இக்கிமஸ்

[1]

பனிக்குள்ளிருந்து தோண்டி எடுக்கப்பட்டதைப்போல தோற்றமளிக்கும் அந்த நான்குசக்கர வாகனம் சாலையை விட்டு விலகி, இடப்பக்கமாக திரும்பி குறுகலான காட்டுப்பாதையில் நுழைந்தது.

வேகம் குறைந்து ஊர்ந்தபடிதான் சென்றது. என்றாலும் இரண்டு அடி உயரத்திற்கு கொட்டிக்கிடந்து குளிரில் கண்ணாடியைப்போல இறுகிவிட்ட பனி, சக்கரங்களுக்கு கீழே ஓசையுடன் உடைந்து நொறுங்கியது.

முழங்கால் உயரத்திற்கு பாறைகளை சுவராக அடுக்கி உருவாக்கப்பட்ட இருபது வாகனங்களுக்கு இடமுள்ள நிறுத்துமிடம். ஆள் நடமாட்டமின்றி பனிப்பரப்பின்மேல் காற்றின் வரைவுகள் காட்டி பாலைவனம் போல கிடந்தது.

வாகனத்தை நிலைப்படுத்தி அணைத்து விட்டு கைபேசியில் குறுஞ்செய்தியை பார்த்தான். உடன் மலையேற நேற்று இரவு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நண்பர்கள் பனிப்புயலில் விமானம் ரத்தாகி வரவில்லை. அமெரிக்காவை கிழமேற்காக வகுந்து செல்லும் தேசியநெடுஞ்சாலை உள்பட கொலராடோவை அடையும் சிறுசாலைகளும் மூடப்பட்டுவிட்டன எனும் அறிவிப்புகள். ஒரு நாள் முன்பாகவே வந்து சிகரத்திற்கு அருகில் உள்ள விடுதியில் தங்கியதற்காக தன் சாமர்த்தியத்தை பாராட்டிக்கொண்டான்.

மலையேறும் காலணிகளுக்கு மாறி, முதுகுப்பைகளையும் தளவாடங்களையும் எடுத்துக்கொண்டு வாகனத்தை விட்டு இறங்கி நடந்தான்.

நிறுத்துமிடத்தின் பின் மூலையில் சிறிய கழிவறை. அதை ஒட்டி உயரச்செல்லும் படிகளில் ஏறி சமவெளிக்கு வந்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனி கொட்டிக்கிடந்த நிலம் அதிகாலையின் கருக்கலில் உப்பளம் போல தெரிந்தது.

அருகில் கிடந்த மர மேசைகளில் உறைந்து ஒழுகிய பனி இறுகி கட்டியாகி, கண்ணாடியாலான கத்திகள், குத்தூசிகள் போல தரையை நோக்கி நீண்டு மேசையின் விளிம்புகளில் உறைந்திருந்தது. பைகளையும் தளவாடங்களையும் அதன்மேல் வைத்து உறையணிந்த கைகளால் இருக்கையில் குவிந்திருந்த பனியை தள்ளிவிட்டு அமர்ந்தான்.

தெர்மாஸ் குடுவையில் இருந்து தேநீரை ஊற்றிக்கொண்டு நிமிர்ந்து தூரத்தில் தெரிந்த சிகரத்தை பார்த்தான்.

மடிப்புகளுடன் மேலேறிச்செல்லும் கொலராடோ மலைத்தொடர் அமர்ந்து அசைபோடும் காளையின் கழுத்து போல தெரிந்தது. சரிவாக மேல் எழும் மறுமுனையின் தூரத்தில் பதினாராயிரம் அடி சிகரம். மறுபக்கம் வெட்டி எடுத்தைப்போல செங்குத்தாக இறங்கும் பள்ளத்தாக்கு. கீழே உறைந்து பனி மூடிய ஏரி.

புகைப்படத்தில் பார்த்தவுடன் இங்கு வருவதும் மேலே ஏறுவதும் தன்னால் செய்து முடித்தே ஆகவேண்டிய, தவிர்க்கவே முடியாத ஒரு நிர்ப்பந்தம் என்பதைப்போல திட்டமிட்டு கிளம்பி வந்திருந்தான். மலையை அருகில் பார்த்திருந்தது அதன்மீதுள்ள வாஞ்சையை இன்னும் அதிகமாகியிருந்தது.

பதினொராயிரம் அடி உயரம் வரை மலையின்மேல் வாகனத்தில் வந்துவிட்டதால் மீதி ஏற வேண்டியது மேலும் சுமார் நாலாயிரம் அடி. சுமார் ஐந்து மைல் தூர நடை. ஒரு மைல் தூரத்திற்கு சுமாராக ஒரு மணிநேரம் என்றாலும் பதினொரு மணி போல உச்சியில் இருக்கலாம். படம் எடுக்க, ஓய்வுக்கு என ஒரு மணி நேரம், எதிர்பாராத தாமதங்களுக்கு கூடுதலாக ஒரு மணிநேரம். மதியம் ஒரு மணிக்கு இறங்க ஆரம்பித்து ஐந்து மணிக்கு வாகனத்தை எடுத்தால் கூட ஏழு மணிபோல விடுதி அறைக்கு வந்துவிடலாம்.

உயரத்தில் பிராணவாயுவின் குறைவால் மிகுந்த பலசாலிகளுக்கு கூட உடல் வலு குன்றும். உடலில் கரியமிலவாயுவின் அளவு அதிகரிப்பதால் வாந்தி, குழப்பங்கள், மனமயக்கங்கள் ஏற்படலாம். சிலருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுவதும் உண்டு என்று மலையேறும் பயிற்சியில் சொல்லப்பட்டதை நினைத்துக்கொண்டான்.

உடனே கோரன் கிரப்பின் நினைவு வந்தது. உள்ளூர சிரித்துக் கொண்டான். ஸ்டாக்ஹோமிலிருந்து  ஒற்றை ஆளாக மிதிவண்டியில் கிளம்பி காட்மண்டு வந்து, ஷெர்பாக்களின்  உதவியோ பிராணவாயு போத்தலோ இல்லாமல் தனி ஆளாக எவரெஸ்டுக்கு ஏறியது மட்டுமில்லாமல், அதே போல இறங்கி அதே மிதிவண்டியில் ஸ்வீடனுக்கு திரும்பிச்சென்றவன் கோரன் கிரப்.

