ஜி.எஸ்.எஸ்.வி நவின் அறிமுகம்

ஜி. எஸ். எஸ். வி நவின்

ஒரு பண்பாட்டுச் சூழலில் ஒரு ஆசிரியரின் பங்களிப்பு என்பது அவருடைய தனிப்பட்ட செயல்களால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அவரது பங்களிப்பு அவரது மாணவர்களின் செயல்களாலும் சேர்ந்தே மதிப்பிடப்படுகிறது. அவ்வகையில் தமிழில் ஒரு பெரு நிகழ்வென நம்முன் வாழ்ந்து வரும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு என்பது அவர் தனிப்பட்ட முறையில் ஆற்றிய பெருஞ்செயல்கள் மட்டுமின்றி அவர் தலைமுறைகள் தோறும் பல்வேறு தளங்களில் உருவாக்கி வரும் மாணவர்களின் பங்களிப்பினாலும் சேர்ந்தே மதிப்பிடப்பட வேண்டும். அத்தகைய மாணவர் நிறையின் அடுத்த தலைமுறையில் புனைவு, அ-புனைவு, இலக்கியச் செயல்பாடு என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் முக்கியமான இளம் படைப்பாளிகளுள் ஒருவர் ஜி.எஸ்.எஸ்.வி. நவின்.

2020ஆம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது புனைவுக் களியாட்டின் ஒரு பகுதியாக தனது வாசகர்களை எழுத்து, வாசிப்பு என்று உற்சாகத்தோடு இருக்க ஊக்குவித்தார். அப்போது எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட வாசகர் படைப்புகளின் பகுதியாகவே ஜி.எஸ்.எஸ்.வி. நவினின் ‘யாயும் ஞாயும்’ என்ற சிறுகதை பிரசுரமானது. அதைத் தொடர்ந்து வல்லினம் இதழில் பிரசுரமான அவரது ‘மோட்சம்’ சிறுகதை பரவலான வாசக கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றது. அக்கதையே ஜி.எஸ்.எஸ்.வி. நவினை தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஒரு இளம் படைப்பாளியாக அடையாளம் காட்டியது. அதற்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவரது படைப்புகளில் மோட்சம், ஊர்த்துவ தாண்டவம், மரணக்குழி, தீர்வை போன்ற கதைகள் குறிப்பிடத்தக்கவை.

ஜி.எஸ்.எஸ்.வி. நவினின் படைப்புகளில் எழுத்தாளர் ஜெயமோகனின் தாக்கம் கணிசமாக காணப்படுகிறது. அவரது ஆரம்ப கால கதைகள் பெரும்பாலும் எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதை வடிவத்தையும் கூறுமுறைகளையும் படிமங்களையும் ஒட்டியே அமைந்திருக்கின்றன. எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புலகில் குறிப்பிடத் தகுந்த அளவு தாக்கத்தை செலுத்தக்கூடிய நாட்டாரியல் படிமங்களே ஜி.எஸ்.எஸ்.வி. நவினின் படைப்புகளிலும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. இப்படிமங்கள் வெறும் சின்னங்களாகவோ குறியீடுகளாகவோ நின்று விடாமல் சிறுகதையின் கருவிற்கு மேலும் ஆழம் சேர்ப்பவையாக அமைந்திருப்பதை அவரது படைப்புகளில் காண முடிகிறது.

வரலாற்று நிகழ்வுகளையும் நாட்டாரியல் தொன்மங்களையும் பின்னணியாகவும் படிமங்களாகவும் கொண்டு மனித மனத்தின் நுட்பமான சிடுக்குகளை ஆராயும் படைப்புகளே அவரது படைப்புலகத்தில் பிரதானமானவை. மனிதர்களின் அடிப்படை குணங்களான வஞ்சம் துரோகம் காமம் அறம் போன்றவற்றின் ஊடாட்டமும் அதன் வழியே நிகழும் வரலாறுமே எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி. நவினின் களங்கள். அவை வரலாற்றையும் தொன்மங்ளையும் வெறும் பின்னணியாக மட்டும் பயண்படுத்தாமல் மனித மனத்தின் சிடுக்குகளில் இருந்து வரலாறு உருவாகி வரும் பெரு விந்தையை காட்டுகின்றன. ஒரு வரலாற்று நிகழ்விற்கும் மனித மனத்தின் சிடுக்குகளுக்குக்கும் இடையில் அமைக்கப்படும் அத்தகைய மென்சரடுகளே அவரது படைப்புலகத்தின் தனித்தன்மை. அச்சரடுகள் மனித மனத்திலிருந்து வரலாறு உருவாகும் தருணத்தையும் அந்நிகழ்விற்குப் பிறகு அது தொன்மமாக மாறும் விந்தையையும் இணைக்கின்றன. இத்தகைய கருக்களும் கூறுமுறைகளும் எழுத்தாளர் ஜெயமோகனின் தாக்கத்தை கொண்டிருந்தாலும் அவரது சமீபத்திய படைப்புகள் அவர் சிறுகதை வடிவத்திலும் கூறுமுறைகளிலும் தனக்கான தனித்தன்மையை உருவாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை புலப்படுத்துகின்றன.

