அசைவும் பெருக்கும்

தவறான இடத்தை வந்தடைத்திருக்கிறோமோ என்ற ஐயம் மனத்தை நெருட, வெளிப்படும் சொற்கள் அதைக்காட்டிவிடுமோ என்ற தயக்கத்தில் அமைதியாக நின்றிருந்தான் கௌதம். “எத்தனை நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய்?” என்றார் எதிரிலிருந்தவர்.

“இரண்டு ஆண்டுகளாக… ஆனால் பயிற்சியை விட்டுவிட்டுத்தான் செய்ய முடிந்தது. சில சமயம் மூன்று மாதங்கள்கூட இடைவெளி எடுத்ததுண்டு. ஆனால் எவ்வளவு தொடர்ந்து செய்தும் பலன் என்று எதையும் அனுபவிக்கவில்லை.”

“பலன் என்று எதை எதிர்பார்க்கிறாய்?”

“கண்டிப்பாக அதிமானுட சக்திகள் எதையும் எதிர்பார்த்து தியானப் பயிற்சியில் இறங்கவில்லை. அவற்றில் எனக்குத் துளியும் விருப்பமுமில்லை. மனம் அடங்க மறுக்கிறது. நிலையின்றி அலைகின்றது. மனத்தின் பின்னாலேயே அதன் வாலைப்பிடித்துக்கொண்டு நான்தான் திரியவேண்டியிருக்கிறது. தியானத்தின் மூலம் மனத்தை ஒருமுகப்படுத்த இயலும் என்று நம்பினேன்.”

அவர் மறுமொழி எதுவும் சொல்லவில்லை. கங்கையைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தார். கங்கை மாலைச் சூரியனின் மஞ்சள் ஒளியை அள்ளி முடிந்துகொண்டு, சுழித்துப் பெருக்கெடுத்து, ஆங்காரமாய் சீறிக்கொண்டிருந்தாள். நதி தழுவிய காற்று முகத்தில் அறைந்து, ஆடைகளுக்குள் பிடிவாதமாகப் புகுந்து எலும்புகளைக் குளிரச் செய்துகொண்டிருந்தது. மூன்று படித்துறைகள் தாண்டி, இப்போதே மாலை ஆரத்தி துவங்கியிருந்தார்கள். மணியோசை சன்னமாக ஒலித்தபடியிருந்தது. குறுகிப் பெருகும் கங்கையின் மறுகரையில், பரமார்த்தநிகேதனிலிருந்து விளக்கொளிகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. பக்கவாட்டில் ராம் ஜூலாவின் மீது மக்கள் இருபுறமும் நடந்தபடியும், மோட்டார் சைக்கிள்களில் கடந்தபடியும் அதைத் தொட்டிலெனத் தாலாட்டியபடியுமிருந்தனர். பசு ஒன்று அவர்களுக்கு ஊடாக, வாயை மென்றபடி சாவதானமாக நடந்துகொண்டிருந்தது. பாலத்தின் மீதாக சுறுசுறுவென்று பரவிக்கொண்டிருந்த இருட்டில் அதன் மீது நகர்ந்த மனிதர்கள் கருவண்டுகளெனக் காட்சிகொண்டனர்.

இங்குள்ளவர்கள் கங்கையை மாதா என்றுதான் குறிப்பிடுகிறார்கள். இவரும்கூட ஆசிரமத்தின் அலுவலக வாயிலருகில் இவனைச் சந்தித்து, “வா, மாதாவை சற்று நேரம் பார்த்துவிட்டு வரலாம்” என்று சொன்னபோது, சற்றே குழப்பமாகத்தான் இவரைப் பின்தொடர்ந்தான். கம்பித் தடுப்புகளுக்கப்பால் பெருக்கெடுத்து ஓடும் கங்கையை மாறாத புன்முறுவலுடன் இவர் அசையாது பார்த்து நின்றதைக் கண்டுதான் மாதா யார் என்று அறிந்துகொண்டான். தென்னகத்தில் எழுத்தில் மட்டுமே நதியைத் தாய் எனப் புகழ்ந்து கண்டவன், இங்கு பாமரரும் கங்கையைத் தாய் என்று கொண்டாடுவதைக் கண்டு சற்றே திகைப்பும் வியப்பும் அடைந்திருந்தான்.

அவர் சட்டென்று இவன் பக்கம் திரும்பி, “அப்படியே தாயைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிரு. அதைவிடப்பெரிய தியானமில்லை,” என்றார். சொன்னவர் நதிப்பக்கம் திரும்பி அதைச் செய்து காட்டுவதுபோல் கண்மூடி, ஆழ்ந்து சுவாசித்தபடி அமைதியானார். கௌதம் அவரைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவர் பெயர் தெரியவில்லை. அந்த ஆசிரமத்தின் வலைதளத்தில் அவர் பற்றிய குறிப்புகளோ, புகைப்படமோ பார்த்ததாக அவன் நினைவிலில்லை. நீட்டலும், மழித்தலும் வேண்டா என்ற முதுமொழியை பின்பற்றும் வண்ணம் முள்ளாய்ப் பரவிய தாடியும், மீசையும் வைத்திருந்தார். கனத்த கண்ணாடி வில்லைகளின் பின்னே கோலிகுண்டு கண்கள். துருத்திய தொந்தி கொண்ட பெருத்த உடல்.  வெளுத்த காவிச்சட்டையும், காவி வேட்டியும் உடுத்தியிருந்தார். வேட்டியின் முனையில் கருப்பாக மை படிந்திருந்தது. அவரது தோரணையை அவன் கண்டிருக்கவில்லையெனில், ஆசிரம சமையற்காரர் என்றுகூட அவரை நினைத்திருப்பான். அவர் அவனை சந்தித்தபோதில், கார் ஓட்டுனர் ஒருவர் அவரை நோக்கி ஓடிவந்து, செருப்புகளை அவசரமாகக் கழட்டிவிட்டு, அவர் பாதம் பணிந்ததிலிருந்து, இவர் ஏதோ சன்யாசிதான் என்று ஊகித்துக்கொண்டான்.

“இரவுணவை முடித்துவிட்டு என் அறைக்கு வாயேன். ஒன்பது மணிக்கு சத்சங்கம் இருக்கிறது. அதுவரை அங்குதான் இருப்பேன். நிதானமாக உன் குறைகளை என்னிடம் அடுக்கலாம்,” என்று  தெற்றுப்பல் காட்டிச் சிரித்தபோது அவர் முகத்தில் தெரிந்த கருணையும், மங்கிய மாலையொளி அவர் மீது பட்டுப் பரவி அவருடலை ஒளிரச் செய்ததும் அவரை ஒரு கனவுருத்தோற்றமெனக் காட்டின.

இரவுணவின்போது, தனக்குத் தெரிந்த குறை இந்தியில், தனக்குப் பச்சைப் பயிறு கூட்டு பரிமாறிய ராகுலிடம் அந்தச் சன்யாசி யார் என்று கேட்டுதெரிந்து கொண்டான். அவர் இந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவரல்லர். குஜராத்திலிருந்து தன் நீண்ட கால வேதாந்த மாணவர்களையும் அழைத்துக்கொண்டு அங்கு ஒரு வாரம் கேம்பிற்காக வந்திருக்கிறார். முண்டக உபநிஷதத்தின் முதல் கண்டத்தை குஜராத்தி மொழியில் பயிற்றுவிக்கிறார். கௌதம் இங்கு வருவதற்காக அனுமதிகோரிய நேரத்தில் ஆங்கில வகுப்புகள் ஏதும் நடைபெறவில்லையாதலால், ஆசிரம வளாகத்தில் வெறுமே தங்கி, ஒரு வாரம் தியானப் பயிற்சியில் ஈடுபடுவோம் என்ற எண்ணத்தில் அங்கு வந்திருந்தான்.

