மலேசியாவில் தமிழ் இலக்கியத்திற்குத் தேசிய அங்கீகாரம் கிடைக்காதது பற்றிய பேச்சுகள் அவ்வப்போது எழுவதுண்டு. அப்பேச்சுகள் அனைத்தும் எழுந்த வேகத்திலே உடனடியாக அடங்கிவிடும். மலேசியத் தமிழ் இலக்கியம் எனும் தனித்த அடையாளத்தைக் கண்டடையும் முயற்சி தொடங்கிய காலத்திலிருந்தே, மலேசிய தமிழ் இயக்கவாதிகளும் இலக்கியவாதிகளும் தங்களின் அடையாளத்தை இம்மண்ணில் விதைப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வந்தனர். சஞ்சிக்கூலிகளாகப் வந்த தமிழ் மக்கள் தங்களின் கலை, இலக்கியம், பண்பாடு போன்ற அடையாளங்களைத் தக்க வைக்க முன்னெடுத்த முயற்சிகள் யாவும் தங்களின் சொந்த பணத்திலும் உடல் உழைப்புக்குப் பின் தங்களுக்குக் கிடைத்த எஞ்சிய நேரத்திலும் தொடங்கப்பட்டவை.
பெரும் பதிப்பகங்கள் இல்லாத காலக்கட்டத்தில், அவரவர் சுய முயற்சியில் வெளியிடப்பட்ட நூல்களும் தொடங்கப்பட்ட இயக்கங்களும் மலேசியாவில் புதிய தலைமுறைகள் உருவாக வித்திட்டது. அது போல உலகியல் வாழ்வியலிலிருந்து விலகி கலை இலக்கியங்களில் ஈடுபடும் சில மலேசிய ஆளுமைகள், குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குப் பிறகு தத்தம் வாழ்வியல் சூழல்களால், பொருளியல் நெருக்கடிகளால், மனச்சலிப்புகளால் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்களைப் பொது வெளிகளிலிருந்து மறைத்துக் கொண்டு தனியாளாகிவிடுகின்றனர்.
தொழிற்துறை, பொருளியல் தேடல் போன்றவை மையமாகக் கொண்ட மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான மலேசியா குடியினர்களுக்கு இது போன்ற மனநிலை ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இருந்தபோதிலும், இவை அனைத்தையையும் கடந்து தன்னைக் கலைஞராக முன் வைக்கும் ஒரு சிலரே மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். அவ்வகையில், கோ. புண்ணியவான் மலேசிய தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக விளங்குகின்றார்.
மலேசிய எழுத்தாளர்களில் தமக்கான ஓர் இடத்தை வகுத்துக் கொண்டு புனைவுலகில் பல படைப்புகளைப் படைத்து வருபவர் கோ. புண்ணியவான். மலேசிய கலை இலக்கிய படைப்புலகில் இவர் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதியும் இயக்கங்கள் வழி பங்காற்றியும் வருகின்றார்.
கோ. புண்ணியவான் அவர்களின் புனைவுலகம் சிறுகதையின் மூலமே தொடங்கப்பட்டது. 1971இல் மலாயா சிங்கை வானொலி நிலையத்தில் ஒலியேற்றப்பட்ட ‘வாழ வழி இல்லையாம்’ என்ற சிறுகதைதான் இவரது புனைவுலகத்தின் தொடக்கம். அதன் வழி கிடைக்கப்பெற்ற ஊக்குவிப்பினால் இவர் தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார். அவை தொடர்ந்து நாளிதழ்களிலும் இடம்பெற்று வந்தன.
போட்டிகள் வழியாகத்தான் கோ. புண்ணிவான் என்ற பெயர் பலர் மத்தியிலும் அடுத்தடுத்த தலைமுறையினர் மத்தியிலும் பரவியது. மலேசியாவில் நடைபெறும் இலக்கியப் போட்டிகளில் அதிகம் பங்கெடுத்துப் பலமுறை முதல் பரிசுகளை வென்ற எழுத்தாளர்களைப் பட்டியலிட்டால் அதில் இவரது பெயர் முதல் இடத்தில் இருக்கும். போட்டிகளில் பங்கு பெறுவது பரிசுக்காக மட்டுமல்ல; தீவிரமாகத் தொடர்ந்து இயங்க எவ்வித சாத்தியமும் அற்ற சூழலில் போட்டிகள் மட்டுமே தூண்டுகோளாக உள்ளன’’ என்று ஒரு நேர்காணலில் கோ.புண்ணியவான் கூறுவது கவனிக்கத் தக்கதாகும்.பெரும் படைப்புகளை வழங்கி மைய இலக்கிய சக்திகள் உருவாகாத நிலையில் ஒருவர் தன் கலை மனதைப் போட்டிகள் கொடுக்கும் சிறிய அங்கீகாரத்தின் மூலம் உயிர்ப்புடன் வைத்திருப்பது ஏற்கத்தக்கதுதான்.
