2021க்கான ‘முகம்’ விருது ஶ்ரீநிவாச கோபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பின் மூலம் வழங்கப்படும் இவ்விருது, தமிழில் அச்சில் இல்லாத பல அரிய நூல்களை, தொழில்நுட்பத்தின் உதவியால் மின்-நூல்களாக இணையத்தில் தரவேற்றிப் பதிப்பிக்கும் ஶ்ரீநிவாச கோபாலனின் பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. ஶ்ரீநிவாச கோபாலன், திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் எனும் கிராமத்தில் பிறந்தவர். மின்னணு ஊடகவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று பெங்களூரில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 2017ஆம் ஆண்டு ‘அழிசி’ (Azhisi eBooks) என்ற மின்னூல் பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். நாட்டுடைமையான நூல்களையும் அச்சில் இல்லாத முக்கியமான நூல்களையும் மின்புத்தகமாக வெளியிட்டு, அவற்றை இலவசமாகவும் மிகக் குறைந்த விலையிலும் அளித்து வருகிறார். இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். புதிய படைப்பாளிகளுக்கான வல்லினம் சிறப்பிதழில் மாறிவரும் பதிப்பக முறை, மின்நூல் வாசிப்புச் சூழல் என அவரிடம் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டோம்.
கேள்வி: தமிழில் பதிப்புத்துறை என வரிசைப்படுத்தினால் அதில் மின் நூல்களுக்கு முன் – பின் எனப் பிரிக்கலாம் அல்லவா? தோராயமாக எந்த ஆண்டை அதன் தொடக்கமாகக் கொள்ளலாம்?
ஶ்ரீநிவாச கோபாலன்: 2017ஆம் ஆண்டிலிருந்து மின்னூல்களின் காலம் ஆரம்பமானதாகச் சொல்லலாம். அமேசான் நிறுவனம் 2007ஆம் ஆண்டு கிண்டில் ரீடரை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. 2012ஆம் ஆண்டில்தான் இந்தியாவுக்கு வந்தது. 2016ஆம் ஆண்டின் இறுதி வரை ஆங்கிலம் மட்டுமே வாசிக்கக்கூடிய நிலை இருந்தது. 2016ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து தமிழ், மலையாளம், குஜராத்தி, மராத்தி, இந்தி ஆகிய இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டன. நான் அப்போது கல்லூரிப் படிப்பின் இறுதியாண்டில் இருந்தேன். அப்போதே கிண்டில் பற்றியும் அதிலுள்ள வசதிகள் பற்றியும் அறிந்திருந்தேன். அதே ஆண்டில் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்ததும் புத்தகங்களைத் தவிர்த்து, நான் முதலில் வாங்கியது கிண்டில்தான். அப்போதே கணிசமான அளவுக்கு புத்தகங்கள் கிண்டிலில் கிடைத்தன. ஒரு தொடக்கமாக அமேசான் நிறுவனமே காலச்சுவடு, கிழக்கு, விகடன் போன்ற சில பதிப்பகங்களை கிண்டில் மின்னூல் சந்தைக்கு அழைத்து வந்துவிட்டது என நினைக்கிறேன். அந்தப் பதிப்பங்களின் நூல்கள் பல 2016ஆம் ஆண்டிலிருந்தே கிண்டிலில் உள்ளன. பல எழுத்தாளர்கள் சிறிது சிறிதாக தங்கள் படைப்புகளை கிண்டிலுக்குக் கொண்டு வந்தார்கள். பெரும்பாலான மின்னூல்களின் விலை அச்சு நூல்களின் விலையில் பாதி அல்லது அதற்கும் குறைவு. தாமாக மின்னூல்களை வெளியிடும் எழுத்தாளர்கள் வழங்கும் இலவச நூல்களும் அவ்வப்போது கிடைக்கின்றன. இவை தவிர கிண்டிலில் உள்ள தொழில்நுட்ப வசதிகள் என பல்வேறு அம்சங்கள் தொடர்ந்து வாசகர்களை மின்னூல் வாசிப்பை நோக்கி ஈர்த்தன. 2017ஆம் ஆண்டிலிருந்துதான் இந்த நகர்வு தொடங்குகிறது.
கேள்வி: நீங்கள் தொடங்கிய ‘அழிசி’ இலக்கிய வானொலி குறித்து கூறுங்கள்?
ஶ்ரீநிவாச கோபாலன்: ஊடகவியல் மாணவனாக எனக்கு வானொலி என்ற ஊடகத்தில் தனி நாட்டம் உண்டு. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறையில் சேர்ந்தபோது ஞானவாணி என்ற சமுதாய வானொலியில் சிறிய பங்களிப்புகளைச் செய்திருக்கிறேன். பின், துறை சார்பில் இயங்கிய ‘மனோவாணி’ என்ற இணைய வானொலியில் பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். அப்போது எங்கள் துறையில் எனக்கு மூத்தவராக இருந்த அண்ணன் யமுனை செல்வனுடன் பழகும் வாய்ப்பு அமைந்தது. அவர் பலவகைகளில் எனக்குத் துணையாக இருப்பவர். அவரது யோசனைகளைக் கேட்டு சில வானொலி நிகழ்ச்சிகளைச் செய்திருக்கிறேன். அவருடன் சில சமயங்களில் இலக்கியத்திற்காக ஒரு வானொலி நடத்துவது பற்றி பேசியிருக்கிறேன். இருவருக்கும் இந்த ஆவல் இருந்தது. எழுத்தாளர்களின் நேர்காணல்கள், படைப்புகள் குறித்த விவாதங்கள், படைப்புகளை எழுத்தாளரின் குரலிலேயே பதிவு செய்வது, இலக்கிய நிகழ்வுகள் குறித்த பதிவுகள் போன்றவை இடம்பெற வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறோம். ஆனால் ஒரு தொடக்கம் அமையவில்லை. 2016-ல் பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்ததும் ஓய்வான நேரத்தில் நானே கவிதைகள், கதைகள், கட்டுரைகளை வாசித்துப் பதிவு செய்யலாம் என்ற எண்ணத்துடன் ‘அழிசி இலக்கிய வானொலி’யை ஆரம்பித்தேன். குறுகிய காலத்துக்கு மேல் அது நீடிக்கவில்லை. அந்த முயற்சிக்குப் பொருட்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் இல்லை என்றே சொல்லலாம். எண்ணமாக இருந்தவைக் கைகூடியிருந்தால் ஒருவேளை ஆக்கபூர்வமாக ஏதாவது நிகழ்ந்திருக்கலாம்.
கேள்வி: அழிசி இயங்கியவரை அதன் உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு குறித்துக் கூறுங்கள்? கோவிட் பல புதிய ஊடக வடிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கால மாற்றத்தில் இப்போது அதுபோன்ற வானொலியை இன்னும் ஆக்கபூர்வமாக நடத்தும் சாத்தியமுண்டல்லவா?
ஶ்ரீநிவாச கோபாலன்: வானொலி பல்வேறு பரிமாணங்களைக் கடந்து இப்போது Podcast வடிவத்துக்கு வந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட ஒலிநூல் போன்றதுதான். கையில் ஒரு ஸ்மார்ட்ஃபோன் இருந்தால்போதும். அதிலேயே ஒலிப்பதிவு செய்யலாம். தேவையற்ற பகுதிகளை வெட்டி நீக்கி, தேவையான இடங்களில் இசை நறுக்குகளை இணைத்து ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்துவிடலாம். இதைச் செய்ய விதவிதமான செயலிகள் கிடைக்கின்றன. தயாரித்த நிகழ்ச்சியை வெளியிட Sound Cloud, Audio Mack, Google Podcasts, Spotify என பல்வேறு தளங்கள் உள்ளன. பலர் இலக்கியப் படைப்புகளை வாசித்து ஒலிப்பதிவு செய்து இணையத்தில் பதியும் பணியைச் செய்கிறார்கள். இந்த முயற்சிகளும் கணிசமானவர்களை இலக்கிய வாசிப்புக்குக் கொண்டுவரலாம். இந்த வகையில் ‘கதை ஓசை’ என்ற Podcast வானொலியை நடத்தும் தீபிகா அருண் குறிப்பிடத்தக்கவர். அவர் தொழில்முறை குரல் கலைஞர். புதுமைப்பித்தன், லா. ச. ரா. போன்ற எழுத்தாளர்களின் கதைகளைப் பொருத்தமான உணர்ச்சி பாவங்களுடனும் உரிய ஏற்ற இறக்கங்களுடனும் வாசித்து சிறப்பாகப் பதிவு செய்து பல்வேறு இணையதளங்களில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.
தென்றல் என்ற இதழ் தனது இணையத்தளத்தில் பல படைப்புகளை எழுத்து வடிவில் பதிவு செய்வதோடு நில்லாமல், ஒலி வடிவிலும் பதிவு செய்கிறது. சில செய்தி இணையத்தளங்களிலும் இந்த அம்சம் உண்டு. இணைய இலக்கிய இதழ்கள் Podcast தளங்களைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு இதழிலும் சில படைப்புகளையாவது ஒலி வடிவிலும் வழங்கலாம். காட்சி ஊடகத்தின் ஆதிக்கம் பெருகிவிட்ட இக்காலத்தில் Podcast கேட்பவர்கள் குறைவுதான். ஆனால், தமிழில் ஒலி நூல்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அதைப் பயன்படுத்திப் புத்தகங்களைக் கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
கேள்வி: ‘அழிசி’ சங்க இலக்கியம் மீதான உங்கள் ஆர்வத்தைக் காட்டுகிறது. அங்கிருந்துதான் உங்கள் வாசிப்பு தொடங்கியதா?
ஶ்ரீநிவாச கோபாலன்: ஆமாம். பள்ளிப் பருவத்திலிருந்து படித்து வந்த பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான ஈர்ப்புதான் காரணம். வெண்பாவுக்கும் விருத்தத்துக்கும் பொருள் தேடித்தான் வாசிக்கவே ஆரம்பித்தேன். அதுவும் கல்லூரிப் படிப்பில் சேர்ந்தபோதுதான். சங்க இலக்கிய உரைகளைப் படித்துக்கொண்டும், இருந்த தமிழ் வகுப்புகள் போதாமல் தமிழ்த்துறையில் போய் பாடம் கேட்டுக்கொண்டும் இருந்தேன். பிறகு, பலரையும்போல வரலாற்று நாவல்களை வாசித்தேன். அவை சலித்த பின் நவீன இலக்கிய வாசிப்புக்குள் வந்துவிட்டேன்.
கேள்வி: வரலாற்று நாவல்களிலிருந்து பின் நவீனத்துவ படைப்புகளை நோக்கிய தாவல் ஆச்சரியமாக உள்ளது?
ஶ்ரீநிவாச கோபாலன்: தீவிர இலக்கிய வாசிப்பு பலருக்கும் இப்படித் தற்செயல் நிகழ்வாகத்தான் தொடங்குகிறது. அரு.ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’தான் நான் வாசித்த கடைசி வரலாற்று நாவல் என நினைக்கிறேன். அது கல்கி பாணியில் எழுதிய படைப்பு அல்ல. தலைகீழ் ராமகாதை வடிவத்தில் எழுதப்பட்டது. யுத்த காண்டத்தில் ஆரம்பித்துப் பால காண்டத்தில் முடியும். சுபமாக முடித்து வைக்கப்பட்ட கதையும் அல்ல. அந்த நாவல்தான் தீவிர இலக்கிய வாசிப்புக்குத் திறப்பாக இருந்தது என்று சொல்லலாம்.
கேள்வி: சங்க இலக்கியத்தில் இருந்து தேவதேவனின் வாசகரான சூழலைச் சொல்லுங்கள்.