ஏறக்கடினமான மலை மனிதர்களின் அகங்காரத்தை சீண்டி அதன் உயரத்திற்கே சமானமான ஆர்வத்தையும் உத்வேகத்தையும் உண்டாக்குகிறது. வானை நோக்கி திமிறி நிற்கும் தன்னை அடைவதை சாதனையாக எண்ண வைக்கிறது. அதன் உச்சியை அடையத்துடிப்பவர்கள் எந்த சாமானியரையும் போன்றவர்தான். ஆனால் அவர்களின் லட்சியங்களும் கற்பனைகளும் எச்சரிக்கையுணர்வின் காரணமாக சாமான்யர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை துடைத்து இல்லாமலாக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டவை. ஆர்வமும் மர்மும் ஒருசேர முயங்கும்போது உருவாகும் வசீகரத்தின் வலிமை அதில் உள்ளுறையும் ஆபத்தை மூடிமறைத்துவிடுகிறது. கடினமான பயணத்தின் முடிவில் சிகரத்தின் உச்சியை அடைபவர்கள் வெல்வது தம் சுய சந்தேகங்களையும் அச்சங்களையும்தானே?

இதுபோல பல எண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்டு அமர்ந்திருந்தான். முடிவில் தனக்குள் எங்கோ மீதமிருக்கும் துளியளவு அச்சத்தை மறைப்பதற்காக ஆழ்மனம் ஆடும் நாடகம்தான் இதுபோன்ற சிந்தனைகளுக்கு காரணமாக இருக்குமோ? என நினைத்துக்கொண்டான்.

காலி கோப்பையை தாளில் துடைத்து பையில் வைத்துக்கொண்டான். உயரமான முதுகுப்பையை திறந்து மலையேறும் கயிறுகள், கொக்கிகள், முழுதானியத்துடன் தேன் ஊற்றி இறுக வைத்த பர்பிகள், பதப்படுத்தி உலர்த்திய பழச்சீவல்கள், சாக்கலேட்டுகள், உறைந்துவிடாமல் இருக்கும்படி கம்பளித்துணி சுற்றிய கொதிநீர் குடுவை, உடைகள் ஆகியவற்றை சரிபார்த்துக்கொண்டான்.

சாட்டிலைட் தொலைபேசியை திறந்து நிற்கும் இடத்தின் பாகையை ஏறவேண்டிய பாதையின் கோணத்துடன் சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொண்டான். கால்சட்டையை உயரமான காலணிக்குள் செருகி நீர்புகாமல் இருக்க அவற்றின் மேல் கெய்டர் பட்டைகளை அணிந்தபின் முன்பக்கத்திலும் அடியிலும் உலோக முட்கள் கொண்ட கிராம்பான்களை காலணிகளின் மீது மாட்டினான்.

இடுப்பையும் தொடைகளையும் பாதுகாப்பு சேணத்தில் இணைத்து பூட்டி, உபகரணங்கள் ஏந்தும் கச்சையை இடுப்பில் கட்டி கயிற்று சுருள்கள், கொக்கிகள், நாரையின் கழுத்து போன்ற பனிச்சுத்திகள் ஆகியவற்றை பொருத்தினான். முதுகில் இறுக்கிய பையுடன், காலணிகள் பனியில் புதைந்து ஒலியெழுப்ப மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

திட்டமிட்டைதைப்போலவே சூரிய உதயத்திற்கு முன்னதாகவே ஏற ஆரம்பித்ததில் திருப்தியடைந்திருந்தான். சிகரத்தை நோக்கி மேலேறிச்செல்லும் அந்த பாதை அவன் கற்பனையில் எண்ணியிருந்ததைப்போல அமைந்திருந்தது நம்பிக்கையூட்ட, உற்சாகமாக ஏறிச்சென்றான்.

[2]

இரண்டுமணி நேரம் நடந்திருப்பான். எளிதாக நடக்க முடிகிற தூரம் முடிந்து கடுமையான சரிவுடன் கூடிய பாதை ஆரம்பித்திருந்தது.

முகட்டின் மேல் ஊளையிட்டு இறங்கிய காற்று பனியைக் கிளறி புகையைப்போல பறந்து சென்றது. முற்றிலும் கனவு உலகத்துக்குள் பிரவேசித்து விட்டது போல கைக்கு எட்டும் தூரத்தில் சாம்பல் நிற மேகங்கள். ஒரு கணம் எங்கே இருக்கிறோம் என்ற குழப்பம் எழுந்து தணிந்தது.

பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து மாற்றலாகி வடஅமெரிக்கா வந்தது முதல் பனியை விரிவாக அறிந்திருந்தான். பனிப்பொழிவு, பலமடைந்து நீடிக்கும் பனிப்புயல், மணல் போல உதிரியான உலர்ந்த பனி, குழைத்த மண்போன்ற எடை கூடிய பனி, மைசூர்பாகு போன்ற ஃப்ராஸ்ட் எனும் உறைபனி, மழையும் பனியும் கலந்த ஸ்லீட், மழையாக விழுந்தவுடன் உறையும் ஃப்ரீஸிங் ரெயின் ஆகியவற்றை அனுபவித்திருந்தான்.

தாத்தாவின் ஞாபகம் வந்தது. பனிக்காடுகளில் வாழும் மனிதர்களின் கதையில் பனி என்ற சொல்லுக்கு எத்தனை விதமான அர்த்தங்கள் இருக்க முடியும் என்பதை முதலில் சொன்னது அவர்தான். மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே என்ற பாட்டில் வருவது அதிகாலை புல்லில் முகிழ்த்து நிற்கும் துளி. மார்கழி அதிகாலையில் புகையைப்போல சூழும் மூடுபனி ஆகியவற்றின் விளக்கங்களுடன் சிப்பாயாக இமயமலையில் அனுபவித்த பனிப்பொழிவு பற்றி பல கதைகள் சொல்லியிருக்கிறார்.

கரிசல் நிலத்தின் வெய்யிலை தவிர வேறெதையும் பார்த்திராமல் தாத்தாவின் கதைகளை கேட்டு இளம் வயதில் பல கற்பனைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தான். சித்திரைமாத வெக்கையில் சைக்கிள் மிதித்து பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருக்கும்போது, இப்போது திடீரென பனிப்பொழிவு ஏற்பட்டால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பனியை கற்பனையில் அனுபவித்து, என்ன விபரீதமான கற்பனை? என்று உள்ளூர சிரித்துக்கொள்வான்.

அனலின் தகிப்புடன் பனிக்காற்று முகத்தில் சிராய்த்துகொண்டு சென்றது. சுவாசத்தை நிதானப்படுத்தி கைகளை முழங்கால்களில் வைத்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காட்சியை நிறைத்து நிற்கும் மலைத்தொடரின் விரிவு. அவற்றை முழுதும் பார்க்க முடியாதபடி பார்வையை மறைத்து ஊடறுத்தபடி விழுந்து கொண்டிருக்கும் பனியின் வெண்மை.

