமும் நின்றிருந்ததைப் போல. குதிரையாரிடம் இருந்து எழுந்த மணம் அவர் யாரென்று சொல்லியது. அவரது மென்மயிர் வால் ஓயாமல் ஆடியது. அவரது குறுகிய கால்கள் பரபரப்பாக என்னை வட்டமடித்தது. அவரது வட்டப்பரப்பு மூக்கு ஆனந்தத்தில் சிலிர்த்தது. மென் ரோமங்கள் குத்திட்டு நின்றன. அவரது குதூகலம் புரியாமல் நான் அவரை விநோதமாகப் பார்த்தேன்.
அகம் தெளிவாக இருந்தது. ஆனால் புறம் ஒன்றும் புரியவில்லை. அருகில் பைரவனும் இல்லை. நான் எழ முயன்றேன். என் கால்கள் தடுமாறின.
“எஜமானரே பொறுத்து.. பதினான்கு நாட்கள் ஆகிவிட்டது..” என்றார் குதிரையார் பதட்டமாக.
எனக்கு அவ்வாக்கியத்தில் எல்லாச் சொற்களும் அந்நியமாக இருந்தது. எதுவும் தொடர்பு படுத்த முடியவில்லை. “யார் எஜமானர்? என்ன பதினான்கு நாட்கள்?”
“எஜமானரே, தாங்கள் கடந்த பதினான்கு நாட்களாக கால்மடக்கி தரையோடு தரையாக அமிழ்ந்து ஆனந்தப் பிரவாகத்தில் திளைத்திருந்தீர். நான் முதல் நாளிலேயே தங்கள் ஆனந்தப் பெருநிலையை நுகர்ந்து கண்டுகொண்டேன். அன்றிலிருந்து தங்களுக்கு அரணாக நான் பணி செய்து வருகிறேன். என்னை ஆசித்து அருள் செய்யுங்கள்.”
நான் தடுமாறி எழுந்தேன். குதிரையார் என் அருகில் வந்து நின்று பணிவாகத் தலைதாழ்த்தி “அருள் செய்யுங்கள்” என்றார்.
“நீர் எய்துவது கிட்டட்டும்..” என்றுவிட்டு எங்கோ நடந்தேன். ஏன் அப்படி சொன்னேன் என்று நினைத்துக்கொண்டே நடந்தேன். குதிரையார் தகுந்த இடைவேளை விட்டு பின்னால் வந்துகொண்டிருந்தார். நான் மெல்ல நடந்து ஒரு மரநிழலை அடைந்தேன். அதன் கீழ் உள்ள மணல் திட்டில் ஏறி மணலில் எனக்கு அளவான குழி பிறாண்டி அதன் மேல் ஒருக்களித்து படுத்துக்கொண்டேன். தலைதூக்கி பார்த்தேன். குதிரையார் அருகில் வந்து நின்றார்.
அவரைக் கவனிக்காமல் என்னைக் கவனித்தேன். எண்ணங்கள் கூட்டாகத் தனியே ஓடிக்கொண்டு இருந்தது. நான் தனியாக; எண்ணங்கள் தனியாக இருந்தது. என் எண்ணங்கள் என்னுடையது என்று சொல்ல முடியாத அளவிற்கு நான் வேறாக என் எண்ணங்கள் வேறாக இருந்தோம். மனித மனத்தின் எல்லை கடந்திருந்தேன். இப்போது வேறு ஒரு எல்லை. அலங்கரிக்கப்பட்ட எல்லை. நிகழும் எல்லை. வசீகரமான எல்லை. ஆனால் எல்லை.
புதிய எல்லைக்குட்பட்ட அனைத்துப் பிரதேசங்களையும் நான் என்னுள் சென்று தொட்டேன். அதன் விரிவையும், எழுச்சியையும் வீழ்ச்சியையும். தன்னிலை இழக்கும்தோறும் நான் அங்கு சென்றேன். நேரங்காலம் இளகி அங்கு நான் வாழ்வாங்கு வாழ்ந்தேன். அந்த எல்லைக்குட்பட்டு. அது எல்லை என்பதினாலேயே நான் இன்னமும் கட்டுண்டவன் என்று தெரிந்தது. அகஉலகம் சலிப்படைந்தது. புதிய எல்லைக்குள் இனி வகை வகையான நாடகங்கள் தான் மிச்சம் என்று தெரிந்தவுடன் அது மேலும் சலிப்பூட்டியது.
