தமிழில் உரைநடை இலக்கியத்தின் தொடக்கம் முதலே நீதிகளை உணர்த்துவதற்காக அளவில் சிறிதாக எழுதப்படும் கதைகளான நீதிகதைகள், ஈசாப் கதைகள், பரமார்த்த குரு கதைகள் ஆகியவை இருந்து வருகின்றன. அதைப் போன்று, சமூக ஊடகத்தளங்களான முகநூல், டுவிட்டர் போன்றவற்றில் சிறிய பதிவுகளாகப் பதிவிடப்படும் அனுபவப்பதிவுகள், கதைகளும் அளவில் சிறியவையே. இந்த இரண்டுமே, தற்போது எழுதப்பட்டுவரும் குறுங்கதைகளில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவதைக் காணலாம். அதனுடன் தமிழில் அதிகமாக எழுதப்படும் சிறுகதையின் வீச்சும்கூட குறுங்கதைகளுக்குள் இருக்கின்றன.
சிறுகதைக்குள் அமையும் ஒருமையும் நிகழ்வுகளும் கொண்டிருந்தாலும் வடிவத்தாலும் சொல்முறையாலும் குறுங்கதைகள் கவிதைக்கே அணுக்கமானவையாக இருக்கின்றன. ஆனாலும், கவிதைக்குரிய அனுபவத்தை மட்டுமே குறுங்கதைகள் அளிப்பதில்லை. மனித உணர்வுகள், நிகழ்வுகள், அனுபவங்கள் ஆகியவற்றின் நுண்மையும் விரிவையுமே குறுஞ்சித்திரிப்பில் வெளிப்படுத்துகின்றன. கவிதையின் குறுஞ்சித்திரிப்பை உரைநடைக்குள் கொண்டுவர முயன்றதன் வெளிப்பாடாகவே குறுங்கதைகள் (microfiction) அமைகின்றன.
ஹெமிங்க்வேயின் மிகப்புகழ்பெற்ற ஆறே சொற்களில் அமைந்த குறுங்கதை “விற்பனைக்கு: குழந்தையின் காலணிகள், அணியவே இல்லை” (For sales: baby shoes, never worn) என்ற கதை குறிப்பிடப்படுவதுண்டு. கச்சிதமான சொற்களில் பெரும் துயரொன்றைக் கடத்தி விடுகிறது. குறுங்கதைகளைக் குறைவான சித்திரிப்புடன் கதையின் இறுதியில் தரிசனத்தை அளிப்பவையாக வரையறுக்கலாம். அந்தத் தரிசனம் என்பது அதீத உணர்ச்சிகளாக மட்டுமின்றி வேடிக்கையாக, பகடியாகவும் அல்லது கவிதை அளிக்கும் அரூபமான உணர்வாகவும் இருக்கலாம் என எண்ணுகிறேன்.
தற்போது தமிழிலும் குறுங்கதை இலக்கிய வடிவம் அதிகமாகப் படைக்கப்படுகின்றன. எஸ்.ராமகிருஷ்ணன், பெருந்தேவி, போகன், பா.ராகவன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் குறுங்கதைகளைப் படைக்கிறார்கள். ஒரு இலக்கிய வடிவத்தில் படைக்கப்படும் கலையுச்சமான படைப்புகளே அவ்விலக்கிய வடிவத்தின் ரசனை அளவுகோலைத் தீர்மானிக்கிறது. குறுங்கதைக்கான வரையறையும் சாத்தியங்களையும் சில முக்கியமான குறுங்கதைகளின் வழியாகவே தொகுத்துக் கொள்ள முடிகிறது. எழுத்தாளர் போகன் சங்கர் எழுதிய சுருள்வில் எனும் சிறுகதையில் மலைப்பகுதியொன்றில் காலனியக் காலத்து வெள்ளைக்கார முதலாளிகளால் கட்டப்பட்ட பங்களா தங்கும் விடுதியாக மாற்றப்படுகிறது. அந்த விடுதியில் வெள்ளைக்காரப் பயணி ஒருவர் அறை