அ. பாண்டியனின் இலக்கியப் பங்களிப்பைப் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், சமூகம் சார்ந்த கட்டுரைகள் என மூன்று முக்கியமான புலத்திலிருந்து அணுகலாம். அவரது புனைவுகள் வரலாற்றின் நுணுக்கமான இடைவெளிகளை நிரப்புவதாலும்; அ-புனைவுகள் கொண்டுள்ள சீரான தருக்கப்பார்வையாலும் வலுவான தனித்த இடங்களை நிறுவிக்கொண்டவை.
ஒரு குறுநாவல் சில சிறுகதைகதைகள் எழுதியுள்ள அ. பாண்டியனின் கட்டுரைகள் பலவும் மலேசிய சூழலில் விவாதங்களையும் உரையாடல்களையும் உருவாக்கியவை. ஒருவகையில் அ.பாண்டியனை மலேசிய இலக்கிய உலகில் அடையாளம் காட்டியவையும் கட்டுரைகள்தான். அக்கட்டுரைகளின் மீது மாற்று கருத்து உள்ளவர்கள் எளிதாக அவற்றைக் கடந்து செல்லவோ இடக்கையால் புறக்கணிக்கவோ முடியாததற்கு அவற்றில் இருக்கும் தெளிவான தருக்கப்பார்வையே முதன்மை காரணம். பொதுவாக, சமூகத்தைப் பாதிக்கின்ற விவாதங்களை ஒட்டி, உணர்ச்சிகரமான பார்வையை முன்வைத்து அவற்றின் பின்னணியில் தங்களுடைய கருத்துகளைச் சொல்லிச் செல்லும் கட்டுரைகளே மலேசியாவில் அதிகம் எழுதப்படுகின்றன. பாண்டியனின் கட்டுரைகள் இதற்கு நேர்மாறானவை. அவர் தன் கட்டுரைகளை உரையாடல் நோக்கில் தொடங்கி தான் எண்ணுகின்ற கருத்துகளைத் தெளிவான வரையறைகளுடன் நிறுவிச் செல்கிறார்.
அ. பாண்டியனைக் கட்டுரையாளர் எனும் அடையாளத்திலிருந்து சிந்தனையாளர் என எண்ண வைத்தது தமிழ்த் தேசியம் குறித்த அவரது பார்வைதான். இங்கு சிந்தனையாளர் என்பதை ஒரு கருத்தை ஒட்டிய பல்வேறு விவாதங்களைத் தனக்குள் எழுப்பி, அதில் தனது தனித்தச் சிந்தனையின் திரட்சியை முன் வைப்பவர் எனப் பொருள் கொள்ளலாம். ‘மலேசியாவில் தமிழ்த் தேசியம் தேவையா?’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த நீண்டக் கட்டுரையில் தமிழ் அறிவுலகில் இருக்கும் திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகிய இரண்டுக்குமான நெடிய வரலாற்றுப் பின்னணியை ஆராய்கிறார். அவற்றின் தேவைகளும் வரலாற்றையும் அளித்துவிட்டப்பின்னர் அவை காலப்போக்கில் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அடைந்த திரிபுகளையும் மாற்றங்களையும் பெரியார், அண்ணா, வை.கோ. சீமான் போன்றோரை முன்னிறுத்தி வரையறுக்கிறார். இறுதியில் மலேசியாவில் தமிழர்கள் அடைந்திருக்கும் அரசியல் சார்ந்த அதிகாரமும் அடையாளமும் இந்தியர் என்னும் வழித்தோன்றலின் வாயிலாகவே எனச் சுட்டிக்காட்டுகிறார். மலையாளம், தெலுங்கு, சீக்கியர், யாழ்ப்பாணத் தமிழர், தமிழ் முஸ்லிம் எனப் பல இனக்குழுக்கள் சேர்ந்துதான் மலேசிய இந்தியர்களின் அரசியல், சமூகம், பொருளியல் போன்றவை அடையாளமாக இயங்குகின்றன என்பதை உதாரணங்களுடன் நிறுவுகிறார். அத்துடன், திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் மலேசியாவில் சாதி குறித்த பொதுவெளி உரையாடல் குறைந்து நாகரீகமாக மறைமுகச் சுட்டல் இருப்பதையும் முன்வைக்கிறார். இவற்றினுடனே, தமிழ்த் தேசியம் எனும் கற்பிதம் மலேசியாவில் அடைந்திருக்கும் இடத்தையும் சுட்டுகிறார்.
