அரவின் குமார் படைப்புலகம்

மலேசிய தமிழ் இலக்கியச் சூழல் என்பது 50-களில் தொடங்கப்பட்டு இன்றைய நிலையிலும் பல மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டடைந்து கொண்டு வருகின்றது. பாலபாஸ்கரன், சை. பீர்முகம்மது, ம. நவீன் போன்றவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வாசிக்கும்போது மலேசியாவில் தனித்துவமான இலக்கியம் உருவாக வேண்டும் எனும் எண்ணம் விதைபட்டு, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்து வந்த தலைமுறையால்தான் 70களில் நவீன இலக்கியத்தின் வீச்சு அதிகமாக இருந்ததை உணர முடிகின்றனது. அக்காலத்தில்தான் சீ. முத்துசாமி, எம். ஏ. இளஞ்செல்வன், அரு. சு. ஜீவானந்தன் போன்ற தனித்துவமான எழுத்தாளர்கள் உருவானார்கள்.

மலேசியப் புத்திலக்கியத்தின் அடுத்த எழுச்சி 90களில் உருவானது. ஐம்பதுகளில் உருவாகி வந்தவர் என்றாலும் சை. பீர்முகம்மது தனித்த சக்தியாக உருவானதும் மா. சண்முகசிவா எழுத்துகள் கவனம் பெற்றதும் 90களில்தான் என்பதனை இருவரின் நேர்காணல்கள்வழி அறிந்திடலாம். 2006-ஆம் ஆண்டு மீண்டும் மலேசிய இலக்கியத்தில் புதிய அலை உருவானது. வல்லினம் மூலம் தொடங்கிய அந்த அலை இரண்டாயிரத்துக்குப் பிறகு மலேசிய இலக்கியத்தில் புதிய பாதைகளை வகுத்தன. வெவ்வேறு காலக்கட்டங்களில் எழுத வந்தாலும் வல்லினம் சில எழுத்தாளர்களைத் தன்னுடன் தொகுத்துக் கொண்டது. ம. நவீன், சு. யுவராஜன், பூங்குழலி வீரன், கே. பாலமுருகன், அ. பாண்டியன், விஜயலட்சுமி எனப் புதிய தலைமுறையினர் பலரும் தங்கள் புதிய சிந்தனைகளையும் எழுத்து முறைகளையும் பதிவு செய்தனர்.

வல்லினம் தலைமுறை உருவாகி ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கவனிக்கப்படும் எழுத்துகளைக் கொண்ட புதிய தலைமுறையினர் அண்மையில் உருவாகி வருகின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அரவின் குமார்.

***

இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படும் அரவின் குமார், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் போன்ற படைப்புகளை எழுதி வருகிறார். செறிவான மொழி, தர்க்கப்பூர்வமான பார்வை, கச்சிதமான மொழிநடை, கற்பனையாற்றல் போன்ற கூறுகள் இவரின் எழுத்துப் படைப்புகளை வலுவடையச் செய்கிறது. சிறுகதை, கட்டுரை என இரண்டு எழுத்துப் படைப்புகளிலும் இவர் கையாளும் வெவ்வேறு விதமான மொழிதான், இவரின் எழுத்துக்குப் பலத்தைச் சேர்க்கின்றது.

அரவின் குமாரின் எழுத்துலகம் அவர் இடைநிலைப்பள்ளி பயிலும்போது தொடங்கியது. இடைநிலைப்பள்ளியில் பயிலும்போது சிறுகதைப் போட்டிகளில் பங்கெடுத்தல், ஆசிரியர் கல்விக்கழகத்தில் தயாரிக்கப்படும் ‘இளவேனில்’ இதழில் கட்டுரை, பத்தி போன்றவற்றை எழுதுதல், மலாயாப் பல்கலைக்கழகம் மலேசியத் தேசியப்பல்கலைக்கழகம் ஒருங்கிணைத்த சிறுகதைப் போட்டிகளில் பங்கெடுத்தல் என ஆரம்பக்காலத்தில் செயல்பட்டார். ஜெயமோகனின் 2014 மலேசிய வருகையின் போது, ஆசிரியர் கல்விக்கழகத்தில் அவருடைய உரையைச் செவிமடுத்துத் தீவிர இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கினார். பின்னர், 2019ஆம் ஆண்டு முதல் வல்லினம் இணைய இதழில் சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

அரவின் குமாரின் படைப்புகளை வாசிக்கும்போது முதலில் நமக்குத் தோன்றுவது அவரின் சொல் சிக்கனம்தான். சொல்ல வரும் தகவல்களையும் கருத்துகளையும் கச்சிதமாகச் சொல்கிறார். புதிய எழுத்தாளர்களுக்கு மொழியைக் கொண்டு விளையாடும் அதீத ஆர்வமெல்லாம் அரவின் அவர்களின் எழுத்துகளில் காண முடிவதில்லை. நவீன சிறுகதை எழுத்தாளர்களுக்கே உள்ள கூர்மையும் நுட்பமும் நேரடித்தன்மையும் இவர் எழுத்துகளின் அடிநாதமாக விளங்குகின்றன.

