பதியம் போடப்பட்டச் செடிகள் வேகமாய் வளர்கின்றன என்கிறார்கள். அது உண்மையா அல்லது பிரமையா என்பது தெரியாது. ஆனால் தமது தாய் வேர்களைத் தமிழகத்தில் விட்டுவிட்டுச் சிங்கை வந்து பதியம் பிடிக்கும் எழுத்தாளர்கள் ஊக்கமாகத்தான் இருக்கிறார்கள். கோவில் உண்டியலில் போட்ட காசு போல தமிழகத்தில் ஆயிரத்தில் ஒன்றாய் கலந்து காணாமல் போகும் அபாயம் இல்லாமல் சிங்கையில் படைப்பாளர்களின் எழுத்துக்கள் படிக்கப்படும் நிலை இருப்பதற்குச் சில காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு வார இறுதியிலும் எங்கேனும் இடத்தில் நூலகம் அல்லது தமிழ் அமைப்புகளின் சார்பாக நிகழ்ந்துகொண்டிருக்கும் கவிதை, கதை அரங்கங்கள் பிரதான காரணமாகும். தவிர அவரவர் பொருளாதார நிலை கொஞ்சம் ஆரோக்கியமாக இருப்பதால் துணிந்து நூல்கள் வெளியிட முடிவதால் அவரவர் படைப்புத் திறனைப் பொதுவெளியில் நிறுத்திக் கொஞ்சம் வெளிச்சம் பாய்ச்சி தமது அடையாளத்தையும் காட்டமுடிகிறது. இன்னமும் சிறப்பாக அதிகாரப்பூர்வ மொழியான தமிழுக்கு அரசு சார்பில் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படுவதும் ஒரு முக்கிய உந்து சக்தி.
அந்த வகையில் தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து சிங்கையில் வேறூன்றிய அழகுநிலா, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் புனைவு அபுனைவு என்று இரண்டு உலகங்களிலும் இயங்கி வரும் துடிப்பான எழுத்தாளர். பள்ளிச் சிறார்களுக்கான கதைகள், பாடல்கள் என்று சிறுவர் இலக்கியப் பரப்பிலும் வளைய வரும் இவர் ஒரு பன்முகப் படைப்பாளி.
பொதுவாகச் சிங்கைப் படைப்பாளர்கள் பற்றி ஒரு குற்றச்சாட்டு அல்லது அதிருப்தி உண்டு. அவர்களின் புனைவுகளில் சிங்கையிலுள்ள சில பேட்டைகள், தெருக்கள், பெருவிரைவு ரயில் நிலையங்களின் பெயர்கள் போன்றவை இடம் பெறுவதால் மட்டுமே அது சிங்கை இலக்கியம் ஆகாது என்பார்கள். கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டுப்பணிப் பெண்கள் போன்றோரைச் சுற்றிய கதைகளை எழுதாதவர்களே இல்லை என்பார்கள். அதை முற்றிலும் அபாண்டம் என்று ஒதுக்க முடியாதுதான். அதே சமயம் அது ஒரு நுனிப்புல் விமர்சனம் என்பதும் உண்மை. எங்கேனும் ஒன்றிரண்டு விமர்சனங்களைப் படித்துவிட்டு அப்படி ஒரு கருத்தை மனத்தில் இருத்திக்கொண்டு, அடியில் புளி வைத்த அதே தராசுடன் எல்லாவற்றையும் நிறுத்த முற்படுகின்றனர்.
சிங்கையிலேயே பிறந்து வளர்ந்த தலைமுறையினரின் படைப்புகளில் காணக்கிடைக்கும் நிலவியலும் உளவியலும் புலம் பெயர்ந்த படைப்பாளர்களின் எழுத்துகளில் இருப்பதற்கு வாய்ப்பு குறைவே. பெரும்பாலும் தாய்நிலத்தின் பாதிப்புகளுடன், வாழ் நிலத்தில் அவதானித்தது, கேட்டது, வாசித்தது எனப் பலவும் இணைந்தே இயல்பாக ஒரு படைப்பு வெளிவருகிறது. அதிலும் பெரும்பாலும் மத்திய தர அடுக்கு வரையிலான வாழ்க்கையைப் பார்க்கலாம். சிங்கையின் மேல்தட்டு வாழ்வைப் பற்றிய கதைகள் வெகு சிலவே. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டிய அவசியமேயில்லை. அது உங்களுக்கும் தெரிந்ததுதான். அதே சமயம் சிங்கையின் நீண்ட வரலாற்றை அறிந்து உள்வாங்கி அதை ஒட்டிய புனைவுகளும் உண்மைச் சம்பவக் கட்டுரைகளும் இருக்கவே செய்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில்தான் அழகுநிலா போன்ற படைப்பாளிகளும் இயங்குகிறார்கள். இவருடைய புனைவுகளில் (‘சங் கன்ச்சில்’, ‘ஆறஞ்சு’ சிறுகதைத் தொகுப்புகள்) குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காகத் தமிழகத்தில் தங்கள் மூத்த தலைமுறையின் சொத்தை விற்று முகவர்கள் மூலமாகச் சிங்கை வந்து நாளின் ஒவ்வொரு மணித்துளையையும் வியர்வையில் கழுவி வெள்ளிகளாக மாற்ற முயலும் அடித்தட்டு மக்களும் உள்ளனர். பெற்றவனின் மறைவுக்குக் கூடப் போக முடியாமல் கல் மனதோடு துன்பத்தை விழுங்கும் மக்களும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் மியன்மார் அல்லது பிலிப்பினோ பணிப்பெண்ணின் கவனிப்பில் வளரும் பிள்ளைகளும் உள்ளனர். அதை நினைத்து மருகினாலும் கையறு நிலையில் நிற்கும் பெற்றோர்களும் உள்ளனர். சிங்கைக்கே உரித்தான தொடக்க நிலை இறுதித் தேர்வுக்குத் பரபரப்பாகத் தயாராகும் மாணவர்களும், படபடப்புடன் அவர்களைத் தயாராக்கும் பெற்றோர்களும் உள்ளனர். பொதுவில் பேசவும் எழுதவும் தயங்குகிற பள்ளி மாணவிகளின் மாதவிலக்குப் பிரச்னைகளும் உண்டு. இவற்றைப் பேசுவதற்குப் புலம் பெயர் படைப்பாளிகள்தான் தயாராயிருக்கிறார்கள். ஏனெனில் இந்தப் பிரச்னைகளை உணர்வுப்பூர்வமாக அணுகி அவற்றை ரத்தம், சதை, ரோமம், நகங்களுடன் காட்சிப்படுத்தி சுதந்திரமாகப் பொதுவில் வைக்க இவர்களால் மட்டுமே முடியும்.
இது போன்ற படைப்புகள்தான் வேர் ஊன்றிய பேருக்கும், வேர் பிடிக்க வருபவர்களுக்கும் அணுக்கமாய் இருந்து சிங்கை வாழ்வின் சித்திரத்தை அளிக்கும். தன் அனுபவங்களுடனும், இனி பெறப்போகும் அனுபவங்களுக்கான ஒரு எதிர்பார்ப்பையும் அமைக்கும். அதைத் தவிர அவர்களுக்குப் பழக்கமில்லாத வாழ்வைக் காட்டுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது? அப்படியே எழுதினாலும் அது ஒரு முக்கோணச் சட்டகத்தில் வட்டத்தைத் திணித்துக்காட்டும் வெவ்வேறான போலி முயற்சியாகவே இருக்கும்.
சிங்கை தொடர்பான புனைவுகள் தவிர, சிறுகதை எழுத களங்களை வழங்கிக்கொண்டே இருக்கும் மகாபாரத பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் ஒட்டிய புனைவுகளும் உள்ளன. ஆனால் மற்ற சிலரைப் போல தர்க்கக் குழப்பங்களுடன் வலிந்து எழுதாமல் போருக்குப் பிந்தைய திரௌபதியின் மனநிலையையும், தாய்க்குத் தலைமகன் என்ற அந்த ஒரு தகுதியும் தனக்கு இல்லாமல் போனதை எண்ணி மருகும் தருமனின் உளவியலையும் தொட்டு எழுதியிருக்கிறார்.
அழகுநிலா போன்றோரின் அபார வாசிப்பும், செய்திகளைத் தொடர்ந்து அவற்றின் பின்னணியைத் தேடிச்செல்லும் ஊக்கமும் அவர்களின் மற்றொரு ஆயுதம். அந்த வகையிலும் அழகுநிலா தன் கட்டுரைகளின் மூலம் தன் வாசிப்புப் பரப்பையும் சிங்கையில் தான் கண்டவைகளையும் கேட்டவைகளையும் நமக்கு நன்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் கருப்பொருட்கள், அவற்றின் முழுப் பரிமாணத்தையும் அறிந்து பின்னரே அது பற்றி எழுத துணியும் நேர்மையும், அதை ஒரு சாதாரண வரட்டுத் துணுக்குச் செய்தியாகக் கூறாமல் சுவைபடவும் எழுதுகிறார்.
தான் வாசிக்கும் படைப்புகளின் மீது ஒரு விமர்சனப் பார்வைத் தேவை; அப்போதுதான் தன் படைப்புகளின் மீது வரும் விமர்சனங்களை அதிகம் காழ்ப்பின்றி ஏற்கவும் தன்னைச் சரி செய்துகொள்ளவும் முடியும் என்பதில் உறுதியாக நிற்பவர். தன் படைப்புகளின் மீது வரும் விமர்சனங்களை அவர் எவ்வாறு எடுத்துக்கொள்கிறார் என்பதற்கு அவை அனைத்தையும் தன் வலைப்பூவில் பதிவிட்டுப் பொதுவில் வைத்திருப்பதே சான்று.
