நிலவின் வெம்மையில் அசையாமல் குளிர்காயும் இருட்டு யானையைப்போல நின்றிருந்தது அக்குன்று. அதன் அடிவாரம் மெழுகுதிரி, எண்ணெய் மற்றும் லாந்தர் விளக்குகளின் வெளிச்சத்தில் மஞ்சள் கரைகட்டியிருந்தது. அக்குன்றுக்கு அருகிலிருந்த நிலத்தில்தான் மனித எலும்புகளைச் சமீபத்தில் தோண்டி எடுத்திருந்தார்கள். அக்குன்றினை நோக்கிச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் சின்னஞ்சிறு கொடிகள் ஊன்றப்பட்டிருந்தன. பாதையைவிட்டு விலகியிருந்த மரங்கள் தமக்கு அடியில் லாந்தர் விளக்குகளுடன் மென்வெளிச்சக் குன்றுகளாய் குவிந்திருந்தன. அவற்றின் கீழிருந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்த வழிபாட்டுப் பொருட்களைச் சரிபார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்.
குன்றின் அடிவாரத்தை நோக்கிச் செல்லச் செல்ல அங்கு அகண்டிருந்த வெளிக்கு நடுவில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கடவுளின் படம் புலப்பட்டது. அதற்கு எதிரில் ஏழடுக்குக் கோபுரம் கொண்ட சொர்க்கம் கெட்டித் தாளால் உருவாக்கப்பட்டிருக்க, அதற்கு ஒருபுறம் நான்கு தூண்களைக்கொண்ட நரகமும், மறுபுறம் மூன்று பெரிய ஊதுபத்திகளைக் கொண்ட பூமியும் நின்றிருந்தன. அவ்விடத்திற்கு வரவிருக்கும் ஆவிகளுக்கு வழிகாட்டும் வகையில் ஒரு நீளமான மூங்கில் கழியின் உச்சியில் லாண்ட்ரன் விளக்குப் பொருத்தப்பட்டிருந்தது. ஜப்பானியர்களின் ஆட்சிக் காலத்தில் அகாலமாய் இறந்து போனவர்களின் ஆத்மசாந்தி வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாய் நடைபெற்று கொண்டிருந்தன.
***
ஜிங்வெய் கடந்த சில நாட்களாகவே முன்பிலும் இறுக்கமாக இருந்தார். தான் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஜலன் புவே பூனுக்குச் செல்வதாக மெய்லி சொன்னபோது அரிசியிலிருந்து கற்களைப் பொறுக்கிக்கொண்டிருந்த அவரின் கை ஒரு கணம் தயங்கி பின் மீண்டும் தொடர்ந்தது. சமீப காலமாய் தெருக்களில், சந்தையில், குழாயடியில் என்று எங்குச் சென்றாலும் இதே பேச்சாய் இருக்க, இப்போது அது படிதாண்டி வீட்டினுள் நுழைந்துவிட்டிருந்தது. அதைச் சுரண்டி வெளியில் வீசிவிடப் பரபரத்த அவரின் விரல்கள் அகப்பட்ட அரிசிமணிகளை அழுத்தித் திரித்தன. விடாமல் உற்று நோக்கிக்கொண்டிருந்த மெய்லியின் இருப்பு அவரை நிலைகொள்ள விடவில்லை. பொறுமையின் இறுதியிழை இற்றுப்போக அரிசியிலிருந்து பார்வையை நிமிர்த்திய அவர்,
“என் கருப்பை இன்னும் குளிர்ந்துதான் கிடக்கு. அவனுக்கு ஒன்று என்றால் அதற்குத் தெரிந்திருக்கும்,” என்றபோது அவரின் குரல் மெலிதாய் நடுங்கியது. ஆசெங் இறந்துவிட்டான் என்று அவனுக்குச் சடங்குகள் செய்யத் தயாராகித் தன் எதிரில் வந்து நிற்கும் மருமகளைக் காணக் காண அவள் மீது ஆத்திரம் நுரைத்தெழுந்து கங்குகளாய்த் தெறித்தது.
“எனக்கிருப்பது ஒரே பிள்ளை. உனக்கு வயசு இருக்கு, நீ வேண்டுமானால் வேறு திருமணம் செய்துகொள், அதில் எனக்கு மறுப்போ வருத்தமோ இல்லை! என் பேரப் பிள்ளைகளை என்னிடம் விட்டுவிட்டு நீ போ!” ஒருகணம் திகைத்து, பின் கலங்கத் துவங்கிய மெய்லியின் கண்களைக் காணப் பொறுக்காமல் தலையை மீண்டும் தழைத்துக்கொண்டார்.
தன்னிடமிருந்து தயக்கத்துடன் விலகும் மெய்லியின் மெலிந்து வெளிறிய கால்களைப் பார்க்கப் பார்க்க அவர் கண்களில் நீர் நிறைந்தது. அவரது விரல்கள் சாக்குப் பையில் கொட்டி வைத்திருந்த அரிசியை நெரிக்கத் துவங்கியிருந்தன.
***
நகரின் எண் திசைகளிலிருந்தும் கூக்குரல்கள் ஒலித்த வண்ணமிருந்தன. தீவின் இருண்ட மூலைகளிலிருந்து மூர்க்கமாய் புறப்பட்ட அவை செவிப்பறைகளில் பட்டுச் சிதறி, மையிருட்டில் கரைந்து மீண்டும் மீண்டும் எழுந்தன. துயரம் இறுகிய தொண்டையின் அடியிலிருந்து கிளம்பிய வலியடர்ந்த ஓலமாய் அவை காற்றில் ரீங்காரமிட்டு அலைந்தன. அவற்றை முதியவர்களாலும், குழந்தைகளாலும், மென்மையான மனம் கொண்டவர்களாலும் மட்டுமே உணரமுடிந்தது. அவற்றின் தொனி கேட்டவர்களின் உளவுணர்வுகளை உச்சமேற்றி அரட்டியது. பேசத் துவங்கியிராத சிறு பிள்ளைகள் தூக்கத்திலிருந்து பதறியெழுந்து தூக்கச் சொல்லி வீரிட்டன. கேட்ட சத்தத்தின் உக்கிரம் தாளாது வயசாளிகள் அழுதார்கள், முதிர்ந்த பெண்கள் மெல்லிய குரலில் ஒப்பாரியிட்டார்கள். அக்கூக்குரல்களின் வலியை எதிரொலித்த இவர்களின் அழுகை நகரிலிருந்த பிறரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. யுத்த காலம் தொடங்கி ஒடுக்கப்பட்டு உள்ளுக்குள் நமுத்துக்கிடந்த உணர்வுகளெல்லாம் இப்போது உயிர்பெற்று மேலெழுந்தன.
