1992

1

ஜீவானந்தம் பஸ்ஸை விட்டு இறங்கிய போது அவனை கடந்து சென்ற ரிக் வண்டி அவனுக்கு அப்பாவை ஞாபகப்படுத்தியது. வீடு சென்றால் அவரை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கும்போதே கசந்தது.

பையை தோளில் போட்டுக்கொண்டு நடக்கும் போது ஏதேதோ கலவையான எண்ணங்கள். தங்கை; அப்பா; பணம்; தோட்டம்; கல்யாணம் என்று உதிரிக் காட்சிகள். இன்னும் ஒரு பர்லாங் நடக்க வேண்டும். சாலையின் இடது புறம் விட்டு விட்டு வரும் கிராமத்து வீடுகள். வலது புறம் ஊர் மந்தையை பிரிக்கும் முள்வேலி. ஊரார் யாராவது பார்த்தால் ஏதாவது கேட்பார்கள் ஏதாவது சொல்ல வேண்டும். முள்வேலி பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டே நடந்தான். பசித்தது. நேற்றே அம்மாவிடம் சொல்லியிருந்தான். பருப்பு சாதமும் புளிக்காச்சலும். வலுக்கட்டாயமாக உணவை நினைத்துக்கொண்டான். வீடு நெருங்க நெருங்க என்னவென்று சொல்ல முடியாத பதற்றம். அம்மாவைப் பார்த்தவுடன் சிறிது ஆசுவாசம் அடைந்தான். அவள் காம்போண்டுக்கு வெளியே நின்றிருந்தாள்.

“அம்மா! ஏன் வெளியே நிக்கிற” பையை நீட்டினான். 

வாங்கிக் கொண்டவள், “பஸ்சு போச்சுல.. நீ வருவேன்னு தான் பாத்துக்கிட்டு இருந்தேன்..”

உள்ளே சென்று செருப்பை கழட்டி கொண்டே கேட்டேன். “அப்பா எங்க?” 

“பல் விளக்கி விட்டு வா, காபி போடுறேன்”

“என்ன சமையல்?”

“பொங்கல்…”

“பொங்கலா… அம்மா….. நான் நேத்து என்ன சொன்னேன்?”

“அட, அப்பா ஒன்னு கேக்குறாரு நீ ஒன்னு கேக்குற. நான் எதைத்தான் செய்றது. இங்க தான இருக்கப் போற…, நாளைக்கு செஞ்சு தர்றேன்…” 

ஜீவானந்தம் கொல்லைப்புறம் சென்று பயணக் களைப்பை கழுவிக்கொண்டு வந்தான். அம்மா சமையலறையில் இருந்தாள். காபி மணம் அள்ளியது. வீட்டுக்குள் சுற்றும் முற்றும் பார்த்தான் ஏதாவது மாறி இருக்கிறதா என்று எல்லாம் அப்படியே அங்கங்கே இருந்தது. டிராவை திறந்து பார்த்தான், அலமாரியை, டிரங்கு பெட்டியை. எல்லாம் சரியாகவே இருந்தது. ஒவ்வொரு ஸ்விட்ச்சாக போட்டுப் பார்த்தான். எது வேலை செய்கிறது எது வேலை செய்யவில்லை என்று கவனித்துக் கொண்டான். டிவியை போட்டான் அப்புறம் அமத்தினான். டிவி பெட்டிக்கு மேல் உள்ள கையளவு புகைப்படத்தில் அப்பா பந்து வீசிக் கொண்டிருந்தார். சிறுவயது ஜீவானந்தம் பேட் பிடித்துக்கொண்டிருந்தான். 1992 என்று அதன் சட்டகத்தில் எழுதியிருந்தது. உலகில் உள்ள அனைத்து சந்தோஷங்களும் அதில் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. ‘அந்த ஜீவானந்தம் எத்தனை பாக்கியசாலி. அத்தனை உற்சாகமாக அத்தனை பாதுகாப்பாக இருக்கிறான். நிகழ்ந்து கொண்டிருப்பதாலேயே காலம் கருணையற்றதாகி விடுமா? பின்சென்று மீண்டும் நிகழ்த்த முடியாதா? அடுத்த நூற்றாண்டின் சவாலாக இதுவே இருக்க வேண்டும். மனிதம் உய்விக்கலாம்.’ புகைப்படத்தை கையில் எடுத்துக்கொண்டு நினைவில் ஆழ்ந்து இருக்கையில் அம்மா வந்து காபி கொடுத்தாள். வரக்காப்பி. இன்னும் ஒரு பெரிய தூக்கு போசி நிறைய காபி கலந்து இருந்தாள். 

“எதுக்கு இவ்ளோ காபி? யாராவது வீட்டுக்கு வராங்களா?”

“சாப்பிடு சொல்றேன்.”

“அப்பா எங்க?”

“தோட்டத்துல..”

“தோட்டத்திலய? இந்நேரத்தில அங்க என்ன வேலை? அதுதான் எந்த வெள்ளாமையும் வைக்க கூடாதுன்னு கண்டிசனா சொல்லி இருக்கேன்ல..”

“வெள்ளாமை என்னத்த வெச்சாரு?”

“அப்புறம்? மாடு கண்ணுன்னு ஏதாவது வாங்கிட்டார?”

“தோட்டத்துல போற் போட்டுகிட்டு இருக்கார்.”

நம்பமுடியாமல் அம்மாவை பார்த்தான். அப்புறம் நம்பினான். மாடு மெல்லமாக தலை அசைப்பது போல அசைத்து, “அது சரி….” என்று நிராகரிப்பாக சொன்னான். “அதுதானே பார்த்தேன்; எங்க எல்லாம் சரியா இருக்கே! ஊதாரி திருந்தீருச்சான்னு நினைச்சேன்.”

அம்மா ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றாள்.

