‘தேசிய இலக்கியவாதி’ எனும் விருதானது, மலேசியாவில் மலாய் மொழி இலக்கியத் துறையில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். இவ்விருது 1981-ஆம் ஆண்டில், மலேசியாவின் மூன்றாவது பிரதமரான துன் உசேன் ஓன் அவர்களின் அறிவுரையின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்டதாகும். 1981 தொடங்கி மொத்தம் 15 மலாய் மொழி இலக்கியவாதிகளுக்கு இதுவரையிலும் மலேசியாவின் ‘தேசிய இலக்கியவாதி’ எனும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய கல்வி அமைச்சின் மேற்பார்வையிலுள்ள, மொழி மற்றும் நூலகக் குழு மற்றும் தேசிய இலக்கிய விருதுக் குழுவினரின் செயலகத்தால் தேர்ந்தெடுக்கப்படும் மலாய் மொழி எழுத்தாளர்களுக்கே இவ்விருது கிடைக்கப்பெற்று வருகிறது.
‘தேசிய இலக்கியவாதி’ விருதானது, தோற்றுவிக்கப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே, அதாவது 1981 முதல் 1983 வரையிலும் மட்டுமே ஒவ்வொரு வருடமும் தவறாது வழங்கப்பட்டு வந்தது. ஆயினும், 1984 முதல் இன்று வரையிலும் இவ்விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்படாமல், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் விருதாக மாற்றியமைக்கப்பட்டது. அவ்வகையில், 1981-ஆம் ஆண்டில் இவ்விருதினை முதல் முறையாகத் டாக்டர் கமாலுடின் முகமட் பெற்றார். அவரைத்தொடர்ந்து, இவ்விருது 1982-இல் முனைவர் எமரிதூஸ் டத்தோ ஷனோன் அஹ்மாட் அவர்களுக்கும், 1983-இல் டத்தோ டாக்டர் உஸ்மான் அவாங் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த வருடங்களில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகே இதர எழுத்தாளர்களுக்கு ‘தேசிய இலக்கியவாதி’ விருது கொடுக்கப்பட்டது. குறிப்பாக, 1985-இல் டத்தோ டாக்டர் சமாட் சாயிட், 1987-இல் டாக்டர் முகமாட் டாலான், 1991-இல் முனைவர் எமரிதூஸ் டாக்டர் முகமட் ஹஜி சல்லே, 1993-இல் டத்தோ நூர்டின் ஹாசன், 1996-இல் டத்தோ அப்துல்லா ஹுசையின், 2003-இல் முனைவர் செயெட் ஓத்மான், 2009-இல் டத்தோ டாக்டர் அன்வர் ரிட்வான், 2011-இல் டத்தோ டாக்டர் அஹ்மாட் கமால் அப்துல்லா, 2013-இல் டத்தோ பாஹா சாயின், 2015-இல் டத்தோ டாக்டர் சுரினா ஹாசன், 2019-இல் முனைவர் டாக்டர் சித்தி சைனோன் இஸ்மாயில் ஆகியோர் ‘தேசிய இலக்கியவாதி’ விருது பெற்றனர்.
