பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம்

1

“கொஞ்சம் சத்தமாகத் தான் பேச வேண்டியிருந்தது. அவள் மதிலுக்கு அந்தப் பக்கம். நான் இந்தப் பக்கம்.” சிறைசாலையில் ஒரு மதிலின் ஓரத்தில் உள்ள அறையில் கதாநாயகனை அடைக்கின்றனர். நாயகன் அறையும் மதிலும் தான் இருக்கின்றன. மதிலுக்கு அந்தப் பக்கம் பெண்களின் சிறை. நாயகன் ராஜ துரோகம் செய்ததால் சிறையில் வைக்கப்பட்டுள்ளான். ராஜியத்திற்கு எதிராக எழுதியது அவர் குற்றம். நாயகியின் குற்றமும் அதேதான்.

இங்கிருந்து சீட்டியடிக்கும் குரல் கேட்டு மதிலுக்கு அந்தப் பக்கம் இருந்த பெண் பேசுகிறாள். இங்கிருக்கும் ரோஜா செடியில் ஒன்றைக் கேட்கிறாள். நாயகன் ஒவ்வொரு இதழிலும், பூவிலும், முள்ளிலும் முத்தமிட்டு அனுப்புகிறான். அதனை நாயகி இதயத்தில் சூடிக் கொள்கிறாள். அந்தபுறமிருந்து இவர் உணவுண்பதற்குப் பஜாரா என்ற பதார்த்தம் வருகிறது. அதனை வெல்லமிட்டு உண்கிறான். இருவரின் முகத்தோற்றம், உடல்தோற்றம் பற்றி ஒருவருக்கு ஒருவர் வினவுகின்றனர். பேசி, பேசி, வினவி, வினவி இருவருக்குமான காதல் மதிலின் இருபுறமும் மலர்கிறது.

நாயகி சொல்கிறாள், “நான் அவ்வளவு அழகொன்னுமில்லை. இங்க என்னைவிட அழகானவங்க இருக்காங்க” என்கிறாள். பதிலுக்கு நாயகன் “நானும் அவ்வளவு அழகில்லை” என்கிறான். இருமனமும் ஒன்று சேர்ந்த தருணம். மதிலுக்கு இருபுறம் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமலே காதல் மலர்கிறது. நாயகி வியாழக்கிழமை சிறையில் உள்ள மருத்துவமனைக்கு வருவதாகச் சொல்கிறாள். நாயகனையும் அதே நேரம் வரும்படி வேண்டுகிறாள். நாயகனும் கண்டிப்பாக அதே நேரம் வருவதாகச் சொல்கிறான்.

திங்கள், செவ்வாய், புதன் என நகர்கிறது. புதன் மதியம் ஜெயிலர் வந்து நாயகனை விடுதலை செய்கிறான். நாயகன் அதனை எதிர்பார்க்கவில்லை. ஜெயிலரிடம் வாதிடுகிறான். ஜெயிலர் அவரைக் கிளம்பும்படிச் சொல்கிறார். “விடுதலையா? யாருக்குய்யா விடுதலை? பெரிய ஜெயிலுக்கில்லா போறேன்” என ஜெயிலரிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்த ரோஜா பூந்தோட்டத்தைப் பார்க்கிறான். அதில் ஒரு சிவப்பு ரோஜா மலர்ந்திருக்கிறது. அதனை எடுத்துக் கொண்டு மதிலுக்கு அந்தப் பக்கம் இருக்கும் நாராயணி நினைவோடு சிறையிலிருந்து கிளம்புகிறான்.

பஷீர் எழுதிய மதில்கள் நாவல் இது. தமிழில் முப்பது பக்கங்களுக்கு மிகாமல் மொழிபெயர்த்து வந்த குறுநாவல். அளவில் சிறுகதையை விட சிறியது. ஆனால் நான் வாசித்து மூன்று ஆண்டுகள் கடந்திருக்கும். இப்போதும் ஒரு காவியம் போல் மனதில் கதை நிற்கிறது.

