பொன்னூல் வலைகள்

அருண்மொழி அவர்களை முதலில் நான் சந்தித்தது ஊட்டி முகாமில்தான். சந்தித்தேன் எனச் சொல்வதைவிட அவரது ஆளுமையை தொலைவில் நின்றபடி வியந்து ரசித்துக்கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை. தனது கருத்துகளை அவர் வலுவாகப் பதிவு செய்யும் விதம் ஆச்சரியமாக இருந்தது. அதற்குப் பின்னால் அவருக்கு இருக்கும் வாசிப்புப் பின்புலத்தை முகாம் முடிவதற்குள்ளாகவே அறிந்துகொண்டேன். தொடர்ந்து கெடாவில் நடந்த ‘பேய்ச்சி’ நாவல் வெளியீட்டில் அவர் ஆற்றிய உரையால் அவர்பால் பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது. அவர் ‘பேய்ச்சி’ எனும் நாவல் குறித்து மட்டும் பேசவில்லை; ஒரு வாசகன் நாவலில் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்றே அவரது உரை எனக்குப் பாடம் எடுத்தது. அவர் தனியாக வலைத்தளம் ஒன்றை (https://arunmozhinangaij.wordpress.com/blog/)  தொடங்கி தன் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து எழுதுகிறார் என அறிந்தவுடன் ஒவ்வொரு வாரமும் விடாமல் வாசிக்க ஆரம்பித்தேன்.

நான் இதற்கு முன்னர் அப்படி சில அனுபவங்களைச் சொல்லும் பத்திகளை வாசித்துள்ளேன். அவை வாசிக்க சுவாரசியமானவை. யாரோ ஒருவரின் வாழ்வின் ஒரு துளியில் பங்கெடுத்த அனுபவத்தைக் கொடுக்கக் கூடியது. அப்படி எண்ணிதான் இந்தக் கட்டுரைத் தொடரை வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் நான்காவது வாரங்களைக் கடந்தபிறகு மூங்கில்களை முடைந்து முடைந்து உருவாக்கும் ஒற்றை பெரும் கூடை போல நாலா பக்கமும் அவர் வாழ்க்கை விரிந்து செல்வதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன். நான் வாசிப்பது என்ன? அது உண்மையில் கட்டுரையா? அல்லது நாவலா? என்ற குழப்பம் ஏற்பட்டது. தூசு படிந்த அரியதொரு பொருளின்மேல் ஓர் அழகிய  வண்ணத்துப்பூச்சி அமர்ந்து சிறகினை விரித்தால் எப்படி இருக்குமோ அத்தனை சிலிர்ப்பான உயிர்ப்பான அனுபவத்தை இந்தத் தொடர் வழங்கியது.  

அருண்மொழி அவர்களின் கட்டுரையில் நான் கண்டு கழிக்கும் வாழ்க்கையும், மனிதர்களும், வீட்டுச் சூழலும், மொழியும், மனித அரவமும், சிரிப்பும், எதிர்ப்பும், கெஞ்சலும் கொஞ்சலும், கிராமமும் என்னுள் பல்வேறு நினைவுகளை மீட்டெடுத்தது. யாரோ தீட்டமிட்டே உருவாக்கித் தந்த அழகான ஒரு காலத்தில் அவர் ஓடித்திரிந்ததாகவே கற்பனை செய்துக்கொண்டேன்.

ஒரு நதிபோல துள்ளியும் துடித்தும் செல்லும் இப்பதிவுகளுக்கு ‘மரபிசையும் காவிரியும்’ என்ற கட்டுரை பொருத்தமானதோர் திறப்பு. ஒருவருக்குள் கலையின் துவக்க இடம் இன்னதென்று குறிப்புணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. இசையும் நதியுமாகப் பிணைந்து நிற்கும் இக்கட்டுரையில், துக்கத்தின் படிமங்கள் எஞ்சிவிடுகின்றன. குஞ்சித ஐயரின் பாடலும், கிண்டல்களும்,  இவ்வுலகில் இல்லாமல் போய்விடும் கணங்களைக் காலத்தால்  சத்தமின்றி அவ்வளவு எளிதாக நிகழ்த்திவிடமுடிகிறது. அப்படி, இருந்து இல்லாமல்போன மனிதர்களும் அவர்களின் வழி பெற்ற அரிய தருணங்களும் இத்தொகுப்பெங்கும் விரவியுள்ளன.

