அருண்மொழி நங்கை என்ற பெயரை ஜெயமோகனுடன் இணைத்தே பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். அவரும்கூட அவ்வாறுதான் தன்னை அறிந்துவைத்திருக்கக் கூடும். அருண்மொழி நங்கை எழுத்தாளர் ஜெயமோகனை 1991 ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இருவரின் பிரதான ரசனையும் இலக்கியமாக இருந்தது. அருண்மொழிநங்கை தன் கல்லூரி நாட்களில் இருந்தே தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து வாசிப்பவர். கல்லூரி நாட்கள் முதல் இந்நாள் வரை எழுத்தாளர் அசோகமித்ரனின் தீவிர வாசகி. எழுத்தாளர்களில் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அ.முத்துலிங்கம் ஆகியோரை இலக்கிய ஆதர்சமாகக் கொண்டவர்.
இன்று ‘பனி உருகுவதில்லை’ நூல் மூலமாக அருண்மொழி நங்கை ஓர் எழுத்தாளராக அறியப்பட்டாலும் அவரது இலக்கியப் பயணம் 90களில் தொடங்கியுள்ளது. தொடர் இலக்கிய வாசிப்பில் இருந்த அருண்மொழி நங்கை 1996ஆம் ஆண்டில் ஐசக் டெனிசனின் ‘தி ப்ளூ ஜார்’ என்ற சிறுகதையை நீல ஜாடி என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். அதன் பின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும், வாசிப்பனுபவ கட்டுரைகளும் எழுதி வந்தார். அதில் சுந்தர ராமசாமியின் ’ஆண்கள், பெண்கள், குழந்தைகள்’ நாவலுக்கு எழுதிய விமர்சனக் கட்டுரை சுந்தர ராமசாமியால் பாராட்டப்பட்டது. அந்நாவலுக்கு வந்த மிகச்சிறந்த கட்டுரை எனச் சுந்தர ராமசாமி குறிப்பிட்டார். பின் ஜெயமோகனுடன் இணைந்து ‘சொல்புதிது’ இதழ் நடத்துவதிலும், ஊட்டி முகாம் உள்ளிட்ட ஜெயமோகனின் இலக்கியச் செயல்பாடுகளில் துணையிருப்பதிலும் கவனம் செலுத்தினார்.
அருண்மொழி நங்கை தன்னைத் தயக்கத்துடன் முன்வைத்தது 2021ல் நிகழ்ந்தது. நினைவலைகள் காலந்தோறும் எழுதப்படுகின்றன. தமிழில் அசோகமித்ரனின் ‘சையது மாமா’, ஜெயமோகனின் ‘அனந்தன்’ கதாபாத்திரங்கள் அந்த வகை மாதிரியின் சிறந்த உதாரணங்கள். அப்படி அருண்மொழி நங்கை தன் வாழ்வைக் கட்டுரைகள் வாயிலாக மெல்ல வெளிப்படுத்தினார். தனித்த மொழியாலும் புனைவுக்கு நெருக்கமான அனுபவத்தாலும் நுட்பமான சித்தரிப்புகளாலும் அக்கட்டுரைத் தொடர் வாசகர்கள் மத்தியில் பிரபலமானது. ‘பனி உருகுவதில்லை’ எனும் நூலானது. தமிழ் இலக்கிய சூழலில் சமீபத்தில் கவனம் பெற்ற நூல்களில் முதன்மையானது எனவும் அந்நூல் கருதப்பட்டது.
அருண்மொழிநங்கை தன் பள்ளி, கல்லூரிக் கால நினைவுகளை மீட்டெடுத்து எழுதிய அந்நூல் வெறும் நினைவுகளோடு நின்றுவிடாமல் புனைவுகளின் வெவ்வேறு சாத்தியங்களைத் தொட்டாராய்ந்தது. ஒரு வாசகனாய் நான் இந்தக் கட்டுரைகளைப் பின் தொடர்ந்தேன்.