***
அந்தகாரத்தின் ஆழத்திலிருந்து அந்தக் குரல் முதலில் முனகலாகத்தான் முளைத்தது.
‘ஷு….வெய்….’
‘யா…வ்’
‘தா…க…ம்’
‘த…ண்….ணீர்’
நீரில் மூழ்கிய ஒருவனின் சிறுநடுக்கத்துடன் கூடிய ஈனஸ்வர முனகலாய் ஒலித்த அதில் யாருக்காவது கேட்டுவிட வேண்டுமே என்ற பரிதவிப்பு இருந்தது.
ஆதியில் இழைகளாய்ப் பிரிந்து வந்த வார்த்தைகள் தூக்கத்தினுள் ஊடுருவி மெய்லியின் மூளை மடிப்புகளைத் தடவின. நேரம் செல்லச் செல்ல அவை ஒன்றையொன்று பின்னிக்கொண்டு உயிரொன்றின் இறுதிநேர வைராக்கிய முறுக்கலாய் வெளிப்பட்டன.
‘தாகமாய் இருக்கிறது மெய்லி!’
‘பசிக்கிறது மெய்லி!’
‘ஒரே ஈரமாய் இருக்கிறது மெய்லி!’
உடல் அணுக்கள் பதற எழுந்து அமர்ந்த மெய்லிக்கு, இதயம் அதிர்ந்து செவிப்பறையில் மோதுகிறது என்பதைத் தவிர்த்து ஒன்றும் பிடிபடவில்லை. சுற்றிலும் இருள், தன் கைகளின் இருப்பை உணரமுடியாத அளவிற்கு ஆழ்ந்து அடர்ந்திருந்த இருள்.
‘உவர்ப்பாய் இருக்கிறது மெய்லி’
‘குளிருகிறது மெய்லி!’
குரல் ஒருமுறை கூரையிலிருந்து வருவது போலத் தோன்றியது. அடுத்தமுறை தனது மண்டைக்குள்ளிருந்தே புறப்படுகிறது என்று நினைக்க வைத்தது.
‘தொங்கிக்கொண்டிருக்கிறேன் மெய்லி’
‘வலிக்கிறது மெய்லி’
“ஆசெங்”
கிசுகிசுப்பாய் வெளிப்பட்ட அவளின் அழைப்பில் ஒலித்துக்கொண்டிருந்த குரல் சட்டென அடங்கி மௌனம் கவிந்தது.
‘எங்கே இருக்கிறாய் ஆசெங்?’
சொற்கள் மையிருளின் ஆழத்தில் விழுந்து தொலைந்தன.
முற்றிலும் அமைதி.
“ஆசெங்!”
கனவுகண்டு எழுந்து அமர்ந்திருக்கிறோமோ, தினமும் ஒன்று போலவே வரும் கனவு!
எந்தத் தினம் இந்தக் குரல் கேட்கத் துவங்கியது என்று மெய்லியால் விரல் தொட்டுச் சொல்லிவிட முடியவில்லை. ஆதியில் ஹூம்… ஹூம் என்று வலி முனகலாய் இரவில் தோன்றியபோது அது மெய்லியின் கவனத்தில் பட்டிருக்கவில்லை. பின் அது ஒற்றை எழுத்தொலியாய் வளர்ந்து, ஒன்றோடொன்றிணைந்து வார்த்தைகளாய் புலப்படத் துவங்கி ஆசெங்கின் குரலாய் ஒலித்தது. அதை அடையாளம் கண்ட தொடக்க நாட்களில், குரல் கேட்கும் நேரமெல்லாம் அவனைத் தேடி வாசலுக்கு ஓடுபவளாய் இருந்தாள் மெய்லி. தெருமுனைவரை இருண்டு படர்ந்திருந்த சாலையின் வெறுமையை அவளைக் குழப்பும். அடுத்தடுத்த இரவுகளில் எதிர்பாரா சமயத்தில் ஒலித்த அக்குரல் தன்னைத் தவிர அறைக்குள்ளிருந்த பிள்ளைகளுக்குக் கேட்கவே இல்லை என்பதை அவள் உணர்ந்தாள். பிரமை என்று ஒதுக்கிவிட முடியாதபடிக்கு அவ்வளவு துல்லியமாய் இருந்தது அது.
தூக்கம் முற்றிலும் விலகியிராத நிலையில் கேட்ட ஆசெங்கின் குரல் அவனை உடனே பார்த்துவிடும் விழைவை ஏற்படுத்தியது. அது இயலாது என்ற புரிதலும் உடன் எழ, மனதை நிறைத்த வெறுமையைப் பலமாய் இருமித் துப்பிவிட விரும்பினாள். ஆண்டுகள் கடந்திருந்த நிலையில் அழுகையெல்லாம் ஓய்ந்துவிட்டிருந்தது. உட்கார்ந்த நிலையிலேயே கையினை நீட்டி அருகிலிருப்பவற்றைத் துழாவினாள். ஈரமாக இருந்தது. உடலை இறால்போலச் சுருட்டிப் படுத்திருந்த மெய்மெய் படுக்கையை நனைத்திருந்தாள். குவாங் எப்போது வந்தானோ, மெய்மெய்க்கு அடுத்து படுத்திருந்த அவனின் சட்டையும் நனைந்திருந்தது.
மின்சாரம் போய்விட்டிருந்தது. படுக்கையிலிருந்து எழுந்து மெல்ல நகர்ந்து ஜன்னலைத் திறந்து விட்டாள். நிலவின் வெண்ணொளி அறைக்குள் வழிந்து சில்லென்று பொருட்களில் படிந்தது. தெருவிளக்கு எரியவில்லை. மேசையருகில் சென்று அதன் மீதிருந்த மண்ணெண்ணெய் விளக்கின் திரியைத் தூண்டி, தீப்பெட்டியை உரசி விளக்கை ஏற்றினாள். திரியின் நுனியில் மொட்டாய் அமர்ந்த மஞ்சள் ஒளி அறையின் இருளில் மென்மையாய் கரைந்து பரவி மூலைகளில் அடங்கியது. எதிர்பக்கம் போடப்பட்டிருந்த கட்டிலில் ஆஹோங் சுவர் பக்கம் திரும்பிப்படுத்திருந்தான்.
