விஸ்வநாதன்: கலைக்குள் உழலும் மண்புழு

விஸ்வநாதன் என்ற பெயர் கலையுலகில் அறியப்பட்டது மிகக்குறைவுதான். எழுத்துலகில் அதனிலும் அரிது. மேடையிலும் தொலைக்காட்சியிலும் ஏராளமான நாடகங்களில் நடித்துள்ளவர். மேடை நாடகங்களில் இயக்குனராகவும் துணை இயக்குனராகவும் பங்காற்றியவர். ஆனால் எதிலும் எப்போதும் ஒதுங்கி நிற்பவர். தன்னை முனைப்புடன் முன்வைக்கத் தெரியாதவர். முன்வைப்பதை ஒட்டிய அரசியலையும் அறியாதவர் எனலாம்.

விஸ்வநாதனை முதலில் ஓர் ஆசிரியராகவே அறிவேன். இவருடன் பணியாற்றிய சக ஆசிரியர்கள், இவர் மாணவர்களுக்குக் கற்பிக்கும் விதமே தனி எனக் கூறுவதைக் கேட்டுள்ளேன். ஆங்கிலக்கவிதைகள், இசைப்பாடல்களை உடனுக்குடன் மொழிபெயர்த்துப் பாடம் நடத்துவார். சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழலில் பாடம் படித்திட மாணவர்கள் விழைவது இயல்புதானே. ஒருமுறை பாடத்துணைப்பொருள் இல்லாமல் வகுப்புக்குச் செல்வது குறித்துத் தலைமையாசிரியர் வினவியபோது ‘நானே பயிற்றுக்கருவிதான்’ என்று பதிலளித்துள்ளார். அது உண்மைதான்.

தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்றிருந்த இவரின் திறமையைப் பாடத்திட்ட மேம்பாட்டுக்கழகம் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டது எனலாம். இசைக்கல்விக்கென  கையேடுகளையும், ஹார்வர்ட் கார்ட்னரின் (Howard Gardner) ஏழு வகை அறிவுத் திறன்கள் தொடர்பான கையேடுகளையும் தமிழில் மொழிபெயர்த்தார்.

நன்றாக யோசித்தால் இவை அனைத்தும் கல்விச்சூழலில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட திறன்கள். சிறிய அறையினுள் மிகச்சிறிய வாழ்த்துகளோடு முடிக்கப்படும் முயற்சிகள். விஸ்வநாதன் தன்னைச் சொல்லிக்கொள்வதுபோல அவரை ஒரு கருவியுடன் தொடர்புப்படுத்த முடிவதில்லை. அவர் தன்னுணர்வு கொண்ட மண்புழு. உயிர்வளியை மண்ணுள் பரப்பும் பணியைச் செய்து மண்ணுடன் கலக்கும் மண்புழுவைப்போலத்தான் அவர் கலைக்குச் செய்துக்கொண்டுள்ளார் என எண்ணிக்கொள்வேன். அவர் அப்படியே தன்னை மறைத்துக்கொண்டு  காணாமல் போகாமல் இருக்க முன்வந்தவர் பி.எம்.மூர்த்தி.

விஸ்வநாதனிடம் இருந்த எழுத்தாற்றலைத் தேர்வு வாரியத்தின் அதிகாரியாக இருந்த பி.எம். மூர்த்தி வெளிப்படுத்தினார். ஆறாமாண்டுப் பொதுத் தேர்வில் படைப்பிலக்கியம் பகுதியில் சிறுகதைகள் எழுத வைத்தார். இவர் பெயரிலும் புனைப்பெயரிலும் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு தாளில் சிறுகதைகள் வந்தன. மெல்ல மெல்ல குழந்தை இலக்கியங்களுக்கான மொழியை விஸ்வநாதன் கண்டடைந்தது இந்தக் களத்தில்தான்.