ஶ்ரீநிவாச கோபாலன்: நெல்லை பல்கலைக்கழக நூலகத்தில் நானும் அண்ணன் யமுனை செல்வனும் சேர்ந்து நிறைய வாசித்தோம். அவரது தேர்வுகள் எனக்கும் எனது தேர்வுகள் அவருக்கும் என பரிமாற்றம் செய்துகொள்வோம். அங்கு பலமுறை கண்ணில் பட்டுக்கொண்டிருந்த நூல் தமிழினி வெளியிட்ட ‘தேவதேவன் கவிதைகள்’ பெருந்தொகுப்பு. அவ்வளவு பெரிய கவிதை நூலை எடுத்து வாசிக்கவே துணிச்சல் வரவில்லை. எடுத்து எடுத்து பார்த்துவிட்டு வைத்துவிடுவேன். தமிழினி வெளியீடு சோடை போகாது என்ற நம்பிக்கையும் தேவதேவன் என்ற பெயரின் வசீகரமும் ஒருவழியாக என் தயக்கத்தைப் போக்கின. 2014 ஏப்ரலில் அந்த நூலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தை வீட்டுக்கு எடுத்து வந்ததும் முதலில் வாசித்த கவிதையை இன்றும் நினைவுகூர முடிகிறது.
சிலுவைப் பிரயாணம்
பாதத்திலொரு முள் தைத்து
முள் இல்லாப் பாதையெல்லாம்
முள்ளாய்க் குத்தும்
வழியை வலி தடுக்கும்
பெருமூச்சு விட்டு நிற்க – விடாது
உன் அகங்கரிக்கப்பட்ட முற்பகல்களெல்லாம்
உன்னைச் சாட்டையிட்டு நடத்தும்
எதிர்ப்படும் முகமெல்லாம்
வலிக்கு ஒத்தடமிடும் ஆனாலும்
நின்றுவிட முடியாது.
மாதக்கணக்காக வேறெதுவும் வாசிக்காமல் தேவதேவன் கவிதைகள் மட்டுமே வாசித்துக்கொண்டிருந்தேன். புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கவே மனமில்லை. அப்போதிருந்த கோட்டிக்காரத்தனத்தோடு ஆசிரியர் ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘தேவதேவனைத் தவிர்ப்பது…’ என்ற தலைப்பில் அந்தக் கடிதம் அவரது தளத்தில் வெளியானது. அந்தக் கடிதத்தை இப்போது வாசித்தால் நகைப்பூட்டுவதாக இருக்கிறது.
கேள்வி: ஜெயமோகனை தேவதேவன் வழிதான் கண்டடைந்தீர்களா?
ஶ்ரீநிவாச கோபாலன்: மின்னஞ்சல் தொடர்பு தேவதேவன் கவிதைகள் வழியாகத்தான் ஆரம்பித்தது. அதற்கு முன்பே ‘திசைகளின் நடுவே’ தொகுப்பை வாசித்திருந்தேன். நெல்லை பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பிறகு அதிகமாக வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. யமுனை அண்ணனுடன் அவரது தளத்தில் வெளியாகும் படைப்புகளைப் பற்றிப் பேசுவது வழக்கம். தேவதேவன் கவிதைகளைப் பற்றி அவர்தான் அதிகமாக எழுதியிருக்கிறார். தேவதேவன் கவிதைகளைப் படித்து அப்போது எனக்கிருந்த ஒருவித தவிப்பான மனநிலையை அவருக்கு எழுதலாம் என்று தோன்றியது. எழுதினேன். அவரது பதிலும் எனக்கு தேவைப்பட்ட திறப்பைத் தந்தது. அவரது தளத்தில் வெளியான கட்டுரைகள் மூலம்தான் பல நூல்களைப் பற்றி அறிந்து அவற்றைப் பதிப்பித்திருக்கிறேன். அவற்றில், சுந்தர சண்முகனாரின் ‘கெடிலக்கரை நாகரிகம்’, தொ.மு.பாஸ்கர தொண்டைமானின் ‘வேங்கடம் முதல் குமரி வரை’, தி.சே.சௌ.ராஜனின் ‘நினைவு அலைகள்’, டி.கே.சண்முகத்தின் ‘எனது நாடக வாழ்க்கை’ முதலியவை நினைவுக்கு வருகின்றன. அவரது பல்வேறு பரிந்துரைப் பட்டியல்களிலிருந்தும் நூல்களைத் தேர்தெடுத்து வெளியிட்டிருக்கிறேன். இவை போன்ற நூல்களை அறிமுகப்படுத்தி எழுதும்போது இவற்றை யாராவது வெளியிட முயற்சிக்கலாம் என்றும் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். அவை எனக்குத் தொடர்ந்து ஊக்கம் அளிப்பவையாக உள்ளன.
கேள்வி: 2017இல் நீங்கள் இப்பணியைத் தொடங்கினீர்கள். உங்கள் முன்னோடி யார்?
ஶ்ரீநிவாச கோபாலன்: எழுத்தாளர்கள் விமலாதித்த மாமல்லன், பா.ராகவன், என்.சொக்கன் ஆகியோர் கிண்டில் தமிழில் அறிமுகமான மிக ஆரம்ப கட்டத்திலேயே தங்கள் நூல்களை வெளியிட ஆரம்பித்துவிட்டனர். விமலாதித்த மாமல்லன் வேறு பல எழுத்தாளர்களும் தங்கள் நூல்களை வெளியிட முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். இலக்கியச் சிற்றிதழ்களின் தொகுப்புகளை மின் நூல்களாகக் கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் அவரே முன்னோடி. பல எழுத்தாளர்களிடம் கிண்டில் பற்றி எடுத்துக்கூறி நூல்களை வெளியிடும் முறையை அவர்களுக்குப் பழக்கியிருக்கிறார். கணினிப் பயற்சி இல்லாத எழுத்தாளர்களின் நூல்களை அவரே பொறுப்பேற்று மின்னூலாக மாற்றி வெளியிட்டிருக்கிறார். அத்தகைய எழுத்தாளர்களின் நூல்களை அவரே ஸ்கேன் செய்துவிடுவார். ஒருமுறை அவ்வாறு ஸ்கேன் செய்ததை தட்டச்சு வடிவில் மாற்றி, மெய்ப்பு பார்க்கும் வேலையில் உதவ ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என பேஸ்புக்கில் அறிவித்திருந்தார். நானும் சேர்ந்துகொண்டேன். நூலின் பக்கங்களை சில பகுதிகளாகப் பிரித்து என்னைப் போன்ற சிலரிடம் அனுப்புவார். நாங்கள் எங்களுக்கு அளிக்கப்பட்ட பக்கங்களை Word கோப்பாக மாற்றி அவருக்கு அனுப்புவோம். அவர் அவற்றைச் சேர்த்து ஒரே கோப்பாக மாற்றி நூலைப் பதிவேற்றுவார். மின்னூல்களை வாசிக்கத் தொடங்கியிருந்த எனக்கு இவ்வாறுதான் மின்னூல்களை வெளியிடுவது பற்றிய அறிமுகமும் கிடைத்தது. எழுத்தாளர்கள் விக்ரமாதித்யன், பிரம்மராஜன், வண்ணநிலவன், சமயவேல், சி.மோகன், ரவிக்குமார் எனப் பலரது நூல்கள் விமலாதித்த மாமல்லன் வாயிலாகத்தான் கிண்டிலில் கிடைக்கின்றன. அவர் கொண்டுவந்த ழ, கவனம், மீட்சி ஆகிய இதழ்கள் தொகுப்புகளும் முக்கியமானவை. இந்த இதழ்களைக் கிண்டிலில் மட்டுமே வாசிக்க முடியும் என்பதால் அதற்காகவே கிண்டில் வாசிப்புக்குள் வந்தவர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன்.
கேள்வி: ஒரு நூலை ஸ்கேன் செய்தால் அது படமாக மட்டுமே இருக்கும். அதனை மின் நூலாக மாற்ற எழுத்துகளை யூனிகோட்டாக மாற்ற வேண்டும் அல்லவா? அந்தத் தொழில்நுட்பம் குறித்து விளக்க முடியுமா?
ஶ்ரீநிவாச கோபாலன்: நூலை ஸ்கேன் செய்யும் போது கவனமாகச் செய்ய வேண்டும். தெளிவாகவும் கோணலின்றியும் ஸ்கேன் செய்துவிட்டால் வேலை சற்று எளிதாகும். ஸ்கேன் செய்த படங்களை கூகுள் ட்ரைவில் பதிவேற்ற வேண்டும். பின் ஒவ்வொரு படத்தையும் Google Doc கோப்பாகத் திறக்க வேண்டும். இவ்வாறு திறக்கப்பட்ட ஒவ்வொரு பக்கத்திலும் அந்தக் குறிப்பிட்ட பக்கத்தின் ஸ்கேன் செய்த படமும் அதிலுள்ள எழுத்துகளும் இருக்கும். இப்படிக் கிடைக்கும் Doc கோப்புகளிலிருந்து எழுத்துகளை மட்டும் வரிசையாக Copy செய்து தொகுத்து, நூலின் தட்டச்சு வடிவத்தை உருவாக்கிக்கொள்ளலாம். இது சற்று கவனமாகவும் பொறுமையாகவும் செய்யவேண்டிய வேலை. இதற்குப் பின் நம்மிடம் நூலின் முழுமையான தட்டச்சு செய்யப்பட்ட யூனிகோட் எழுத்துகளைக் கொண்ட கோப்பு இருக்கும். ஆனால், அதில் சிற்சில பிழைகள் இருக்கலாம். ஸ்கேன் செய்தது மங்கலாக இருந்தால் ஒற்றெழுத்துகளுக்கு புள்ளிகள் இல்லாமல் இருக்கும். ‘த’ வரவேண்டிய இடத்தில் க இருக்கும். இதுபோல இன்னும் சில சின்ன பிழைகள் இருக்கும். இவற்றைத் திருத்த ஒருமுறை கவனமாக வாசிக்க வேண்டும். கணினியைக் கையாளத் தெரிந்தவர்கள் ஒருமுறை முயன்றால் தாமாகவே இதைக் கற்றுக்கொள்ளலாம். செய்முறை விளக்க வீடியோக்களும் இணையத்தில் உள்ளன.
கேள்வி: நூல்களை பதிப்பிக்கும் முடிவுக்கு செல்ல எது உங்களுக்கு உதவுகின்றது. அதாவது ஒரு நூலின் எந்த அம்சத்தின் அடிப்படையில் அதை பதிப்பிக்க வேண்டியது அவசியம் என்று முடிவு செய்கிறீர்கள்? கலந்தாலோசிக்கும் நண்பர் குழு உள்ளனரா?
ஶ்ரீநிவாச கோபாலன்: பெரும்பாலும் இந்த நூல் முக்கியமானதென்று ஒருவர் சுட்டிக்காட்டியதை வாசித்து, அதன் உள்ளடக்கம் என்னையும் கவர்ந்தால் மின்னூலாக்க முடிவு செய்கிறேன். கலாமோகனின் ‘நிஷ்டை’ தொகுப்பைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அதை மின்னூலாக வெளியிடலாம் என்று தெரிவித்தார். அவரும் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனும் சேர்ந்து ஆசிரியரின் அனுமதியையும் பெற்றுத் தந்தார்கள். பாவண்ணன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், அ.கா.பெருமாள் ஆகியோரின் வழியாக பல நூல்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்துள்ளது.
நாட்டுடைமையாகியுள்ள புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், க.நா.சுப்ரமண்யம், லா.ச. ராமாமிருதம் முதலியவர்களின் படைப்புகளை முழுமையாக வெளியிடும் முயற்சியே பெரும்பாலான காலத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது. இவர்களது படைப்புகளில் முடிந்தவரை கிடைக்கும் அனைத்தையும் வெளியிட விரும்புகிறேன். தவிர, காந்தி பற்றிய பழைய நூல்கள் எது கிடைத்தாலும் அவற்றை வெளியிட முயல்வேன். காந்தி பற்றிய எல்லா நூலிலும் ஏதாவதொரு அபூர்வத் தகவல் கிடைக்கத்தான் செய்கிறது. எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியன் காந்தி நூல்களை அறிமுகப்படுத்தியும் கொடுத்தும் உதவுகிறவர். நண்பர் சு.அருண் பிரசாத் பல பழைய புத்தகக் கடைகளில் தொடர் வாடிக்கையாளர். நான் தேடும் நூல்களை எல்லாம் அவரும் தேடுகிறார்.
