ஓயாத பணிகளால் உருவாகும் பண்பாட்டு பாதை

அருண் மகிழ்நன்

சிங்கப்பூரில் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அரசாங்கம் அளிக்கும் ஆதரவை மிகச் சரியான முறையில் பயன்படுத்தி, பெருங்காரியங்களைச் செய்துவருபவர் பேராசிரியர் அருண் மகிழ்நன். வளங்கள் எங்கும் இருக்கலாம். அதனை நிறைவாக ஒழுங்கமைக்க அறிவாற்றல் அவசியமாக உள்ளது. அவ்வகையில், தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாடுகளில் தனியாத ஆர்வம் கொண்ட இவரின் திட்டங்கள், சிங்கப்பூர் தமிழ்ச்சூழலில் நீண்ட காலம் நன்மை செய்யக்கூடியவையாக அமைந்துள்ளன.

அருண் மகிழ்நன் பழக இனிமையானவர். தெளிவான உச்சரிப்பில் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் பாங்கு அவர் மீது மரியாதையை உருவாக்கும். விஷயங்களை ஆய்ந்து சொல்லும் தன்மையும் எதிராளி எந்த வயதினராக, எவ்வளவு குறைந்த அனுபவம் பெற்றவராக இருந்தாலும் அவரது கருத்துக்கு மதிப்புக்கொடுத்து கேட்கும் குணம் அவர் மீது தனி மதிப்பை ஏற்படுத்தும். ஒரு பணியை முன்னெடுத்தால் அதற்குத் தகுந்தவர்களை அதில் ஈடுபடுத்தி அப்பணியை முடிக்கும் வரையில் ஓயாத திடசித்தம் கொண்டவர். அனைத்துலக அளவிலான பெரிய நிகழ்வாக இருந்தாலும், சிறியதொரு உரையாக இருந்தாலும் எத்தகைய நிகழ்வும் திட்டமும் உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்பதில் கடுமையான உறுதிப்பாட்டுடன் இருப்பவர். இப்படி அவர் செய்திருப்பவை மிகப் பெரும் பணிகள். அவையே இவரை சிங்கப்பூரில் சமூகத்தின் மதிப்புக்குரிய சமூகத் தலைவர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.

சுதந்திர சிங்கப்பூரோடு வளர்ந்து, வரலாற்றில் பங்காற்றியவராக, இந்நாட்டின் வாழ்வையும் வரலாற்றையும் அனுபவரீதியாக அறிந்து உணர்ந்திருப்பவராகவே அருண் மகிழ்நனைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஓயாத இயக்கமே அவரை வெளிப்படையான பேச்சுக்குரியவராகவும், சமூகநலனுக்கு ஒவ்வாத விஷயங்களை சகித்துக்கொள்ளாதவராகவும் வடிவமைத்துள்ளது.

சிங்கப்பூரில் பொதுக் கொள்கை சார்ந்த யோசனைகளை ஆய்வு செய்து உருவாக்கும் அமைப்பான கொள்கை ஆய்வுக் கழகத்தின் (Institute of Policy Studies) துணை இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றிய அருண் மகிழ்நன், தற்போது சிறப்பு ஆராய்ச்சி ஆலோசகராக இருக்கிறார். இங்கு வழக்கறிஞரும் பொதுத் தூதருமான பேராசிரியர டா கோவின் தலைமைத்துவத்தின் கீழ், பல்வேறு அறிஞர்களுடன் ஏறக்குறைய 30 ஆண்டுகளாகப் பணிபுரிவதில் பெற்ற உயர்மட்ட அறிமுகங்களும் அனைத்துலக, தேசிய அளவிலான நிகழ்வுகள் சார்ந்த அனுபவங்களும் தமிழ் சார்ந்த நிகழ்வுகளை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல அவருக்கு உதவுகிறது.

சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வீ கிம் வீ தகவல் தொடர்பு பள்ளியில் (Wee Kim Wee School of Communication and Information) சார்புநிலைப் பேராசிரியராகவும் அரசாங்கத்திலும் தனியார் நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு பதவிகளும், பொறுப்புகளும் வகித்து, குழுக்களில் பங்காற்றி, கலை, இலக்கியம், பொது விவகாரங்கள், ஊடகத் துறை போன்றவற்றில் நிபுணத்துவப் பங்களிப்பை வழங்கி வருகிறார்.
சிங்கப்பூரில் ஊடகங்கள், சமூகப் பிரச்சினைகள், கலைகள் பற்றிய நூல்களின் ஆசிரியராகவும் இணையாசிரியராகவும் இருந்துள்ளார். தேசிய அளவிலான உயர் பதவிகளிலும் குழுக்களிலும் இடம்பெற்றிருப்பதால், தனது அக்கறைகளை இவரால் செம்மையுடன் செயல்படுத்த முடிகிறது.

