சிருஷ்டியுலகம்

மெல்லிய பூஞ்சை வெயில் படர்ந்திருந்த முறாவோடையின் நீர்ப்பரப்பிலிருந்து பொட்டுப் பூச்சிகள் தாவித் தாவி ஓடும் நீரதிர்வுகளை, வண்டுகளின் இறக்கை பட்டு இலை மூடிய தொட்டாச்சுருங்கி பூக்களை, மாடு முறித்த எருக்கிலைச் செடியிலிருந்து சொட்டும் பாலை ஆயிஷா பார்த்தபடி இருந்தாள். இருளாகும் சமிக்ஞை போல அலங்கார தெருவிளக்கின் கண்ணாடி மூடிச்சிமிழிலிருந்து மூஞ்சூறு போல வெளிச்சங்கள் இடைவெளி விட்டு சிணுங்க ஆரம்பித்தன. ஆங்காங்கே கல்லடி விழுந்த விளக்குகளைச் சுற்றிப் பரவும் இருளும் அதைத்தாண்டியே வீட்டுக்கு போக வேண்டும் என்கிற அச்சமும் ஆயிஷாவை தொந்தரவு செய்தன. தூரத்தே சைபுதீனின் கடை முன்றலிலிருந்த ஒரு குண்டு பல்பு அவரைப் போல மந்தமாகவே சிமிட்டிக் கொண்டிருந்தது.

வெளுத்து வீங்கிய முகத்தின் முட்டைக்கண்களோடு வாயைக் கோணலாக்கியபடி விரல்களை சுண்டுவது போல மடக்கி கைகளை விறைப்பாக நீட்டியபடி கிடுகிடுவென நடந்தாள். வீட்டு மதில் சுவரிலிருந்து அடர்த்தியான பாசிக்குள் வசிக்கிற நத்தை, காலையில் கொய்யா மரத்தில் தவறாது வரும் செண்பகம், குளக்கரையில் மேயும் செவலை மாடும் கன்றுமென அவள் நண்பர் உலகம் விசித்திரமானது. குளக்கரையை சுற்றி நடமாடிக் திரியும் ஆயிஷா குளக்கரை வீதியின் குளப்பக்கமான கரையில் நிற்பதே இல்லை. அவள் உம்மம்மா சொல்வது போல குளம் பலியெடுத்துவிடும் என்கிற பயம் எப்போதும் இருக்கும். ஆனால் அவள் குளப்பக்கமாக பாதி வீதியை எப்போதாவது அணில்கள் அருகில் வரும் போது, பாலாமை குளக்கரை குப்பைத் தொந்தரவிலிருந்து ஆறுதலாக விடுபட்டு எப்போதாவது அவளிடம் நாக்கை அனிச்சையாக நீட்டும் போது, குளத்தினுள் இடுப்பு ஆழத்தில் வலை வீசுகிற மீன்காரர் துடிதுடிக்க மீன்களை கரையில் போடும் போது வருவாள். அதுவும் எட்ட நின்று அவள் உலகத்தின் விரிந்த காட்சிகளை மெல்லுவது போல உற்றுப்பார்ப்பாள்.

கோணாவத்தையிலிருந்து நீர்த்தொடர்பாக அடுத்தடுத்த சிறிய பெரிய நீரேந்துப் பகுதிகள் முறாவோடையூடாக அக்கறைப்பற்று முகத்துவாரக் களப்பினை நோக்கி திறக்கும். முறாவோடையில் குடியிருப்புகள் அண்ட ஆரம்பித்த காலத்திலேயே சைபுதீனின் கடை இருக்கிறது. அந்த காலத்திலேயே சைபுதீனின் தோட்டத்தோடு கடையும் கொஞ்சம் வீடுகளும் முளைத்திருந்தன. தோட்டத்தில் விளையும் வள்ளலைக் கீரைக்காக, மாம்பாஞ்சான் கொத்துக்காக சைபுதீனிடம் காலையிலேயே சைக்கிளோடு சம்சாரிகள் குழுமி விடுவர். சைபுதீனிடம் வாங்கிய காணிகளை நிரப்பி அக்கரைப்பற்றிலிருந்து சனம் குளத்தை அண்டி வந்தது. ஆயிஷாவின் உம்மம்மாவும் அப்படித்தான் அங்கு ஒரு காணித் துண்டை வாங்கிப் போட்டாள். பிள்ளைகள் கைவிடும் கடைசிக்காலமொன்றை குளக்கரையில் கால் நீட்டி கழிக்க நினைத்த அவளுக்கு ஆயிஷாவைப் போல துரத்தும் பாரமொன்று அழுந்திக் கொண்டேயிருந்தது. எல்லோரும் நிரப்பியிருந்த போதிலும் சைபுதீனின் தோட்டம் இன்னும் மந்தமாகவே நிரம்பியபடி இருக்கிறது. ஒரு மூலையில் ஒரு குட்டித் குளத்திலிருந்து தோட்டத்துக் கீரைகள் பற்றையாய் உறிஞ்சிக் குடித்தன.

