“சிவனோட அடிமுடியும்ம்ம்…
அடிமுடியும்…”
இராமசுப்பு பாட்டாவின் குரல் தனித்த சுருதியில் மேல் எழுந்தது. ஒரு மூலையில் சிறிய தும்மல் போல் எழுந்து மெல்ல மெல்ல காட்டை நிரப்பிச் செல்லும் சிம்மத்தின் குரல் அவை. என் அளவாச்சியை 1 அதற்கேற்றார் போல் இசைத்து பக்கப்பாட்டு பாட சிரமமாக இருந்தது. பின் பாட்டை நிறுத்திவிட்டு, அளவாச்சியை அவர் சுருதியோடு இணைக்க போராடிக் கொண்டிருந்தேன். மூப்பு தட்டி மூன்று தலைமுறை கண்ட வயதிலும் அவரால் அப்படி அடிக்குரலெடுத்து பாடமுடியும் என்பதை நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
சிவசைலம் பொம்மி அம்மன் கோவில் திருவிழாவிற்கு பாட்டாவை அழைத்துச் செல்ல பெரிய கச்சராவு 2 வீட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என்றறிந்ததுமே எனக்கு திக்கென்றது. பாட்டன் கடைசியாக சிவசைலம் கோவிலில் தான் அண்ணாவியாக பாடினார் என தாத்தா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று நிகழ்ந்த ஆட்டத்தில் கணியானாக ஆடிய இராமசுப்பு பாட்டாவின் கடைசி தம்பியான முப்பிடாதி, அதன் பின் பித்துப் பிடித்து ஊரைவிட்டு ஓடி விட்டார் என்ற செய்தியும் உண்டு. பாட்டாவும் அண்ணாவியாக பாடுவதை நிறுத்திவிட்டார். எங்கள் பூர்வீகமான தட்டான்பட்டியை காலி செய்துவிட்டு நாங்கள் இப்போது இருக்கும் பாணாங்குளம் கிராமத்தில் பாட்டா குடியேறிவிட்டார். முப்பிடாதி பாட்டாவை பற்றி எங்கள் குடும்பத்தில் யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர் அன்று ஆடிக் கொண்டிருந்த போது பித்து கூடி ஊரை விட்டு ஓடிவிட்டார் என்ற செய்தி மட்டும் தாத்தா அறிந்து வைத்திருந்தார். அவரை காசியில் பார்த்ததாக எங்கள் வீட்டிற்கு வந்திருந்த ஈனமுத்து கணியான் ஒருமுறை சொன்னார். அப்போதும் அவரைப் பற்றி பாட்டன் பெரிதாக எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
இப்போது சிவசைலம் பெரிய கச்சராவு வீட்டிலிருந்து அதே போல் கொடைக்கு அழைக்க வந்திருந்தனர் என்றானது. முப்பிடாதி பாட்டாவின் பெயர் வீட்டில் சலசலக்க தொடங்கியது. ஒவ்வொருத்தரும் அவரைப் பற்றி ஒவ்வொரு கதை சொல்லத் தொடங்கினர். அவருக்கு சிவசைலத்தில் அன்று நிகழ்ந்த கூத்தில் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு அது சேர முடியாமல் போன துக்கத்தில் அவர் சாமியாராக ஊர் ஊராக திரிகிறார் என்ற கதை வீட்டு பெண்களிடம் உலவ தொடங்கியது.
நான் சென்று பின் வாசலில் அமர்ந்திருந்த இராமசுப்பு தாத்தாவை கைபிடித்து அழைத்து வந்தேன். பாட்டன் வீட்டிற்குள் நுழைந்ததும், பெரிய கச்சராவு நேராக அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.
நான் பாட்டாவின் அருகில் சென்று காதில், “பாட்டா, அவீங்க சிவசைலத்துல இருந்து வந்திருக்காக” என்றேன்.
சிவசைலம் என்றதும் அவருடலில் மெல்லிய அதிர்வு ஒன்று தெரிந்தது. நான் அவரிடம், “உங்களப் பாடச் சொல்லி கேட்டு வந்திருக்காக” என்றேன். அவ்வரிகள் அவருள் போய் சேரவில்லை.
நான் மீண்டும் சொன்னேன், “அவங்க ஊர் பொம்மியம்மங் கோவில் கொடையில நீங்க தான் வந்து பாடணும்ன்னு கேக்காக நம்ம வீட்டுல இருந்து தான் ஆட்டங் கெட்டணுமாம். அவக எல்லா ஊரும் போய் தேடிட்டாவளாம் உங்கள விட்டா பொம்மி கதைப்பாட்டு பாட ஊருக்குள்ள வேற கணியான் இல்லையாம்” என்றேன்.
பாட்டன் எதுவும் சொல்லாமல் இருந்ததும் பெரிய கச்சராவு எங்களைப் பார்த்து சொன்னார், “எங்க ஊர் பொம்மி அம்மங் கோவில் தொறந்தே மூனு தலைமுறை ஆகுதுங்க. அம்மனுக்கு கொடையே நடக்கல. பொம்மி நாலு தலைமுறைக்கு முன்னே எங்க வீட்டுல பொறந்த கன்னி பொண்ணுன்னாக்கும் சொல்லு. ஆனா, அந்த கோவில பத்தி எங்க யாருக்கும் எதுவும் தெரியாது. சும்மா கெடக்குத கோவில புணரமைச்சு கொட நடத்தாலாம்ன்னு தான் எடுத்தோம். ஊர் கூடி அதை பேசும் போது எங்க ஊர் பூசாரி அம்மங் கொண்டாடி வந்து கணியான் பேர சொன்னாருங்க. இராமசுப்பு கணியான் தான் வந்து பாடணும்னாரு. அது எங்களுக்கு அந்த அம்மனே சொன்ன வாக்காக்கும் அதை மீற முடியாதுல்லா. அதுனால ஐய்யா வந்து மறுக்காம நாளு வரியாவது பாடணும்” என்றார்.