வாசித்த பக்கங்களில் கதையே இல்லை. ஒரு கதாநாயகன், நாயகி, இருவருக்கும் இடையே மதில். அவர்களின் காதல் உரையாடலுக்குச் சாட்சியாக அந்த மதில் இருக்கிறது. கதையோட்டமோ, தீவிரமான கதாபாத்திரங்களால் உருவாகும் நாடகீக தருணங்களோ இக்கதையில் இல்லை. இருந்தும் நான் வாசித்த பல நூறு நாவல்களில் இந்நாவல் ஏன் மனதில் நிலைக்க வேண்டும். ஏனென்றால் இதில் மெய்யான வாழ்வின் ஒரு தருணம் உள்ளது. பஷீர் அந்தச் சிவப்பு ரோஜாவைக் கையில் எடுத்துக் கொண்டு மதிலைப் பார்த்துவிட்டுத் திரும்பிச் செல்லும் கணத்தில் ஒரு வாழ்வு தொடங்குகிறது. அதற்குப் பின்பான பஷீர் எப்படி மாறியிருப்பார். அந்தச் சில நாட்களில் அவர் மனதில் ஏற்றப்பட்டது நாராயணி என்ற முகம் காணாத பெண்ணின் நினைவுகளும், குரலோசையும் மட்டுமே. அந்த நினைவுகள் ஏன் இத்தனை எடைமிக்கதாய் கனக்கின்றன. சுதந்திர போராட்டத்திற்காகச் சிறைக்குச் சென்றவருக்கு ஏன் இந்த நினைவுகள் இத்தனை பொருட்டாகின்றன. ஆண், பெண் உறவின் லீலையே அது தான் எனத் தோன்றுகிறது.

அஜிதனின் மைத்ரி நாவலைப் படித்து முடித்தபோது முதலில் இதே எண்ணம் தான் தோன்றியது. கேதார்நாத், கௌரிகுந்தில் நாவலின் நாயகன் ஹரன் நிகழ்த்திய பயணம் இலக்கியத்தில் புதிதல்ல. மேலும் அது ஒவ்வொரு எழுத்தாளர்களும் எழுதிப்பார்த்த கதைக்களம்தான். ஆனால் இத்தனை எழுதிய பின்னும் அதற்கு விடை கிடைக்கவில்லை என்பதாலே மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனக்கும், அஜிதனுக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர் உள்ளார். மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். அந்தப் பெண்ணையும் எங்கள் இருவருக்கும் தெரியும். அந்தப் பெண்ணின் திருமணம் நண்பருக்குச் சொல்லாமல் நிகழ்ந்தது. அப்போது நான் அவருக்கு ஆறுதல் சொல்ல முற்பட்டேன். அஜி என்னைத் தடுத்தான்.

“நீ நினைக்கிற மாதிரி இது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அத அவரு கடந்து தான் வரணும். நாம் என்ன சொன்னாலும் அவரால ஏத்துக்க முடியாது. யோசிச்சு பார்த்தா இந்த விஷயத்துல ஒருத்தர் மத்தவங்களுக்கு அறிவுரை சொல்லவோ, அவங்க மனச மாத்தவோ முடியாது. ஏன்னா ஆண், பெண் உறவை நாம பொதுமை படுத்திற முடியாது. ஒருத்தருக்கு இருக்கிற மாதிரி இன்னொருத்தருக்கு இருக்காது. ஒவ்வொருத்தருக்கும் அது மாறுபடும். அத மூனாவது மனுஷனால பாத்து சொல்லி புரிய வச்சிற முடியாது. இது அவருக்கான நினைவுகள் அவரு கடந்து வரட்டும். நீ நடுவுல போய் எதுவும் சொல்லாதே” என்றான்.

அவன் அத்தனை தெளிவாக பேசியது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால் அவன் அப்படிப் பேசக் கூடிய கணங்களை வெகு சிலர் மட்டும்தான் கேட்டிருக்கக் கூடும். ‘மைத்ரி’ நாவல் வெளிவந்த போது பலரும் ‘’அஜிதனிடமிருந்து இப்படியொரு முதிர்ச்சியான நாவலை நான் எதிர் பார்க்கவில்லை” என்றனர். ஏனென்றால் பலரும் அஜிதனின் இந்த முகத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்ற காரணத்தினால் வந்த அதிர்ச்சி அது.

2

‘மைத்ரி’ நாவலின் முதல் வெற்றி என நான் கருதுவது அது இதற்கு முன் இலக்கியத்தில் ஆராயப்பட்ட ஆண் – பெண் உறவில் உள்ள சிடுக்கான பகுதிகளைச் சளைக்காமல் சென்று சந்திக்கும் தருணத்தால் தான்.