சிங்கப்பூர் கலைத் துறையில் நீண்ட கால ஈடுபாடு காட்டி வரும் இவரது கலைத்துறை ஈடுபாடு, ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூரின் மத்திய தயாரிப்புப் பிரிவில் மூத்த தயாரிப்பாளராகப் பணிபுரிந்தபோது தொடங்கியது. நடப்புவிவகார நிகழ்ச்சிகளுடன், கலை தொடர்பான நிகழ்ச்சிகள், ஆவணப்படங்களின் தயாரிப்புகளில் இவர் ஈடுபட்டார். இப்பணி, சிங்கப்பூரின் முன்னோடி நாடகக் கலைஞரான கோ பாவ் கூன் போன்றவர்களுடனான நட்பை இவருக்குப் பெற்றுத்தந்தது. இது பின்னாளில் சிங்கப்பூரில் தரமான கலைகளுக்கான தேவையையும் இடத்தையும் பெறுவதற்கான முயற்சிகளில் பங்காற்றுவதற்கான உந்துதலை இத்தகைய நட்புகள் வளர்த்தன.

சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் உருவாக்க ஆலோசனைக் குழுவிலும் பின்னர் தேசிய கலைகள் மன்றத்தில் ஆலோசகர் குழுவிலும் இடம்பெற்று தேசிய கலை, இலக்கிய முயற்சிகளில் முக்கிய பங்காற்றி வரும் அருண் மகிழ்நன், சிங்கப்பூர் அனைத்துலகக் கலை விழா உலகத் தரத்தில் அமைய அடித்தளம் இட்டவர்களில் முக்கியமானவர்.

சிங்கப்பூர் மொபில் எண்ணெய் நிறுவனத்தின் பொது விவகாரக் குழுவின் மேலாளராக 1979ல் சேர்ந்த திரு அருண் மகிழ்நன், அங்கு பணிபுரிந்த காலத்தில், சிங்கப்பூர் கலைத்துறையில் தனது ஈடுபாட்டை ஆழப்படுத்தினார்.

1982 சிங்கப்பூர் கலை விழாவிற்கு மொபில் நிறுவனம் $500,000 நிதியுதவி வழங்கச் செய்தவர் இவர். நிதியுதவியுடன், விழாவுக்கு நிபுணத்துவ வழிகாட்டலுக்கும் ஏற்பாடு செய்தார். அடிலெய்ட் கலை விழாவின் கலை இயக்குநரான ஆண்டனி ஸ்டீல், சிங்கப்பூர் கலை விழாவின் முதல் கலை இயக்குநராக விழாவின் நிகழ்ச்சிகள் புதிய மதிப்பைப் பெற்றன.

தொடர்ந்து, தேசிய கலை விழாவின் வழிகாட்டல் குழு உறுப்பினராகவும், விழாவின் ஆலோசகராகவும் தலைவராகவும் 1980 முதல் 2006 வரை பல்வேறு காலகட்டங்களில் அருண் மகிழ்நன் பங்களித்துள்ளார்.

1982-ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் முதல் இந்திய கலாசார விழாவை நடத்துவதற்கான முயற்சிக்குத் தலைமை தாங்கினார். அந்த விழாவின் நோக்கமும் தாக்கமும் அதற்கு முன்னர் இல்லாதது. இன்றுவரையில் குறிப்பிட்டுச் சொல்லும் சிறப்பான கலை விழாவாக அது விளங்குகிறது.

‘இன்டர்கல்சுரல் தியேட்டர் இன்ஸ்டிடியூட்’ (Intercultural Theatre Institute), சிங்கப்பூர் அனைத்துலகக் கலை விழா ஆகியவற்றின் தலைவராகவும் சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், நன்யாங் அகடமி ஆஃப் ஆர்ட்ஸ் தேசிய நூலக வாரியம், புத்தக மேம்பாட்டு மன்றம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், இந்திய மரபுடைமை மையம் உட்பட பல்வேறு கலை அமைப்புகளின் குழு உறுப்பினர் அல்லது ஆலோசகராக சிங்கப்பூரில் கலைத் துறைக்கு இவர் பல ஆண்டுகளாக வழக்கி வரும் அறிவுசார் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 2000-ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் முதல் தமிழ் இணைய அனைத்துலக மாநாட்டை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றினார். இது தமிழ் இணைய வளர்ச்சியை வழிநடத்தும் உலகளாவிய அமைப்பான உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தை (உத்தமம்) உருவாக்க வழிவகுத்தது. 2011-ஆம் ஆண்டில், அவர் உறுப்பினராக இல்லாத சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்திற்கு வழிகாட்டி, முதல் உலக புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த உதவினார். சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்குப் பல்வேறு நிலைகளில் ஆலோசகராக இருந்துள்ளார்.

