அனல் அவித்தல்

“கட்டத்தாத்தா எங்க போய்த்தொலைஞ்சாரு? தண்ணியமத்தலுக்கு நேரங்காணாதா?” அடர்நீலநிறக் கட்டங்கள் கொண்ட லுங்கியை ஏத்திக் கட்டியவாறு தன்ராஜ் கேட்டான். சட்டையணியாத அகல உடம்பின் ஓரத்தில் துண்டு தொங்கிக்கொண்டிருந்தது.

அருகிலிருந்த பெஞ்சில் எதுவும் பேசாமல் பாஸ்கரண்ணாச்சி அமர்ந்திருந்தார். கருத்த எருமைத்தோல் போன்ற கைகள் இரண்டும் மரவிளிம்பைப் பிடித்திருந்தன. இடது கையில் வழக்கமாக அணியும்  தங்கப்பூச்சு கொண்ட கடிகாரமும் விரல்களில் ஒன்பது கல்கொண்ட பட்டை மோதிரமும் அணியாததால் அங்கு மட்டும் தோல் புதுநிறம் கொண்டிருந்தது.

தெருமுனை மழுங்குக் கல்லில் அமர்ந்திருந்த கதிரேசன் மாமா சட்டைப் பைக்குள் கைவிட்டவாறே “அவருக்கென்ன கொள்ளை? முதல் வேலையா இங்கன வர்றதுக்கு. தெருவுக்கு ரெண்டு வீடு இருக்கு அவரைத் தாங்க. தாயதி பெரியாளுன்னு வெளிய சொன்னா சூத்துல சிரிப்பானுங்க. நேத்து ராத்திரி முத்தாலம்மன் தெருப் பக்கம் லாத்திக்கிட்டு இருந்தாரு. காலைல கெங்கம்மா கறிக்குழம்ப சாப்பிட வெச்சுத்தான் அனுப்பும்,” எனக் கூறி பீடியை எடுத்து வாயில் வைத்து தீப்பெட்டியை உரசினார்.

அதைக்கேட்ட தங்கமணியின் முகம் கூர்மையடைய “இந்த வயசுலையும் அவரால முடியுதா?” எனக் கேட்டான். கல்யாணம் முடிந்து நான்கு வருடங்களாகியும் அவனுக்குக் குழந்தை இல்லையென்பது அனைவருக்கும் தெரியும்.

வந்த சிரிப்பை வெளித்தெரியாமல் அடக்கிக்கொண்டார் மாமா. “பின்ன, சும்மாவா அவரு. தாலிக்கட்டு எதுலயும் மாட்டாதவரு. ஆம்பள சக்தி வீணாவதே கல்யாணங்கட்டுறதுனாலதான். ஒரே கல்லுல சாண பிடிச்ச கணக்குத்தான். கல்லு மலுங்க மலுங்க கத்திமுனையும் கூர்கெட்டுப் போகும்,” தங்கமணி அதைத் தீவிரமாகக் கேட்டு தலையசைத்துக்கொண்டான்.

அதோடு நிறுத்தாமல் திரும்பி ராமனிடம் “போதாக் கொறைக்கு கொளந்த பொறந்துச்சுன்னு வெய்யி. சோலி முடிஞ்சு. நம்ம சாயலுல ஒரு பொடுசு வீட்ட ரெண்டாக்குறதப் பாக்குறப்பவே நம்ம சுரத்து செத்துபோகும். அப்புறம் எங்கிருந்து அந்த சனியனப் பெத்தவகூட சேந்து ஒறவாட நெனப்பத் தூண்டுறது,” எனக் கூறினார்.

வெய்யில் ஏறிக்கொண்டிருந்தது. தெருவை மறைத்துப் போடப்பட்டிருந்த ஓலைப்பந்தலின் இடுக்கிலிருந்து ஒளிப்பட்டைகள் காற்றிலிருந்த தூசிகளை வெளிக்காட்டி தரையில் இறங்கின. பந்தலுக்குள் தாயாதிகள் வெற்றுடம்புடன் துண்டை மட்டும் அங்கவஸ்திரமாகப் போட்டுக்கொண்டு வரிசையாக அமர்ந்திருந்தனர்.

பாஸ்கரண்ணாச்சி மெல்ல நகர்ந்து அமர்ந்தார். அந்த அசைவு ஒரு அலைபோல பரவி தெரு முக்கில் பேசிக்கொண்டிருந்தவர்களின் சத்தத்தைக் குறைத்தது. ராமன் மெதுவாகக்கேட்டான். “ஏன் மச்சான், பாஸ்கரண்ணாச்சிக்குள்ள இம்புட்டு அழுத்தமிருக்கும்னு நெனக்கலை. அவரு அப்பா செத்து இன்னிக்கோட நாக்கணக்கு மூனாவுது. இன்னும் மனுசன் தெளிஞ்சபாடில்லையே. நேத்து சாயந்திரம் உடம்ப எடுக்குறவரை அழுத கோலமாத்தான இருந்தாரு. கொஞ்ச நேரம் சும்மா இருப்பாரு அப்புறம் என்ன நெனப்பு வருமோ திரும்ப மூக்க உரிஞ்சு அழ ஆரம்பிச்சுருவாரு.”