சிங்கப்பூர் ஸ்லிங் எனப்படும் ஒரு வகை மதுபானம் பெண்களுக்காகவே பிரத்தியேகமாகச் செய்யப்பட்டது என்பதை அறிந்து அதைச் சுவைத்து அந்த அனுபவம் பற்றியும் எழுதுவது அவரது ஆர்வத்தைக் காட்டுகிறது. புலம் பெயர்ந்து வருபவர்களில் வெகு சிலருக்கே தன் வாழ் நாட்டின் வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றை அறிய விரும்பும் ஆர்வம் மேலிடுகிறது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூர் கிழமேற்காக 45 கிமீ தூரம்; தென்வடலாக 25 கிமீ தூரம். ஆனாலும் 15 வருடங்களுக்கு மேல் சிங்கையில் வாழ்ந்தும் ஒரு இடத்தைச் சொல்லிக் கேட்டால் ‘அதெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதுக்கெல்லாம் எங்க நேரம்?’ என்று அலுத்துக்கொள்வோர் மத்தியில் இந்தக் குட்டித் தீவின் வரலாற்றின் தடங்களைத் தேடிச் செல்லும் அழகுநிலா தான் அறிந்ததைத் தான் அறிந்தபடியே வெளிப்படையாகக் கூறவேண்டும் என்ற குறுகுறுப்பையும் உடையவர். சொல்ல விழைவதைச் சிதறாமல் வாசகனுக்குக் கடத்திவிட வேண்டும் என்பதிலும் அக்கறையுடன் தெளிவாகவும் எளிமையாகவும் சொல்பவர்.
அவரது ‘சிறுகாட்டுச் சுனை’ நூலில் உள்ள கட்டுரைகளை வாசிப்பவருக்கும் அந்த ஆர்வத்தையும் குறுகுறுப்பையும் ஏற்றிவிடுகிறார். போலவே மற்ற மொழிகளில் உள்ள அன்றாடப் பயன்பாடுகளுக்கான சொற்கள், சொற்றொடர்களைக் கற்று தன் தேடலின்போது வேறு கலாச்சார மக்களைச் சந்திக்கையில் இயல்பாக ஒரு உரையாடலைத் தொடங்குகிறார். அவரவர் தாய் மொழியில் பேசுவதன் மூலம் – அது எவ்வளவு சிறிதே ஆனாலும் – அது ஒரு நெருக்கத்தைக் கொடுப்பது உண்மைதான். அவர்களும் இயல்பாக மனந்திறந்து செய்திகளைப் பரிமாறுகின்றனர். அப்படி இருந்தால்தானே கட்டுரைகளை வறட்சியின்றி வாசிக்கச் சுவையாக எழுத முடியும்?
அழகுநிலாவின் அவரது ‘மொழிவழிக் கனவு’ என்ற வாசிப்பனுபவ நூலில் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிய தனது கருத்துகளை எந்த தேன் தடவலும் இல்லாமல் சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்துகள் அந்தந்த படைப்பாளிகளுக்கு ஏற்புடையதாக இருந்ததா என்று கவலைப்படாமல் தன்னளவில் நேர்படவே சொல்லியிருக்கிறார். புனைவோ அபுனைவோ, ஒரு வாசகரை ஈர்க்க என்னவெல்லாம் குட்டிக்கரணம் போட்டாலும், ஒரு சில படைப்புகள் மட்டுமே படிக்கும் வாசகனுடன் எங்கோ ஓரிடத்தில் இயைந்து சிறிது தூரம் நான்கு காலடித் தடங்கள் பதிந்து பின்னர் ஒரு மாய நொடியில் இரண்டாக மட்டுமே செல்லும். அப்படி தனக்கான மாய நொடிகளைக் கொடுத்த படைப்புகளைத் தன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த எடுத்துக்கொண்ட ஒரு முயற்சியே ‘மொழிவழிக் கனவு’. ஒரு படைப்பாளிக்கு எழுதுவதும் வாசிப்பதும் மட்டுமல்லாமல் வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் நல்ல நூல்களைப் பிற வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியப்பணியும் உண்டு என்பதை உணர்ந்து இந்நூலைப் படைத்திருக்கிறார். இந்த நூலுக்கு 2021க்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசு கிடைத்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
மேலும் பள்ளிச் சிறுவர்களுக்காகச் சில பாடல்களும் எளிய படக்கதைகளும் எழுதியுள்ளார். நம் பொதுப்புத்திக்கு மாறாக, குழந்தைகளுக்கான படைப்புகளும் பெரியோர்களுக்கான புனைவு, அபுனவு போல அதிக உழைப்பைக் கோருபவையே. அவர்களுக்கென ஒரு பிரத்தியேக மொழியில் பேசினால் மட்டுமே அவர்களோடு கைகோர்க்க முடியும். அதிலும் தன் முத்திரையைப் பதித்து தன் பன்முகத்தன்மையை நிறுவியிருக்கிறார் அழகுநிலா.