சென்ற வருடம் இளவேனிலில் ஜப்பான் சென்றிருந்தபோது ஆற்றங்கரையில் நடந்து செல்ல முடியாதபடி ஹனாமி கொண்டாட்டம்.  இலைகளுக்கு பதில் மரங்கள் முழுக்க தூய வெண்மையில், உள் ஆழத்தில் இளச்சிவப்புடன் மலர்கள். சில மரங்கள் இளம் மஞ்சள் நிறம். கீழே தரையெங்கும் விரிப்புகளில் ஜனக்கூட்டம், பேச்சும் சிரிப்பும் விளையாட்டுகளும்.

மனிதர்களுக்கு தேவையானதெல்லாம் சந்தோஷமாக செய்ய ஏதோ ஒரு செயல். அதற்கு ஏதோ ஒரு காரணம். அது எவ்வளவு அசட்டுத்தனமானதாகவும் இருக்கலாம்தான். அப்படியிருக்க சக்குரா பூக்களை பார்த்து ரசிக்க ஒரு விழா நிச்சயம் வேண்டும்தான். யோசித்துக்கொண்டே உணவுகள் நிறைந்த விரிப்புகளுடன் மனித கூட்டங்களை தாண்டி புல்வெளியை கடந்து மலைச்சரிவை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

கூட்டமில்லாதபடி தூரமாக சென்றபின் வெண்ணிற சக்குரா மரத்தை புகைப்படம் எடுக்க முயன்றபோதுதான் மரத்தடியில் அமர்ந்திருந்த முதியவரை பார்த்தான்.

தியான நிலையில் கண்களை மூடி அமர்ந்திருந்தார். அமைதியாக கடந்து செல்ல முயன்றவனை ”கொன்பண்வா” என்ற குரல் நிறுத்தியது.

அது வணக்கம் சொல்வது போல இல்லை. அதிகாரமும் கண்டிப்பும் கூடி ஏறக்குறைய ஒரு ஆணையைப்போல ஒலித்தது.

ஜப்பானிய முறையில் தலையை தாழ்த்தி ”கொனீச்சுவா” என அவன் வணக்கம் சொன்னதும் ”சக்குரா?” கேள்வி வந்தது. அவர் கண்களை வைத்தே அவர் ஒரு துறவி என்பதை அறிய முடியும் போல என்பதைப்போல, சந்தேகம் சிறிதும் அற்ற குழந்தையைப்போன்ற கண்கள்.

“சக்குரா”.  சொல்லிவிட்டு தயங்கி நடக்க முயன்றான். அவன் கழுத்தில் தொங்கிய காமிராவை பார்த்து, ”மிக்கமினி மின்னசகுரா” என ஒரு மந்திரத்தை உச்சரிப்பதைப்போல சொல்லிவிட்டு கண்களை மூடி அமைதிக்கு திரும்பிவிட்டிருந்தார். அதற்கு என்ன அர்த்தம் என்பது அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

அறைக்கு திரும்பியபிறகு விடுதி வரவேற்பறை அழகியிடம் ”மிக்கமினி மின்னசகுரா” என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டுப்பார்த்தான். அவள் திக்கி திணறி ஆங்கிலத்தில் சொன்னவற்றை வைத்து, ‘மனித வாழ்க்கையின் அற்பத்தையும் அழகையும் ஒருசேர காண்பிப்பதுபோல. அழகுகளால் நிரம்பியது சகுரா. ஆனால் அதன் ஆயுள் மிகவும் குறுகியது. மாற்றம் உறுதியானது ஆனால் திடீரென நிகழ்வது’ என்று தோராயமாக புரிந்துகொண்டான்.

இப்போது ஏன் அந்த கிழவர் ஏன் நினைவுக்கு வருகிறார்?

யோசித்தபடி அடிகளை கவனமாக வைத்து நடந்தான்.

பனி அதிகமாக விழ ஆரம்பித்திருக்க, மலைத்தொடர் ஒரு புராதான மிருகத்தைப்போல முதுகை காட்டிக்கொண்டு குப்புறக்கிடந்தது.

[3]

பத்தரை மணிக்கு சிகரத்திற்கு அருகில் வந்துவிட்டிருந்தான். குளிரையும் மீறி ஆடைக்குள் வியர்த்துவிட்டிருந்தது.

அவன் நிற்கும் இடத்தை விட ஒரு முப்பதடி தூரத்தில் சிகரம் நிற்கும் குன்றின் அடிவாரம்.

கடிகாரம் -20 டிகிரி என காட்டியது. கைவிரல்களும் பாதங்ககளும் உறைந்து உணர்விழந்துவிட்டிருந்தன. மார்பில் பாறாங்ககல்லை வைத்தது போல இருந்தது.

முகமூடியையும் தாண்டி ஊசியைப்போல இறங்கும் குளிர். மூக்கு மரக்கட்டை போல உறைந்து வலித்தது. நின்று முழங்கால்களில் கையை ஊன்றி குனிந்து மூச்சை ஆழமாக இழுத்துவிட்டான். தொண்டையில் அசௌகர்யமான துள்ளல் எழுந்தது.

இனியும் நடப்பது பாதுகாப்பானது அல்ல என்ற உணர்வு எழ முதுகுப்பையை இறக்கிவைத்தான். பக்கவாட்டில் சுருட்டி கட்டியிருதிருந்த ரப்பர் பாயை தரையில் விரித்தான். காற்று வீசும் திசையை கணித்தபின் பையில் மடக்கியிருந்த அட்டையை எடுத்து விரித்து அதை சிறிய பிளாஸ்டிக் ஆணிகளால் தரையில் இருத்தி மறைப்பை ஏற்படுத்தி விளக்கு போன்ற சிறிய அடுப்பை பற்றவைத்தான். 

கையுறைகளை கழற்றிவிட்டு உள்ளங்கைகளை தீயில் காட்டிக்கொண்டான். கண்ணாடியையும் பனிமுகமூடியையும் கழற்றி கைகளால் முகத்தை தேய்த்து சூடாக்கி அணிந்துகொண்டான்.

திடீரென காற்று பலமாக வீசியது. காற்றின் திசை நோக்கி யதேச்சையாக திரும்பினான். 

தலைகீழாக நட்டதுபோன்ற கிளைகளுடன் இலைகளற்று நிற்கும் மரம். உற்றுப்பார்த்தபோது உடல் அதிர்ந்தது. சென்றமுறை ஜப்பானில் சந்தித்த அந்த முதிய பிக்கு மரத்துக்கு கீழே தியான நிலையில் அமர்ந்திருந்தார்!