இரவுணவை முடித்து அறைக்குத் திரும்பியபோது, எதிர்த்திண்ணையில் குரங்கு இல்லாதது கண்டு நிம்மதிகொண்டான். அங்கு வந்து சேர்ந்த அன்று மதியம், அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைவதற்குள், எதிர்த்திண்ணையில் அமர்ந்திருந்த குரங்கு அவனைப் பாடாய்ப்படுத்திவிட்டது. இந்த ஊருக்குள் நுழைந்ததிலிருந்தே மனிதர்களுக்கு அடுத்தபடியாய்க் குரங்குகள்தாம் அவன் கண்ணில் அதிகம் பட்டது. ரயில் நிலையத்தின் மேற்கூரைகம்பிகளில், சாலையோரத்துக் குப்பைத்தொட்டிகளின் அருகில், மரக்கிளைகளில் தாவித்தாவிப் பறந்து மதிற்சுவர்களில் இறங்கி… இவன் டேராடூன் விமானநிலையத்திலிருந்து, காரில் ஆசிரமம் நோக்கி வருகையில் எதிரில் ஒரு விபத்து நிகழ்ந்திருந்தது. மிதிவண்டியில் வந்த இரு இளைஞர்கள், டெம்பொ ஒன்றில் மோதி வீழ்ந்திருந்தனர். காலில் இரத்தம் வழிய, தெருப்புழுதியில் மயங்கிக்கிடந்த ஓர் இளைஞனின் தலைமுடியைப்பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது ஒரு குரங்கு. அந்தக் குரங்குக்கூட்டத்தில் ஒன்றுதான் இவனை அறைக்குள் நுழையவிடாமல் தடுத்துத் தகராறு செய்தது. சற்று நேரம் தொலைவில் நின்றுகொண்டு, ஷூ, ஷூ என்று அதை விரட்ட முயன்றான். குரங்கு நிலைத்த பார்வையுடன் இவனைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தது. இருந்த இடம்விட்டு அசையவில்லை. பைக்குள் இருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து அதை நோக்கி மெல்ல வீசினான். குரங்கு அதை மெதுவாக எடுத்து, உரித்து, பிஸ்கட்டுகளை கொறித்து உண்டது. ஆனால் அங்கிருந்து அசையவில்லை. ஒவ்வொரு முறை அதைத் துரத்த முயலும்போதும் அது உதடுகளை விரித்து, பல்வரிசையைக் காட்டி பயமுறுத்தியது. திடீரென்று இவனது அறையின் ஜன்னலுக்குத் தாவி அதன் கம்பியை பிடித்துக் கொண்டு தொங்கியது.  பதினைந்து நிமிடங்கள் காத்திருந்த பின், வந்த வழி திரும்பிச் சென்று, காவலாளியை அழைத்துவந்தான். அவர் தடி கொண்டு குரங்கை விரட்டினார். இதற்கு முன் அங்கு தங்கியவர்கள் குப்பைக்கூடையில் உணவைப்போட்டு வெளியில் வைத்துவிட்டார்கள். அவ்வுணவுக்காகத்தான் குரங்கு வருகிறது. குப்பைகூடையில் உணவைப்போட்டு வெளியே வைக்காதீர்கள் என்று எல்லா அறைகளிலும் குறிப்பு ஒட்டப்பட்டிருக்கிறது, அதை யார் பின் பற்றுகிறார்கள் என்று குறைபட்டபடியே காவலாளி திரும்பினார். பிறகுதான் உள்ளே செல்ல முடிந்தது. அதிலிருந்து ஒவ்வொருமுறையும் அறைக்குத் திரும்பும்போதும் குரங்கு வெளியே நின்றிருக்கிறதா என்ற அச்சத்தோடேதான் வருவான். இப்போது எந்தக் குரங்கும் அவனை வாயில் முன் நின்று தடுக்கவில்லை. ஆனாலும்  அவனது கூரைமேலும், எதிரில் குடை பரப்பியிருந்த ஆலமரக் கிளைகளிலும் குரங்குகள் அலைந்துகொண்டுதானிருந்தன.

குரு அபேதானந்தரின் அறைக்கு வெளியே செருப்புகளை விட்டுவிட்டு உள்ளே நுழைந்தான். செந்நிற இருக்கையில் வலப்பக்கம் உடலைச் சரித்து அமர்ந்துகொண்டு, இவனைப் புன்னகையுடன் பார்த்து வா என்றழைத்தார். கௌதம் அவரருகில் சென்று, சற்றுத் தயங்கி நின்று, பின் மெல்லக் குனிந்து அவர் பாதம் தொட்டான். அவர் இருக்கைக்கு அருகில் வலதுபுறத்தில் ஒரு சிறிய ஸ்டூல் மீது தட்டில் பழங்களும், முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகளும் குவிக்கப்பட்டு இருந்தன.  அருகில் சிறிய தாமிரச் சொம்பு ஒன்றின் மீது ஒரு டம்ளர் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்து. இடப்புறம் சிறிய மாடத்துக்குள் தக்ஷிணாமூர்த்தியின் வெண்கலச் சிற்பம் ஒன்று நன்கு மலர்ந்த செவ்வரளிப் பூக்களும், வில்வ இலைகளும் கட்டப்பட்ட மாலையணிந்தபடி, ஊதுபத்திப் புகைக்குப் பின்னால் புன்னகைத்தபடி இருந்தது. அறைக்கு இருபுறமும் வெள்ளைத் துணி அணிந்த நீண்ட சோஃபாக்கள். குரு அவனைப் பார்த்துப் புன்னகைத்து வலது புற இருக்கையைக் கைகாட்டி, அதில் அமரச் சொன்னார். கௌதம் மீண்டும் தயங்கினான். ஒரு கணம் சுற்றிப்பார்த்து விட்டு, பின் தரையில் சப்பணங்காலிட்டு அமர்ந்தான்.

ஒரு கணம் எப்படித் துவங்கலாம் என்று யோசித்தான். கைகளைத் தாழ்வாக வைத்தபடி கூப்பி அவரை வணங்கினான். அவருக்கு இடதுபுறம் இன்னொரு அறைக்கு வழிதிறப்பதை கவனித்தான். திறந்திருந்த கதவினூடாக, தரையில் அடுக்கப்பட்டிருந்த பழக்கூடைகள்…

“தியானத்தில் முதலில் ஒரு ருசியைக் கண்டுபிடிக்க வேண்டும். தினம் ஓரிடத்தில் அமைதியாக இருந்து பழகவேண்டும். பின் மெல்ல தியான நேரத்தை அதிகரித்துக்கொள்ளலாம். உடல் அசையாது ஓரிடத்தில் அமர்ந்திருத்தலே பெரிய சாதனை. பதினைந்து நிமிடங்களில் ஆரம்பித்தால் போதும். ஆனால் தினமும் செய்ய வேண்டும். செய்வாயா?” என்றார் குரு.

“ஆனால் தியானத்தில் அமர்ந்தாலே மனம் அலைபாய்கிறது. உடலை ஓரிடத்தில் உட்கார வைக்க அனுமதி மறுக்கிறது.”

மெல்லச் சிரித்துக்கொண்டார். “கீதையில் இதே குறையை அர்ஜூனனும் கண்ணனிடம் பட்டுக்கொண்டான். காற்றைக் கட்டுவது போலக் கடினமானது மனதைக் கட்டுவது  என்கிறான். ஞானாசிரியனும் அதை ஏற்றுக்கொள்கிறான். மனதை அடக்க அவன் இரண்டே உபாயங்கள்தாம் தருகிறான். அப்யாசம், வைராக்யம். பயிற்சி, புலன் இன்பங்களில் பற்றற்றநிலை. இரண்டு பண்புகளையும் அடைந்து வருந்தோறும் தியானம் கைகூடும்.”

“ஒரு கருத்தாக இவை புரிகிறது. ஆனால் செயலில் இறங்கும் போதுதான் மனத்தோடு பொருதி வெல்ல முடியவில்லை. தியானத்தில் அமர்ந்தாலே மனம் அவசியமற்ற கற்பனைகளுக்குள் ஆழ்ந்து விடுகிறது. அவற்றின் பின்னால் தொடர்ந்து போய்விடுகிறது. சில நாட்கள் பயிற்சி செய்வதற்குள் தியானத்தில் அமர்வதைத் தடை செய்வதற்கான காரணங்களை மனம் அடுக்க ஆரம்பித்து, தியானமே முழுக்கத் தடைபட்டுவிடுகிறது.”

“நான் சொன்ன சொன்ன இரண்டு உபாயங்களில் முதலாவதை நீ சரியாகப் பின்பற்றவில்லை. மனம் கற்பனைகளில் ஆழ்கிறதென்கிறாய். அவற்றைப் பார்த்துக்கொண்டிருப்பதன் பெயர்தானே தியானம்! தியானத்தில் வேறென்ன எதிர்பார்க்கிறாய்? உன் எண்ணங்களைப் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் மெல்ல அதிலிருந்து விடுபட்டு நான் இந்த எண்ணங்களல்ல, அவற்றுக்கு ஆதாரமாய், சாட்சியாய் இருப்பவன் என்ற ஆதி உண்மையை உணரத் துவங்குகிறாய். பலர் சொல்வது போல் உச்சநிலை என்பது எண்ணங்களற்ற நிலை அன்று. உன் எண்ணங்களோடே உனக்குத் தொடர்பு அற்றுப்போய்விடுகிற நிலை. நீ உன்னை உன் எண்ணங்களின் சாட்சியாய் மட்டுமே உணரும் நிலை. அந்நிலையை அடைந்துவிட்டால் தியானமே அவசியமில்லை. மூச்சு எடுத்து விடும் ஒவ்வொரு கணமும் தியானமே. தியானம் என்பது துவக்கத்தில் நீ திட்டமிட்டுச் செயல்படுத்தும் ஒரு மனச்செயல். ஆனால் உண்மை என்னவெனில் தியானம் உன் சொரூபம். உன்னிலிருந்து தேவையற்றவை உதிரும்போது, உன் சொரூபம் மட்டுமே எஞ்சி இருக்கும். கற்பாறையிலிருந்து வேண்டாத சில்லுகளை நீக்கியபின் எஞ்சி நிற்கும் சிற்பத்தைப் போல.இரண்டாவது உபாயம் குறித்து என்ன நினைக்கிறாய்? வைராக்யத்தை ஓரளவேனும் அடைந்திருக்கிறாயா?”