நாவலில் ஓர் இடம் வருகிறது. ஹரனின் தாய் புற்றுநோயால் இறந்திருக்கிறாள். அவளது நினைவைக் கௌரிகுந்தில் விடுதியில் தங்கியிருக்கும்போது நினைத்துப் பார்க்கிறான். பாண்டிசேரி மருத்துவமனையில் அம்மா அனுமதிக்கப்பட்டிருந்தது, அவளது கால்கள் மெலிந்து குச்சியாக இருந்தது என ஒவ்வொன்றாக ஹரனின் நினைவில் எழுகிறது. இறுதியாக அவன் தாய் இறந்த செய்தி வருகிறது. அப்போது, “என்கிட்ட ஒருவாட்டிக் கூட வலிக்குதுன்னு சொன்னதில்லப்பா.” எனத் தேம்பி அழுகிறான். அத்தருணத்தில் தான் ஹரன் உண்மையிலேயே அவன் உலகில் பெண்ணென்று இருந்த அவன் தாய் அவனிடம் தன்னை முழுவதுமாக வெளிப்படுத்தியதில்லை என உணர்கிறான். தாயை இழந்த அவன் துயரத்தைப் போக்க வருகிறாள் கௌரி. தன்னைக் காதலிக்கும் அவளையும் அவனால் முழுவதுமாக அறியமுடியவில்லை. பெண்களை அறியமுடியா புதிரே அவனுள் எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தி கௌரியிடமிருந்து விலக்கத்தைக் கொண்டு வருகிறது. அவன் அறிய முடியாத ஓர் உலகம் அவனுக்கு மேல் பேராணவமாக அமர்ந்திருக்கிறது. கௌரியிடம் முழு வெறுப்பைக் கக்கி அவளிடமிருந்து பிரிகிறான். அது அவனது குழப்பத்தில் இருந்து விடுதலையை அளிக்குமென நினைக்கிறான். அத்தருணத்தில் இருந்து கிளம்பியே கேதார்நாத் பயணம் வருகிறான்.

கௌரிகுந்தில் ஹரன் தங்கியிருக்கும் விடுதியில் வைத்து இவையனைத்தையும் நினைத்துப் பார்க்கிறான். அந்த விடுதிக்கு வருவதற்கு முன் ஒரு சக்தி கோவிலைக் கடந்து வருகிறான். உக்கிரமான பைரவியின் சிற்பம், காளி நாக்கைத் துருத்தியபடிச் சிவனைக் காலில் கொண்டு நிற்கிறாள். அதனை ஹரன் அரையிருளில் ஒரு கணம் காண்கிறான். அடுத்த கணம் நிற்காமல் அங்கிருந்து நகர்கிறான். அவன் வாழ்வில் பெண்கள் கருணைக் கொண்ட பார்வதியின் வடிவாகவே வருகின்றனர் என்றால் இந்தப் பைரவி யார்? ஹரனின் மனதில் உள்ள பெண்களின் பிம்பம் அவை. அவன் கடக்க நினைக்கும் பெண்களின் மாய உரு அவை. ஆனால் அதன் உரு வடிவத்தை ஹரனால் ஒரு கணம் கூட காண இயலவில்லை.

“நான் அன்பைத் தேடவில்லை, எப்போதும் எனக்குச் சொந்தமாக, என் இச்சைக்கு வழங்கும் ஒருவள். அழகாக இருப்பது, என் நுண்ணுணர்வைக் கண்டுகொள்வது இவை தான் அவள் செய்ய வேண்டியது.” நாவலில் வரும் வரி. எல்லா ஆணுக்குள்ளும் இருக்கும் ஆணவம். அந்த ஆணவம் உடையும் கணத்திலேயே ஒரு வாலிபன் முழு ஆணாக மாறுகிறான். ஓர் ஆணால் அந்த ஆணவத்தை அத்தனை எளிதாக விட சாத்தியமில்லை. அதற்கு நிகரான எடை கொண்ட ஆணவம் அவனை வந்து மோத வேண்டும். எனவே அது சிலருக்கு உக்கிரமான வலியைத் தந்து நிகழ்கிறது. சிலருக்கு நிகழாமலே இருந்துவிடுகிறது. ஹரனுக்கு அந்தப் பயணத்தில் மைத்ரியின் மூலம் நிகழ்கிறது.

