லதாவை முதலில் அறிந்தது ‘சீனலட்சுமி’ சிறுகதைத் தொகுப்பின் வழியாகத்தான். தமிழ் இலக்கிய விமர்சகர்களின் பார்வையில் அந்தத் தொகுப்பே இதுவரை வந்த அவரது நூல்களில் பிரதானமானது என அறிந்தபோது அவரை அணுகிச் செல்ல அது எனக்கான நல்ல தொடக்கம் என்றே தோன்றியது.
லதா என சுருக்கமாக அறியப்படும் கனகலதா என்பவர் சிங்கப்பூர் எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், இலக்கியச் செயல்பாட்டாளர் எனப் பல முகங்களைக் கொண்டவர். இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள நீர்கொழும்பில் பிறந்த கனகலதா, 1982-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் குடியேறினார். நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் பின்னர் சிங்கப்பூரிலும் பயின்றார். தற்போது சிங்கப்பூரின் தேசிய தமிழ் நாளிதழான தமிழ் முரசின் இணை ஆசிரியராக உள்ளார். 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பூர் கவிதை விழா’வின் இயக்குநர்களில் ஒருவராகச் செயல்பட்டு, சிங்கப்பூரின் பன்மொழிக் கவிதைக்கான தளத்தையும் வாசிப்பையும் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
2004ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ எனும் நூலின் வழியாகத்தான் லதா எனும் பெயர் தமிழ் இலக்கியச் சூழலில் அறிமுகமானது. அதற்கு முன்பே ‘தீவெளி’ (2003) எனும் கவிதை நூலை சிங்கப்பூரில் வெளியிட்டிருந்தார். தனித்துவமான படிமங்களும் புதுமையான உவமைகளும் என வெளிப்பட்ட இத்தொகுப்பின் கவிதைகள் 2000ஆம் ஆண்டில் பொதுவாக எழுச்சிப் பெற்ற தமிழ்க் கவிதைச் சூழலில் கவனம் பெற்றன. குறிப்பாகப் பெண் கவிஞர்கள் தங்கள் உடல்களைக் புறத்தைக் கவிதைக்குள் படிமங்களாக்கிக்கொண்டிருந்த சூழலில் அடங்கிய குரலும் அசைவற்ற மொழியுமாக லதா அறிமுகமானார். மெல்ல மெல்ல அவ்வறிமுகம் விரிவானது.
லதாவின் கவிதைகள் கணையாழி, காலச்சுவடு, உயிர்நிழல், சரிநிகர் எனப் பல்வேறு சிற்றிதழ்களில் கவனம் பெறத் தொடங்கின. ஆங்கிலத்தில் இவரது கவிதைகள் மொழியாக்கம் கண்டன. Still Human, MRT: Poems on the Move மற்றும் காராங்குனி கவிதை; Moving Words 2011 எனும் சிங்கப்பூரின் இலக்கிய முன்னெடுப்புகளில் MRT விரைவு இரயிலில் இடம் பெற்றது. மேலும் 1995இல் Journeys: Words, Home and Nation எனும் பல்மொழி கவிதை தொகுப்பிலும், 2000இல் “Rhythms – Singaporean Millennial Anthology of Poetry” எனும் கவிதை தொகுப்பிலும் 2003ஆம் ஆண்டு இந்தியாவின் சாகித்திய அகாடாமியின் தற்காலப் பெண் எழுத்தாளர்களின் தமிழ் கவிதை தொகுப்பிலும் இடம் பெற்று லதாவைப் பரவலாக அறிமுகப்படுத்தின.
