தமிழ் விக்கி: மலேசியக் கலைக்களஞ்சியம் அறிமுக விழா

நடைமுறையில் இருக்கும் ஒன்றின் மீது பொதுவாகப் பலருக்கும் விமர்சனங்கள், குறைகள் மாற்று கருத்துகள் இருப்பது மிக இயல்பானது. அரசியல் முதல் சமூக அமைப்பின் பல்வேறு செயல்பாடுகள் மீதும் இதே நிலைதான் உள்ளது. ஆனால் பெருவாரியாகக் குறை காண்பவர் அல்லது விமர்சனம் வைப்பவர் அந்தச்  சூழலை மாற்றும் திட்டங்களில் இறங்குவதில்லை.  அப்படி இறங்கி போராடி மொத்த அமைப்பையும் மாற்றிக் காட்டுவது அல்லது பழையதை விட மேம்பட்ட ஒன்றை உருவாக்கிக் காட்டுவது எப்போதோ நடக்கும் அரிய செயல். சவால்மிக்க புதிய திட்டம் ஒன்றை முன்னின்று செய்வதற்கு மிகப்பெரிய மனஉறுதியும் செயலூக்கமும் வேண்டும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பதிவுகள் மீது  எழுத்தாளர் ஜெயமோகன் தன் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். தமிழின் இன்றைய அறிவுச் சூழலை அது கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒரு தரப்பின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்ற தன் கவலையை அவர் கடுமையாகவே சுட்டிக் காட்டி வந்தார்.

உண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவின் சில அடிப்படை சிக்கல்களால் அது தமிழின் அறிவுச்சூழலை குறுக்கி விடுகிறது என்ற கருத்துப் பலரிடமும் இருப்பதுதான். மொழிப் பயன்பாடு, மிகக்குறைந்த தகவல்கள், பிழையான தகவல்கள், மாற்றங்களை ஏற்க மறுப்பது என அதன் போதாமைகளைச்  சுட்டிக் காட்டி ஆங்காங்கே கண்டனங்கள் எழுவதும் பின் மறைவதும் வாடிக்கை. ஆங்கில விக்கிப்பீடியாவோடு ஒப்பிடுகையில் தமிழ் விக்கிப்பீடியா பதிவுகள் மிக மேலோட்டமானவைகளாக இருப்பதைக் காணலாம்.   

ஆனால், இந்த குறைபாட்டுகளுக்குத்  தீர்வாகவும் மாற்று முயற்சியாகவும் உருவாகியுள்ளது தமிழ் விக்கி  இணையக் கலைக்களஞ்சியம் திட்டம். தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் அடிப்படையில் விக்கிபீடியாவின் ஜனநாயகத்தன்மையையும் தகவல் தொகுப்புமுறையையும் ஒத்தது என்றாலும் அதை மேலும் நம்பகமான பதிவுகளாக ஆக்கும் ஆசிரியர் குழு ஒன்றைக் கொண்டுள்ளது.  

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் அமைக்கவேண்டும் என்னும் திட்டம் 1 ஜனவரி 2022ல் உருவானது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் தளத்திற்கான இணைய இடம் வாங்கப்பட்டு 10 பிப்ரவரி 2022ல் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ் விக்கி கலைக்களஞ்சியத்திற்குத் தமிழ் மொழியின் வரலாற்றுச் சிறப்புடன் கூடிய முகப்புப் படத்தையும்  வடிவமைத்தார்கள். ஆயிரம் பதிவுகள் சரிபார்க்கப்பட்டு 7 மே 2022 அன்று இணையக் கலைக்களஞ்சியம் அமெரிக்கா வாஷிங்டன் இடைநிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது.

விரிவான ஆய்வுக்கும் கலந்துரையாடல்களுக்கும்  பிறகு எழுத்தாளர் ஜெயமோகன் துறைசார் அறிஞர்களையும் ஆளுமைகளையும் முதன்மை ஆசிரியர்களாகக் கொண்டு இந்த இணையக் கலைக்களஞ்சிய முயற்சியைத் தொடங்கினார். முதன்மை ஆசிரியராக நாட்டாரியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் பொறுப்பேற்றுள்ளார்.  கல்வித்துறை ஆசிரியர் குழுவும் படைப்புத்துறை ஆசிரியர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.  வாசகர்கள் எழுத்தாளர்கள் என ஆர்வமுள்ள யாரும்  தமிழ் விக்கி பங்கேற்பாளர்களாகப் பதிந்து கொண்டு தங்கள் பதிவுகளை ஆசிரியர் குழுவுக்குப் பதிவேற்றலாம். ஆசிரியர் குழு கட்டுரைகளைச் சரி பார்த்த பின் அவை பொது பார்வைக்குக் கலைக்களஞ்சியத்தில் இணைக்கப்படும்.