முறாவோடைக் குளத்திற்கு இரண்டு பகுதிகளிருக்கும். பாதிக்குச் சற்றே குறைய ஆழமான பகுதியும் மற்றைய பெரும்பகுதி ஆழம் குறைவாகவும் இருக்கும். ஆழம் குறைந்த பகுதியில் குளத்திலிறங்கி மீன்பிடிப்பவர்கள் எவரும் மற்றைய ஆழப்பகுதிக்குப் போவதில்லை. கரையில் நின்று வீசுபவர்களும் ஜாக்கிரதையாக நறுவிசோடு இழுப்பர். அந்த பகுதியின் ஆழத்தில் மண்டியிருக்கும் சுரிதான் இந்த அச்சத்திற்கு காரணம். ஒரு வருடத்தில் யாராவது மூழ்கி பலியாகுவது எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே ஆயிஷா உம்மம்மா அதிகமாக சொன்ன இந்தக் கதைகளைக் கேட்டு பயந்திருந்தாள். ஒருகாலத்தில் இந்த குளத்தை அண்டி மீன்பிடிப்பவர்களும் வள்ளங்களும் இரவு லாம்புகளும் செறிந்திருந்தன. மத்திய கிழக்கை நோக்கிய ஹைப்ரிட் சமூகமாற்றத்தில் எல்லாமே அருகிப்போயின. சில வருடங்களுக்கு முன்னர் முனிசபலிட்டியால் குத்தகைக்கு எடுத்த அரைப்பகுதியில் அன்னங்களை வளர்த்தனர். அப்போது ஆயிஷா குழந்தையாக இருந்தாள். இப்போதும் யாராவது வளர்க்கிற அன்னங்கள் குளத்தில் இறங்குவதைக் கண்டால் குஷியாகி விடுவாள். அவள் உலக சிருஷ்டியில் அன்னப்பறவைக்கு கொம்புகள் இருந்தன.

அவளுக்கு நண்பர்கள் இருப்பதில்லை. அவள் தாயின் உடன் பிறந்தவர்களும் அவளை ஒதுக்க நினைக்க அவள் உம்மாவுக்காக கட்டிய வீட்டில் உம்மம்மாவோடு வந்து விட்டாள். அவளை விசேஷங்களுக்கு, கலியாணம் மய்யத்து என்று எதற்குமே அழைக்காமல் அவள் மாமாக்களும் பெரியம்மாக்களும் புறந்தள்ளி விடவே அவளோடு உம்மம்மாவும் பிள்ளைகளை விட்டு தூர இருந்தாள். அவள் வித்தியாசம், மற்றப் பெற்றோருக்கு அருவருப்பாயிருந்தது.  அவள் அழுக்கான உடை, எப்போதும் கல்லுக்குத்தி காயப்படும் கால்களும், ஏற்கனவே வந்த புண்களும் ஹைபிரிட் தலைமுறை ஆட்களுக்கு தீண்டத்தகாததாகிவிட்டது. எங்காவது பிள்ளைகள் கூட்டமாக விளையாடக்கண்டதும் முதலில் அங்கு போய் நிற்பாள். ஓரமாக தள்ளி நின்று பார்க்க அவளுக்கே சிறிது நேரத்தில் அலுத்துவிடும். மீண்டும் முறாவடை சமஸ்தானத்திற்கே வந்துவிடுவாள். அமைதியாக படுத்திருக்கும் குளத்தில் செல்வன் மீன்கள் மூச்சு விடும் வட்டக் குற்றலைகளை எண்ணுவது, சுழியோடிய நீர்க்காகங்கள் வெளியே வருவதுவரை மூச்சை தம் பிடித்து வைத்திருப்பது, மேய்ந்த செவலையின் பின்னால் இழுபட்டு கோடு வரையும் கயிற்றை மிதித்து ஓடுவதென அவள் பொழுது கழியும். சாப்பாடு நேரத்தில் உம்மம்மா வாசலில் நின்று பீங்கானோடு கூவுவாள். பிசைந்த சோற்று உருண்டைகளை வாயில் வாங்கியவாறே விரல்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து கைகளை விறைப்பாக நீட்டியபடி தாவுவாள். ஒரு சின்ன பனையான் மீனைப் போலவிருக்கும் அவள் துள்ளல்.  உம்மம்மா இரும்பு மனிசி. திடீரென சோகமாகி வாடிய வட்டுக்காயாய் கிடப்பாள் ஆயிஷா. அவளை மடியில் கிடத்தி முடிசீவி கதை சொல்லும் உம்மம்மாவிடம் அவளுக்கென சில சமிக்ஞைகள் தேர்வாகியிருந்தன. ஆடைகளை உயர்த்தி பிடித்து காட்டி ஒதுங்கப் போவாள். குரல் வளையை நீவிக்காட்டி தண்ணீர் வாங்கிக் குடிப்பாள். பரிச்சயமான அவளது அற்புத உலகத்திற்கு வெளியே ஆயிஷா ஒரு ஆட்டிச தேவதை.