தன்னிலை மீளும்தோறும் குதிரையார் என் முன்னால் இருந்தார். என் ஒரு துண்டு மனத்தை அவர்மீது வைத்தேன். அவர் தீவிரமாக இருந்தார். அவரது தீவிரம் என்னை முழுதுமாக ஈர்க்க, நான் முழு பிரக்ஞையையும் அவர்மீது வைத்தேன்.
“அருள் செய்யுங்கள்..” என்றார்.
“தாங்கள் மனித மனம் கண்டவர் இல்லையா?”
“ஆம்.. அன்றிலிருந்து நான் குதிரையாக இல்லை.” நான் அமைதியாக இருந்தேன். அதை உணர்ந்து அவர் தொடர்ந்தார். “சிறுவர்கள் எங்கள் மீது கல் எறிவது வழக்கம். அவர்களது விளையாட்டு; எங்கள் உயிர் அச்சம். அன்று சிறுவன் ஒருவன் என்னைத் துரத்தினான். நான் தண்டவாளம் மேல் ஓடினேன். அவன் பின் தொடர்ந்தான். ரயில் எங்களை அடித்துச் சென்றது. நாங்கள் விண்ணில் தூக்கி வீசப்பட்டோம். நான் விழுந்தேன். அவன் என்மீது விழுந்தான். நாங்கள் இருவரும் வெகுநேரம் உயிர் துடித்தவாறு அங்கேயே கிடந்தோம். எவர் மரித்தார். எவர் பிழைத்தார் என்று தெரியவில்லை. அன்றிலிருந்து என்னுள் ஒருபாகம் நானல்ல என்றானது. நானல்லாத ஒரு பாகம் என்னை என்னுள் இருந்து இடைவிடாது கவனித்துக்கொண்டு இருக்கிறது. உக்கிரமாக. அந்த உக்கிரத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பழகிக்கொள்ளவும் முடியவில்லை. அது என்றும் விழித்தே இருக்கிறது, நான் உறங்கும்போதும். நானல்லாத அந்த பாகம் நானாகிய என்னை மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கிறது. விளைவு இன்று நான் குதிரை அல்ல. நான் எது என்று எனக்கு புலப்படவில்லை.
குதிரையார் சொல்லி முடிக்கும்போது நான் எழுந்து நின்றிருந்தேன். உடல் விதிர்த்தது. பரிபூரண விழிப்புநிலை தன்னைத்தானே அறிவித்துக்கொண்டது. மணற் திட்டில் இருந்து இறங்கி வந்து குதிரையார் முன் நின்றேன்.
“அருள் செய்யுங்கள்.. ” என்றார்.
“எனக்கு அருள் கிட்டியது. இவ்வாடலின் விளைவு எய்துவதில் இல்லை.” என்று அவரைப் பார்த்து கூறினேன். கூறியதால் எனக்கு புரிந்தது. தெளிந்தது. “நான் புறப்படுகிறேன்.” என்றேன்.
“எஜமானரே, எங்கு?”
“புறப்பட்ட இடத்திற்கு,” என்று விட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்.
7-செல்லுறு கதியில் செல்லும் வினை
செல்திசை துலங்க; மனம் முன் செல்ல; உடல் பின்சென்றது. செல்ல செல்ல பயணம் யாத்திரை ஆனது; நீர்நிலைகள் தீர்த்தங்கள் ஆகின; கூடாரங்கள் ஆலயங்கள் ஆகின. நட்ட கற்கள் நின்றதெய்வங்களாகத் தெரிந்தன. மறைபொருட்கள் நிரைநின்று தெளிந்தன. மனம் முந்தி சென்றதால் அது உடல் பிணைப்பை அறுத்துக்கொண்டது. மனமும் உடலும் வேறுவேறாக இருந்ததால் அங்கு உராய்வு ஏதும் இல்லாமல் இருந்தது. உராய்வற்ற அந்த சுகவதி வெளியில் நான் என்ற இருப்பு தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டிருந்தது. க்ஷணம்தோறும் புதுமை நிகழ்ந்ததால் ஜனனமும் மரணமும் ஒன்றுபோல் நிகழ்ந்தது. என் ஆற்றல்கள் அதனதன் கருவடிவு தொட்டது.
