எழுத்தாளர் கணேஷ் பாபு அறிமுகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் கணேஷ் பாபு. செப்பேட்டுக்குப் புகழ்பெற்ற சின்னமனூர்,  சி.சு. செல்லப்பாவின் ஊரும் கூட. திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சென்னையிலும், கோயம்புத்தூரிலும் சிறிது காலம் பணியாற்றிவிட்டு, சிங்கப்பூருக்கு 2008ஆம் ஆண்டு குடிபெயர்ந்து, கடந்த பதினான்கு ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் நிரந்தரவாசியாக வசித்து வருகிறார். எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ‘கருவியியல் பொறியாளராகப்’ (Instrumentation Engineer) பணிபுரிந்து வருகிறார்.

இவரது சிறுகதைகள், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களால் சிறந்த சிறுகதைகளாகச் சிங்கப்பூர் சிறுகதைப் பயிலரங்குகளில் தேர்ந்தெடுக்கப் பெற்றிருக்கின்றன. சிங்கப்பூர் தங்கமீன் வாசகர் வட்டச் சிறுகதைத் தொகுப்புகளில் இவரது சில கதைகள் வெளியாகியிருக்கின்றன. அகநாழிகை வெளியிட்ட ‘அக்கரைப் பச்சை’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இவரது ‘கனவுலகவாசிகள்’ கதை இடம்பெற்றுள்ளது. ‘கல்மோகினி’ என்ற இவரது கதை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது கதைகள் ‘சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ்’, ‘தமிழ்முரசு’, ‘அரூ’, ‘வல்லினம்’ போன்ற இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.  இப்படி இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தபோதும், ‘எழுதியதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பாக்குவதே படைப்பாளியின் பணி. எண்ணிக்கை அல்ல, தரமே முக்கியம்’ என்ற கொள்கையுடன், தனது முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டார்.

‘எத்தனையோ ஆண்டுகாலம் தீவிர இலக்கியம் வாசித்தவன் அப்படியே வாசகனாய்த் தொடர்ந்திருக்கலாம். ஆனால், எனக்கு நானே எதையோ சொல்ல வேண்டியிருந்தது. நான் எனக்கு என்ன சொல்ல வருகிறேன் என்று தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் எழுதியபடி இருக்கிறேன்’, என்று சொல்லும் இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘வெயிலின் கூட்டாளிகள், யாவரும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கணேஷ் பாபு, தனக்கே உரிய பாணியில், ‘வாழ்வின் பல்வேறு சாத்தியங்களை, மொழியின் பல்வேறு சாத்தியங்களால் அள்ளி எடுப்பதே எழுதுபவனின் சவால்’ என்கிறார். தன்னுடைய எழுத்து வழிகாட்டிகளாக எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணனையும் ஜெயமோகனையும் சுட்டிக்காட்டுகிறார்.

‘விடுதலை’ என்ற இவரது கதையைப் பற்றி, ஆனந்த் சுவாமி அவர்கள் எழுதிய கடிதம், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் பிரசுரமாகியிருந்தது. கணேஷ் பாபுவின் ‘வெயிலின் கூட்டாளிகள்’ தொகுப்பு குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களும் தனது வலைத்தளத்தில் ‘கணேஷ் பாபுவின் சிறுகதைகள் வடிவ ரீதியாகப் புதிய முன்னெடுப்புகளைக் கொண்டிருக்கின்றன. கவித்துவமான மொழியில் கதை சொல்கிறார். நடுத்தர வர்க்கத்தின் அன்றாட உலகினை, குறிப்பாக அவர்களின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அகப்போராட்டங்களைச் சித்தரிக்க முயலும் இக்கதைகள் மீபுனைவின் கூறுகளை இரண்டாம் இழையாகக் கொண்டு கதையைப் புதுமையாக்குகின்றன. வாழ்க்கை குறித்த ஆழமான தத்துவார்த்த கேள்விகளை எழுப்பும் இவரது கதைகள் சிங்கப்பூர் வாழ்க்கையினைத் தனித்துவமான நோக்கில் பதிவு செய்திருக்கின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுகதைகளையும், நவீன இலக்கியம் மற்றும் நவீன கவிதை வாசிப்பு சார்ந்த கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வரும் கணேஷ் தற்போது, உலக இலக்கியத்தின் சிகரங்களான ருஷ்ய இலக்கியப் படைப்புகளைக் குறித்து ‘திரைகடலுக்கு அப்பால்’ என்ற தலைப்பில் விரிவான கட்டுரைகளை அரூ இணைய இதழில் தொடராக எழுதிவருகிறார். ‘நாவலை வாசிப்பதென்பது காலத்தை வாசிப்பதுதான்.  அதிலும் செவ்வியல் நாவல்கள் வாசகனுக்கு ஒரு நிகர்வாழ்வை வாழவைக்கும் அனுபவத்தை வழங்குகின்றன’ எனக் கூறும் கணேஷின் கட்டுரைகளில் குற்றமும் தண்டனையும், அசடன், புத்துயிர்ப்பு போன்ற நாவல்களை அவர் விவரித்திருக்கும் விதம், அவரின் எழுத்தின் தனித்துவத்தை மட்டுமல்லாது, அவரது ஆழ்ந்த வாசிப்பனுபவத்தையும் காட்டுகிறது. சிங்கப்பூர் எழுத்தாளர் சிவானந்தம் நீலகண்டன், கணேஷ் பாபுவைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘அதிகமான எண்ணிக்கையில் வாசிப்பவர் என்பதைத்தாண்டி, ஒரே நூலைப் பலதடவை வாசிப்பது, ஒரு நூலின் பல்வேறு மொழியாக்கங்களை வாசிப்பது என்று அவரது வாசிப்பு முறைகள் அலாதியானவை. வாசிப்பின் மீது தீராக்காதல் இருந்தாலொழிய அது சாத்தியமில்லை. வாசித்தவற்றைக் காற்றில் கரைந்துபோக விட்டுவிடாமல் தன்னுடைய மொழியில் எழுதியும் பேசியும் கருத்துகளாகவும் அனுபவங்களாகவும் ஆக்கிக்கொள்ளும் திறனும் கைவரப்பெற்றவர்’  என்று குறிப்பிடுகிறார்.

2015 முதல் 2017 வரை தங்கமீன் வாசகர் வட்டத்தில் ‘நவீன கவிதை ரசனை’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய பல்வேறு உரைகள், சிங்கப்பூரில் பல புதிய கவிஞர்களுக்கும் வாசகர்களுக்கும், நவீன கவிதை வாசிப்பை மேம்படுத்திக் கொள்ள உதவின. தற்போது நவீன கவிதைகளைக் குறித்து ‘கவிதை காண் காதை’ என்ற கட்டுரைத் தொடரை ‘சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் எழுதிவருகிறார். இத்தொடர் கவிஞர்களுக்கு மட்டும் அல்ல வாசகர்களுக்கும் புது அனுபவமாக அமைந்திருக்கிறது.

விரைவில் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும், ‘சின்னமனூர்’ என்ற நாவலும் வெளிவரவிருக்கின்றன.

கணேஷ் பாபு தமிழ் விக்கி பக்கம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...