2016-இல் வெளிவந்த அவரது ‘யாருக்கும் இல்லாத பாலை’ லதாவைத் தமிழில் குறிப்பிடத்தக்க கவிஞராக அடையாளம் காட்டியது. லதாவின் கவிதைகள் சில ‘தமிழினி’ தொகுத்த ‘கொங்குதேர் வாழ்க்கை 2’ எனும் பெருந்தொகுப்பில் இடம் பெற்றன. மொத்த தமிழ் இலக்கியச் சூழலில் கவனம் பெற்ற கவிதைகளை மட்டுமே இணைக்கும் அத்தொகுப்பில் லதாவின் கவிதைகளும் இணைந்தது சிங்கப்பூர் கவிதைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதப்பட்டது. ‘யாருக்கும் இல்லாத பாலை’ தொகுப்பில் உள்ள கவிதைகளை எம்.ஏ.நுஃமான் ‘பொருள் மயக்கின் அழகியல் (Aesthetics of ambiguity)’ என்று அடையாளப்படுத்துகிறார். நேசத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் பயணிக்கும் கவிதைகளாக லதாவின் அத்தொகுப்பை அவர் வரையறை செய்ய முயல்கிறார். அதேபோல ஈழ கவிஞர் கருணாகரன், “லதா நீண்டகாலமாகச் சிங்கப்பூரில் வாழ்ந்தாலும் அவருடைய மனம் ஈழத்திலேயே, அதன் பாடுகளுக்குள்ளேயே சிக்கியுள்ளதை” இக்கவிதை தொகுப்பில் ஆங்காங்கு கொதிவிடும் ஈழ அழிப்பின் வலியை அடையாளம் கண்டு சொல்கிறார்.
2000க்குப் பின் உருவான நவீன கவிஞர்களில் முக்கியமானவராக அடையாளம் காணப்படும் லதாவின் சிறுகதைகள் 2008ல் ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்புக்காகச் சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றபோதுதான் பேசு பொருளானது. சிங்கப்பூர் போன்ற பெருநகரின் தினசரி வாழ்க்கையில் உள்ள அசாதாரண தருணங்களைப் பதிவு செய்த தொகுப்பு என இதனை வரையறை செய்யலாம். குறிப்பாகச் சிங்கப்பூரில் தமிழ்ப் பெண்களின் இருப்பைக் கலை நுட்பத்துடன் பேசிய முதன்மையான தொகுப்பாகவே விமர்சகர்கள் இதனை முன்வைக்கின்றனர். “எங்குமே குரல் உயர்த்தாமல் அதே சமயம் பெண்களின் பல்வேறு பாடுகளை, உறவுச் சிக்கல்களை நுட்பமான தொனியில் விவரிக்கிறார்” என எழுத்தாளர் சு. வேணுகோபால் இத்தொகுப்பு குறித்துக் கூறுவது கவனிக்கத்தக்கது. மேலும் ‘The Goddess in the Living Room’ என எபிகிராம் பதிப்பகம் இவரது சிறுகதைகளை ஆங்கில மொழியாக்கம் செய்து 2014இல் வெளியிட்டபோது சிங்கையில் பன்மொழி சூழலிலும் கவனம்பெற்றார் லதா.