நனைந்திருந்த உடைகளையும் போர்வையையும் மாற்றியபோது தன் கணவன் நிச்சயம் செத்து விட்டான் என்றே மெய்லிக்கு தோன்றியது. மகன் எங்கோ இருக்கிறான், இதோ வந்துவிடுவான் என்று தினமும் வாசலில் செவிகளைப் பொருத்திக்காத்திருக்கும் ஜிங்வெய் இதை ஒப்புக் கொள்ளமாட்டார். தூங்கும் சமயம் தெரு வாசலில் கேட்கும் மெல்லிய அரவங்களுக்கும் கூட பதறியெழுந்து கதவைத் திறந்து, தெருவில் இறங்கித் தேடுபவராகவே அவர் இன்றுவரை இருந்தார். ஆசெங் காணாமல்போன முதல் வருடம் மெய்லியும்கூட அப்படிதான். சாலையில் செல்பவர்களின் கவனத்தைக் கவர்ந்துவிடாத வகையில் அறை விளக்குகளை அணைத்துவிட்டு, தன் அறைச் சன்னலின் கீழ்ப்பாதியை மறைத்த திரைச்சீலைக்குப் பின்னால் அவன் வழக்கமாய் பணிவிட்டு வரும் வழிநோக்கி தினமும் நின்றிருப்பாள்.
முதலில் தெருவில் இறங்கி, பின் இவள் பக்கம் திரும்பி ‘மதியம் வந்து வேலைக்குக் கிளம்பி விடுவேன்’ என்று சொல்லிச் சென்ற ஆசெங்கின் இறுதி உருவம் அவள் மனதில் ஆழமாய் நிலைகொண்டு பல ராக்கனவுகளில் மீண்டெழுந்திருக்கிறது. அந்தச் சமயங்களில் மெய்லி, போகாதே என்று அழுது அவனைப் பிடித்து இழுத்து வீட்டிற்குள் தள்ளி கதவைப் பூட்டி சாவியைக் கால்வாயில் தூக்கி எறிந்திருக்கிறாள், இதோ மெய்மெய் கூப்பிடுகிறாள் பார் என்று அவனது கவனத்தைத் திசைதிருப்ப முயன்றிருக்கிறாள், நீ இல்லாமல் இந்தப் பிள்ளைகளை நான் எப்படி வளர்ப்பேன் என்று கெஞ்சியிருக்கிறாள். ஆனால் ஒவ்வொரு கனவிலும் ஆசெங் இவளின் வேண்டுகோள்களைப் புறக்கணித்து ஜப்பானியர்களின் சோதனைச் சாவடிக்குக் கிளம்பிச் செல்பவனாகவே இருந்தான்.
***
நகரெங்கும் கேட்ட கூக்குரல்களைத் தொடர்ந்து போரின்போது செயல் முடங்கியிருந்த ஆலயங்கள் பிரார்த்தனைகளால் நிரம்பின. அந்தக் கூக்குரல்களின் மூலத்தைக் கண்டறிந்து களையும் பொறுப்பினை ஆன்மீகவாதிகள் ஏற்றார்கள். அதனையொட்டி செய்யப்பட்ட பூஜைகளுக்கான சடங்குகளின்போது வெளிப்பட்ட வெண்புகை நகரினைச் சூழ்ந்தது. கோஷங்களின் உயர்ந்து தணியும் தாளத்துடன் இணைந்த மேளச்சத்தம் தெருக்களெங்கும் முழங்கின. வெண்ணிற ஆடையணிந்து தீவிர வழிபாடுகளைச் செய்துவந்த ஜிடாங்கள், தங்களின் பூஜைகளின் வழி அக்கூக்குரல்கள் பூமிக்கடியிலிருந்து புறப்படுவதாகக் கண்டறிந்து சொன்னார்கள். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கடற்கரைகளுக்கு அண்மையிலிருந்த மண்மேடுகளிலிருந்து மனித எலும்பின் துண்டுகள் வெளிவரத் துவங்கியிருந்தன. அதனைத் தொடர்ந்து நாட்டை ஆண்ட ஆங்கிலேய அரசு, எலும்புகள் வெளிப்பட்ட இடங்களை ஆழமாய்த் தோண்டுவதற்கு ஆணை பிறப்பித்தது.
***
தொடர்ந்து இரவினில் கேட்டு வந்த அக்குரல் ஏதோவொன்றைத் தனக்கு உணர்த்த முயல்வதாக மெய்லிக்குப்பட்டது. எங்கோ பலமாய் காயம்பட்டுத் தெரியாத வெளியில் திசை புரியாமல் அலையும் ஆசெங்கின் ஆன்மா தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்ள வழி தேடுவதாய் அவளின் உள்மனம் சொன்னது. இரவில் கேட்டு வந்த குரலை ஏற்க முயன்ற மனதின் ஒரு பாகத்தையும், அவன் இறந்துவிட்டான் என்பதை மறுக்கும் மறுபாகத்தையும் ஒருசேர எதிர்கொள்ள இயலாமல் தடுமாறினாள். இந்தக் குழப்பத்தால் தொடர்ந்து வந்த இரவுகளில் அக்குரலைப் புறக்கணிக்க முயன்றாள்.
இவளின், பிள்ளைகளின் தேவைகளை முன்வைத்தே தன்னுடையவற்றைக் கட்டமைத்துக் கொண்ட ஆசெங், வார்த்தைகளற்ற தனிமையில் இவளது வலப்புற உதட்டோரத்தில் சிறுமேடாய் எழுந்த மச்சத்தைத் தடவிக் கொடுக்கும் இவளுடைய ஆசெங், இப்போது நீர் கேட்டு, உணவு கேட்டு பசியிலும் வலியிலும் கெஞ்சும் ஆசெங்.
அவளால் ஆசெங்கின் குரலைப் புறந்தள்ள இயலவில்லை. இரவுகளில் விடாமல் ஓலமிட்ட அதில் தொனித்த வலியினைக் கடந்து வேறு செயல்களில் அவளின் கவனம் செல்லவில்லை. எங்கோ இருக்கக்கூடிய அவனின் ஸ்தூல உடலைவிட, தினமும் கேட்டு வரும் குரல் அவளுக்கு மெய்யானதாக, முயன்றால் தொட்டுவிடக் கூடியதாகத் தோன்றியது. அதனிடமிருந்து தள்ளிச் செல்ல விரும்பிய ஒவ்வொரு நொடியும் அதனை நோக்கியே அவள் ஈர்க்கப்பட்டாள்.