தமிழர்களுக்கிடையே தங்கள் பண்பாட்டைப்பற்றிய புரிதலை மேலும் வலுப்படுத்துவதையும் சிங்கப்பூரிலுள்ள மற்ற பண்பாடுகளுடன் பாலம் அமைப்பதையும் இலக்காகக்கொண்டு 2019-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை தொடங்கினார். இதில் உயர் கல்வி, உயர் பதவி, துறைசார்ந்த நீண்டகால அனுபவம் பெற்றவர்களை ஒன்றிணைத்து கடந்த மூன்றாண்டு காலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். உயர்மட்டத்திலிருப்பவர்களையும் இளையர்களையும் தமிழ் மொழி, சமூக செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது, பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் சுவா சூ போங், முனைவர் டோர்சன், பேராசிரியர் குவாக் கியான் வூன், பேராசிரியர் அஸ்கோ பார்பொலா போன்ற அறிஞர்களின் ஆங்கில உரைகள் மூலம், தமிழ்- தமிழர் சார்ந்த தகவல்களை மற்ற மொழியினருக்கும் ஆங்கிலத்தில் புழங்கும் தமிழர்களுக்கும் எடுத்துச் செல்வது என சிங்கப்பூரில் தமிழரது சிந்தனையையும் தமிழர் குறித்த மனப்போக்கையும் உயர்த்தும் பணியை முன்னெடுத்து வருகிறார்.

சிங்கப்பூரில் ஊடகம், சமூகப் பிரச்சினைகள், கலைகள் பற்றிய பல நூல்களை அருண் மகிழ்நன் வெளியிட்டுள்ளார். 2015-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் பொன்விழாவை முன்னிட்டு, கொள்கை ஆய்வியல் கழகம் வெளியிட்ட சிங்கப்பூரை விவரிக்கும் 50 நூல்களின் அசிரியர் குழுத் தலைவராக இருந்தார். ஆட்சி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உணவு, விளையாட்டு, இலக்கியம் எனப் பரந்த அளவிலான தலைப்புகளில் இந்நூல்கள் வெளிவந்தன.

2019-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் ஒரு பிரிட்டிஷ் காலனியாக நிறுவப்பட்டதன் 200-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூர் இந்திய மரபுடைமை நிலையம் வெளியிட்ட, ‘Sojourners to Settlers – Tamils in Southeast Asia and Singapore’ எனும் நூலின் இணை ஆசிரியராகப் பங்களித்துள்ளார். தென்கிழக்காசியாவில் தமிழர் வரலாறு, வாழ்வு பற்றி ஆய்வு அடிப்படையில் உலகெங்கும் வாழும் துறைசார்ந்த நிபுணர்களாலும் சிங்கப்பூர் கல்வியாளர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களாலும் எழுதப்பட்டுள்ள முதல் தொகுப்பு நூல் இது. இரு பாகங்களாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட (2019) நூலிலிருந்து சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் தேவை, ஆர்வம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு 18 இயல்களைத் தேர்ந்தெடுத்து, மொழிபெயர்த்து, செம்மைசெய்து, தொகுத்து ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்’ எனும் தமிழ்ப் பதிப்பு 2021 மே மாதம் வெளியிடப்பட்டது.

அருண் மகிழ்நனின் பணிகளில் முதன்மையானது, சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்றுக் கருவூலத்தின் அடிப்படைகளை ஆவணப்படுத்தும் முயற்சியாகும். தமிழ் இலக்கியத்துடன், நாடகம், இசை, நடனம் முதலிய நுண்கலைகளின் வரலாற்றுபூர்வத்தை மின்னிலக்கமாகியது சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுக்கு அவர் செய்திருக்கும் முக்கிய பங்களிப்பு.

தற்போது, சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் பணியைத் அருண் மகிழ்நன் துவக்கியுள்ளார். சிங்கப்பூரில் தமிழர் வாழ்க்கையின் ஒட்டுமொத்தப் பதிவை உருவாக்கும் பெருந்திட்டம் அது. சிங்கப்பூர்த் தமிழர் வாழ்வின் பல்வேறு அம்சங்களைத் தேடித் திரட்டி, நித்தம் வாழும் ஒரு கலைக்களஞ்சியத்தை இணையவெளியில் தயாரித்து வருகிறார்.

அருண் மகிழ்நனின் தமிழ் விக்கி பக்கம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...