சாயம்

“இவ்வளவு கடை ஏறி இறங்கியாச்சு, இதுகள் ஒண்டிலையும் இல்லாததையோ இனிப் போற கடையில பாக்கப் போறம்…?” 

உமாராணி அலுத்துப் போய்ச் சொன்னாள்.

“அது அப்பிடித்தான். வாழ்க்கையில ஒரே ஒருக்கா எனக்கு நடக்கப்போற கொன்வேகேஷனுக்கு என்ரை அம்மாவுக்கு நான் அப்பிடித்தான் உடுப்பு எடுத்துத் தருவன்”  

“அப்ப, இதோட உம்மட படிப்பு முடிஞ்சுதாமோ…? வேறை படிப்பும் கொன்வேகேஷனும் இல்லையாமோ…?”

“அதெல்லாம் வரேக்க இதை விட ‘கிராண்டா’ பாப்பம்”

அடுக்கடுக்கான கட்டடங்களோடு மாநகரம் கொஞ்சம் திமிராக நின்றிருந்தது. அந்தத் திமிருக்கு ஈடு கொடுத்தபடி லக்ஷிதாவும் நடந்து கொண்டாற் போலிருந்தது. 

அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு லக்ஷிதா பாதசாரிக் கடவையால் வீதியைக் கடக்க முற்படுகையில் அடுத்தடுத்து அவர்களை அண்மித்து நின்ற கார்களைப் பார்க்க உமாராணிக்கு மலைப்பாக இருந்தது.

“வாகனமெல்லாம் வருகுது. இப்பிடிக் கடக்கிறாய். கொஞ்சம் நிண்டு போகலாம் தானை”

“கொழும்பிலை இப்பிடி வாகனங்களுக்கு வழி விட்டுக் கடக்கிறதெண்டால் நாள் முழுக்க நிக்கலாம் அம்மா”

உமாராணி பிறந்ததிலிருந்து இது வரைக்கும் கொழும்புக்கு வந்ததில்லை.

“என்ரை செல்ல அம்மாவுக்கு நான் கொழும்பு முழுக்க சுத்திக் காட்டுவன்”

லக்ஷிதா அவளைக் கூட்டி வரும்போது அக்கம்பக்கத்திலிருந்த அம்மம்மா, மற்றும் தூரத்து உறவுகளுக்கெல்லாம் பீற்றிக் கொண்டு தான் வெளிக்கிட்டாள்.

அவள் உயர்தரப் பரீட்சை எழுதிப் பல்கலைக்கழகத்திற்கு வந்து நாலு வருஷம் முடிந்து விட்டது.

மல்லாவியில் சுற்றியிருந்த ஐந்தாறு குடும்பங்களோடு மட்டுமான உறவைப் பேணிக் கொண்டிருந்தவள் மொழி தெரியாத இடமாயிருந்த சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் படித்து மொழிகளைக் கரைத்துக்   குடித்திருந்தாள். இப்போது அவள், எங்கும் எப்படியும் யார் துணையுமின்றிப் போய் வரக் கூடியவளாய் மாறி விட்டது உமாராணிக்குப் பிரமிப்பை ஊட்டியது.

லக்ஷிதா சுருள்சுருளாய் இருந்த தனது தலைமுடியை ‘ஸ்ட்ரெயிட்’ பண்ணியிருந்தாள். அது ஒன்றுதான் உமாராணிக்குக் கொஞ்சம் மனக் கஷ்டத்தைத் தந்து கொண்டிருந்தது. அவளுடைய சின்னக் காலத்தில் சுருள் முடியோடிருப்பவர்களைக்  கண்டால் அவளுக்குக் கொள்ளை ஆசை. தலைமுடிக்குள்  விரல் விட்டுக் கோதச் சொல்லும் அளவுக்கு அவளுக்குள் வாஞ்சை புகுந்து கொள்ளும். இவளுக்குக் கம்பி, கம்பியாய் நீளக் கூந்தல். இவளுடைய கூந்தலைப் பார்த்து சாந்தியும், சாந்தியுடையதைப் பார்த்து இவளும் ஆளுக்காள் பொறாமை கொள்வார்கள். சுருள் முடியாயிருப்பதாலோ என்னவோ, சாந்திக்குத் தோள் மூட்டைத் தாண்டி முடி கீழிறங்காது. இவளது முடி பரபரவென்று முழங்காலைத் தொட்டு விடும் வீச்சில் கீழிறங்கும்.