தண்டுவடம் சிலிர்க்க, அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.

காவி நிற அங்கிக்கு பதிலாக பனிச்சறுக்கு வீர்கள் அணியும் நவீன வெண்ணிற பனிக்கோட்டு. வெள்ளை நிற கால்சட்டை, கையுறைகள், தலையில் பனித்தொப்பி.

உள்ளிருந்து துளைத்துக்கொண்டு மேற்பரப்புக்கு வந்தது போல சுற்றிலும் பனி குவிந்திருக்க மையத்தில் அமர்ந்திருந்தார். சில மணிநேரங்களாவது அவர் அங்கு இருந்திருக்கவேண்டும். தொங்கு மீசையிலும் தாடியிலும் பனி திரள்களாகி உறைந்திருந்தது.

அவரே முந்திக்கொண்டு ”கொனிச்சுவா” என அமர்ந்த நிலையில் வணங்கினார். குழம்பி அவரைப்போலவே குனிந்து தலையை முன்பக்கமாக சாய்த்து வணங்கினான்.

மரத்துக்கு பின்னிருந்து வீசிய குளிர்காற்றில் அவரின் வெண்ணிறதாடி எதையோ சொல்லிவிட முயல்வதைப்போல, அவனை நோக்கி நீண்டு ஆடிக்கொண்டிருந்தது.

உரையாடலை எப்படி தொடர்வது என்று தெரியாமல் முகத்தை எநத வெளிப்பாடுகளும் இன்றி வெறுமையாக வைத்துக்கொண்டிருந்தான். அவரை இங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. என்ன பேசுவது? எதையாவது சொல்ல வேண்டுமே?

”வென் டிட் யு கெட் ஹியர்?

முதியவரின் கண்கள் இடுங்கி மேலும் சுருங்கின.

”இக்கிமஸ்”

சொல்லிவிட்டு முகம் கனிய புன்னகைத்தார். கரகரப்பான குரலில் மொழியை புரிந்து கொள்ள சற்று நேரம் பிடித்தது.

அவனுக்கு புரிந்தவரையில் ‘இங்கே இருப்பேன், நான் இங்கேதான் இருந்து கொண்டிருக்கிறேன்’ என்று அர்த்தப்படுத்திக்கொண்டான். தவறாக இருக்கலாம் என்றாலும் ‘எப்பவும் இருப்பேன்’ என்பது இன்னும் சரியான அர்த்தம் என்று தோன்றியது.

”நான் எப்பவும் இருப்பேன்” என்பதை உள்ளுக்குள் சொல்லிப்பார்த்துக் கொண்டபோது அதன் அர்த்தம் பின் மண்டையில் அடித்தைப்போல உறைத்தது. எவ்வளவு ஆணவம்? என்னை கேலி செய்கிறாரா?

திரும்ப மரத்தடியை பார்த்தான். அதிர்ச்சியில் உறைந்து இதயமே ஒரு கணம் நின்றுவிட்டது. அந்த இடத்தில் அவர் இல்லை!

கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பொழிந்துகொண்டிருக்கும் பனியுடன் அமைதியும் மிகுந்துவிட்டிருந்தது.

பெரிய வெண்ணிற குழிமுயல் ஒன்று பனிப்பரப்பின் அழகை குலைத்து பள்ளங்கள் ஏற்படுத்தியபடி, தத்தி எதிர் திசையில் சென்றுகொண்டிருந்தது.

அதிகமாகிவிட்ட இதயத்துடிப்பு செவிப்பறைகளில் அதிர்ந்தது.

இது உண்மைதானா? கனவில் இருக்கிறேனா?

அமர்ந்த மனித உடல் அழுந்திய பள்ளத்தின் மீது பனி விழுந்து நிறைக்க ஆரம்பித்திருப்பதை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவர் அங்கு வந்ததற்கான, திரும்பிச்சென்றதற்கான காலடித்தடங்கள் எதுவும் இல்லை.

அவன் உடலெங்கும் அதிர்ச்சியின் சுழிப்பு ஒடிச்சென்றது.

[4]

ஒருவாறாக தன்னை சேகரித்துக்கொண்டு, உந்தி தள்ளும் பனிக்காற்றில் தள்ளாடியவாறு சிகரத்தின் அடிவாரத்தை அடைந்துவிட்டிருந்தான்.

நாற்பது அடி உயரமுடைய செங்குத்தான குன்று. அதன் மேல் பனி சுவர்போல உறைந்து பாளங்களாக இறுகியிருந்தது. மேலே உச்சியில் சிகரம்.

வலக்கையால் பனிக்கோடாரியை தூக்கி பலங்கொண்ட மட்டும் பனிச்சுவற்றின் கொத்தி, அதன் உறுதியை சோதித்துக்கொண்டான். கையில் தொங்கும் உடலின் எடையை கோடாரியில் வைத்து, இடது முன்காலின் ஆணிகளால் பனிச்சுவரை உதைத்து பதியவைத்து, அதில் உடலின் பாதி எடையை மாற்றி நின்று, கை மாற்றி கவனமாக ஏறி மேலே வந்தான்.

ஒரு கோணத்தில் வெகுதூரத்தில் இருந்து பார்க்கும்போது கூர்மையாக தோன்றினாலும் சிகரத்தின் உச்சி என்பது சுமார் ஏழடி அகலமுள்ள சரிவான தரை. அதன் முன்பக்கம் உயர்ந்து சரிந்திருந்தது.

சிகரத்தின் விளிம்பில் நின்று கீழே பார்த்தான். காலணிகளிலிருந்து விழுந்த துகள்களை காற்று உந்தி மேல்நோக்கி வீச அவை உடைந்து சிதறி பளீரிட்டு மினுக்கி அலையாடி கீழிறங்கின.

கருமேகங்கள் வானத்தை முற்றிலுமாக அடைத்துக்கொண்டிருந்தன. மேகங்களும் மூடுபனியும் இல்லாவிட்டால் இங்கிருந்து பார்ப்பது அற்புதமான விருந்தளிக்கும் காட்சியாக இருந்திருக்கும்.

உச்சி வரை அடர்ந்த மேகங்களின் ஆழத்துக்குள் சூரியன் மறைந்திருந்தது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. இருந்தாலும் துல்லியமாக திட்டமிட்டு சரியான நேரத்தில் சிகரத்தை அடைந்துவிட்டதை எண்ணி, தன் உறுதியை பாராட்டிக்கொண்டு அந்த மகிழ்ச்சியின் நிறைவில் கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தான்.