மெல்லமெல்ல மௌனத்தினூடாக இல்லாமையினுள்ளிருந்து வெளிப்பட்டபடியிருந்த அக்குரலின் பக்கமாய் மெய்லி நகரத் துவங்கினாள். அதனுடன் உரையாட முற்பட்டாள்.
‘நீதானே ஆசெங்?’
‘…..’
‘வந்துவிட்டாயா ஆசெங்?’
‘…..’
‘எங்கிருக்கிறாய் ஆசெங்?’
‘……’
‘என்ன வேண்டும் ஆசெங்?’
‘……’
முதலில் இவளின் கேள்விகளுக்கு எதிர்வினையும் எதுவும் இருக்கவில்லை. சம்பந்தமில்லாத நேரத்தில், கேட்ட கேள்விகளுக்குத் தொடர்பற்று அந்தக் குரல் தன் போக்கில் ஒலித்தபடியிருந்தது. இவளும் விடாமல் அடுத்தடுத்த இரவுகளில், இருண்டிருந்த வெற்றுவெளியின் நாற்புறங்களையும் நோக்கித் தன் கேள்விகளைத் துணுக்குகளாக்கி வீசிக்கொண்டே இருந்தாள். அந்தக் குரல், சம்பந்தமற்ற வேறுதிசையிலிருந்து இருளைத் தூர்த்துக்கொண்டிருந்தது.
‘எங்கே இருக்கிறாய், ஆசெங்?’
‘…….’
‘உனக்கு என்ன ஆனது ஆசெங்?’
‘…..’
‘இங்கே நம் அறைக்குள் இருக்கிறாயா’
‘……’
‘தூங்கும் நம் பிள்ளைகளைப் பார்க்கிறாயா?’
‘…..’
‘ஆசெங்!’
‘….‘
‘நீ செல்லும்போது எட்டு மாதக் குழந்தை மெய்மெய், அப்போது உன்னை நிறையத் தேடினாள்.’
‘வலிக். . .கிறது . . . மெய் . . . லி . . .’
சட்டென எழுந்தமர்ந்த மெய்லி பார்வையால் இருளை உற்றுத் துழாவினாள். உடனிருந்த நாட்களில் இவ்வளவு வலியுடன் ஆசெங்கின் குரல் ஒலித்ததே இல்லை. அக்குரலிலிருந்த வேதனையும் அதைத் தீர்த்துவிட இயலா இயலாமையும் அவளின் துக்கத்தைப் பன்மடங்காக்கின. அக்குரலிலிருந்த நோவு, அதை இழுத்தணைத்துச் சமாதானப்படுத்தியே தீர வேண்டும் என்ற தவிப்பைக் கொடுத்தது. செயல்படும் வகை தெரியாமல் மீண்டும் மீண்டும் மனச்சுவர்களில் முட்டிக்கொண்டாள்.
***
சூரியன் புறப்பட்டிராத விடியலில் குழி தோண்டப் பணிக்கப்பட்டவர்கள் தங்களின் மேல் சட்டைகளைக் கழற்றி அருகிலிருந்த மரங்களுக்கடியில் வைத்துவிட்டு, தங்களின் மூக்கின் மீது துணிகளைக் கட்டிக் கொண்டு வேலையினைத் துவக்கினார்கள். குழியினைத் தோண்டத் தோண்ட அதிலிருந்து பொறுக்கவியலா நாற்றத்துடன் ஈரமண்ணும் சதைத் துணுக்குகளும் ஒட்டிக்கிடந்த மண்டையோடுகள், நீண்ட மற்றும் குறுகிய எலும்புத் துண்டுகள் வெளிவந்தபடி இருந்தன. அந்த வாடை, பணியாளர்கள் ஒரே சீராக வேலையினை மேற்கொள்ள இயலாத வகையில் சிறுகுடலைப் புரட்டிப் பெருங்குடலை அழுத்தியது. அவ்வப்போது நெஞ்சிலிருந்து உமட்டி வந்ததைக் காறி உமிழ அவர்கள் தோண்டுவதை நிறுத்திவிட்டு பள்ளத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. தாயத்து, மண்ணரித்த சில்லறைக் காசுகள், பித்தளைச் சங்கிலி, துருவேறிய வளையல்கள், உடைந்த மூக்குக் கண்ணாடிகள் இவற்றுடன் எலும்புகள், எலும்புகள், மேலும் மேலும் எலும்புகள்.
***
ஆசெங் காணாமல்போன தினத்திலிருந்து மெய்லியின் தேடல்களும் ஜிங்வெய்யினுடையதும் ஒற்றைப் புள்ளியை நோக்கியே இருந்திருக்கின்றன.
யுத்தம் முடிந்த பின்னரான நாட்களில் போரின்போது வெவ்வேறு தீவுகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்களெல்லாம் திரும்பி வந்துகொண்டிருந்த சமயம் அது. முதல் கப்பலில் ஐந்நூறு பேர் வருகிறார்கள் என்று கேள்விப்பட்டது முதற்கொண்டே மெய்லியும் ஜிங்வெய்யும் பரபரப்பானார்கள். கப்பல் வரும் தினம், சூரியன் உதிக்கும் முன்னரே இருவரும் க்ளிஃபர்டு பியரில் நின்றிருந்த உறவினர் கூட்டத்தின் பகுதியாய் ஆசெங்கின் புகைப்படத்துடன் காத்திருந்தார்கள். மகன் இறுதியாய் சீனப்பெருநாளுக்கு வாங்கிக்கொடுத்த, ஆழ்சிவப்பில் ஆரவாரமில்லாத சிறு தங்கப் பூக்கள் படர்ந்திருந்த சட்டையை ஜிங்வெய் அணிந்து வந்திருந்தார். அதை வாங்கிய வருட குதிரைப் புத்தாண்டு அதிர்ச்சியையும் அச்சத்தையுமே சுமந்து வந்திருந்தது. கொண்டாடும் மனநிலை நகரில் யாருக்குமே இல்லை. இந்தச் சட்டையும் அணிய வாய்ப்பற்று பெட்டிக்குள்ளாகக் காய்ந்த நறுமணப் பூக்களுடன் பொத்தியே கிடந்தது. மகன் ஆசையாய் வாங்கித் தந்த ஆடை அவனைப் பற்றியிழுத்துத் தன்னிடம் சேர்த்துவிடும் என்று நம்பியதுபோல அன்று அதை அணிந்து வந்திருந்த அவர், வெளுத்த பழைய ஆடைகளை உடுத்தியிருந்த கூட்டத்தில் தனித்துத் தெரிந்தார்.