புனைவுலகத்தில் காலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். கால மாற்றங்களோடு ஒருவரின் புனைவுலகமும் வளர்ச்சி அடைந்து கொண்டே வர வேண்டும். அவ்வகையில் கோ. புண்ணியவான் ஐம்பது ஆண்டுகளாகப் பல எழுத்துப் படைப்புகளை வழங்கி வந்தாலும், இவரின் புனைவுகள் காலத்தோடு தரம் மிகுந்ததாகவும் நவீன இலக்கியச் சூழலோடு பொறுந்தி வருபவையாகவும் அமைகின்றன. முற்போக்குகளைப் பேசும் மலேசிய படைப்புகளையே தனது முன்னோடியாகக் கொண்டு தொடங்கியவர் கால ஓட்டத்தில் நவீன இலக்கியத்தின் சாரத்தை அறிந்து கொண்டு தமது படைப்புகளில் செய்து கொண்ட மாற்றங்கள்தான் இன்றும் அவரை ஓர் படைப்பாளியாகத் தமிழ் இலக்கிய உலகில் அங்கீகரிக்க வைக்கிறது. 2005இல் எழுத்தாளர் ஜெயமோகனை வாசித்த பிறகுதான் இலக்கியம் குறித்த தமது புரிதலில் மாற்றம் நிகழ்ந்ததாக இவர் தமது நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகின்றார். தீவிர இலக்கிய தேடலில் தொடர்ந்து ஈடுபவது, தொடர் வாசிப்பு, கலந்துரையாடல்களில் கலந்துகொள்வது போன்ற செயல்களின் மூலம் தமது புனைவுலகத்தின் தரத்தை மேலும் புதுப்பித்துக் கொண்டு, கால மாற்றத்திற்கு ஏற்ப எழுத்துப் படைப்புகளைப் படைத்துக் கொண்டு வருகின்றார்.
படைப்பின் உள்ளடக்கத்தில் மட்டும் மாற்றங்களைக் கொண்டு வராமல், இணைய வளர்ச்சியோடு தமது எழுத்துப் படைப்புகளில் புறவயமான மாற்றங்களையும் கொண்டு வந்தார். தனக்கான தனி வளைப்பக்கத்தைத் தொடங்கி இடைவிடாத பதிவுகளை உருவாக்கும் அவரது பரிணாமம் மலேசிய படைப்பாளிகள் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.
அடிப்படையில் கோ. புண்ணியவானின் படைப்புலகம் விளிம்பு நிலை மக்களின் துயரங்களையும் அதிகாரத்தால் ஓரங்கட்டப்படும் சாமானியர்களின் இக்கட்டுகளையும் முன்வைக்கும் இயல்புவாத புனைவுகளாக அமைந்தவையாகும். மலேசிய தோட்டப்புறங்களிலும் புறம்போக்கு நிலப்பகுதிகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை இவர் தமது கதையின் களமாக்கி பல கதைகளைப் படைத்துள்ளார். நாயக லட்சியங்கள், கொள்கை பிடிப்புகள் கொண்ட கதாப்பாத்திரங்களை இவர் படைப்பதில்லை. சமூகத்தில் பெண்கள் அடையும் சிக்கல்களை அதிகம் கவனித்து எழுதியிருக்கிறார். கோ. புண்ணியவானின் இரண்டு நாவல்களும் வரலாற்று பின்புலம் கொண்டவை என்றாலும் அவர் அதில் வரலாற்று பெருமிதங்களையோ அரசியல் போராட்டங்களையோ அதிகம் கவனப்படுத்தவில்லை. மாறாக அவர் மனம் அச்சூழலில் சிக்கிய மக்களின் அவலம் மிக்க வாழ்க்கைப்பாடுகளைப் பற்றியே மையமிட்டுள்ளது.