காபி டம்ளரை குடிக்காமலேயே கீழே வைத்துவிட்டு கேட்டான், “அந்த பாங்காட்டுக்கு போற் போடச்சொல்லி இப்போ யார் கேட்டது? நமக்கு இப்போ வெற செலவு இல்லையா? பாப்பாவுங்க வீடு கட்டிகிட்டு இருக்காங்க. ஒரு பத்து லட்சமாவுது வச்சாத்தான அவளுக்கு அவ வீட்டுல கொஞ்சம் கவுரவமாக இருக்கும். இருக்கிற காச இப்படி ஊதாரித்தனம் பண்ணினா அப்புறம் பாப்பாவுக்கு என்ன சீர் செய்ராத உத்தேசம்?” பொரிந்து தள்ளினான். மூச்சு இறைத்தது. முத்து முத்தாக வியர்த்திருந்தது.

அம்மா தயக்கமாக, “இல்ல, உனக்கு பொண்ணு பாக்குற இடத்தில எல்லாம் தோட்டத்த சும்மா போட்டு வெச்சுறுகோம்னா சொல்ல முடியும்? அது நல்லா இருக்காதுல?”

“ஆஹா… பெரிய ஜமீன்தாரு… சும்மா இருக்கேன்னு சொன்னா கிரீடம் கொறஞ்சு போய்டும். இவருக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு. கைத்தடி நாலு பேர கூட வெச்சுகிட்டு எதாவது பண்ணியே ஆகணும் பாரு!. இப்படி பண்ணி பண்ணியே டவுன்ல இருக்குற பில்டிங்க க்ளோஸ் பண்ணாரு. பேங்க்குல இருக்கிற பூர பணத்தையும் க்ளோஸ் பண்ணாரு. சரி போனது போய் தொலையட்டும்ன்னு பாத்தா, மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரு.”

“நான் என்ன பண்றது?” அம்மா அழுவது போல் ஆகினாள்.

“இதற்காகத்தான் நான் ஊருக்கே வர்றதே இல்ல. நான் வர்றப்ப தான் கரெக்டா ஆரம்பிச்சிருக்காரு பாத்தீங்களா? ஆரம்பிச்சிட்டதனாள காசு கேட்டா கொடுதுறுவேன்னு நெனெனப்பு. சல்லி பைசா கொடுக்க மாட்டேன். நான் என் பொறந்தவளுக்கு சேத்தி வச்ச காசு.”

அம்மா ஒன்றும் சொல்லாமல் நின்றாள்.

ஜீவானந்தம் மேற்கொண்டு ஏதும் சொல்லாமல் அணிந்து வந்த சட்டையையே மீண்டும் அணிந்துகொண்டு தோட்டத்திற்கு போவதற்காக டிவிஎஸ் பிப்டியை கிளப்பினான்.

2

தோட்டத்திற்குப் போகும் மாட்டுவண்டி பாதையில் டிவிஎஸ் பிப்டியை ஓட்டிக் கொண்டு போனான். இருபக்கமும் நீண்டு கிடக்கும் வெவ்வேறு தோட்டம் காடுகளுக்கு ஏகதேசமாக கம்பி வேலி நட்டு இருந்தார்கள். ஒரு காலத்தில் இது அனைத்தும் முள்வேலிகளாக இருந்தன. கம்பி வேலிகள் அனைத்தும் ஒரே போல் சீராக இருந்தன. அச்சில் வார்த்து எடுத்த கணக்காக. ஒரே இடைவேளையில் ஒரே உயரத்தில். ஒவ்வொரு தோட்டத்திற்கு உள்ளும் ஒரு புதிய வீடு அந்த தோட்டத்திற்கு சம்பந்தமே இல்லாமல் வெளியுலக பெருமை அடித்துக்கொண்டிருந்தது. 

ஜீவானந்தத்தின் மனம் முன்செல்ல டிவிஎஸ் பிப்டி தடுமாறி தடுமாறி பின்சென்று கொண்டிருந்தது.  அங்கே தோட்டத்தில் யாரெல்லாம் இருப்பார்கள்? முதலில் அங்கே அப்பா என்னவாக இருப்பார்? தன்னை பெற்றெடுத்த அப்பாவா? கண்டிப்பாக வளர்த்த அப்பாவா? தங்கைக்கு திருமணம் செய்து வைத்த அப்பாவா? அல்லது தொழிலில் நலிவுற்று சொத்துக்களை விற்று கரை சேர்ந்த அப்பாவா? அப்பாக்களுக்கு தான் எத்தனை வண்ணங்கள். கடைசியாக நினைவிருப்பது தன் இளமையை விழுங்கும் அப்பா.  

அருகில் செல்ல செல்ல ஆழ்துளை போற் ஓடும் சத்தம் கேட்டது. உழவு ஓட்டப்பட்ட வெறும் காட்டில் ஒரு மூலையில் மஞ்சள் நிற ரிக் வண்டி பூமியை குடையும் வண்டுபோல நின்றிருந்தது. அதை சுற்றி சில மனித தலைகள். வண்டியை ஓரமாக போட்டுவிட்டு அவர்களை நோக்கி நடந்து சென்றான். செல்லும்போது அங்கு நடக்கவிருக்கும் அதகளத்தை நெஞ்சில் ஓட்டிப் பார்த்தான். யார் என்ன சொன்னாலும் சரி இந்த கூத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஊதாரித்தனம் பண விரயத்தை நிறுத்தவேண்டும். பக்கத்தில் போகும்போது சில பெரிய தளக்கட்டுகளை அடையாளம் கவனித்தான். அப்புறம் அப்பாவின் வழக்கமான கைத்தடிகள் நான்கு பேர். அப்புறம் அங்கே வேலை செய்து கொண்டிருப்பவர்கள். ஜீவானந்தம் அருகில் வருவதை அனைவரும் கவனிக்க அப்பா மட்டும் தீவிரமாக வண்டியை பார்த்துக் கொண்டு பீடி இழுத்துக் கொண்டிருந்தார். அது வேறொரு அப்பா. முற்றிலும் புதிய அப்பாவாக தெரிந்தார்.