அருண்மொழி அவர்கள் காட்டும் மனிதர்களின் ஆழமும் அடர்த்தியும் ஒரே இடத்தில் நின்று நிலைப்பவை அல்ல. அது நாவலில் காணும் மனிதர்களைப்போல வெவ்வேறு கட்டுரைகளிலும் வளர்ந்து வளர்ந்து உச்சம் செல்கிறது. ஒரு கட்டுரையில் மிக சராசரியாகத் தோன்றுபவர்களை அடுத்த சில கட்டுரைகளில் முற்றிலும் வேறொருவராக அறிய முடிகிறது. அவர்களை அவர் எப்படி அறிந்தாரோ அப்படியே முழுமையாக முன்வைக்கிறார். ஒரு தொடரில் அவர்களின் தேவை எப்போது வருகிறதோ அப்போது மட்டுமே அவர்களைத் துலங்க வைக்கிறார். புனைவுக்கு நிகரான ஈர்ப்போடு தன் வாழ்வைத் தொடர்போல எழுதியுள்ளார். 

தம்பி,பாட்டி, அத்தை, வடிவேலு மாமா, மனோகரன்சார், ஜோதி டீச்சர் அப்பா, அம்மா, கடைக்கார ராவுத்தர் மாமா, மணிகண்டன், இடைகால தோழி ஜேனட், அரசமரத்தடி பட்டாணியும் அவர் மனைவியும்,  என அவரின் வாழ்வை அலங்கரித்த மனிதர்களின் பட்டியலை இன்னும் நீட்டிக்கொண்டே செல்லலாம். ஒருவகையில் அருண்மொழி அவர்களும் அவர்கள் வாழ்வை அழகு செய்கிறார். எல்லா இடங்களிலும் பட்டு நூலுடன் வளைய வந்து அவர்கள் வாழ்வில் சின்ன சின்ன மினுமினுப்பைக் கொடுக்கிறார்.

அருண்மொழி அவர்கள் தொட்டுப் பேசி இருக்கும் இவர்கள் ஒவ்வொருவருமே தன்னளவில் அன்பானவர்கள். அன்பை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துபவர்கள். எதிலிருந்தும் அல்லது யாரிடமிருந்தும் அன்பை மட்டுமே வடித்தெடுக்கத் தெரிந்த எழுத்தாளரின் இயல்புகூட இந்த எண்ணத்திற்குக் காரணியாக இருக்கலாம்.    

அருண்மொழி அவர்களின் தந்தைவழி பாட்டி ஓர் அரிதான மனிதர்தான். அநேகமான கட்டுரைகளில் அவரைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு கட்டுரையிலும் அவரது பரிணாமம் என்பது மாறிக்கொண்டே வருகிறது. ஆனால், அவரைத் துல்லியமாக அறிய வாய்ப்பளித்த கட்டுரை ‘அரசி’. ஒரு சராசரி பாட்டிகளுக்குரிய அத்தனை இயல்புகளுக்கும் அப்பால் இருப்பவர்தான் அந்த ராஜம் பாட்டி என அறியும்போது கட்டுரையின் முதல் பகுதிகளில் நிகழ்ந்த அவர் வருகையை மறுவாசிப்பின் வழியாகத்தான் திரட்ட முடிந்தது. ஒரு குடும்ப கட்டமைப்புக்குத் தேவையான அநேக பண்புகளைக் கொண்டிராத பாட்டியை நேசிப்பவர்கள் குறைவுதான். அவரோடு ஒவ்வாமையே அதிகம் ஏற்படுகிறது. ஆனால் அவர் தன்னைத் தானே நேசிப்பவர்.  அவர் அவருக்கும் பிறருக்குமான வாழ்வை, தன்னைத் தானே மீட்பதன்வழி வாழ்ந்துள்ளார். பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்ட பாட்டி, பணத்தைச் சிக்கனம் செய்து நாளைக்காக வாழ விரும்பாத பாட்டி, கணவனின் காலிலேயே விழுந்து வாழ்வைத் தொலைக்க விரும்பாத பாட்டி, அன்பை அணைப்பால் தொடுதலால் காட்டுவதில் நம்பிக்கையற்ற பாட்டி, எனக்குள் ஒரு நவீனப் பெண்ணாகவே உருக்கொண்டிருக்கிறார். முதுமையிலும் யாருடைய ஆதரவையும் எதிர்பார்த்து காத்திராத பாட்டியின் கம்பீரமான வாழ்வு  இந்த நவீன யுகத்தில்கூட பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வாய்க்காதது. எனவே பாட்டி அரிதானவர்தான். அருண்மொழி அவர்களின் ஆளுமை வார்ப்பில் அவரது பங்கு அளப்பரியது.    