அவர் சொல்லி முடிக்கும் வரை பாட்டன் அவரையும் எங்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.
பின் கச்சராவை நோக்கி, “நான் வாறேன். அவ வாக்கு அதுன்னா நா வந்து பாடுறேன். அவள பத்தி நாந் தான் பாடணும். பொம்மிய பத்தி நா வந்து பாடுதேன்.” எனச் சொல்லி கைக்கூப்பினார்.
***
சிவசைலக்காரர்களிடம் வர சம்மதம் தெரிவித்ததில் இருந்து பாட்டன் யாரிடமும் பேசாமல் தனித்தவரானார். வழக்கம் போல் பின் வாசலில் வாய்க்காலில் அமர்ந்து தனித்து எதையோ பேசிக் கொண்டிருந்தார்.
பாணாங்குளத்திலிருந்து புறப்படும் போது பாட்டாவிடம் எந்த உணர்ச்சியுமில்லை, காரில் பெரும்பாலும் தூங்கிக் கொண்டே வந்தார். ஆனால் கோவிலை கண்டவுடன் அவர் முகத்தில் தெளிச்சல் தெரிந்தது. அவர் கைகள் ஏதோ பாட்டை தாளமிட்டுக் கொண்டிருந்தன. வாய் முப்பிடாதி பாட்டாவின் பெயரை சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தன. இடை இடையே பொம்மி அம்மன் பெயரும். இருவர் பெயரையும் மாறி மாறி சொல்லி பாடிக் கொண்டிருந்தார்.
நாங்கள் அலங்காரம் செய்ய கச்சராவு வீட்டிற்கு சென்ற போது கூட அவர் கோவிலில் தனியாக அமர்ந்து கொண்டார். அவர் கைகள் கூப்பிய வண்ணம் பொம்மி அம்மனை வணங்கிக் கொண்டிருந்தன. பாட்டன் வெறும் சம்பிரதாயமாக இரண்டு வரிகள் பாடிவிட்டு அதன் பின் அப்பா முத்தாரம்மன் பிறப்பு கதை பாடுவதாகவே திட்டமிருந்தது. ஆனால் கரைபுரண்ட நதியின் வேகம் மெல்ல தானாக தனிந்தால் தான் உண்டென அவர் குரலோசை சிவசைலத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.
பொம்மி பிறப்பிலிருந்து பாட்டை தொடங்கினார். அவர் குரலில் பொம்மி வளர்ந்துக் கொண்டே வந்தாள். கவுண்ட நாய்க்கரின் மகளாக சிவசைலம் காட்டில் ஓடித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்தாள். இளம்பெண்ணாக ஏழு அண்ணன்களின் தங்கையாக வீட்டில் அடைந்திருந்தாள். தன் ஆசை நாயகன் மேல் காதல் கொண்டவளாக. காதல் கொண்ட கண்களால் அவன் கூத்தை ரசிக்கும் காதலியாக.
நான் பாட்டன் பாடும் போது அளவாச்சியை வாசித்துக் கொண்டு கோவிலின் மூலக் கருவறையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே வந்தமர்ந்த அந்த கன்னி தெய்வத்தை நோக்கி கொண்டிருந்தேன். அங்கே பாட்டனின் வார்த்தைகளில் ஜொலித்திருந்தாள். அப்போது அங்கே கோவிலினுள் அமர்ந்தவள் கன்னி பெண்ணென்றே தோன்றினாள். அவர் பாட பாட கற்சிலை மறைந்து அங்கு அமர்ந்து ஆடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் கன்னி பெண் ஒருத்தி கருவறையினுள் இருந்தாள். அவளின் தேக சிரிப்பும், அறியாமையினால் ஆன முகமும், ஆழ்ந்த ஏக்கமும் அவள் முகத்தில் உயிர்ப்பை ஒருமித்து கூட்டியிருந்தன.
மணி பன்னிரெண்டானதும், பாட்டன் பாட்டை நிறுத்தச் சொல்லி உச்சி ராத்திரி பூஜையைத் தொடங்கினர். பொம்மி அம்மன்னுக்கு பலி ஆகாது என்பதால். கோவிலின் சாமி கொண்டாடி கைவெட்டு நிகழ்த்தினார். பின் அந்த திரளையை எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்கு சென்றார்.
நான் பாட்டாவை பார்த்தேன். அவர் வந்ததில் இருந்து கோவில் கருவறையை மட்டுமே நேர்கொண்டு பார்த்தார். பூஜை தொடங்கியதும் கூட்டத்திலிருந்து தனித்து தன்னை விலக்கிக் கொண்டு நடந்துச் சென்றார். விலகி நடந்து சென்று கோவிலுக்கு வடக்கு திசையில் சென்றுக் கொண்டிருந்த கடனா நதியின் கரையில் அமைந்திருந்த வேப்ப மரத்தின் அடியில் உள்ள கல் திட்டில் அமர்ந்தார். நான் அவரை பின் தொடர்ந்து அவருடன் சென்றேன்.