“வாங்க மாப்ள காலையில தான் வந்தீங்களா?” ஒரு மாமா கேட்டார்.

சண்டைக்கு வந்தவனிடம் என்ன விசாரிப்பு? சண்டை அப்பாவிடம் தானே. பதில் சொன்னான். “ஆமாங்க மாமா..” ஆனது ஆகட்டும் இவர்கள் முன்னிலையில் வேண்டாம். நடக்கும் கூத்து முடியட்டும். அப்பாவை அப்புறம் பார்த்துக் கொள்வோம்.

மாமாவே ஆரம்பித்தார், “நேத்து நைட்ல இருந்து மூணு இடத்தில் போட்டாச்சு. ஒன்னும் வேலைக்கு ஆகல. இது நாலாவது.”

சுருக்கென்று வந்தது ஜீவாவிற்கு. “நாலாவதா? என்ன மாமா இதெல்லாம் விளையாட்டு?” நம்ப முடியாமல் கேட்டான்.

“ஜோசியர வெச்சுதான் இடமெல்லாம் குறிச்சோம். ஆனா நம்ம கெட்ட நேரம் பாரு, ஒன்னு கூட பொத்துக்கல.”

இடுப்பு மேல் கை வைத்துக்கொண்டு நிலை கொள்ளாதவன் போல் நியாயம் கேட்கும் தொனியில், “இந்த வெருங்காட்டுக்குள்ள எங்க போற் போட்டாலும் வேலைக்கு ஆகாது. நீங்களாவது சொல்றது இல்லையா? இந்த குடும்பம் இருக்கிற சூழ்நிலையில் இதெல்லாம் தேவையா? ஒன்னு போட்டு பாத்தா போதாதா? இவர் ஊதாரித்தனதுக்கு ஒரு அளவில்லையா?”

அப்பா பல்லை வெருவிக்கொண்டு, “இந்த பார்டா உன் ஜோலி மயிர மட்டும் பாரு. அனாவசியமாக வார்த்தைய செலவு பண்ணாத. இங்க நான் சூரக் கடுப்புல இருக்கேன்.”

“இங்க கோபப்பட வேண்டியது நானு. யார கேட்டு இப்போ போற் போடுறீங்க?”

“நான் எந்த மயிராண்டி கிட்ட கேக்கணும்? எம்பட தோட்டம் எம்பட இஷ்டம்”

“அம்மா நகை, என் தங்கச்சி நகை, டவுன்ல இருந்த பில்டிங், தொழில் இப்படி எல்லாம் முடிச்சு கட்டிட்டு இப்போ இருக்கிற ஒன்னயும் க்ளோஸ் பண்ண ரெடி ஆகியாச்சா? இதுக்கெல்லாம் நான் சல்லி பைசா தர மாட்டேன்.”

சட்டென்று திரும்பியவர் தன் அகங்காரம் சீண்டியவாராக, “எவன் காசும் எனக்கு வேண்டாம். என் காசு இருக்கு. ஊருக்குள்ள அவனவன் தண்ணி ஓட்டிக்கிட்டு இருக்கான். நான் மட்டும் காஞ்ச காட்ட வெச்சிருக்கோணுமா?” இப்போது மாமாவைப் பார்த்து தொடர்ந்தார், “சின்ன பசங்க கிட்ட என்னய்யா பேச்சு. அவன் இங்கிருந்து போகச் சொல்லு.”

ஜீவானந்தம், “மாமா, நான் இங்க நிக்கல. தண்ணி வந்துகிட்டு இருந்த அந்த பழைய போற் என்ன ஆச்சு இப்போ? அத மட்டும் கேட்டு சொல்லுங்க?”

மாமா, “அது தண்ணி சரியா எடுக்கலையாம்.” என்றார்.

“இவரு கை வெச்சா எதுவும் விளங்காது.” 

“இப்போ எண்ணங்கிரடா” அடிக்க வருபவர் போல் எட்டு வைத்தார் அப்பா.

ஜீவாவிற்கு சுள்ளென்று கோபம் வந்தது. “உங்களுக்கு மட்டும்தான் கை ஓங்க தெரியுமா?” என்ற போதே மாமா வந்து அவனை வயிற்றோடு சேர்த்து கட்டிக்கொண்டு “வேண்டாங்க மாப்ள. உடுங்க. என்ன இருந்தாலும் அப்பன் இல்லையா?” குறுக்கிட்டார்.

“அப்பன் மாறிய நடந்துகுறாரு”

“நான் இருக்கிற வரைக்கும் தோட்டத்த காய விடமாட்டேன். எத்தன போற் போட்டாவது தண்ணி கொண்டு வந்துருவேன். எங்க அப்பன் முனியப்ப சாமி மேல சத்தியமா சொல்றேன். வாப்பாடு தெரியாம பேசுற நீயீ….” அப்பா நாக்கை துருத்தி கத்தினார்.

“ஊர்க்காரங்க எல்லாம் இருக்காங்கன்னு தைரியத்துல பேச வேண்டாம். நாளைக்கு இவங்க எல்லாம் போயிடுவாங்க. நான் மட்டும் தான் நிக்கணும்.”

“சின்னப் பையன் நீ, எனக்கு புத்தி சொல்ல வந்துட்டியா.. அதுக்குள்ள பன்னாட்டு உன்கிட்ட வந்துடுச்சா.. நாலு காசு சம்பாதிச்ச உடனே பெரிய மனுஷன் ஆயிட்டியா.. நீ நிக்கிறது நான் போட்ட அஸ்திவாரம் டா. எம்பட இடத்தில நின்னு நீ என்ன எதுத்து பேசுரேங்குறது ஞாபகம் இருக்கட்டும்.”