“அகங்காரத்தின் எல்லைகளைக் காணும்போது அடைவதே விடுதலை” என்னும் வரியை ஹரன் சொல்கிறான். உண்மையில் அந்தப் பயணத்தில் அவன் அகங்காரமே முற்றழிக்கப்படுகிறது. அதற்கு மைத்ரி ஒரு கருவியாக மட்டுமே வருகிறாள்.

அந்த விடுதியிலிருந்து மைத்ரி தன் பூர்வீக ஊருக்குக் கச்சரில் அழைத்துச் செல்கிறாள். மைத்ரியினுடைய சொந்த வீட்டில் அவளது பெரிய பாட்டி, சின்ன பாட்டி, பெரியம்மா என ஒவ்வொரு பெண்களாகச் சந்திக்கிறான். அவன் காணாத பெண்களின் உலகை அங்கு காண்கிறான். சின்ன பாட்டி அந்த மொத்த குடும்பத்தையும் தாங்கி நிற்பவள். பெரியம்மா மைத்ரியின் ஜிது. பெரியப்பாவின் காதலி. பெரிய பாட்டி அந்த ஊரில் மூத்த பெண். அவ்வூரில் நிகழும் விழாவில் மூத்த பெண்ணுக்குச் செய்யப்படும் சடங்கையும் பெரிய பாட்டிக்குச் செய்கின்றனர். இப்படியாக ஹரனுக்கு அவன் காண இயலாத சக்தியின் வடிவங்களை விரித்துக் காட்டுகிறாள் மைத்ரி. அவர்களில் இருந்து ஹரன் மைத்ரியை அறிகிறான். மைத்ரியில் இருந்து கௌரியை அறிகிறான். அங்கிருந்து அவனது ஆன்ம விடுதலை பிறக்கிறது. அதற்குப் பின்பான ஹரன் தன்னை முழுதும் உரித்துப் புதியவனாக வருகிறான்.

இந்நாவலை ஒரு சாதாரண காதல் கதையாக அல்லது ஆண், பெண் உறவு சிக்கலைச் சொல்லும் கதையாக வாசிக்கலாம். ஆனால் அதற்கு மேல் ஹரனின் ஆன்ம விடுதலை எங்ஙணம் நிகழ்கிறது என்பதைக் கேள்வியாக்கும் நாவலாகவே இதனைப் பார்க்கிறேன். நாவலின் இறுதியில் ஹரன் சென்று மூழ்கி எழுந்து வரும் வெந்நீர் நதி அந்த விடுதலையின் குறியீடாக வருகிறது.

ஆண் பெண் உறவில் உள்ள தீராத பெரும் சிக்கல் உலகில் உள்ள மற்ற எல்லா உறவை விட இவ்வுறவில் ஆணவம் அதிகம் என்பதால் தான். ஆணவமும், காதலும் இரு தராசு புள்ளியில் நிகராக அமர்ந்திருப்பதால்தான் இத்தனை சிக்கல்களும் சிடுக்குகளும். ஆனால் ஆண் பெண் உறவில் உள்ள ஆணவத்தை நாம் ஒருபோதும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்நாவலில் ஹரனின் பிரச்சனையும் அதுதான். அவனால் கௌரியின் அன்பின் முன் தன் ஆணவத்தைக் கலைக்க முடியவில்லை. ஆனால் எல்லோரின் வாழ்விலும் ஆணவத்தைக் கடக்கும் புள்ளி என ஒன்று அமைந்தே தீரும். ஹரனின் ஆணவத்தைக் கலைக்க அதைவிட பலமடங்கு பேராணவமான பெண்ணும் (மைத்ரி), இயற்கையும் (இமயம், கேதார்நாத்) வருகிறது. இந்தப் பேராணவமும், ஹரனின் ஆணவம் எப்படி ஒன்றை ஒன்று சந்தித்து, முட்டி, சொந்தம் கொண்டு, பிரிந்து நிகர் செய்கிறது. அது இரு மனமும் ஒன்றை ஒன்று முட்டி மோதி இறுதியாகக் கலந்து வாழும் அன்பின் வெளிப்பாடு மூலம் நிகழலாம். அதனையே ஹரன் கௌரி உறவு செய்ய முயற்சிக்கிறது. இரண்டு ஒரு பிரிவின் மூலம் நிகழலாம் அதனையே ஹரன், மைத்ரி உறவு எதிர் கொள்கிறது. இப்படி இந்தத் தூலாத்தட்டில் உள்ள மூள் இரு எல்லைகளையும் சந்தித்து விடை காண முயற்சிப்பதே நாவலாசிரியன் வாசகனான எனக்கு அளித்த சவால்.