***

“இவள எங்கேயாலும் சேர்த்து உடேன், இன்னா அன்னா எண்டு குமராகிடுவாள்,  நீ ஏன் கஸ்டப்பர்ராய்..”.

உம்மம்மா எதையும் காதில் வாங்கிக் கொள்வதில்லை.  பத்து பிள்ளை பெற்றவளுக்கு இதுவொன்றும் பெருஞ்சுமையல்ல. உம்மா வாப்பா இல்லாத அவளுக்கு ஒரு அரண் போல ஒரு மெத்தை போல அவள் உலகத்தின் வாசலில் ஒரு மேய்ப்பள் போல உம்மம்மா நின்றிருப்பாள். இந்த திடீர் அக்கறைக்கும் காரணமில்லாமல் இல்லை. இருக்கிற முறாவோடைத் துண்டுக் காணிக்காகவே மூத்த மகளின் இந்த திடீர் விஜயமென்று அவளுக்கு தெரிந்திருந்தது.

“நான் மௌத்தான பொறவுதான் இவள ஹோம் ல சேக்கிற. அதுவும் முஸ்லிம் ஹோம் லான் உடனும்…”.

வந்த மூத்தமகளுக்கு உள்ளே கிடந்த பாயை இழுத்து போட்டபடி சொன்னாள் . தாயும் மகளும் களுதாவளை வெற்றிலையை மடித்து பாக்கை நறுக்கி சுண்ணாம்பு தடவி கடைவாயில் போட்டுக் கொண்டனர். உம்மம்மா இப்போது புகையிலை போடுவதில்லை. கேன்சர் வருமென்று ஒரு பேர்த்தி சொன்னதை பிடித்துக்கொண்டாள். வாழும் ஆசையெல்லாம் இருந்ததில்லை; ஆயிஷாவுக்காக அவள் இன்னமும் இருக்கத்துணிந்தாள். அவள் புடவைக் காசு முடிச்சு போல அந்தத் துண்டு வளவும் ஆயிஷாவின் எதிர் காலமும் அவளை இருத்தி வைப்பதாக நம்பினாள்.

“அந்த ஓடுகாலி மாப்பிள்ளை ஓலி ட புள்ள தேவ எண்டா நீ வெட்டங்கிறங்கு “.

எப்போதோ அவளையும் ஆயிஷாவையும் விரட்டியடித்த அந்த வார்த்தைகள் முறாவோடை பள்ளி மோதினாரின் அறிவித்தல் குரல் போல திரும்பத் திரும்ப அவளை திடுக்கிடச் செய்தன. அழகிய மஞ்சள் நிலவு முறாவோடை என்கிற மீராவோடையின் மறுகரையின் தென்னஞ்சோலைக்கு மேலே கடலிலிருந்து கிளம்பித்தகித்தது. ஆயிஷா சுவற்றிலிருந்து மண்சில்லொன்றால் அப்பியிருந்த பாசித்திட்டுகளை சுரண்டியபடியிருந்தாள்.

“புள்ளே, சும்மா இரு. மனே..”.

“ஹா.. “.

“அதுக்குள்ள நத்தை இருக்காது மா..”.

“ம்ம்..”.