இவர்களது வரிசையில் 2022-ஆம் ஆண்டில், 15-ஆவது தேசிய இலக்கியவாதியாக டத்தோ ரஹ்மான் பின் ஷாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல இலக்கியப்படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வரும் டத்தோ ரஹ்மான் பின் ஷாரி, மலாய் இலக்கியவாதிகளுக்கிடையே நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக மட்டுமில்லாது, ஒரு சிறந்த கல்வியாளராகவும் விளங்குகிறார். இவர் 5-ஆம் திகதி செப்டம்பர் மாதம் 1949-இல், பெர்லிஸ் மாநிலத்திலுள்ள கம்போங் கியாலில் பிறந்தார். தற்போது பணி ஓய்வு பெற்றிருக்கும் டத்தோ ரஹ்மான் பின் ஷாரி, தாம் விரிவுரையாளராகப் பணிபுரிந்த காலக்கட்டத்தில் மலாய் மொழியில் ‘Teori Anjakan Makna’ எனும் சொற்களின் பொருள் திரிபுகள் பற்றிய ஆய்வு கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவராவார். தமிழில் நாற்றம் என்ற சொல் முற்காலத்தில் மணம் என்ற பொருளில் இருந்து இன்று அதன் எதிர் நிலைக்குப் பயன்படுவதைப் பொருள் திரிபு கோட்பாடுக்குக்கு உதாரணமாகச் சொல்லலாம். இலக்கியத் துறையில் ஈடுபடத் தொடங்கிய காலம் தொட்டே இன்று வரையிலும் கவிதை, நாடகம், சிறுகதைகள், நாவல்கள் மற்றும் இலக்கிய விமர்சனம் உட்பட அனைத்து இலக்கிய வகைகளையும் தொடர்ந்து படைத்து வந்த டத்தோ ரஹ்மான் பின் ஷாரி (Dato’ Rahman Shaari), கடந்த ஜூன் மாதம் 22-ஆம் திகதியன்று 15-ஆவது தேசிய இலக்கியவாதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இளம்வயதில் டத்தோ ரஹ்மான் பின் ஹாரி தனது ஆரம்பக் கல்வியைப் பெர்லிஸ் மாநிலத்திலுள்ள குவார் நங்கா தேசிய பள்ளியில் பெற்றார். அதனைத் தொடர்ந்து, 1962 தொடங்கி 1964-ஆம் ஆண்டு வரையிலும் கங்கார் வட்டாரத்திலுள்ள டெர்மா இடைநிலைப்பள்ளியில் படித்த டத்தோ ரஹ்மான், 1965-இல் கெடா மாநிலத்திலுள்ள சுல்தான் ஷா அலாம் இடைநிலைப்பள்ளிக்கு மாற்றலாகினார். அறிவியல் பிரிவில் படிவம் நான்கு மற்றும் ஐந்தினைப் படித்து முடித்த டத்தோ ரஹ்மானுக்கு, இலக்கியத்திலே அதிக ஆர்வம் இருந்தது. அதனால், இலக்கியப் பிரிவில் எஸ்.டி.பி.எம் முடித்த பின்னர், 1971-இல் தஞ்சோங் மாலிம், பேராக் மாநிலத்திலிருந்த சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் கல்லூரியில் இணைந்து கல்விச் சான்றிதழைப் பெற்றார். அதன் பின்னர், 1973-இல் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் இணைந்த டத்தோ ரஹ்மான், மலாய் இலக்கியத்திற்கான இளங்கலைப் பட்டப்படிப்பை 1977-இல் முடித்தார். 7 வருட கால இடைவெளிக்குப் பின்னர், 1984-ஆம் ஆண்டில் மீண்டும் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்திலேயே இணைந்த டத்தோ ரஹ்மான், முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். தன்னுடைய தனித்தன்மையையும் திறமையையும் மேம்படுத்திக்கொள்வதற்கு டத்தோ ரஹ்மான் உயர்கல்வியை மட்டும் சார்ந்து இல்லாமல், பல பட்டறைகளிலும் ஈடுபட்டார். 1986-இல் ஜூன் மாதம் தொடங்கிச் செப்டம்பர் வரையிலும் இங்கிலாந்திலுள்ள, வார்விக் பல்கலைக்கழகத்தில் நாடகக் கல்விக்கான பட்டறையில் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல், 1991-இல் ஆகஸ்டு மாதம் தொடங்கி நவம்பர் வரையிலும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச இலக்கியப் பட்டறையில் கலந்துகொண்ட டத்தோ ரஹ்மான், 2005-ஆம் ஆண்டில் பெட்டாலிங் ஜெயாவில் இடம்பெற்ற கல்வித் தலைமைத்துவப் பட்டறையிலும் கலந்துகொண்டார். இம்மாதிரியான பட்டறைகளில் கலந்துகொண்டதன் மூலம், இலக்கியத்துறையிலும் கல்வித்துறையிலும் தன்னுடைய ஆளுமையைப் பெருக்கிக்கொள்வதற்கான திறன்கள் கிடைக்கப்பெற்றன எனும் கருத்தினை டத்தோ ரஹ்மான் கூறியுள்ளார்.