எடுக்கிறார். விடுதியின் நிர்வாகியும் வெள்ளைக்காரரும் மது அருந்திக் கொண்டே பேசிக் கொள்கிறார்கள். அந்தப் பங்களாவில் இருக்கும் நின்றுபோன இரண்டு ஆளுயர கடிகாரங்களை ஒட்டி உரையாடல் அமைகிறது. பங்களாவைக் கட்டிய முதலாளிகள் இரண்டு கடிகாரங்களைத் தருவிக்கின்றனர். முதலாமவரின் இறப்பின்போது ஒரு கடிகாரமும் இன்னொருவரின் இறப்பின்போது மற்ற கடிகாரமும் நின்று போகிறது. தருக்கத்துக்கு மீறிய கதையைச் சலிப்புடன் கேட்டுவிட்டு வெள்ளைக்காரர் எழுந்து சென்றுவிடுகிறார். சிறிதுநேரத்தில் முதல் கடிகாரம் ஒடத்துவங்குகிறது. அவரைத் தேடி அதிர்ச்சியுடன் நிர்வாகி செல்லும்போது இன்னொரு வெள்ளைக்காரர் அறை கேட்டு வருகிறார். மற்றொரு கடிகாரமும் வேலை செய்யத் தொடங்குகிறது. கடிகாரங்களை வாங்கிய மனிதர்கள் இறந்தவுடன் உறைந்துவிடுகிற காலம் பின்னர் அவர்களைப் போன்ற மனிதர்கள் திரும்பும் வேறொரு காலத்தில் உயிர்பெறுகிறது. இதிலிருக்கும் தருக்கத்தை மீறிய அமானுடத்தன்மைக்கு அப்பால் காலம் குறித்த கேள்விகளையும் காலம், உயிர், பொருள் ஆகியவற்றுக்கு இடையிலான உறவை ஒட்டியும் பேசுகிறது.
எழுத்தாளர் பெருந்தேவியின் சுப்புணி எனும் குறுங்கதையில் சாகக்கிடக்கும் வயதான பாட்டி மெல்லிய குரலில் எதையோ சொல்கிறார். உறவினர்களால் உப்பு, சுப்பு எனப் பலவாறாக ஊகிக்கப்பட்டுப் பிறகு சுப்புணி எனும் பெயர்தான் என முடிவுக்கு வருகிறார்கள். அந்தப் பெயருடைய ஒருவரை அல்லது பாட்டிக்குத் தெரிந்து தங்களுக்கும் தெரிந்த ஒருவரைத் தெரியாததால், அது உப்பு என முடிவுக்கு வந்து பாட்டிக்கு அளிக்கின்றனர். பாட்டியும் இறந்தபின் ஒருவன் மட்டும் அப்படி ஒருவர் உண்மையில் இருந்திருக்கலாம் என நம்புவதாகக் கதை முடிகிறது. மெல்லிய தீற்றல்களால் ஆன கோட்டுச் சித்திரத்தைப் போல வெறும் நிகழ்வுகள் மட்டுமே கொண்ட கதையில் மெளனம் ஒன்று அமைகிறது. பாட்டியின் இறப்புக்காகக் காத்திருப்போரில் அவளின் இறுதி ஆசை இன்னொருவனில் ஒட்டி வளர்கிறதென்பது கவித்துவத்துக்கு நிகரான அனுபவமாக இருக்கிறது.
இப்படி தமிழில் குறுங்கதைகள் பிரபலமாகிய தொடக்கக் கட்டத்திலேயே பல பிரபல எழுத்தாளர்களால் அதன் சாதனைகளும் நிகழ்ந்துள்ளதைக் காண முடிகிறது. எல்லா இலக்கிய வடிவங்களிலும் இது நிகழ்வதுதான். சிறுகதைகளின் தொடக்கக் காலத்திலேயே செகாவும் புதுமைப்பித்தனும் தோன்றிவிட்டனர். நாவலின் தொடக்கத்திலேயே டால்ஸ்டாயும் தஸ்தாயோவிஸ்கியும் தங்கள் பங்களிப்பை வழங்கிவிட்டனர். இந்த மூத்தப் படைப்பாளிகள் உருவாக்கிக் கொடுக்கும் அந்த கலைத்தன்மை அடிப்படையில்தான் பிற படைப்புகளை அணுகும் மனநிலை வாய்க்கிறது.
