சிறுவர், சிறுமியர்களின் மனம் தணிக்கைகள், தடைகள் என எதுவுமின்றி புறச்சூழலை முற்றிலுமாக உள்ளிழுக்கும் திறன் கொண்டது என்கிறார் மரியா மாண்டிசோர்ரி. விளையாட்டு, கற்பனை மற்றும் அடுக்கடுக்கான கேள்விகள் என்பவைகள்தான் இந்த இளம்பருவத்தின் முக்கியமான மூன்று வெளிப்பாடுகள். பெற்றோரும், ஆசிரியரும் சிறுவர், சிறுமிகளின் இந்த வெளிப்பாடுகளை கவனமாக கண்காணித்து அந்த குட்டி முதலாளிகளுக்கு சேவை செய்யும் தொழிலாளிகளாக தங்களை உணர வேண்டுகிறார். ‘உள்ளிழுக்கும் மனது’ ‘The Absorbent mind’ என்கிற நூலில் மரியா.
மதுரையில் என் ஆரம்ப, இடைநிலை வகுப்புகளை ஒடுக்குமுறை மேலாண்மை விதிகள் கொண்ட ஒரு பள்ளியில் படித்தேன். சனிக்கிழமை காலைகளில், மேஜை, நாற்காலி, கழிவறைகள் உட்பட மொத்த பள்ளி வளாகத்தையும் மாணவ மாணவிகளே கட்டாயமாக தூய்மைப்படுத்த வேண்டும். எட்டாம் வகுப்பிற்கு மேல் மாணவ, மாணவிகளுக்கிடையே உரையாடத் தடை. மெய்நிகராக கோடிட்ட வரிசைப்படியே பள்ளிக்குள் வந்து செல்ல வேண்டும், பிறழ்தால் அடுக்கடுக்கான தண்டனை மற்றும் பல கறாரான விதிகளுக்குப் பேர்போன பள்ளி அது.
அந்தச் சகதியான சூழல் கூட சில நல்ல ஆசிரியர்களை தந்திருக்கிறது. முக்கியமாக ஒவ்வொரு அசைவிலும், வெளிப்பாட்டிலும் கரிசன அணுகுமுறை கொண்ட ரீட்டா மிஸ். அவர் தந்த நல்ல நினைவுகளை சூழல் கசப்பு மறக்கடிக்கவில்லை. ரீட்டா மிஸ் வகுப்பறையின் முதல், கடைசி என பாரபட்சமில்லாமல் அனைத்து வரிசை மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களின் பெயர்களையும் குறிப்பெடுத்து நினைவு கொள்வார். ஆசிரியர்-பெற்றோர் அமர்வுகளுக்கு வெளியே, பெற்றோர்களை வரவழைத்து, அடிக்கடி தொடர்பு கொண்டு மாணவர்கள் மீதான தன் பாராட்டுகளையும், இடித்துரைப்புகளையும் வைப்பார்.
பள்ளிகளுக்கு இடையே நிகழும் கட்டுரைப் போட்டி, பேச்சு போட்டி, விளையாட்டு வினாடி வினா போட்டிகள் தொடர்பான தகவல்களை தேடி, அதில் நானும் என் நண்பர்களும் பங்குபெற உதவுவார். பயிற்சிக்காக, தன் வீட்டிற்குள் வந்து தங்க மாணவர்களை வரவழைப்பார். மற்ற ஆசிரியர்கள் போல சொந்த வீட்டு வேலைகளை மாணவ, மாணவிகளின் தலையில் கட்ட மாட்டார். அணு அணுவாக தகவல்களை சேகரித்து கட்டுரை எழுத, பேச உதவுவார். வாக்கியங்களின் நீளத்தினை கச்சிதப்படுத்தி, அழுத்தமாக பேச வேண்டிய இடத்தினை சுட்டிக்காட்டி பொறுமையாக சொல்லி கொடுத்து பலர் பரிசுகளை பெறக் காரணமானவர் மிஸ் ரீட்டா.