“தலைக்கு என்ன எண்ணெய் வைக்கிறனீர் “? சாந்தி ஒருவித குறுகுறுப்போடு கேட்பாள்.

“என்ன எண்ணெய், வெறுந் தேங்காய் எண்ணெய் தான்….” இவள் சலிப்புற்றுச் சொல்லுவாள். சாந்தி அதை நம்ப மாட்டாள்.

ஒவ்வொரு மாதமும் அயல் வீடுகளில் கறிவேப்பிலை, செவ்வரத்தம்பூ, மருதோன்றி இலை என அவள் சேகரித்துத் திரிகையில் இவளுக்குத் தெரிந்து விடும், தனது கூந்தலுக்கான விசேட தயாரிப்பில் சாந்தி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் என்று. தலைமுடி குறித்து அப்படி ஒரு அக்கறை அவளுக்கு.

வகுப்பில் இருக்கின்ற ஒவ்வொரு பிள்ளைகளினதும் முடியில் என்னென்ன விசேஷமோ, அது அதற்கு அவர்கள் எதை உபயோகிக்கிறார்கள் எனக் கேட்டு அறிந்துவிடுவாள். ஏதும் புதிதாக இருந்தால் பிறகு அவளது தயாரிப்புக்குள் அந்தப் பதார்த்தமும் இரகசியமாய்ச் சேர்ந்து கொள்ளும். அப்படி ஒரு அங்கலாய்ப்பு அவளுக்குத் தலை முடியின் வசீகரம் குறித்து இருந்தது.

ஆனால், அந்த விசேட தயாரிப்புக்கான தேவையே இனி இல்லை என்று சாந்தி தீர்மானித்துக் கொண்ட வேளையிலே இவளும் அந்த முடிவிற்கு உடன்பட்டிருந்தாள். அதாவது,இருவருமே பேதமின்றித் தமது முடிகளைக் கத்தரித்துக் கொள்ளச் சம்மதித்திருந்தார்கள்.

“இது நல்லாயிருக்குதம்மா உங்களுக்கு” லக்ஷிதா வழுவழுப்பான மரூன் நிறச்சேலை ஒன்றைக் கையில் எடுத்திருந்தாள்.

“நெளுநெளு வெண்டு வழுக்கிக் கொண்டு போகும், இதெல்லாம் என்னத்துக்கு…?”

“உங்களுக்கு ட்ரெண்ட் தெரியுதில்லை அம்மா, என்ரை பிரெண்ட்ஸுக்கு முன்னாலை நீங்கள் பட்டிக்காடு மாதிரி நிக்கக் கூடாது.”

அவள் லக்ஷிதாவைப் பார்த்தாள். குறுகுறுவென்று இப்போதுதான் அவள் முகத்தில் மலர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிகின்றன. இவளது இதே வயதில் இவளும் எப்படி எழுச்சி கொண்டிருந்தாள். இந்த வயதின் மலர்ச்சியை, விகசிப்பைக் குழப்பக்கூடாது போல் தோன்றியது.

ஒருநாள்தானே, அவளுடைய ஆசைக்கு உடுத்திக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டே “உனக்குப் பிடிச்சா சரியம்மா…” என்றாள். அதற்குப் பொருத்தமான பிளவுஸ் துணியையும் எடுத்துக் கொண்டார்கள். பணம் செலுத்தும் இடத்தில் லக்ஷிதா வங்கி அட்டையைக் கொடுக்க மிஷினில் அதைச் செருகி இழுப்பதை உமாராணி ஒரு வித ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

பல்கலைக்கழகப் படிப்பு லக்ஷிதாவை எவ்வளவிற்கு மாற்றிவிட்டது. அதையொட்டி பெருமைப்படுவதா, அல்லது மெல்ல மெல்லக் கிராம இயல்புகளிலிருந்து அவள் மாறிப்போவது குறித்து வருத்தப்படுவதா…?