கொரானா பெருந்தொற்றுக் காலத்தில், நாள்தோறும் ஒரு கதையென எழுத்தாளர் தயாஜி முகநூலிலே குறுங்கதைகளைப் பதிவிட்டு வந்தார், அந்தக் கதைகளின் தொகுப்பாகவே அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல எனும் குறுங்கதைத் தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகளை அறிவியல் புனைவு, சமூக விமர்சனக் கதைகள், மாய யதார்த்தவாதம், யதார்த்தவாதக் கதைகள் என வகைமைப்படுத்தலாம். தயாஜியின் கதைகளில் சீரான மொழியும் இயல்பான உரையாடலும் அமைந்திருப்பது கதைக்குக் கூடுதல் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. கதைக்குள் இருக்கும் வெவ்வேறு கதைமாந்தர்களின் உரையாடல்களும் தனித்தும் பிசிறின்றியும் அமைந்திருக்கின்றன. அன்றாட வாழ்வில் காணும் மனிதர்களை நினைவுகூர வைக்கின்றன.
பேய் கதைகள் அல்லது அமானுடத்தன்மை கொண்ட கதைகளில் கதை சொல்லும் தாதி என்னும் கதை சிறப்பானதாக இருந்தது. மரணத்தை நெருங்கும் நோயாளிகளின் கண்களுக்கு மட்டும் தெரியும் தாதியொருவர் கதை சொல்லி மரணத்துக்கு அழைத்துச் செல்கிறார். மற்றவர்களுக்குப் பயத்தைத் தரும் இறப்பு, இறக்க காத்திருப்பவர்களுக்குக் கதை சொல்லலாக அமைவதான சித்தரிப்பு நன்றாக இருந்தது. வேறு சில கதைகளில் இறந்து போன நபர்கள் மீண்டும் அதே உருவில் அல்லது வேறொரு வடிவில் பழிவாங்க காத்திருப்பதுமான கதைகள் முன்னரே கேட்டும் பார்த்தும் பழகிய பேய்கதைகளாகவே நின்றுவிடுகின்றன. பேய் கதைத் தன்மையுடன் முடியும் ஊஞ்சலாட்டம் எனும் கதையில் வான் வரை செல்லும் ஊஞ்சலுக்குக் கொண்டு செல்வதாகச் சிறுவன் ஒருவன் சிறுமியை அழைத்துச் செல்கிறான். எவ்வளவு தள்ளியும் வான் வரை ஊஞ்சல் செல்லவில்லை. இருவரும் அருகருகே தனித்தனியான ஊஞ்சலில் செல்லும்போது வான் வரை ஊஞ்சலாட்டம் செல்கிறது. இறங்கும்போது ஒன்று காலியானதாகவும் மற்றொன்றில் சிறுமி மட்டுமே இறங்கி திரும்புவதாகவும் கதை முடிகிறது. இக்கதை மெல்லிய அமானுடத்தன்மையுடன் இருந்தாலும், பால்யத்தின் ஏக்கம், பரவசம் ஆகியவற்றை அளிக்கிறது.