டத்தோ ரஹ்மான் தன்னுடைய வாழ்நாளில் கல்வி மற்றும் இலக்கியத் துறைகளைச் சார்ந்த வெவ்வேறு பணிகளைச் செய்துள்ளார். மலாய் இலக்கியத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கு முன்னர், குறிப்பாக 1977 முதல் 1979 வரையிலும் இவர், பெர்லிஸ் மாநிலத்திலுள்ள செயேட் சிராஜூடின் இடைநிலைப்பள்ளியில் மலாய் இலக்கிய ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன்பின்னர்,1984 வரையிலும் மலேசிய கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள கலைத்திட்ட மேம்பாட்டு பிரிவு அதிகாரியாகப் பணியாற்றினார். முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த பின்னர், குறிப்பாக 1988-இல் டத்தோ ரஹ்மான் மலாயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணி புரிந்தார். அதனையடுத்து, 1993-ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பதவியேற்றம் அடைந்தார். 2015 முதல் 2017 வரையிலும் ஒப்பந்த அடிப்படையில், தேசிய கலைகலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அகாடமியில் (ASWARA) மூத்த விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாது, Dewan Bahasa dan Pustaka (DBP), மலேசிய கவிஞர்கள் சங்கம், புத்ராஜெயா எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய அரசு அமைப்புகள் மற்றும் சங்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, மலாய் மொழி இலக்கியத்திற்குத் தன்னால் இயன்ற பங்களிப்பினைச் செய்து வந்தார்.
இலக்கியம் மற்றும் மொழியைச் சார்ந்த அரசு அமைப்புகளிலும் சங்கங்களிலும் இணைந்து, தன்னாலான பங்களிப்புகளைக் கொடுக்கும் பண்பானது, டத்தோ ரஹ்மான் பின் ஷாரிக்கு இளம் வயது முதலே இருந்து வந்தது. அதன் தாக்கம் காரணமாகவே, அவர் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் மலாய் இலக்கியத்திற்கான இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் போதே, பெர்லிஸ் மாநிலத்திற்கான மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக 1976 முதல் 1977வரையிலும் செயல்பட்டார். டத்தோ ரஹ்மான் மாணவராக இருந்தவரையிலும் அவருக்கு இலக்கியம் மற்றும் மொழி மீது இருந்த ஆர்வமும் பற்றும், கல்வியாளராகிய பின்னர் இரட்டிப்பானது. இதனால், உத்தியோகபூர்வ கடமைகள் மட்டுமல்லாத மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த அரசு அமைப்புகள் மற்றும் சங்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதோடு, நிறையச் செயல்பாடுகளையும் பங்களிப்புகளையும் செய்துள்ளார். எடுத்துக்காட்டாகச், செயேட் சிராஜூடின் இடைநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது பெர்லிஸ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் (1978-1979), வடக்கு நாடக மற்றும் நடன சங்கத்தின் (BATTRA) தலைவராகவும் செயல்பட்டார். மலாயா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிப்புரிந்த காலக்கட்டத்திலோ, பெர்லிஸ் மாநில பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஆலோசகராகவும், இந்தேரா (INDERA) இலக்கியப் படையின் ஆலோசகராகவும் செயல்பட்டார். மேலும், இதுவரையிலும் டத்தோ ரஹ்மான் 30 முறைகளுக்கும் மேல் பல இலக்கியப் பரிசு மற்றும் விருது வழங்கும் தேர்வுக்கான குழு உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். உதாரணமாக, உதுசன் நாளிதழ் மற்றும் ரக்யாட் வங்கி இலக்கியப் பரிசுக்கான நீதிபதி குழு (1994), மலேசிய இலக்கியப் பரிசுக்கான நீதிபதி குழு (1996), தென்கிழக்காசிய எழுத்தாளர் விருது தேர்வு குழு (1997), மலேசியன் பிரீமியர் இலக்கியப் பரிசுக்கான நீதிபதி குழு (2000), மாஸ்டெரா இலக்கியப் பரிசுக்கான நீதிபதி குழு (2001), மலாக்கா கவிதை எழுதும் போட்டியின் நடுவர் (2005), நவீன கவிதை போட்டி பரிசுக்கான நீதிபதி குழு (2007), சரவாக் இலக்கியப் பரிசுக்கான நீதிபதி (2009), மலேசியன் பிரீமியர் இலக்கியப் பரிசுக்கான நீதிபதி (2015 – 2018) ஆகிய போட்டிகளில் நடுவராகவும் நீதிபதி குழு உறுப்பினராகவும் விளங்கியுள்ளார்.