அவரது சமீபத்திய படைப்பான ‘இசக்கி’ அவ்வகையில் அவர் தன் சிறுகதை வடிவத்தில் மேற்கொண்டு வரும் சோதனைகளுக்கான உதாரணம். இத்தகைய முயற்சிகளில் அவ்வப்போது சில குறைகள் இருந்தாலும் அவை ஒரு தனித்தன்மை மிக்க படைப்பாளியின் உருவாக்கத்தையே வெளிப்படுத்துகின்றன. ஏனெனில் அம்முயற்சிகளில் நிகழும் குறைகளின்றி அவை கைகூடும் படைப்புகளில் நிகழும் அபாரமான தருணங்களே ஒரு இளம் படைப்பாளியின் படைப்புகளை மதிப்பிடுவதற்கான சரியான அளவுகோல்கள். அவ்வகையில் அத்தகைய தருணங்கள் பெரும்பாலான சிறுகதைகளில் கைகூடியிருப்பதே ஜி. எஸ். எஸ். வி. நவினின் படைப்புகளின் வெற்றி.

ஜி. எஸ். எஸ். வி. நவின் புனைவுகள் சார்ந்து மட்டுமின்றி விமர்சனங்கள், கட்டுரைகள் என்று அபுனைவுகள் சார்ந்தும் செயல்பட்டு வருகிறார். சமீபத்திய வல்லினம் இதழில் வெளியான எழுத்தாளர் சோ. தர்மனின் வௌவால் தேசம் நாவல் குறித்த அவரது விமர்சனக் கட்டுரை, எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் வெளியான கரசூர் பத்மபாரதியின் ஆய்வுகள் குறித்த கட்டுரை போன்றவை குறிப்பிடத்தக்கவை. வரலாற்றுப் பார்வையும், ரசனை அடிப்படையிலான பகுப்பாய்வு நோக்கும் கொண்ட அவரது அபுனைவு மொழியும் மிக நேர்த்தியானது. அவரது தொடர் வாசிப்பும் கூர்மையான அவதானிப்புகளும் அவற்றில் தொடர்ந்து வெளிப்படுகின்றன. கோட்பாட்டு ரீதியான வரையறைகள் இன்றி அவற்றுள் ஒரு தனித்துவம் மிக்க ரசனை வெளிப்படுகிறது.

இலக்கியச் செயல்பாட்டுத் தளத்தில் கவிஞர் ஆனந்த் குமார், கவிஞர் மதாரோடு இணைந்து கவிதைகள்.in என்ற கவிதைகளுக்கான மின்னிதழை நடத்தி வருகிறார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், தமிழ் விக்கி என பல்வேறு செயல்பாடுகளில் பங்காற்றி வருகிறார். சமீபத்தில் மதுரையில் நிகழ்ந்த அபி-80 விழாவில் அவரது பங்களிப்பு முதன்மையானது. அவ்வகையில் இலக்கியச் செயல்பாடுகளிலும் இளமையிலேயே தன்னை தீவிரமாக இணைத்துக்கொண்டுள்ளார்.

பண்பாட்டுத் தளத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் சிந்தனை ஏற்படுத்திய பிரதான தாக்கங்களுள் ஒன்று இலக்கியச் செயல்பாடு என்பது வெறும் அறிவுச் செயல்பாடு மட்டுமின்றி அது ஒரு லட்சியவாதம் எனும் சிந்தனையை இங்கு நிருவியதே. அச்சிந்தனை பாரதி, புதுமைப்பித்தன், க. நா. சு., சுந்தர ராமசாமி என்ற நீண்ட மார்பிலிருந்து அவர் பெற்றுக்கொண்டது. அம்மரபின் தொடர்ச்சியாக எழுத்தாளர் ஜெயமோகனை தன் ஆசிரியராகக் கொண்டு உருவாகி வரும் இளம் படைப்பாளிகளுள் முக்கியமானவர் ஜி.எஸ்.எஸ்.வி. நவின்.

ஜி.எஸ்.எஸ்.வி நவின் படைப்புகள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...