அரவின்  குமாரின் சிறுகதைகள்: சில குறிப்புகள்

அரவின் குமார்

அனைவரிடமும் சொல்வதற்குக் குறைந்தது பத்துக் கதைகளாவது இருக்கும் என்பார்கள். இருந்தாலும் அதைச் சொல்லத் தெரிந்தவர்கள் மிகக் குறைவு, அப்படிச் சொல்ல முனைபவர்களுக்குத் தேவை மொழியறிவு. சொல் தெரிவு மற்றும் சொற்சேர்க்கை, வாக்கியத்தைச் சரியான முறையில் அமைக்கத் தெரிந்திருப்பது. ஒரு மொழியில் எழுதுவதற்கான அடிப்படைத் தகுதி இது எனலாம். இத்தகுதி இருந்தால் எழுதுபவன் தான் கருதுவதில் கணிசமான பங்கை வாசகனுக்குக் கடத்தி விடமுடியும்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் அர்வின் குமார் சிறுகதைகளில் முதலில் என்னைக் கவனிக்க வைத்த அம்சம் அவற்றின் மொழி. தெளிவாக சொல்ல வந்ததைச் சரியாக வெளிப்படுத்த முயலும் மொழி. தேவையற்ற விவரிப்புகள், விளக்கங்கள் இல்லை. அளவெடுத்துத் தைத்தாற்போலக் கச்சிதம், சொற்சிக்கனம். குறிப்பிடத்தகுந்த அளவு வாசிப்பு இருந்தால் மட்டுமே, அதுவும் வெறுமனே வாசித்துச் செல்லாமல், மொழிக்கட்டுமானத்தை, சொல் பயன்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு வாசித்தால் மட்டுமே அமைவது இது. நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பதுபோல அரவின்  குமார் தனது மொழி மூலமாக நம்மைக் கவனிக்க வைக்கிறார்.

பொதுவாக சிறுகதை விமர்சனம் என்பதில் ஏழெட்டுப்பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு விமர்சிக்கப்படுவதே வழக்கம். மேலும் கதை எழுதியவரின் அரசியல், தத்துவ, நிலைப்பாட்டை அதாவது சிந்தனைப் போக்கை அறிந்திருப்பது கதைகளைப் புரிந்துகொள்ள உதவும். எனக்கு அரவின் குமாரின் சிந்தனைப்போக்கு குறித்த எவ்வித அறிமுகமும் இல்லை, அவரைச் சந்தித்து உரையாடியதும் இல்லை. எனவே மொத்தமுள்ள ஐந்து சிறுகதைகள் மூலம் அரவின்  குமாரின் (அக) உலகம் எவ்வகையானது என்பதைத் தீர்மானிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இருப்பினும் எலி, சிண்டாய் கதைகளை வாசித்தபோது அதுகுறித்த அனுமானம் கிடைத்தது. பதில், அடித்தூர், அணைத்தல் கதைகள் அதை உறுதி செய்தன. மேலும், அவரது விமர்சனங்கள் இலக்கியத்தில் அவர் எடுத்துக்கொண்டுள்ள நிலைப்பாடு எது என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

இக்கதைகளுள் பதில், எலி, அணைத்தல்  மூன்றும் சிறுகதை என்பதற்கான வடிவத்தில் பெருமளவு அடங்குகின்றன. மற்றவை சிறுகதைகள் அல்ல என்று நான் கூறவில்லை. நான் குறிப்பிடுவது வடிவ நேர்த்தி. ஆனால், ‘நல்ல கதை’ எழுதுவதற்கு வடிவக்கச்சிதம், உத்தி, கூறுமுறை போன்றவை உதவி செய்யும் என்றாலும் அவையே பிரதானமல்ல.

அரவின்  குமார் உருவாக்கும் கதாபாத்திரங்கள் தனிமையில் இருக்கின்றன அல்லது அப்பாத்திரங்களுக்குள் தனிமை நிறைந்திருக்கிறது. பெலிசியாவின் அக, புறத் தனிமையின் காரணமாக அவள் மற்றவர்களோடு தொடர்ந்து உரையாடிக் கொண்டிருப்பவளாக இருக்கிறாள். தனிமையில் மனம் உருவாக்கிக் கொள்ளும் அக உரையாடல்களிலிருந்து தப்புவதற்கான உத்தியாக அவளது புற உரையாடல்கள் அமைகின்றன. இருப்பினும் தனிமை அவளை வெற்றி கொள்கிறது. பிறழ்ச்சி உருவாக்கும் ஸ்தூலங்களில் உழல்பவளாக ஆகிறாள். அதிலிருந்து தன்னைத் தப்புவித்துக்கொள்ள முயன்றாலும் சக்கரத்தில் வால் மாட்டிக்கொண்ட எலியாகத் தன்னை உணரும்போது அல்லது அவ்வாறு தான் ஆகிவிடக் கூடும் என்று உணரும்போது, அப்பிறழ்ச்சி புறவயமான துணையைக் காட்டிலும் மேலானது என்ற முடிவுக்கு வருகிறாள்.