அருண்மொழி அவர்களின் கட்டுரைகள் நெருக்கமாக மற்றொரு காரணம் அதிலுள்ள அங்கதச் சுவை. நகைச்சுவையாக எழுதுவது ஒரு சவால் என்றால் நகைச்சுவையான மனிதர்களை அறிமுகம் செய்வது மற்றுமொரு சவால். அதை அருண்மொழி அவர்கள் கையாண்டுள்ள விதம் ஆச்சரியப்படுத்துவது.  வடிவேலு மாமாவைப்போல நகைச்சுவையுணர்வு மிக்கவர்களும் மிக அரிதானவர்கள்தான். அப்படி ஒருவர் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம். அத்தையைப் பெண் பார்க்க வரும் மாமா அப்போது சுட்டிக் குழந்தையாகிய அருண்மொழி அவர்களை எதிர்கொள்ளும்  உரையாடலிலேயே நம்மில் ஆழப்பதிந்துவிடுகிறார். அவருக்கும் அத்தைக்குமான பரஸ்பர அன்பும் அத்தகையதே. இப்படி அரிதானவர்களின் வரவு வாழ்விலிருந்து முற்றும் முழுதாக நீங்கும் தருணமெல்லாம் நம் வாழ்வை மறுபரிசீலனை செய்ய வைப்பவை.

கட்டுரையின் அநேகமான இடங்களில் நான் அதிகம் கண்டு வியந்த மற்றொரு முக்கிய பாத்திரம் குழந்தையாய், குமரியாய், தோழியாய், பேத்தியாய், மகளாய், மாணவியாய் என பல்வேறு பரிணாமங்களை ஏற்றிருந்த அருண்மொழி அவர்களின் ஆளுமை. அதன் வார்ப்பை ஒவ்வொரு கட்டுரையிலும் காண முடிந்தது. தேர்தல் சமயங்களில் மேற்கொண்ட பிரச்சாரங்களில், நண்பர்களின் தவறுகளை இடித்துரைக்கும்போது, அப்பாவுடன் விவாதிக்கும்போது, அரசியல் தலைவர்களின் மீதான தனது கருத்தைப் பேசும்போது, பிறர் துன்பம் கண்டு மனம் துவலும்போது, தனக்குப் பிடித்த பலகாரங்கள் எவ்வளவே ஆனாலும் அந்த வயதிலும் நண்பர்களோடு பகிர்ந்துன்பது, மனோகரன் சாருடன் விவாதிக்கும் துணிச்சல், மாமாவுடனான சம்பாசனைகள், நாட்டு நடப்பைப் பற்றிய அவரின் தெளிவும் பகிர்வும் என ஒவ்வொன்றிலும் எழுத்தாளரின் ஆளுமை உருவாக்கத்தை அவதானிக்க முடிந்தது. அந்த உருவாக்கத்தின் பின்னணியில் அவரது அப்பாவின் பங்களிப்பு அளப்பரியது. கண்டிப்பும், சிக்கனமுமாக முகம் காட்டும் அப்பா மெல்ல மெல்ல தன் வாசிப்பால், அரசியல் விவாதங்களால், நண்பர்களுடனான உரையாடல்களால், குழந்தை வளர்ப்பால் ஆளுமைமிக்க குடும்பத்தலைவனாக நம் மனதில் இடம்பிடித்துக்கொள்கிறார்.  ஆம்! அம்மாவுடன் ரகசியமாகக் கிண்டல் அடிக்கும் அப்பாவின் மாதிரி வடிவம்தான் அருண்மொழி அவர்கள் என 22 கட்டுரைகளையும் முழுமையாக வாசித்து முடித்தவுடன் தோன்றியது.

அப்பாவுக்கு நேர் எதிரானவர் அம்மா. அதிகாலை தேவதைப்போலவே வீட்டுச் சமையலைறையின் கரியடுப்பில் புகைக்கு நடுவே சமைக்கும் அம்மாவைக்  கற்பனை செய்ய முடிந்தது. முதல் கட்டுரை முதல் இறுதி கட்டுரை வரையில் அவரிடம் உடல் சோர்வோ சோம்பலோ இல்லை. அத்தனை வீட்டு வேலைகளையும் செய்து முடித்து பின் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் அவர், செய்து முடிக்கும் தையல் வேலையைப் பற்றி சிந்திக்கவே பிரம்மிப்பாக இருந்தது. 