எட்டு வருட ஆரம்ப, இடைநிலைப் பள்ளி வாழ்க்கையில் இது போன்ற வெகுசில நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன. மற்றபடி காலி கண்ணாடி ரம் பாட்டிலில் குடிநீர் நிரப்ப வெளியே அனுப்பும் ஒரு ஆசிரியை, தன் மெலிந்த உடல் தண்டிக்கும் திறனை இழந்ததால் பொருட்களை வைத்து புதிது புதிதாக வலிதரும் தண்டனைகளை கண்டுபிடித்துக் கொடுக்கும் ஒரு குரூரமான ஆசிரியை. எட்டாம் வகுப்பு மாணவியை பள்ளி வளாகத்தில், சக மாணவர்கள் கண்முன்னால் பாலியல் சீண்டல் செய்து, தண்டனை இல்லாமல் தப்பிய ஒரு ஆசிரியர். கஞ்சா குடிக்கி, பொங்கல், செந்தட்டை, மண்டையன், கொசு, கரட்டாண்டி, குஞ்சி தேச்சி என வகைவகையான பட்டபெயர்கள் வைத்து மாணவர்களால் பகடி செய்யப்பட்ட அடக்குமுறை வாத்தியார்கள் மட்டுமே நினைவில் வருகிறார்கள். மாணவ, மாணவிகளை சுய தேவைகளுக்காக வதைக்காமல், கற்றலை இனிமையான அனுபவமாக்கிய எந்த ஒரு ஆசிரியரும் பட்டப் பெயர் பெறவில்லை.
தமிழ்நாட்டின் பள்ளி கல்விச் சூழலில் மாணவர்-ஆசிரியர் உறவு என்பது ஊழின் மீது பழிபோடச் செய்யும் அளவிற்கு எதேச்சையானது. சில நல்ல ஆசிரியர்களுடனான உறவு தற்செயலாக அமைய நேர்ந்தாலும், பெரும்பாலும் திரும்பவும் மீட்டிப்பார்க்க தகுதியற்ற நினைவுகளே இரு சாராரும் கொண்டிருப்பார்கள். ஒரு புறம் போட்டித்தேர்வுகளில் மதிப்பெண் பெறும் நோக்கம் மட்டுமே கொண்ட மாணவர்களும், மறுபுறம் பள்ளியின் தர மேம்பாட்டின் கவனத்தினை மட்டுமே கொண்டு, கற்பித்தலில் தன்னை வலிந்து ஈடுபடுத்தும் ஆசிரியர்களும், ஒத்திசையாத ஒரு உறவுதான். இருவரில் நீண்ட கால நோக்கில் சரிசெய்ய முடியாத நேரடி பாதிப்படைவது மாணவ, மாணவியர்கள்தான்.
தமிழக கல்விச்சூழலை நான் இவ்வாறு புரிந்துகொண்டிருக்கும்போது உலகில் வெவ்வேறு நாடுகளிலும் இதே போன்ற நிலை உள்ளதை ம.நவீனின் ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ என்ற கட்டுரைத் தொகுப்பு எனக்கு உணர்த்தியது.
இந்நூலில் மலேசியா ஆரம்பநிலைக் கல்வி சூழலின் ஒரு சித்திரத்தினை தருகிறார். தோட்டப்புறம் என்கிற வார்த்தையை கிராமப்புற என வாசித்தால் இவர் தரும் சித்திரம், தமிழ்நாட்டு கல்விச் சூழலுடனும் பெரிதும் பொருந்துகிறது. தமிழ்நாட்டு சூழலுக்கு மாறுதலாக யூ.பி.எஸ்.ஆர் எனப்படும் பொதுத்தேர்வினை ஆறாம் வகுப்பிலேயே மலேசியாவின் சிறுவர், சிறுமியர்கள் வதைபட்டு எழுதுகிறார்கள்.