தமிழ்த் தேசியம் என்னும் தமிழகத்தின் அரசியல் பேசு பொருளை மலேசியா போன்ற மாற்று வாழ்வியல் கொண்ட நிலத்தில் தனித்தச் சிந்தனை இன்றி பரப்புவதன் மூலம் அது தமிழகத்திலிருந்து இங்கு இறக்குமதியாகும் நுகர்வு பொருட்களின் தன்மையுடன் மலினமாக எதிரொலிப்பதைப் பிழந்து காண்பிக்கின்றார். இந்த விரிவானப் பார்வையை முன்வைத்தப் பிறகு, தமிழ்த் தேசியம் எனும் அடையாளம் மலேசியாவில் தமிழர்களுக்கு எவ்விதத்திலும் ஏற்புடையதாக அமையாது என்ற வாதத்தை முன்வைக்கிறார். மலேசிய அரசியல் சூழலில் நடைமுறை சாத்தியங்களை மையப்படுத்துவதோடு, தமிழர் என்ற அடையாளத்தைக் குறுக்கிக் கொண்டு நிகழ்த்தப்படும் அரசியல் அபத்தத்தையும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாகத் தமிழின் தொன்மை, சிறப்பு, தமிழர்கள் அடைந்து கொண்டிருக்கும் இழிநிலை ஆகியவை எனத் தருக்கத்தால் விளக்க முடியாத மிகு உணர்ச்சி சார்ந்த வாதங்களுக்கு இடங்கொடாமல் சீராகக் கட்டுரையை அமைத்திருக்கிறார். ஆனால், மிகு உணர்ச்சிகள் அல்லது ரொமான்டிசப்படுத்துதல் எனக் கூறி மொழிப்பற்று முதலிய சமூகத்தின் குரல்களை முழுமையாக நிராகரிக்க இயலாது என்பதையும் அ. பாண்டியனின் கட்டுரைகளின் வாயிலாக அறிய முடிகிறது.
மலேசியாவில் ஆங்காங்கு தமிழ்த் தேசியம் பேசப்பட்ட, பரப்பப்பட்டபோது எழுதப்பட்ட கட்டுரை இது. எனவே அதற்கான எதிர்வினைகளையும் இக்கட்டுரை எளிதாகச் சென்று அடைந்தது. கட்டுரை மொழியில் இருந்த சமநிலையான உணர்வும் அறிவார்ந்த முன்வைப்பும் இவற்றுக்குப் பின்னால் இருந்த கடும் உழைப்பையும் கோஷ எதிர்வினைகளை மட்டுமே சம்பாதித்துக் கொண்டன.
அ. பாண்டியனை மொத்தத் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்திய கட்டுரையாக ‘தை எனும் பொய்’யைக் குறிப்பிடலாம். இக்கட்டுரையில், தமிழர்கள் வரலாற்று நோக்கில் பொங்கலையும் சித்திரைத் திருநாளையும் வெவ்வேறு முறையுடன் தொடர்ந்து கொண்டாடியதை முன்னிலைப்படுத்துகிறார். அத்துடன் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனும் கருத்தாக்கத்தை நிறுவும் வகையில் சொல்லப்பட்டுவரும் வாதங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறார். உதாரணமாக 1921-ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் ஐநூறு தமிழறிஞர்களுடன் விவாதித்து மறைமலையடிகள் பொங்கல் பண்டிகையைத் தமிழ்ப்புத்தாண்டு என்று முன்மொழிந்தார். 1935-ஆம் ஆண்டில் நடந்த மாநாட்டில் மறைமலையடிகள், திரு.வி.க போன்ற பெரும் தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு என்னும் முடிவை நிலைநிறுத்தினர் போன்ற கற்பனையான வரலாற்றுக் குறிப்புகளில் உள்ள அரசியல் நிலைகளை முழுமையான ஆய்வில் கட்டவிழ்கிறார். அரசியல், சமூக அடையாளம் ஆகிய தளங்களில் மட்டுமே நிலைக்கொள்ளும் இம்மாதிரியான விவாதங்களைக் கேள்விக்குட்படுத்தி அவற்றுக்குப் பின்னான போலிப்பாவனைகளைச் சுட்டிக்காட்டுகிறார். கட்டுரையின் தொடக்கத்திலே, எது உண்மையான தமிழ்ப்புத்தாண்டு என்ற விவாதத்திற்குச் செல்லாமல் அவற்றுக்குப் பின்னால் இயங்கும் அரசியல் மட்டுமே சுட்டிக்காட்டுகிறார். இந்தக் கட்டுரையில் வரலாற்று நோக்கில் தைப்பொங்கல், சித்திரைத்திருநாள் ஆகிய இரண்டுக்குமான வேறுபாடுகளைச் சுட்டி அவற்றைக் கொண்டாடுவதில் அமைந்திருக்கும் மனத்தடைகளை அடையாளப்படுத்தித் தீர்க்கமான பார்வையை வழங்குகிறார்.