உமாராணியின் சிந்தனையின் குறுக்கே லக்ஷிதாவின் குரல்.

“இனிதான் அம்மாவை முக்கியமான ஒரு இடத்துக்கு கூட்டிக் கொண்டு போகப் போறன் “

அவளுக்கு எதுவும் புரியவில்லை.

“அதுதான் வாங்க வேண்டியதெல்லாம் வாங்கியாச்சே, பிறகென்ன…?”

“எங்கையெண்டு ‘கெஸ்’ பண்ணுங்கோ பாப்பம்”

“ம்ஹும் , எனக்குத் தெரியேல்லை…”

“ம்ம்.. அப்ப பேசாம வாங்கோ.”

“தெஹிவளை ஸூவுக்கோ…?”

“ம்….ஹும்…”

“நான் ஒண்டும் சின்னப் பிள்ளை இல்லையே, கொழும்பிலை வந்து ஸூ பாக்கிறதுக்கு…, வன்னிக்கை இல்லாத மிருகங்களையோ நீ எனக்கு காட்டப் போறாய்…?”

வன்னிக் காடென்றதும் லக்ஷிதா மௌனமானாள். இவளும் பிறகு எதையும் பேசவில்லை.

***

நகர நெருக்கடி மிகுந்த கொழும்புத் தெருக்களில் நகர்நது கொண்டிருந்த பேருந்துகளில் ஏதோ ஒரு இலக்கத்தைத் தேடிப் பிடித்து, அவளை ஏறச் சொல்லித் தானும் ஏறினாள் லக்ஷிதா. அவள் காண்டக்டரிடம் சளசள வென்று சிங்களத்தில் பேசிய போது, இவளுக்குள் லேசான அதிர்வு ஏற்பட்டது. ரிக்கட் எடுத்த பத்து நிமிடங்களில் இறங்கி நடந்தார்கள்.

“இங்கை தானம்மா போகோணும் நாங்கள்…”

அவள் ஒரு ஹெயர் ட்ரெஸ்ஸிங் செண்டருக்கு முன்பாக நின்றாள். உமாராணியின் கால்கள் சற்றுத் தயங்கின.

“வாங்கோ அம்மா…”  லக்ஷிதாவின் கரங்கள் உறுதியாக அவளது விரல்களைப் பற்றி இழுத்தன.

“இஞ்ச என்னத்துக்கு…?”

“எனக்கு கண்ணிமை ஷேப் பண்ண வேணும், வாங்கோ “

உள்ளே டீ ஷேர்ட்டும், ஜீன்ஸுமாய் நடமாடிக் கொண்டிருந்த அந்தக் கடைப் பெண்களில் ஒருத்தி இவர்களை உள்ளே அழைத்து உட்கார வைத்தாள்.

அந்த அறையைச் சுற்றிலும் கரையோரமாய்  போடப்பட்டிருந்த சாய்கதிரைகளில் சாய்ந்திருந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் விரும்பிய தேவைப்பாடுகள் நிறைவேறிக் கொண்டிருந்தன.  சிலருக்கு கண்ணிமைகள்  சீராக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இன்னும் சிலரது கூந்தல்கள் விரித்துப் போட்டபடி, ஈரலித்தபடி, பசைகள் பூசியபடி எனப் பல கோணங்களில் காட்சியளித்தன.

லக்ஷிதா, வரும்போது அழைத்துச் சென்ற பெண்ணோடு ஏதோ சிங்களத்தில் கதைத்துக் கொண்டிருந்தாள். அந்த மொழி இவளுக்கு அந்நியமாய்த் தெரிந்தது. சிங்கள யுவதி அருகே வந்து  இவளது  உச்சித் தலைமயிரைக் கிளறிப் பார்த்தாள். இவளுக்குள் ‘சில்’லென்று ஏதோ  பரவினாற் போலிருந்தது.