’மரபிசையும் காவிரியும்’ எனத் தன் பள்ளிக்கால நினைவுகளோடு ஆலந்தூர் கிராமமும் அதன் பின்னால் உள்ள இசையையும் பற்றி தன் வலைதளத்தில் (arunmozhinangaij.wordpress.com) எழுதத் தொடங்கினார் ஆசிரியர். தொடர்ந்து அன்னையின் பாடல் (கிஷோரி அமோன்கர்), பரக்கும் புரவியின் குளம்போசை (ஜாகிர் ஹுசேன்) எனத் தொடர்ந்து இசைப் பற்றிய ரசனைக் கட்டுரைகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்று அவரது வலைத்தளத்தில் வெளிவந்தன. இசையிலிருந்து இளமைக்கால நினைவுகள் மேலெழவே இளமைக்காலத்தில் வாசித்த நூல்களிலிருந்து நினைவுகளைத் தொகுக்கும் முயற்சியாகக் கண்ணீரும், கனவும் கட்டுரையை எழுதினார். அதிலிருந்து தொடர்ந்து பனி உருகுவதில்லை, சின்னச் சின்ன புரட்சிகள், விட்டு வந்த இடம் எனக் கட்டுரைகள் வந்தன. இலக்கியத்திலும், இசையிலும் தொடங்கிய இந்தக் கட்டுரை பயணம் வானத்தில் நட்சத்திரங்கள், மலையில் பிறப்பது கட்டுரைகளில் இருந்து அவர் சந்தித்த அவருக்கு நெருக்கமான மனிதர்களின் பக்கம் திரும்பியது.
அரசி கட்டுரையில் வரும் ராஜம்மாள் பாட்டி, யசோதையில் வரும் அத்தை, ’நிலை’ கட்டுரையின் வடிவேலு மாமா, ’ஊர் நடுவே அரசமரம்’ பட்டாணி, ஊருக்கு வெளியே சாமியார், ராவுத்தர் மாமாவின் கணக்கு, மனோகர் சாரும் ஜோதி டீச்சரும் எனக் கட்டுரையின் கதாபாத்திரங்கள் புனைவுக்கான கதாபாத்திரங்கள் அளவிற்கு வலுவாக இந்நூலில் அமைந்திருந்தன. இதில் அரசி கட்டுரையில் வரும் ராஜம்மாள் பாட்டி வாசித்த அனைவருக்கும் பிடித்தமான கதாபாத்திரமாக மாறியது.
நினைவலைகளைத் தொடர்ந்து தன் வலைப்பக்கத்தில் இசைக்கட்டுரைகள் எழுதி வருகிறார் அருண்மொழிநங்கை. காவிரி நதியின் கரையில் வளர்ந்ததால் பள்ளி நாட்கள் முதல் கர்நாடக சங்கீதம் கேட்பதில் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து கர்நாடக, ஹிந்துஸ்தானி இசைகளைக் கேட்டு வளர்ந்தவர். கிஷோரி அமோன்கர், ஜாகிர் ஹுசேன், படே குலாம் அலி கான் எனத் தமிழுக்கு அதிகம் பரிட்சியம் இல்லாத இசைக் கலைஞர்களைப் பற்றிய கட்டுரைகள் எழுதினார். படே குலாம் அலி கான் பற்றி எழுதிய சிம்மத்தின் குரல், காதலின் இசை, கண்ணீரின் இனிமை ஆகிய கட்டுரைகள் தமிழுக்கு முற்றிலும் புதியவை.
தொடர்ந்து மேற்கத்திய இசை, இசைக் கலைஞர்கள் சார்ந்த ரசனைக் கட்டுரைகள் எழுதினார். அதில் எரிக் க்ளாப்டன் (எரிக் க்ளாப்டன்: அத்தனை மேலே அத்தனை கீழே), சைமன், கார்ஃபென்கல் (நான்கு பூங்கொத்துக்கள்), ஹோட்டல் காலிபோர்னியா (நெடுஞ்சாலையில் ஓர் இடம்) என மேற்கத்திய இசையின் புனைவிடங்களைத் தமிழுக்கு அறிமுக செய்தார்.
அ-புனைவுகள் மட்டுமல்லாமல் ‘நீர்’ என்ற சிறுகதையும் எழுதியுள்ளார். நாவல் எழுதும் எண்ணம் இருப்பதாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். அது அவருக்குச் சாத்தியமானதுதான். அவரது பரந்த வாசிப்பே அவரது பலமாக இருக்குமென தோன்றுகிறது. டால்தோயின் போரும் அமைதியும், தஸ்த்தோவ்ஸ்கியின் கரம்சோவ் சகோதிரர்கள் நாவல்கள் குறித்து இவர் ஆற்றிய உரைகளும், வெண்முரசு நாவல் தொகுதி குறித்த மூன்று மணி நேர உரையும் அவரது வாசிப்பின் விசாலத்திற்கான சான்றுகள்.
அருண்மொழி நங்கை தாமதமாகத் தமிழ் இலக்கியச் சூழலுக்கு அறிமுகமானாலும் தான் பயணிக்கத் தகுந்த வழித்தடத்தைத் தானே நெடுங்காலம் உருவாக்கி வந்துள்ளார். அந்தப் பாதையில் அவர் தடையின்றி நடக்கப்போவதற்கான அடையாளங்கள் இன்றைய அவரது பங்களிப்பில் தெரிகிறது.