 “மாப்ள கோவப்பட வேண்டாம். நான் புத்தி சொல்லி இதோட நிறுத்தப் பாக்குறேன். நீங்க வீட்டுக்கு போங்க” என்றார் ஒரு மாமா.

“எல்லாம் நாசமா போகும்…” மாமாவை உதறிவிட்டு விறுவிறுவென்று தோட்டத்தின் குறுக்காக நடந்தான். அவனுக்கு பின்னால் ரிக் வண்டி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

3

எங்கே செல்கிறான் என்று தெரியாமல் உழவு ஓட்டிய தோட்டத்தின் குறுக்காக போய்க்கொண்டிருந்தான். மனதில் தன்னிச்சையாக அபவார்தைகள் குவியல்களாக கொட்டியது. கை கால்கள் தன்னால் நடுங்கிக்கொண்டிருந்தது. மூச்சு இருகியிருந்தது. வந்த வழியில் செல்ல மனம் விரும்பவில்லை. அந்த மாட்டுவண்டி பாதையும் கம்பி வேலிகளும் மனதிற்கு ஒவ்வாமையை தந்தது. எங்கே செல்கிறோம் என்று தெரியாமலேயே தோட்டத்தின் எல்லையிலுள்ள இலந்தை மரத்தடியில் வந்து நின்றான். அங்கே ஆதி அப்பனாகிய முனியப்ப சாமி திரிசூலமும் கதாயுதமும் ஏந்தி தனக்கான பலி பீடத்துடன் சன்னதி கொண்டு இருந்தார். அங்கே மரத்தடியில் ஒரு கல்லின் மீது அமர்ந்தான். அங்கு மட்டும் தான் நிழல் என்று கொஞ்சம் மிச்சம் இருந்தது. 

மனம் நொந்து இருந்தது. உடல் காய்ச்சல் வருவது போல் குழுந்து குழுந்து வீசி அடித்தது. எண்ணங்கள் சிதறி அடித்ததால் கண்களை மூடி தலையை பிடித்தவாறு குனிந்து அமர்ந்திருந்தான். கண்களைத் திறந்தான்; கடவுளைப் பார்த்தான்; கையை நீட்டி கடவுளை திட்ட ஆரம்பித்தான்.

“உம் பேரச் சொல்லித்தான் உம் பிரஜை அங்க பூமிக்குள்ள ஒட்ட போட்டுகிட்டு இருக்கான். பாக்காத.. நீ நெனைகுற மாறி தண்ணி வரல, புகை தான் வருது.. அவன் உனக்குத்தான் குழி பரிச்சுகிட்டு இருக்கான். நானே வந்து அந்த குழில உன்ன இறக்கிருறேன்… எந்தக் காலத்துல உனக்கு இந்த புத்தி வந்து சேந்துச்சோ? ஊதாரித்தனம் இங்க வரைக்கும் வந்து சேந்துறுக்கு..”

ஏதேதோ எண்ணங்கள் அவனை அங்குமிங்குமாக அலை அடிக்க களைத்துப் போய் அங்கேயே வெகுநேரம் அமர்ந்திருந்தான். அசைவு ஏதும் இல்லாமல் அங்கேயே இருந்தான். அருகில் உள்ள முள்வேலியில் ஏதோ ஒரு அசைவு. மனம் துணுக்குற்று அதை கவனிக்கலானான். கீரி. வாயில் ஏதோ கவ்வியிருந்தது. கோழி குஞ்சாகவோ அல்லது காடை குஞ்சாகவோ இருக்கலாம். மனம் தன்னை மறந்து ஆர்வம் கொண்டது. அவன் அசைவில்லாமல் ஆனான். கீரி வேலியில் இருந்து தலையை வெளியே நீட்டுவதும் பதுங்குவதுமாக இருந்தது. ஏதோ தயக்கம். அவன் மேலும் அசையாமல் இருந்தான். அதற்காக மூச்சை கூட சீர் படுத்திக் கொண்டான். ஒரு தைரிய கணத்தில் வேலியில் இருந்து வெளியே வந்து முனியப்பசாமி சன்னதியின் பக்கவாட்டில் உள்ள பொந்துக்குள் ஓடி மறைந்தது. ஜீவாவுக்கு எதோ ஒரு திருப்தி.

அங்கே இலந்தை மரம், அடுக்கி வைத்த கல் பீடம், கீரி, வண்டு, செடி, கொடி மட்டை, சாணம், புழுக்கை, அடுப்பு, செங்கல், சூலாயுதம், விளக்கு, மண், காற்று, வானம், சாமி, ஜீவா என்று எல்லாம் ஒன்றுபோல் அமர்ந்திருந்தனர். ஒரு துணுக்கு. ஜீவா தன்னிலை மீண்டான். தனிச்சையாக செல்பேசியை எடுத்து தன் தங்கைக்கு போட்டான்.

“தங்கச்சீங்க..”

“சொல்லுடா.. ஊருக்கு போய்ட்டயா?”

“ஊருக்கும் வந்தாச்சு, உங்கொப்பனயும் பாத்தாச்சு..”

“அதென்ன உங்கொப்பன்? நீ மட்டும் என்ன வானத்துல இருந்தா குதிச்சா?”

“அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? உங்க டாடி இங்க என்னென்ன வேலை செய்றாரு தெரியுமா?”

“காலையிலேயே உன் புராணத்த ஆரம்பிக்காத. எனக்கு எல்லாம் தெரியும். என்கிட்ட நேத்தே சொல்லிட்டாரு.”

“அப்ப, நீயும் இதுக்கெல்லாம் உடந்த. அப்படித்தான?”

“அண்ணா, உடுண்ணா.. பாவம்.. அவர் திருப்திக்கு அவர் எதோ செஞ்சிட்டு பொராரு.”