யார் இவள்? எதற்கு என் தலையைக் கிளறுகிறாள் என்றில்லாமல் பல ஜென்மத்திற்கு முன்னர் போன்றதான நினைவொன்று மூளைக்குள் கிளர்ந்தது. அவனது தொடுகை சட்டென்று ஞாபகம் வந்து அவளை மலர்த்தியது போலிருந்தது. முதன்முதலில் அவன் அவள் தலையை அழுத்தி ஆறுதல் தந்த கணத்தை எந்த ஞாபகமறதி ஒழித்து வைத்திருந்தது?

“அம்மா, சரி தானையம்மா…? லக்ஷிதாவின் குரல் உரத்து ஒலித்தபோது அவள் திடுக்குற்று நிமிர்ந்தாள். அந்தப்பெண் இப்போது லக்ஷிதாவுக்கருகே நின்று கொண்டிருந்தாள்.

“என்ன, என்ன?”

“உங்கட தலையெல்லாம் கொஞ்சம், கொஞ்சமா நரைச்சுக் கொண்டு வருது. அதுக்கு கொஞ்சம் ஹென்னா போட்டுக் கொண்டு போனா நல்ல கறுப்பாயிருக்கும்…”

‘எந்தச் சாயத்தைப் பூசி என்ன? நரைத்த தலை, நரைத்தது தானே. போன இளமை, போனது தானே…’  உள்ளே தோன்றியது.

அவள் எதுவும் சொல்லவில்லை. அவனது நினைவு மேலே, மேலே எழும்பி அவளது மனதை அலைத்துக்கொண்டிருந்தது.

சுற்றிலும் மூன்று கதிரைகளில் மூன்று பெண்களுக்கான கூந்தல் சீர்ப்படுத்தல் நடந்து கொண்டிருக்கிறது. எல்லோருமே ஜீன்ஸ் அணிந்த பெண்கள். வேலை செய்பவர்களிலிருந்து வாடிக்கையாளர்கள் வரை எல்லோருமே ஜீன்ஸ் அணிந்திருக்கிறார்கள். லக்ஷிதா கூட ஜீன்ஸ் தான் அணிந்திருக்கிறாள். இவள் தான் சற்றும் பொருந்தாமல் பாவாடை சட்டையோடு வந்திருக்கிறாள். அவளுக்குக் கூட ஜீன்ஸ் அணியத் தெரியாமல் இல்லை. அந்தக் காலத்திலேயே ஊருக்குள் ஜீன்ஸ் அணிந்தவள் தானே அவள்.

இந்த நாற்பத்தைந்து வயதுக்குள் தலை நரைக்கத் தொடங்கிக் கிழவியாக மாறத் தொடங்கி விட்டாளா அவள்?   இத்தனைக்கும் வாழ்ந்த நாட்களென்றால் துளித் துளியாய் தேன் போல் சேகரித்த அந்தக் கொஞ்சக் காலங்கள் தானே? எண்ணிச் சொல்லக்கூடிய அந்தச் சில நாட்களில் தானே அவள் அவனோடு வாழ்ந்திருக்கிறாள்.

அந்த மூன்று பெண்களில் ஒருத்தி சாய் கதிரையிலிருந்து எழும்பி  ‘ஹாண்ட் பாக்’கை எடுத்துக் கொண்டு  புறப்பட்டாள்.,  அவளுக்கு அருகில் நின்றிருந்தவள் லக்ஷிதாவையும், இவளையும் தலையசைத்துக் கூப்பிட்டாள்.

லக்ஷிதா “எழும்புங்கோ அம்மா, இனி நீங்கள் ராணி இல்லை. இளவரசி ஆயிடுவீங்கள்”  என்றவாறே அவளை எழுப்பி அந்தச் சாய் கதிரையில் அமர்வித்தாள்.  

அந்தப் புதிய பெண் பின்னப்பட்டிருந்த  இவளது கூந்தலின் பின்னலைக் களைய ஆரம்பித்தாள்.

இவள்  உச்சிக்குள்  பட்டாம் பூச்சிகள் சிறகடித்தன.