இவ்வளவு மேகமூட்டம் இன்று மதிய வானிலை அறிக்கையில் இல்லை. ஆகவே மேகங்கள் கலையட்டும் என்று காத்திருந்தான்.

சற்று நேரத்தில் மேகங்கள் மேலும் அடர்ந்து மூடுபனி மேலும் அதிகமாகிவிட்டிருந்தது. தலைக்கவசத்தின் விளக்கொளி வீச்சில் மேகங்கள் அடர்ந்து புகைத்திரையைப்போல சூழ்ந்துவிட்டிருந்தன. காற்றின் வேகம் அதிமாகி தூக்கி எறிந்துவிடுவதைப்போல ஆவேசத்துடன் அவனை தள்ளியது.

ஆடைகளையும் மீறி ஊடுருவும் குளிர் உடலில் விஷம் போல இறங்கியது.

குளிரில் உடல் நடுங்க ஆரம்பித்திருக்க கீழே இறங்க ஆரம்பித்தான்.

சிகரத்தின் அடிவாரத்தில் இறங்கியிருந்தபோது பனி இன்னும் வலுத்திருந்தது.

குன்றின் மறைப்பில் காற்று வீசும் திசையை கணித்து, பையில் மடித்து வைக்கப்பட்டிருந்த கூடாரத்தை நீளவாக்கில் விரித்து சாண் நீளமுள்ள பிளாஸ்டிக் ஆப்புகளை தரையில் அடித்து பொருத்தினான். சூரியமின்கல விளக்கை இயக்கி ஒளியூட்டி கூடாரத்தின் தரையில் ரப்பர் பாயை விரித்தான். தூங்கும் பையை அதன் மேல் விரித்து அதனுள் கால்களை நுழைத்து மார்புவரை இழுத்து மூடிக்கொண்டான்.

அன்று எடுத்திருந்த படங்களை காமிராவின் திரையில் பார்த்துக்கொண்டிருந்தான். நூறு படங்களாவது இருக்கும். எந்தப் படத்திலும் இந்த இடத்தின் அழகு முழுமையாக வரவில்லை. ஒருவேளை அது சாத்தியமில்லையோ?

தத்திச் செல்லும் முயலை படம் எடுத்திருந்தான். ஜப்பானிய பிக்குவை படம் எடுக்கவில்லை. அவர் அமர்ந்திருந்த இடத்தையவது படம் எடுத்திருக்கலாம். எதிர்பாராமல் சந்தித்த அதிர்ச்சியில் எடுக்க மறந்ததற்காக அதிருப்தியடைந்து, உரக்க தன்னைத்தானே கடிந்து கொண்டான்.

பனிப்புயலில் இறங்கி திரும்பிச்செல்ல முடியாது. அன்று பெளர்ணமி என்பதை நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த யோசனை தோன்றியது.

இங்கேயே தங்கி மாலையில் பெளர்ணமி நிலவை பார்த்துவிட்டு தாமதமாக இறங்கினால் என்ன?

வேறு வழியே இல்லை எனும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ஒழிய பயணத்தின் திட்டத்தை மாற்றக்கூடாது என்பது மலையேறும் விதிகளுள் முக்கியமானது. பையைத் திறந்து பார்த்து போதுமான அளவு உணவும் நீரும் மீதமிருந்ததை உறுதிசெய்துகொண்டபோது, கீழிறங்கும பயணத்தை தாமதிக்கலாம் என்றுதான் தோன்றியது.

விளக்கை அணைத்து கண்களை மூடிக்கொண்டான்.

தாக்கி உடைக்க முயல்வதுபோல, பெரும் ஒலியுடன் மலையுடன் மோதி ஊளையிடும் காற்று கூடாரத்தை உலுக்கிக்கொண்டிருந்தது. களைப்பு இமைகளை எடை கொண்டு அழுத்தியது.

[5]

கண்விழித்தபோது மாலை மணி ஏழு. சுற்றிலும் அமைதி.

கூடாரத்தை திறந்து வெளியே வந்தான். பனிப்புயல் நின்று விட்டிருந்தது.

அவ்வளவு பிரகாசமான, அவ்வளவு பெரிய நிலவை அவன் பார்த்ததே இல்லை. முழுநிலவு மட்டுமல்ல, பெருநிலவு!

நிலவின் ஒளியை பனி நாற்புறமும் பிரதிபலிக்க வெளியில் பிரகாசம் இன்னும் கூடியிருந்தது. பார்ப்பதும் ஏறுவதும் எளிதாக இருந்தது. முழுநிலவை சிகரத்தின் மேல் பார்க்கும் ஆர்வம் அவனை உந்தியது. ஏற்கனவே பழகிய பாதை என்பதாலும் வேகமாக ஏறமுடிந்தது.

உச்சியின் தளத்துக்கு வந்து நின்று சுற்றிலும் பார்த்தான். மெல்லிய தூறலாக பனி இன்னும் விழுந்துகொண்டிருந்தாலும் காற்று வேகம் இழந்திருந்தது.

யானைக்கூட்டம் போல நிற்கும் மலைத்தொடர். பனி வெண்மையாக நிரம்பி வழிந்து நிலவொளியில் புகைந்து கொண்டிருந்தது. அதன் உயரே பூரணவடிவில் நம்ப முடியாத அளவுக்கு பெரிய, நம்ப முடியாத அளவுக்கு பிரகாசமான நிலவு! கீழே ஒளிரும் கடல்போல பள்ளத்தாக்கின் ஆழத்தில் உறைந்த ஏரி.

பையை திறந்து கைக்கு அடக்கமான நோட்டுப்புத்தகத்தை எடுத்து அதன் எழுத்துக்கள் தெளிவாக தெரிவதை நம்பமுடியாமல் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு எழுத ஆரம்பித்தான்.

“நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வரும் நிலவு பூமிக்கு அருகில் நெருங்கும்போது வழக்கத்தை விட பத்து சதம் வரை பெரிதாகவும் பதினைந்து சதம் அதிக ஒளியுடனும் தெரிகிறது. ஒவ்வொரு பனித்துளியும் சுமார் நூறு பனிப்படிகங்களினால் ஆனது. ஒவ்வொரு படிகத்திலும் சுமார் பத்தாயிரம் கோடி நீர் மூலக்கூறுகள். விழுந்து கிடக்கும், தூறிக்கொண்டிருக்கும் பனியின் ஒவ்வொரு படிகமும் கண்ணாடிப்போல பிரதிபலிக்க, பனிப்பொழிவில் நிலவொளி மேலும் கணிசமான அளவு பிரகாசமடைகிறது. இவற்றையெல்லாம் வாசித்திருக்கிறேன், இவை அனைத்தும் உண்மை என்று என் அனுபவத்தில் கண்டு அவற்றின் சாட்சியாக நின்று இப்போது இதை எழுதுகிறேன். இது என் வாழ்க்கையின் திருப்புமுனையான, முக்கியமான இரவு.