‘பதில்’, ‘அணைத்தல்’, ‘அடித்தூர்’, ‘சிண்டாய்’, ‘யாருக்காகவும் பூக்காத பூ’, ‘தைலம்’, ‘எலி’ என்பனவை இவருடைய சிறுகதைகளாகும். குறைவான சிறுகதைகளே எழுதியிருந்தாலும் அரவின் குமாரின்  அந்தச் சிறுகதைகள் வழியாகவே அவரது புனைவுலகத்தைக்  குறித்து  மேலும் அறிந்திட முடியும். தனி மனிதனின் அகவுணர்வையும் வாழ்க்கையையும் சித்தரிக்கும் வகையில்தான் அரவின் குமாரின் சிறுகதைகள்  பெரும்பாலும் அமைந்துள்ளன. இவரின் கதைகளில் வரும் மைய கதாமாந்தர்கள் தங்களின் அகவுணர்வோடு போராடும் கதாபாத்திரங்களாக அவரின் கதைகளில் காட்டப்படுகின்றனர். தனிமையும் மௌனமும் நிரம்பிய தனி மனிதனின் உள்ளுணர்வுகளைப் பேசும் கதைகளாகவே இவரின் கதைகள் அமைந்துள்ளன. அவை நுட்பமாகவே வாசகனுக்கு உணர்வுகளைக் கடத்துவதாக அமைந்துள்ளன. இவரது சிறுகதைகளை நான் வாசித்தவரைக் கொந்தழிக்கும் இடங்களிலெல்லாம் மிகையுணர்ச்சியின்றி அடங்கிய குரலையே உபயோகிக்கிறார். நிதானமான கதைச் சொல்லல் வழியாகவே வாழ்வின் நுட்பங்களை இவர் அலசுகிறார்.   

சிறுகதைகளைத் தவிர்த்து இவரின் படைப்புலகத்தை நாம் அவரின் கட்டுரைகளின் வழி அறிந்திட முடியும். இவரின் கட்டுரைகள் பெரும்பாலும் நூல்களைக் குறித்த விமர்சனக் கட்டுரைகளாக அமைகின்றன. ‘நட்சத்திரவாசிகள்’, ‘வாடாமல் வாழும் வாழைமரங்கள்’, ‘சிகண்டி’ எனப் பல நூல்களைக் குறித்துத் தமது விமர்சனப் பார்வையை இவர் முன்வைத்துள்ளார். அந்நூல்களைப் பொதுத் தன்மையுடன் அனுகாமல், அந்த நூல்களில் காணப்படுகின்ற நுண் தகவல்கள், கதாமாந்தர்களின் அகபுற உணர்வுகள், கதையின் களம் குறித்த விரிவான பார்வை என நூல்களின் ஒவ்வொரு சாரத்தையும் தர்க்கப்பூர்வமாக அனுகும் ஆற்றலுடன் இவரின் கட்டுரைகள் அமைந்திருக்கும். தகுந்த சொல்லாட்சி, சொல் கச்சிதம், சுருங்கக்கூறல் போன்ற அம்சங்கள் இவரின் மொழியறிவையும் பரந்த வாசிப்புப் பழக்கத்தையும் இவரின் கட்டுரைகளின் மூலம் பிரதிபளிக்கின்றது.

சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதோடு நிறுத்திவிடாமல், அரவின் குமார் இலக்கிய செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். 2022ஆம் ஆண்டுக்கான வல்லினம் விருது பெற்ற எழுத்தாளர், சமூகச்செயற்பாட்டாளர் ஜானகிராமனை வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படத்தின் இயக்குநராக இவர் பணியாற்றினார். தீவிர இலக்கிய தேடல், தொடர் வாசிப்பு, இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், இலக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டு கருத்துகளை முன்வைத்தல் என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தனக்கான தனி வளைப்பக்கத்திலும் இவர் தமது பதிவுகளைப் பதிவு செய்து வருகிறார்.

வளர்ச்சியடைந்து வரும் மலேசிய தமிழ் இலக்கியச் சூழலில், இளம் படைப்பாளர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அவ்வகையில் தமது எழுத்துகளாலும் இலக்கிய செயல்பாடுகளாலும் மிளிர்ந்துகொண்டு வரும் எழுத்தாளராக அரவின் குமார் திகழ்கிறார்.

அரவின் குமார் படைப்புகளை வாசிக்க

அரவின் குமார் தமிழ் விக்கி பக்கம்

அரவின் குமார் சிறுகதைகள் – ஶ்ரீதர் ரங்கராஜ்

1 comment for “அரவின் குமார் படைப்புலகம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...