“என் கணிப்பொறி நிரலெழுதும் பணியைக்கூடத் துறந்துவிட்டேன். எனக்கு என்னோடுள்ள இந்தத் தகராறைத் தீர்த்துக்கொள்ளாமல் வேறு எதிலும் ஈடுபடுவதில்லை என்ற உறுதி கொண்டுள்ளேன். இங்குள்ளதெல்லாம் என்ன, இதெற்கெல்லாம் என்ன பொருள் என்றறிய வேண்டும் என்று மனம் துடிக்கிறது. உலகின் இன்பங்களும், அது தரும் அங்கீகாரங்களும் ஒரு பொருட்டல்ல.”

“வைராக்யம் என்பதை உலகப்பொருட்கள் மீதான வெறுப்பு என்று புரிந்துகொள்ளத் தேவையில்லை. உலகப்பொருட்கள் எனக்கு எவ்விதத்திலும் நிறைவையளிக்காது என்று அறிந்து, அவற்றில் இயல்பாக பற்று அறுந்து போதும் நிலையே வைராக்யம். ஆனால் முதலில் அதை ஒரு பயிற்சியாக மேற்கொள்ளுவதும் நன்மை பயக்கும் என்பது உண்மைதான்,” என்றார் குரு. இன்னும் ஒரு மணிநேரத்தில் சத்சங்கம் செல்ல வேண்டிய பரபரப்பு அவரிடம் தெரிகிறதா என்று தேடினான் கௌதம். இருக்கையில் நன்றாகச் சாய்ந்து, அதற்குத் தன் உடலை முழுதும் ஒப்புக்கொடுத்து அமர்ந்திருந்தார். சுவாசம் மேலோட்டமாகவும், சிரமத்தைக் கொடுத்தபடியும் நடப்பதாகத் தோன்றியது. பேச்சைத் தொடர்வதற்காக எத்தனித்தபோது தொண்டையில் இருமல் குத்தி, பலமாக இருமினார். இருமுறை இருமி, பின் ஆசுவாசமானார். பின் மீண்டும் இருமல். தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தார். கௌதமுக்கு அவரை மேலும் பேச வைப்பது உசிதமா என்று தோன்றியது. மெல்ல எழ எத்தனித்தான். குரு கைகாட்டி அவனை அமருமாறு சைகை செய்தார்.

“இது அவ்வப்போது வரும். நீ நீங்க வேண்டியதில்லை. உனக்கு இன்று ஒரு வழிபண்ணிடலாம்,” என்று சிரித்தார். “வைராக்யம் உன் மனதில் எழும் எண்ணங்களில் இருக்கிறதா? உன் மனதின் பலவீனங்களாக நீ நினைப்பதென்ன?”

“இது….இதைச் சொல்லலாமா என்று தெரியவில்லை…. ஆனால் ஏதோ உங்களிடம் தைரியமாகப் பகிரலாம் என்று தோன்றுகிறது. பல யோகப்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றிருக்கிறேன். சில வகுப்புகளில் எங்கள் மனதைத் துன்புறுத்தும் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும்படிப் பணிக்கப்பட்டிருக்கிறோம். பொதுவாகவே பெரும்பாலானவர் பகிரும் விஷயம் அவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தும் காம இச்சையாகத்தான் இருக்கும். சிலர் தாம் பிறருக்கு செய்த துரோகம் குறித்து. சிலர் தம் வன்மம் குறித்துப் பகிர்வர். என் பிரச்னையும் என்னுள் ஊறி என்னைத் தன் வயப்படுத்தும் காமம்தான். ஆனால் எங்கும் அதைப் பகிர்ந்ததில்லை. தயக்கம். கூச்சம். என்னைப் பற்றி எனக்குள்ள பெருமிதம். முதலில் அது இளமையின் இயல்பென்று எடுத்துக்கொண்டிருந்தாலும், ஆண்டுகள் செல்லச் செல்ல, இது என்னைப் படுத்தும்பாடு எனக்குப் புரிந்தது.  இப்போதுதான் உங்களிடம் சொல்லத் தோணுகிறது. இப்போதுகூட இப்படிப் பகிர்ந்தது பலனளிக்குமா என்று தெரியவில்லை… இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் சத்சங்கம் கிளம்பி விடுவீர்கள். நான் நாளை மதியம் கிளம்புகிறேன். ஒருநாளில் என்னைத் துளைக்கும் இந்தப் பிரச்னைக்கு பதில் கிடைக்கும் என்று தெரியவில்லை…”

“எப்போதும் உனக்குள் இன்னொரு உடலைத் தூக்கித் திரிந்தபடியேயிருக்கிறேன் என்கிறாய்,” என்றார்.

“ஒன்றல்ல, பல உடல்களை. ஒன்று மாற்றி ஒன்று. சில சமயம், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டு…” முற்றும் துறந்த ஒரு முனிவரிடம் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோ என்று உணர்ந்தபோது அவனையே வியந்துகொண்டான். ‘இதை இதுவரையில் வேறு யாரிடமாவது பேசியிருக்கிறோமா? தன் நெருங்கிய நண்பனிடம்கூட. எது என்னைத் தடுத்தது? என்னைப் புனிதமானவன் என்று பிறர் கருத வேண்டுமென்று நினைத்தேனா? என் அறிவு ஜீவி பிம்பம் உடைந்து விடக்கூடாதென்று நினைத்தேனா? காம எண்ணங்கள் அளிக்கும் தனிமை, பிறருடன் பகிராதவரை என்னை ஒரு தனி உலகத்தில் உலவவிடும் விடுதலையுணர்வா? இது விடுதலையுணர்வா அல்லது நான் தளைக்கப்பட்டிருக்கிறேனா? …இவர் முற்றும் துறந்தவர். இவருக்கு காம எண்ணங்கள் முழுவதும் அற்றுப்போயிருக்க வாய்ப்பிருக்கிறதா? அல்லது இவரும் உள்ளுக்குள் என்னைப்போலவே போராடிக்கொண்டுதான் இருக்கிறாரா…’ அவன் எண்ணங்கள் பலவாறாக எழுந்து எழுந்து அடங்கின.

“மேசோக்கின் வீனஸ் இன் ஃபர்ஸ் வாசித்திருக்கிறாயா?”

கௌதமுக்கு வாசிக்கும் பழக்கம் இல்லை. யோகம், தியானப்பயிற்சி செய்யச் சென்ற இடங்களில் கொடுக்கப்பட்ட சில துண்டுப் புத்தகங்கள்…

“அதில் செவெரின் என்பவன் வாண்டா என்ற கைம்பெண்ணிடம் தன்னை அடிமையாகக் கொள்ளுமாறு வேண்டுகிறான். தன் உடலை அவள் துன்புறுத்த அவளிடம் ஒப்புக்கொடுக்கிறான். தன்மீது அவள் செலுத்தும் வன்முறையில் இன்பம் காண்கிறான். காமம் என்பது அடிப்படை உயிரியல் இச்சை என்பதைத் தாண்டும்போது, அது இன்னொரு உடல் மீது கொள்ளத்துடிக்கும் வன்முறை என்றாகி விடுகிறது…”

கௌதம் அவர் தொடர்வதற்காகக் காத்திருந்தான்.