த.நா.குமாரஸ்வாமி, த.நா.சேனாபதி, ஆர்.ஷண்முகசுந்தரம், ராஜம் கிருஷ்ணன் போன்றோரின் மொழிப்பெயர்ப்பில் வெளியான படைப்புகள், பிற இந்திய மொழி படைப்புகளின் தமிழாக்கங்கள், நேரு, ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்களின் சுயசரிதைகள், உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை போன்ற பழந்தமிழ் அறிஞர்களின் பல கட்டுரைகள் எல்லா காலத்திலும் முக்கியத்துவத்தை இழக்காதவை. நான் முடிவு செய்யவே அவசியமின்றி, பலரால் நிறுவப்பட்டுவிட்ட நூல்கள் பல உள்ளன. பலவற்றைத் தேடிப் பிடிக்கவேண்டியிருக்கிறது. பலவற்றில் பதிப்புச் சிக்கல். அவை முழுவதையும் பதிப்பித்து முடிக்கவே இந்த ஆயுள் போதாது.
கேள்வி: இவ்வளவு நுணுக்கமான அயற்சியூட்டும் பணிகளைத் தனியாகவே செய்கிறீர்களே; ஒத்த சிந்தனை உள்ள நண்பர்களைத் துணைக்கு வைத்துக்கொள்ளலாமே?
ஶ்ரீநிவாச கோபாலன்: நண்பர்களையும் சேர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறேன். அவர்கள் ஓரளவுக்கு மேல் இதில் ஆர்வம் காட்டவில்லை என நினைக்கிறேன். சு.அருண் பிரசாத், யமுனை செல்வன், சுரேஷ், பாலசுந்தர், கணேஷ் பெரியசாமி ஆகியோர் சில நூல்களை மெய்ப்பு திருத்துவதில் உதவியுள்ளனர். சில நூல்களை அவர்களே வெளியிட்டிருக்கிறார்கள். பிற பணிகளில் உள்ள வேலைகளுக்கு இடையில் அவர்களால் தொடர்ச்சியாக இதில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால், கிடைக்காத புத்தகங்களைத் தேடுவதில், குறிப்பிட்டுப் பெயர் சொல்ல முடியாதபடி சாத்தியமான எல்லாரிடமும் உதவியை நாடுகிறேன். அனைவரும் கூடியவரை உதவுகிறார்கள்.
இந்த வேலையின் மேலோட்டமான செய்முறையை எளிதாகப் பிறருக்குச் சொல்லிக்கொடுக்கலாம். தொடர்ந்து செய்யும்போது பல குழப்பங்கள், தடைகள் வரும். அவற்றைப் பொருட்படுத்தாமல் கடந்து வரும் பொறுமையும் ஆர்வமும் இருக்கவேண்டும். உதாரணமாக, பழைய நூல்களில் அடிக்கடி வரும் சொற்களுக்கு சில குறியீடுகளைக் காணலாம். உதாரணமாக, உ.வே.சா. தனது கட்டுரைகளில் ஒருவரின் பெயரை எழுதும்போது சில சமயம் ஒரு குறியீட்டையும் முன்னொட்டாகச் சேர்த்து எழுதியிருப்பதைப் பார்க்கலாம். அதற்கு ‘மகா ராஜ ராஜ ஶ்ரீ’ என்று பொருள். இதைப்போல ‘மேற்படி’, ‘தேதி’, ‘மாதம்’, ‘ஆண்டு’ என்ற சொற்களை எழுதுவதற்குப் பதிலாகவும் ஒரு குறியீடு இடப்பட்டிருக்கும். இவற்றை மின்னூலில் அப்படியே போடமுடியாது. அதற்கு வாய்ப்பிருந்தாலும் அப்படியே பயன்படுத்தினால் இப்போதுள்ள வாசகருக்குப் புரியாது. குறியீடுகளுக்குப் பதிலாக அவை தாங்கி நிற்கும் பதங்களையே அவ்விடங்களில் குறிப்பிட வேண்டும். இந்த மாதிரி ஐயங்கள் எழுந்தபோது சுரேஷ் பிரதீப் உதவியிருக்கிறார். இன்னும் சில நூல்களில் பெரிய அட்டவணை இருக்கும் (எ.கா.: சுந்தர சண்முகனாரின் ‘கெடிலக்கரை நாகரிகம்’). கொடி வழி, வரைபடம் போன்றவை நூல்களில் நீண்டதாகவும் தெளிவின்றியும் இருக்கும். அவற்றை அப்படியே அச்சுப் புத்தகத்தில் உள்ளபடி பயன்படுத்த முடியாது. நாமே மின்னூலுக்காக மீண்டும் வரைய வேண்டும் (எ.கா.: மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘இலங்கை வரலாறு’). ஆய்வு நூல்கள் என்றால் நூற்றுக்கணக்கான அடிக்குறிப்புகள் இருக்கும். மின்னூல் தயாரிக்கும்போது அவற்றைக் கவனமாகச் சேர்க்கவேண்டும். பழைய படங்களை முடிந்தவரை மெருகேற்ற வேண்டும்.
கேள்வி: ஒரு நூலை மின்னூலாக்க அதிகபட்ச கால அளவு எவ்வளவு ஆகும்? மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்ட நூல் எது?
ஶ்ரீநிவாச கோபாலன்: அப்படி எதையும் சொல்லத் தோன்றவில்லை. புத்தகத்தின் நிலையைப் பொறுத்து கால அளவு கூடவும் குறையவும் செய்யலாம். பெரும்பாலும் படங்கள், அட்டவணைகள், அடிக்குறிப்புகள் அதிகமாக உள்ள நூல்களை முடிக்க அதிக காலம் பிடிக்கும். சில சமயம் அச்சுப் பிரதியாகக் கிடைத்த நூலை ஸ்கேன் செய்யும்போது தாமதமாகிவிடும். பழைய தாள்களைப் பக்குவமாகக் கையாண்டு நேர்த்தியாக ஸ்கேன் செய்வது சவாலாகிவிடும். மொபைல் போனிலேயே ஸ்கேன் செய்கிறேன். எந்த நூலையும் ஸ்கேன் செய்வதற்காக அதன் கட்டைப் பிரித்ததில்லை. அதை நான் விரும்புவதில்லை. எனவே, பைண்டிங் செய்யப்பட்ட நிலையில் தெளிவாகவும் கோணல் இல்லாமலும் ஸ்கேன் செய்ய முயல வேண்டும்.
நூலில் ஏதாவது ஐயம் வந்தால் தடை ஏற்படும். ‘ஆரோக்கிய நிகேதனம்’ நாவலில் முதல் அத்தியாயம் எங்கே தொடங்குகிறது என்பதே தெரியவில்லை. ‘ஒரு குறிப்பு’ என்ற ஆரம்பப் பகுதிக்குப் பின், 2 என்ற எண்ணுடன் அடுத்த அத்தியாயம் இருந்தது. என்னிடம் இருந்தது முதல் பதிப்பு. சாகித்ய அகாடமியே வெளியிட்ட மறுபதிப்பையும் மற்றொரு பதிப்பகத்தின் மறுபதிப்பையும் பார்த்தேன். அவற்றிலும் அப்படியே இருந்தன. பின், ஆங்கிலப் பதிப்பில் பார்க்கலாம் என்று தோன்றி நண்பர் ஒருவரிடமிருந்த ஆங்கில நூலில் பார்த்தேன். அதில், ‘ஒரு குறிப்பு’ என்ற பகுதிக்குப் பின் 1, 2, 3 என வரிசையாக அத்தியாயங்கள் இருந்தன. ஆங்கிலத்தில் அத்தியாயம் 1 தொடங்கும் இடத்தை வைத்து தமிழிலும் அத்தியாயம் 1 ஐச் சேர்த்தேன். மேலும், அந்த நாவலில் ஒரே பாத்திரத்தின் பெயர் மதி, மோதி என வெவ்வேறு விதமாக இருந்தது. இன்னும் சில பெயர்களும் இப்படி மாறுபட்டிருந்தன. அவற்றையும் ஆங்கிலப் பதிப்பின் உதவியால் சீர் செய்தேன். இதனால், அந்த நூலை வெளியிடுவது தாமதமானது மட்டும் ஞாபகம் இருக்கிறது. சில சமயம் நான் எடுத்துக்கொள்ளும் இடைவேளைகள் நீண்டதால் அதிக காலம் ஆகியிருக்கலாம்.
பழைய சிற்றிதழ்களின் தொகுப்புகளை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. இதழ்கள் என்றால் பெரும்பாலும் இரண்டு Column கொண்டவையாக இருக்கும். ஒவ்வொரு பக்கமும் இரண்டு பக்கங்களுக்குச் சமம். எனவே ஒவ்வொன்றையும் இரு பாதிகளாகப் பிரித்துக்கொள்வது கூடுதல் வேலை. மெய்ப்பு நோக்குவதும் இன்னும் கவனமாகச் செய்யவேண்டியிருக்கும். அதனால், கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளலாம். இப்போது, முதல்முறையாக ‘எழுத்து’ இதழ்களை வெளியிட சி.சு.செல்லப்பாவின் மகன் சி.சுப்ரமணியன் அவர்களிடம் பேசி அனுமதி பெற்றிருக்கிறேன்.
கேள்வி: இதுவரை நீங்கள் அவ்வாறு மின் நூல்கள் ஆக்கிய மிகப் பழமையான கிடைப்பதற்கு அரிய நூல் என எதைச் சொல்வீர்கள்?
ஶ்ரீநிவாச கோபாலன்: புதுமைப்பித்தனின் ‘நாரத ராமாயணம்’ நூலை முக்கியமானதாகக் கருதுகிறேன். அது 1955ஆம் ஆண்டு ஸ்டார் பிரசுரம் வெளியீடாக முதல்முறை வெளியானது. அவரது துணைவியாரிடமிருந்து கையெழுத்துப் பிரதியைப் பெற்று நூலாக்கியுள்ளனர். அந்தப் பதிப்புக்குப் பின் ஐந்திணை பதிப்பகமும் புதுமைப்பித்தன் பதிப்பகமும் அதை மீண்டும் வெளியிட்டுள்ளன. ஐந்திணை பு.பி. படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டபோது நாரத ராமாயணத்தை மொழிபெயர்ப்புகளுடன் சேர்த்திருக்கிறது. இந்நூலின் ஒரு பகுதியான ‘ரகுவம்ச பராக்கிரம பர்வம்’ அத்தொகுப்பில் தனிக்கதைபோல இடம்பெற்றுள்ளது. புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டபோது ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட முதல் பதிப்பில் இடம்பெற்ற பதிப்புரையைச் சேர்க்கவில்லை. அவசியமற்ற திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. நூல் விவரப் பக்கத்தில் அதுதான் முதல் பதிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளனர். வேறு பதிப்புகள் வந்ததாகத் தெரியவில்லை. வெவ்வேறு புதுமைப்பித்தன் நூல் தொகுப்புகளிலும் ‘நாரத ராமாயணம்’ இடம்பெறவில்லை. நான் எனக்குக் கிடைத்த ஸ்டார் பிரசுரப் பதிப்பை வைத்து கிண்டிலில் வெளியிட்டேன். இதுவரை வெளியிட்டதில் அதிகம் வாசிக்கப்படும் நூல்களில் ஒன்று அது. இப்போது அச்சில் இல்லாத இந்நூலை விரைவில் நானே வெளியிடவிருக்கிறேன்.
ந.பிச்சமூர்த்தியின் ‘மனநிழல்’, தி.சே.சௌ.ராஜனின் ‘வ.வே.சு.ஐயர்’, காந்தியின் ‘இந்திய சுயராஜ்ஜியம்’ ஆகியவை நீண்ட காலம் அச்சில் இல்லாமல் இருந்தன. அவற்றை கிண்டிலில் வெளியிட்டபோது அதிகமாக வாசிக்கப்பட்டன. சந்தியா பதிப்பகம் இந்த மூன்றையும் பின்னர் அச்சிலும் வெளியிட்டது. அம்பேத்கரின் ‘ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்’ என்ற நினைவுக் குறிப்புகளை அவரது எழுத்துகளின் தொகைநூலிலிருந்து எடுத்து வெளியிட்டேன். அதுவும் பரவலாகக் கவனிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. இந்த ஆண்டு அந்த நூலின் புதிய மொழிபெயர்ப்பை நீலம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நான் வெளியிட்ட டி.கே.சி.யின் ‘இதய ஒலி’ நூல் இப்போது காலச்சுவடு பதிப்பகம் மூலம் அச்சிலும் வந்திருக்கிறது.
உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூலைப் பல பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால், ப.சரவணன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட பதிப்பு மட்டுமே படங்களுடன் வந்திருக்கிறது. நானும் முதலில் கிண்டிலில் அந்நூலை படங்கள் இல்லாத பதிப்பாக வெளியிட்டேன். பின்னர், உ.வே.சா. நூலகப் பதிப்பிலிருந்து அறுபதுக்கு மேற்பட்ட படங்களை இணைத்து மற்றொரு பதிப்பையும் வெளியிட்டிருக்கிறேன். உ.வே.சா.வின் ‘சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்’ (1929), ‘ஶ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ (1933-34), ‘மகா வைத்தியநாதையர்’ (1936) போன்றவற்றையும் வெளியிட்டிருக்கிறேன். ‘பௌத்த மதத்துள் மும்மணிகள் என்று வழங்குகிற புத்த சரிதம், பௌத்த தருமம், பௌத்த சங்கம்’ என்ற நூல் உ.வே.சா.வின் மணிமேகலை பதிப்புக்கு இணைப்பாகச் சேர்க்கப்பட்டு பின் தனி நூலாகவும் வெளிவந்திருக்கிறது. அந்த நூல் இப்போது அச்சில் உள்ளதா என்று தெரியவில்லை. அதையும் வெளியிடும் எண்ணம் உள்ளது.
மனுபென் காந்தி எழுதி த.நா.குமாரஸ்வாமி மொழிபெயர்த்த ‘மகாத்மா காந்தியின் நினைவுக் கோவை’, ஜி.டி.பிர்லா எழுதிய ‘பாபூ அல்லது நானறிந்த காந்தி’, ‘கடல் கடந்த காந்தி’, காகா காலேல்கர் எழுதிய ‘காந்திக் காட்சிகள்’, தி.சு.அவினாசிலிங்கம் எழுதிய ‘நான் கண்ட மகாத்மா’ (1951) ஆகியவை இப்போது கிண்டிலில் மட்டுமே கிடைப்பவை. இந்த நூல்களை ‘காந்தி இன்று’ (www.gandhitoday.in) தளத்தில் தொடர் பதிவுகளாகவும் வெளியிட்டேன். அந்தத் தளத்தில் வெளியிட்ட ‘காந்திஜி ஒரு சொற்சித்தரம்’ என்ற நூல் காந்தி மறைவுக்குப் பின் பி.பி.சி.தயாரித்த வானொலி நிகழ்ச்சியின் எழுத்து வடிவம். ‘Talking of Gandhiji’ என்ற நூலின் தமிழாக்கம். வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் 1978ஆம் ஆண்டு வெளியிட்டது. அதே தளத்தில் ‘மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்’ என்ற ஜெர்மன் வானொலி நாடகத்தின் மொழிபெயர்ப்பையும் வெளியிட்டேன். 1949ஆம் ஆண்டே ஜெர்மனில் எழுதப்பட்டு ஒலிபரப்பான இந்த நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு 1995ஆம் ஆண்டு ‘ஏ.கே.கோபாலன் பப்ளிஷர்’ வாயிலாக பிரசுரமாகியுள்ளது.
க.நா.சு.வின் கட்டுரைத் தொகுப்புகள் பலவற்றை வெளியிடும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். ‘இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள்’ இப்போது அச்சில் இல்லாதது. தினமணி கதிரில் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. எனக்குக் கிடைத்த பிரதியில் சில பக்கங்களைக் காணவில்லை. ‘விமரிசனக் கலை’ என்ற நூலையும் வெளியிட்டேன். அது இப்போது விருட்சம் பதிப்பக வெளியீடாக அச்சிலும் கிடைக்கிறது. நாவல் கலை, கலை நுட்பங்கள், முதல் ஐந்து தமிழ் நாவல்கள், படித்திருக்கிறீர்களா?, இந்திய இலக்கியம், உலக இலக்கியம் ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் வரிசையில் இருக்கின்றன.
கு.ப.ரா.வின் கவிதைகளை அவர் ‘கருவளையும் கையும்’ என்ற தலைப்பில் வெளியிட விரும்பியிருக்கிறார். அப்படியொரு தொகுப்பு வெளியாகவில்லை. ஆனால், அவர் மறைவுக்குப் பின் வாசகர் வட்டம் வெளியிட்ட ‘சிறிது வெளிச்சம்’ தொகுப்பில் 15 கதைகள் மற்றும் முற்றுபெறாத நாவலுடன் 21 கவிதைகளும் இடம்பெற்றன. அவர் சுமார் 30 கவிதைகள் எழுதியதாகத் தெரிகிறது. அல்லயன்ஸ் பதிப்பக வெளியீட்டில் 29 கவிதைகள் உள்ளன. அவற்றை கு.ப.ரா.வின் விருப்பப்படி ‘கருவளையும் கையும்’ என்ற தலைப்பிலேயே வெளியிட்டேன். வங்கத்திலிருந்து அவர் மொழிபெயர்த்த பங்கிம் சந்திரரின் ‘ஹிரண்மயி’ (1937) என்ற நெடுங்கதையையும் வெளியிட்டிருக்கிறேன். கு.ப.ரா.வின் சகோதரி கு.ப.சேது அம்மாளின் கதைகள் சிலவற்றை வெவ்வேறு இதழ்கள் மற்றும் தொகுப்புகளிலிருந்து சேகரித்து ஒரு சிறு நூலை வெளியிட்டிருக்கிறேன். அ.கா.பெருமாள் எழுதிய ‘தமிழறிஞர்கள்’ நூலில் பல அரிய நூல்களைக் குறிப்பிடுகிறார்கள். அந்நூலின் மூலம் செல்வக்கேசவராய முதலியார் பற்றி அறிந்துகொண்டேன். அவரது ‘அபிநவக் கதைகள் (1921) என்ற நூலை கிண்டிலில் வெளியிட்டுள்ளேன். பாரதியைப் பற்றி வ.உ.சி. எழுதிய நினைவுக் குறிப்புகளை 1946ஆம் ஆண்டு அவரது மகன் ‘வி.ஓ.சி. கண்ட பாரதி’ என்ற நூலாக வெளியிட்டார். அதை ‘பாரதிக்கும் எனக்கும் பழக்கம்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறேன்.
ந.பிச்சமூர்த்தி சிறுவர்களுக்காக எழுதிய கதைகளை அவர் காலமான பிறகு சி.சு.செல்லப்பா தொகுத்து ‘காக்கைகளும் கிளிகளும்’ என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார். லா.ச.ராமாமிர்தம் எழுதிய ‘உண்மையின் தரிசனம்’ என்ற கட்டுரைத் தொகுப்பு, சுந்தர சண்முகனாரின் ‘கெடிலக்கரை நாகரிகம்’, தொ.மு.பாஸ்கர தொண்டைமானின் ‘இந்தியக் கலைச் செல்வம்’, பெ.தூரன் மொழிபெயர்த்த ‘கடல் கடந்த நட்பு’, அவரது ‘கொல்லிமலைக் குள்ளன்’ மற்றும் ‘சங்ககிரிக் கோட்டையின் மர்மம்’ போன்ற சிறார் நாவல்கள், ‘பாப்பாவும் பாரதியும்’, ‘பாரதியும் உலகமும்’ போன்ற பாரதி நூல்கள், ஆர். ஷண்முகசுந்தரத்தின் ‘பூவும் பிஞ்சும்’, ‘தனி வழி’, ‘பனித்துளி’ முதலிய நாவல்கள், பம்மல் சம்பந்த முதலியாரின் ‘நாடக மேடை நினைவுகள்’, ‘நான் கண்ட நாடகக் கலைஞர்கள்’, மீ.விநாயகம் அவர்கள் மொழிபெயர்த்த ஜே.சி.குமரப்பாவின் ‘கொள்ளையோ கொள்ளை’, வேதநாயகம் பிள்ளையின் ‘சுகுணசுந்தரி சரித்திரம்’ போன்றவை நான் மின்னூலாக வெளியிட்டுள்ள, இப்போது அச்சில் கிடைக்காத நூல்கள்.
தி.ஜ.ரங்கநாதன் எழுதிய சிறார் நூல்களான ‘பாப்பாவுக்கு காந்தி’, ‘பாப்பாவுக்கு காந்தி கதைகள்’ ஆகியவற்றை சாகர் ஓவியங்களுடன் வெளியிட்டிருக்கிறேன். தி.ஜ.ர.மொழிபெயர்ப்பில் வெளியான ‘குமாயுன் புலிகள்’ நூலின் மொழிபெயர்ப்பையும் வெளியிட்டுள்ளேன். இந்த நூலுக்கு மறுபதிப்புகள் வந்திருந்தாலும் நான் வெளியிட்ட பதிப்பில் ஆங்கில மூலத்திலிருந்து எடுக்கப்பட்ட ஏழு படங்கள், ஒரு வரைபடம், ஆங்கிலப் பதிப்பிற்கு அப்போதைய வைஸ்ராய் லின்லித்கோவும் எம்.ஜி.ஹல்லேட்டும் எழுதிய முன்னுரைகள், ஜிம் கார்பெட் எழுதிய சமர்ப்பணக் குறிப்பு ஆகியவை முதல் முறையாக இடம்பெற்றுள்ளன.
கா.அப்பாத்துரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பில் உலகின் முதல் நாவலாகக் கருதப்படும் ‘The Tale of Genji’ நூலை சாகித்ய அகாடமி 1965ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறது. அப்பாத்துரையவர்களின் எழுத்துகளை தமிழ்மண் பதிப்பகம் ‘அப்பாத்துரையம்’ என்ற தலைப்பில் பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. அவற்றிலிருந்து ‘ஜெஞ்சி கதை’யை எடுத்து மின்னூலாக்கினேன்.
இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் மறுபதிப்பு காணாத பழைய நூல்களை, அவர்களிடம் அனுமதி பெற்று மின்னூலாக வெளியிட்டிருக்கிறேன். அ.முத்துலிங்கம் அவர்களின் ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ என்ற முதல் கட்டுரைத் தொகுப்பு 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு மறுபதிப்பு செய்யப்படவில்லை. நான் ஆரம்பத்தில் வெளியிட்ட நூல்களில் ஒன்று அது. அதன் மறுபதிப்பை அச்சில் வெளியிடவும் அனுமதி அளித்திருக்கிறார். க.மோகனரங்கனின் ‘சொல் பொருள் மௌனம்’ என்ற விமர்சனக் கட்டுரைத் தொகுப்பையும் அவ்வாறு கிண்டிலில் வெளியிட்டேன். எழுத்தாளர்கள் அனோஜன் பாலகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் பிரதீப் ஆகியோரின் மூலம் க.கலாமோகனின் ‘நிஷ்டை’ (1999) சிறுகதைத் தொகுப்பைக் கொண்டுவரும் வாய்ப்பு கிடைத்தது. தேவதேவனின் முதல் 16 கவிதைத் தொகுப்புகள், ‘கவிதை பற்றி’ (1993) என்ற உரையாடல் நூல் ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளேன். ‘கவிதை பற்றி’ நூலில் அதுவரை வெளியான அவரது நேர்காணல்களையும் தொகுத்துச் சேர்த்து விரிவாக்கியிருக்கிறேன்.
கேள்வி: பெரிய நூல்களை அவ்வாறு செய்வது சவாலான பணி. உங்களுக்கு அது சலிப்பாகத் தோன்றியதில்லையா?