கல்விச் சூழலுக்குள் மட்டுமே வெளிபட்ட அவரது ஆற்றலைப் பொதுத்தளத்தில் வெளிக்கொணரவும் பி.எம். மூர்த்தி அவர்களே வித்திட்டார். இளையோர்களுக்கான நாவல்களை உருவாக்குவது என இருவரும் களம் இறங்கினர்.  மிகவும் புகழ்பெற்ற எனிட் பிலிடோனின் (Enid Blyton) துப்பறியும் கதைகளான The Famous Five, The Secret Seven போன்ற கதைகளைத் தமிழில் மலேசியாவைக் கதைக்களமாகக் கொண்டு எழுதத் தொடங்கியுள்ளார் விஸ்வநாதன். தீரச் சிறுவர்கள் எனும் வரிசையில் முதல் நூலை தான் பிறந்த ஊரான பந்திங்கிலுருந்து ஆரம்பித்தார். கோவிட் பெருந்தொற்றினால் முதல் நூல் வெளியீட்டில் சிரமம் ஏற்பட்டபோதும், அதுவே அடுத்தடுத்த நூல்களை எழுதி முடிக்கவும் வாய்ப்பாக அமைந்தது. எந்நிலையிலும் உற்சாகம் குன்றாத அவரது செயலூக்கம் அவரை வழிநடத்தியது.

விஸ்வநாதனின் மற்றுமொரு முகம் நாடக நடிகருக்கானது. இவருக்கு நடிப்புத் திறனும் ஆர்வமும் ஆரம்ப பள்ளியிலேயே துளிர்விடத் தொடங்கிவிட்டது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ‘போர்வைக்கோ’ எனும் நாடகத்தில் கதாநாயகனாக நடித்தார். இவரின் கற்பனையாற்றலுடன் நடனங்களும் சமூக, இலக்கிய நாடகங்களும் பள்ளிகளில் நடைபெறும் பரிசளிப்பு விழாவின்போது அரங்கேறின.

ஆரம்பக்கல்வியிலிருந்து ஐந்தாம் படிவம்வரை ஆங்கிலவழி கல்வி பயின்ற இவர் சொந்த முயற்சியில் தமிழும் கற்றுத் தேர்ந்தார். தீவிர இலக்கிய வாசிப்பும் கூடியது. ரஷ்ய, அமெரிக்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் வாசித்தார். வாசிப்பு அவரைத் தனித்துவமாக்கியது.

1986ல் தொலைக்காட்சியில் எல்.கிருஷ்ணனின் தயாரிப்பில் ‘பட்டுப் பாவாடை’ எனும் நாடகம்  தீபாவளியை முன்னிட்டு, இவரின் நாயக நடிப்புடன் ஒளியேறியது. இந்நாடகத்தின் துணை இயக்குனர் ரெ.சா.ஆனந்தனை விஸ்வநாதனின் நடிப்பாற்றல் வெகுவாகக் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து ரெ.சா.ஆனந்தனின் இயக்கத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் இவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தேவராணி அதிக நாடகங்களில் இவருடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். பின்னர் தேவாரணி, பிரான்சிஸ் சில்வன் ஆகியோர் இயக்கத்திலும் விஸ்வநாதன் நடித்திருந்தார். நாயகன் மட்டுமின்றி வில்லன் மற்றும் பலதரப்பட்ட பாத்திரங்களில் விஸ்வநாதன் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். ‘வாசுகி நீ வாழ்க’, ‘நானே எழுதிய தீர்ப்பு’, ‘பாசமா நேசமா’, ‘இந்துமதி’, ‘பிரியாத உறவு’, ‘வல்லமை தாராயோ’, ‘அந்த நொடியில்’, ‘யுத்தம்’, ‘கல்யாணமேடை’, ‘விடை என்ன’, ‘விடியலை நோக்கி’ ஆகிய தொலைக்காட்சி நாடகங்கள் இவர் நடித்தவைகளில் சில. இதில் ‘விடியலை நோக்கி’ நாடகத்தின் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ‘Konflik’ எனும் மலாய் நாடகத்திலும் இவர் நடித்துள்ளார்.

விஸ்வநாதன் மலேசியத் தமிழர் கலைமன்றத் துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துவருகிறார். 1980கள் தொடங்கி மேடை நாடகங்களிலும் நடித்தார். ‘தமிழ் பரணி’, ‘திருமுடி’, ‘கடாரம்’, ‘தீபச்சுடர்’, ‘பெரியாழ்வார்’, ‘துரோபதையின் சபதம்’, ‘நெல்லிக்கனி’, ‘திருத்தி எழுதிய தீர்ப்பு’, ‘வீறு கொண்ட நாயனார்’, ‘தெய்வத்தின் தீர்ப்பு’, ‘திருவள்ளுவர்’, ‘வள்ளி திருமணம்’, ‘ஏகலைவன்’, ‘குலோத்துங்க சோழன்’, ‘தெய்வ மகள்’ ஆகிய நாடகங்களில் இவர் நடித்துள்ள தகவலைக்  குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கேட்டுத்தான் தெரிந்து கொள்ளவேண்டியிருந்தது. அவர் மண்புழுவேதான். மண்ணுடன் உழல்வதும் அதன் செழிப்புக்கு வாழ்வதுமே அதன் பணி. அடையாளம் எதுவும் வைக்காமல் இறுதியில் அதுவும் மண்ணோடு மண்ணாவதையே தன் வாழ்வாக ஏற்றுள்ளதே அதன் கர்ம யோகம்.