இலக்கியம் மீதான அதீத ஆர்வம் கொண்ட டத்தோ ரஹ்மான், 13 வயதிலிருந்தே சிறுகதை மற்றும் நாடகங்களை எழுதத் தொடங்கினார்.
“நான் படிவம் ஒன்றில் படிக்கும் போது, எனக்கு நிகழ்ந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘காட்டில் தொலைந்தேன்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதினேன். நான் அந்தச் சிறுகதையை எழுதி முடித்தவுடன், என்னுடைய வகுப்பாசிரியரான ஆசிரியை செலாமாட்டிடம் காட்டினேன். எனக்கு எழுதுவதில் ஆர்வமிருந்ததைக் கண்டறிந்த எனது வகுப்பாசிரியை, என்னைத் தொடர்ந்து நிறையச் சிறுகதைகளை எழுதும்படி கூறி ஊக்குவித்தார். அதோடு, என்னிடம் நாடகத்திற்கான படிவம் ஒன்றினை எழுதும்படியும் சொன்னார். நான் ‘வருத்தம்’ என்ற தலைப்பில் முற்றிலும் என்னுடைய கற்பனைத் திறனைப் பயன்படுத்தி ஒரு நாடகப் படிவத்தை எழுதினேன். நான் எழுதிய நாடகப் படிவம் என்னுடைய வகுப்பாசிரியைக்கு மிகவும் பிடித்ததால், அப்படிவத்திலிருந்த கதையை அரங்கேற்ற முற்பட்டார். எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் நாடகத்திற்காக வெவ்வேறு கதைப்பாத்திரங்களைப் பிரித்துக் கொடுத்தார். எனக்கு நினைவு இருக்கிறது! அந்நாடகம் இரண்டு சகோதரர்களின் வாழ்க்கையைப் பற்றியது. அண்ணன் திருடனாகவும், தம்பி காவல்துறை அதிகாரியாகவும் சித்தரிக்கப்பட்ட கதை. அந்நாடகத்தில் எனக்குக் காவல்துறை அதிகாரியாக நடிக்க வாய்ப்புக் கிட்டியது. அண்ணனது கதைப்பாத்திரத்தில் நடிக்க என்னுடைய நெருங்கிய நண்பன் மன்சோர் டாவுட் தேர்வு செய்யப்பட்டான்”. தன்னுடைய வாழ்நாளில் முதன்முதலாக எழுதிய இலக்கியத்தைப் பற்றி வினவியபோது, டத்தோ ரஹ்மான் மேற்கண்ட சம்பவங்களை விளக்கினார்.
டத்தோ ரஹ்மான் அவர்களுக்குக் கதை அடிப்படையிலான இலக்கியங்களில் மட்டுமல்லாது, கவிதைகளிலும் ஆர்வம் மிகுந்திருந்தது. ஆயினும், படிவம் மூன்று பயிலும் வரையிலும் கவிதைகளை வாசிக்க மட்டுமே செய்தார். எழுதும் முயற்சியில் ஈடுபடவில்லை. குறிப்பாகக் கூறின், மலேசியாவின் மூன்றாவது தேசிய இலக்கியவாதி விருதினைப் பெற்ற எழுத்தாளர் உஸ்மான் அவாங் எழுதிய ‘Ke makam bonda’ (தாயின் கல்லறைக்கு) எனும் கவிதையை வாசித்த பின்னரே அவருக்குக் கவிதை எழுத வேண்டுமென்ற ஆசை பிறந்தது. “அக்காலக்கட்டத்தில் எனக்கு மரபு சார்ந்த கவிதைகளை எழுதவே ஆர்வம் இருந்தது. மரபு சார்ந்து கவிதைகளை எழுதும் முறையைக் கற்றறிந்தேன். அப்போதுதான் என்னுடைய மைத்துனன் கவிதைப் பட்டிமன்றத்தில் (Pertandingan berbalas pantun) என்னைக் கலந்துகொள்ளும்படி அழைப்பு அனுப்பினார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டு நானும் அப்போட்டியில் கலந்துகொண்டேன். அப்போட்டியில் கலந்துகொண்ட அனைவரும் சவால்மிக்க போட்டியாளர்களாக விளங்கினர். அப்போட்டியில் வெற்றி கிட்டவில்லை என்றாலும், மிகப் பெரிய அனுபவம் கிட்டியது”, எனக் கவிதைத் துறையில் தன்னுடைய ஆளுமை எவ்வாறு தோற்றம் கண்டது என்பதைத் தெளிவுப்படுத்தினார் டத்தோ ரஹ்மான்.