“பெண்ணுடல் மீது ஆண் செலுத்தும் வன்முறைதானே காமம்? இயல்பான காமம் என்பது இறகு போன்று மென்மையாக நிகழ வேண்டியது. அதை மீறி மனதுக்குள் நிகழ்த்திக்கொள்கிற காமம் வன்முறையன்றி வேறேது? ஒருவேளை செவரின், மொத்த ஆணினமும் பெண்ணுடலை யுகயுகமாய் அடிமைப்படுத்தியதற்குப் பிராயசித்தமாகத்தான் தன்னை அடிமையாக வாண்டாவுக்கு அளித்தானோ?  மேலும்… காமம் என்ற சொல்லை எதிர்பாலினத்தின் மீதுள்ள இச்சை என்று மட்டுமல்ல, தானற்று, பிற உயிர்கள் மீதும், பொருட்கள் மீதுமுள்ள பற்று என்றுதான் வரையறுக்கிறோம். பழக்கத்தின் காரணமாகவே எதற்கும் அடிமையாகிறோம். அந்தப் பழக்கத்தை கடுமையான பயிற்சியின் மூலம் விட்டொழித்து விட முடியும். முயல். பயிற்சி செய். முயற்சியால் முடியாதது எதுவுமில்லை. நீ எதன் வசத்திலாவது இருக்கிறாய் என்றால் அதற்கு உன் அனுமதி இருக்கிறது என்று புரிந்துகொள். உபத்ரஷ்டா, அனுமந்தா என்று கீதை சொல்கிறது. அது சாட்சி ரூபம். அதுவே அனைத்துக்கும் அனுமதியும் அளிக்கிறது. உன் புத்தியின் உதவிகொண்டு உன் மனதின் போக்கை நீ மாற்றமுடியும். அதைத் தியான நேரத்தில் மட்டுமல்ல. எல்லா நேரத்திலும் செய்ய இயலும். செய்ய வேண்டும். அதற்குத்தான் உன்னைக் கர்மயோகத்தில் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்று கிருஷ்ணன் சொல்கிறான். உன் சுபாவம் என்ன? அது உன்னை எவ்வித கர்மத்தில் தூண்டுகிறது? அது தர்மத்தின் வழிபட்டு இருக்கிறதா? எனில் நீ அக்கர்மத்தைத் தொடர்ந்து செய். அதன் பலனுக்காக அல்ல; ஏதேனும் நிர்பந்தத்தின் பொருட்டு அல்ல; உன்னை மேம்படுத்த; உன் மனதைப் பண்படுத்த; மனம் ஓரளவேனும் பண்படாமல் தியானம் சித்திக்காது. தியானம் அமையாவிடில், தன்னறிவில் நிலை நிற்றல் சாத்தியமில்லை. இதுவே வழி. உன் கர்மம் எது என்று தெரிந்து அதில் ஈடுபடுவதே நீ செய்ய வேண்டியது,” அவரது சுவாசத்தின் சிரமத்தை அவர் நெஞ்சு வேகமாய் ஏறித் தாழ்வதிலிருந்து உணரமுடிந்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லையென்றும் தெரிந்தது.

“மிக்க நன்றி சுவாமி, முயல்கிறேன்,” என்றான் கௌதம்.

இடதுகை கடிகாரத்தில் மணி பார்த்தபின், “இன்னும் இருபது நிமிடங்களிருக்கின்றன. உனக்கு என் நண்பரொருவரின் கதை சொல்கிறேன்,” என்றார்.

“இருபது ஆண்டுகளுக்கு முன் இதே ரிஷிகேஷில் நான் சன்யாசியாகத் திரிந்தபோது ரோடி பாபாவைச் சந்தித்தேன். அப்போது அவர் வெறும் சன்யாசி. மக்கள் யாரும் அவரை பாபாவாக அங்கீகரித்திருக்கவில்லை. நாங்கள் இதற்குப் பின்னாலிருந்த பிரம்மவித்யா குடிலில் தங்கியிருந்தோம். ரோடி பாபா முழுநாளும் தியானத்தில் செலவிட விரும்பினார். யாருடனும் பேசுவது கிடையாது. நாங்கள் இருவரும் நிர்பயானந்த சரஸ்வதியிடம் ஒன்றாக பிரம்ம சூத்திரம் கற்றிருந்தோம். அந்தப் பழக்கத்தில் என்னிடம் மட்டும்தான் பேசுவார். அதுவும் ஓரிரு வார்த்தைகள். உணவு இடைவேளையின்போது. அதுவும் பின்னர் அருகிவிட்டது.  ஒரே வேளைதான் உணவு, மதிய உணவு மட்டும் எடுத்துக்கொள்வார். அதற்கு மட்டுமே வெளியே வருவார். பிறவேளைகளில் தியானம். அவர் உறங்குகிறாரா, அல்லது இரவிலும் தியானத்தில் கழிக்கிறாரா என்று அங்கு தங்கியிருந்த எங்களுக்குப் புதிராக இருந்தது. ஒருநாள், உணவு வேளையில் என்னருகில் அமர்ந்திருந்தார். என் பக்கம் திடீரென்று திரும்பி தான் குடிலைவிட்டு வெளியேறப்போவதாகச் சொன்னார். அது பல மாதங்களில் அவர் பேசிய முதல் சொற்றொடர் என்று சொன்னார்கள். எனக்கு வியப்புத் தாளவில்லை. ஏன் என்று கேட்டேன். இந்த நகரில் இரைச்சல் அதிகமாகி விட்டதென்றும், தன் தியானத்துக்குத் தடையாக இருக்கிறதென்றும் சொன்னார். ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் தன்னால் உயர இயலாதற்கு இதுவே தடை என்றும் சொன்னார். வஷிஷ்ட குஃபாவுக்கும் மேல் ஒரு சிறுமலைக்கோயில் இருப்பதாகவும், அதன் அருகில் உள்ள குகையொன்றில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடப்போவதாகவும் சொன்னார். அங்குள்ள மலைக்கோயில் பூசாரி அவரது உணவு மற்றும் பிற தேவைகளைக் கவனித்துக் கொள்வான் என்று சொன்னார். அவருக்கு அப்போது ஒரு ஐம்பது வயதிலிருக்கலாம். நான் கேட்டேன். சுவாமி, இங்கேயே இருக்கலாமே, நிறைய மகாத்மாக்கள் இங்குதானே இருக்கிறார்கள். இங்குதானே ஸ்வாத்யாயம் அதன் தீவிர நிலையில் நிகழ்கிறது. எல்லாவற்றையும்விட, கங்காமாதா இங்குதானே இருக்கிறாள் என்றெல்லாம் கேட்டேன். அவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தன் முடிவில் உறுதியாக இருந்தார். கற்றறிந்தவற்றில் நிலைபெற தியானம் கணந்தோறும் நிகழவேண்டும் என்று உறுதிபூண்டிருந்தார். திடீரென்று உடல்நலம் கெட்டுவிட்டால் மருத்துவ உதவிக்குக்கூட அங்கு வசதி இல்லையே, இங்கு எல்லா வசதிகளும் இருக்கிறதே என்றுகூட வாதாடிப் பார்த்தேன். எதனாலும் அவரைத் தடுக்க முடியவில்லை. இரண்டு நாட்களில் குடிலைவிட்டு வெளியேறினார். ஒரு மாதம் கழித்து ஒரு நாள் முன்மதியத்தில் நான் அஷ்டாவக்ர கீதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது, அவர் மீண்டும் குடிலுக்குத் திரும்பி விட்டதாகச் சொன்னார்கள். அவரது அறைக்கு வெளியே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து குரங்குகளையும், காகங்களையும் பார்த்துக்கொண்டிருந்த அவரைச் சென்று சந்தித்தேன். மிகவும் மெலிந்திருந்தார். கண்கள் இடுங்கி உள்ளே சென்றிருந்தன. தாடி கறுப்பு உளுந்தை உடைத்துப்போட்டது போல கறுப்பும், வெளுப்புமாக இருந்தது. ஏன் திரும்பி விட்டீர்கள் என்று கேட்டேன். உடல் நலம் கருதி? வசதிக்குறைவு கருதி? குகைக்குள் பூச்சிகள், விஷ ஜந்துக்கள் தொந்தரவு? இவை எதுவுமே இல்லை. அவர் திரும்பி வந்ததற்குக் காரணம் பறவைகள். அதிகாலையில் இருந்து மாலையில் கூடடையும் வரை இடைவிடாது இரைந்து சலிக்கும் பறவைகள்தாம் அவரது வெளியேற்றத்துக்குக் காரணம். அந்தப் பறவைகளின் இரைச்சலில் தனக்குத் தியானம் கூடவில்லை, தியானத்தின் ஒழுக்கு அறுந்துவிடுகிறது என்றார். இனி இரைச்சல் இல்லாத ஓரிடம் அமையும்வரை இங்கேயே காத்திருப்பேன் என்றார்,” என்று கதையை முடித்தபடி மெல்லச் சிரித்தார். சிரிப்பில் இருமல் ஒலியும் கலந்துகேட்டது. “நான் தியானச்செயலில் ஈடுபட்டு உயர்நிலை அடைவதென்பது என் கையில்தான் இருக்கிறது. உத்தரேதாத்மனாத்மானம்…. புறச்சூழ்நிலைகளின் உதவி ஓர் எல்லைவரைதான். எவ்வளவு நாள் இங்கிருப்பாய்?”