“வாய்ப்புகளை நான் என்றுமே தேடிப் போவதில்லை, வந்தால் வரட்டும் இல்லாவிட்டாலும் இழப்பொன்றுமில்லை, எதனையும் ஞாபகம் வைத்துக்கொள்வதுமில்லை” என்பதுதான் விஸ்வநாதனின் என்றைக்குமான சொற்களாக உள்ளன.

மலேசியாவில் சினிமாவோ மேடை நாடகமோ வெற்றியளிக்கும் தொழில் அல்ல. இது தெரிந்துதான் விஸ்வநாதன் போன்ற கலைஞர்கள் தங்களைப் பிணைத்துக்கொள்கின்றனர். படப்பிடிப்புக்குச் செலவிடும் நேரமும் பொருட்செலவும் பல வேளைகளில் குடும்பத்திற்குப் பெரும் நெருக்கடியை  ஏற்படுத்தியுள்ளது. இவரின் நடிப்பு மீதான வேட்கையைப் புரிந்து கொண்ட குடும்பத்தினர் தங்களாலான ஒத்துழைப்பை இடைவிடாது வழங்கிக்கொண்டு வருகின்றனர். அவர் துணைவியால் அவருக்குள்ளிருக்கும் உண்மைக் கலைஞனை உதாசீனப்படுத்த முடிவதில்லை. சாந்தசொரூபியாகக் காட்சி தரும் விஸ்வநாதன் நடிப்புப்பயிற்சி வழங்கும் போது வேறொரு ஆளாக மாறிவிடுவதையும்  அவ்வேளையில் உதிர்க்கும் சொற்களும் படும் கோபமும் அவர் துணைவியாருக்கு அவரை இன்னும் ஆழமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடகத்துறையில் கல்கியின் பொன்னியின் செல்வனை மேடையேற்றியது இவரின் மிகச் சிறந்த பங்களிப்பாகும். ஐந்து பாகங்களைக் கொண்ட இந்நாவலை, ஆயிரக்கணக்கான பக்கங்களைப் பதிவிறக்கம் செய்து, படித்து நாடகத்திற்கேற்றவாறு மூன்றரை மணி நேர கதைச்சுருக்கத்தைத் தயாரித்தது பெரும் உழைப்பைக் கோரியது. காலை தொடங்கி பின்னிரவு வரை நீளும் எழுத்துப்பணியில் முழுமையாக அர்ப்பணித்தார். ஏறத்தாழ மூன்று மாதங்களில் நாடகத்தை எழுதி முடித்தார். பொன்னியின் செல்வன் நாடகத் தயாரிப்பில் எம்.எஸ்.மணியத்துடன் துணை இயக்குனராகவும் பணியாற்றியிருந்தார்.

பெரும் பாராட்டினைப் பெற்ற இந்நாடகத்தின் பங்களிப்பில் எழுத்திலும் இயக்கத்திலும் விஸ்வநாதனின் பெயர் இடம்பெறாமல் போனதுதான் பெரும் வேதனை. வழக்கம் போலவே எதனையும் கேட்டுப் பெறுவதில்லை எனும் கொள்கைப்பிடிப்பில் இதனையும் இவர் பொருட்படுத்தவில்லை.

பெரும் கலைஞர்களின் வாழ்வு பெரும்பாலும் ஒன்றுபோலவே இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அங்கீகாரம் இல்லாமலிருக்கிறாரே என மனம் வெதும்பும் இவரின் நலம்விரும்பிகளிடமும் சிறு முறுவலுடன் விடைபெறுவதுதான் விஸ்வநாதனின் வழக்கம். வல்லினம் & GTLF விழாவுக்கு அவர் ஷேக்ஸ்பியர் நாடகத்தை இயக்குவது மேலும் ஒரு பயணத்துக்கான தொடக்கம். அவரை மலேசிய கலை உலகத்திற்கு இன்னும் ஆழமாக அறிய வைக்கும் தொடக்கம்.

தமிழ் விக்கியில் விஸ்வநாதன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...