“ஏய், உனக்கு புரியுதா இல்லையா? எல்லா காசையும் தோட்டத்திலேயே போட்டா.. அப்புறம் உங்க வீட்டு புண்ணியற்ச்சனைக்கு என்ன வைப்பாராம்? என்கிட்ட பணம் கேட்டாரு. நான் சல்லி பைசா தர மாட்டேன்னு சொல்லிட்டேன். நான் உனக்கு சேத்தி வைக்கிறதையும் இவர் க்ளோஸ் பண்ணலாம்ன்னு பாக்குறாரு..”

“அண்ணா.. எனக்கெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க சண்டை போடாம இருந்தா போதும்…”

“நல்லா இருக்கே கதை..”

“அண்ணா.. நீ தான் கொஞ்சம் அனுசரிச்சு போகணும்..”

“நான் ஏன் அனுசரிக்கனும்? நானா ஊதாரித்தனம் பண்றேன்?’

“ப்ச்…”

“நீ உச்சு கொட்டாத.. நான் உள்ளதத்தான் சொல்றேன். உங்க டாடிய இப்போ எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது. காலையில இருந்து இப்போ எட்டு போற் ஆச்சு. ஒன்னுலயும் தண்ணி இல்ல. இப்போ வரைக்கும் செலவு பத்து லட்சம் வந்துருக்கும்.”

“என்ன அண்ணா சொல்ற? எட்டு போரா? என்கிட்ட ஒன்னு போடறேன்னு நேத்துதான் சொன்னாரு..”

“நான் என்ன விளையாட்டுக்கா சொல்றேன். அப்புறம் நாளைக்கு கேட்டா உன்கிட்ட கேட்டுட்டு தான் செஞ்சேன்னு சொல்வாரு. அவரு தப்பிச்சுக்கலாம் பாரு..”

“நான் என்ன அண்ணா சொல்றது..”

“எல்லாம் நீயும் அம்மாவும் குடுக்குற செல்லம்தான்.. உங்க சப்போட்டு இருக்குன்னு நெனப்பு.”

“அண்ணா, நேத்து என்கிட்ட பேசுணப்ப பாவமா பேசுனாரு. தோட்டம் காஞ்சு கிடக்கு. ஊருக்குள்ள பாக்குறதுக்கு நல்ல இல்ல. தோட்டத்த சும்மா போட்டு வெச்சிருகிறதால உனக்கு சரியான ஜாதகம் கூட வர்றதில்ல.. அப்படின்னு சொன்னாரு…”

“எல்லாம் பொய். உங்க அப்பா பொய் சொல்லுவாருன்னு நான் சொன்ன யாரு நம்புறீங்க.. மகனுக்கு தெரியாத அப்பன பத்தி..”

“சரி…. ஆனது ஆச்சுண்ணா.. விடு.. எனக்கு தெரிஞ்சு பத்து லச்சமெல்லம் வராது. நான் அப்பாகிட்ட பேசறேன். இது தான் கடைசி. நீ டென்ஷன் ஆகி உனக்கு எதாவது வந்துடப்போகுது..”

“ஆமா.. நீ சொல்லி அஞ்சாறு ஆகப்போகுது… இப்பவெல்லாம் ஃபோன் பொட்டுறாத. ஆளே வேற மாறி இருக்காரு. ஒன்னும் மரிக்க முடியாது… உன்னையும் எதாவது சொல்லப் போறாரு.”

“அதெல்லாம் உன்கிட்ட தான். என்கிட்ட அப்படி எல்லாம் பேச மாட்டாரு.”

“நீயும் நானும் கஷ்ட்டபடுறதுக்கு அவர்தான் காரணம். தெரிஞ்சுக்கோ. அம்மா மாதிரி நீயும் அவர் சொல்றதெல்லாம் நம்பவேண்டாம்.”

“ஓகே…ஓகே…” அழுத்தமாக ராகம் போட்டாள்.

“இப்படியே பண்ணிட்டு இருந்தார்ன்னா! எல்லாத்தையும் முடிச்சு கட்டிட்டு, கூடைய போட்டு கவுத்துன மாதிரி சுப்பக்கான்னு உக்காந்துக்க வேண்டியதுதான்.”

“சரி…சரி… நான் பேசிக்குறேன்ன்ன்….. அதவிடு.. ஜாதகம் எல்லாம் நெறய வருது. வெயில்ல திரிஞ்சு கருவாப் பயல் போல இருக்காதா. நெறய தண்ணி குடி. ஃபேஷியல் கீஷியல் பண்ணிக்கோ.” அவள் பேச்சை திருப்பினாள்.

அதை உணர்ந்து ஜீவாவும் திரும்பிக்கொண்டான். “உங்க டாடி மட்டும் என்ன தக்காளி பழ கலரா?”

“எங்க டாடிக்கு என்னடா கொறச்சல். ஆபிரிக்கா போன அவருதாண்டா கலரு..” சொல்லும்போதே சிரித்தாள்.

ஜீவா பொய்யாக ஆரம்பித்து மெய்யாக கூட சேர்ந்து சிரித்தான். அங்கே ஆரம்பித்து எங்கெங்கோ சென்று ஏதேதோ பேசி ஃபோனை துண்டிக்கும்போது ஜீவா எதோ சுமூகமான மனநிலையில் இருந்தான். தன் பக்கம் ஒருவர் சேர்ந்தது போல.

4

தான் எங்கு செல்கிறேன் என்று தெரியாமல் மற்றவர் தோட்டத்து வரப்பு வழியாகவும் இட்டேரி வழியாகவும் சென்று கிராமத்து தார் சாலையை அடைந்தான். அவன் வருவதற்கும் பத்து மணி பஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. கையைக் காண்பித்து ஏறிக்கொண்டான். ஏறி அமர்ந்ததும் வயிற்றுப்பசியை உணர்ந்தான். டவுன் கலப்பு கடையை நினைவுபடுத்தியது. பசியே முன்வந்து டவுனுக்கு டிக்கெட் போட்டது. 