அவர் என்னை அறிந்தவராகவே இல்லை. அவர் உதட்டின் அசைவை கவனித்தேன், பொம்மி, முப்பிடாதி என இரண்டு பெயர்களையும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தன. அங்கமர்ந்து நதி அலைந்து செல்வதையே பார்த்த படியிருந்தார். குளிர்ச்சியை ஏத்தும் வேப்ப மரத்தின் வாடைக் காற்று அவர் வெற்றுடம்பில் பட்டு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
அவர் அருகே சென்று, “பாட்டா சால்வ கொண்டரட்டா?” என்றேன்.
என்னை நோக்கி திரும்பியவர் வேண்டாமென தலையசைத்துவிட்டு திரும்பிக் கொண்டார். நான் அங்கேயே காத்திருந்தேன்.
பின் அவரே பேசினார். என்னை அருகே அமரும்படி செய்கைக் காட்டிவிட்டு இடுப்பு மடிப்பில் இருந்த புகையிலை பொட்டலத்தை வெளியே எடுத்தார். புகையிலை போடுவதென்பது அவர் பேச தொடங்குவதற்கான குறியீடு.
பின் என்னை நோக்கி மெல்ல திரும்பி, “என்னனே தெரியல டே, மனசு கணமாயி போச்சு கேட்டியா. இன்னைக்கி இந்த பொம்மியோட கதைய பாட பாட மனசு எங்கயோ பழைய காலத்துக்கு போயிருச்சி. அன்னைக்கி நடந்தது நேத்து நடந்த மாரி இருக்கு பாத்துக்கோ. அன்னைக்கும் நாந் தான் அண்ணாவியா பாடுனேன். இன்னைக்கி இங்க யாருக்கும் முப்பிடாதிய பத்தி தெரியாது. அப்பலாம் அவன் கணியானா ஆடுறான்னா திருநெவேலில உள்ள எல்லா கணியானும் அவன் ஆட்டத்த பாக்க வந்து நிப்பாங்க. அவன் ஆளு வேற மம்மதன்லா. ஊர் கண்ணு மொத்தமும் அவன் மேல தான் இருக்கும். இந்தா இங்க இருக்கால பொம்மி அவ மட்டும் என்ன ஆளு ரதியாக்கும். அதுக ரெண்டு அன்னைக்கி ஆட்டத்துல அன்னத்துல பறக்குற ரதி, மம்மதானாட்டம் தான் இருந்தாங்க.” என்றவர் பின்னால் திரும்பி நடக்கும் பூஜையைப் பார்த்தார்.
பின் தொடர்ந்தார், “எனக்கு இங்க வாற வரையும் என்ன பாடுறதுன்னே தெரியல ஆனா இங்க வந்து அவள பாத்ததும் தெரிஞ்சி போச்சு, இந்த கட்டைக்கு பொம்மியவும், முப்பிடாதியவும் பத்தி பாடாம மோட்சமில்லன்னு. அவங்கள பத்தி பாடத் தான் அவ என்ன வரச் சொல்லிருக்கா. அவங்க ரெண்டு பேத்தோட கதைய பாட தான் நா இன்னைக்கி இங்க வந்திருக்கேன்னு தெரிஞ்சு போட்டு. பாடுதேன் அன்னைக்கி நடந்த கதைய இப்போ பாடுதேன்” என்றார்.
நான் அவரை ஆமோதிப்பது போல் தலையசைத்தேன்.
***
உச்சி ராத்திரி பூஜையை பூசாரி முடித்ததும், நான் பாட்டாவை அழைத்து வந்தேன். அவர் மீண்டும் கதையைத் தொடங்கினார்.
“சிவனோட கால்கள் கொண்டது ஊர்த்துவம்ன்னா
தாட்சாயணியோட கண்கள் கண்டது அந்த ஊர்த்துவம்
சிவனோட, சக்தி கண்டது அந்த ஊர்த்துவம்
இருவரும் கொண்டது அந்த ஊர்த்துவம்…”
ஊர்த்துவம்னா பரிபூர்ணம்ன்னாக்கும் சொல்லு. சிவனுக்கு ஊர்த்துவ மூர்த்தின்னு பேரு உண்டு பாருங்க. ஊர்த்துவம்ன்னா மேல்புறம் இல்ல மேலப்பாக்கறதுன்னு பொதுவாக சொல்லுவாங்க. ஆனா ஊர்த்துவம்ன்னா பரிபூரணம்ன்னு சொல்லிருக்கு. அந்த பரிபூரணத்த தெய்வம் மட்டும் தான் அறிய முடியும். தெய்வத்தால மட்டும் தான் மனுஷனுக்கு காட்ட முடியும். மனுஷ வாழ்க்கைக்கு அத்தன பரிபூரணம் ஆவறதில்ல. அந்த பரிபூரணத்த மனசுல கண்டுகிட்டவனுக்கு அதுக்கு மேல மண்ணுல சீவன் இல்ல.
ஊர்த்துவ வேஷங் கெட்டி வந்தான் முப்பிடாதி. வல்லப மங்கலம் முப்பிடாதி கணியானின் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் அண்ணாவியின் பாட்டும் தொடங்கியது. அண்ணாவி அன்னைக்கி பாடியது ஊர்த்துவ தாண்டவ கதைய தான்.
அன்னைக்கி வைகாசி மாசம் பௌர்ணமி நாளு அஷ்டமி திதி முப்பிடாதிய இங்க ஆட்டங் கெட்ட அழைச்சிருந்தாங்க. இங்க முத்தாரம்மன் கோவில் கொடை. முப்பிடாதி வந்ததும் நேரா ஊர் தலைவர் கவுண்ட நாயக்கர் வீட்டுல தான் தங்குறதுக்கு ஏற்பாடு. அங்க வச்சி தான் அவன் வேஷங் கெட்டுறதுக்கெல்லாம் ஏற்பாடாயிருந்தது. அப்ப தான் கவுண்ட நாயக்கரோட மக பொம்மிய பாத்தான் முப்பிடாதி. பாத்த கணமே. ரெண்டும் வச்ச கண்ணு மாறல. கோவில் செலையில உள்ள ரதி, மம்மதனாட்டம் தான் ஒரு கணங்கூட கண்ணிமை மாத்தி அசையல.