3

மைத்ரி நாவலில் என்னை முதலில் ஈர்த்தது அதன் புறவுலக சித்தரிப்பு. நாவலின் முதல் பாகத்தில் மந்தாகினியின் நடையிலேயே ஹரனின் மனமும் மைத்ரியின் மனமும் சொல்லப்பட்டுவிடுகிறது. மந்தாகினி எந்தச் சலனமும் அற்றுச் சென்றுக் கொண்டிருக்கிறாள். ஆனால் அது ஹரனின் கொந்தளிப்பான மனத்தைப் பிரதிபலிக்கிறது. அதே சமயம் மைத்ரி என்னும் இளம் பெண்ணின் காதல் மனதையும் பிரதிபலிக்கிறது. இச்சிக்கலான விஷயத்தை எளிதாகச் சொல்லிவிட முடிந்ததே ஒரு நாவலாசிரியனின் முதல் நாவல் பெறும் வெற்றி.

அஜிதன்

”அன்று பிறந்த கன்றுக்குட்டிபோல் பிறந்த அந்தக் காலை”, “மலையின் பசுமையில் ஈறுகள், உண்ணிகளைப் போல் துருத்தி நின்றன அவை.” என நாவலில் இயல்பாக உணர்ச்சிகளைக் கடத்தும் உவமைகள் வந்தமைகின்றன.

மேலும் இந்நாவலில் மைத்ரி ஒரு கதாபாத்திரம் போல் இமயமும் அதனுள் இருக்கும் தேவதாரு மரங்களும், மந்தாகினி நதியும் வருகிறது. தேவதாரு மரங்களின் நடுவே செல்லும் பயணத்தில் இருந்து தேவதாரு தைலம் ஹரனின் கால் வலிக்கு மருத்தாகும் வரை தேவதாரு ஹரனுள் மாற்றங்களை நிகழ்த்திய வண்ணம் உள்ளது.

ஹரனை மலைக்கு ஏத்திச் செல்லும் சோனியா என்ற கச்சர் (கோவேறு கழுதை) அவனுடன் பழக மறுக்கிறது, மைத்ரி சொல்வதை மட்டுமே கேட்கிறது. சிக்கி என்னும் மற்றொரு கச்சர் நடக்கும் பாதையிலேயே நடக்கிறது. ஹரன் வேகம் அழுத்தி ஏற முயன்ற போது அவனைக் கீழே தள்ளி விடுகிறது. அவன் அதனோடு பழக முயற்சிக்கும் தோறும் அது அவனை விட்டு விலகியே நடக்கிறது. இறுதியில் மலை பயணம் முடிந்து திரும்பி வந்த எல்லோரிடமும் விடைபெறும் போது அவன் கன்னத்தையும், கழுத்தையும் சேர்த்து நக்கிச் செல்கிறது.

மந்தாகினி, சோனியா, தேவதாரு, மலையில் நடக்கும் பூக்களின் சடங்கு என ஒவ்வொன்றும் ஹரனுள் ஒரு மாற்றத்தை நிகழ்த்துகிறது. இயற்கை மனிதனோடு இணையும் தருணம் அது. மனிதன் இயற்கையை அறியும் தருணமும் கூட. ஆண் பெண் ஆடல் எத்தனை புதிரானதோ, இயற்கை மனிதனின் ஆடலும் அத்தனை புதிரானது என்று தோன்றுகிறது. இயற்கை தன்னுள் மனிதனை அத்தனை எளிதாக ஏற்றுவிடுவதில்லை. அதற்கு முதல் மனிதன் தான் இயற்கையுள் ஒருவன் என்ற பிரக்ஞை வேண்டும். தான் தனித்து நிற்பவன் என்ற ஆணவம் மறையும் கணத்திலேயே இயற்கை மனிதனுக்கான வாசலைத் திறக்கிறது. இப்படி இந்நாவலை இரண்டு சரடாக வாசிக்கலாம். நேர் கோட்டில் மைத்ரி, கௌரி மற்ற கதாபாத்திரங்கள் ஹரனுள் நிகழும் மாற்றத்திற்கு ஒரு காரணிகள் என்றால், இடை கோட்டில் இமயம் மற்றொரு காரணம். ஹரன் மைத்ரியுள் இயைவது போல் இமயத்துடனும் இயைகிறான். அதன்பின் அவன் காணும் கேதார்நாத் மலையே அவன் தரிசித்த மெய்யான வடிவம்.