கல்வி சார்ந்த புத்தகங்கள், கவிதை, நாவல், நாடகம் என இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் என டத்தோ ரஹ்மான் பின் ஷாரி நிறைய நூல்களை வெளியிட்டுள்ளார். 1981 முதல் 2006 வரையிலும் 13 கல்வித்துறை புத்தகங்களை டத்தோ ரஹ்மான் எழுதியுள்ளார். கல்வித்துறை புத்தகங்கள் என்றாலும், அப்பதிமூன்று புத்தகங்களும் இலக்கியத்தை மையப்படுத்தியே அமைந்துள்ளன. குறிப்பாக, இலக்கியம் கற்பிக்கும் முறை, இலக்கியத்தைத் திறனாய்வு செய்யும் முறை, இலக்கியச் சொற்களஞ்சியம் வழிகாட்டி என இலக்கியத்துறைக்குப் பயன்படும் நூல்களையே டத்தோ ரஹ்மான் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், டத்தோ ரஹ்மான் 1981 முதல் 2010 வரையிலும் 7 கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். அவை, Kesan Kunjungan (1981), Serpihan Diri (1986), Melati dan Bahang (1996), Anjung Deklamator (2005), Anjung Persinggahan (2006), Rahman Shaari in Translation (2007), Harga Remaja (2010) ஆகியவையாகும்.
மேலும், டத்தோ ரஹ்மான் 1992-இல் ‘Mufarakah’ எனும் தலைப்பிலான தன்னுடைய முதல் நாவலை எழுதினார். அதன்பின்னர், Takungan Hajat (1995), Suluh Peraba (1996), Tirai Tokoh (1997), Norhana (2002), Burok (2002), Psikobabo (2004), Pernikahan di Lubuk Hantu (2008), Semoga Molek (2013), Cengkaman Hasrat (2015) ஆகிய ஒன்பது நாவல்களைப் படைத்தார். டத்தோ ரஹ்மான் 2006-இல் எழுதி DBP-இல் அரங்கேற்றப்பட்ட ‘Petua Perkahwinan’ எனும் நாடகம், 2007-ஆம் ஆண்டில் ‘பெகான் இல்மு பப்ளிகேஷன்ஸ்’ எனும் வெளியீட்டு நிறுவனத்தால் புத்தகமாக வெளியீடு கண்டது. ‘Petua Perkahwinan’ எனும் நாடகம் தவிர்த்து டத்தோ ரஹ்மான், மேலும் பல நாடகப் படிவங்களை எழுதியுள்ளார். அவை மேடையில் நாடகமாக அரங்கேறியுள்ளன என்றாலும், புத்தகமாக வெளியீடு காணவில்லை. எடுத்துக்காட்டாக, டத்தோ ரஹ்மான் எழுதிய ‘Wisma Wahub’, ‘Suluh Peraba’, ‘Pushkin’, ‘Orang Tua dan Laut’ ஆகிய நாடகங்கள் இன்றளவிலும் மேடைகளில் அரங்கேறிய நாடகங்களாக மட்டுமே உள்ளன.