ஆட்டந் தொடங்குத வர அவ நெனைப்பு தான் முப்படாதி மனசு பூராம். அவள நெனைச்சு நெனைச்சு தான் வேஷங் கெட்டுறான். கண்ணுல மைத் தீட்டி முடிச்சதும் தான் பாக்கான். வேஷத்துல அத்தன முழுமை. அப்படி முழுமைய அவன் எந்த ஆட்டத்துலயும் கண்டதில்ல. எதாச்சும் குறையிருக்கும். இல்லையினா அத வலுக்காட்டாயமா போட்டுகிடணும் கணக்கு ஒன்னு உண்டு. அதுனால தான் கண்ணு மையில்ல சின்ன தீண்டல இழுத்து விடுவோம். நேருக்கு பாக்கும் போது செரியா தான் தெரியும் ஆனா பக்கவாட்டுல பாக்கும் போது கோனுனாப்ல இருக்கும். அதுவும் ஒரு லெட்ச்சணமாக்கும். ஆனா அன்னைக்கி முப்பிடாதி கைக்கு அதுவும் வரல கண்ணு மை மொதக் கொண்டு ஒழுங்கா வந்து நின்னுபோடுது.
அதுக்கு பின்ன அது தெய்வ வாக்காக்கும் கணியான்னால அத மாத்துறதுக்கு உரிமையில்ல. அந்த கணம் முப்பிடாதி மனசுல ஒன்னு தெரிஞ்சுப் போட்டு. இன்னைக்கி ஆடுனா அது பொம்மிக்காக தான்னு. அந்த பரிபூரணம் கூடி நிக்கிறது அவ ஒருத்திக்காக தான்னு.
முப்பிடாதி வேஷங் கெட்டி கோவில் முன்னாடி வந்து நின்னதும் அவன பாத்து அவங்க அண்ணங்க எல்லாத்துக்கும் சேதி புரிஞ்சு போச்சு. அவங்களால எதுவும் சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம. எல்லாரும் ஒன்னா அந்த முத்தாரம்மன்ன வேண்டிட்டு ஆட்டத்த தொடங்குனாங்க.
அண்ணாவி பாடத் தொடங்குனாரு. பொதிகையில இருக்கிற சிவன் வரக்கூடாதுன்னு தட்சன் தாட்சாயணியோட சுயம்வரத்த சிவனுக்கு தெரியாம நடத்துறான். சுயம்வரம் நடக்கும் போது தாட்சாயணியோட முன்னாடி காளையில சிவன் நிக்கிறாரு. மொத முறையா சிவன பாத்த தாட்சாயணி அவரு மேல அந்த கணமே மையல் கொள்ளுறா. அந்த கனவு நிலையிலயே சிவன் தாட்சாயணி பொதிகை மலைக்கு திரும்பி வாராங்க. பொதிகை யிலும் அவங்க கண்ணு பிரியவே இல்ல. உடம்பு ரெண்டா பிரிஞ்சு கண்ணு மட்டும் ஒண்ணாயிருச்சு.
அதை பாடிட்டு இருந்த அண்ணாவி முப்படாதிய பாக்குறாரு. முப்படாதி கண்ணு அதே மாதிரி நிலைச்சிருக்கு. கண்ணு எதுக்க சிலையா நிக்குற கோவில் கருவறையில இல்ல அதுக்கு யெடதுபுறம் கூட்டத்துல ஒக்காந்திருக்கிற பொம்மி மேல. அவளோட கண்ணு வேற எங்கையும் இல்ல. முப்படாதியோட ஆட்டத்தையே பாத்துக்கிட்டு இருக்கு.
முப்படாதி இங்க ஆட ஆட பொம்மி யோட கண்ணும் அதையே ஆடி யெடுக்குது. ரெண்டு பேரும் ஒரு ஆட்டத்தோட ரெண்டு எல்லையில நின்னு ஆடிக்கிட்டிருக்காங்க. முப்பிடாதி ஆட்டத்துல பரிபூரணமில்ல ஏதோ ஒன்னு குறைஞ்சு நிக்கிது. அண்ணாவியால வாயெடுத்து பாட முடியல ரெண்டு பேத்தையும் பாத்துக்கிட்டு நிக்காரு. அவரு பாடல வாய் தன்னிச்சையா பாடுது.
சிவ தாட்சாயணிய நடனம் ஆட அழைக்குதாரு. அவ நடனமாடுன்னா நம்ம ரெண்டு கண்ணும் பிரிச்சிரும் அதுனால வேண்டாம்ன்றா. கண்ணு ரெண்டும் பிரியாத நடனம் இருக்கு அதை நான் சொல்லி தாரேன் நீ ஆடுன்னு சிவன் சொல்லுதாரு. சிவ நடனம் தொடங்குது.
சீவன் ஆடும் போது தாட்சாயணிக்கிட்ட, ‘இனி நாம ரெண்டு பேரும் எப்போதும் பிரியாத ஊர்த்துவ நிலைய அடையலாம் வா என்னோட சேர்ந்து ஆடு’ ன்னு சொல்லுதாரு. தாட்சாயணியும் சிவனோட ஆடத் தொடங்குறா.