‘சர்’ரென்று அவள் கூந்தல் கத்தரிக்கப்பட்டுப்  பொத்தென்று சிந்தி நிலத்தில் வீழ்கின்ற உணர்வு. கூடவே சாந்தியும் இருந்தாள். இல்லை. சாந்தி மட்டுமில்லை. இன்னும் ஏழு பேர் வரிசையாக இருந்தார்கள். எல்லாரும் பள்ளிக்கூடம் விட்டு வந்திருப்பார்கள் போல. வெள்ளைச் சட்டையோடு இருந்தார்கள். நீள முடி, குட்டை முடி, சுருண்ட முடி, நெளிந்த முடி, கறுப்பு முடி, சாம்பல் முடி, தங்க நிறத்தில் ஒளிரும் முடி எல்லாமே நிலத்தில் பொலபொலவென்று உதிர்ந்து கொண்டிருந்தன. தலை முடியை வெட்டிக் கொண்டிருந்த ராசன் எந்த உணர்வுமில்லாத ஒரு தேவதூதன் போல அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் வீர யுகம் ஒன்றில் நுழைவதற்கான முதல் வாசலை அவன்  அப்போது திறந்து கொண்டிருந்தான்.

பத்தாம் வகுப்பிற்கான மாலை நேர  ரியூஷன் வகுப்பில் இருந்த போது அவர்கள் வந்தார்கள். அவன் நல்ல உயரமாய் இருந்தான். அவனது முடி சுருளாய் இருந்தது.

“இவ்வளவு காலமும் இந்த மண்ணுக்கு என்ன செய்தனீங்கள்…? இனி என்ன செய்யப் போறீங்கள்?” என அவர்கள் பொதுவில் கதைத்த பின், கூட வந்த ஜீன்ஸ் அணிந்த பெண்கள் இவர்களிடம் தனித் தனியே கதைக்கத் தொடங்கினார்கள்.

“எல்லாரும் படிச்சு என்ன செய்யப் போறீங்கள்…?”

“ஷெல்லுக்குத் தெரியுமோ நீங்கள் படிக்கிறீங்களெண்டு…?”

“உங்கட குடும்பமெல்லாத்தையும் இழந்த பிறகு, உங்கட கிராமத்தைச் சிங்களவனிட்டைப் பறிகொடுத்தாப் பிறகு, படிச்ச படிப்பை வச்சு என்ன செய்வீங்கள்?”

‘பாத்துப் பாத்து முகத்துக்கு கிரீம் அப்புங்கோ,

தலை முடிக்கு ஹேர் ஒயில் பூசுங்கோ,… சிங்களவன் ஊருக்கை வந்தால் உங்களையெல்லாம் விட்டு வைப்பானேண்டோ  இதெல்லாம் செய்யுறீங்கள்…?”

இந்தச் சுருள் முடி, நீள முடி எல்லாமே ஒன்றுதான் என அப்போது அவர்களுக்குப் புரிந்தது. இருவருமே தங்களுடையதைத் தியாகம் செய்யத் துணிந்து விட்டார்கள்.

முழுமையான பின்னலைக் களைந்து விட்டபோது கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தைப் பார்த்த உமாராணிக்கு ‘மோனலிசா’ ஓவியத்தைப் பார்த்த மாதிரி இருந்தது. அவளது முகத்தில் எந்த உணர்ச்சிகளும் இல்லை அல்லது எல்லா உணர்ச்சிகளின் கலவையுமிருந்தது. தெரிந்தோ, தெரியாமலோ கறுப்புக்கும், பழுப்புக்கும் இடைப்பட்ட  ஒரு இருட்டு நிறத்திலான  மேற்சட்டையொன்றை அவள் அணிந்திருந்தாள். அது அந்தத் தோற்றத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருந்தது.