அருண்மொழி அவர்களின் குழந்தைப் பருவத்தை அழகாக்கிய எல்லா சூழலுக்கும் மத்தியில் அவரின் அத்தை முதன்மையானவர். முகம் சுழிக்கும் அத்தையை அருண்மொழி அவர்கள் எந்த தருணத்திலும் காட்டவே இல்லை. அப்படி ஒரு வாய்ப்பை அத்தை கொடுக்காமலிருந்திருக்கலாம்.

அருண்மொழி அவர்களின் இந்தத் தொடர், ஒரு புனைவுக்குரிய அம்சம் கொண்டவை எனச் சொல்ல சில பகுதிகள் காரணமாக இருந்தன. குறிப்பாக  ஒரு கொண்டாட்டம்போல நிகழ்ந்தேறிய அத்தையின் திருமண முன்னேற்பாடுகளை அத்தனை நுட்பான சித்தரிப்பில் வாசகன் முன் விரித்துப்போடுகிறார். அந்தச் சூழலுக்குரிய பேச்சரவம், உடல்அசதி, உறவுகளால் நிறையும் இல்லம், பொருள்களால் இரைந்த இல்லம் என ஒவ்வொன்றாக குவிந்து காண முடிந்தது. திருமண வைபவங்களின்போது இப்படியான ஏற்பாடுகளால் மூழ்கும் இல்லங்கள் அநேகமான கடந்த நூற்றாண்டோடே காலவதியாகிவிட்டிருக்கும். இனி வரும் குழந்தைகள் இப்படி ஒரு சூழலை காணவியலாது என்பதே பேரிழப்புதான். இப்படி வாழ்க்கையில் எங்கோ தொலைத்துவிட்டு வந்தவைகளை அள்ளி அள்ளி குவிக்கிறார் அருண்மொழி அவர்கள்.

இந்தக் கட்டுரைத் தொடரில் நான் அவதானித்த அநேகமானமான மனிதர்களுக்கு மத்தியில்   அரசமரத்தடி பட்டாணியின் மனைவி வியப்பில் ஆழ்த்தக்கூடியவர். அவர் கண்தெரியாதவர். ஆனாலும் அந்த மரத்தடியில் ஒரு ராணியின் தோரணையிலேயே வாழ வாய்த்தவர் அவர். உலகமே இருண்டுள்ள அவர் வாழ்வைக் கம்பீரமாகவே எதிர்க்கொள்கிறார். அந்தக் கம்பீரம் தன் கணவனின் காதலால் கிடைத்திருக்கலாம். தீராதகாதல் கிடைக்கும் பெண்கள் அப்படி கம்பீரம் கொள்கிறார்கள். ஓர் ஆண் மனதில் தான் இருக்கும் இடத்தின் மூலம் தன் புற உலகின் நிமிர்வை உருவாக்கிக்கொள்கிறார்கள். தினக்கூலி செய்து வரும் பட்டாணி அவரது கணவர். அவர் தன் மனைவிக்கு செய்யும் பணிவிடைகள் பிரம்மிக்க வைத்தன. இளம் பெண்ணை இரண்டாம் தாரமாக கட்டிவரும் போது கண்தெரியாத அதே முதல் மனைவியின் குரல்தான் ஒலிக்கிறது. பட்டாணியும் சரி, அந்த இளம் பெண்ணும் சரி அவளுக்குப் பணிவிடைகள் செய்கின்றனர். அவளது கோபத்தைப் பொருத்து செல்கின்றனர். அவள் இன்னும் சிம்மாசனத்தில் இருப்பதை இருவருமாக நம்ப வைக்கும் நுணுக்கமெல்லாம் நுட்பமான விவரணைகள்.

வானத்தில் நட்சத்திரங்கள் எனும் கட்டுரையில் பதின்மவயதில் ஏசு தனக்கு அறிமுகமானதை விவரிக்கிறார். ஏசுவின் சிலுவைப்பாடு நாடகத்தைக் காணச் சென்ற அனுபவமும் நாடகத்தின் காட்சிகளின் விவரிப்பும் சேர்கின்றபோது கட்டுரை ஆன்மீகமான அனுபவமொன்றைத் தொட்டுவிடுகிறது. நாடகத்தில் ஏசுவின் சிலுவைப்பாடு அளிக்கும் துயர் உணர்ச்சியும் வானில் நட்சத்திரங்களைக் காணும் போது ஏசுவின் பிறப்பைக் காண சென்ற தீர்க்கத்தரிசிகளாக சிறுமி அருண்மொழியின் மனம் வரித்துக் கொள்கிறது. அந்தத் தருணத்தில் அருகிருந்த தம்பியை அணைத்துக் கொள்கிறார். அது ஏயேசு இன்னுமொரு முறை உயிர்த்தெழும் தருணமாக அமைந்துவிடுகிறது.