அண்ணாவி முப்பிடாதி பாக்காரு, முப்பிடாதி காலு ரெண்டையும் மடக்கி வட்டமிட்டு சிவ நடனத்த தொடங்கிட்டான். சுத்தி சுத்தி ஆடிட்டு இருக்கான். அந்த வேகமான சுழலுலையும் அவங் கண்ணு அத்தனை நிலையா இருக்கு. நிலையா பொம்மியவே பாத்துக்கிட்டு இருக்கு. அவளோட கண்ணு முப்பிடாதி ஆடுத அந்த சுழலையே அச்சு எடுத்திட்டு இருக்கு. முப்படாதி கண்ண பொம்மிக்கிட்ட இருந்து விலக்கப் பாக்குதாரு முடியல. அத்தன நிலையா பொம்மியோட கண்கள் ஆடுற தாண்டவத்தையே பாத்துக்கிட்டு இருக்காரு.
முப்பிடாதி ‘கம் கம் கம கம’ ஆடுற நடனத்த பொம்மியோட கண்ணு ரெண்டும் பாத்திட்டு இருக்கு. பொம்மியோட கண்ணு ரெண்டும், ‘தம் தம் தம்த தம்தம்’ ன்னு ஆடுற நடனத்த முப்பிடாதி ஓட கண்ணு பாத்துக்கிட்டு இருக்கு. பொம்மியோட கண்ணு நடனத்த முப்பிடாதி ஓட காலு அச்சு எடுக்குதா இல்ல முப்பிடாதி ஆடுறதோட பாவை தான் பொம்மியோட கண்ணான்னு தெரியல. ஒன்னோட காதல இன்னோன்னு ஆடி எடுத்து ரசிக்கிது. எது எதப்பாத்து படிக்கிதுன்னு சொல்ல முடியல.
சிவன் தாட்சாயணியோட கண்ண பாத்து ஆடுறாரு. தாட்சாயணி கண்ணு சிவன விட்டு விலகல. ரெண்டு சேர சேர சிவ தாண்டவம் உக்கிரம் கூடிக்கிட்டே போகுது. சிவனோட வேகத்துக்கு சக்தியும், சக்தியோட அமைதிக்கு சிவனும் மாறி மாறி போறாங்க. உன்மத்த நிலையோட ரெண்டு எல்லையையும் தொட்டு பாக்குறாங்க. சிவன், தாட்சாயணிய சோதிக்க அவரோட ஆட்டத்தோட வேகத்த கூட்டிக்கிட்டே போறாரு. சக்தி அந்த ஆடலுக்கு மறுப்பேதுமில்லாம அவரு கண்ண பாத்து ஆடிக்கிட்டே இருக்கா.
முப்பிடாதி பொம்மியோட கண்ணப்பாத்து ஏதோ கேக்குறான். அவ கண்ணு அவன் காலோட தடத்த மட்டும் தான் பாக்குது. காலு ரெண்டு பின்னி பின்னி ஆடிக்கிட்டு இருக்கு. அவ கண்ணு ரெண்டு அதே பின்னல். முப்பிடாதி காலாலயே அவ கிட்ட அவன் காதல சொல்லுறான். பொம்மி அவ கண்ணாலயே.
நம்ம காதல் கை சேருமான்னு ஒன்னு இன்னொன்ன பாத்து கேக்குது.ரெண்டு பேரோட காதலும் ஒன்னா ஒரே யெடத்துல சங்கமிக்கிது. ரெண்டும் ஒன்னோட ஒன்னோட ஊடலாடுது, கோவம் கொள்ளுது, கொஞ்சிது, ஒன்ன பாத்து ஒன்னு சிரிக்கிது, அழுது, ஒன்னு மத்தத தழுவுது. தழுவி தழுவி ரெண்டு வேற வேற இல்லாம ஒன்னாகுது. ஒன்னு மட்டுமே ஆன காதல் அங்கே நிலைச்சிருக்கு அந்த ஓருருவம் மட்டும் தான் இப்ப ஆடிக்கிட்டு இருக்கு.
சிவன் திருவிளையாடலோட இறுதியா தாட்சாயணி முன்ன வந்து ஊர்த்துவ தாண்டவத்த ஆடுறாரு. அதை பாடிக்கிட்டு இருக்கு போதே அண்ணாவி முப்படாதிய பாக்காரு. பொம்மியோட கண்ணசைவையும் அவளும் முப்படாதி கூட வந்து சேந்து ஆடுற மாதிரி தான் இருக்கு. ரெண்டு பேரும் ஒரே நடனத்தையே ஆடிக் கொண்டிருந்தாங்க. முப்படாதியோட வலது காதுல இருந்த குண்டலத்த கீழ விழ வைக்கிறான். அப்படி சரியும் போது கூட அவன் கண்ணு பொம்மிய விட்டு விலகல. அவளும் அவனையே பாத்துக்கிட்டு இருக்கிறா. அண்ணாவி பாட்ட நெறுத்த பாக்காரு முடியல. தன்னியல்பா வாய் பாடிக்கிட்டே இருக்கு. அளவாச்சியோட சத்தம் கூடி கூடி உச்சத்த தொட்டுக்கிட்டே இருக்கு.
முப்படாதி கணியானோட ஆட்டத்துல பரிபூரணம் கூடி கூடி வருது. சப்த தாண்டவத்துல ஒன்னொன்னா ஒன்னொன்னா கூடி கூடி முப்படாதி ஆடிக்கிட்டே இருக்கான் ஆடி ஆடி அந்த ஊர்த்துவ நிலை நோக்கி போய்கிட்டே இருக்கான். அவனோட கண்ணு பொம்மியோட கண்ணயே பாத்துக்கிட்டு இருக்கு. அந்த கண்ணுலயும் அதே தாண்டவ நிலை.