“இன்னும் மூன்று நாட்கள். பின் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறேன். அங்கு என் நண்பன் மென்பொருள் தொழிலில் இருக்கிறான். என்னை உதவுமாறு அழைத்திருக்கிறான். பதினைந்து நாட்களில் திரும்பி விடுவேன். நான் உங்களை மீண்டும் வந்து சந்திக்க இயலுமா?”

“கண்டிப்பாக. அடுத்த மாதம் குஜராத்தில் இருப்பேன். எங்கள் ஆசிரமத்தின் இணையத்தளத்தில் எல்லா விவரங்களும் இருக்கின்றன,” என்று சொல்லி அவரது ஆசிரமத்தின் பெயரைக் கூறினார். அவரது மின்னஞ்சலைக் குறித்துக்கொள்ளச் சொன்னார்.

கௌதம் ஆசிரமத்தின் முன்வாயில் வழியாக வெளியேறி, குறுகலான சந்துகளை நோக்கி நடந்தான். முகப்பில் பெட்டிக்கடை வைத்திருந்த இஸ்லாமியப் பெரியவர் இவனைப் பார்த்துக் கையசைத்தார். இவன் புன்னகைத்துக் கையசைத்தபடி, முன்னேறினான். மலையேற்றத்துக்கும், கங்கையில் மிதவைப் பயணத்துக்கும் பதிவுசெய்வதற்காக அங்கிருந்த சிறுகடைகளில் வெள்ளைக்காரர்கள் குழுமியிருந்தனர். ஆஞ்சனேயர் வேடம் தரித்து, காற்சலங்கை ஒலிக்க எதிர்ப்பக்கம் நடந்து வந்த ஒருவன் ஆசியளிக்கும் வண்ணம் கைநீட்ட, அதை ஒரு வெள்ளைக்காரர் பவ்யமாகத் தலைகுனிந்து ஏற்றுக்கொண்டார். சுவரெங்கும் யோகா, தியான வகுப்புகளுக்கான சுவரொட்டிகள்; இல்லங்களின் வாயில்களின்கூடி விளையாடித் திரியும் சிறார்கள்; பணி முடிந்து மிதிவண்டிகளில் வீடு திரும்பும் ஆண்கள்.

குறுகிய சந்திலிருந்து வெளியேறி, கடைத்தெருப்பக்கமாக நடந்தான். வீதியுணவுக் கடைகளில் கடுகு எண்ணெயில் பொரித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூரிகள், சமோசாக்கள் இவற்றின் நெடியும், பாவ்பாஜி, பானி பூரி போன்றவற்றின் மணமும், தெருவோரத்தில் டெம்போ வண்டிகளின் பின்புறத்தில் குவிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களின் வாசனையும் கலந்து வயிற்றைக் கிளறியது. தெருக்கடைகள் ஓம் அச்சிட்ட துணிகளையும், மணிமாலைகளையும், உலோகத்தில் செய்த கடவுற்சிற்பங்களையும் விற்பனைக்கு வைத்து, அந்நேரத்திலும் மக்கள் அக்கடைகள் முன் குவிந்து பரபரப்பாக இருந்தன. கௌதமுக்கு இந்த ஊரில் மக்களும், மாடுகளும் வேறுபாடறியாது உலவித்திரிவது வியப்பையளித்தது. அப்போதுகூட பசுவொன்று தன் இரு கன்றுகளுடன் மக்களினூடே சாவதானமாக நடந்து கொண்டிருந்தது. அந்தப்பசு தன் முதுகை உரசிச் சென்றதை, ஒரு கடைக்கு முன்னால் நின்று உருத்திராட்ச மாலைக்கு பேரம் பேசிக்கொண்டிருந்த பெரியவரும் கவனிக்கவில்லை, பசுவும் பொருட்படுத்திய மாதிரித் தெரியவில்லை.

ராம்ஜுலாவின் முகப்புக்கு வந்துவிட்டான். பக்கவாட்டில் சவாரி நேரம் முடிந்து ஆட்டோரிக்க்ஷாக்கள் அணிவகுத்திருந்தன. வலதுபுறத்தில் ஒரு வெள்ளைக்காரர் தரையில் அமர்ந்து திருவோட்டை ஏந்தியிருந்தார். வைக்கோல் நிறத்தில் இருந்த தலைமுடி நீண்டு வளர்ந்து சடைசடையாய்த் தொங்கியது. அதே நிறத்தில் தாடியும் நீண்டு தொப்புளைத் தொட்டது. தலைநிமிர்த்தி இவனைப் பார்த்தார். கனவு படிந்த நீலநிறக் கண்கள். எதைத்தேடி இவர்கள் இங்கு வருகிறார்கள்? ஒருவரும் பசித்திராத இந்த ரிஷிகேசத்தில் எதன் பொருட்டு இவர் இங்கு பிச்சை எடுக்க அமர்ந்திருக்கிறார்? போதைப்பொருள் வாங்கக் காசு வேண்டுமென்பதாலா? நேற்று குஞ்சாபுரிதேவி ஆலயத்திற்கு காரில் செல்லும்போது, பாலத்தைக் கடக்கையில் ஓட்டுநர் கீழே கங்கையின் கரைகளைச் சுட்டிக்காட்டிச் சொன்னான். முன்பெல்லாம் இரு கரைகளிலும் வெள்ளைக்காரர்கள் வந்து டெண்ட் அடித்துத் தங்கிவிடுவார்களாம். இரவெல்லாம் கஞ்சாப்புகையும், பாடலும், நடனமும் தொடர்ந்து நடக்குமாம். புதிய பிரதமர் வந்தபின் அவற்றையெல்லாம் ஒழித்துவிட்டார் என்று பெருமிதத்துடன் சொன்னான். அந்த நிலத்து மக்களின் அதே பூரிப்பு. கங்கை நம் தாயல்லவா! அப்போது கங்கையின் கரைகள் மனிதவாடை படாமல், சுழித்துப் பெருகி ஓடும் தாயின் இருபுறமும், கற்களும், நாணல்களும், புதர்களுமாக, வெயிலேந்தி நின்று கொண்டிருந்தன. கங்கையை தூய நீரோட்டமாகப் பார்த்ததே அவனுக்கு நினைவிலில்லை. எங்கும் சேற்றுமண் நிறத்தில்தான் குழைத்து ஓடிக்கொண்டிருந்தது. தாய், தாய் என்று பூரிக்கிறவர்கள், ஏன் இந்நதியை இவ்வளவு மாசுபடுத்துகிறார்கள்? ஹரித்துவாரின் ஹர்-கி-பவுரியில் அவன் பங்குபெற்ற கங்கா ஆரத்தி நினைவுக்கு வந்தது. அதில்கூட ஆரத்தி துவங்குவதற்குச் சற்றுமுன், நான் இனி தாயை மாசுபடுத்தமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள இந்தியில் வறுபுறுத்தினார்கள். அரைமணி நேரம் மட்டுமே நிகழும் அந்நிகழ்வில் கலந்துகொள்ள பல்லாயிரக்கணக்கானோர், குறுகலான கங்கையின் இருகரைகளிலும் நீண்டு பரவிக்கிடந்த கற்படிகளில் இரண்டுமணி நேரம் முன்பே குழுமியிருந்தனர். இவனும் தனக்களிக்கப்பட்ட அறிவுரையின்படி முன்னரே சென்றுவிட்டான். கரைக்கு அப்புறம் கோயில் போன்று தோற்றம் கொண்ட கட்டிடம். அதன் முன்னர் வெள்ளுடை அணிந்தவர்களும், மேற்சட்டை அணியாத பலரும் நீண்டுயர்ந்த வெண்கல விளக்குகளோடு ஆரத்திக்குத் தயாராகிக்கொண்டிருந்தனர். ஆயிரம், பல்லாயிரம் பேர். ஆனால் எல்லார் உள்ளமும் ஒன்றிலேயே குவிந்திருந்தது. இரைச்சலும், நெருக்கடியும், கூச்சலும், திமிறலும் இருப்பினும், அங்கு நிகழப்போகும் ஆரத்திக்கு ஒவ்வொரு உள்ளமும், அதிர்வுடன் காத்துக் கிடந்ததை உணர முடிந்தது. பலநூறு ஆண்டுகளாய் ஒரே இடத்தில், ஒரே விதத்தில் நிகழும் நிகழ்வு. பல்லாயிரம் உடல்கள்; ஒரே உள்ளம். மயக்கும் மாலைப்பொழுதில் ஆரத்தி துவங்கி,  தீபங்களின் ஒளி கங்கையை ஒளிரச் செய்ததும், ஹர ஹர மஹாதேவா! கங்கா மாதாகி ஜே என்ற கோஷங்கள் எழும்பி குளிர் காற்றில் கலந்து பரவியதும் அவனை ஏதோ ஒரு கனவுத்தளத்துக்குக் கடத்தியிருந்தன. தனிப்பட்ட முறையில் ஆரத்தி குறித்து அவனுள் பக்தியுணர்வு எதையும் அவன் உணரவில்லை. ஆனால் வியப்பு கலந்த கேள்விகள் முன் வந்து நின்றன. எது இத்தனை பேரை மனம் தோய்ந்து, கரைந்து, உருக வைக்கின்றது? எது இவர்கள் ஒவ்வொருவரையும் நான் இந்தச் சிற்றுடலும், சிறு மனமும் கொண்ட மனிதன் என்ற எல்லைக்கோட்டை அழித்து, இந்த மக்கள் கடலோடு ஒற்றைபேரிருப்பாக உணரவைக்கிறது? தானற்றிருத்தல் இந்த எளிய மக்களுக்கு எவ்வாறு இவ்வளவு எளிதில் சாத்தியமாகிறது? இவர்களுக்கு என்போல் ஏன் கேள்விகள் இல்லை? கையில் பொரிப்பொட்டலத்தை ஏந்தியபடி இடதும், வலதுமாக முடிவேயிலாது நீண்டு கிடந்த கற்படிகளில், முகத்தில் ஒளியாடியபடி குழுமிக் கிடந்த மக்களையும், அக்கரையில், நெடிதுயர்ந்து, கிளைவிட்டுப் பிரிந்த வெண்கல விளக்குகளில் தாண்டவமாடியபடி, அதிர்ந்து நிற்கும் தீபச்சுடர்களை, இமைக்கா விழிகளுடன் நோக்கியபடியே முகத்தில் தீவிரபாவனையுடன் அவ்விளக்குகளைச் சுழற்றும் பண்டித்ஜிகளையும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். நேற்று ஆரத்தியில் பங்கெடுத்தபோது, தனக்குள் இந்த வியப்பு மேலிட்டது இப்போதுதான் அவன் நினைவுக்கு வருகிறது. அந்நிகழ்வை ஓர் ஏளனப் புன்னகையோடு பார்த்ததாகத்தான் அவன் நினைத்துக்கொண்டிருந்தான். முடியுமட்டும் நதியை மாசுபடுத்துங்கள். உங்கள் கழிவுகளைக் கலக்கவிடுங்கள். சொர்க்கம் செல்ல விரும்புகிற உங்கள் மூத்தவர் பிணங்களை வெந்தும் வேகாமலும் நதியின் போக்கோடு ஓடவிடுங்கள். இன்னும் கங்கையின் ஆயிரத்து ஐநூறு மைல் கரைகளில் அமைந்த எத்தனை தொழிற்சாலைகள் தங்கள் கழிவுநீரை கங்கையில் கலந்துகொண்டிருக்கின்றனவோ? ஒருபுறம் நதியைக் கழிவு நீர்ச் சாக்கடையாக மாற்றி அதை நாசப்படுத்துங்கள். மறுபுறம் அதற்கு தீபம் காட்டிப் புனிதப்படுத்துங்கள். இவ்விரு பாவனைகளில் எது உண்மை? எது உங்கள் முகம்?