நேரம் செல்லசெல்ல, காற்றில் படர்ந்திருந்த வெம்மையும், உவர்ப்பின் பிசுபிசுப்பும் கடற்கவுச்சியின் வாடையுடன் ஒன்று கலக்க அவ்விடத்தின் கசகசப்பு கூடியது. கப்பலில் வந்தவர்கள் படகுகளில் பயணித்து படகுத் துறையில் இறங்கி வெளியே வந்தபோது குழுமியிருந்தவர்கள் வியர்வையின் உப்பு வாடையிலிருந்து சிதறி அவர்களை நோக்கி வேகமாய் நகர்ந்தார்கள். துருத்திய எலும்புகளின் மீது பொருத்தமற்றுத் தொங்கிய மேல்சட்டையுடன் ஆன்மா தொலைத்த கூடுகளாய் வந்தவர்களிடம் விசாரிக்க முண்டியடித்து ஒருவருடன் ஒருவர் குழம்பினார்கள். கூட்டத்தை நெறிப்படுத்த முயன்ற ஊழியர்களினூடாக காத்திருந்த வண்டிகளில் வந்தவர்கள் ஏறிச்சென்ற பின்னர் அன்று எந்த மாற்றமுமின்றி இவர்களிடம் புகைப்படமாக மட்டுமே எஞ்சினான் ஆசெங்.
அதற்கு மறுநாள், கப்பலில் வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாமின் விலாசத்தை விசாரித்து மெய்லியும் ஜிங்வெய்யும் சென்றார்கள். குண்டு தாக்கியதில் இடப்பக்கம் தகர்ந்த வெளிச்சுவரைக்கொண்டிருந்த வயதான கட்டடம் அது. அதன் குறுகிய அறைகளில் சொற்ப உடைமைகளுடன் முன்தினம் கப்பலில் வந்தவர்கள் தங்கியிருந்தார்கள். கண்ணில் தென்பட்ட பொருளை வெறித்துக்கொண்டோ, தலைகுனிந்து பார்வையால் தரையைத் துழாவிக்கொண்டோ, சுவர் பக்கமாய் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டோ இருந்தவர்கள் போக ஒன்றிரண்டு பேர் மட்டுமே அங்கு நடமாட்டமாய் இருந்தார்கள். சிலர் ஆசெங்கின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியோ தலையை ஆட்டியோ தங்களின் பரிட்சயமின்மையை வெளிப்படுத்தினார்கள். சிலர் இவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நிலையிலேயே இருக்கவில்லை, புறவுலகின் சலனங்களைப் புறக்கணித்து தங்களுக்குள்ளிருந்த வெறுமையை ஆழ்ந்து வெறித்தபடி நோய்மை பீடித்தவர்களாய் அமர்ந்திருந்தார்கள்.
இறுதியாகக் கட்டடத்திற்குப் பின்புறமிருந்த ரம்புத்தான் மரத்தின் கீழ் அமர்ந்திருந்த வயசாளியை நோக்கி அவர்கள் சென்றார்கள். மண்தரையில் உதிர்ந்த பழத்தை எடுத்து சிவப்பு முடியடர்ந்த அதன் தோலை தன்விரல் நகத்தால் இரண்டாய் வகுத்துக்கொண்டிருந்த அவர் தன் செயலை நிறுத்திவிட்டுப் புகைப்படத்தை உற்றுப் பார்த்து யோசித்தார். பின்னர் தயக்கத்துடன், நோயினால் மெலிந்து இறக்கும் தருவாயில் சாலையோரம் கிடந்த அவனைத் தான் சாலை திருத்திக்கொண்டிருந்த இடத்தில் ஒரு மழைநாளன்று பார்த்தாகச் சொன்னார். உரித்த ரம்புத்தானை வாயில் போட்டுக்கொண்டு கையில் ஒழுகிய சாற்றை அடிமரத்தில் தேய்த்த அவர், அதிர்ந்து நின்றிருந்த இவர்களின் பக்கம் மீண்டும் திரும்பி, அன்று பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் சரியாகப் பார்க்கமுடியவில்லை என்றும் அதனால் அன்று பார்த்தது அவனில்லாமல் வேறு யாராவதாக இருக்கும் வாய்ப்பு இருந்ததாகவும் சொன்னார். அவர்கள் இருவரும் அங்கிருந்து விலகி வேகமாய் வெளியேறினார்கள்.
அதன்பின்னர் பிற நாடுகளில் அகதிகளாய் இருந்தவர்கள் கப்பலில் வருகிறார்கள் என்ற செய்தி வரும் போதெல்லாம் இவர்கள் இருவரும் படகுத் துறைக்குச் சென்று, தூரத்தில் மிதந்த படகுகளை நோக்கியவாறு எதிர்பார்ப்புடன் காத்திருக்கத் துவங்கினார்கள். தேடிய உறவினர்கள் வந்துவிட்ட காரணத்தினாலேயோ அல்லது நம்பிக்கை தேய்ந்து போனதாலோ படகுத் துறையில் கூடிநின்ற உறவினர்களின் எண்ணிக்கை கப்பலுக்குக் கப்பல் குறைந்தது. ஏறக்குறைய ஒருவருடத்தில் மெய்லியும் அப்படிச் செல்வதை நிறுத்திவிட்டாள். அதன் பின்னர், எப்போதோ வந்துவிடுவான் என்ற கடற்கவுச்சியுடன் கூடிய நம்பிக்கையாய் ஆசெங் அவள் மனதில் தங்கிப் போனான்.