முப்பிடாதி ஓட ஆட்டத்துல பொம்மி பொட்டு மிச்சமில்லாம மொத்தமா கறைஞ்சிடுதா. பொம்மி ஓட கண்ணுல தெரியும் தாண்டவத்துல முப்பிடாதி மொத்தமா மூழ்கிருறான். அந்த ஆட்டத்துல மொத்த வாழ்க்கையையும் ரெண்டு பேரும் சேர்த்து வாழுறாங்க. அவங்க ரெண்டு பேத்த தவர அந்த ஒலகத்துல யாருமே இல்ல. ரெண்டு பேரும் அவங்களுக்காக மட்டும் ஆடுறாங்க. கணியானோட காதல பொம்மி நாச்சியார் மொத்தமா வாங்கி பருகுறா. ஒரு சொட்டு விடாம மொத்தமா பருகுனதும். ரெண்டு பேரும் காதலோட ஊர்த்துவத்துக்கு போறாங்க.
முப்படாதி ஆட்டத்த நிறுத்த பாக்குறான் அவனால முடியல, அண்ணாவி பாடிக்கிட்டே இருக்காரு. சிவன் கீழ விழுந்த குண்டலத்த வலது காலால தூக்கி ஊர்த்துவம் ஆடி நின்னு காதுல மாட்டுறாரு. தாட்சாயணியால ஊர்த்துவ நிலைல சிவனோட கண்ண பாக்க முடியாதுன்னு அப்படியே நின்னு சிவனையே பாக்குறா.
அண்ணாவி அதனை பாடுறப்ப முப்படாதி அப்ப தான் நினைவு வந்த மாதிரி உலுக்கு உலுக்கப்பட்டு எங்க இருக்கோம்னு பாக்குறான். அப்ப கூட அவனோட கண்ணு பொம்மியோட கண்ணுல இருந்து திரும்பல பொம்மியோட கண்ணும் அதே ஆடல நடத்திட்டு இருக்கு. ரெண்டு பேரோட கண்ணும் அப்ப தான் ஒன்ன இன்னொன்னு சந்திச்சுக்கிட்ட மாதிரி பாக்குது.
முப்படாதி ஆட்டத்த நிறுத்தப்பாக்குறான். அவனால அதை நிறுத்த முடியல்ல. அன்னைக்கி ஏன் அத்தனை பரிபூரணம்ன்னு அவனால சொல்ல முடியல அளவாச்சியோட சத்தம் கூட கூட சிவசைலத்தையே நிறைக்குது. மொத்த சிவசைலமும் அந்த ஊர்த்துவ தாண்டவத்துலயே உறைஞ்சு போயிருக்கு. அண்ணாவி அவன் கால தூக்குணப்பவே பாட்ட நிறுத்திருறாரு. கடைசியா அந்த குண்டலத்த வலது காலால எடுத்து காதுல மாட்டப் போறப்ப முப்பிடாதி கை ரெண்டையும் கூப்பி பொம்மிய இறைஞ்சுறான். அவனோட காலு இடைவரை தூக்கி நிக்கும் போது, கண்ணு பொம்மியவே பாத்துக்கிட்டு இருக்கு. அப்ப தான் சுய நினைவு வந்தவனாட்டம் முப்பிடாதி இடைவரை தூக்கிய காலோடு கையத் தூக்கி பொம்மியை வணங்கி நின்னான்.
***
என் கைகள் அளவாச்சியில் இருந்து மீளாமல் அதனை இசைத்துக் கொண்டிருந்தன. பாட்டன் குரல் திக்கி பின் மேல் எழுந்தது. கருவறையில் அமைய பெற்றிருந்த கல் அகல் விளக்கின் ஒளியில் பொம்மி அம்மனின் முகம் ஜொலித்துக் கொண்டிருந்தது.
பாட்டன் இறுதி வாழ்த்தைப் பாடினார், “சிவம் என்றான சக்தியை வணங்குவோம். சிவசைலம் கொண்ட பெண் தெய்வத்தை வணங்குவோம். சிலையாய் வந்தமர்ந்த அந்த கன்னி தெய்வத்தை வணங்குவோம். வலவிழி ஊர்த்துவம் கொண்ட அந்த தாட்சாயணியை வணங்குவோம். சிவசைலம் பொம்மி அம்மனை பாதம் பனிந்து வணங்குவோம். அவள் புகழ் வாழ்க.” என்று கை கூப்பி மைய கருவறை நோக்கி வணங்கினார்.
***
கணியான் குழூஉ சொற்கள்:
அளவாச்சி – மகுடம்
கச்சராவு – நாயக்கர்
கைநாத்தி – பெண்
கணியான் ஆட்டம் தொடர்பான சொற்கள்:
அண்ணாவி – கணியான் ஆட்டத்தின் தலைமைப் பாடகர்.
பொதுவாக கணியான் ஆட்டம் ஐந்து அல்லது எட்டு பேர் கொண்டு ஆடப்படும். ஐந்து பேர் என்றால் ஒரு தலைமைப்பாடகர், ஒரு பக்கப்பாட்டுக்காரர், இருவர் மகுடம் இசைக்க ஒருவர் கணியான் வேஷம் கட்டுவது என்பது கணக்கு. எட்டு பேர் என்றால் இரண்டு பேர் கணியான் வேஷம் கட்டி ஆடுவதும். பக்கப்பாட்டிலும், மகுடம் வாசிப்பதிலும் ஒருவர் அதிகமாக இருப்பது கணக்கு. எப்போதுமே தலைமைப் பாடகர் ஒருவர் தான்.