மொழி, இனம், மதம் போன்ற சார்பு நிலைகள் இல்லாத ஆளுமைகளால் மட்டுமே மேற்கண்ட கட்டுரைககளைச் சமநிலையுடன் எழுத முடியும் எனத் தமிழ்ச் சூழலில் உள்ள அறிவார்ந்த வாசகர்கள் மிக விரைவிலேயே அறிந்தனர். அப்படியான வாசகர்கள் மத்தியில் அ. பாண்டியனின் சிந்தனைகள் கவனம் பெறத் தொடங்கின. திராவிடக் கட்சியில் பிடிப்பு கொண்ட அவர் தந்தை வந்த வழித்தடத்தில் இருந்து அ. பாண்டியனின் தனிப் பாதைகள் உருவாகி வேர்விட்டன.
அ. பாண்டியன் ஓர் ஆசிரியர். எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் அரசாங்கத்தின் அல்லது அதிகாரத்தின் கீழ் இயங்கும்போது விரித்து வைக்க வேண்டிய மௌனங்களை அவர் தொடர்ந்து தகர்த்தபடி வருகிறார். குறிப்பாக, மலேசியாவில் இயங்கும் தமிழ்ப்பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆகிய இரண்டு பாடங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் பயிற்றுவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘டி.எல்.பி’ எனும் இருமொழிக்கொள்கை திட்டம் குறித்த அவரது கட்டுரையும் முக்கியமானது. ஆங்கிலம், அறிவு மொழியாகக் கருதப்படும் சூழலில் அதனால் ஏற்படக்கூடிய நடைமுறை பலன்களுக்கு அப்பால் தமிழ்ப்பள்ளியில் பையப்பயிலும் மாணவர்களுக்கு அது அளிக்கக்கூடிய தாக்கத்தையும் இக்கட்டுரையில் முன்வைக்கிறார். ஆங்கிலம் வழியாகக் கற்பதால் ஏற்படும் நடைமுறை பலன்கள், தமிழ் மொழியில் பயில வேண்டிய தரப்பு கையிலெடுத்துக் கொள்ளும் தமிழ்த் தொன்மை, சிறப்பு, அதன் அறிவியல் தன்மை என இரண்டு தரப்புக்கான இடைவெளியில் தொடக்கக்கல்வி தாய்மொழியில் அமைவது எந்த வகையிலும் மாணவர்களின் அறிவு வளர்ச்சியைத் தடை செய்யாது என்கிற பார்வையை முன்வைக்கிறார். அவற்றுடன் மலேசியாவில் தமிழ்க்கல்வியின் மீது பெற்றோர்கள் கொண்டிருக்க வேண்டிய நம்பிக்கையும் வலியுறுத்திக் கட்டுரையை நிறைவு செய்கிறார்.
தரவுகள், கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றை நிறுவுவதன் வாயிலாக ஏற்படும் விவாதம் நிச்சயமாக ஏதேனும் சார்பொன்றைப் பற்றிக்கொண்டு ஒரு சாலை வழியில் பயணித்து நிறைவுற வேண்டியிருக்கிறது. பாண்டியனின் கட்டுரைகள், வரலாற்று நோக்கிலான ஆய்வைகளையும் தரவுகளையும் முதன்மைச் சிந்தனையாளர்களின் அடைவுகளையும் பற்றிக்கொண்டு பல்வேறு பாதைகளில் பயணித்துத் தன் இலக்கை அடைகிறது. கருத்துகளை நிறுவுவதை நெடுஞ்சாலை பயணமெனக் கொண்டால் விவாதங்களை உருவாக்கிச் செல்லும் கட்டுரைகளை மலைப்பாதை பயணம் என உவமை சொல்லலாம்.