வான்நீர் கடல் மீள்வதுபோல். நான் புறப்பட்ட இடம் மீண்டேன். ஒரு உலுக்கலில் நான் தன்னிலை மீண்டேன். தன்னிலை மீண்டதும் உணர்ந்தேன் நான் அந்த சுகவதி வெளியில் இப்போது இல்லை. இது என்ன விளையாட்டு. அப்படியானால் இதுவரை நான் இருந்த வெளி என்ன. முதலில் மனித மனத்தின் சஞ்சாரம் பின்பு அதை மீறிய சுகவதி வெளியின் சஞ்சாரம். மீண்டால் அதே பழைய நான். அந்த சஞ்சாரங்களினால் அடைந்த மாற்றம் என்பது வெறும் உளமயக்கா? அல்லது உன்னத பாவனையா? அந்த உன்னதம் களைந்தால்? வெறும் பாவனைதானா? அப்படியானால் நான் உதறிவிட்டதாக நினைத்தது? வெறும் சருகுகளைத்தான். என்மேல் படிந்த சருகுகள். அதற்கு அடியில் இருப்பது பழைய நான்தானா?
என் ஊர் வந்தடைந்திருந்தேன். அதே மலையடிவாரம். ஊர் செயலின்மையில் மங்கியிருந்தது. தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தது. எங்கும் ஊதக்காற்று தங்குதடையின்றி வீசியது. ஊருக்குப் பழக்கமில்லாது அந்நியத்தன்மை குடிகொண்டிருந்தது. அழுகிய சதையின் கெட்டவாடை ஊரெங்கும் மணந்தது. பாதுகாப்புணர்வு ஓங்கி எழுந்தது. உடலும் உளமும் இறுகிக்கொண்டது.
அரவம் பூமி அதிர்வைக் கணிப்பதைப்போல நான் ஊரின் நுண் அதிர்வுகளை நுகர்ந்து உணர்ந்தேன். ஊரை இதுவரை அச்சமும் குற்றவுணர்வும் நிகழ்த்திச் சென்றிருந்தது. அச்சம் வன்முறையாக, குற்றவுணர்வு களிப்பாட்டாமாக முதிர்வடைந்து அதனதன் உச்சகதியில் திகழ்ந்து அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. காட்டை ஊர்கொள்ள நினைத்தது. ஆனால் காட்டின் கை ஓங்கியிருந்தது. ஊர் நெருப்பையும் இரும்புகளையும் காடுநோக்கி வீசியது. காடு மழையையும் காற்றையும் வீசியது. ஊர் விஷம் வலை கணை என்று முன்னேறியது. காட்டின் அதிபதிகளான சிங்கம், புலி, சிறுத்தை, நச்சரவம், மதக்களிறு என்று ஊர் இறங்கியது. ஊரின் பிரஜைகளாகிய மனிதர்கள் நாய்கள் பன்றிகள் மாடுகள் ஆடுகள் பூனைகள் கோழிகள் என்று சிலர் பலியாகச் சிலர் ஊர் நீங்க சிலர் வீடு பதுங்கினர்.