திரளை – இரத்தம் கலந்த சோறு
திரளை வீசுதல் – கணியான் சாதியைச் சார்ந்தவர் சுடுகாட்டில் செய்யும் சடங்கு
சமர்ப்பணம்: பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களுக்கு
கணியன்கூத்தைப் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தை அறிந்திருக்கிறீர்கள் நவீன். அவர்களைப்பற்றிப் பேசிய முதல் சிறுகதை என்றும் சொல்லலாம். கிட்டத்தட்ட ஒரு மூன்று அடுக்கான கதை சொல்லல். கலையின் உச்சகட்ட தருணத்தில் நடக்கும் உணர்வை கடத்தியிருக்கிறீர்கள். முழுமை அடைதலும் அதவல்லாதலுமான இரு நிலைகளின் ஒரு மாயதத்தை பொம்மி முப்பிடாதி வழி கடதத்தியிருக்கிறீர்கள். உங்களுடைய மொழி நடையும் அருமையாக உள்ளது. அருமை நவீன்.
அன்புள்ள நவீன்,
ஊர்த்துவ தாண்டவம் வாசித்தேன். ஒரு மாதிரி மயக்கும் கதை. பாட்டா முப்பிடாதி, பொம்மை கதையைச் சொல்லும் பகுதி ஒரு வெட்டப்பட்ட உயிருள்ள சதைப்பிண்டம் போல துடித்துக் கொண்டேயிருக்கிறது. வர வர உங்கள் எழுத்தில் subtlety கூடிக்கொண்டே போகிறது. கணியான் கூத்து பற்றிய உங்கள் ஆய்வுகளையும், உங்கள் கதை சொல்லும் திறனையும் விட்டு விடுவோம். அவை எப்போதும் போல் கூர்மையாகவே இருக்கிறது. ஆனால் இக்கதையில் என்னைக் கவர்ந்த அம்சம், ஊர்த்துவ தாண்டவத்தை எழுத்திலும் நிகழ்த்திக் காட்டியவிதம்தான். கீழே விழுந்த கழலை காலால் மாட்டுகையில், சட்டென்று தன்னினைவுற்று, காதல் மறந்து பொம்மியை இறைஞ்சுகிறான் முப்பிடாதி. அது கதையின் உச்சம். கிட்டத்தட்ட உடுக்கடித்துக் கதை சொல்லும் பாட்டாவாகவே அதை எழுதிய நீங்களும் மாறிவிட்டீர்கள். கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒவ்வொரு கதையிலும் உங்கள் திறன் தாவலாக பெருகிக் கொண்டே செல்கிறது. வாழ்த்துக்கள். ஆனால் கதையில் ஏதோ சிலவற்றை நான் தவறவிடுகிறேனென்று எனக்குத்தெரிகிறது. எது என்றுதான் தெரியவில்லை.
. Very excellent ,நவின்
” சிவன் கீழ விழுந்த குண்டலத்த வலது காலால தூக்கி ஊர்த்துவம் ஆடி நின்னு காதுல மாட்டுறாரு.”, அருமையான சித்தரிப்பு.
Excellant நவீன்.ஒரு கூத்து பார்த்த அனுபவம். அதை மொழியில் கொண்டு வந்த நுட்பம் க்ளாஸ்.சிவன்-தாட்சாயினி,பொம்மி-முப்பிடாதி,கதை சொல்லி-பாட்டா’முப்பிடாதியின் கால்கள்-பொம்மியின் கண்கள் எத்தனை அடுக்கு கதை.சிறு தெய்வ வழிபாடு உருவான ஒரு சம்பவத்தை ஒரு பெருந்தெய்வ வழிபாட்டோடு இணைத்து சொல்லப்பட்டது இசையும் பாடலும் மாதிரி ஊடுபாவி ஒரு சித்திரத்தை கொடுத்து விட்டிர்கள்?
பரிபூர்ணம் கண்டுவிட்ட மனசு பித்தாகிவிடுகிறது, பௌர்ணமியன்று முப்பிடாதி உச்சம் அடைகிறார், மனம் பிறழ்ந்து மறைகிறார். தன் இளைய தம்பி முப்பிடாதியின் ஊர்த்துவத்துக்கு சாட்சியான பாட்டா, பாடுவதை நிறுத்தி ஊரை விட்டு வெளியேறி வாழ்கிறார். அவர் கண்டுணர்ந்த ஒரு நிகழ்வு, பொம்மி கதையாக, ஒரு தொன்மமாக மாறிவிடுகிறது. அதே பொம்மி கதையை பாட அவருக்கு அழைப்பு வருகிறது, இதை பாடுவதால் மோட்சம் அடையலாம் என்பதை அவர் மனம் உணர்கிறது.
சிவன் சக்தியின் கதை ஒரு தொன்மம், அதன் தொடர்ச்சியாக முப்பிடாதி பொம்மி என ஒரு உண்மை நிகழ்வு, பின் முப்பிடாதி பொம்மியின் கதையும் தொன்மமாதல் என கதையில் ஒரு முடிச்சு தொடர்ந்துகொண்டே இருப்பது அரிதான ஒரு பண்பு.
“சிவனோட கால்கள் கொண்டது ஊர்த்துவம்ன்னா
தாட்சாயணியோட கண்கள் கண்டது அந்த ஊர்த்துவம்”
எல்லா கலைகளும் அதை கூர்ந்து ரசிப்பவர்களால் பல படிகள் உயர்கிறது, ‘கொண்டதை, கண்டது’ நிறைவு செய்கிறது. ஒன்றுடன் ஒன்று கலந்து இட்டு நிரப்பிக் கொண்டு, அதுவாகவே மாறி உன்மத்தம் அடைகிறது.