ஶ்ரீநிவாச கோபாலன்: தொடர்ந்து இயந்திரத்தனமாக ஒரே விதமான செயலைச் செய்யும்போது சலிப்பு ஏற்படுவது இயல்புதான். ஆனால், நூலின் வேலையை முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் சலிப்பு ஏற்படுவதில்லை என நினைக்கிறேன். சலிப்படைய வாய்ப்புள்ள வேலை ஸ்கேன் செய்து கூகுள் ட்ரைவில் ஏற்றிய படங்களை ஒவ்வொன்றாக Doc வடிவத்துக்கு மாற்றுவதுதான். மௌஸ் மீதே கையை வைத்துக்கொண்டு தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்கங்களைச் செய்யும்போது உள்ளங்கையில் வலி வந்துவிடும். அப்போது டச்பேடு, கீபோர்டு உதவியோடு கொஞ்ச நேரம் செய்யலாம். நான் முடிந்தவரை இடையிடேயே சிறிது நேரம் இடைவெளி விடுவேன். ஸ்கேன் செய்த பக்கங்களை தனித்தனி படங்களாக ட்ரைவில் ஏற்றுவதற்குப் பதில், 10-20 பக்கங்கள் கொண்ட PDF கோப்பாகப் பதிவேற்றலாம். அதையும் படங்களைச் செய்வதுபோல Google Doc கோப்பாகத் திறக்கலாம். இப்படிச் செய்யும்போது 10-20 பக்கங்கள் சில நொடிகளில் Doc கோப்பில் கிடைத்துவிடுகின்றன. ஆனால், நான் முயன்று பார்த்ததில் இந்த முறையைப் பயன்படுத்தும்போது பிரதியில் பிழைகள் நிறைய வருகின்றன. பழைய நூல்களில் ‘றா’ என்ற எழுத்து வரும் இடங்களில் ‘ரு’ இருக்கும். ‘னா’வுக்குப் பதில் ‘ன’, ‘ரூ’வுக்குப் பதில் ‘டூ’. இப்படிப் பிழைகள் அதிகம் இருக்கும். இத்துடன் ஒப்பிடும்போது தெளிவாக ஸ்கேன் செய்த படங்களைக் கொண்டு இந்த வேலையைச் செய்யும்போது இதுபோன்ற தவறுகள் நேர்வதில்லை. 99 சதவீதம் துல்லியமான கோப்பு கிடைக்கிறது.
ஆய்வு நூல்களில் உள்ள அடிக்குறிப்புகளை அவ்வப்போது கவனமாக அதற்குரிய முறையில் திருத்தி அமைக்க வேண்டும். சில நூல்களில் நூற்றுக்கணக்கான அடிக்குறிப்புகள் இருக்கும். ஒவ்வொன்றையும் கவனமாக உரிய முறையில் அமைப்பது சில சமயங்களில் பொறுமையைச் சோதிக்கும். நூலில் உள்ள தலைப்புகளின் கீழ் உப தலைப்புகள் இருந்தால் அவற்றைத் தவறவிடாமல் தனித்துத் தெரியும்படி செய்யவேண்டியிருக்கும். சில பழைய நூல்களில் பத்திகளுக்கு இடையே போதிய இடைவெளி இல்லாமல் இருக்கும். அப்போது இரண்டு பத்திகள் சேர்ந்து ஒரே பத்தியாகச் சேர்ந்துவிடும். இதையெல்லாம் படத்திலிருந்து Doc வடிவுக்கு மாற்றிய கையோடு கவனித்து அவ்வப்போது சீரமைத்துவிடுவது வசதி.
கவிதைப் புத்தங்கங்களை இந்த முறையில் செய்வது சரிப்படாது. கவிதை நூலை இப்படிச் செய்யும்போது, Doc கோப்பில் உள்ள Text வரிக்கு வரி அடிபிறழாமல் இருக்காது. மூன்று பத்திகளாகவும் பத்து வரிகளாவும் பிரித்து எழுதப்பட்ட கவிதை ஒரே பத்தியாகச் சேர்ந்து கிடக்கும். பிறகு அதை வரிக்கு வரி சரியான இடத்தில் Enter பட்டனை அழுத்தி ஒழுங்கு செய்யவேண்டும். இது மிகச் சோதனையான வேலை.
கூகுள் இதற்கும் உதவி செய்கிறது. கூகுள் லென்ஸ் (Google Lens) மூலம். இதை மொபைலில்கூடச் செய்யலாம். ஸ்கேன் செய்த படங்களை மொபைலில் வைத்துக்கொண்டு Photos செயலியில் படங்களைத் திறந்தால், இந்த லென்ஸ் ஐகான் (icon) இருக்கும். அதைத் தொட்டால், அந்தப் படத்தில் உள்ள கவிதை கிட்டத்தட்ட அடிபிறழாமல் Text ஆகக் கிடைக்கும். வெட்டி ஒட்டித் தொகுத்துக்கொள்ளலாம். ஸ்கேன் செய்த கவிதை நூலின் படங்களை ட்ரைவில் ஏற்றிவிட்டுக், கணினியில் Google Photos-க்குச் சென்றும் இதைச் செய்யலாம்.
கேள்வி: இத்தகைய சிக்கலான, நுட்பமான பணியைச் சோர்ந்துபோகாமல் பல ஆண்டுகளாகச் செய்ய எது உங்களுக்கு ஊக்கியாக உள்ளது?
ஶ்ரீநிவாச கோபாலன்: அடுத்தடுத்து பதிப்பிக்க வேண்டிய நூல்கள் கிடைத்துக்கொண்டிருப்பதுதான். வெளியிடத் திட்டமிட்டிருக்கும் நூல்களின் பட்டியல் மனதுக்குள் எப்போதும் இருக்கிறது. அதில் நாளுக்கு நாள் புதிய தலைப்புகள் சேர்ந்துகொண்டிருக்கின்றன. வாசகர்களிடம் ஆதரவு இருக்கிறது. அவ்வப்போது இல்லாத நூலை விரும்பிக் கேட்கும்போது அந்த நூலைப் பதிப்பிக்கவேண்டிய தேவை இருப்பதை உணர்கிறேன். எல்லாவற்றுக்கும் மேல் ஒரு நல்ல நூலை வெளியிட்டதும் கிடைக்கும் நிறைவே அடுத்ததை நோக்கி நகர்வதற்கான ஊக்கத்தைத் தருகிறது.
கேள்வி : அறிவுத்துறை சார்ந்த நூல்கள், இலக்கியநூல்கள், தனிமனித வரலாறுகள் என பல்வேறு நூல்களை நீங்கள் பதிப்பித்துள்ளீர்கள். இவற்றில் உங்கள் தனிப்பட்ட ரசனை, கவனம் எதில் உள்ளது?
ஶ்ரீநிவாச கோபாலன்: எல்லா விதமான நூல்களையும் வெளியிடவே விரும்புகிறேன். நாடக நூல்களில் எனக்கு ஆர்வம் இல்லை. அவற்றை இப்போதுள்ள வாசகர்கள் வாசிப்பதாகத் தோன்றவில்லை. சிறார்களுக்கான நூல்கள் இன்னும் அதிகமாக வெளியிட வேண்டும் என்று தோன்றுகிறது. சில சமயங்களில் வெளியிட விரும்பும் படைப்பு நாட்டுடைமையாகாததாகவோ பதிப்புரிமை பெற முடியாததாகவோ இருந்தால் விருப்பம் கைகூடாத லை உள்ளது. சாகித்ய அகாடமி மற்றும் என்.பி.டி. வெளியிட்ட பல மொழிபெயர்ப்புகள் PDF வடிவில் உள்ளன. அவற்றை வெளியிட விருப்பம்தான். ஆனால், முறையான அனுமதி பெறவேண்டும். அது கிடைப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை.
கேள்வி: இன்று கொரோனா காலத்தில் திரைப்படத்துறையின் எதிர்காலம் அதாவது திரையரங்கு வீழ்ச்சி மற்றும் OTT வெளியீடுகள் பற்றி ஊகிக்க முடிகின்றது. அதுபோல் நூல் பதிப்புத் துறையும் இனி அச்சு நூல்களின் இறங்குமுகமாக அமைந்து விடும் சூழல் உண்டா?
ஶ்ரீநிவாச கோபாலன்: அச்சு நூல்களுக்கு எப்போதும் வாசகர்கள் இருப்பார்கள். நானும் சில நூல்களை அச்சில் வாங்குவதையே விரும்புவேன். ஆனால், எதிர்காலத்தில் மின்னூல்களே அதிகம் விற்பனையாகும். நூல்கள் முதலில் மின்னூலாக வெளியாகி, அதிக வரவேற்பு பெறும் நூல்கள் அச்சிலும் வரும்.
கேள்வி: மின்நூல்களாக ஒருவர் தன் நூலை வெளியிடும்போது அது உடனடியாகத் தரவிறக்கப்பட்டு இலவசமாகப் பகிரப்படும் ஆபத்து உண்டல்லவா?
ஶ்ரீநிவாச கோபாலன்: மின்னூல்களைப் பற்றி எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் இருக்கும் முக்கியமான புகார் / கவலை இதுதான். அமேசான் தனது இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் மின்னூல்களின் கோப்புகளைப் பாதுகாக்க DRM (Digital Rights Management) என்ற பூட்டைப் போடுகிறது. இது தேவையா இல்லையா என்பதை நூலைப் பதிவேற்றும்போது தேர்வு செய்யவேண்டியிருக்கும். அனைவரும் இதற்கு Yes என்றுதான் சொல்கிறார்கள். இந்த DRM மூலம் கிண்டிலில் பதிவேற்றும் புத்தகக் கோப்பு தனித்துவமான Extension கொண்ட கோப்பாக மாறும். அந்தக் கோப்பை விலை கொடுத்து வாங்கி, கிண்டில் மென்பொருள் மூலமோ கிண்டில் ரீடர் மூலமோ மட்டுமே வாசிக்க முடியும். இந்த Extension தான் புத்தகத்தைப் பாதுகாக்கிறது. இந்தப் பாதுகாப்பைத் தகர்க்கும் வழி திருடர்களால் கண்டுபிடிக்கப்படுகிறது. உடனே அமேசான் நிறுவனம் வேறொரு Extension-ஐ மாற்றுகிறது. அதுவும் கொஞ்ச காலத்தில் மீறப்படுகிறது. இப்படியே மாற்றி மாற்றி நடக்கிறது. அதற்காக அமேசான் கிண்டில் ரீடரில் சில Firmware Update செய்திருக்கிறது. இந்த அப்டேட் செய்ய முடியாத, செய்யப்படாத பழைய கிண்டில் ரீடர்களிலிருந்துதான் திருட்டு தொடர்கிறது என்பது என் கணிப்பு.
கிண்டில் அன்லிமிட்டடில் இருக்கும் நூல்கள்தான் உடனே திருட்டு PDF ஆக வருகின்றன என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அன்லிமிட்டடில் இல்லாத நூல்கள்கூட திருடப்படுகின்றன. ஒரு எழுத்தாளருக்கு அவரது நூல்களை கிண்டிலில் வெளியிட உதவினேன். அவர் ஒருநாள் எனக்கு ஒரு PDF அனுப்பி, அது எப்படி வெளியிட்ட உடனே PDF வந்ததென்று கேட்டார். கைப்பட அறுநூறு பக்கங்கள் எழுதிய நூல் ஆறே நாட்களில் திருட்டு நூல்களை வாசிக்கும் குழுக்களுக்கு வந்துவிட்டதைச் சொல்லி வேதனைப்பட்டார். அந்த நூல் உட்பட அவரது பெரும்பாலான நூல்கள் அன்லிமிட்டடில் இல்லை. இருந்தாலும் அனைத்தும் PDF ஆக வந்துவிட்டதே என மீண்டுமொருமுறை போன் செய்து சொல்லி வருத்தப்பட்டார். இதுபோல மின்னூல் திருட்டு பற்றி எழுத்தாளர்கள் சொல்லும்போதெல்லாம் மேற்சொன்ன விஷயங்களை ஒருவாறு விவரிப்பேன். இந்தத் திருட்டுப் பிரச்னை அமேசான் கிண்டிலில் மட்டும் உள்ளது அல்ல. மின்னூல்களுக்கான எல்லா தளங்களுக்கும் இந்தச் சவால் உள்ளது. அந்த நிறுவனங்களும் திருட்டுக்கு முற்றுகாண முயன்றுகொண்டுதான் வருகின்றன. திருட்டு PDF உலகத்துக்கு அப்பால் உள்ள வாசகர்களை மனதில் கொண்டுதான் மின்னூல்களை வெளியிட வேண்டியுள்ளது என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது.
கேள்வி: ‘அமேசான் கிண்டில்’ மற்றும் ‘கூகுள் பிளே புக்ஸ்’ இரண்டில் எது பயனாளருக்கு எளிதான தளமாக உள்ளது?