***

தமிழ் விக்கி கலைக்களஞ்சியம் மே 7-ல் தொடக்க விழா காணும் முன்பே பிப்ரவரி மாதம் முதலே ம.நவீன் அது பற்றிய தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். தமிழ்நாடு, தவிர இலங்கையிலிருந்தும் சிலர் பங்கேற்பாளர்களாக இணைந்து பதிவுகள் அனுப்புவதாகச் சொன்னார். அவர் தனியாகவே பதினாறு மலேசிய மூத்த எழுத்தாளர்களைப் பற்றிய விபரங்களை எழுதி தமிழ் விக்கிக்கு அனுப்பிவிட்ட தகவலையும் சொன்னார். அதன் பின்னர்தான், மலேசியாவில் தனியாகக் குழு அமைத்து, மலேசிய இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், நூல்கள், பண்பாட்டு தகவல்கள் ஆகியவற்றைத் தமிழ் விக்கியில் பதிவேற்றும் திட்டம் உருவானது. 

இப்படி குழு அமைப்பதில் இரண்டு தெளிவுகள் அடிப்படை புரிதல்களாக முன்வைக்கப்பட்டன. முதலாவதாகக் கலைக்களஞ்சிய கட்டுரைகள் எழுதுவது என்பது பொதுவான பிற கட்டுரைகள் போல அமையாது. அவை கூரிய மொழியில் தகவல் செறிவுடன் நம்பகத்தன்மையும் மேற்கோள்களும் உள்ளனவாக இருக்க வேண்டும். ஆகவே தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சிய கட்டுரைகள் தரப்படுத்தப்பட்ட வடிவத்தில் அமைய வேண்டிய அவசியம் உள்ளது. அதில் எழுத்தாளர்களின் மொழி புலமையையோ அழகியலையோ முன்வைக்க முடியாது. ஆளுமைகள் பற்றிய சார்புநிலை கருத்துகள், விதந்தோதும் மொழி நடை போன்றவையும் இருக்கக்கூடாது. 

இரண்டாவதாகத் தமிழ் விக்கி கட்டுரைகளில் எழுதியவரின் பெயர் இடம் பெறாது. தமிழ் விக்கி என்பது ஒரு திறந்த தகவல் கலைக்களஞ்சியம். ஆகவே அதில் உள்ள கட்டுரைகளில் காணப்படும் இடைவெளிகளையும் தகவல் பிழைகளையும் வாசகர்கள் பங்கேற்பாளராகப் பதிந்து கொண்டு திருத்தங்களை முன்மொழியலாம். அவ்வகையில் அக்கட்டுரைகள் பின்னர் பலரால் மேம்படுத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதால் அதில் தனி நபர்களின் பெயர்கள் இடம்பெறுவது பொருந்தாது. ஆகவே கட்டுரை எழுதுபவர்கள் எந்தவித கிரேடிட்டையும் இதில் பெறமுடியாது. அவை யாரால் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதே வாசகருக்கு தெரியாது.

இந்த இரண்டு கூறுகளும் பலருக்கு உவப்பானதாக இருக்காது என்பதால் அவற்றை தெளிவு படுத்திய பின்னரே தமிழ் விக்கியில், விருப்பத்தின் பேரில் இணைந்து பணியாற்றக் கூடியவர்கள் அழைக்கப்பட்டனர். அவ்வகையில் பதிமூன்று பேர் குழுவில் இணைந்தனர். மே 15, 2022 எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி நவீன் தமிழ் விக்கிக்கான பதிவுகளை எழுதும் முறையை இணைய சந்திப்பின் வழி தெளிவு படுத்தினார்.  மே 26, 2022ல் கட்டுரைகளைப் பதிவேற்றும் முறையை அவரே மற்றொரு சந்திப்பில் தெளிவு செய்தார். அதன் பின், குழுவினர் தாங்கள் விரும்பிய அல்லது சுலபமாகத் தகவல் பெறக்கூடிய ஆளுமைகள், பண்பாட்டு விடையங்கள் பற்றி எழுதத் தொடங்கி புலனக்குழுவிலேயே சரிபார்த்துக் கொண்டு மேம்படுத்தினார்கள்.