அறிவியல் புனைவுவகை கதைகளில் காகித மனிதர்கள் என்னும் கதையில் அறிவியலாலளர்கள் மனிதர்களைக் காகிதங்களைப் போல பிரதியெடுத்து உலவவிடுகின்றனர். மழை வரும் நாளில் மனிதர்களை எங்கும் செல்லக்கூடாது எனத் தடை விதித்துப் பரபரப்பாக இயங்கும் சூழலில் அறிவியலாளர் ஒருவரே நீர்துளி பட்டு தானும் பிரதியென்றுணர்ந்த தருணத்தில் கரைந்து கொண்டிருக்கிறார். அறிவியலின் சுதந்திரமும் கற்பனையும் கலந்து சிறப்பாக உருவாகியிருக்கிறது. மனிதர்களும் முடிவற்ற பிரதிகளாக இருக்கலாம் என்ற தளத்தையும் தொடுகிறது. மரபான கதைசொல்லல் முறையிலிருந்து விடுபட்டு வாசகனுடனான் கேள்விபதிலாக இருக்கும் நான் அவனில்லைத்தான் என்கிற கதையும் நல்ல பகடிக்கதையாக இருந்தது. அன்றாட வாழ்வில் தொடர்ந்துவரும் சில அபத்தச் செயல்களைச் சுட்டி அதற்கான ஆம்/இல்லை பதில்களைக் கேட்டுப் பின் வேறொருவரைக் கைகாட்டி மறைகிறது கதைக்குள் இருக்கும் கதைசொல்லியின் குரல்.
இந்தத் தொகுப்பில் இருக்கும் சில கதைகள் எளிய திடுக்கிடலுடன் முடிந்துவிடுகின்றன. ஒரு புள்ளியை மையப்படுத்திக் காட்டும் காமிரா லேன்ஸ் பார்வையுடன் தொடங்கும் கதை முடிவில் அதன் அருகில் இருக்கும் சிறுபுள்ளியைப் பெரிதுபடுத்திக் காட்டுகிறது. இவ்வாறாக, இரு மையத்துடனான ஊடாட்டமாகச் சில கதைகள் அமைகின்றன. அப்படியான கதைகளில் தீமை, நம்பிக்கைத் துரோகம், மனிதக் குரூரத்தின் முகமொன்று மின்னி மறைகிறது. துரோகமிழைக்கும் கணவன்/மனைவி, நண்பர்கள், ஏமாற்றும் நபர்கள் என மனித உறவுகளுக்குள் இருக்கும் குரூரம் மேலெழுந்து வரும் தருணத்தை மட்டும் காட்டி விட்டுச் செல்கின்றன. அந்த அதிர்ச்சித் தருணத்தின் காரணங்களையோ அல்லது அதன் பின்னான ஆதார உணர்ச்சிகளின் நியாயத்தையோ கதைகள் தவறவிடுகின்றன.
நண்பனின் உதவி என்னும் கதையில் மனைவியைச் சந்தேகிக்கும் கணவனுக்கு நண்பனொருவன் காமிரா பொருத்திக் கண்காணிக்க உதவி செய்கிறான். கதையின் முடிவில் உதவி செய்த நண்பனே கள்ளக்காதலனாக இருப்பதாகக் கதை முடிகிறது. அவ்வாறே மனைவியைத் திட்டமிட்டு ஏமாற்றும் கணவனின் கதையாக மது மாது சூது எனும் கதை அமைந்திருந்தது. கதையின் முடிவில் ஏற்படும் அதிர்ச்சித் தருணத்துடன் கதையும் முடிந்துபோகிறது. இதே வகையான அதிர்ச்சித் தருணத்துடன் முடியும் சில மாயயதார்த்த வகைக் கதைகளில் நல்ல கதைகளும் இருக்கின்றன. கிறுக்கனின் கடிகாரம் எனும் கதையும் சிறந்த மாயயதார்த்த கதையாக அமைந்திருந்தது. 1000 ஆண்டுகளுக்குப் பிந்தைய காலத்தில் வாழ்வதாகக் கற்பனையில் இருக்கும் மனநிலை பிறழ்ந்தவரின் கடிகாரத்தைப் பிடுங்கியவுடன் நிகழ்காலம் மறைந்து வேறொரு காலப் பரிணாமம் ஏற்படுகிறது. வேறொரு கதை முடிவு தரும் அதிர்ச்சி தருணம் நீண்டு காலச்சுழலுக்குள் சிக்கியிருக்கும் மனிதனொருவனைச் சமூகம், மனநிலை பிற்ழந்தவனாகச் சொல்கிறதா எனும் கேள்வியையும் மாயயதார்த்த உலகொன்றின் சித்திரிப்பையும் ஒருங்கே தருகிறது.