பாலம் இன்னும் பரபரப்புடன்தான் இருந்தது. மக்கள் முன்னும், பின்னும் வேகமாக நடந்து பாலத்தைக் கடந்துகொண்டிருந்தனர். இரு சக்கர மோட்டார் வாகனங்களும் இரைச்சலை எழுப்பியபடி பாலத்தின் மீது ஓடின. பாலம் இவர்களது இயக்கத்தால் அசைந்துகொண்டிருந்தது, அல்லது அதிர்ந்துகொண்டிருந்தது.

பாலத்தின் மீது ஏறி முன்னோக்கி நடந்தான். மக்கள் திரள் நெருக்கியதுபோல உணர்ந்தான். மெல்ல அவர்களை ஊடுருவியபடி, உரசியபடி, நெருக்கியபடி நடந்து, முன்சென்று, மத்தியப் பகுதியை அடைந்தான். கீழே பெருகிப் பாய்ந்து கொண்டிருந்த கங்கையின் மேலெழுந்த காற்று பாலத்திலுள்ளவர்களை அறைந்து நிலைதடுமாறச் செய்து கொண்டிருந்தது. தொங்கு பாலத்தின் பக்கவாட்டுக் கயிறை இருகைகளாலும் பிடித்துக்கொண்டு நின்றான். முதுகுப்பக்கம் பரபரப்போடு கடக்கிற மனிதர்களை (மாடுகளையும்) புறக்கணித்துவிட்டால், கண்ணெதிரே கொந்தளித்து விரையும் பிரம்மாண்டம்! இருகரைகளிலும் பரமார்த்த நிகேதன், சுவாமி தயானந்தா ஆசிரமம் உள்பட எண்ணற்ற ஆசிரமங்களின் விளக்கொளிகள். இருண்ட வானத்தின் கருநீலப் போர்வையில் பதித்த வெண்கற்களென நட்சத்திரங்கள். அந்நேரத்திலும் தூரத்துப் படித்துறைகளில் தீபமேற்றி ஆரத்தி காட்டிக்கொண்டிருக்கும் மக்கள். ஒவ்வொருவருக்கும் என்னென்ன வேண்டுதலோ? இல்லை, தாய் மீது தனக்குள்ள நன்றியுணர்வை இப்படி வெளிப்படுத்துகிறார்களா? பாலம் குதியாட்டம் போட்டது. கீழே நதி பெருகிச் சீறியது. இவற்றுக்கு நடுவில் காற்று, நதி தொட்டு மேலெம்பிக் குளிர்ந்து உடலைத் தொட்டது. இவற்றுக்கெல்லாம் நடுவில் ஏதோ காரியமாய் விரையும் மக்கள், வாகனங்கள்…

மீண்டும் ஆசிரமத்துக்குத் திரும்பியபோது, குரு அபேதானந்தானரின் வாயிலில் நிறைய செருப்புகள். அனைத்து விளக்குகளும் போடப்பட்டு வாயில் மின்னொளியில் திகழ்ந்தது. மணி பத்தாகியிருந்தது. சத்சங்கம் முடிந்திருக்க வேண்டும். இந்நேரத்தில் அவர் அறை முன் ஏன் இத்தனை செருப்புகள்?

ராகுல் குருவின் அறையிலிருந்து வெளியே வந்தான். அவன்தான் குருவிற்கு உணவு வேளாவேளைக்கு எடுத்து வைத்தல், பரிமாறுதல் எல்லாம். அவன் நடந்ததைச் சொன்னான். வகுப்பில் குரு நிறைய இருமியிருக்கிறார். பாதி வகுப்பில் கிட்டத்தட்ட மயங்கிய நிலையில் அறைக்குக்கொண்டு வரப்பட்டார். மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கிறார். அவர் இன்னும் உறங்கவில்லை. இருமல் உறங்கவிடவில்லை. என்னமோ ஏதோ என்று சுற்றிலும் கவலையோடு ஆசிரமத்தவர் நின்று கொண்டிருக்கின்றனர்.

கௌதம் மெல்ல வாயில் நோக்கிச் சென்றான். வெளியில் நின்று பார்த்தபோது அவரைப் பார்க்க இயலவில்லை. சுற்றிலும் மனிதர்கள். சில நிமிடங்கள் கழித்து அனைவரும் கலைந்து வெளியே வந்தபோது குரு இவனைப் பார்த்துவிட்டார். உள்ளே வரும்படி கையசைத்தார்.

குரு உயரமான தலையணைகள் மீது தலை வைத்துப் படுக்கையில் பக்கவாட்டில் படுத்திருந்தார். கையில் கனமான புத்தகம். அமரும்படி சைகை காட்டினார். கௌதம் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்ததும், “இன்னும் உறங்கப்போகவில்லையா?” என்றார். சொல்லி முடித்ததும் இருமினார்.

கௌதம், “பேச வேண்டாம், சிரமப்படாதீர்கள்”, என்றான். “வெளியே சென்றிருந்தேன். அறைக்குச் செல்லும் வழியில் உங்கள் அறைமுன் கூட்டத்தைக் கண்டு இங்கே வந்தேன். நீங்கள் உறங்குங்கள். நான் கிளம்புகிறேன். நாளை உங்களைப் பார்க்காமலேயே கிளம்பிவிடுவேன் என்று நினைத்தேன். இப்போது பார்த்தது நிறைவாக இருக்கிறது. எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. நீங்கள் விரைவில் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன்,” என்றான்.