***
பாண்டியனின் புனைவுலகம் மலேசியாவின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றான பல்லினச் சூழலையும் இங்கு உருவாகி வந்திருக்கும் சமூக வரலாற்றையும் பின்னணியாகக் கொண்டவை. அதிலும் குறிப்பாக, அனைவரும் முன்னரே அறிந்த பாடப்புத்தக வரலாற்றிலிருந்து விலகி அறியப்படாத வரலாற்றுத் தருணங்களைத் தம்முடைய புனைவுகளுக்கான வலுவான பின்னணியாக உருவகிக்கிறார். பாண்டியனின் ‘ரிங்கிட்’ குறுநாவல் மலேசியா சுதந்திரமடைந்து 10 ஆண்டுகள் வரையில் புழக்கத்திலிருந்த டாலர் நாணயத்திற்குப் பதிலாக மலேசிய நாணயமான ரிங்கிட் கொண்டு வரப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட நாணய மதிப்பிழப்பைக் கண்டித்து மேற்கொள்ளப்பட்ட கடையடைப்பு (ஹர்த்தால்) போராட்டம் வன்முறையாக மாறியதன் பின்னணியைப் பேசுகிறது. அறியப்படாத வரலாறு புனைவு உருவாக்கத்திற்குச் சுவாரசியமான பின்னணியைத் தந்தாலும் அந்த வரலாற்றை எழுதிச்செல்வது அதன் முதன்மை நோக்கமாக இருக்க முடியாது. அந்த வரலாற்றுத் தருணத்தின் அறியப்படாத நுண் தருணங்களைக் காட்டுவதோடு அந்தக் காலக்கட்டத்தில் மனித மனம் கொள்ள சாத்தியமான ஊடாட்டங்களை முன்வைப்பதே புனைவின் வெற்றியாகக் கருத முடியும். ரிங்கிட் நாவல் சீனர்கள் பெரும்பான்மையாக அங்கம் வகித்த தொழிலாளர் கட்சி போராட்டம் மெல்ல இன அடையாளமொன்றில் சிக்கி வன்முறைக்கு நகர்ந்த தருணங்களை மீட்டிப் பார்க்கிறது. அத்துடன் இன்றைய மலேசியச் சூழல் அத்தருணத்தை மறந்திருந்தாலும் உள்ளூர அச்சம்பவம் நிகழ்ந்ததற்கான சாத்தியங்களை முற்றிலும் இழந்திருக்கவில்லை என்பதையும் காட்டுகிறது.
அ.பாண்டியனின் சிறுகதைகளை அவரது குறுநாவலுக்கு முன் – பின் எனத் தாராளமாகப் பிரிக்கலாம். குறுநாவலுக்கு முன் எழுதியவைக் குறைவான சிறுகதைகள்தான். ஒப்பீட்டளவில் இலக்கிய மதிப்பு குறைவானவை. கட்டுரையாளராகத் தன்னை முன்வைக்கும் அவரது குறுநாவல் அது கொண்டுள்ள மொழியால் எழுந்த விமர்சனங்களுக்குப் பின்பாக அ.பாண்டியன் தனக்கான புனைவு மொழியைக் கண்டடைகிறார். இக்கட்டுரையில் அவர் குறுநாவலுக்குப் பின்பாகச் சிறுகதைகளையே கவனத்தில் கொள்கிறேன்.