ஊரை காடு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டிருந்தது. ஊரின் ஒரே மீட்பு காடு அதை எடுத்துக் கொள்வதுதான் என்று பட்டது. இல்லை இல்லை. ஒருபோதும் இதை அனுமதிக்கக்கூடாது. நான் காவல் புரிந்த ஊர். என் பொறுப்பு வளையத்திற்கு உட்பட்டது. பரந்தெழ முற்பட்டேன், என் மண் காணாமலாக்கவா? என் அறம் இதை காப்பது தானே? அப்படியானால் என்னுள் நடந்த மாற்றத்திற்கு என்ன பொருள்? எனக்கு இப்போது வேறு அறம் உள்ளது. என்னை நானே விடுவிக்கும் அறம். எனது மாற்றத்திற்கு முன் நான் ஏற்று இயற்றி வந்த அறம் காலாவதியாகி விட்டதா? அதற்கு தக்க நியாயம் செய்யாமல் பிறிதொரு அறத்தை நாடி செல்வேனா? வேண்டாம். வேண்டவே வேண்டாம். அதுவும் வேண்டாம். இதுவும் வேண்டாம். அறச்சங்கடம் எனக்கு வேண்டாம். ஏற்ற அறமும் இயற்றவில்லை. விளையும் அறமும் கிட்டவில்லை. இப்போதே இங்கேயே நான் பொசிங்கிப் போக விழைகிறேன். சாம்பலாகப் போக. இந்தக் காடு ஊர் கொள்கிறது. என்னையும் சேர்ந்து கொள்ளட்டும். அதன் கணைகளினால் நான் இல்லாமல் ஆகட்டும். நான் இதற்குமுன் பலமுறை காடு பிரவேசித்திருக்கிறேன். சாகசத்திற்காக. காட்டின் பிரதேசங்கள் ஆராய்ந்திருக்கிறேன். அதன் சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன். அதன் அடியில், அதன் இடையில், அதன் உச்சியில் என் தடம் பதித்திருக்கிறேன். அதனால் நான் காடு வென்றவனாகிவிட முடியுமா? ஊர் திரும்பிய நான் அதே பழையவன் தானே. உண்மையான சாகசம் உண்மையான சஞ்சாரம் நான் காடு பிரவேசிப்பதில் இல்லை. காடு என்மேல் பிரவேசிக்க அனுமதிப்பது. அது நிகழட்டும். அதுவே என் அனைத்து அறச்சங்கடங்களின் முடிவு.
என் முன்வினை மலைபோல் அப்படியே குவியலாக இருந்தது. வினை அறுக்கும் வினை தெரியாததால் வருவினை விளைந்து இருப்பதைத் தவிர வேறு கதியில்லை எனக்கு.
ஊரின் வீதிகளில் அலைந்தேன். அதன் பிரதான அகண்ட வீதியில் மேலும் கீழுமாகச் சென்று வந்தேன். அங்கேயே கிடந்தேன். எதுவரினும் அதற்கு ஒப்புக்கொடுப்பது என்று. காடு என் மேல் கவிழும் என்ற பிரம்மை. அதன் சாரம் என்மேல் படியும் என்ற நினைப்பு. நீரோ, ஆகாரமோ இல்லை. அது தேவையும் படவில்லை. விழிப்பும் மயக்கமும் குழம்பியது. இருப்பும் இல்லாமையும் குழம்பியது. நான் என்றும் பிறன் என்றும் இல்லாமல் ஆனது.
அந்த நீண்ட வீதியின் இறுதியில் ஒரு உருவம். நான் அரைமயக்கத்தில் அதைப் பார்த்தேன். எனக்கு தெரிந்தது. காட்டின் சாரம் அதன் அதிபதியாக வந்து நின்றது. அதன் பிடரி, அதன் நீண்ட வால், அதன் தேஜஸ், அதன் வடிவ இலக்கணம், அதன் மஹாகாயம், அதன் மஹா இருப்பு. என்னை நோக்கிப் பெரும் நிதானமாகப், பெரும் நடை எடுத்து வந்துகொண்டிருக்கிறது. நான் எழுந்தேன். அது தூரத்தில் இருந்தாலும் அதன் பேருருவம் என் சிந்தையை, தர்க்கத்தைக், கனவை, ஆழுள்ளத்தை முழுதும் நிரப்பி என்னை ஆக்கிரமித்துக்கொண்டது. ஓடிச் சென்று அதன் தாள் படிவதா? படிந்து அதற்கு உணவாவதா? அது சரிவருமா? அல்லது அதை எதிர்கொண்டு போர் புரிந்து மரணம் எய்துவதா? எது என் முடிவு? எது மஹா மரணம்?