வகுப்பறையை இரண்டாகப் பிரித்து அதிக கவனமெடுத்து செயல்பட வேண்டிய மாணவர்களை ‘மெதுநிலை’ மாணவர்கள் என தனிவகுப்பாக கற்பிக்கிறார்கள். என் அனுபவத்தில் பள்ளி வகுப்புகளில் இத்தகைய பிரிவினையை கண்டதில்லை. பாலிடெக்னி்க் மூலமாகவும், கிராமப்புறத்திலிருந்தும், இட ஒதுக்கீடு வழியாகவும் தமிழ்நாட்டின் அரசு பொறியியல் கல்லூரிகளில் நுழையும் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய பிரிவினையைக் கண்டிருக்கிறேன்.
ஒரு நோக்கில், இந்த 24 கட்டுரைகளை நான்கு பகுப்பாகப் பிரிக்கலாம். பொது விதிகள் வெளியே நிறுத்தியதால், தனிக்கவனம் செலுத்த வேண்டிய சிறுவர், சிறுமியர்கள், ஆக்கத்திறனும், படைப்புமனமும் கொண்ட ஆனால் வெளிப்படுத்தாமல் இருளுக்குள் இருந்தபடி கடப்பவர்கள், நூலாசிரியரின் பயண மற்றும் சொந்த அனுபவங்களில் பெற்ற படிப்பினைகள், சக ஆசிரியர்கள் மீதும் பள்ளி கல்வித் திட்டம் சார்ந்த விமர்சனங்கள் என அவற்றை வகைப்படுத்துகிறேன்.
மனம்சார்ந்து தனிக்கவனம் தேவைப்படுவர்கள், வறுமை, நோய்மை கொண்ட தோட்டப்புறச் சூழலில் இருந்து வரும் மாணவர்கள், விளையாட்டுத்திறன், படைப்பாற்றல்களை வெளிப்படுத்த சுதந்திரமில்லாதவர்கள், பாலியல் சிக்கல்கள், துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை மையமாக வைத்து கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. இத்தகைய சிக்கல்களைக் களைந்து முன்னகர தேவைப்படும் சிறிதளவேயான உதவி வெளிச்சத்தினை கோடிட்டு காட்டுகிறார் ஆசிரியர்.
தோட்டப்புற மாணவர்கள் ஒரே உடையினை வாரம் முழுவதும் அணியும் நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். சுகாதார விருப்பு என்கிற மனத்தடையினைத் தாண்டி, ஆசிரியரின் ஒரு சிறு தொடுகை, மற்றும் ஒரு சிறு பரிசு அந்த மாணவர்களுக்கு எந்த அளவுக்கு அங்கீகாரமாக இருக்கிறது என ஒரு கட்டுரை விவரிக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிகளில் விளையாட நெருக்கடி இருப்பதால், பள்ளியில் பந்தினை உதைத்து விளையாடி மீண்டும் மீண்டும் அடிவாங்குகிறான் ஒரு சிறுவன்.
மகேந்திரன் என்னும் மாணவனை, அவன் கைகளில் குவியக் கட்டியிருக்கும் கயிறுகளைக் கொண்டு கவனத்தை செலுத்துகிறார் ஆசிரியர். எய்ட்ஸ் நோயாளிகளாக பின்னர் அறியப்படும் அந்த பெற்றோர்கள், ஆரம்பத்தில் நோயை எதிர்த்து போராட திராணியில்லாமல் பூஜை, சாமி என வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்வு எனும் துர்கனவு தரும் நடுக்கமே அந்த போலி சாமியார்களின் ஆதிக்கத்திற்கான இலக்கு. தேர்வு பயத்தினை மூலதனமாகக் கொண்டு, காசு பெற்றுக்கொண்டு ஞானம் வழங்கிய போலி ஆன்மீக குருக்களின் ஆதிக்கத்தினை சுட்டிக்காட்டுகிறார் மற்றொரு கட்டுரையில்.