பாண்டியனின் ‘பிளாச்சான்’ எனும் சிறுகதை மலேசியாவில் 1969இல் மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் நிகழ்ந்த இனக்கலவரத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை. கம்பத்தில் பிளாச்சான் எனப்படும் மலாய் மக்களின் தொடுகறி வகையொன்றை விற்கும் இளம்பெண்ணான அடிபாவைக் காதலிக்கின்றான் தமிழறிந்த சீன இளைஞன் லீ சாய் சாய். கதைசொல்லியின் நண்பனான லீ சாய் அவளைக் காதலிப்பதாகச் சொல்வது உள்ளூர அவனுள் எரிச்சலொன்றைத் தோற்றுவிக்கின்றது. கலவரம் தொடங்கியதால் வெளிநடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்படுகிறது. நகரத்தில் அப்பாவி மக்களைக் கொன்று போட்ட செய்தி கம்பத்திலும் பரவுகிறது. அப்படியிருக்க அவள் இனக்கலவரத்தின்போது யாரோ ஒருவரால் அடித்துக் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கின்றாள் என்ற செய்தி அனைவரையும் அச்சமூட்டுகிறது. இந்தப் பின்னணியில் அவளைக் கண்டதாகச் சொல்லி மனப்பிறழ்வுக்கு உள்ளாகும் லீ சாய் கதைச்சொல்லியின் வீட்டில் பதுங்குகின்றான். கதையின் இறுதியில் அடிபாவின் பாத்தேக் கைலியையும் சட்டையையும் எடுத்துக் காட்டி அவள் குளித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறான். அந்தச் சீன இளைஞனின் முதிராக் காதல் ஒரு கொலைக்குக் காரணமாகியச் சம்பவத்துடன் கதை முடிகிறது. இந்தக் கதையிலே அதிகார வெறி, திரளாகச் சேர்வதால் உண்டாகும் தினவினால் ஏற்படக்கூடிய கொலைச்சம்பவத்தைப் பற்றி வெளிப்படையாக மக்கள் பேசும்போது அதற்கு மாறாக, முதிராக்காதல் உணர்வுக்கூட வெறியாக மாறும் அக இருள் தருணமொன்றை இச்சிறுகதை பேசுகிறது. இப்படியாகக் கதைமாந்தர்களின் அக ஊடாட்டங்களை முன்வைப்பதாலே அவரின் கதையின் வரலாற்றுப் பின்னணி வலுவாக அமைகிறது.
ஆங்கிலேயர்களின் காலனித்துவப் பகுதியாக இருந்த பினாங்கின் சூழலையும் பூர்வமக்களையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட கதை ‘வெள்ளிக்காசு’. அதைப் போல பினாங்கு தீவை உருவாக்கிய முன்னோடியான பிரான்சிஸ் லைட்டின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத மனைவியாக அவருடைய சொத்திலும் பிறவற்றிலும் நேரடி உரிமையற்று அந்தரங்கச் சிறையில் வாழும் சியாம் பெண்ணின் மனப்போராட்டத்தையும் மடாகாஸ்காரிலிருந்து அடிமையாக அழைத்து வரப்பட்ட ஜோனின் மன உணர்வையும் வெளிப்படுத்தும் கதையாக ‘அடிமை’ கதை அமைகின்றது.
பாண்டியனின் கதைகளில் கதைமாந்தர்களின் மன உணர்வு நேரடியாக உரையாடலில் அல்லது கதைச்சித்தரிப்பில் அமைவது மிகவும் குறைவெனச் சொல்லலாம். அவ்வாறு நேரடியாகச் சொல்லப்படுகின்றவற்றைக் கொண்டு வாசகனுக்கு இன்னொரு அகப்போராட்டத்தையே அவருடைய கதைகள் காட்டுகின்றன. ‘கூத்து’ எனும் சிறுகதை, சீனர்கள் ஆண்டு தோறும் முன்னோர்களுக்குப் படையலிட்டுச் சீனக்கூத்து ஆடும் முன்னோர் விழாவொன்றைப் பின்னணியாகக் கொண்டது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான மலேசியத் தமிழ் இலக்கியத்தில் இது போன்ற சீனர்களின் பண்பாட்டு அடையாளங்களை முன்வைக்கும் முதல் சிறுகதை என்றே இதை சொல்லலாம். காவல்துறை சம்மன்களைக் குறுக்கு வழியில் பணம் செலுத்திச் சரிப்படுத்துவதாகக் கூறி ஏமாற்றிய டேவிட் எனும் சீனரைத் தேடி சேகரும் கதைசொல்லியும் சீனக்கூத்து நிகழுமிடத்துக்குச் செல்கின்றனர். அந்த இடத்தின் சித்தரிப்பு, கூத்து நிகழ்ச்சியின் சித்தரிப்பு எனத் தெளிவான காட்சி சித்தரிப்புடன் நகர்கின்ற கதையில் பணம் திரும்ப தர மறுத்து அடாவடியாக நடந்து கொள்கின்ற சீனனை அவனுடைய மனைவி அறைகிறாள். அந்த அறையை வாங்கி அமைதியாக டேவிட் இருப்பதைப் பார்த்துப் பணம் பெற வந்தவர்கள் அமைதியாகத் திரும்புவதாகக் கதை முடிகிறது. விண்ணிலிருந்து வரும் முன்னோர்களுக்குக் காகிதப்பணம் படைக்கப்பட்டு எரிக்கப்படும் இடத்தில் அந்தச் சீனப் பெண்ணிலிருந்து வெளிப்பட்டது முன்னோரின் வடிவம் எனக் கதை உருவகிக்கும் அவ்விடத்துடன் கதை முடிகிறது. கதையின் ஒட்டுமொத்தச் சூழலுடன் பொருத்திப் பார்க்குமிடத்திலே இக்கதை கொள்ளும் பொருள் வேறொரு தளத்தை நோக்கியதாக அமைகின்றது.