ஜன்னலோரம் அமர்ந்து இருந்தான். பஸ் அவன் வீட்டை தாண்டி சென்றது. கடந்து செல்லும் அவன் வீட்டை அந்நியமாக பார்த்துக்கொண்டு இருந்தான். கிராமத்து பஸ் ஸ்டாப்பை கடந்தது; குளத்தாங்கரையை கடந்தது; ஊர் எல்லையில் உள்ள கரடை கடந்தது; ஊரைக் கடந்து தூரமாக சென்று கொண்டிருந்தது. இன்னவென்று தெரியாத விடுதலை. பக்கத்து கிராமத்தையும் கடந்து செல்லும் போது மனம் சிறிது இறுக்கமற்று இருந்தது. பஸ் உடன் சேர்ந்து மனமும் எங்கெங்கோ சென்றது. பஸ்சும் மனமும் டவுன் கலப்பு கடைக்கு முன்னால் நின்றது. ஜீவா இறங்கிக் கொண்டான்.

நேராக கலப்பு கடைக்குள் சென்று அமர்ந்துகொண்டான். காலையில் மிச்சமாகிய பொங்கலும் சாம்பாரும் தான் இருந்தது. தேவ அமுதமாகிய பருப்பு சாதத்தை இங்கு எதிர்பார்க்க முடியாது. அதன் நீர்த்துப்போன வடிவாகிய பொங்கல் தான் கிடைக்கும். பருப்பு சாதம் லட்சியம், பொங்கல் எதார்த்தம். பொங்கல் மந்தகதியானது. பருப்பு சாதம் உயிர் துடிப்பானது. பொங்கல் அப்பணுக்குறியது. வேண்டாவெறுப்பாக எதார்த்தத்தை உண்டான்.

மீண்டும் வீட்டுக்கு செல்ல விருப்பமில்லை. அப்பாவின் கூத்து முடிந்திருக்க இன்னும் வாய்ப்பில்லை. சினிமா கொட்டகைக்கு சென்றான். ஏதோ குடும்ப படம். திரையில் படம் ஒரு திசையில் ஓட இவன் மனம் வேறு திசையில் ஓடிக் கொண்டிருந்தது. வரவிருக்கும் செலவினங்கள் கையிருப்பு வருமானம் அனைத்தையும் கூட்டிக் கழித்து பார்த்துக் கொண்டிருந்தான். முன்னும் பின்னுமாக சமாளித்து விடலாம் என்று நம்பிக்கை வந்தது. ஆனால் இந்த கணித சமன்பாட்டில் மாறிலியாக இவனும் மாறியாக அப்பாவும் இருப்பது ஒரு இடைஞ்சல் தான். கடைசியில் குந்தகம் இல்லாமல் இருந்தால் சரி.

திரையில் மனம் ஒட்டவே இல்லை. ஏதோ உதிரிச் சொற்களாகவும் காட்சிகளாகவும் வந்து விழுந்து கொண்டிருந்தது. திரையில் ஒரு மகன் தன் அப்பாவைப் பார்த்து சொன்னான். “பன்னி குட்டி போட்ட மாதிரி பெத்துக்குறீங்க, பெத்த பிள்ளைக்கு நியாயம் செய்ய முடியலைன்னா ஏன்டா பெத்துகுறீங்க….?”

அங்கிருந்து படம் பார்க்க ஆரம்பித்தான். அந்த மகன் வரும் அத்தனை காட்சிகளையும் உள்வாங்கினான். உள்வாங்கியவனோடு தன்னையும் சேர்த்து சமைத்தான். சமைத்ததை வேறுவேறு காட்சிகளோடு விரித்தெடுத்தான். விரித்தெடுத்ததை நிகழ்த்தி நிகழ்த்தி வாழ்ந்து பார்த்தான். 

“நீங்கள் திடுதிப்பென்று அதி நவீன ஐரோப்பிய தந்தையாக மாறிவிடுகிறீர்கள். பொறுப்புத் துறப்பு, கடமை மீறல், நாள்என ஒன்று போல் வாழ்வு. இருந்துவிட்டுப் போகட்டும் ஒன்றும் தவறில்லை. ஆனால் எங்களை ஏன் இந்திய மகன்களாய் வளர்க்கிறீர்கள்? எங்களிடம் ஏன் நேற்றை விதைத்து நாளையை எதிர்பார்க்கிறீர்கள்? நாங்கள் பிறந்த உடனேயே இது அம்மா இது அண்ணா தம்பி அக்காள் தங்கை பரம்பரை பண்பாடு புண்ணாக்கு தவிடு என்று அடையாளம் காட்டி விடுகிறீர்கள். உயிர் வாங்குகிறீர்கள். பொறுப்புத் துறப்பு எங்களுக்கு மட்டும் வேண்டாமா? சரி, கூட்டு வாழ்க்கைக்கு நாங்கள் ஒப்புகிறோம். அதீத பாரத்தையும் நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். நாங்கள் கேட்பதெல்லாம் சிறிது கரிசனம் மட்டும்தான்.” மனதிற்குள் தன் பக்க நியாயத்தை நீட்டி நீட்டி முழக்கிக் கொண்டிருந்தான். ஆகாய மார்கிகள் மட்டுமே அதைக் கேட்டுக் கொண்டிருந்தன.

கழிவிரக்கமும் மனநிறைவும் ஒன்றுபோல் நடந்தது. உகுத்த கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வரும்போது ஒரு சமாதானம், இருத்தலிய தரிசனம். இருட்டுவதற்குள் வீடு சேர்ந்துவிட வேண்டும். மிச்ச நாடகம் என்னவென்று பார்த்துவிட்டு அடுத்த ஜோலியைப் பார்க்க கிளம்பிவிட வேண்டியதுதான்.