உடலில் புது கிளர்ச்சி. கால்களில் புதிய பலம். ஒரு உலுக்கலில் ஒரு எட்டு வைத்தேன். எட்டு நடையாகி; நடை ஓட்டமாகி. அதை எதிர்கொண்டு விரைந்தேன். அதன் மேல் தாவி அதன் ஆகிருதியைச் சோதித்து முடிவு எய்துவேன்.
நான் அதை நோக்கி ஓட அது என்னை நோக்கி ஓடி வந்தது. அது ஓடி வருவதால் நான் வீறுகொண்டு வேறொரு எண்ணமில்லாமல் அதைநோக்கி ஓடினேன். அருகில் வரவர அதற்கு நான் துலங்கினேன். அது மேலும் நன்கு துலக்கமாக தெரிந்தது. தெரிந்ததும் ஒரு திடுக்கிடலில் என் கால்கள் இடறி நான் தரை விழுந்து பிரண்டு அதன் பாதங்களின் அருகில் இழுத்து எரிந்தாற்போல் சரிந்து விழுந்தேன்.
நான் எழுந்து அதைப் பார்த்தேன் அது என்னைப் பார்த்தது. நாங்கள் இருவரும் பார்வையாக மட்டுமே இருந்தோம். பார்ப்பதைத் தவிர பிறிதொன்றாய் இல்லாததால் நேர்காட்சியாக ஒன்று தெளிந்தது. நான் அதன் பிரதி என்றும். அது என் மூலம் என்றும்.
என்னுள் உள்ள இருள் அதனுள் ஒளியாக. அதனுள் உள்ள முடிவிலி என்னுள் முடிவாக. என்னுள் இருப்பாக அதனுள் இல்லாமையாக.
அது திரும்பி காடு நோக்கி நடந்தது. சொல்லின்றி நான் பின்தொடர்ந்தேன். இருமை களைந்து ஒருமையாக. ஒரு சேர்ந்து கானகம் ஏகினோம். ககனம் ஏகினோம்.
8-அப்பாலிருப்பவர் உரைத்தது
ககனமார்கி சொன்னதாகக் காகம் சொல்லிமுடித்தது. குருவி காகத்திடம் கேட்டது, “அது எங்கே போனது?”
காகம் சொன்னது, “அதன் மூலத்திடம்.”
“நடந்ததின் தர்மம் என்ன?”
“போது அவிழ்வதற்கும் மலர் மலர்வதற்கும் இடையில் நிகழ்வது அதன் மஹா தர்மம்.”
“அதன் நிலை என்ன?”
“கண், காட்சி, பொருள் ஒன்றாதல் அதன் நிலை.”
“அதன் குணம் என்ன?”
“அதன் குணம் நிர்குணம்.”
“அதன் கர்மம் என்ன?”
“அடி அதிரும் அகரமும் இடை அதிரும் உகரமும் மணிமுடி அதிரும் மகரமும் அதன் கர்மம்.”
“அதன் நோக்கம்?”
“வீடு திரும்புதல்.”
“அதன் கதி?”
“பரமபதம்.”
“அது யார்?”
“அது நீயேதான்.”
உள்ளாழ்ந்த குருவி திடுக்கிட்டு,”எஜமானரே…” என்றது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்யும் விஜயகுமார் பிறந்து வளர்ந்தது அனைத்தும் கோவையில். சம்மங்கரை என்னும் சின்ன கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். யோகத்திலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டுள்ள இவர் இரண்டிலும் பயின்று வருகிறார்.