டத்தோ ரஹ்மானுடைய கவிதைப் படைப்புகள் பெரும்பாலும் தோழமை, மதம், நாட்டுப்பற்று மற்றும் வாலிபம் ஆகியவற்றையே கருப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ளன. வாலிபத்தைக் கருப்பொருளாகக் கொண்டு டத்தோ ரஹ்மான் எழுதிய ‘Harga Remaja’(இளமையின் மதிப்பு) எனும் தலைப்பிலான கவிதை, 2010 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான தேசியவகை இடைநிலைப்பள்ளியின் 4-ஆம் படிவத்திற்கான இலக்கியப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது. வாலிப வயதின் முக்கியத்துவம், வாலிப பருவத்தைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான வழிகள், வாலிபர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் மற்றும் இலட்சியங்கள் எனப் பல நல்ல கருத்துகளை உள்ளடக்கியதோடு, கவிதைக்கான அழகியல் கூறுகளையும் சிறப்பாகக் கையாண்டு அக்கவிதையை டாக்டர் ரஹ்மான் அமைத்துள்ளார். மேலும், நாவல் எழுதுவதிலும் தொடர்ந்து நாட்டம் காட்டி வந்த டாக்டர் ரஹ்மான், பெரும்பாலும் அரசியல், இறை நம்பிக்கை, திருமணம், தோழமை ஆகியவற்றையே முதன்மைக் கருவாகக் கொண்டு நாவல்களை எழுதியுள்ளார். எடுத்துக்காட்டாக, 1996-இல் வெளிவந்த ‘Suluh Peraba’ எனும் டாக்டர் ரஹ்மானின் நாவல், மூட நம்பிக்கையை நம்பும் சமூகத்தையும், அச்சமூகத்தால் நாட்டில் ஏற்படும் சிக்கல்களையும் கருப்பொருள்களாகக் கொண்டுள்ளது. அதோடு, 1997-இல் அவரெழுதிய ‘Tirai Tokoh’ எனும் நாவலானது, ஏமாற்றுக் குணமுடைய அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் கதைக்கருவைக் கொண்டுள்ளது. இதைத் தவிர இயற்கை, காதல், மதம் உட்பட இன்னும் பல கருப்பொருளை மையமாகக் கொண்டு டத்தோ ரஹ்மான் இலக்கியங்களைப் படைத்துள்ளார்.
எழுத்துலகில் சாதனைப் புரிய எண்ணம் கொண்ட டத்தோ ரஹ்மான், ஆரம்ப காலக்கட்டத்தில் இலக்கியத்தைச் சார்ந்த போட்டிகளில் கலந்து நிறையப் பரிசுகளை வென்றார். அவற்றுள் சில வெற்றிகள் அவரை இலக்கியத் துறையில் அடுத்தடுத்த நிலைகளுக்கு இட்டுச் செல்வதற்கான மிகப் பெரிய உந்துதலாக மாறின. எடுத்துக்காட்டாக, 1972-ஆம் ஆண்டில் கல்லூரிகளுக்கிடையேயான இலக்கியக் கட்டுரை எழுதும் போட்டியில் முதலிடத்தை வகித்தார். பின்னர், 1975-ஆம் ஆண்டில் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய கவிதை எழுதும் போட்டியிலும் முதல் இடத்தைத் தட்டிச் சென்றார். 1977-இல் DBP கட்டுரை எழுதுதல் மற்றும் இலக்கிய விமர்சனப் போட்டிகளிலும் இவர் முதல் இடத்தினை வென்றார். அதோடு, 1976, 1982, 1986/87 ஆகிய ஆண்டுகளுக்கான மலேசிய இலக்கியப் பரிசுகளை வென்றார். இவ்வெற்றிகள் அனைத்தும் டத்தோ ரஹ்மானை மலாய் மொழி இலக்கிய வட்டாரத்தில் பிரபலமாக்கியது. 2000-ஆம் ஆண்டின் துவக்கத்திற்குப் பின்னர், டத்தோ ரஹ்மான் பின் ஷாரி மலாய் மொழி இலக்கியத் துறையில் செய்த சாதனைகளுக்காகவும் சேவைகளுக்காகவும் பல பரிசுகளும் விருதுகளும் அவருக்குக் கிடைக்கப்பெற்றன. உதாரணமாக, மலாயா பல்கலைக்கழகத்தின் சிறந்த சேவைக்கான சான்றிதழ் இவருக்கு 2002-ஆம் ஆண்டில் கிட்டியது. அதனைத் தொடர்ந்து, 2003-ஆம் ஆண்டில் மலேசியன் பிரீமியர் இலக்கியப் பரிசு, 2007-ஆம் ஆண்டில் தென்கிழக்காசிய எழுத்தாளர் விருது, 2009-ஆம் ஆண்டில் செரி சிராஜுதீன் பெர்லிஸ் பட்டம், 2013-இல் GAPENA கவிஞர் விருது மற்றும் டத்தோ பங்லிமா சிராஜுடின் ஜமாலுல்லைல் விருது ஆகியவைக் கிட்டின. அவ்வரிசையில், 2022-ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் தேசிய இலக்கியவாதி எனும் விருதுக்கும் உரியவராக டத்தோ ரஹ்மான் விளங்குகிறார்.