ஜிங்வெய் இன்று வரையில் விடாமல் படகுத் துறைக்குச் சென்று வருபவராய்தான் இருக்கிறார். அங்கு மட்டுமன்றி, யாருடைய கணவனாவது, பிள்ளையாவது திரும்பி வந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டால் விலாசத்தைக் கண்டறிந்து அவர்களைச் சென்று பார்த்து விசாரித்து வந்தார். அதில் கிடைக்கக்கூடிய ஏமாற்றம் அவருக்குப் பழகிவிட்டிருந்தது. ஜிங்வெய்யின் கவனம் முழுக்க, உலகத்தின் ஏதோவொரு மூலையிலிருக்கும் மகனைக் கொத்தி வந்துவிடும் தீவிரத்துடன் அவன் வரவின் மீதே குவிந்திருந்தது. அவரின் அந்த அசாத்திய நம்பிக்கை மெய்லிக்குமே தேவைப்பட்டது. தன்னை மீறி யோசனைகள் ஓடத் துவங்கும் நாட்களில் பற்று கொள்ளும் கோடாக அது இருந்தது.
அன்று ஜிங்வெய் வீசிய சுடுசொற்களும்கூட மெய்லிக்கு ஒருவிதத்தில் இதத்தையே கொடுத்தன. தனது மனம் ஆசெங்கின் இறப்பினை ஏற்கும் பக்கம் கிளைக்கத் துவங்கிவிட்டிருந்தைக் கண்டு மெய்லியே அதிர்ந்துதான் போயிருந்தாள். இப்போது ஜிங்வெய் இறைத்த வார்த்தைகளின் வெப்பத்தில் ஆசெங் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை மீண்டும் திடமாய்த் துளிர்த்தது. அதே சமயம் அமைதியுறுவதற்கென தன்னை எதிர்பார்த்து ஆசெங்கின் ஆன்மா காத்திருக்குமானால் அதனை ஏமாற்றும் எண்ணமும் அவளுக்கு இருக்கவில்லை.
***
பூமிக்குக் கீழே புதைந்திருந்த பெயரற்ற கல்லறைகளிலிருந்து அந்தக் குரல்கள் வருகின்றன என்று ஜிடாங்கள் கண்டறிந்து சொன்னபோது, ‘ஆம்.. ஆம்.. அங்கிருந்து மட்டுமே இது போன்ற அமானுடக் குரல்கள் எழமுடியும்’ எனக் கேட்டவர்களும் ஆமோதித்தார்கள். தங்களின் அசாதாரணச் சக்தியால் அவ்வுலகை எட்டிப் பார்க்க முடிந்தாகச் சொன்ன ஜிடாங்கள், அங்கு, அகாலத்தில் தவறியதால் வழிபுரியாமல் தடுமாறி, குளிரில் நடுங்கியபடி அந்தரத்தில் தலைகீழாய் தொங்கி நிற்கும் நிர்வாண ஆன்மாக்களைக் கண்டதாகச் சொன்னார்கள். ஊசி போல இறுகிச் சிறுத்த உணவுக்குழலின் மெல்லிய துளைவழி, உண்டு பசியாற முடியாமல் தாகம் தீர்த்துக்கொள்ள இயலாமல் பரிதவிக்கும் அவ்வான்மாக்களின் நிலை தம்மைக் கண்ணீர் விட்டு அழச் செய்ததாகச் சொன்னார்கள். அவ்வான்மாக்களைத் திருப்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
***
விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது.
வழக்கமாய் ஆலய வளாகத்தில் இருப்பதைவிடப் பிரம்மாண்டமாய் தோற்றமளித்த அனைத்தையும் ஆச்சரியமாகப் பார்த்தபடி தாயுடன் நடந்துகொண்டிருந்த மெய்மெய்யின் கைகளை அழுத்தமாய்ப் பற்றியிருந்தான் ஆஹோங். குவாங், ஜாஸ் தாள்கள், காகிதச் சட்டை உள்ளிட்ட காணிக்கைப் பொருட்கள் கொண்ட பையைச் சுமந்தபடி அவர்களுக்கு முன்னால் நடந்துகொண்டிருந்தான்.
குன்றின் அடிவாரத்தையொட்டி வரிசையாய் நடப்பட்டிருந்த ஊதுபத்திகளிலிருந்து எழுந்த புகை அவ்விடத்தின் மீமிகைத் தன்மையைக் கூட்டியிருந்தது. மீ, சோறு, வறுத்த கோழி, பன்றி உள்ளிட்ட உணவுகளின் கலவையான வாடையுடன் பத்திப்புகை நெடியும் கலந்த வாசனை அவ்விடத்தை நெருங்க நெருங்க அடர்த்தியானது. நடுவில் போடப்பட்டிருந்த உயர நாற்காலிக்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த இடுப்புயர மேடையில் ரோஜா நிற பன்களும், அரிசி கேக்குகளும் பழங்களும் படையலுக்காகக் குவிக்கப்பட்டிருந்தன. இடைவெளிவிட்டு ஏற்றி வைக்கப்பட்டிருந்த சிவப்பு மெழுகுவர்த்திகளுக்கு நடுவில் சமைத்த உணவுகள் வரிசையாய் அடுக்கப்பட்டிருந்தன. தான் பிரட்டிய மீயை ஒரு பீங்கான் தட்டில் வைத்து, அதன் ஓரத்தில் வறுத்த பன்றி மாமிசத் துண்டுகளை வைத்தாள் மெய்லி. தட்டிற்கு வெளியில் ஆரஞ்சுப் பழங்களை அடுக்கினாள். கூடைக்குள்ளிருந்த வைன் போத்தலை அதற்கு அருகில் எடுத்து வைத்தான் ஆஹோங். குவாங், அங்கு வைக்கப்பட்டிருந்த ஜப்பானியர்களின் உருவப் பொம்மைகளையும், அவர்களின் உடல் உறுப்புகளைச் சேதம் செய்துகொண்டிருந்த குதிரைமுக அரக்கர்களையும் பார்த்தபடி நின்றிருந்தான். அவனது தோளைத் தட்டியழைத்து சற்று தள்ளி அமர்ந்திருந்த பெண்களுடன் சென்று உட்கார்ந்துகொண்டாள் மெய்லி. மரக்கிளைகளினூடாக நுழைந்த நிலவொளி அவர்களின் மீது சல்லடை சல்லடையாகப் படர்ந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்பட்ட ஆண்களைத் தவிர்த்து அங்கிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களே. அன்றைய சடங்குகளைச் செய்வதற்கும்கூட ஒரு பெண் ஜிடாங்கைத்தான் கருணையின் கடவுள் தேர்ந்தெடுத்திருந்தது.