மேலும் இந்நாவலில் மாத்ரியிடம் (இசக்கி போன்றவள்) சிக்கிய ஜீது பகட்வால் என்னும் ஊர் தலைவனின் நாட்டார் கதை வருகிறது. மைத்ரியின் பெரியம்மா கதையைச் சொல்ல பெண் நாட்டுபுற தெய்வம் (கொடுப்பதற்கு என்று படைக்கப்பட்ட தெய்வம்) ஒன்றின் கதை வருகிறது. இப்படி ஒரு நாவல் மனிதர்கள், இயற்கை, நாட்டார் கதைகள் என மூன்று தளங்களில் விரிந்து விரிந்து தன்னுள் முழுமை கொள்கிறது.

4

வெண்ணிற இரவுகள் நாவலில் நாஸ்தென்கா விட்டுச் சென்ற மறுநாள் காலை கதைச்சொல்லியின் வீடு மொத்தமும் தூசியடைந்து இருண்டுவிட்டதாக தோன்றும், எதிர் வீடும் இருண்டிருக்கும், மேகங்கள் அடர்ந்து வானமும் இருண்டிருக்கும். மொத்தமான இருளுலகில் கதாநாயகன் சென்றிருப்பான். அக்கணம் நாஸ்தென்கா நினைத்துப் பார்ப்பான். அந்த இனிய நினைவுகள் அவனை மீட்டெடுக்கும். அதிலிருந்து இருள் விலகி ஒளிக்குள் செல்வான். ஹரன் வாழ்வில் மைத்ரியும், இமயமும் அந்த ஒளியாய் வருகின்றனர்.

நான் மேலே பஷீரின் மதில்கள் நாவலுக்குச் சொன்னது போல் மைத்ரியில் கதையோட்டத்தை விறுவிறுப்பாக்கும் நாடகீக தருணங்கள் இல்லை. ஆனால் பஷீரின் மதில்கள், ஜெயமோகனின் அந்த முகில் இந்த முகில், தாஸ்தோவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் நாவல்கள் தொட்ட அதே மைய தரிசனத்தை மைத்ரியும் தொட்டிருக்கிறது. அங்கிருந்து விரிந்து ஹரன் தனக்கான விடுதலை சென்றடையும் தொலைவில் நாவல் முடிகிறது.

ஓர் எழுத்தாளனின் முதல் நாவல் இத்தனை பெரும் கேள்வியோடும், முயற்சியோடும் வருவதே தமிழுலகம் பெருமைக்கொள்ள வேண்டிய தருணம். அது என் நண்பனிடத்தில் இருந்து வந்தது எனக்கு மனநிறைவளிக்கும் தருணங்களுள் ஒன்று. ஒரு வாலிபனாக எப்போது தன் நாட்களைச் சாகசத்துடன் வைத்துக் கொள்ள விரும்புபவன் அஜிதன். கடந்த காலங்களில் அவன் வாழ்வின் பெரும் பகுதிகள் பயணத்திலேயே சென்றிருக்கிறது. போன வாரம் அழைத்த போது திடீரென்று வேலூர் அருகே உள்ள மலை காடுகளில் வாழும் எல்லம்மா தேவி கோவிலுக்குச் சென்றிருந்தான். இப்படித் தன்னை எப்போதும் சாகசத்துள் நுழைத்துப் பார்க்கும் ஒருவனின் தேடலுக்கான விடையை இந்நாவலுல் தேடிப் பார்க்கிறான். அஜிதனின் இத்தனை ஆண்டுகாலப் பயணங்களும், தேடல்களுமே மைத்ரி நாவலாகப் பரிணமித்து வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது மேலும் உவகை எழுகிறது.

அஜிதனின் தமிழ் விக்கி பக்கம்

1 comment for “பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...