ஶ்ரீநிவாச கோபாலன்: மின்னூலின் அடிப்படையான அம்சங்களில் இரண்டும் நிகரானவைதான். பெரும்பாலும் ப்ளே புக்ஸில் உள்ள நூல் கிண்டிலிலும் கிடைக்கிறது. ஒப்பீட்டளவில் கிண்டிலில் நூல்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக, தமிழ் நூல்கள். கூகுள் நிறுவனம் கிண்டில் போன்ற ஒரு ஈபுக் ரீடரை விற்பனைக்குக் கொண்டுவரவில்லை. அமேசான் கிண்டில் 2007 முதல் பல மாற்றங்களைக் கண்டு, வாசகர்களின் பயன்பாட்டுக்குப் பெருமளவு எளிதானதாக உருவாகி வந்திருக்கிறது. கூகுள் ஈபுக் ரீடரும் கிடைத்தால் அதுவும் வாசகர்களைக் கவரக்கூடும். இப்போதைய நிலையில் மின்னூல் சந்தையில் அமேசான் கிண்டில்தான் அதிகமான பயனாளர்களுடன் இருக்கிறது. Nook, Kobo போன்ற பிற மின்னூல் விற்பனைத் தளங்களும் எதிர்காலத்தில் இந்தியாவிலும் அறிமுகமாகலாம்.
எழுத்தாளர்களின் நோக்கில், நூலைப் பதிப்பிப்பதற்கு ப்ளே புக்ஸைவிட கிண்டில் சற்று எளிமையானதே. Word கோப்புகளையே கிண்டிலில் மின்னூலாக பதிவேற்றலாம். ப்ளே புக்ஸுக்கு epub தேவை. மின்னூலை விளம்பரப்படுத்துவதில் கிண்டிலைக் காட்டிலும் ப்ளே புக்ஸில் அதிகமான வசதிகள் இருக்கின்றன. ராயல்டியும் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. ஆனால், அதிகமான பயனஆளர் எண்ணிக்கை அடிப்படையில் கிண்டில்தான் முன்னிலையில் இருக்கிறது.
கேள்வி: அண்மையில் Bynge என்ற செயலி பிரபலமாகியுள்ளது. சாதாரணமாக கைபபேசியிலேயே நூல்களைப் பதிவிறக்கம் செய்து நூல்களை இலவசமாக வாசிக்க முடிகிறது. இதில் அதிக புத்தகங்கள் இல்லை என்றாலும் இது கிண்டில், கூகுளைவிட சுலபமாகத் தெரிகிறது. இதுபோன்ற செயலிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஶ்ரீநிவாச கோபாலன்: Bynge செயலில் வாசிப்பது தொடர்கதைகள்தான். நாவல்கள் தொடர்கதைகளாக வெளியாவதாகவும் கருதலாம். அதேபோல பல செயலிகள் உள்ளன. Bynge செயலியில் ‘நூல்கள்’ அதிகமாக வரவேண்டும். அப்போதுதான் மின்னூல் தளமாக மாறும். இப்போது பெயரளவுக்கு சில நாட்டுடைமையான நூல்கள் மட்டும் உள்ளன. இப்போதைக்குத் தொடர்களாகத்தான் படைப்புகள் வருகின்றன. பத்திரிகையில் வாசிப்பதைப் போன்ற அனுபவம்தான் அதில் கிடைக்கும். கிண்டில், ப்ளே புக்ஸ் போன்ற மின்னூல்களுக்கான தளங்களைப் போல அதைக் கருத முடியாது. எதிர்காலத்தில் மாற்றம் காணலாம்.
கேள்வி: மின்நூல்களைப் பற்றி எவ்வித புரிதலும் இல்லாத ஒருவர், இம்முயற்சியில் இறங்க முதலில் என்ன செய்யலாம்?
ஶ்ரீநிவாச கோபாலன்: எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் ‘அமேஸானில் மின் நூல் வெளியிடுவது எப்படி’ என்ற வழிகாட்டி நூலை எழுதியிருக்கிறார். அவருக்குப் பின் வேறு சில நூல்களும் இதே வகையில் வந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். மாமல்லனின் நூல்தான் சிறந்தது. படிப்படியாக மின்னூல் வெளியிடுவது பற்றி விளக்கும் நூல். இந்த நூலை பயன்கொண்டு கிண்டிலில் புத்தகங்களை வெளியிடப் பழகிக்கொண்ட பலர் இருக்கிறார்கள். தனது நூலை மின்னூலாக வெளியிட விரும்புவோர் இந்த நூலை வாங்கலாம். இதுவும் மின்னூல்தான். கணினி, மொபைல், டேப்லெட் என ஏதாவதொன்றில் கிண்டில் செயலியை நிறுவிக்கொண்டு வாசிக்கலாம்.
வாசகர்கள் கிண்டில் அல்லது ப்ளே புக்ஸ் செயலியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அதிகம் வாசிப்பவர்களுக்கு கிண்டில் ரீடர் பயனுள்ளது. இலவச நூல்கள், புதிய நூல்கள், சலுகைகள் முதலிய மின்னூல்கள் தொடர்பான தகவல்களை அழிசி (Azhisi e-Books) சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்கிறேன். அந்தப் பக்கங்களை கவனித்து வருவதும் மின்னூல் வாசகர்களுக்கு பயன்படக்கூடும்.
கேள்வி: தமிழில் பதிப்புத்துறை பல நல்ல இலக்கியங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சில பதிப்பகங்களில் வரும் நூல்கள் அதன் பதிப்பகத் தரத்தாலேயே கவனம் பெறுகின்றன. ஓர் எழுத்தாளர் அப்படி எந்தப் பதிப்பகத்தாரையும் கடந்துவராமல் சுயமாக நூல்களை பதிவேற்றிக்கொள்வது தரமான இலக்கிய வளர்ச்சிக்கு வழி வகுக்குமா? நீங்கள் இலக்கிய வாசகராகவும் இருப்பதால் கேட்கிறேன்.
ஶ்ரீநிவாச கோபாலன்: ஓர் எழுத்தாளர் தனது நூலை வெளியிட பதிப்பகத்தைச் சார்ந்திருக்கவேண்டிய நிலையைப் போக்குவதுதான் அமேசான் கிண்டில் போன்ற தளங்களின் நோக்கம். ஆனால், எழுத்தாளருக்கும் வாசகர்களுக்கும் பதிப்பகங்களின் பங்களிப்பு அவசியமானதுதான். பதிப்பகங்கள் தொடர்ந்து தங்கள் வெளியீட்டுத் தேர்வின் மூலம் தங்களுக்கு ஒரு தரத்தை நிர்ணயித்துக்கொள்கின்றன. வாசகர்கள் அந்த தரத்தை உறுதி செய்யும் நிலையில் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் வழியாக இல்லாமல், நேரடியாக நூல்களை வெளியிடும்போது வாசிக்கத் தேர்ந்தெடுக்கும் நூல்களின் மூலம் வாசகர்கள்தான் நூல்களின் தரத்தை நிர்ணயிக்க வேண்டியநிலை ஏற்படுகிறது. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் புத்தகமாக வெளியிடலாம் என்ற நிலை இருப்பதால் மின்னூல்கள் என்ற பெயரில் ஏராளமான குப்பைகளும் தினம்தோறும் குவிந்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இலக்கிய வளர்ச்சியில் அக்கறையுள்ள வாசகர்கள் எழுதும் விமர்சனங்களும் மதிப்புரைகளும்தான் தரத்தை நிர்ணயிப்பவை. தமது நூலைத் தாமே வெளியிடும் ஆசிரியர்களுக்கு பல வாசகர்களுடன் தொடர்ச்சியான உரையாடல் அமைகிறது. ஓர் ஆசிரியரின் அனைத்து நூல்களும் கிண்டிலில் கிடைக்கும்போது பல வாசகர்கள் ஆர்வத்துடன் அந்த ஆசிரியரின் அனைத்து ஆக்கங்களையும் வரிசையாக வாசிக்கிறார்கள். பலருக்கு இந்தத் தொடர் வாசிப்பு மின்னூல்களால்தான் சாத்தியமாகியிருக்கிறது.
அமேசான் தளத்தில், குறிப்பாக தமிழ் நூல்களுக்கு, தரம் குறித்த எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. தினமும் நூற்றுக்கணக்கில் குவியும் நூல்களை தரம் பார்த்து வடிகட்டிய பின் வெளியிட எந்த நிறுவனத்துக்கும் நேரம் இருக்காது. அமேசானில் நூலைப் பதிவேற்றியதும் சின்ன சோதனை செய்யப்படுகிறது. பதிவேற்றிய நூல் சில மணிநேரங்கள் In Review நிலையில் இருக்கும். இந்தக் கட்டத்தில் சிறு மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு பின் வெளியிட அனுமதிக்கப்படும். ஆனால், இந்த மதிப்பீட்டுக் கட்டத்தில் நூல்களில் இருக்கவேண்டிய குறைந்தபட்ச வடிவமைப்பு சார்ந்த ஒழுங்கு மட்டுமே கவனிக்கப்படுகிறது. பல சமயம் அதுவும் கவனிக்கப்படாமலே நூல்கள் வெளியாகின்றன. ஒருவர் வெற்றுப் பக்கங்களைக் கொண்ட கோப்பை ஒரு நூலாகப் பதிவேற்றி, அதையும் வெளியிட அனுமதித்திருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து பதிவேற்றப்படும் ஆங்கில நூல்களுக்கு வெளியிட அனுமதிக்கும் முன், தரத்தையும் ஓரளவுக்கு பரிசீலிக்கும் பணியைச் செய்ய ஆசிரியர் குழு ஒன்றை அமைத்திருக்கிறார்கள் என அறிகிறேன். அதேபோன்ற ஆசிரியர் குழு தமிழ் நூல்களுக்கும் அமைக்கப்படுவது அவசியம். முறையான அனுமதி பெறாமல் பல எழுத்தாளர்களின் நூல்கள் திருட்டுப் பிரதிகளாக வந்துகொண்டிருக்கின்றன. கி. ராஜநாராயணனின் ‘நாற்காலி’, சி. சு. செல்லப்பாவின் ‘சரசாவின் பொம்மை’, நரசய்யாவின் ‘கடலோடி’ போன்றவை சமீபத்தில் திருட்டுப் பிரதிகளாக வெளியாகியுள்ளவை. இவை பற்றிப் புகார் கொடுக்கும் வசதி இருந்தாலும் ஒரு வாசகர் தாமாகச் சமர்ப்பிக்கும் புகார்கள் லேசில் ஏற்கப்படுவதில்லை. ‘சரசாவின் பொம்மை’ தொகுப்பின் திருட்டுப் பிரதியை எவரோ வெளியிட்டிருப்பது பற்றி சில மாதங்கள் முன்பே செல்லப்பாவின் கதைகளை வெளியிட்டிருக்கும் ‘எழுத்து பிரசுரம்’ நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தினேன். அவர்கள் நடவடிக்கை எடுத்தார்களா என்று தெரியாது. ஆனால், இன்னும் அந்தத் திருட்டுப் பிரதி நீக்கப்படவில்லை. அதற்கு முன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘சூரியோதயம் முதல் உதய சூரியன் வரை’ என்ற நூலை யாரோ இலவசமாக வெளியிட்டிருப்பதை கவனித்து அந்தப் பதிப்பகத்துக்குத் தெரியப்படுத்தினேன். சில மணிநேரங்களில் அந்த நூல் நீக்கப்பட்டது. இதேபோல கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட நூல் ஒன்றைப் பற்றியும் பதிப்பகத்தாரிடம் தெரிவித்ததும் நீக்கப்பட்டது. காலச்சுவடு, கிழக்கு, விகடன் போன்ற பதிப்பகங்கள் அமேசானுடன் சிறப்பு ஒப்பந்தத்தில் உள்ளதால், அவர்களுக்கு மின்னூல் வெளியீட்டில் கூடுதல் வசதிகள் கிடைப்பதுடன் புகார்களும் உடனடியாக கூடுதல் முக்கியத்துவத்தும் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. இதுபோன்ற கள்ளப் பிரதிகளைத் தடுப்பதற்காகவாவது அமேசான் நிறுவனம் இந்த விஷயத்தில் அனுபவம் உள்ள ஒரு குழுவைப் பணியில் அமர்த்தலாம்.