ம.நவீன், அ.பாண்டியன், கோ.புண்ணியவான், அரவின் குமார், சுப்புலட்சுமி,  சாலினி, பரிமித்தா, குமாரசாமி, அபிராமி கணேசன், தினேசுவரி, மீரா, பவித்திரா, நிர்மலா முரசி ஆகியோர் இணைவில் மலேசியத் தமிழ் விக்கி குழு தோற்றம் கண்டது.

***

இதனிடையே, மே மாத வாக்கில், ஜார்ச்டவுன் இலக்கிய விழா 2022-ல் (George Town Literary  Festival 2022) வல்லினம் பங்குபெரும் வாய்ப்புக் கிடைத்தது. ஜார்ச்டவுன் இலக்கிய விழா 2022 என்பது மலேசியாவில் நடைபெறும் அனைத்துலக இலக்கிய விழாவாகும். உலகின் பல நாட்டு இலக்கியவாதிகளும் கலந்து கொள்ளும் அந்த விழாவில் தமிழ் அரங்கு அமைக்க கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தோம். GTLF-தமிழ் இலக்கிய கலந்துரையாடலுக்குத் தலைமையேற்க எழுத்தாளர் ஜெயமோகன் ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பி. கிருஷ்ணன் படைப்புலக அரங்கோடு தமிழ் விக்கி(மலேசியா)  அறிமுக நிகழ்வையும் ஜார்ச்டவுமன் இலக்கிய விழாவின் அங்கமாக இணைத்துக் கொள்ள விண்ணப்பம் வைத்து அதில் வெற்றியும் கிட்டியது. ஆக, ஓர் அனைத்துலக இலக்கிய அமைப்புடன் வல்லினமும் இணைந்து தமிழ் விக்கியின் மலேசியப் பகுதியை அறிமுகம் செய்வதை ஒரு வரலாற்று நிகழ்வாகவே கருத முடியும்.  

இந்த மாற்றங்களுக்குப் பிறகு தமிழ் விக்கியில் கட்டுரை எழுதும் பணிகள் மேலும் சுறுசுறுப்பாகின. நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள தமிழ் விக்கி அறிமுக விழாவிற்கு முன்பாகக் குறைந்தது இருநூறு கட்டுரைகளாவது எழுதி முடிக்க வேண்டும் என்ற எல்லையை வகுத்துக் கொண்டதால் வாரம் பத்து கட்டுரைகளாவது பதிவேற்ற வேண்டிய நிலை வந்தது. ஆனாலும் குழு உறுப்பினர்கள் அயராது தொடர்ந்து தகவல்களை நூல்களிலிருந்தும் இணையத்திலிருந்தும் திரட்டி கட்டுரைகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.  இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் ஆகஸ்டு மாத கடைசியில் சுமார் 100 கட்டுரைகள் வரை எழுது அனுப்பப்பட்டுவிட்டன. எழுதப்பட வேண்டிய தலைப்புகள் இன்றும் நீண்டுகொண்டுதான் செல்கின்றன. குழுவினர், தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தில் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்னுரிமை தந்து மற்ற எல்லா எழுத்துப் பணிகளையும் ஒத்தி வைத்துள்ளனர்.