குரு பலவீனமாகப் புன்னகைத்தார். மிக மெல்லிய குரலில் “மீண்டும் எப்போது சந்திப்போம் என்று தெரியவில்லை. சந்திக்கமுடியாது போகுமெனில், கண்ணன் சொன்னதை மட்டும் நினைவில்கொள். யதா இச்சஸி ததா குரு!” என்றார். சொன்னபின் ஆயாசமாகக் கண்களை மூடிக் கொண்டார். தன் வலதுகையிலிருந்த புத்தகத்தை இயல்பாக நழுவவிட, அது அவருக்குப் பக்கவாட்டில் ஒரு மெல்லிய ‘தட்’ டோடு விழுந்து அவர் நெஞ்சோடு சாய்ந்துகிடந்தது.

கௌதமுக்கு கண்ணன் சொன்னதன் பொருள் விளங்கவில்லை. புத்தகம் அவரது படுக்கை நிலைக்குத் தொந்தரவாக இருப்பதைக்கண்டான். அதை எடுத்து அருகிலிருந்த ஸ்டூல் மீது வைத்தான். அவரது மூச்சு ஆழமாகவும், கனமாகவும் வர ஆரம்பித்தது. சற்று நேரம் அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். ஸ்டூலில் இருந்து அந்த புத்தகத்தை எடுத்து அதன் தலைப்பைப் பார்த்தான். கரமசோவ் சகோதரர்கள் என்றிருந்தது. எழுதியவர் பெயர் ஃபியோதர் தஸ்தயேவெஸ்கி. குரு அடையாளம் வைத்து மூடி வைத்த பக்கத்தைத் திறந்தான். அந்த முழுப் பக்கத்தையும் பொறுமையாக வாசித்தான். ஃபாதர் ஸோசிமா இறந்துவிடுகிறார். அவரைச் சுற்றி ஆசிரமத்தின் பெருங்கூட்டம். அவர் பிணத்தின் அழுகல் நாற்றம் வரத் துவங்குகிறது. கூட்டத்தினர் அவர் உண்மையில் புனிதரா என்று ஐயம் கொள்கின்றனர். அப்போது ஃபெர்ராபான்ட் என்ற மனம் பிறழ்ந்த துறவி அங்கு வருகிறார். அந்த அறையில் பேய்களும், பிசாசுகளும் உள்ளன. அவற்றை விரட்ட வேண்டும் என்று கத்திக் கூச்சல் போடுகிறார். மக்கள் பெருங்குழப்பத்தில் ஆழ்கின்றனர். ஃபெர்ராபான்ட் வெளியேற்றப்படுகிறார்.

கௌதமுக்கு உள்ளூர நடுக்கமுண்டாயிற்று. ஸோசிமாவைப் போலவே குருவும் இறந்து விடுவாரா? இந்த நூலை இவர் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறாரா அல்லது இன்று திடீரென்று இந்தப் பக்கத்தைத் திறந்து வாசித்தாரா? எல்லாவற்றையும் துறந்த துறவி இலக்கியத்தில் எதைத் தேடுகிறார்?

குரு நன்றாக உறங்கிவிட்டார். தொடர்ந்த இருமலின் காரணமாக ஏற்பட்ட களைப்பாக இருக்க வேண்டும். கௌதம் புத்தகத்தை வைத்துவிட்டு வெளியே வந்தான். வாயிலில் ராகுல் நின்றிருந்தான். புன்னகையுடன், “இன்றிரவு முழுதும் இங்கேயே இருப்பேன். குருவுக்கு எந்நேரமும் உதவி தேவைப்படக்கூடும்,” என்றான். கௌதம் அவனிடம் குரு சொன்ன கண்ணன் வாக்கியத்தைச் சொல்லி அதன் பொருள் என்ன என்று வினவினான். ராகுல் தலைதூக்கி சற்று நேரம் சிந்தித்த பின், “உனக்கு எது விருப்பமோ அதைச் செய் என்கிறான் கண்ணன்,” என்றான்.

அறைக்குத் திரும்பியவுடன் (இப்போது வாயிலில் குரங்கு இல்லை) அலைபேசியில் தகவல்களைப் பார்த்தான். அறியாத எண்ணிலிருந்து பதினேழு தவறிய அழைப்புகள். உள்ளே குறுஞ்செய்தியில் அவனது நண்பன் அமெரிக்காவிலிருந்து உடனே அழைக்கவும் என்றிருந்தான். கௌதமின் வாட்ஸப் பழுதுபட்டிருந்தது. நீ என்னை அழை என்று நண்பனுக்கு மின்னஞ்சல் அனுப்பினான். அடுத்த நிமிடத்திலேயே அழைப்பு வந்தது.

“டேய், எத்தன தடவடா கூப்பிடறது. எங்க தொலஞ்சு போயிட்டே!”

“என்ன விஷயம் அதச் சொல்லு! அதான் நாளைக்கு கிளம்பி வரேன்ல, அதுக்குள்ள என்ன அவசரம்?”

“நீ இங்க வந்து சேர ரெண்டு நாளாயிடும். இப்போ அவசரம் என்னன்னா சிட்டாடல் யுனிவர்சிடி ஹாப் இன் அப்பிளிகேஷன்ல ஒரு பிரச்னை. அவங்க ஸ்டேஜ்ல, செஷன்ஸ்ல இருக்கும்போது யுனிவர்சிடிய சாராத ஆளுங்க உள்ள வந்திடறாங்க. நெட்வொர்க்கிங்க்குள்ளகூட பூந்துட்டாங்க. மஸ்ட் பி ஹேக்கர்ஸ். இப்ப ஒரு வொர்க்ஷாப் நடக்குது. நாளைக்கு துவக்கம். உன்னால் ஒரு இதுக்கு ஒரு ஃபயர்வால் கிரியேட் பண்ண முடியுமா? எர்லாங்குல ப்ரொக்ராம் பண்ண உன்னவிட்டா எனக்கு யாரடா தெரியும்? பண்ணிட முடியுமா உன்னால?”

“எதுக்கு இவ்வளவு அவசரப்படுத்துற? நான்தான் நாளைக்கு கிளம்பி வர்றேன்ல?”

“இல்லடா இத முடிச்சுக் குடுத்தோம்னா அடுத்த ப்ராஜக்டுக்கு அஸ்திவாரம் போட்டுறலாம். த்ரீ மில்லியன் டாலர்றா!”

“இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு?”

“பதினாறு மணிநேரம். நான் கூப்பிட்ட உடனே எடுத்திருந்தா பதினெட்டு.”

“சரி, பார்க்கிறேன்.”

“முயற்சி பண்ணு. முடிஞ்சா சந்தோஷம். இல்லன்னாலும் ஓகே. ஆனாலும் நீ முடிச்சுருவே! நாளைக்கு உன்னால ட்ராவல் பண்ண முடியாட்டி பரவால்ல. ரெண்டு நாள் கழிச்சு டிக்கெட் போட்டுடறேன்.”

அலைபேசியை வைத்துவிட்டு ஆடைகளைக் களைந்தான். அறைக்குள் புழுக்கம். அவனது நிர்வாணமே அவனிடத்து காமத்தைத் தூண்டிற்று. குளியலறை சென்று வேகமாகக் குளித்து முடித்து இரவுடைகளுக்கு மாறினான். படுக்கையில் அமர்ந்து மடிக்கணினியை விரித்தான். மணி பதினொன்று ஆகியிருந்தது. இரவுகளில் இணையத்தின் தடையற்ற வேகம் அவனுக்கு நம்பிக்கையளித்தது. இன்னும் பதினாறு மணி நேரம். நாளை மதியம் மூன்று மணிக்குள் முடிக்க வேண்டும். இந்தப் ப்ரோகிராமை எழுத அவ்வளவு நேரமாகாது. தடையின்றி எழுதினால் பத்து மணிநேரங்கள் போதும். சில நேரம் இடையில் கோடிங்கில் சிக்கல் ஏற்பட்டால் நாட்கணக்கில் கூட இழுத்து விட்டுவிடும்.