கேள்வி: அமேசான் கிண்டல் நிறுவனம் அதிகம் வாசிக்கப்படும் நூல்களுக்கான போட்டிகளை நடத்துவதுண்டு. அதில் வெற்றிபெறும் நூல்களும் இலக்கியச் சூழலில் அறிமுகமாகாதவையே. அமேசான் போன்ற நிறுவனங்கள் நூல்கள் பரவலை எளிதாக்கும் அதேவேளை இலக்கியச் சூழலைப் பலவீனப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஶ்ரீநிவாச கோபாலன்: எப்போதும் இலக்கியத்துக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறதுதானே. வெகுஜன இதழ்கள் பெருகிய காலத்தில்தான் இலக்கியச் சிற்றிதழ்களும் வெளியாகி வந்திருக்கின்றன. அதே க்கு தொடர்கிறது என நினைக்கிறேன். அமேசான் நடத்தும் போட்டியில் முதல்முறையாக தமிழ் படைப்புகளுக்கும் பரிசளிப்பது பற்றி அறிவித்தவுடன் நானே எழுத்தாளர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து போட்டியில் பங்கேற்கச் செய்யலாம் என்று முயன்றேன். ஆனால், போட்டியை அரசியல் பின்புலம் உள்ள குழுக்கள் கையாடல் செய்து பரிசு பெறுவது அந்த ஆண்டிலும் அதற்கடுத்த ஆண்டிலும் தெரியவந்தது. இந்த ஆண்டும் கிட்டத்தட்ட அப்படித்தான் நடந்திருக்கிறது என நினைக்கிறேன். ஒரு பெருநிறுவனம் விளம்பர நோக்கில் நடத்தும் போட்டி அது. வணிக எழுத்துக்கானது. அதில் இலக்கியத்துக்கு இடம் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
கேள்வி : காந்தி பற்றிய சில நூல்களை நீங்கள் மின்னூலாக பதிப்பித்த பிறகு அந்த நூல்களின் உரிமை சில காந்திய அமைப்புகளிடம் இருப்பதை அறிந்து உங்கள் பதிப்புகளை மீட்டுக் கொண்டதாக வேறு ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தீர்கள்? மின்நூல் பதிப்பு அல்லது மறுபதிப்பு வெளியிடுவதில் பதிப்புரிமை சட்டங்கள் தடையாகின்றதா?
ஶ்ரீநிவாச கோபாலன்: எனக்குத் தெரிந்தவரை மின்னூல்களுக்காக சிறப்பான சட்ட விதி ஏதும் இல்லை. அச்சு நூல்களுக்கான பதிப்புரிமைச் சட்டங்களைத்தான் மின்னூல்களுக்கும் கொள்ள வேண்டும். பொதுவாகவே இந்தியாவில் பதிப்புரிமை அல்லது காப்புரிமை சார்ந்த சட்டங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. இருக்கும் சட்டங்கள் தொடர்பாக குறிப்பிடத்தகுந்த வழக்குகளோ தீர்ப்புகளோ மிகக் குறைவு. எனவே, மின்னூல்களுக்கு மட்டுமின்றி பொதுவாகவே காப்புரிமைச் சட்டத்தில் பல ஐயங்கள் உள்ளன.
ஆரம்பத்தில் நாட்டுடைமையானவை எதையும் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்ற அளவில்தான் நூல்களுக்கான காப்புரிமை பற்றி தெரிந்துவைத்திருந்தேன். இந்தியாவைப் பொறுத்தவரை, எழுத்தாளர் மறைந்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டு முதல் 60 ஆண்டுகள் வரை அந்த எழுத்தாளரின் படைப்புகளுக்கான உரிமை அந்த ஆசிரியரின் குடும்பத்தினரிடம் இருக்கும். 60 ஆண்டு காலத்துக்குப் பின், அந்த எழுத்தாளரின் படைப்புகள் தாமாகவே நாட்டுடைமையாகும். இந்த 60 ஆண்டுகள் என்ற கால வரையறை ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடுகிறது. இதன்படி இந்தியாவில் நூலாசிரியர் காலமான பின் 60 ஆண்டுகள் கழிந்ததால் நாட்டுடைமையான படைப்புகள் / எழுத்தாளர்கள் என்ற பட்டியல் ஒன்றைப் போடலாம். இன்றைய தேதியில் 1962ஆம் ஆண்டுக்கு முன் மறைந்த இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாகிவிட்டன எனலாம். எடுத்துக்காட்டாக, கு.ப.ராஜகோபாலன் படைப்புகள் இந்த வகையில் நாட்டுடைமையானவை.
எழுத்தாளர் மறைந்து 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் முன்பே அல்லது வாழும் காலத்திலேயே சில எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் படைப்புகளை நாட்டுடைமையாக்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழக அரசு மட்டுமே இப்படிச் செய்கிறது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஓர் எழுத்தாளரின் படைப்புகளை அவருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ ஒரு தொகையைக் கொடுத்து, அந்த எழுத்தாளரின் நூல்களுக்கான பதிப்புரிமையைப் பொதுவாக்குகிறது. இது எப்போதாவது நடப்பது. கடைசியாக, 2019ஆம் ஆண்டு மேலாண்மை பொன்னுசாமி, பொன்.சௌரிராஜன், மு.தமிழ்க்குடிமகன் ஆகியோரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. ஐராவதம் மகாதேவன் படைப்புகளை நாட்டுடைமையாக்கப் பரிசீலிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. நாட்டுமையாக்கத் தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட தொகை ஆகியவை விமர்சிக்கப்பட்டுள்ளன.
மூன்றாவதாக இந்த இரண்டு வகையிலும் இல்லாமல், நூலாசிரியர் மறைந்து, அவரது படைப்புகளை உரிமை கோர யாரும் இல்லாத நிலை உள்ள எழுத்தாளர்களையும் சொல்லலாம். ஆர்.ஷண்முகசுந்தரம், ப.சிங்காரம் போன்றோரை உதாரணமாகச் சொல்லலாம். பதிப்புரிமைச் சட்டப்படி, இவர்களுடைய படைப்புகள் அவர்கள் மறைந்ததிலிருந்து 60 ஆண்டுகள் வரை அவர்களின் குடும்பத்தினர் வசம் இருக்கிறது. இவர்களின் படைப்புகளுக்கான மரபுரிமையர் என யாரும் இல்லாத நிலையில், இவர்களின் படைப்புகளும் ‘நாட்டுடைமையானதாகவே கருதப்பட்டு’ பல பதிப்பகத்தாரால் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது சட்டபூர்வமாக சரிதானா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அநேகமாக இப்போதுள்ள சட்டத்தில் இந்தநிலை குறித்து எந்தக் குறிப்பும் இல்லை என்று கருதுகிறேன். உதாரணத்துக்குச் சொன்ன இரண்டு எழுத்தாளர்களின் படைப்புகளும் சட்டத்தின் கால வரையறைப்படி நாட்டுடைமை ஆகவில்லை. ஆனால், முறையான அனுமதி பெற்று அவரது படைப்புகளை வெளியிட விரும்புவோருக்கு பதிப்புரிமையை வழங்க மரபுரிமையர் என குடும்பத்தினர் யாரும் இல்லை. இந்த இருவர் விஷயத்தில் மரபுரிமையர் இல்லாதது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, இவர்களின் படைப்புகளை வெளியிட்டாலும் பின்னால் எவரும் தங்களிடம் உரிமை கோரவில்லை எனக் குற்றம்சாட்ட வாய்ப்பில்லை என்று துணிந்து பதிப்பகங்கள் இவர்கள் நூல்களை வெளியிடுகின்றன. மரபுரிமையர் இல்லை என உறுதியாகத் தெரியாவிட்டால், அந்த எழுத்தாளரின் படைப்புகளை இப்படித் துணிந்து வெளியிடுவது சிக்கலாக முடியக்கூடும். இதற்கு இப்போதுள்ள சட்டரீதியான ஒரே வழி எழுத்தாளர் காலமானதிலிருந்து 60 ஆண்டுகள் வரை காத்திருப்பதுதான். இந்த விதமாக மறுபதிப்புக்குக் காத்திருக்கும் நூல்கள் ஏராளமாக இருக்கின்றன.
எழுத்தாளர் தான் வாழும் காலத்தில் தனது படைப்புகளுக்கான உரிமையை தன் குடும்பத்தினர் அல்லாத பிறருக்கோ ஏதேனும் அமைப்புக்கோ வழங்கலாம். அப்படியானால், எழுத்தாளர் காலமானதிலிருந்து 60 ஆண்டுகள் வரை அந்த அமைப்பிடமோ, அந்த நபரிடமோ படைப்புகளுக்கான காப்புரிமை இருக்கும். இந்த இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட காந்தி நூல்கள் பற்றி சொல்கிறேன். காந்தி தனது படைப்புகளின் உரிமையை வாழும் காலத்திலேயே நவஜீவன் ட்ரஸ்டுக்குக் கொடுத்திருக்கிறார். காந்தி எழுதியவை அனைத்தும் இப்போது நாட்டுடைமையாகிவிட்டன. ஆனால், நவஜீவன் ட்ரஸ்ட் காந்தியின் எழுத்துக்களை மொழிபெயர்த்து வெளியிட்டு, அந்த நூல்களின் உரிமையை தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்களிடம் இல்லை (மொழிபெயர்ப்பாளர் தன்னிடமுள்ள உரிமையை அந்த அமைப்புக்கு வழங்கிவிட்டார் எனவும் சொல்லலாம்). இந்தச் சூழலில் தமிழில் ‘மகாத்மா காந்தி நூல்கள்’ என்ற தலைப்பில் வெளியானவற்றை வெளியிட நவஜீவன் ட்ரஸ்ட் அனுமதியைப் பெறவேண்டும். அனுமதி வழங்கும்போது 25% ராயல்டி வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. இந்த நிபந்தனையை காந்தியே எழுதியிருக்கிறார். அதை நவஜீவன் ட்ரஸ்ட் பின்பற்றுகிறது. இப்போது எந்தப் பதிப்பகமும் 25% ராயல்டி கொடுக்கத் தயாராக இல்லை. அதனால், அந்த நூற்தொகை மறுபதிப்புக்கு வருவதில் தடங்கல் உள்ளது.
இதில் உள்ள இன்னொரு வாய்ப்பையும் சொல்லலாம். நவஜீவன் ட்ரஸ்டின் வசம் உள்ள தமிழ் மொழிபெயர்ப்பு உரிமைகள் அனைத்தும் மொழிபெயர்ப்பாளர்களால் வழங்கப்பட்டவை. மொழிபெயர்ப்பாளரின் படைப்புகளும் நாட்டுடைமையானால் அதனை சிக்கலின்றி வெளியிடலாம். உதாரணமாக, காந்தியின் ‘ஆரோக்கிய திறவுகோல்’ என்ற நூல் கு.அழகிரிசாமி மொழிபெயர்த்தது. அவர் 1970ஆம் ஆண்டு காலமானதால் அவரது எழுத்துகள் 2030ஆம் ஆண்டு பூர்த்தியாகும்போது நாட்டுடைமையாகிவிடும். அவர் மொழிபெயர்த்த காந்தி படைப்புகளையும் அப்போது வெளியிடத் தடை இருக்காது. இதையெல்லாம் தெரிந்துகொள்ளாத நிலையில்தான் காந்தியின் சுயசரிதை, இந்திய சுயராஜ்ஜியம், சர்வோதயம் ஆகிய நூல்களையும் வைக்கம் சத்தியாக்கிரகம், அறங்காவலர் தத்துவம் போன்ற தலைப்புகளில் அவரது எழுத்துகளின் தொகுப்பையும் வெளியிட்டேன்.
நவஜீவன் ட்ரஸ்ட் போல இன்னும் பல காந்திய அமைப்புகள் ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த நூல்களின் உரிமையும் பெரும்பாலும் அந்தந்த அமைப்புகளிடமே இருக்கும் அல்லது உரிமை குறித்த எந்த விவரமும் குறிப்பிடாமலேகூட இருக்கும். மொழிபெயர்த்தவர் பெயர்கூட இல்லாமல் வெளியாகியிருக்கின்றன. உரிமை பற்றிய குறிப்பு இல்லை என்றால் அது யாரிடம் உள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு அந்த அமைப்பு இப்போதும் இருக்கவேண்டுமே! அல்லது மொழிபெயர்ப்பாளர் யாரென்றே தெரியாமல் அவரைத் தேட வேண்டும்.