தமிழ் விக்கிக்குக் கட்டுரை எழுதுவது சவால் மிக்க பணியாகவும் இருப்பதை உணர முடிகின்றது. ஆளுமைகள் அல்லது பண்பாட்டு நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி எழுதுவது எதிர்ப்பார்த்தபடி எளிய செயலாக அமைந்துவிடாமல் போவதும் உண்டு. நாம் பெயரளவில் இதுவரை அறிந்த ஒர் ஆளுமையைப் பற்றிய முழு விபரங்களையும் திரட்டி எழுத நூல்களும் இணையமும் மட்டும் உதவுவதில்லை. அதிலும் நம் நாட்டு ஆளுமைகள் பலரைப் பற்றிய ஆவணப்படுத்தப்பட்ட தரவுகள் அல்லது நூல்கள் கிடைப்பதும் இல்லை. ஆகவே ஆளுமையின் குடும்ப உறவுகள், நண்பர்கள் அல்லது  விபரம் அறிந்த மூத்தவர்களை அணுகி தகவல்களைத் திரட்ட வேண்டிய சூழலும் அமைகின்றது. இவை அதிக உழைப்பும் நேரமும் எடுத்துக் கொள்ளும் தேடல்களாகும். குறைந்த காலத்தில் இவற்றைச் செய்து முடிக்க வேண்டிய நெருக்கடி இருந்தாலும், இந்நாட்டு தமிழ் இலக்கியத்துறைக்கும் பண்பாட்டுக்கும் செய்யப்படும் மிக முக்கிய பணியாக உணர்ந்த குழுவினர் தொடர்ந்து செயலூக்கத்துடன் எழுதிக் கொண்டுள்ளனர்.   

இதுவரை வந்த பதிவுகளை வாசிக்கும்போது ஆச்சரியமே மேலிடுகிறது. ஒருவகையில் அது மலேசிய இந்தியர்களின் வரலாற்றை குறுக்குவெட்டாக வகுத்துக்கொடுப்பதுபோல உள்ளது. ஈ.வெ.ரா பெரியார் 1929இல் மலாயா வந்ததை இக்கட்டுரையில் ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம். அவர் மலாயா மற்றும் சிங்கப்பூருக்குச் செய்த பயணங்கள் விளக்கமாகப் பதிவாகியுள்ளனர். மலாயாவுக்குப் பெரியாரின் வருகை ஏற்படுத்திய தாக்கமும் இதில் அடக்கம். தொடர்ந்து, 1941இல் நடந்த கிள்ளான் கலகம் குறித்த பதிவு அன்றைய மலாயா தமிழர்களின் நிலை குறித்த விரிவான விளக்கத்தைக் கொடுக்கிறது. ஊதியம் மட்டும் அல்லாமல் தங்களின் சுய மரியாதைக்காக அவர்கள் எழுப்பிய குரலை முக்கிய வரலாற்றுத் தருணமாகக் காண முடிகிறது. இதே காலகட்டத்தில் ஆங்கில தோட்ட முதலாளிகளால் உருவாக்கப்பட்ட தென்னிந்திய தோட்டத் தொழிலாளர் நிதியம் பற்றிய வரலாறும் இணைந்தே வாசிக்கத்தக்கது.  கிள்ளான் கலகத்தில் வெளிபட்ட ஆளுமைகளான மலாயா கணபதி, ஆர்.எச்.நாதன், குறித்தும் பதிவுகள் எழுதப்பட்டுள்ளன.

தொழிற்சங்கவாதிகளைத் தவிர்த்து, மலாயாவில் ஐம்பதுகளில் உருவான மற்றுமொரு தனிப்பெரும் ஆளுமை கோ. சாரங்கபாணி பற்றியும் அவர் முன்னெடுத்த தமிழர் திருநாள் குறித்தும் தனித்தனி பதிவுகள் இடம்பெற்றுள்ளன. கோ. சாரங்கபாணி வழி வந்த சா.அ.அன்பானந்தன் குறித்த பதிவும் அவர் வழி உருவான தமிழ் இளைஞர் மணிமன்றம் குறித்த சித்திரமும் மலேசியத் தமிழ் விக்கியில் முக்கிய அங்கங்கள் என்றால் மணிமன்றம் வழி உருவான சை. பீர்முகம்மது, ரெ. கார்த்திகேசு போன்ற எழுத்தாளர்களின் வரிசையும் அவர்களின் நூல்கள் பற்றிய தகவல்களும் மற்றுமொரு சிறந்த தொடர்ச்சி. இந்த மணிமன்ற எழுத்தாளர்கள் 70களில் வளர்ந்து முன்னெடுத்த நவீன இதழான ‘இலக்கிய வட்டம்’ குறித்த பதிவும் அதன் வழி உருவான எழுத்தாளர்கள் குறித்த குறிப்பும் விரிவாகவே தமிழ் விக்கியில் இடம்பெற்றுள்ளன. மேலும் பல்வேறு எழுத்தாளர் அமைப்புகளும் இலக்கிய குழுக்கள் பற்றிய விபரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.  இவர்களோடு, இந்நாட்டு வரலாற்றில் இடம்பிடித்த தம்புசாமி பிள்ளை, ஆறுமுகம் பிள்ளை, சிதம்பரம் பிள்ளை, சுவாமி ராமதாசர் போன்ற தனித்தன்மை கொண்ட ஆளுமைகளைப் பற்றிய பதிவுகளும் உள்ளன.