முப்பிடாதியும், பொம்மியும் இணைந்து நிகழ்த்தும் ஊர்த்துவ தாண்டவம் நவீனின் வார்த்தைகளால் உயிர்ப்புடன் கண் முன் நின்றது. ஒரு உச்ச நிகழ்வு, அதனூடே காலம் பேசும் ஒரு காதல் என அற்புதமான வாசிப்பை அளித்த ஒரு சிறுகதை. அசாத்தியமான கதை சொல்லல், வித்தியாசமான பின்புலம் என எல்லா வகையிலும் இந்த கதை முழுமையான ஒன்றாக மாறுகிறது.
கைவரும் மொழியின் வளமையால் தங்களின் ஊர்த்துவ தாண்டவம் நேரில் பார்த்தது போல் நானும் அங்கே போய்விட்ேடன் அருமையான வார்த்தை விளையாடல்
நானும் கணியான் கூத்தை மட்டும் களமாகக் கொண்ட ஒரு கதையை முதன்முதலாக வாசிக்கிறேன். அதுவே நல்ல அனுபவம். ஒரு கலை வெளிப்பாடு கொள்ளும் போது பூரணத்தை நோக்கிச் செல்லும் விழைவுடனே இருந்து கொண்டிருக்கும். அந்நோக்கம் இருந்தாலொழிய நல்ல படைப்புகள் உருவாக வாய்ப்பில்லை. அந்த பூரணத்தை நோக்கிய வேகம் பித்து நிலைக்கும் கொண்டு செல்லக் கூடியது தான். ‘ரொம்ப ஓவரா போனா அப்புறம் பைத்தியம் பிடிக்கும். இப்படித் தான் எனக்கு தெரிந்த ஒருத்தன் நிறைய வாசிச்சிட்டே இருப்பான். அப்புறம் பைத்தியம் ஆகிட்டான்’ என்பது போன்ற உபதேசங்களை இலக்கிய வாசகர்களும் கேட்டிருப்பார்கள். அந்த பித்து நிலைக்கு பயந்து அல்லது இது போன்ற ‘உபதேசங்களுக்கு’ பயந்து தான் கணியான் கூத்து போன்ற மரபு கலைகளில் வேஷம் கட்டும் போது சிறு குறையாவது இருக்க வேண்டும் என்ற வரையறை உருவானதா? தெரியவில்லை.
ஆனால் இங்கே ஒரு பெண்(பொம்மாயி) முப்பிடாதியை பூரண நிலைக்குத் தள்ளுகிறாள். அப்பூரண இயக்கத்தின் பகுதியாகவும் மாறுகிறாள். பிறகு இரண்டு பேரும் என்ன ஆனார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. வசதி வாய்ப்பில் உயர்ந்த இடத்தில் இருக்கும் பொம்மாயியை அடைய முப்பிடாதிக்கு தடை ஏற்பட்டிருக்கலாம். அல்லது ஆட்டத்தின் உச்சத்தில் பித்தாகிப் போய் ஓடியிருக்கலாம். ஏக்கத்தில் பொம்மாயி தன்னை மாய்த்துக் கொண்டு தெய்வமாகியிருக்கலாம். ஆனால் ஆட்டம் முடிந்தவுடன் இருவரும் இல்லை. சிவ-சக்தி இயக்கம், அதன் பிரதிபலிப்பான பிரபஞ்ச இயக்கத்தை ஞாபகப்படுத்துகிறது.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நவீன்!
ஊர்த்துவ தாண்டவம் என்னும் தொன்மத்தை கிட்டத்தட்ட மருவரையறை செய்து விட்டார் நவீன்.
சிவ பார்வதி போட்டி இங்கு முப்பிடாதி பொம்மி இடையே இசைந்து ஆடுதல் என்னும் நிலையை அடைகிறது, சிவனின் ஊர்துவ நிலை கால் தலை தொட்டு வெற்றி பெறுதல் எனில், இங்கு கையுடன் இணைந்து வணங்கி நிற்கிறான் முப்பிடாதி.
இரண்டு தளங்களில் இது மிக முக்கியமான கதை, ஒன்று மிக துல்லிய காட்சி படுத்தல் வழியாக மரபை மறுவரையறை செய்தல்(இனி ஊர்த்துவனாதரை தரிசிக்கும் போது முபிடாதியின் காலும் கையும் இணைந்து வணங்கும் ஊர்த்துவா நிலையும் கண்முன் வந்து நிற்கும்). இரண்டு, தொன்ம படிமத்தை மறுக்கட்டமைப்பு செய்ய நவீனதை தேர்ந்தெடுக்காமல் நாட்டார் கலையை தேர்ந்தெடுத்த உக்தி. பின் நவீனத்துவ இலக்கிய வகைமையில் கச்சிதமாக பொருந்தும் கதை என்று நினைக்கிறேன்.
miga arumai naveen
I.T.யில் வேலைப் பார்க்குற பிள்ளைங்களுக்கு சாதாரண உரைநடையே ஒழுங்கா எழுத வரமாட்டேங்குது, இந்த இளம் வயதில் மண்ணின் மணம் கமழும் சிறுகதை ஒன்றை அதன் உக்கிரம், உணர்வுக் கொப்பளிப்பு, கூர்மையான நிலக்காட்சியை கச்சிதமாக எழுதி முடிக்க எங்கேயா கற்றுக்கிறிங்க… வாழ்த்துக்கள் தோழர்!