நண்பன் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து தகவல்களைச் சேகரித்துக்கொண்டான். ஹாப் இன்னின் இயங்கு அமைப்பின் கூடாரத்துக்குக் கீழே எளிதாகச் சென்றுவிட்டான். சற்று நேரம் அதன் இயங்கு முறையைக் கண்காணித்துக்கொண்டிருந்தான். அதன் இயக்கத்தை நிறுத்தாமலேயே சில குறியீடுகளை புதுப்பித்து இடைச்செருகினான். ஒரு தனிக்கட்டளையாக சிட்டாடல் மின்னஞ்சல் கொண்டிருக்கும் அனைவருக்கும் தொகுக்கப்பட்ட குறியீடுகளை அனுப்பினான். இயக்கநேர பிழைதிருத்திகளுக்கான நிரலிகளைப் புதிதாக எழுதிச் சேர்த்தான். தலைக்கு மேல் இரைச்சலோடு ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி வெம்மைக் காற்றை கீழே தள்ளிக் கொண்டிருந்தது. தொடர்ந்த காற்று வீசுதலில் அவனுக்கு மூக்கடைத்தது. படுக்கையில் இருந்து விலகி தரையில் அமர்ந்து, சுவரில் சாய்ந்துகொண்டான். ஏற்கனவே எழுதப்பட்டிருந்த குறியீடுகளில் ஐந்தில் ஒரு பகுதி காலாவதியாகியிருந்தது அல்லது ஆதரவற்றதாக இருந்தது. அவை அனைத்தையும் நீக்கி அவற்றுக்குப் பதில் புதிய குறியீடுகளை எர்லாங்க் மொழியில் பின்னோக்கிப் பொருந்தும் தன்மையுடையதாக மாற்றி எழுதினான். இனி மீண்டும் மீண்டும் குறியீடுகளை மாற்றி எழுத வேண்டிய அவசியமிருக்காது. சிறிது நேரம் அவ்வமைப்பை ஓடவிட்டுப் பார்த்தான். சிறுநீர் கழிக்க எழுந்தபோது கடிகாரத்தில் மணி இரண்டரை காட்டியது. மெல்லப் புன்னகைத்துக்கொண்டான். இதற்குப் பதினாறு மணிநேரம் எதற்கு? இதோ இப்போது முடித்துவிடுகிறேன். மீண்டும் வந்தமர்ந்து பரிசோதித்துப் பார்த்தபோது புதிதாக எழுதப்பட்டிருந்த குறியீடுகள் அவ்வமைப்பை அதிதீவிர பிழை கையாளும் வகையில் மாற்றியிருந்தன. ஏதேனும் தவறு நிகழுமாயின், அது உடனே களையப்பட்டு அதற்கான க்ளோன் உடனுக்குடன் உருவாக்கப்பட்டுவிடும். நிகழ்ந்த பிழை குறித்து உடனுக்குடன் புகாரளிக்கும் பதிவு செய்யும் வசதியையும் ஏற்படுத்தினான். அமைப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பயன்பாடு முடிந்தவுடன் அதை ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு ஒரு புதிய கிளஸ்டருக்குள் தானாக நகர்த்தும் தானியங்கிப் பயன்பாட்டு இடப்பெயர்வை ஏற்படுத்தினான். மீண்டும் ஒரு முறை அமைப்பை ஓட்டி சரி பார்த்தான்.

அதற்குள் வியர்வையில் தொப்பலாக நனைந்துவிட்டிருந்தான். மீண்டும் மீண்டும் பல்வேறு முனைகளில், இடுக்குகளில், மூலைகளில் குறியீடுகளைச் சரி பார்த்தான். எல்லாமே சரியாக வந்திருந்தன. கணினிக் குறியீடுகளை எழுதி எவ்வளவு நாட்களிருக்கும்? மாதங்கள்? ஆனால் எல்லாமே இப்போது விரல் நுனியில் வந்து விட்டமாதிரித் தெரிந்தது. அல்லது எப்போதுமே விரல்களிலேயே இருந்துகொண்டு வடிவம் பெறுவதற்காகக் காத்திருக்கின்றனவோ? நீண்ட நாட்கள் கழித்து கேள்விகளற்ற வெறுமை அவனை நிரப்பியது. இது உறக்கம் தவிர்த்த களைப்பின் காரணமாகவா? இல்லை. அந்தப்பணி அவ்வளவு விரைவில் முடிந்துவிட்டதே, இன்னும் சிறிது நேரம் விளையாடி இருக்கலாமே என்று ஏக்கமாக இருந்தது. மின்னஞ்சலைத் திறந்து வேலை முடிந்துவிட்டது என்றும், எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதைச் சரி பார்க்கும்படியும் நண்பனுக்குச் செய்தி அனுப்பினான். எழுதிய குறியீடுகளில் மீண்டும் ஒருமுறை திருத்தம் பார்த்தான். ஒரு திடுக்கிடலாக மனம் அப்பணியிலேயே தோய்ந்திருப்பதை, அதையே நாடிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். மணி மூன்றரை ஆகியிருந்தது. வழக்கமாக ஐந்து மணிக்கு எழுந்து, ஐந்தரை மணி வாக்கில் தியானப்பயிற்சியை மேற்கொள்வான். உறக்கம் இழந்திருந்ததில் கண்கள் எரிந்துகொண்டிருந்தன. உறக்கமும் வரவில்லை. இனி உறங்க முடியாது. வயிற்றில் மெல்லிய பசியும் எரிந்துகொண்டிருந்தது. பாட்டிலில் இருந்து சிறிது தண்ணீர் குடித்தான்.

அறைக்கு வெளியே வந்து ரிஷிகேசத்தின் வானத்தைப் பார்த்தான். நட்சத்திரங்களோடு இருண்டிருந்தது. கட்டிடங்களின் சாளரங்களில் ஆங்காங்கே விளக்கொளிகள். எங்கோ எவரோ இருமும் ஒலி குருவை நினைவுபடுத்தியது. செருப்புகளை அணிந்துகொண்டு மெல்லக் கீழிறங்கினான். குருவின் அறையில் இரவு விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. வாயிலில் கயிற்றுக்கட்டில் ஒன்றில் ராகுல் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். ஆசிரமத்துக்குள் மரங்களின் தலையசைப்பு தவிர வேறு ஒலிகள் இல்லை. பூனைகளும், நாய்களும் கூட உறங்கிக் கொண்டிருந்தன.

இந்த நேரத்தில் ரிஷிகேஷின் தெருக்கள் எப்படியிருக்கும் என்றறியும் ஆவல் தோன்றியது. இரவுக் காவலரின் வியப்புப் பார்வைக்கு ஒரு புன்னகையைப் பதிலிறுத்து விட்டு ஆசிரமத்தைவிட்டு வெளியேறினான். அதே குறுக்குச் சந்துகள்; கடைத்தெருக்கள். எவ்விடமும் அமைதியில், துயிலில் திளைத்திருந்தது. தெருவோரத்தில் மக்களும், நாய்களும் அருகருகே உறங்கியபடி இருந்தனர். இருட்டு கனத்த போர்வையாக எல்லாரையும் போர்த்தியிருந்தது. மெதுவாக நடந்தபோதிலும், விரைவாகவே ராம்ஜூலாவை அடைந்துவிட்டதாக உணர்ந்தான். பாலத்தின் இருபுறமும் ரிக்ஷாகள், தள்ளுவண்டிகள், அதிலுறங்கும் மனிதர்கள்.

பாலத்தில் ஏறி மெல்ல ஒவ்வொரு அடியாக வைத்து நடந்தான். குளிரில் ஊறிய காற்று நாசியில் புகுந்து திகைக்க வைத்தது. அவனது சட்டையும், பாண்டும் படபடவென்று அடித்துக் கொண்டன. பொங்கும் பெருவெள்ளம் போன்ற இரைச்சல் பாலத்தின் கீழிருந்து. இரவு நின்றிருந்த அதே பகுதிக்கு வந்து நின்றான். கிட்டத்தட்ட பாலத்தின் மையப்பகுதி. பாலத்தின் விளிம்பில் கைகளை வைத்து நின்றான். யாருமற்ற பாலம். கீழே விசை குறையாது பெருகும் நதி. பாலம் அப்போதும் அசைந்துகொண்டிருந்தது. அதன் அசைவைக் கண்மூடி அனுபவித்தான். யாருமேயில்லாமல் பாலம் ஏன் ஆடிக்கொண்டிருக்கிறது? அதன் ஆட்டம் ஒரு தாலாட்டைப் போல அவனைக் கொஞ்சியது. அவன் முகத்தில் ஒரு சின்ன புன்னகை தோன்றியது. கண்களைத் திறந்து கீழே நதியைப் பார்த்தான். நதியின் பெருக்கே பாலத்தில் அதிர்வுகளையும், ஆட்டத்தையும் ஏற்படுத்துகின்றன என்று தெரிந்தது. வானம் மெல்ல வெளுத்து ஓளியைப் பரப்பும்வரை, பாலத்தின் அந்நாளின் முதல் மனிதன் கால் பதிக்கும்வரை, நீண்ட நேரம், பாலத்தின் அசைவுக்கு இசைந்தபடி, கீழே பெருகும் நதியைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

1 comment for “அசைவும் பெருக்கும்

  1. இராம்கமார்
    November 1, 2021 at 2:21 pm

    எதிலும் நாட்டம் இல்லாதிருப்பது சன்யாசம்.இலக்கியத்தில எதை தேடுகிறாய் நல்ல வரிகள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...