ஆராய்ந்தால் ஒரு சிலந்திவலைபோல நாலாப் பக்கமும் பதிவுகள் விரிந்து சென்றுக்கொண்டிருப்பதைக் காணலாம். இது ஒரு வரிசைதான். இன்னும் தமிழ் நேசனில் இருந்து கோடுகள் கிழித்தால் அது கதை வகுப்பு, சுப.நாராயணன் அதன் வழி உருவான மா.செ.மாயதேவன், மா. இராமையா என இன்னொரு திசையில் விரிந்து செல்லும். இதுபோல நவீன இலக்கியம், மரபிலக்கியம், ஆய்வுலகம், பண்பாட்டு தலைவர்கள் எனப் பல்வேறு கோடுகளும் அதையொட்டிய பல மையங்களும் மலேசியத் தமிழ் விக்கியில் பதிவாகியுள்ளன.

இன்னும் இது எத்தனை பிரமாண்டமாக  விரியும் என யோசிக்கும்போது பிரமிப்பாகவே உள்ளது.

***

நவம்பர் 25 கூலில் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெறும் தமிழ் விக்கி அறிமுக நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக் கிழமை மாலையில் தமிழ் விக்கி (மலேசியா)அறிமுக விழாவில் மலேசிய கல்வியாளர்கள் கலந்துகொள்வார்கள். ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் பார்வையாளர்களாக அமர்வார்கள். கல்வி பண்பாட்டு ஆய்வுகளில் தகவல்களும் ஆவணங்களும் பெரும் முக்கியத்துவம் பற்றியும் அவற்றை பெருவதில் உள்ள சவால்கள் பற்றியும் கருத்தரங்கு ஒன்று கல்வியாளர்களைக் கொண்டு நடத்தப்பெறும்.

இந்நிகழ்ச்சியில் சிங்கை அருண்மகிழ்நன் அவர்கள் தலைமை தாங்குவது கூடுதல் சிறப்பு. தமிழ் வளங்களை எண்மமயமாக்க (digitize) வேண்டும் என்னும் பெருநோக்கோடு 2013-ஆம் ஆண்டு தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தைத் (Tamil Digital Heritage) தொடங்கியவர் அருண்மகிழ்நன்.  1965-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான  தமிழ் இலக்கிய வெளியீடுகளில் பெரும்பான்மையானவற்றை எண்மமயமாக்க பங்காற்றியவர். ‘ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் தமிழர்’ எனும் நூல் தொகுப்பில் இவர் ஆற்றிய பணியும் இப்போது சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியம் தொகுக்க இவர் முன்னெடுக்கும் முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை.

தமிழ் அறிவுச்சூழலில் இப்படி ஒரு முயற்சி தொடங்க காரணமாக இருந்த எழுத்தாளர் ஜெயமோகன்,  இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுவது மேலும் இவ்வங்கத்தைச் சிறப்பாக்கும் . இந்த ஆண்டு மலேசியாவில் நடைபெறும் மிகப்பெரிய தமிழ் இலக்கிய விழாவாக GTLF-வல்லினம் நிகழ்ச்சிகள் அமையவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் வல்லினத்தைத் தொடர்பு கொள்ளலாம். 

தமிழ் விக்கி மலேசியப் பகுதி

தொடர்புக்கு:

ம.நவீன் (0163194522)

அ. பாண்டியன் (0136696944)

2 comments for “தமிழ் விக்கி: மலேசியக் கலைக்களஞ்சியம் அறிமுக விழா

  1. Suruliandavar
    September 18, 2022 at 11:34 am

    தெளிந்த தகவல்களால்..தெளியட்டும் தலைமுறை..சிறப்பான வாழ்த்துகள்..மகிழ்ச்சி..

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...