நத்தைகளைப்போல வண்டுகளைப்போல அவளது உலகத்தின் சிருஷ்டிகள் வண்ணமயமாக வானத்திலிருந்து பொத்பொத்தென விழுவதுபோல பொறுக்கினாள். அவள் பொறுக்காதவைகள் ஊர்ந்தபடி கால்களில் ஊருவது போல ஏறி வயிற்றினுள் நிரம்புவது போல சூயையிருந்தது. வண்ணத்திப்பூச்சிக் கால்கள் நடப்பதாக அடிவயிற்றில் பாரமேறி ஆவலாதிப்பட்டாள். தட்டான்கள் தொட்டாச்சுருங்கியில் மோதுவது போல பால் ஆமைகள் வயிற்றுத்துளையை நக்குவது போல பிரக்ஞையடைந்தாள். அவள் வயிற்றைப் பொத்தி கீழே வலிக்க குந்திய போது உம்மம்மா பெரியம்மா போல அவள் உடலும் வெற்றிலையை மென்று துப்பியிருந்தது. வியர்த்த அவளை கிடத்தி விசிறியால் வீசியபடியிருந்தாள் உம்மம்மா. அன்றைக்கு கவனமாக குளிப்பாட்டப்பட்டாள். மணங்களோடு பாவாடையை அன்றைக்கு பிறகு மார்புக்கு உயர்த்தி கட்டி குளிக்க வேண்டும் என ஆயிஷா கட்டளையிடப்பட்டிருந்தாள். முன்னைரை கவனயீனமாக ஆடைக்கிழிப்புகள் இருக்கக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டாள். அவள் சிருஷ்டியுலகத்தை மறந்து வலிகளோடு பிசுபிசுப்போடு அழுத்தும் நாஃப்கின்களோடு அவள் கடக்க வேண்டிய ஹார்மோன் சுழற்சிக்குள் அவள் நுழைய வேண்டியிருந்தது. அன்றிரவிலிருந்து ஆயிஷாவுக்கு பரிசுகள் வந்தன. புதுச்சட்டை, தங்க மோதிரம், அவளுக்கு பிடித்த ஞானக்கத்தா வெல்லாம் வந்திருந்தது. ஞானக்கத்தா என்கிற ஒரு வகை மில்க் ரஸ்க் தவிர அவளுக்கு மற்ற பரிசுகள் ஆர்வம் தந்திருக்கவில்லை. ஆயிஷாவுக்கோ வாரம் ஒருமுறையாவது வயிற்று வலியெடுத்தாலோ வானத்திலிருந்து அவள் சிருஷ்டிகள் பொத்தென்று விழுந்தாலோ ஞானக்கத்தா சாப்பிடலாமென்றிருந்தது. ஆனால் அவள் உம்மம்மா சோர்வாகி உஷாரிழந்து மூட்டுகளில் சுமையேறியது போல இரவெல்லாம் திடுக்கிட்டாள். ஆயிஷா மீது அவளுக்கிருந்த நம்பிக்கை தூண்டிலில் சரியாகப்படாத மீன் நழுவுவதை போல கயிறறுந்து தனித்தபடி கிணற்றினுள் தாழும் உலோக வாளியைப்போல பார்த்தபடி இருந்தாள். ஆயிஷாவுக்கு கிடைக்கும் புதிய பரிவின் அபாயம் ஒரு மணலைப் பாம்பு போல கூரை வளையில் நெளிந்தபடியிருந்தது அவளுக்கு. சேமிப்பிலிருந்த நகைகளை ஈடுவைக்கவும் ஆயிஷாவின் உம்மாவுக்குச் சொந்தமான வயற்காணியின் குத்தகையை தன் மகன்களிடம் அறவிடுவதையுமே சிந்தித்தபடி இருந்தாள்.