கோ. புண்ணியவானை முன்னோடிகளில் ஒருவராக நிறுவ மற்றுமொரு காரணம் இலக்கியத்தின் பல்துறை பங்களிப்பு. நிஜம், சிறை, எதிர்வினைகள், கனவு முகம் என்ற 4 சிறுகதைகளும்; நொய்வப் பூக்கள், செலாஞ்சார் அம்பாட், கையறு என்ற 3 நாவல்களையும் இவர் எழுதியுள்ளார். அதோடு, வன தேவதை, பேயோட்டி என்ற இரு சிறுவர் நாவல்களையும்; சூரியக் கைகள் என்ற கவிதை தொகுப்பு ஒன்றினையும் ; அக்டோபஸ் கைகளும் அடர்ந்த கவித்துவமும் என்ற கட்டுரை நூலும் இவரின் படைப்புகளாகும். இத்தனை தளங்களில் பங்களிக்கும் மலேசிய எழுத்தாளர்கள் மிகச்சிலரே. அதுவும் அவரது படைப்புகளை ஒட்டிய கடுமையான விமர்சனங்களை எதிர்க்கொண்ட போதும் மீண்டும் மீண்டும் புறப்பட்டு வந்து தனது இருப்பைப் புனைவுகளின் வழியாகவே நிறுவும் ஆளுமை போற்றத்தக்கது.
உதாரணமாக, இவரது முந்தைய நாவல்களான ‘நொய்வப்பூக்கள்’, ‘செலாஞ்சார் அம்பாட்’ போன்றவை விருதுகள் பெற்றிருந்தாலும் இலக்கியச் சூழலில் உரையாடலாக மாறவில்லை. விமர்சனங்களின் கசகசப்பிலிருந்து தன்னை எல்லா வகையிலும் புதுப்பித்துக்கொண்டு கோ. புண்ணியவான் எழுதிய ‘கையறு’ மலேசிய இலக்கியச் சூழல் மட்டுமால்லாமல் தமிழகத்திலும் கவனம் பெற்றது. இரண்டாம் உலகப் போரின் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட சயாம் மரண ரயில்பாதைப் பின்னணியில் எழுதப்பட்ட இந்நாவல் புனைவு மொழியாலும் அழகியலாலும் தரிசனத்தாலும் மலேசிய இலக்கியத்தில் நிலைபெறத்தக்கதாகக் கருத்துரைக்கப்படுகின்றது.
புனைவிலக்கிய முயற்சியோடு நிறுத்திவிடாமல், கோ.புண்ணியவான் இலக்கிய செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். இவர் 1996-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகச் செயலாற்றினார். நூல் வெளியீடுகள், இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவது, தமிழக இலக்கியவாதிகளுடன் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல் போன்ற இலக்கிய செயல்பாடுகளைக் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வழி நடத்தினார். 2000இல் ‘நிறங்கள்’ என்ற தலைப்பில் கெடா மாநில எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியீடு செய்தார். 2010இல் கூலிம் தியான ஆசிரமத்தில் தொடங்கப்பட்ட நவீன இலக்கியக் களத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, கெடா மாநிலத்தில் புத்திலக்கியம் குறித்த உரையாடல்கள் உருவாகவும் பங்களித்தார். 2008-ஆம் ஆண்டு தன் இலக்கிய நண்பர்கள், எம்.இளஞ்செல்வன், கோ. முனியாண்டி ஆகியோருடன் இணைந்து கூலிம் நகரில் புதுக்கவிதை கருத்தரங்கு ஒன்றை வெற்றிகரமாக நடத்தினார்.
கோ. புண்ணியவான் காலத்துடன் நகர்ந்து செல்பவர். எந்தச் சூழலிலும் தன்னைத் தனது நியதியின் அடிப்படையில் நிலைநிறுத்திக் கொள்பவர். எவ்வித வீழ்ச்சிக்குப் பிறகும் எவ்வித சோர்வுக்குப் பிறகும் அவர் மீண்டு வந்து சேரும் இடம் இலக்கியமாகவே உள்ளது. அது இன்றைய இளைஞர்கள் (இளம் படைப்பாளிகள்) கற்க வேண்டிய வாழ்வியல் அம்சமாகும்.
இந்தக் கட்டுரையை எழுதிய சாலினிக்கு மிகுந்த அன்பும் மகிழ்ச்சியும். என் இலக்கிய நகர்வுகளைத் துல்லியமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.அவர் என்னைப்பற்றிய முக்கியமான தரவுகள் எதனையும் தவறவிடவில்லை . அவர் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு இதனைச் செய்திருக்கிறார் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வல்லினத்தின் வழி இளைய தலைமுறை எழுத்தாளர்கள் எழுந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. சாலினிக்கு என் நன்றியும் பேரன்பும்.