வேகமாக எழுதிக்கொண்டிருந்தான்.

பிறகு, கேமராவை கழுத்தில் மாட்டிக்கொண்டு காலையில் சூரிய ஒளியில் எடுக்க இயலாத படங்களை இப்போது நிலவொளியில் எடுத்துக்கொண்டிருந்தான்.

 [6]

அவன் திட்டப்படி அன்று மதியம் கீழே இறங்க ஆரம்பித்திருக்க வேண்டும். கடைசி நேரத்தில் மாலை வரை தங்க முடிவெடுத்து தங்கி, மீண்டும் ஏறிவந்து படங்களும் எடுத்துக்கொண்டாயிற்று.

ஆனால் கீழே இறங்க ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணமே எழவில்லை.

மேலிருந்து கேமராவின் வழியாக ஒவ்வொரு கோணமாக பார்த்து படம் எடுத்த பிறகும் அதுவரை பார்க்காத இன்னும் பல கோணங்ககள் இருப்பதை அறிந்தான். ஒவ்வோரு முறையும் இன்னும் பார்க்காத எதுவோ மீதமிருந்தது. ஒருவேளை இதை பார்த்து முடிக்கவே முடியாதோ?

காற்றின் வேகம் குறைந்து ஒலி இழந்திருந்தது. அரிசிக்குருணைகள் போல பனித்துகள்கள் விழுவதை பார்த்துக்கொண்டு, நிலவொளியில் அவை உண்டாக்கும் மாயங்களை கண்டு சிறு குழந்தையைப்போல மகிழ்ந்துகொண்டு அந்த இடத்தின் அழகில் மயங்கி சொற்களை இழந்து செயலற்றுப்போய் நின்றுகொண்டிருந்தான்.

கையை நீட்டி சேகரித்து பனிப்பரல்களில் ஒவ்வொரு துகளும் வைரம் போல மின்னுவதை பார்த்துக்கொண்டிருந்தான்.

பனியின் வெண்மையைத்தவிர வேறெதுவும் இல்லை.

பனி விழும் ஓசையை தவிர வேறு ஓசை இல்லை.

பனியைத்தவிர வேறெதுவும் இல்லை.

கவனம் முழுக்க பனியின் மீது குவிந்து சில நிமிடங்கள் நின்றபின் அந்த பனியின் ஒரு பகுதியாக. மாறி விட்டிருந்தான். எப்போதுமில்லாதபடி நிறைந்திருந்த விசித்திரமான அமைதியின்மையில் மனம் கொந்தளித்துக்கொண்டிருந்தது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன் உருவாகி நிலை பெற்று விட்ட அந்த மலையின் ஒரு பகுதியாக, தலைக்கும் மேலே பனியை பொழிந்து கொண்டிருக்கும் வானத்தின் ஒரு பகுதியாக தன்னை உணர்ந்தான். இதயத்துடிப்பு அதிகமாகி உட்செவியில் இரத்த நாளங்கள் அதிர்வதை கேட்க முடிந்தது. அந்த இடத்தை விட்டு இறங்கிச்செல்லும் ஒரு முடிவை தன்னால் எடுக்கவே முடியாதோ என்று தோன்றியது.

நேரம் ஆக ஆக அது வெறும் ஒரு எண்ணம் மட்டுமல்ல என்பது புரிந்துவிட்டிருந்து. அந்த இடத்தை விட்டு தன்னால் ஒருபோதும் அகலவே முடியாதோ என்ற ஐயம் இப்போது அவனுக்குள் வலுக்க ஆரம்பித்திருந்தது.

நானாக விரும்பி இங்கு வரவில்லையோ? இந்த சிகரம்தான் என்னை ஆணையிட்டு வரவழைத்துக்கொண்டதோ? என்பது போன்ற விசித்திரமான எண்ணங்கள் சூழ்ந்துகொண்டன.

மேலும் நேரம் கடந்த பிறகுதான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தான். தன் முழு பிரம்மாண்டத்தினாலும் எடையாலும் ஆகர்ஷணத்தினாலும் இறுக்கி ஏந்தி அந்த மலை தன்னை அங்கே நிறுத்தியிப்பது போன்ற சித்திரம் அவன் மனதில் எழுந்தது. பிரம்மாண்டமான காந்தத்தின் பிடியில் கிடக்கும் சிறிய ஒரு எளிய இரும்புத்துண்டைப்போல தன்னை உணர்ந்தான்.

“வாட் நான்ஸென்ஸ்” என்று சொல்லிக்கொண்டு நினைவை மாற்றி இறங்க ஆயத்தமானான்.

சில அடிகள் எடுத்து வைத்திருப்பான்.

பிறகு மனம் மாறி இன்னும் சற்று நேரம் இருந்துவிட்டு செல்லாம் என்று அவன் அங்கு நின்ற சற்று நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது.

மீண்டும் பழையபடி பனியை வெறித்துப்பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான். இரைப்பையில் எழுந்த அசெளகர்யமான துள்ளல் தொண்டை வரை வந்து சென்றது. வாந்தி வருமோ என்று ஆயத்தமாகி குனிந்து சில நொடிகள் நின்றான். நீர்க்குடுவையை எடுத்து சில மிடறுகள் பருகி ஆசுவாசப்படுத்திக்கொண்டான். மூச்சடைப்பது போல இருந்தது.

உள்ளுக்குள் கனத்துக்கொண்டிருந்த விவரிக்கமுடியாத அமைதியின்மை இப்போது தாளமுடியாத இனம் புரியாத துக்கமாக மாறியிருந்தது.

இயற்கை மனிதனுக்கு அளித்துள்ள அனைத்து விஷயங்களையும் போலவே இந்த மலையும் நிலவும் இரவும் அனவருக்கும் பாரபட்சமின்றி எளிதாக கிடைப்பதுதான். ஆனால் மனிதர்கள் இதையெல்லாம் அறிந்திருக்கிறார்களா?

கண்களில் நீர் வழிந்தது.

“என் விலாப்புறங்களில்

புகுந்து செல்லும்

காற்றின் குளிரில்

தசைகள் இறுகி

பாறையாய் சமைய –

பள்ளத்தாக்கின்

ஆழத்தில் புதைந்து இறுகும்

என் பாதம்.