மின்னஞ்சல் : https://www.facebook.com/vijayakumar.palanisamy.92
புதிய வாசிப்பு அனுபவம்.சிறப்பான நடை.தொடர்ந்து எழுதுங்கள்…
கதையில் ஏதோ ஒரு பிராணியை வளர்ப்பவர் மரணம் அடையும் போது அருகில் இருக்கும் பிராணி மனித உணர்வு கொண்டு விடுகிறது. அது போன்ற மனித உணர்வு கொண்ட ஒரு பிராணி அதே நிலை அடைந்து கொண்டவர்களைத் தேடுகிறது. அவ்வாறு தேடும் போது அவைகளுக்கு (அவர்களுக்கு?) இடையே நடைபெறும் உரையாடல் philosophical ஆக உள்ளது. மனித உணர்வு கொண்ட அனைத்து பிராணிகளும் ஒரு வித ஞானநிலை எய்வதாகக் காண்பிக்கப்படுவது சற்றே அதிகம் என்றாலும் புதுமையான முயற்சிக்காக பாராட்டலாம்.
ஒரு கதை உண்டு. வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் ஒரு சாமியார் தெருவில் வருவோர் போவோரை அவர்களின் மிகைகுணத்தின் அடிப்படையில் நாய் வருகிறது, எருமை வருகிறது, பன்றி வருகிறது என்று கூறிக்கொண்டு இருப்பார். நீண்ட காலம் அப்படியே செல்கிறது. ஒரு நாள் வள்ளலார் அத்தெரு வழியாக வரும்போது மனிதன் வருகிறான் என்றார். அக்கதையை ம்ருகமோஸம் சிறுகதை நினைவுறுத்துகிறது.
ம்ருகமோஷம் கதையில் ஓரிடத்தில்
“அடி அதிரும் அகரமும் இடை அதிரும் உகரமும் மணிமுடி அதிரும் மகரமும் அதன் கர்மம்.” என்று கூறுகிறார். எவ்வாறு இதனை இவ்வாறு எழுதினார் என்று தெரியவில்லை. ஆனால் யோகா செய்பவர்களுக்கு தெரியும் சவாசனம செய்யும் போது ஆ…….. என்று ஒலிக்கும் போது கால்களிலும், உ……. என்று ஒலிக்கும் போது நடு உடலிலும், ம்……. என்று ஒலிக்கும் போது தலைப் பகுதியிலும் ஒருவித vibration ஏற்பட்டு சவாசனம் எளிதாக அமையும்.
கதையினூடாக
அத்வைத தத்துவம் எழும்பியுள்ளது.
வித்தியாசமான சிறுகதை.
வித்யாசமான நடை. ஒரு ஆத்ம ஞானத்தை தேடும் மொழி. உருவாக பிரயோகம். சபாஷ்.
வாசிக்கக் களைப்பில்லாத கதை. புதுவித பாணி. ஆர்வம் தூண்டுகிறது
அடர்த்தியான ஆழமான கதை. அது தொடும் ஆழங்களும், வெளிப்படும் மொழியும், காட்டும் உருவகங்களும் வியப்பு. இப்படியெல்லாம் கூட கதை சொல்ல முடியுமா.
வாசிக்கும் நம் மனம், நாயாகவே பயணம் செய்து, ஒரு புதிய வழியில் சென்று, தன்னறம் என்ற விளக்கத்தை உறுதிசெய்கிறது.
கூடவே, வேறு ஒரு எழுத்தாளரின் நினைவு தோன்றுகிறது. அது எனக்கு மட்டும் தானா, தெரியவில்லை.
மூலம் ஒன்று தான் என்பதை எப்படி அறிந்தீர்கள் அதை விளக்க முடியுமா.? அல்லது சொந்த இடத்திற்க்கே போ என்று சொல்வீர்களா ?
தேடுதல் தேடுதல் கண்டயைவில்லை கண்டடைந்தால் கேள்விகள் இல்லை இதுதான் சரியா?
ம். சரியான சிறுகதை கேள்விகளை நம்முமுள் கேட்க வைக்கும் தொடர்ந்து சிந்திக்க வைத்து விட்டீர் வாசனை அறியும் வரை தொடரும்
நல்லது நன்றி
அருமை…
நான் வாசிக்கும் போது உங்களுடைய எழுத்துக்கள் அனைத்து கதாபாத்திரமும் மிக எளிமையாக கண்முன்னே ஒரு காட்சி போல் நகர்கிறது…
இன்னும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்.