அடித்தூர் கதையில் வரும் கதைசொல்லியின் பாட்டி மற்றும் தாத்தா, சிண்டாய், பதில், கதைகளின் கதைசொல்லி என அனைவருக்குள்ளும் அதே தனிமை இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரும் அத்தனிமையை ஏதோ ஒருவிதத்தில் ஏற்றுக்கொண்டவர்களாக, அதிலிருந்து வெளியேறுவதற்கான முயற்சிகளில் தோல்வியுற்றவர்களாக, அதிலிருந்து மடைமாற்றம் செய்துகொள்ள வேறொன்றைத் தேடுபவர்களாக இருக்கிறார்கள். பதில் சிறுகதையின் கதைசொல்லி தனக்குள்ளான தனிமையில் வசதியாக உணர்பவனாக, அத்தனிமையைக் கலைக்கும் உரையாடல்களை அதிகம் வரவேற்காதவனாக இருக்கிறான்.

காமம் மனித இருப்பின் ஆதார உணர்ச்சி. ஆனால் அது மறுக்கப்படும்போது அல்லது கிடைக்காதபோது மனம் கொள்ளும் பதைப்பும் மனம் அதை வெளிப்படுத்தும் வழிகளும் விநோதமானவை. எலி, அணைத்தல் மற்றும் சிண்டாய் கதைகளில் வரும் பெண்கள் மூவரும் இதனால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். பெலிசியா மற்றும் அடாமின் தாய், சுகுமாரனின் மனைவி மூவருக்கும் காமம் வெவ்வேறான பாதிப்புகளை உருவாக்குகிறது.

அடித்தூர் சிறுகதையில் உறவுகளுக்கிடையே நிலவும் இறுக்கமான மௌனம், பதில் சிறுகதையில் கதைசொல்லி சக மனிதன் மீது கொள்ளும் விருப்பமின்மை, எலி சிறுகதையில் சிக்கலில் இருக்கும் பெண்ணுக்கு உதவுவதில் உள்ள சுயநலம், அணைத்தல் சிறுகதையில் போமோ என யாருமில்லை என்று தெரிந்ததும் குமார் அண்ணன் மீது கதைசொல்லிக்கு உண்டாகும் இளக்காரம், அவர் இறந்து விட்டாரென்று தெரிந்ததும் அவன் கொள்ளும் மகிழ்ச்சி, அடாமின் மீது அவாங் கொள்ளும் வெறுப்பு என, அரவின்  குமாரின் கதைகள் மனித மனத்தின் தாழ்வுகள், சார்புகள், விலகல்கள் போன்ற எதிர்மறைகளின் மீது இயங்குபவையாக இருக்கின்றன. பொதுவாக மனிதர்கள் மீதான, வாழ்க்கை மீதான கசப்பு அல்லது விலகல் இக்கதைகளில் தென்படுகிறன. (அரவின்  இளைஞராக இருக்கிறார், எனவே வாழ்க்கை மீது, மனிதர்கள் மீது இன்னும் சற்று அதிக நம்பிக்கை வைக்கலாம் என்று தோன்றுகிறது.  )

ஏற்கெனவே குறிப்பிட்டபடி, அரவின்  குமாரால் இந்த எதிர்மறை உணர்வுகளையும் சுவாரசியமான மொழியில் சொல்ல முடிகிறது. இருப்பினும் முதல் கதையையும் ஐந்தாவது கதையையும் ஒப்பிடும்போது அவருக்கான தனித்துவமான மொழி என்பது இன்னமும் வளர்ச்சி நிலையிலிருக்கிறது என்றே யூகிக்கிறேன்.

மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயமாகக் குறிப்பிட விரும்புவது சிண்டாய் கதையின் கதைசொல்லி பெண்ணாக இருப்பது. ஆணாக இருந்துகொண்டு பெண்ணுடைய உணர்வுநிலைகளைத் துல்லியமாகச் சொல்லிவிடமுடியுமா என்பதில் எனக்கு எப்போதுமே சந்தேகம் உண்டு. தவிர்க்கமுடியாத சூழலில் மட்டுமே அந்தக் கோணத்திலிருந்து கதையைச் சொல்லவேண்டும் என்று நினைப்பவன் நான். தன்னுடைய மூன்றாவது கதையில் அதை முயற்சி செய்திருக்கிறார் அரவின். அது எந்தளவுக்குச் சரியாக வந்திருக்கிறது என்பதை எழுத்தாளரே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

இறுதியாக, அரவின்  குமாரின் இந்த ஐந்து சிறுகதைகளை வாசிக்கும்போது உண்மையில் மகிழ்ச்சி அடைந்தேன். மலேசிய இலக்கியத்தின் சமீபத்திய நம்பிக்கை தரும் வரவாக அவரைக் கொள்ளலாம். சமூகப் பொறுப்பு, கடமை போன்ற சுமைகள் காலத்தின் போக்கில் அவரிடத்தில் இலக்கியத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்காதிருக்குமேயானால், மற்றொரு திறன்மிகுந்த கதைசொல்லியாக அரவின் குமார் வளர்வார் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை.

2 comments for “அரவின்  குமாரின் சிறுகதைகள்: சில குறிப்புகள்

  1. Punithawathy
    September 1, 2021 at 10:21 pm

    அரவின் அவர்களின் மொழி ஆற்றலும் ,விமர்சனப்பார்வையும் மிகவும் தெளிவாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...