5

சாயுங்காலம் 5 மணி பஸ்ஸில் ஊர் திரும்பினான். எதிரே சென்ற ரிக் வண்டி தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த கூத்து முடிந்துவிட்டதை உணர்த்தியது. வீடு நுழையும்போது அப்பாவின் வண்டியோ செருப்போ அங்கு இல்லை என்பது சிறிது ஆசுவாசமாக இருந்தது. பரிதாபமாக அம்மா பார்த்துக் கொண்டு நின்றாள், சில கேள்விகள் கேட்டாள், அதற்கு ஏதோ பதில் சொன்னான். உள்ளே சென்று படுத்துக் கொண்டான். 

மூளை கலைப்பு. சிறிது நேரம் தூங்கிப் போனான். பருப்பு சாத வாசனை இவனை எழுப்பியது. விடிந்துவிட்டதா? பருப்பு சாதம் விடியலின் அறைகூவலா? இல்லை இன்னும் இரவு தான். காலையில் பொங்கலின் ஆதிக்கம். இரவில் பருப்பு சாதத்தில் புரட்சி. புரட்சி எல்லாம் இல்லை, வெறும் சரிகட்டல் மட்டும்தான். 

முகம் கழுவி வெளியே வந்தான். பவ்ய பாவனையில் அப்பா போல் ஏதோ ஒன்று தலைகவிழ்ந்து திண்ணையில் அமர்ந்து இருந்தது. இது எந்த அப்பா? நினைவிலிருக்கும் அப்பாவா அல்லது காலையில் பார்த்த சன்னதம் கொண்ட அப்பாவா? இந்த அப்பாவை தெரியும். இது பிழை செய்து தோற்றுப் போய், சொத்துக்களை விற்று, ஆளுமை சுருங்கி, உள் ஒடுங்கிய அப்பா. முடித்துக்கொண்டாரா அல்லது அம்பேல் சொல்லியிருக்கிறாரா? காலையில் அத்தனை வாய்ப்பாடு படித்தவர் இப்படி அடங்கி ஒடுங்கி அமர்ந்திருப்பது அவனுக்கு குரூரமான திருப்தி அளித்தது.

இவன் நிற்பதை பார்த்து விட்டு அம்மா, “ஏண்டா அங்கேயே நிக்கிற, மேலுக்கு தண்ணி வாத்துகிரியா? வெடுக்குனு இருக்கும்.. வெந்தண்ணி வைக்கட்டா?”

“வேண்டாம்..”

“கை கழுவீட்டு வா. நீ கேட்டா பருப்பு சாதமும் புளிக் காச்சலும் செஞ்சிருக்கேன்.”

“ம்ம்…” என்றுவிட்டு திண்ணையின் மறு ஓரத்தில் தூரமாக அமர்ந்துகொண்டான். 

அம்மா ஒரு வட்டலில் ஆவி பறக்கும் பருப்பு சாதத்தை பரப்பி அதன் ஓரத்தில் புளிக்காச்சல் வைத்து அவன் முன் வைத்தாள். மேலெழும்பும் ஆவியின் வெம்மை ஜீவாவின் முகத்தை தழுவி வான் சென்றது. வெகுநாட்களாக எதிர்பார்த்த பருப்பு சாதம் முன்னிருந்தும் அவன் மனம் பூரிப்பு கொள்ளவில்லை. ஏனோ காலையில் சாப்பிட்ட பொங்கலே நினைவில் நிழலாடியது. சாதம் ஆரட்டும் என்று காத்திருந்தான்.

அப்பா ஆரம்பித்தார், “இந்தா டீ.. அந்த மாம்பலத்தயும் அறிஞ்சு வெய்யி.. சாப்பிடுவான்ல.. அப்புறம் எல்லாம் வீணாப் போய்டும்.” 

ஜீவா ஒன்றும் சொல்லவில்லை. அசௌகரியமான சில கணங்கள் கடந்து சென்றது. அப்பா “ம்….” என்ற சின்ன அனத்தத்தினால் அதைக் கலைத்தார். அவர் மீண்டும் “ம்…” என்றார். அப்பா மைய விசயத்திற்கு வருகிறார் என்பது புரிந்தது.

சாதம் போதுமான சூட்டிற்கு ஆரியிருந்தது. “ஒரு கை கவளம் அள்ளினான்.”

“எல்லாஞ்சேத்து அஞ்சு வரும் போல.. பாப்பா ஒன்னு தாரேன்னு சொல்லுச்சு. நான் மீதிய பொட்டுகிடுறேன்…”

ஜீவா சாதத்தை கையில் வைத்தவாரே மனதிற்குள் கணக்கு போட்டான். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. நினைத்தது போல் மட்டையடியாக இல்லாமல் சமாளிக்கும் அடியாகத் தான் இருந்தது. அவன் பதில் ஏதும் சொல்லவில்லை.

அப்பா மேலும் தொடர்ந்தார். “போட்ட நாலு போற்லயும் ஒன்னும் கானம். அப்புறம் அந்த பழைய போற்லயே இன்னுமொரு இருநூறு அடி இறக்கி இருக்கோம். இப்ப தண்ணி ஒரு மாட்டமா வருது. முக்கால் இன்ச் தண்ணி வருது.”

ஜீவாவிற்கு சிரிப்புதான் வந்தது. “அதாவது முக்கால் இன்ச் தண்ணி வந்துகிட்டு இருந்த போற்ல இப்போ முக்கால் இன்ச் வருது. அதுக்கு அஞ்சு லெட்ச்சம்…”

“இந்தப் பாருப்பா விவசாயம்ங்கரது நீ நினைக்கிற மாதிரி இல்லை. அது முன்னப்பின்ன தான் இருக்கும். நீ சொல்றதுக்காக அத அப்படியேவும் போடவும் முடியாது.”