கறுப்புப் பூனை எனும் கதையில் மனிதர்களுக்குப் பூனை அபசகுனம் எனும் பொதுப் பார்வையை மையப்படுத்தி முடிவில் பூனைக்கு மனிதர்களின் மீதான பயத்தினாலோ விலக்கத்தினாலோ பூனை விலகிச்செல்வதாகக் கதை முடிகிறது. இவ்வாறாக, இரண்டு புள்ளிகளின் முரண்களை மையப்படுத்தியும் ஒன்றை முன்னிலைப்படுத்தியும் சொல்வதாகவும் சில கதைகள் அமைகின்றன. பி.எம்.டபுள்யூ விவா என்ற கதையில் விலை குறைந்த காரொன்றுக்கான மாதாந்திரத் தவணை செலுத்த முடியாமல் கூனிக் குறுகிக் கொண்டிருக்கின்றவன் விலை உயர்ந்த காருக்கான தவணைப் பணத்தைக் கட்ட முடியாமல் தற்கொலை புரிந்து கொண்டவனைக் காண்கிறான். இவ்வாறான கதை சித்திரிப்பில் பலவீனமான அல்லது மனச்சிக்கல் கொண்ட கதைமாந்தரை முன்னிலைப்படுத்தப்படுகிறது.
சமூக விமர்சனத்தை முன்வைக்கும் இன்னும் சில கதைகளில், சமூகத்தில் முன்னரே பதிவாகியிருக்கும் நெறிகளின் வார்ப்பாக அமைந்திருந்தது. பெற்றோர்களைக் கைவிடும் பிள்ளைகள், பிள்ளைகளின் குரலைக் கேளாத பெற்றோர்கள், சமூகத்தில் இலக்கியத்தின்/தமிழின் இடம் எனக் கதைகள் முன்னரே சமூகத்தில் பதிவாகியிருந்த நெறிகளின் கதை வடிவாக அமைகின்றன. நித்யாவின் ஓவியமென்னும் கதையில் சிறுமி தாத்தா பாட்டிக்கான தனித்த வீடொன்றின் ஓவியத்தில் வரைகிறாள். அதைப் பெற்றோரிடம் காட்டுகிறாள். மற்றொரு கதையில் சிறுமியொருத்தி அம்மாவுக்கு மீசை வரைகிறாள். இன்னொரு கதையில் தாயும் வீட்டில்தான் இருக்கிறாள் என்பதைக் கொரானா முடக்கக்காலத்தில் மகன் உணர்கிறான். இம்மாதிரியான கதைகள், வாசகனுக்கான பங்கேற்பை குறைத்து, கருத்தொன்றை நிறுவிச் செல்வதாகவே அமைகிறது. இந்த வகை சமூக விமரிசனக் கதைகளில் தேர்வு எனும் கதை சமூக விமர்சனத்தையும் அறிவியல் புனைவையும் உள்ளடக்கிய நல்ல கதையாக இருக்கிறது. புத்திக்கூர்மையும் இயற்கை நேசமும் மட்டுமே முக்கியமான மனிதத் தகுதிகள் எனக் கருதப்படும் கனவுச்சமூகத்தில் தேர்வு வைக்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெறுகிறவனைக் கொன்று மூளையை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கற்பதாகவும் அதனையொட்டிய தேர்வு ஒன்றுக்குத் தயாராகுவதாகவும் முடிகிறது. சமூகத்தில் பெரும் இலக்குகளும் கனவுகளும் சொல்லப்பட்டுத் தேர்வுக்காகத் தயார் செய்யப்படும்போதே கொலை தொடங்கிவிடுகிறது. தேர்வின் முடிவுகளை ஒட்டிய தேர்வும் ஆராய்ச்சியும் என அடுத்தடுத்து மனித இயல்பு தொடர்ந்து கொல்லப்படுகிறது. சமூகத்தின் மீதான விமர்சனத்தை மிகச்சிறப்பாக முன்வைக்கிறது.