‘ஒலியும் நிழலும்’ என் மனதில் கவித்துவமாக நின்று நிலைக்கும் முக்கியமான ஒரு கட்டுரை. இதில் வந்து போகும் அம்மாவின் தோழியும், அவரின் தோழி ஜேனட்டும் ஒளியாகவும் நிழலாகவும் படிமமாகிறார்கள். ஆனால், ஒரு வகையில் வாழ்வின் வெறுமையில் நின்று கொண்டிருக்கும் அம்மாவின் தோழிக்கும், வாழ்வின் மீதான அத்தனை இரசனைகளையும் சுமந்துகொண்டும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சிறகடிக்கும் அவரின் தோழியும் ஒரு கோட்டில் பயணிப்பவர்கள்தான். ஒளியும் நிழலும் ஒன்றை ஒன்று சார்ந்தவையே. கண்ணீரோடு ஏசுவைப் பாடும் அம்மாவின் தோழி துள்ளலோடு அதி உற்சாகத்தோடு ஏசுவைப் பாடும் தோழி இவர்கள் ஒரே புள்ளியைப்பற்றி வெவ்வேறு வாழ்வைத் தரிசிக்கும் மாந்தர்கள்.

இத்தொடரில் உள்ள கட்டுரைகளிலுமே பலவிதமான மனிதர்களும் சூழலும் வந்து போகின்றனர். ஆனால், அதற்கு மத்தியில் அருண்மொழி அவர்கள் முதன்மைப்படுத்தும் காட்சி ஒன்று நம்மைத் தொட்டுப் பேசி உள்ளிழுத்துக்கொள்கிறது. உதாரணமாக ‘தலைக்கு மேலே’ கட்டுரையில்  தகவல் பெட்டகமாகச் சுற்றித்திரிந்த சிறுமி அருண்மொழியை அடையாளம் கண்டேன். இக்கட்டுரை அப்பாவின் ஆளுமைப்பற்றியும் அருண்மொழி அவர்களின் அபிமான அரசியல் தலைவர்கள் பற்றியும் பேசப்பட்டது. ஆனால் அதற்குள் அவர் வரைந்து காட்டும் இன்னொரு அனுபவமே பிரதானமானது.  இதில் நாசா விண்வெளியில் ஏவிய விண்வெளிக்கூடம் தன் சுற்றுப் பாதையிலிருந்து நழுவி பூமி நோக்கி வரும் சூழல் பதிவாகியுள்ளது.  அந்த சமயத்தில் அந்த காலத்தில் மக்களின் பயமும், தினசரி உரையாடல்களும் அது சார்ந்த நகைச்சுவைகளும், அது சார்ந்த பயமும் ஆர்வமும் மிக ஈர்ப்பாக வாசிக்கக்கிடைத்தது. இறுதியில் எந்த பாதகமுமற்று கடலில் விழுந்துவிட்ட அந்த கோள் தரும் ஏமாற்றங்களே இக்கட்டுரையில் அதிகம் இரசிக்கத்தக்கது. மனிதர்கள் தங்களுக்காக ஏற்படுத்திக்கொள்ளும் பதற்றத்தைக் காட்டும் இடமெல்லாம் வாழ்வை மறுபரிசீலனை செய்ய வைப்பவை.

அருண்மொழி அவர்களின் இந்தத் தொடரை ஒரு கட்டுரையாகவோ அனுபவ பகிர்வாகவோ மட்டும் சுருக்கிப் பார்க்க முடியவில்லை. மறுவாசிப்பை ஒரே மூச்சில் வாசித்தபோது இது ஒரு நாவல் வடிவத்தை எட்டுகிறது. கட்டுரைக்குரிய தகவல் சுமையை இத்தொடர் தாங்கியிருக்கவில்லை. ஒரு சிலந்தி வலைபோல ஏராளமான பின்னல்களை இழுத்துவந்து மையத்தைத் தொடுகிறது. அது பொன்னூலால் ஆன வலை. அப்படி 22 வலைகள். அவை ஒன்றோடு ஒன்று மெல்லியதாய் தொட்டுத்தொட்டு பிரமிப்பைத் தருகின்றன. நாளை பலரும் இப்படியான நாவலை எழுத இது ஒரு தொடக்கமாக இருக்கலாம்.  

3 comments for “பொன்னூல் வலைகள்

  1. November 4, 2021 at 6:51 pm

    very nice narration indeed super novelist dawns we welcome
    kavignar Ara

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...