ஜிடாங்கின் முன்கொண்டையில் பதிக்கப்பட்ட கடவுளின் உருவம் துலங்கும் வகையில் அவரின் கேசத்தில் பொருத்தப்பட்டிருந்த வெண்சல்லடைத் துணி, அவர் உடுத்தியிருந்த நீண்ட ஆடையின் வெண்மையில் வழிந்து இறங்கியது. கையிலிருந்த சிறு சுத்தியலால் பித்தளைக் குவளையின் விளிம்பினை அவர் தட்ட அதிலிருந்து கிண்னென்று எழுந்த ஒலி காற்றில் அதிர்ந்து பரவியது. அங்கங்கு குழுக்களாய் திரண்டிருந்தவர்கள் திடலின் மையத்தை நோக்கி நகர்ந்தார்கள். மெய்மெய்யின் மெலிந்த கரத்தைப் பற்றிக்கொண்ட மெய்லியும் அவர்களுடன் நடந்தாள். ஆஹோங்கும் குவாங்கும் அவளைத் தொடர்ந்தார்கள்.
உதவியாளர் விசிறி மடிப்பாய் விரித்துக்கொடுத்த ஜாஸ் தாள்களையும், ஊதுபத்திகளையும் பெற்றுகொண்ட ஜிடாங், அவற்றைத் தனக்கு அருகிலிருந்த தடித்த சிவப்பு மெழுகுவர்த்தியில் பற்றவைத்துக்கொண்டு நடுவில் வைக்கப்பட்டிருந்த கடவுளின் பக்கம் திரும்பினார். மேளங்களும் கோங்களும் சீரான தாளத்தில் முழங்கத் துவங்கின. ஊதுபத்திகளைத் தாங்கியில் பொருத்திவிட்டு எரிந்துகொண்டிருந்த ஜாஸ் தாள்களைத் தரையில் வைத்த ஜிடாங்கின் கைகளில் உதவியாளர்கள் வேறு ஜாஸ் தாள்களையும் ஊதுபத்திகளையும் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு குழுமியிருந்தவர்களை நோக்கி நடந்தார். கூட்டம் வேகமாய் விலகி வழிவிட்டது. நான்கு திசைகளையும் வணங்கிவிட்டு திரும்பி வந்த அவர் ஜாஸ் தாள்களைக் கொளுத்தி உயர இருக்கையின் கீழ் வைத்தார். தாள்கள் எரிந்து சாம்பலாக் காத்திருந்து புகையும் ஊதுபத்தியுடன் அவ்விருக்கையில் ஏறி அமர்ந்தார்.
உதவியாளர்கள் மந்திர உச்சாடனங்களைத் துவங்கினார்கள். ஒரே சீராக ஒலித்த அவர்களின் குரல்களுடன் இணைந்த கோங் மற்றும் மேளச்சத்தங்கள் நேரம் செல்லச் செல்ல உச்சமேறின. புகைந்துகொண்டிருந்த வத்திகளைத் தன் முகத்திற்கு நேரே பிடித்திருந்த ஜிடாங்கின் மீது அருள் இறங்கத் துவங்கியது. நரம்புகள் முறுக்கேற அவரின் கால்கள் அனிச்சையாய் நடுங்கின. உதறும் உதடுகளுடன் தலை முன்னும் பின்னுமாய் ஆட, அவரது கண்ணின் கருவிழிகள் மேல் நோக்கிச் சென்றன. கொண்டையில் அணிந்திருந்த வெண்சல்லடைத் துணி அவரின் உடலசைவுகளுக்கேற்ப புரண்டு மீண்டது.
உடனிருந்த உதவியாளர்கள் அவர் கையிலிருந்த ஊதுபத்திகளை வாங்கிக்கொண்டு ஏற்றி வைத்திருந்த வேறு பத்திகளைக் கொடுத்தார்கள். அடுத்த கணம் தனது உயர நாற்காலியிலிருந்து எகிறிக் குதித்த ஜிடாங் கனன்று கொண்டிருந்த ஊதுபத்திக் குவியலைச் சட்டென வாய்க்குள் நுழைத்தார். குவாங் கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.
அருள் இறங்கி ஆடிக்கொண்டிருந்த ஜிடாங்கின் பக்கம் சென்று பவ்வியமாய் குனிந்து எதையோ சொன்ன அவரின் உதவியாளர்கள், அவரின் கையில் கருப்புச் சாட்டையையும் பெரிய திறவுகோலையும் கொடுத்தார்கள். அதை வாங்கிக்கொண்ட ஜிடாங்கின் உடல் மெல்லச் சுழலத் துவங்கியது. சுழன்ற நிலையிலேயே படையல் உணவுகளுக்கு முன்னால் சென்று நின்ற ஜிடாங் தன் குரலை உயர்த்தி, படையல் உணவுகளை உண்டு, இருக்கும் உடைகளை உடுத்திக் கொள்ளும்படி பசியில் காத்திருந்த ஆவிகளுக்கு உத்தரவிட்டார். மேளம் மற்றும் கோங்களின் அதிர்வுகள் உச்சத்தை எட்டின.