ஜீவா அம்மாவைப் பார்த்து தொடர்ந்தான், “பாப்பா கிட்ட எல்லாம் கை நீட்டக்கூடாதுன்னு சொல்லிடு.. நானே அழுது தொலைக்கிறேன்.”

“நீ ஒன்னும் சலிச்சுக்க வேண்டாம்ப்பா. என் கஷ்டத்தை நானே பாத்துக்கிறேன்.” என்றார் அப்பா.

ஜீவா எடுத்த சாதத்தை வட்டலில் போட்டுவிட்டு அவரைப் பார்த்து திரும்பி, “இந்த வீர வசனத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. என் பொறந்தவ கிட்ட பைசா வாங்க கூடாது.. சொல்லிட்டேன்.”

அப்பா ஒன்றும் சொல்லவில்லை. அவருடைய ஒரு பாடு முடிந்தது. ஜீவா மீண்டும் சாதத்தை எடுத்தான். அப்பா “ம்…” என்றார். ஜீவா “இப்போது என்ன?” என்பதுபோல் தலை நிமிர்ந்தான்.

“போற்ல இப்போ நல்லா தண்ணி வருது.”

“சரி…”

“ஊர் கண்ணே நம்ம மேல தான் இருக்கு. எல்லாம் பல்லெரிச்சல் புடிச்ச ஆளுங்க.”

“எதுக்கு.. இந்த முக்கால் இன்ச் தண்ணிக்கா?”

“நம்ம முனியப்பன் சாமிக்கு ரெண்டு கெடா வெட்டுறதா வேண்டிகிட்டேன். அத உடனே செஞ்சு ஆகனும்.” ஜீவா நெளிந்தான். அப்பா தொடர்ந்தார், “நான் சொல்லி முடிச்சுடறேன். எல்லாத்தையும் அழச்சு ஒரே செலவோட செலவா செஞ்சுடலாம். என்ன நான் சொல்றது.”

இம்முறை சாதத்தை வட்டலில் எறிந்தான். அம்மாவைப் பார்த்து சொன்னான், ” அதாவதுமா, நாய் வையித்துல பொறந்தாலும் நட்சத்திரத்தோட பொறக்கணும். என் பொழப்பு நாய்க்கும் வரக்கூடாது.” என்று சொல்லிவிட்டு எழுந்தவனை அம்மா பதட்டமாக பார்த்தாள்.

அப்பா சுருக்கென்று ஆக்ரோஷமாக எழுந்தார். கைகளை தூக்கி தன் போக்கில் கத்தினார். “இவன் என்ன நெனசுகிட்டு இருக்கான். நான் அப்பனா அவன் அப்பனா? நான் உயிரோட இருக்கறது தான் பிரச்சனையா. இப்பவே சுருக்கு மாட்டிக்கிறேன்.” என்று சொல்லி விட்டு விட்டத்திலிருந்த கயிற்றை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார். அம்மா அழுதவாறே பின்னால் ஓடினாள்.

ஜீவா அரங்கேறும் நாடகத்தைப் பார்த்தான். வீட்டிற்குள் சென்றான். உடை மாற்றினான். டிவி பெட்டி மீது இருந்த புகைப் படத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். கடைசி பஸ் பிடிக்க நிறுத்தம் நோக்கி நடந்தான்.

கைபேசி அழைத்தது. தங்கை. “அண்ணா.. என்ன ஆச்சுண்ணா.. “

“என்ன ஆச்சு.. உங்க அப்பா தான் ஆச்சு..”

“என்னண்ணா.. புடி குடிக்காம பேசுற. அம்மா என்னென்னமோ சொல்லுது. எதாவது ஒன்னு கேடக்க ஒன்னு பண்ணிக்க போறாரு. அவரு எங்கண்ணா?”

“எவரு?..”

எவரா? உன் அப்பன் தான்.. உன்னோட அப்பன் எங்க இருக்கான்..” கோவமாக கத்தினாள்.

“என்னோட அப்பன் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ரெண்டுல இருக்கான்.” என்று சொல்லும்போது விம்மிக்கொண்டு வந்தது.

2 comments for “1992

  1. November 4, 2021 at 1:41 pm

    அப்பாவுக்குத் தன் விவசாய நிலத்தின் மீதுள்ள நம்பிக்கை மகனுக்கு இல்லை.இதனாலேயே அப்பாவுக்கும் மகனுக்குமான உறவில் சிக்கல் உண்டாகிறது. தோளுக்குமேல் வளர்ந்துவிட்ட மகன், குடும்பத்துக்காக உழைக்கும் போது அப்பாவின் நம்பிக்கை வீணானது என்றே கருதுகிறான். இந்த அபிப்பிராய பேதமே தடித்த வார்த்தை பிரயோகம் நடக்கிறது. இதுவே கதையின் மையச் சரடகி கதையை நகர்த்திச் செல்கிறது. இந்தப் பாட்திர மோதல்களே கதையைச் சுவாரஸ்யப்படுத்துகிறது.

  2. December 17, 2021 at 7:51 pm

    கதையில் ஊதாரித் தந்தைக்கும் கட்டுச்சிட்டான மகனுக்கும் இடையில் ஏற்படுகின்ற கருத்து வேறுபாட்டின் ஊடே மெல்லிழைப்போன்ற பாச உணர்வும் உடன் பிறந்தவர்களிடையே உள்ள அன்பும், தங்கைக்காக அண்ணன் ஆற்ற விரும்பும் கடமை உணர்வும், தாயின் பரிவும் மட்டுமே இறுதியில் மனத்தில் நிலைக்கிறது. குடும்பத்திற்குப் பிள்ளைகள் ஆற்ற வேண்டிய பொறுப்பை பாடமாக அல்லாமல் குறிப்பால் உணர்த்துகிறது கதை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...