யாருமற்று புகைந்து நிற்கும்

சிகையின் உச்சியில்

பூரண நிலவு 

பிரியத்துடன் வந்து கவிந்துகொள்ள,

பிரம்மாண்ட வடிவெடுத்து

உயர்ந்து நிற்கிறேன்

இது மலை அல்ல,

நான்தான்!

அவனுக்குள் ஆவேசமான எண்ணங்கள் எழுந்தன. நோட்டுப்புத்தகத்தை எடுத்து வேகமாக கிறுக்கினான்.

“எந்த வருத்தமும் இல்லை. எந்த துயரமும் இல்லை. மகிழ்ச்சி! பிரகாசம்!

எத்தனையோ யுகங்களாக இந்த மலை இங்கே நின்று கொண்டிருக்கிறது. நானும் அப்படித்தான். இன்னும் பல யுகங்கள் இங்கே இருப்பேன். இந்த மலைத்தொடரின் பிரம்மாண்டத்தின் ஒரு சிறு துளியாக. இந்தப்பனித்துளியின் நீராக. காற்றின் வெளியாக. என்றென்றைக்குமாக.

“நான் இங்கு தான் இருக்கிறேன். இங்கு தான் இருப்பேன். இக்கிமஸ். அகம் பிரம்மம் அஸ்மி.” அவன் வாய் தன்னிச்சையாக முணுமுணுத்தது.

அப்போதுதான் அந்த எண்ணம் தோன்றியது. அவனை அழுத்திக்கொண்டிருந்த துக்கம் அனைத்திற்கும் முழுக்க விடையளிப்பது போல.

சுவாசம் நிதானமடைந்து விடுதலை உணர்வு எழ மகிழ்ச்சியின் குதூகலம் அவனை ஆட்கொண்டிருந்தது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அவ்வளவு நிச்சயமாக அவனுக்கு தெரிந்துவிட்டிருந்தது. அதை விட உறுதியான சந்தேகமில்லாத ஒன்றை அவன் அதுவரை அறிந்திருக்கவே இல்லை என்பதைப்போல.

அதைத் தவிர வேறு விதமாக எதுவுமே நிகழ முடியாது என்பது போல. அந்த எண்ணம் இப்போது அவனுக்குள் பேராற்றல் கொண்டுவிட்டிருந்தது. அதை நினைக்கும்போது உருவாகும் விடுதலையுணர்வு நிம்மதியும் பரவசமும் அளிப்பதாக இருந்தது.

சிகரத்தின் விளிம்பிற்கு வந்து நின்று கீழே பார்த்தான். பள்ளத்தாக்கு “வா வா, உடனே வா”, என்று அழைத்தது. மிகவும் உறுதியாக ஆழமாக தன்னுள்ளே அதை அறிந்திருந்தான்.

அடுத்து நிகழ்ந்தது எதுவும் அவன் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. அப்படிசெய்வதை தவிர வேறொன்றையும் அவனால் செய்யவும் முடிந்திருக்காது. அவன் அறிந்திராக ஏதோ ஒரு ஆதிவிசை அவனை ஆற்றலுடன் இயக்கியது என்று வேண்டுமானால் சொல்லலாம்

முகமூடியை சரியாக அணிந்து கொண்டான். சில அடிகள் பின்னோக்கி நகர்ந்து, இரண்டு கைகளையும் முன்னோக்கி நீட்டி, ‘ஹ’ என்ற ஒலியுடன் முகட்டை காலால் எம்பி நீச்சல் குளத்தில் பாய்வதைப்போல, பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்தான்.

[7]

14,439 அடி உயரத்திலிந்து இறங்கும் அவன் உடலை பள்ளத்தாக்கு அதிவேகத்தில் நெருங்கிக்கொண்டிருக்க, மூளையில் செரடோனின் சுரப்பு அதிகரித்து, அவன் உடல் முழுக்க மகிழ்ச்சியின் பரவசம் பரவியது.

இறக்கைகளை அசையாமல் வைத்துக்கொண்டு காற்றில் சறுக்கும் கழுகைப்போல காற்றில் மிதந்து கீழிறங்கினான்.

முப்பத்தி இரண்டு வினாடிகள்.

பத்தடிகளுக்கும் அதிகமான உயரமுள்ள பனி ‘தொப்’ என்ற ஓசையுடன் அதிர்ந்து அவன் உடலை ஏற்றுக்கொண்டது. அப்போது ஏற்பட்ட ஓசையில் தியானம் கலைந்த பறவை ஒன்று குரல் ஒலியெழுப்பி, தன் கனத்த சிறகுகளால் காற்றை நிதானமாக அறைந்து பறந்து சென்றது. 

உடல் விழுந்த பள்ளத்தை சில நொடிகளிலேயே சோப்பு நுரைபோல பனி மூடி விழுங்கிவிட்டிருந்தது.

அதன் இயல்பான ஒரு பகுதி என்பது போல, அது ஒரு இயல்பான நியதி என்பதைப்போல உடலை உள் வாங்கிக்கொண்ட பள்ளத்தாக்கின் பனிப்பரப்பு எவ்வித மாறுதலையும் அறிய முடியாதபடி மீண்டுவிட்டிருந்தது. அப்படி ஒரு நிகழ்வு சற்று முன் நிகழ்ந்ததற்கான எந்த தடயமும் இல்லாமல் ஆகி முன் எப்போதையும் போல பனி நிறைந்திருந்தது.

அவன் அங்கு வந்து சேர்ந்ததும் இருந்ததும் ஒரு அரிய ரகசியம் என்பதைப்போல, விழுந்து கொண்டிருந்த பனி மலைப்பாதையில் அவன் நடந்து வந்த காலடித்தடங்களை மூடி மறைத்து இல்லாமல் ஆக்கிவிட்டிருந்தது.

காற்றின் வேகம் கணிசமாக குறைந்திருந்ததில் அந்த இடத்தின் மூர்க்கம் தணிந்து அழகின் சாந்தம் கூடியிருந்தது.

அந்த இடம் முன் எப்போது இருந்ததைவிடவும், இன்னும் சற்று அழகாகி விட்டதைப்போல, தூரத்தில் இருந்து பார்க்கும்போது மலைத்தொடரின் தோற்றம் நிலவொளியில் இப்போது மேலும் தெளிவுகொண்டிருந்தது.

முற்றும்

ஹனாமி* – செர்ரி மரங்களின் சக்குராவை திறந்தவெளியில் பார்தது ரசிப்பதற்காக குடும்பத்தினர், நண்பர்கள் சூழ மார்ச் ஏப்ரல் மாதங்களில் நிகழும் பாரம்பரியாமான ஜப்பானிய கூடுகை.