ஐரோப்பா பயணத்தில், அங்குள்ள கல்வித்திட்டத்திலிருந்து என்ன படிப்பினை பெறலாம் என ஆராய்கிறார். உதாரணமாக லண்டனின் தேம்ஸ் நதியினை தூய்மைப்படுத்தும் வழிகளை கற்பனை செய்து எழுத ஒரு போட்டி நடத்தப்படுகிறது. ஐரோப்பாவில் மாணவ, மாணவியர்கள் பெரும் கொண்டாட்டத்துடன் பள்ளி செல்வதற்கான காரணங்களாக ஆக்கத்திறன் மேம்பாடு, சுதந்திர சிந்தனை ஊக்குவிக்கும் பாடத்திட்டம்தான் என்கிறார் ஆசிரியர். இயக்கவூட்டு சித்திரங்கள் வரையப்பட்ட வகுப்பறைகள், எந்த அளவிற்கு கற்றலுக்கு இணக்கமான சூழலாக இருக்கிறது என விவரிக்கிறார்.
மலேசியாவில், கட்டொழுங்கு ஆசிரியர்களை தடிமனான மீசை, புருவங்கள், முரட்டுக் கரங்கள் என தமிழ் சினிமாவின் எமலோக ஊழியர்போல காட்சியளிக்கும் ஆசிரியர்கள் என பகடி செய்கிறார். குழு மனப்பான்மையுடன் செயல்படும், கொடுக்கப்பட்ட கடமை என இயந்திர கதியில், பாடத்திட்டத்தை நடத்தும் ஆசிரியர்களை சாடுகிறார். ஆசிரியராக தனது, பார்வை வாயிலாக பள்ளி பாட செயல்திட்டம், மதிப்பீட்டு விதிகள், ஆசிரியர்களின் அணுகுமுறை மீதும் மாற்றத்தைக் கோருகிறார்.
உறைந்துபோன பொதுவிதிகள் ஏற்கனவே போடப்பட்டிருக்கும் பாதைக்குள் சஞ்சரிக்க மட்டுமே அனுமதிக்கும். புதிய பாதையின் விளைவுகளை சந்தேகத்துடன் அணுகும். புத்தாக்க சிந்தனைகள் எப்போதும் நிறுவப்பட்டிருக்கும் விதிகளுடன் எதிர்த்து போரிட்டு தன்னுடைய பாதையை அமைத்துக்கொள்ளும் என்பதை நவீனுடைய பல அனுபவங்களின் வழி உணர முடிகிறது.
திறந்த மனதுடன், துடிப்பான ஆற்றலுடன் அடுத்தது என்ன என்ன என அறிய ஆர்வம் ததும்பும் பருவத்தில்தான் எல்லா சிறுவ, சிறுமியர்கள் பள்ளிச் சூழலில் நுழைகிறார்கள். தங்கள் திறனை தாங்களே கண்டடைய முடியாத வாய்ப்பும், அதனை அடுக்கடுக்காக வெளிப்படுத்த முடியாத சூழலும் இவர்களை முட்டுசந்திற்கு இட்டுச் செல்கிறது. முட்டிநிற்பவர்களில் ஒரு சாரார் தங்களைத் தாங்களே பூட்டிக் கொண்டு தேக்கமடைகிறார்கள். மற்றொரு சாரார் விதிகளை உடைக்க கலகவேடம் போட்டபடி விலகி நிற்கிறார்கள். பொதுச்சூழல் விதிவிலகிய இருவர்களையும் இரக்கமின்றி உதிர்த்து விட்டு முன் செல்கிறது.
சிறுவர், சிறுமியர்களின் ஆழ்மனம் என்பது முன்னோக்கிய வளர்ச்சி மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு குட்டி இயற்கை. அந்த மனதிற்கு பொருத்தமான புறச்சூழல் அமைந்தால் அதன் செழிக்கும் திறன் எல்லையற்றது. இவர்களின் புத்தாக்கத் திறன் மேம்பாட்டினை அலட்சியப்படுத்திய எந்த சமூகமும் தேக்கமடையும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் முக்கியமாக கல்விக் கொள்கைகளை வகுக்கும் கல்வியாளர்களும் சிறுவர், சிறுமிகளின் மனதின் சில பரிணாமங்களை அறிந்துகொள்ள வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்.
வெளியீடு : புலம் பதிப்பகம்
https://www.commonfolks.in/bookreviews/vagupparaiyin-kadaisi-naarkaali