***

இப்போதெல்லாம் ஆயிஷாவுக்கு உள்ளிருந்தே தொந்தரவுகள் அதிகமாயின. முன்னரை விட அதிகமாக கோபப்பட்டாள். குழந்தமையிலிருந்து அவள் மாறும்போது எரிச்சலாயும் பயந்தும் சிலவேளை குழம்பியும் போவாள். அடிக்கடி வருகிற தலைவலியோ, வயிற்றுவலியோ பற்றி விசேட கவனமெடுக்கவென உம்மம்மாவுக்கு தெரிந்திருக்கவில்லை. அவள் சிருஷ்டி உலகத்திலிருந்து முறாவோடைத் தெருக்களிலிருந்து அவளுக்கு ஆர்வம் இளகி ஞெகிழி போல வழுக்கியது. நாஃப்கின் வைக்கும்போது மட்டும் வெட்கமாகிய சிரிப்பு தலைதூக்கும். உண்மையில் அந்த போக்கு நாட்களில் அவளுக்கு விசேட கவனம் தேவையாயிருந்தது. அவளுக்கிருந்த வலிகளையும் மனவெழுச்சிகளையும் அறிந்து கொண்டு அதற்கேற்றபடி அவள் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும். அவளுக்கு தொடர்பாடலுக்கென்று படங்களை சித்திரங்களைக் காட்டி அவள் உணர்வுகள் அறியப்பட வேண்டும். அவை எதுவுமே அங்கில்லாததால் அவளுக்குள் மீள முடியாத இறுக்கம் தொற்றிக்கொண்டது பற்றி உம்மம்மா கவலையாயிருந்தாள். கிணற்றடி வாழை மரக்குலையின் பிஞ்சுகளை வௌவால்கள் சிதைப்பதைப்போல மூப்பு ஆயிஷாவின் உலகத்தை மழுங்கடிக்கிறதென விம்மிக் கிடந்தாள். ஆயிஷா குழந்தையாகவே இருக்க வேண்டுமென்றிருந்தாள். வீங்கிய மூட்டுகளை மடித்து தொழுதாள். ஆனாலும் அவளுக்கு அலங்காரம் செய்யவோ புத்தாடை அணிவித்து சோடித்துப் பார்க்கிற சோட்டையை அவள் நிவர்த்திக்காமல் இல்லை. தலை பின்னி பவுடர் பூசி புதிய தோடுகளை அணிவித்து கண்ணாடி முன் நிறுத்தி ஆயிஷா வெட்கப்படுவதை ரசிப்பாள்.

” என்ன வடிவு மா எங்குட புள்ள.”.

வயிற்றில் பிறந்த பத்தையும் விட நெஞ்சில் இளகும் முட்டைக் கண்களுக்குள் ஏதோ பிணைப்பு தெரிவதை உணர்ந்தாள். அந்த பத்தை விடவும் இந்த முறுகிய விரல்களை திரும்பத் திரும்ப நினைவின் பெருவெளியெங்கும் நிலங்களாக படர விட்டாள்.

***

கண்ணாடி வானத்திலிருந்து மேகங்கள் ஆங்காங்கே நுரைத்துக்கிடந்த அந்த பகல் நேரத்தில் முறாவோடை வெள்ளிப் பாளமாய் கூசிக்கிடந்தது. அடரும் வெக்கையைத்தணிக்க குருவிகள் தாழப்பறந்து விளையாடின. புல் மண்டிய கரையோரத்தை துப்பரவு செய்யும் முனிசபலிட்டி ஊழியர்களின் இயந்திரச்சத்தம் ஆயிஷாவை தொந்தரவு செய்தது. அதைவிடவும் செவலையும் கன்றும் மேயப்புல்லின்றி எங்கே போகுமென கவலையிலிருந்தாள் ஆயிஷா. சைபுதீனின் கடைவாசலிலிருந்த பென்ச்சில் வழக்கமான இருவர் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அப்போது ஆயிஷாவை பற்றி பேசியபடியிருந்தனர்.

“உம்மா வாப்பா இல்லாம இந்த புள்ளய பாருங்கோ, தனியக்கெடந்து கஸ்டப்படுறாள் அந்த மனிசி..”.

“பொறக்கக்கொழயே சுவர்க்கத்துக்கு பாஸ்போர்ட் ஓட பொறந்ததுகள் டா, நீ ஏன் கவலைப்படுறாய்..” .