அவ்விடத்தின் அலைவரிசை மாற்றம் கொள்வதை மெய்லியால் உணரமுடிந்தது. வானத்தை அண்ணாந்து பார்த்தாள். தலைக்கு மேல் மேகங்கள் அடர்த்தியாய் குவிந்து நிலவை மறைத்திருந்தன. காற்றின் அழுத்தம் கூடி சில்லிப்பு ஏறியிருந்தது. ஜிடாங் முன்பிலும் உக்கிரமாய் சுழன்றார். அவரின் கையிலிருந்த சாட்டை மேலும் கீழுமாய் வெற்றுவெளியைப் பிளக்கத் துவங்க, கூட்டம் ஏழெட்டு அடிகள் பின்னகர்ந்தது. மெய்மெய், மெய்லியின் உடலுடன் ஒட்டிக்கொண்டாள். சிறுபிள்ளைகள் பயந்து அழத்தொடங்கின. அது வெளியில் கேட்டுவிடாத வகையில் கோங்கள் தங்தங்கென ஆழமாய் முழங்கிக்கொண்டிருந்தன. பசியுடன் காத்திருந்த ஆவிகளைத் தள்ளிவிட்டு உணவை உண்ண முண்டியடித்த தீய ஆவிகளை அவர் ஒழுங்கு படுத்துவதாக மேளச்சத்ததிற்கும் மேலெழுந்த குரலொன்று சொன்னது. தங்களின் கண்களுக்குப் புலப்படாத ஆவிகளின் கவனத்தைக் கவர்ந்துவிடா வண்ணம் அனைவரும் அமைதியாய் அகன்ற கண்களுடன் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
முதலில் குழப்பமாய்த் தொடங்கிய சடங்குகள் சற்று நேரத்தில் ஓர் ஒழுங்கிற்குள் வந்தன. ஜிடாங்கின் உடலசைவுகள் இளகின. குவாங்கும் ஆஹோங்கும் இடைவெளிகளில் புகுந்து கூட்டத்திற்கு முன்பாகச் சென்று நின்றுகொண்டார்கள். மெய்மெய்யும் மெய்லியின் கைப்பிடியைத் தளர்த்திவிட்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். ஜிடாங், உண்டு முடித்து உடை உடுத்திக்கொண்டு தயாராய் நின்ற ஆவிகளுக்காகத் தன் திறவுகோலை முடுக்கினார். அதுவரைக் கட்டுகளில் சிக்கிக்கிடந்த நல்லாவிகள் சொர்க்கம் நோக்கி நகர்வதையும், இடையிடையில் நுழைய முயன்ற தீய ஆவிகளைச் சாட்டையால் அடித்து நரகத்தின் நான்கு தூண்களுக்கிடையில் அவர் தள்ளிவிடுவதையும் பார்ப்பவர்களால் உணரமுடிந்தது. மற்றொரு பக்கம் ஜாஸ் தாள்களும் காணிக்கைப் பொருட்களும் உயிர் நீத்தவர்களுக்காக எரியூட்டப்பட, கருகும் காகிதத்தின் வாசம் அவ்வெளியெங்கும் படர்ந்தது.
இறுதியாக ஜிடாங்கின் உடலில் ஆன்மாக்கள் இறங்கிப் பேசத் துவங்கின. தாங்கள் தலைவெட்டிக் கொல்லப்பட்டபோது தனித்துத் துடித்த தங்களின் உடல் பற்றியும், உயிருடன் புதைக்கப்பட்டபோது திணறி வெடித்த இறுதி மூச்சைப் பற்றியும் சொல்லி அழுதன. பின்னர் இப்போது தாங்கள் நகரத் தயாராகிவிட்டதைச் சொல்லி அடங்கின. ஒவ்வொரு புது ஆவி இறங்கிவரும் போதும் அக்குரல் தனக்குப் பரிட்சயமானதா என்று மெய்லி உற்றுக் கேட்பதற்குள் அதனை அடையாளம் கண்ட உறவினர்கள் முன்நகர்ந்து தங்களின் அன்புக்குரியவர் நிம்மதியான இடத்திற்குச் சென்று சேர்ந்ததைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்கள். கூட்டத்தினூடாக நெளிந்து வளைந்து இவளருகில் வந்திருந்த குவாங், ஆர்வமும் நம்பிக்கையுமாய் ஜிடாங்கை உற்று நோக்கியவாறு நின்றிருந்த மெய்லியின் கையைப் பற்றியிழுத்தான்.
‘’ம்மா, நய் நய்,” என்றபடி கூட்டத்தின் எதிர்புறம் விரலை நீட்டினான். அவனது விரலை மடக்கிவிட்ட மெய்லி அவன் சுட்டிய பக்கம் பார்வையைத் திருப்ப, அங்கு ஜிடாங்கை வெறித்தபடி நின்றுகொண்டிருந்தார் ஜிங்வெய். மகனை அண்டத்தின் எந்த மூலையிலிருந்தும் ஈர்த்து வந்துவிடக்கூடிய வகையில் பளிச்சென்றிருந்தது அவர் அணிந்து வந்திருந்த ஆழ்சிவப்புச் சட்டை. மெய்லியின் கைகளை உதறிய குவாங், ஜிங்வெய்யை நோக்கி கிடைத்த இடைவெளிகளின் வழி ஓட, ஒட்டியிருந்த இறுதி இழையையும் வெட்டி எறிவதுபோல வானிலிருந்து தூறல் துளிகள் கூர்மையாய் இறங்கத் துவங்கின.
‘அந்தம்’ இரண்டாம் உலக யுத்த நெருக்கடி காலக்கட்ட நினைவுகளை அதன் சோக இழை மாறாமல் சொல்லிச் செல்கிறது. சப்பானியர்களால் பெரும்கொடுமைக்கு ஆளான இனம் சீன இனம். சப்பானுக்கும் சீனாவுக்கும் நடந்த இடையறாத போரின் விளைவாக சாப்பானியர் சீனர்களை அளவுக்கதிகமாகத் இம்சிக்கிறார்கள். அப்போது காணாமற்போன உறவுகள் அதிகம். இறந்துவிட்டார் என்று உறுதியாகத் தெரிந்தாலாவது சோகம் நாள்பட இறங்கிவிடும். ஒரு இரண்டுக்கெட்டான் நிலையைக் கதை சொல்லிச் செல்கிறது. அவர் உயிரோடு இருக்கலாம் என்ற நம்பிக்கை கதையின் அமானுடத் தன்மைக்குக் கொண்டு செல்கிறது. அந்த இடம் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சீனர்களிடையே நிலவும் சடங்குகள் காட்சியாக்கம் யதர்த்தமாக வந்திருக்கிறது. அதில் அவர்கள் நம்பும் சூழலை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான மொழி கதைக்குப் பொருத்தமாகவே கூடிவந்திருக்கிறது ஹேமாவுக்கு.
அருமையான சிறுகதை. போரின் பேரிடர்கள் எவ்வாறு சமூகத்தை அலைக்கழிக்கிறது. சடங்குகளுக்குள் தேடும் சமாதானத்தை மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஹேமா அவர்களின் தேர்வும், மொழியாக்கமும் மிகவும் நன்றாக உள்ளது. நாம் ஓர் அமானுஷ்ய நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறோம்
கி.பா.நாகராஜன்
ஒரு வித பரபரப்பான எதிர்நோக்குதலை உருவாக்கி கடைசி வரை கொண்டு செல்லும் பாணி அற்புதம் தகவல்களின் உறுத்தாமை , அதை சரியாக கையாண்ட வாழும் பாரட்டதக்கது நல்லது நன்றி (கணவன் கூப்பிடுவது தன் மனநிலையினாலா அல்லது அவனின் ஆன்மாவா என்பதில் உங்களின் உழைப்பு தெரிகிறது)