டத்தோ ரஹ்மானுக்குப் பிடித்த கவிதை வரிகளைப் பற்றி வினவிய போது, தான் எழுதிய கவிதை உட்படத் தனக்கு விருப்பமான ஐந்து வெவ்வேறு கவிதை வரிகளைப் பட்டியலிட்டுள்ளார். எழுத்தாளர் பஹா ஜைனின் ‘Topeng-topeng’ எனும் கவிதையிலுள்ள ‘Topeng-topeng menari dari bayang ke bayang’, எனும் வரி தன்னுடைய மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வரி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எழுத்தாளர் முகமாட் ஹஜி சல்லே எழுதிய ‘Sajak untuk Penakut’ கவிதையிலிருக்கும் ‘Serangan melukis jiwa sumbernya, Kebenaran tidak mungkin dilukakan’ எனும் வரி, எழுத்தாளர் சுரினா ஹாசனின் ‘Semalu’ எனும் கவிதையிலுள்ள ‘Duri kecil menyedarkannya, Ada ketajaman di celah-celah kekerdilan’ எனும் வரி, எழுத்தாளர் ஹசிம் யாகோப் எழுதிய ‘Aku Hanya Mahu ke Seberang’ கவிதையிலிருக்கும் ‘Ombak jangan gila melanda, Perahuku kecil, laut ganas’ ஆகிய வரிகள் தனக்கு மிகவும் விருப்பமான கவிதை வரிகளென டத்தோ ரஹ்மான் தெரிவித்துள்ளார். “நான் எழுதிய கவிதைகளில் ‘Sengsara’ எனும் கவிதையில் ‘Tak tersuluh kamar kalbu, Gelisah ini bayaran’ எனும் வரி என் மனதுக்கு மிக நெருக்கமானது”, என்றும் கூறியுள்ளார்.
ஓர் ஏழை வணிகரின் மகனாக வளர்ந்த காலக்கட்டத்திலே இலக்கியத்தில் பெரும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட டத்தோ ரஹ்மானின் சாதனை கனவு, இடைவிடா கடும் முயற்சியால் நனவாகியது. “எனது எண்ணங்களையும் அனுபவங்களையும் பிறரிடம் சமர்ப்பிப்பதற்கு ஒரே காகிதம் போதவில்லை ; பல புத்தகங்கள் தேவைப்பட்டன. மென்மேலும் தொடர்ந்து எழுதுவதன் மூலமே, இலக்கியத் துறையில் எனக்கான இடத்தை என்னால் உருவாக்கிக்கொள்ள முடிந்தது. இலக்கியத் துறையில் வளர்ச்சி அடைய எழுத்து மட்டும் போதாது. வாசிப்பும் மிக முக்கியம்”, என டத்தோ ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவ்வகையில், இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ள இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் வாசிக்கும் பழக்கத்தைக் கைவிடக் கூடாது எனும் அறிவுரையோடு, ஐந்து புத்தகப் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார். எழுத்தாளர் பஹா சாயினின் கட்டுரைகள் மற்றும் கவிதைகள், எழுத்தாளர் ஜூலியன் வோல்ரேயின் ‘Introducing Literary Theories: A Guide and Glossary’, எழுத்தாளர் மனா சிக்கானாவின் ‘Teori dan Kritikan Sastera Pascamodenisme’, எழுத்தாளர் முகமாட் ஹஜி சல்லேவின் ‘Teori dan Kritikan Sastera Pascamodenisme’, எழுத்தாளர் சுரினா ஹாசனின் ‘A Journey Through Prose and Poetry’ ஆகிய ஐந்து புத்தகங்களைப் பரிந்துரைத்துள்ளார்.
மலாய் மொழி இலக்கியத் துறைக்குச் சுமார் 40 ஆண்டு காலமாகப் பெரும் பங்களிப்பினை ஆற்றி வரும் டாக்டர் ரஹ்மான் பின் ஷாரி அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற அனுபவமும் ஆற்றலும் அளப்பரியது. அழகியல் கூறு மிகுந்த கவிதைகள், ஆர்வமூட்டும் நாவல்கள், சமுதாய கருத்துகள் மிக்க நாடகங்கள் என மகத்தான இலக்கியங்களைப் படைத்ததன் மூலம், நிறைய பரிசுகளையும் விருதுகளையும் மட்டுமல்லாது, பல இலக்கிய வாசகர்களின் இதயங்களையும் டாக்டர் ரஹ்மான் தன் வசமாக்கியுள்ளார்.
படங்கள்: Dewan Sastera – 9, 2022