சாகித்ய அகாடமி, நேஷனல் புக் ட்ரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன் போன்ற மைய அரசின் பதிப்பு நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் முதலிய மாநில அரசின் வெளியீடுகளும் உள்ளன. இந்த அமைப்புகளும் பெரும்பாலும் ஆசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களிடம் நூல்களுக்கான உரிமையை தாமே பெற்றுவிடுகின்றன. இப்படிப்பட்ட அரசு நிறுவனங்கள் வெளியிடும் நூல்கள் வெளியான ஆண்டிலிருந்து 60 ஆண்டுகள் கழித்து நாட்டுடைமையாகும் என்ற விதி உள்ளது. சாகித்ய அகாடமியும் நேஷனல் புக் ட்ரஸ்ட்டும் வெளியிட்ட பல நூல்கள், குறிப்பாக இந்திய இலக்கிய மொழிபெயர்ப்புகள், பல ஆண்டுகள் மறுபதிப்பு காணாமல் உள்ளன. அவற்றை வெளியிடும் உரிமை முதல் பதிப்பு வெளியான ஆண்டிலிருந்து 60 ஆண்டுகள் வரை அந்த அமைப்புகளிடமே இருக்கும் என்பதால் அவற்றைப் பிற பதிப்பகங்கள் வெளியிட இயலாது. பல நூல்கள் PDF கோப்பாக இணையத்தில் உள்ளன. ஆனால், அச்சு நூலாகவோ மின்னூலாகவோ அவற்றை வெளியிட சட்டரீதியான உரிமை இல்லை. PDF ஆக இணையத்தில் இருப்பதுகூட ஒரு மீறல்தான். இத்தகைய நூல்களை வெளியிட அனுமதி கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். பதில் வரவில்லை. ‘அக்னி நதி’, ‘ஆரோக்கிய நிகேதனம்’ ஆகியவற்றை, அவற்றின் மொழிபெயர்ப்பாளர்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்கிவிட்டது என்பதால் மின்னூலாக வெளியிட்டிருக்கிறேன். தமிழக அரசு மொழிபெயர்ப்பாளரை நாட்டுடைமையாக்கினால் சாகித்ய அகாடமி வசம் உள்ள மொழிபெயர்ப்பு உரிமையும் காலாவதியாகுமா என்ற கேள்வியை எழுப்பலாம். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல்தான் இந்த நாவல்களை வெளியிட்டிருக்கிறேன். இவை எல்லாமே பொதுவாக நூல் பதிப்புக்கு இருக்கும் சட்ட நெறிகள் மற்றும் சிக்கல்கள். மின்னூல்களுக்கு மட்டுமானவை அல்ல. இதையெல்லாம் நானே தேடித் தெரிந்துகொண்டேன். சட்டம் தொடர்பானவற்றை எனக்கு தெரிந்த அளவுக்கு மட்டுமே சொல்லியிருக்கிறேன் என்பதையும் சொன்னதில் குறைகள் இருக்கலாம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
கேள்வி : ஒரு முழு நூலையும் அல்லாமல் நூலின் ஒரு சிறு பகுதியை மட்டும் (எ.கா: ஜெஞ்சி கதை) மின் நூலாக வெளியிடுவது அல்லது பழைய நூலுக்கு நீங்கள் புது பெயர் இடுவது (எ.கா: பாரதிக்கும் எனக்கும் பழக்கம்) போன்றவற்றால் பதிப்புரிமை சிக்கல் ஏற்படுமா?
ஶ்ரீநிவாச கோபாலன்: நாட்டுடைமையான படைப்பு என்றால் சிக்கல் ஏற்படாது. நாட்டுடைமையாகும் படைப்புகளைத் திருத்தங்கள் செய்துகூட வெளியிடலாம். திருத்தங்கள் இன்னின்னவை எனக் குறிப்பிடலாம். நாட்டுடைமையாகாத படைப்புகளையும் உரிய அனுமதியோடு திருத்தங்கள் செய்து வெளியிடலாம். ‘ஜெஞ்சி கதை’ நூலில் செய்த மாற்றம் பற்றி நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். நூல் தலைப்பு, ஆசிரியர் பெயர், நூலின் பிரதான பாத்திரமான ஜெஞ்சியின் பெயர் ஆகியவற்றைதான் மாற்றியிருக்கினேன். இந்த நூலைப் பற்றித் தேடியபோது, வெங்கட் சாமிநாதனின் ‘மாலையும் வாழையும்’ நூலின் தலைப்புக் கட்டுரையிலும் ஜெயமோகனின் ‘இரண்டாயிரத்துக்குப்பின் நாவல்’ என்ற கட்டுரையிலும் பிரம்மராஜன் மொழிபெயர்த்த இடாலோ கால்வினோவின் ‘ஏன் கிளாசிக்குகளைப் படிக்க வேண்டும்?’ என்ற நூலிலும் சிறிய குறிப்புகள் கிடைத்தன. அவற்றில் நூல் தலைப்பு ‘ஜெஞ்சியின் கதை’ என்றே உள்ளது. 1965ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் ‘தமிழ்நாட்டு நூற்தொகை’ என்ற நூலில் ‘கெஞ்சி கதை’, ‘செஞ்சி கதை’ என்று விதவிதமாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த மொழிபெயர்ப்பு வெளியான ஆண்டும் 1965. எனக்குக் கிடைத்தது 2002ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பதிப்பை மூலபாடமாகக் கொண்டு செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டின் மறுபதிப்பு. அதில் ‘கெஞ்சி கதை’ என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆங்கில உச்சரிப்புக்கு நெருக்கமாக இல்லாததால், தலைப்பை இவ்வாறு மாற்றினேன். வேறு எந்த நூலிலும் இப்படிச் செய்ததில்லை. ஏற்கெனவே சொன்னபடி, இதனால் பதிப்புரிமைச் சிக்கலும் இல்லை.
பாரதியார் பற்றி வ.உ.சிதம்பரனார் எழுதிய நினைவுக் குறிப்புகள் கையெழுத்துப் பிரதியாக இருந்துள்ளது. அதை அவரது மகன் ‘வி.ஓ.சி.கண்ட பாரதி’ என்ற தலைப்பிட்டு 1946ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். இப்போது வ.உ.சி. படைப்புகள் நாட்டுடைமையாகிவிட்டன. மேலும் ‘வி. ஓ. சி. கண்ட பாரதி’ என்ற தலைப்பை வ.உ.சி. வைக்கவில்லை. அதைப் பதிப்பித்தபோது அவரது மகன், பதிப்பாசிரியராக இருந்து வைத்த தலைப்பு அது. அதையே என் பதிப்பிலும் பின்பற்றவேண்டியதில்லை. எனக்கு முன்பே பாரதி பற்றிய தொகுப்புகளில் வ.உ.சி. எழுதிய இந்த நினைவுக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் ‘வ.உ.சி. கண்ட பாரதி’ என்றோ ‘நான் கண்ட பாரதி’ என்றோ தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படியொரு தலைப்பை வைப்பதைவிட நூலிலேயே இடம்பெறும் ‘பாரதிக்கும் எனக்கும் பழக்கம்’ என்ற தொடரைத் தலைப்பாக வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். கையெழுத்துப் பிரதியைப் பார்க்காவிட்டாலும், முதல் பதிப்பில் இந்தத் தொடருடன்தான் வ.உ.சி.யின் நினைவுக்கு குறிப்புகள் ஆரம்பமாகின்றன. நூலுக்குப் பல உப தலைப்புகள் உள்ளதால் ‘பாரதிக்கும் எனக்கும் பழக்கம்’ என்பதை முதல் உபதலைப்பு என்று கொள்ளமுடியும். மொத்த நினைவுக் குறிப்புக்கும் பொதுவாகவே இந்தத் தலைப்பை வ.உ.சி. வைத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, என்னைப் பொறுத்தவரை ‘பாரதிக்கும் எனக்கும் பழக்கம்’ என்ற தலைப்புதான் பொருத்தமானது. இந்த விதமான திருத்தமும் வேறு எந்த நூலிலும் செய்யவில்லை.
கேள்வி: பல்கலைக்கழகங்களிலும் பிற கல்வித்துறைகளிலும் உங்கள் பதிப்புகளின் தேவையையும் பணியின் அவசியத்தையும் புரிந்துகொள்ளும் சூழல் அமைந்துள்ளதா?
ஶ்ரீநிவாச கோபாலன்: நான் பார்த்தவரை கல்வித்துறையில் உள்ள பலருக்கு மின்னூல் என்றாலே PDF என்ற அளவில்தான் தெரிந்திருக்கிறது. தமிழக அரசின் ‘தமிழிணையம்’ (https://www.tamildigitallibrary.in/), ‘உலகத் தமிழ்’ (https://www.ulakaththamizh.in/) போன்ற இணையத்தளங்களில் நாட்டுடைமையான நூல்கள் PDF வடிவில் பதிவேற்றப்படும் பணி நடப்பதே பெரிய விஷயம் என்று கருதுகிறேன். தமிழிணையத்தில் கன்னிமாரா நூலகம், உ.வே.சா. நூலகம், சரஸ்வதி மகால் நூலகம் முதலிய முக்கிய நூலகங்களில் உள்ள நூல்கள் ஸ்கேன் செய்யப்பட்டு PDF வடிவில் பதிவேற்றப்படுகின்றன. இந்த நூலகங்களில் உள்ள நூல்கள் அனைத்தையும் பதிவேற்றிவிடும் முனைப்புடன் வேலை நடக்கிறது என நினைக்கிறேன். நாட்டுடைமை ஆகாத நூல்களும் ‘தமிழிணையம்’ தளத்தில் உள்ளன. யாரோ சிலர் இந்த நூல்களையும் அனுமதி பெறாமலே மின்னூலாக்கி வெளியிடுகின்றனர். காப்புரிமை / பதிப்புரிமை பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம். அரசுக்கே இதைப் பற்றிய கவனம் இல்லை. அதனால்தான் நாட்டுடைமையாகாத நூல்களைக்கூட PDF ஆக்கி இலவசமாக இணையத்தளத்தில் பதிவேற்றுகின்றனர்.
இந்தியாவில் பல மொழிகளில் புத்தகங்கள் வெளியிடும் மூன்று தனித்தனி அரசு அமைப்புகள் (சாகித்ய அகாடமி, நேஷனல் புக் ட்ரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன்) உள்ளன. இவர்கள் மனது வைத்தால், அமேசான் கிண்டிலுக்கு நிகரான அரசு நிறுவனம் ஒன்றையே தொடங்கலாம். பள்ளி, கல்லூரிப் பாட நூல்கள் முதல் பல்வேறு துறைசார்ந்த நூல்களையும் அரசே வெளியிடலாம். பதிப்பகங்களுக்கும் களம் அமைத்துத் தரலாம். இதற்கு தொலைநோக்குத் திட்டம் தேவை.
கேள்வி: பல நூல்களை மறுபதிப்பு செய்திருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் படைப்பாக நூல்கள் எழுதியிருக்கிறீர்களா? அதற்கான திட்டங்கள் உண்டா?
ஶ்ரீநிவாச கோபாலன்: மின்னூல்களை வெளியிட ஆரம்பித்ததிலிருந்து எழுதவே இல்லை என்று சொல்லலாம். அதற்கு முன் வாசிக்கும் நூல்களில் பிடித்தவற்றைப் பற்றிச் சிறிதும் பெரிதுமாக வலைப்பூவில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். கதைகள் எழுத முயன்றிருக்கிறேன். கொஞ்சம் ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைகளை, சில கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். பதிப்பு வேலையில் சற்று அனுபவம் அடைந்த பிறகு பதிப்பில் மேலும் கவனம் செலுத்தி என்னை மேம்படுத்திக்கொள்ளவே நாட்டம் அதிகமானது. மீண்டும் எப்போது எழுதுவேன் என்று தெரியவில்லை. இப்போதைக்கு அந்த ஊற்று தூர்ந்து கிடக்கிறது.
நேர்காணல்: ம.நவீன், அ.பாண்டியன்
தொடரட்டும் உங்களது பணி, வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்களது பணி, வாழ்த்துக்கள்
m.Selvakumaar Ph.D, Dept.of History MSU, Tirunelveli 12