இவளது தலைமுடியைக் கையாண்ட பெண் அந்தச் சாய்கதிரையை மெல்ல நகர்த்தி ‘சிங்’கிற்கு அருகில் கொண்டு போனாள். கதிரையை மேலும் சரித்து இவளைக் கிடையாகப் படுக்க வைத்தாள். ‘சிங்’ கிற்கு அருகே தலை இருக்க தோளில் பெரியதொரு சால்வையைப் போர்த்தி விட்டுத் தலை முடி மீது குழாய் நீரைத் திறந்து விட்டாள். நீர் ஊற்றாய்ப்   பாயத் தொடங்குகையில் முடிகளுக்கிடையே விரல் விட்டுக் களையத்   தொடங்கினாள்.

இவள் ஒரு மயக்க நிலையோடு கண்களை மூடினாள். எல்லா உணர்வுகளும் கண்களுக்குள் கலந்தோடத் தொடங்கின.

சீரான சத்தத்தோடு பயிற்சி அணிவகுப்பு அவள் காதுகளுக்குள் ஒலித்தது. பிறகு நீரேரிக் கரைகளில் நிலத்தோடு நிலம் ஊர்ந்து பதுங்குகிறாள். காவல் கடமைகளில் கண் விழித்திருக்கிறாள். ஒரு தடவை சன்னமொன்று பட்டு மயங்கி வீழ்கிறாள். அவளை எழுப்பித் தண்ணீர் பருக்க தருகிறார்கள். அந்தப் பக்கம் உணவு விநியோகத்திற்கென வந்த அவனது வாகனத்தில் இவளை ஏற்றி அனுப்பி விடுகின்றனர். அவன் அவளது தலையை மென்மையாக அழுத்தி நீர் பருக்குகிறான், உயிரை ஊட்டுவதுபோல. திடுமென்று விக்கி அவள் பிரக்கியடிக்கின்றாள்.

‘சில்’ லென்ற நீர்த்தொடுகை நிற்கிறது.

கதிரையை நிமிர்த்தி, துவாயினால் ஈரம் துடைத்து, முடி உலர்த்தியை ‘பிளக்’கில்  செருகி வெம்மையான காற்றினை அப்பெண் இவளது கூந்தலுக்குள் செலுத்துகிறாள். அவனது அனல் மூச்சைப் போன்ற வெம்மையான காற்று. 

பாலைவனத்துக் காலமொன்றில் பெய்த மழைபோல கொஞ்ச நாட்கள் அவன் கூடவேயிருந்தான். இவள் முடியை  இனிமேல் வெட்டுவதில்லை என்று தீர்மானித்து அதனை மீளவும் வளர்க்கத் தொடங்கியபோது, லக்ஷிதா வயிற்றுக்குள் உதைக்கத் தொடங்கியிருந்தாள்.

என்ன அழகான காலம் அது. அவன் பரபரப்புக்குள் ஓடிக் கொண்டிருந்தாலும், அவள் ஒரு குளிர் தரு நிழலுக்குள் அப்போது நின்று கொண்டிருந்தாள். என்ன இனிய நாள்கள்.? இளமை அருகிருந்த துடிதுடிப்பான நாள்கள்.

சிறு கிண்ணமொன்றினுள் ‘ஹென்னா’வைக் கொட்டிப் பசையாக்கி பிரஷினுள் தோய்த்தபடி வந்தாள் அவள். இப்போது இன்னொரு யுவதி கண்ணாடித் தம்ளர் நிறைய ஐஸ் கட் டிகள் மிதந்த ஒரேன்ஜ்  பானத்தைக் கொண்டு வந்து வைத்தாள். இவள் பேசாமலே இருந்த போதுலக்ஷிதா அருகில் வந்து விரல்களை அழுத்திக் குடிக்கச் சொன்னாள்.

இவளுக்கு அதைப் பருக வேண்டும் போலத் தோன்றவில்லை. அந்தக் குளிர்பானத்தை விட அவன் அன்றைக்கு ஊட்டிய வெறுந்தண்ணீரில் உயிரமுதம் சொட்டிக் கொண்டல்லவா இருந்தது.

இது எதற்கு…?

வறண்டிருந்த நாவில் அதை ஊற்றி மடமடவென்று குடித்த போது அவளால் அதில் எந்தச் சுவையையும் உணர முடியவில்லை. கூடவே, எந்த வாசனையும் அந்தப் பானத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.