***
அ. பாண்டியனின் இலக்கியக் கட்டுரைகளை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது மலாய் புனைவுலகம் குறித்து அவர் செய்த விரிவான அறிமுகம். அடுத்தது இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்.
மலேசியாவில் இயங்கி வரும் இன்னொரு புனைவுலகம் என்ற வகையில் மலாய் மொழியின் முக்கியமான இலக்கிய ஆக்கங்களையும் படைப்பாளர்களையும் அறிமுகம் செய்த முன்னோடி என்றே அ. பாண்டியனைக் குறிப்பிட வேண்டும். வல்லினத்தில் அவர் எழுதிய ‘அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை’ என்ற கட்டுரைத் தொடர் மிக முக்கியமானது. பல்லினச் சூழலில் வாழ்ந்தாலும் மலேசியாவில் பிற இன மக்களின் இலக்கியம் சார்ந்த புரிதல் என்பது ஒவ்வொரு இனத்தவருக்கும் மிகக்குறைவே. அதுவும் தேசிய இலக்கியமாகக் கருதப்படும் மலாய் இலக்கியத்தைப் பாட நூல்களாகக் கருதும் சூழலே இருக்கிறது. அதைத் தாண்டி மலாய் இலக்கியத்தின் முக்கியமான ஆக்கங்களையும் படைப்பாளர்களையும் இக்கட்டுரைத் தொடர் விமர்சன நோக்கில் அணுகுகிறது.
மலேசியாவில் இயங்கும் தமிழிலக்கியச் சூழலில் விமர்சனங்கள் என்று வரும்போது உள்ளொடுங்கி கொள்ளும் சூழலே காணப்படுகிறது. சிறுபான்மை மக்களின் இலக்கியம், மலேசிய நிலத்திற்கான தனித்த இலக்கியம் என்ற குரல்களின் வாயிலாக இலக்கிய விமர்சனத்தில் சலுகைகளை எதிர்பார்க்கும் சூழலைக் காணலாம். பாண்டியனின் இலக்கிய விமர்சன அளவுக்கோல்கள் அம்மாதிரியான குறுகிய சலுகைகளைப் புறந்தள்ளி மலேசியத் தமிழ் இலக்கியத்தை அல்லது இலக்கியத்தை அதன் ஆதாரமான கேள்விகளின் பெறுமதியுடன் அணுகுகின்றது. கோட்பாடுகள், திட்டவட்டமான வரையறையற்று ஒவ்வொரு இலக்கியமும் முன்வைக்கும் உள்ளீடுகளைச் சீரான தருக்கப்பார்வையுடன் ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையையும் கலைப் பெறுமானத்தையும் தன்னுடைய கட்டுரைகளில் நிறுவிச் செல்கிறார்.
2000க்குப் பிறகான மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் தன்னுடைய கூர்மையான தருக்கப் பார்வையால் இலக்கியச் சமூக விமர்சனங்கள், புனைவுலகம் எனத் தருக்கத்தை முதன்மைப்படுத்துபவைப் பாண்டியனின் படைப்புலகம். மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் இருந்து வரும் வழமையான உணர்ச்சிக்கரத் தீவிரத்தை ஒதுக்கி அதன் உண்மைத் தன்மையை நாடிப்பிடித்துப் பார்க்கும் தனித்துவமான போக்குடையதாகவே பாண்டியனின் படைப்புலகம் அமைந்திருக்கிறது.