பேசு பொருளால் மட்டுமின்றி, ஓர் கலைப்படைப்பாக லதா வெற்றியடைந்த தொகுப்பாகச் ‘சீனலட்சுமி’ சிறுகதைத் தொகுப்பைக் குறிப்பிடலாம். இத்தொகுப்பில் உள்ள மூன்று அம்சங்கள் லதாவின் சிறுகதைக்கான தனித்துவ அடையாளங்களாக உள்ளன. முதலாவது, வரலாற்று பார்வை. இந்தத் தொகுப்பில் ஆங்காங்கு வரலாற்றின் சிறிய சிதறலைக் கதைகளுக்குள் செருகி வைக்கிறார். ‘சிலந்தி’ சிறுகதையின் இறுதியில் வரும் போர் காட்சி, ‘தேக்காவில் ஒரு பாலம் இருந்தது’ கதையில் வரும் ஐ.என்.ஏ சம்பவங்கள் போன்றவை கதையில் துருத்தித் தெரியாமல் கதையுடன் கலந்து சென்றுள்ள குறிப்பிடத்தக்க வரலாற்றுத் தருணங்கள் எனலாம். இரண்டாவது, அசாதாரண தருணங்களில் நிகழும் கவித்துவ தரிசனங்கள். ‘நிர்வாணம்’ சிறுகதையில் தாயும் மகளும் தங்கள் நிர்வாணம் மூலமாக ஒருவரை ஒருவர் மீட்டுக்கொள்ளும் தருணமும், ‘இளவெயில்’ சிறுகதையில் குழந்தையில் பிரக்ஞையுடன் தொலைத்துவரும் இளம் தாயின் மனமும் அசாதாரண உணர்வுகளை ஏற்படுத்தக் கூடியவை. மூன்றாவது, சிறுகதையின் வழியாக லதா காட்ட விரும்பும் சிங்கையின் மாறுபட்ட நிலம். ‘அலிசா’, ‘வலி’ போன்ற கதைகளில் வரும் உபின் தீவும் ஓறரை கொண்ட வீட்டின் வாழ்க்கையும் நமக்குப் புதிய சிங்கப்பூரை அறிமுகம் செய்கின்றன.
சீனலட்சுமி சிறுகதை தொகுப்பு குறித்து எழுத்தாளர் பெருந்தேவி, “பொதுவாக புலம்பெயர்ந்தோரின் எழுத்துகளில் நினைவேக்கம், அடையாளம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கும். ஆனால் லதாவின் தற்போதைய எழுத்து, சிங்கப்பூரின் பல பண்பாட்டுச் சூழலில் கலந்துவிட்ட, உணர்வுபூர்வமாகப் பொருந்தி வாழ்கிற கதைகளாகப் பின்னனி வகிக்கின்றன. பல கதைகளிலும் வசனங்களிலும் வார்த்தை சிக்கனத்துடனும், கதையாடலுக்கு ஏற்ப பொருந்துகின்றன. அதேபோல நேர்கோட்டு கதையாக இல்லாமல், முன்னும் பின்னுமாக ஓடும் கதைசொல்லல் முறை அமைந்துள்ளது. சிங்கப்பூருக்கே உரித்தான கதைகளை எழுதி வருகிறார். பிற நாடுகளில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கு அந்நாடு எந்த அளவுக்குப் புனைவு சாத்தியங்களை அனுமதிக்கிறதோ, அதன் மூலம் தமிழ் நவீன இலக்கியத்திற்கான புதிய வளங்களைக் கொண்டு வருகிறது என்பதற்கு லதாவின் இத்தொகுப்பு ஒரு சான்றாகத் திகழ்கிறது,” எனக் குறிப்பிடுகிறார்.
பெருந்தேவியின் இந்தக் கூற்றை லதாவின் அண்மைய சிறுகதைகளில் நுழைவதற்கான வாசல் எனக்கொள்ளலாம். லதா எழுதுவது தமிழ்க் கதைகள்தான். ஒட்டுமொத்த தமிழ் இலக்கியச் சூழலில் பொருத்திப் பார்த்து மதிப்பிடத்தக்கவைதான். ஆனால் அவை தனிச் சிறப்பாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளக் காரணம் அவை சிங்கப்பூரில் மட்டுமே எழுதப்படக்கூடிய கதைகள் என்பதால்தான். அத்தனை நாட்டு மன்னர்கள் அமர்ந்திருக்கும் அவையில் ஓர் பூர்வகுடி மன்னன் தனது தொல் அடையாளங்களுடன் அதே கம்பீரத்தில் நிற்பதுபோலத்தான் லதாவின் ‘சீனலட்சுமி’ தொகுப்பு. அது எண்ணற்ற சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றுதான். ஆனால் தனித்த ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. அதன் வழியாக லதாவும் தன்னை தமிழ் இலக்கியச் சூழலில் ஆழமாக நிலை நிறுத்திக்கொண்டுள்ளார்.