1 comment for “இக்கிமஸ்

  1. Vivek Subramanian
    September 19, 2022 at 10:43 am

    ரெய்னஹோல்டு மெஸ்னீர் என்ற இத்தாலியர் தான் முதலில் மௌன்ட் எவெரெஸ்ட் சிகரத்தை oxygen supplement இல்லாமல் தனியாக மலையேறியவர், அவரின் பல காணொளிகள், நேர்காணலை படித்திருக்கிறேன். 80களில் சீன அரசாங்கம் அவருக்கு கைலாய மலையை ஏறுவதற்கு அனுமதி அளித்தது, ஆனால் மறுத்துவிட்டார். அவர் சொன்ன காரணம் இதுவே ‘கைலாய மலைலையை ஷெர்பாக்களின் உதவி இல்லாமல் என்னால் தனியாக அடையமுடியும், ஆனால் அதை அடைவதற்கு முன்பு நான் மக்களின் ஆன்மாவை அடையவேண்டும்.’ ஜார்ஜ் மல்லோரி என்ற மலையேறியை எடுத்த பேட்டியில் நீங்கள் ஏன் மலையேறுகிறீர்கள், 1923 இல் சொன்னது உலகப்புகழ் பெற்ற வாக்கியம். ‘ Because Its There, சிலர் எண்டோரபின்,அட்ரீனலின்,டோபமைன் போன்ற ஹார்மோன்களின் சுரத்தலே தங்களை மலையேற உந்துகிறது என்கிறார்கள். சரி இதிலுள்ள அறிவியல், உளவியல் காரணிகளை தவிர்த்தாலும், ‘Because its there’ என்பது மொத்த மானுடத்தின் அறைகூவல், ‘நான்’ என்கிற தன்அகங்காரம். ஜெ ஒருமுறை சொன்னது டொரோண்டோவில் உள்ள சி.என் டவர் தன் அகங்காரத்தை கடுமையாக சீண்டியது என்று. ஓங்கி உயர்ந்திருக்கும் விஸ்வரூபம் சீண்டுகிறது. இங்கே வலியது தானே வெல்லும். தங்கள் அகங்காரம் , ஆக்ரோஷமான கலை படைப்பாகவோ, மலை உச்சியை அடைந்து தன் கால்களுக்கு கீழே மிதிக்காமல் ஓயமாட்டார்கள். சரி இதை அடைந்தவுடன் அவர்கள் அடைவது என்ன?, கலைஞர்களுக்கு ஈகோ படைப்பு ரீதியில் தாங்கள் விரும்பியதை ஈடேற்றும். மனச்சோர்வயா, இல்லை வெறுமையாவா?.
    இதை இப்படியும் சிந்திக்கலாம். ஒரு மலை உச்சியை நாம் அடைவதை ‘இதோ நான் அடைந்துவிட்டேன்’ என்று சொல்வதற்கும். இங்கு இருக்கிறேன் என்று சொல்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன, முதலிலிருப்பதற்கு எந்த பயிற்சியும் தேவை இல்லை. ஆனால் பின்னதற்கு ஆன்மிக ஞானம் அவசியம். இக்கிமஸ் சிறுகதை இயங்கும் தளம் இதுவே, இங்கிருக்கும் கொலராடோவை மையமாக கொண்டு மலையேறுபவர், ஜப்பானிய துறவியால் எப்படி ஆன்ம விடுதலை அடைகிறான், ஜப்பானில் ஹனாமி (Cherry Blossom) திருவிழாவில் பார்த்த துறவி இங்கிருக்கும் மலைப்பிரதேஷத்தில் அவனுக்கு காட்சியளிக்கிறார் “இக்கிமஸ், அகம் பிரம்மம் அஸ்மி” போன்ற ஆப்த வாக்கியங்களை அவன் கண்டுகொள்கிறான், ‘Let it Go, Im Bhraman’. Hegel லின் தத்துவத்தை கொண்டு பார்த்தால் இக்கதையில் மலை thesis, ஏறுபவன் anti-thesis, முழுமை synthesis என்பது மலையும், ஏறுபவரையும் உள்ளடிக்கியதே ‘Reality as Whole’. ஏன் இந்த தெளிவு தேவை? பல நேரங்களில் நாம் துயருறுவதே இல்லை, நம்முடைய துயரம் நம் நினைவுகளின் அலகிலா விளையாட்டு, நினைவுகளை மீட்டெடுத்து மேலும் துயருறுகிறோம். வேணுவின் படைப்புலகம் ஆன்மீக கேள்விகளை முன் வைக்கிறது. இயல்பாக ஒரு fusion gener வகை கதைகளை அவர் எழுதுகிறார், இக்கதையில் romanticism ஆக பனி மலை. இது நல்ல முயற்சி, புலம்பெயர்தலின் சிக்கல்கள் நமக்கு இங்கு தேவை இல்லை. இங்கிருக்கும் அனைவரும் நெல்லையில் நடப்பதையும், வாஷிங்டனில் நடக்கும் கதைகளின் உணவருக்குள் செல்ல முடியும். உலகளாவிய பார்வையை முன் வைக்க முடியும். ஏதோவொரு சூழ்நிலையில் வாழ்க்கைக்குறித்த அறிதல்கள் நிகழும் தருணம் அமைய வேண்டும். அதை அடைவதற்கு , அடிப்படை கேள்விகள், அலைக்கழிப்புகள் போன்றவையை கடக்கும் தருணத்தில் வரும் பதட்டத்தை எதிர்கொள்ள அழகியல் படைப்புகள் மூலமாகவும், கவித்துவ வரிகளும் நம்மை மேலிழுக்க முடியும். இக்கதை கவித்துவமும்/அழகியலும் முன்வைக்கும் படைப்பு. அவன் நிற்கும் புள்ளியே இக்கவிதை. ஒரு மெய்யியலாளனின் அகப்பயணம் இங்கிருந்து தொடர்கிறது.
    “யாருமற்று புகைந்து நிற்கும்
    சிகையின் உச்சியில்
    பூரண நிலவு
    பிரியத்துடன் வந்து கவிந்துகொள்ள,
    பிரம்மாண்ட வடிவெடுத்து
    உயர்ந்து நிற்கிறேன்
    இது மலை அல்ல,
    நான்தான்!”
    நம் ஆன்மாவில் ஒளிந்திருக்கும் தவிப்பு , அகன்று விரிந்த நிலக்காட்சிகள், ஓலமிடும் பனிக்காற்று, பேரமைதி, தனிமை என்று பல படிமங்களில் கதை நகர்கிறது. நல்ல வாசிப்பனுபவம். வேணுவிற்கு வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...