சைபுதீனின் கடை வாசல் இப்படித்தான் நாளும் ஒரு தலைப்பில் களை கட்டும். பென்ச்சை சாத்திவிட்டு அவர்கள் கிளம்பும்போது தலைப்பும் சாய்ந்துவிடும். சைபுதீனின் கடை இப்போது பழைய கடையாகிவிட்டது. கீரைத்தோட்டத்தில் மண்டியிருந்த பற்றைக்குள் காட்டு வட்டுக்காய் மட்டும் தலைநீட்டிக்கிடந்தது. வயதான மந்த சைபுதீன் சாமான்களை போடுவதற்குள் ஹைப்ரிட் வாசிகள் பொறுத்துக் கொள்வதில்லை. பழைய முட்தராசில் அவர் மிச்சம் பிடிப்பதில் மட்டும்தான் பரோபகாரி. சிக்கனமென்றால் சைபுதீன்தான் என்பார்கள் கடைவாசல் பென்ச்சுக்காரர்கள். ஆனாலும் சிறுவர்கள் ஆர்வமாக வாங்க வருவர். சீனிமுட்டாசு, உறப்பு உருண்டை, பழப்புளி ஜேம் பக்கெட்டு, பொட்டுத்துப்பாக்கி, ஐந்து ரூபாய் சீட்டிழுக்கும் பழைய பரிசு பல்லி முட்டாய் கார்டு இவை போல அரியவகை பழம் பொருட்கள் கிடைக்கும். கண்ணாடி போத்தலில் குவிந்திருக்கும் தேன்குழல், ஞானக்கத்தா, பிஸ்கட்டுகள் நாஸ்டல்ஜிக் போல அந்தக் காலத்திற்கு நம்மை கூட்டிச் செல்லும். ஆயிஷா ஞானக்கத்தாவை வெறிக்க பார்த்தபடியிருந்தாள். முன்னரெல்லாம்  ஆயிஷா கடைவாசலுக்கருகில் வந்தாலே சைபுதீன் விரட்டி விடுவார். இப்போது எந்த அதட்டலும் இல்லை. ஒரு நமைச்சலிலிருந்து விடுபடுவது போல அவளுக்கு ஞானக்கத்தா பசியெடுத்தது. பென்ச்சுகள் தலைப்போடு சாய அந்த இருவரும் கிளம்பும்போது செவலை கத்தியது. கன்று குறும்பாக குளக்கரைக்கு துள்ளுவதை கண்டிப்பதை போலவிருந்தது அதன் கத்தல். சைபுதீன் வாஞ்சையோடு கூப்பிட்டார்.

” ஞானக்கத்தா வேணுமா..”.

” ம்ம் ம்ம்..”.

அவள் தலையாட்டியபடி கடையினுள் செல்ல சைபுதீன் கண்ணாடி போத்தலை திறந்து கொடுத்தார். அவள் சிருஷ்டி உலகத்தில் இல்லாத போத்தல் நிறைந்த ஞானக்கத்தா. அவள் சாப்பிட ஆரம்பிக்கும் போதே அவள் பின்னால் தடவப்படுவதை உருவப்படுவதை பற்றி சிரத்தையற்று சாப்பிடும் மும்முரத்தில் இருந்தாள். அவள் சாப்பிட்டு விட்டு வெளியேறும்போது எதையோ பேப்பரால் துடைத்தபடியிருந்தார் சைபுதீன். சுவர்க்கத்தின் கடவுச்சீட்டுக்கு பூலோகத்தில் மதிப்பில்லை போல.  வெளியேறியதும் கதவுகளை மெதுவாக சைபுதீன் சாத்திக்கொண்டதை ஆயிஷா உணரவேயில்லை. அவள் கவனமெல்லாம் தாயின் கத்தலை கவனியாது குறும்பாய் கரையில் துள்ளுகிற செவலைக்கன்றின் மீதே இருந்தது. ஆழமான குளத்தின் பாதியில் கன்று சப்பென்று கரையிலிருந்து வழுக்கி குளத்தினுள் விழுந்ததும் ஆயிஷா பதறியபடி கரைக்கு ஓடினாள். கன்று தத்தளிப்பதை பொறுக்கவொணாமல் துப்புரவு செய்யும் ஊழியர்களை கைகளைத்தட்டி கூவியழைத்தாள். புல் வெட்டுகிற இயந்திரச்சத்தத்திற்கு இவள் கூவல் கேட்கவே இல்லை. கன்று கழுத்துவரை மூழ்கியதும் குளத்தினுள் பாய்ந்து கால்களை ஊன்றி தன் முழுபலத்தோடு கன்றை ஊன்றித் தள்ளினாள். செவலையின் கதறலையும் தண்ணீரில் எழும் ஒழுங்கற்ற கூச்சலையும் யாரும் செவிமடுக்கவே இல்லை. கன்று மேலே வெளிவர ஆயிஷாவின் கால்கள் சேற்றில் இறங்கியிருந்தன. கன்று கால்களை உதைத்து வெளியேறிய போது ஆயிஷா ஆட்டிச குமிழிகளோடு தெருக்களிலிருந்து விடைகொடுத்திருந்தாள். அவள் சிருஷ்டியுலகம் நீருக்கடியில் புதிய பரிணாமமெடுத்தபோது நத்தைகள் அவள் கால்களை முத்தமிட்டன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...