இப்போது தலைமுடியின் மீது  முதல் சாயத்துளி வீழ்ந்து குளிர்ந்தது.

முதுமையின் நரை இழைகளை மறைக்கும் சாயம்.

கண்கள் தன்னிச்சையாய் மூடிக் கொண்டன.

அவனது சுருள் முடியை அவள் அளைந்து கொண்டிருந்தாள். அவன் அவளது உச்சி மீது கை வைத்து மிருதுவாக அழுத்திக் கொண்டிருந்தான். அருகில்  லக்ஷிதா மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறாள்.  எவ்வளவு  இனிய பொழுது. எவ்வளவு ஆறுதல் அவனது அருகாமை. அருகில் மணல் வீடு குலைவதும், சரிவதுமாய்ப் போக லக்ஷிதா திரும்பத் திரும்ப மணல் வீடு கட்டிக் கட்டிக் குலைத்து எழுப்பிக் கொண்டிருக்கிற தொடர் பொழுது. திடீரென்று வானமெங்கும் புகை மண்டலம் சூழ்கிறது. வானம் இடித்து முழங்குகிறது. அவளது  உச்சியைத்  தாங்கிய கரங்கள் மாயமாகி விடுகின்றன. லக்ஷிதாவின் மணல் வீடுகள் குலைகின்றன. அவள் இவளது  காலைக் கட்டிய படி அழுது கொண்டிருக்கிறாள். இவள் கண்கள் இருள்கின்றன.

வேற்றுமொழிக் குரல் தூரத்தே கேட்கிறது. முதன் முதல் அவள் கேட்ட வேற்று மொழிக் குரல். கண்களைத் திறக்கிறாள். நீளநீள வரிசைகள்.  வரிசை நகர்கிற போது அவள் பார்வையைத் தூர எறிகிறாள். வெகு தொலைவில் அவன்.  அவர்கள் அவனை  அழைத்துக் கொண்டு போகிறார்கள். இவள் பலங் கொண்ட மட்டும் குரல் எடுத்துக் கத்துகிறாள். அவர்கள் இவளைத் திரும்பிப் போகச் சொல்கிறார்கள். விசாரித்துவிட்டு, விட்டுவிடுவதாகச் சொல்கிறார்கள். அவ்வளவும் வேற்று மொழிக் குரல்கள். அவன் இவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே போகிறான்.

அவன் போன பிறகு எத்தனை நாள்கள் வந்தன. வெளியே எந்தப் பிரிவினையும் இல்லாதது போல வெற்றி விழாக்களும், கொண்டாட்டங்களும். எத்தனை விழாக்கள்? எத்தனை ஒருங்கிணைப்புகள்? அத்தனைக்குள்ளும் ஒழிந்திருந்த வேற்று மொழிக் குரல்கள், சொன்னது போல அவனைத் திருப்பி அவளிடம் ஒப்படைக்கவில்லை.

நீண்ட நேரமாக சாயத்திலூறிக்  கிடக்கிறது அவள் தலை முடி. கண்கள் மூடியபடியிருந்த அவளிடம் லக்ஷிதா வருகிறாள். அந்தப் பெண்கள் வேலை முடிந்து கொண்டிருக்கும் குதூகலத்தில் அமளியாய் தங்களுக்குள் கதைக்கத் தொடங்குகிறார்கள். வேற்று மொழிக் குரல்களின் கனத்தினால் அறை நிறைகிறது. அந்த வேற்றுக் குரல்கள் தந்த நடுக்கத்தில் தலையைச் சிலிர்த்து உதறுகிறாள் உமாராணி.  சாயத்துளிகள் சிதறி நிலத்திலும், சுவரிலும் தெறிக்கின்றன. தெறித்து வீழ்ந்த ஒவ்வொரு சாயத்துளியிலிருந்தும் பெருகிய  கருஞ்சிவப்பு நிறம்  அந்த அறையைக்  குருதியால் நிறைக்கத் தொடங்கியது.

1 comment for “சாயம்

  1. S Raveendran
    November 8, 2021 at 1:56 am

    Well wrote! Congrats Premini!!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...