குறுங்கதைகள் கவிதைக்கே உரிய கச்சிதத்தன்மையுடன் ஒவ்வொரு சித்திரிப்பையும் தொட்டெடுத்து விரியும் வாசிப்பனுபவத்தை அளிக்கவேண்டும். இந்தத் தொகுப்பில் அமையப்பெற்றிருக்கிற சில கதைகளில் அளிக்கப்படும் விவரங்கள், வாசகனின் வாசிப்பை மட்டுப்படுத்துவதாக அமைகிறது. தொடக்கம் முதல் முடிவு வரை சித்திரிப்பும் நிகழ்வும் சரியாக நகர்கின்ற கதையின் இறுதியில் அளிக்கப்படும் கூடுதல் விவரங்களால் கதை சுருங்கிவிடுகிறது. அனாதை எனும் கதையில் இறந்த தாய், மகளை இறப்புக்குப் பின்னும் காப்பதாக வரும் சித்திரிப்பில் இனி எப்பொழுதும் ரேணுகா அனாதை இல்லை எனத் தெரிந்து கொண்டாள் என வரும் சித்திரிப்பு தலைப்புக்கும் மையத்துக்குமான தொடர்பை மிக வெளிப்படையாகவே அறிவிக்கிறது. இவ்வாறான இறுதி வரிகளின் அறிவித்தலால் சில கதைகளின் வாசிப்பனுபவமே தடைபடுகிறது.
வாசகன் கதையின் மையத்தைச் சென்றடைவதற்கான விவரங்கள் நிச்சயமாகக் கதையில் அளிக்கப்படவேண்டும் என்றாலும் அதனை எளிமைப்படுத்தும்போது வாசிப்பில் தனக்கான பங்கேற்பை வாசகன் பெற்றுக்கொள்ள முடியாதவனாகிறான். அப்படியும் எல்லா விவரங்களும் அளிக்கப்பட்ட கதைகளில் தங்கக்காலணி எனும் கதை சிறப்பானதாக இருந்தது. கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வம் கொண்டிருப்பவன் கணிதப்பாடத்தில் குறைவான புள்ளிகள் எடுத்து ஆசிரியரிடம் அடி வாங்குகிறான். நாட்டில் முதல்முறையாகச் சிறந்த கால்பந்து விளையாட்டாளருக்குத் தங்கக்காலணி விருது வழங்கும் நிகழ்வு பெரும்பரவசம் தருகிறது. அவை எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது எனக் கணித ஆசிரியர் எண்ணுகிறார். நெடுநாட்களுக்குப் பின், பொருளியல் தேவைக்காகத் தங்கக்காலணி வாங்கிய வீரர் அதனை விற்கிறார் எனும் செய்தியைக் கேட்டு கோபமும் வேதனையும் ஒருசேர அடைகிறான். இந்தக் கதையில் எல்லா விவரங்களும் அளிக்கப்பட்டிருந்தாலும், பால்யத்தின் பரவசம் சிதைக்கப்படும்போது ஏற்படும் உணர்வு மிகச்சரியாக அமைகிறது.
தயாஜியின் கதைகளில் நேரில் காணும் மனிதர்களின் போலியற்ற மொழியும் செயல்களும் அவ்வாறே பதிவாகியிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் நாம் கண்ட நேரடி அனுபவம் ஒன்றைத் தொட்டெடுக்க செய்கின்றன. மனித விழுமியங்களைக் கண்டெடுக்கின்றன. பல கதைகள் வடிவ நேர்த்தியுடன் கலைக்கான சாத்தியத்தைத் தொட முயலுகின்றன.
குறுங்கதைகள் எழுத அபார கற்பனையோடு கூடிய கூரிய மாற்றுப் பார்வையும் வேண்டும் என்பதை பல சிறந்த குறுங்கதைகள் உறுதிபடுத்துகின்றன. சரளமான மொழியும் மற்றும் மாற்றுச் சிந்தனைகளின் வழி சமூக சிக்கல்களை அனுகும் எழுத்தாளர் தயாஜி மேலும் பல சிறந்த குறுங்கதைகளை தருவார் என்று நம்பலாம்.