“பின்ன இருக்காதா ராமா. போனவரு சும்மாவா போயிருக்காரு. இதோ பாஸ்கரன் உக்காந்துட்டிருக்குற வீட்டுல இருந்து காடுகரைன்னு எல்லாத்தையும் ஆக்கிக்குடுத்துல்ல போயிருக்காரு. ஒத்தப் புள்ள இவன். காசுன்னு மட்டும் பாத்துருந்தா அவரோட கால் எப்பவோ ஓய்ஞ்சு அமந்திருக்கும். அது ஒரு வெறி பாத்துக்க. தன்னோட மொத்த சத்தையும் பிழிஞ்சு கொடுத்துட்டு போயிருக்காரு. அத வாங்கின பிள்ளை வேறென்ன பண்ணும்.”

“சரிதான் மச்சான். இவரு படுக்கையான இந்த மூணு மாசமும் பாஸ்கரண்ணாச்சிக்கு அம்புட்டு கால்சுருக்கம். தூரமா எங்கயும் போறதில்லை. மூணு வேளை சாப்பாடும் வீட்டுல இருக்குற மாதிரிதான் போக்குவரத்து எல்லாம். ஆனா விதிப்போக்க பாருங்க. முந்தாநாள் ஒரு வசூலுக்கு வெம்பக்கோட்டை வரை போயிருக்காரு. திரும்புற நேரத்தக்குள்ள பெரியப்பா இங்கிட்டு கிளம்பி போயிட்டாரு.”

சிறிது தயங்கிய கதிரேசன் மாமா சுற்றிலும் ஒருதரம் நோட்டம் விட்டு யாருக்கும் கேட்காத குரலில் “ஆனா, செஞ்ச வினைன்னு ஒன்னு இருக்குல்ல. எத்தனை வயிறு எரிஞ்சதோ. போன மாசங்கூட மண்டகப்படித் தெரு தனபால் பையன் வட்டிகட்ட முடியாம நாலு ஏக்கரா சிறிக்குளம் புஞ்சையை எழுதிக் கொடுத்திட்டு மம்சாபுரம் மில்வேலைக்குப் போயிட்டான்,” என்றார்.

அருகிலிருந்த தங்கமணி திரும்பி பாஸ்கரண்ணாச்சியைப் பார்த்தான். உடல் அசையாமல் நிலைத்திருந்தாலும் உள்ளிருக்கும் அலைக்கழிப்பைக் காணமுடிந்தது. அவ்வப்போது பெருமூச்சுகளாகவிட அவரது பெரிய வயிற்றின் மடிப்பு சதைகளிலிருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்தது. கண் ஓரிடத்தில் அமையவில்லை.

தெற்குப் பக்கத்திலிருந்து முருகன் சைக்கிள் வர பின்சீட்டில் கட்டத்தாத்தா அமர்ந்திருந்தார்.  அவரைப் பார்த்ததும் அதுவரை இருந்த அமைதி கலைந்து பரபரப்பானது. சுள்ளி போன்ற கைகளைக் கேரியரில் அழுத்தி சைக்களிலிருந்து குதித்து இறங்கினார் தாத்தா. நாலரை அடி உயரம் கொண்ட உடலில் கட்டிய வேட்டி தரையில் உரசாமல் இருக்கக்கூட இரண்டுமுறை சுருட்டப்பட்டுத் தடிமனாக இடுப்பில் பதிந்திருந்தது.

பந்தலில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்திருக்க கூடவே பாஸ்கரண்ணாச்சியும் எழுந்தார். பந்தல் மறைவிலிருந்து வெளிப்பட்ட அவர் மனைவி ஜானகி ஒரு அகலத் தாம்பாளத்தைக் கொண்டுவந்தாள். மேலே துண்டு மூடியிருக்க அதன் இடைவெளிகளில் வாழை இலை ஈரப்பரப்புடன் வெளித்தெரிந்தது.

கையில் மஞ்சள் பச்சை என இரண்டு பிளாஸ்டிக் குடங்களுடன் பாஸ்கரண்ணாச்சியின் மகன் தன்ராஜ் முன்னால் சென்றான். இன்னொரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டே எழுந்த கதிரேசன் மாமா “என்ன மைனரே, நேரங்காணலையா. கெங்கம்மா கோழிக்குழம்பு சாப்புடவெச்சுத்தான் அனுப்புச்சதா?” என்றார். கட்டத்தாத்தா சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் சாதாரண குரலில் சொன்னார். “இல்லை மருமவனே, முன்ன மாதிரி இப்ப சோறு உள்ள எறங்க மாட்டிங்கிது பாத்துக்க. அப்புறம் குழம்பும் அவெ அம்மாக்காரி வெக்கிற மாதிரி இல்லல,” என்றார். அதை எதிர்பாராத கதிரேசன் ஒருகணம் திகைத்துவிட்டார்.

ஊர் மந்தை தாண்டி மொத்தக் கூட்டமும் தெற்கு நோக்கி சென்றனர். ஓடைப்பாலத்தைக் கடந்ததும் பாதை குறுகி குட்டை முட்புதர்களும் எருக்கஞ்செடிகளுமாக மாறியது. சரளைக் கற்கள் பரப்பப்பட்ட இறுகிய மண்பாதையின் ஓரத்தில் ஆங்காங்கு மனிதக் கழிவுகளின் நொதிப்பு வாடை எழுந்தது.

“எளவு, ஊரான் பீமேட்டயெல்லாந்தாண்டி போகவேட்டியிருக்கு. கால்சுருக்க தூரத்துல சவக்காட்ட மாத்தினா என்னவாம்?” கதிரேசன்மாமா சலித்துக்கொண்டார். “அப்படியில்ல கதிரேசா, இந்த ஊருல மாறாம இருக்கப்பட்டது ரெண்டெடந்தான். ஒண்ணு சிறிக்குளம் கம்மாயி. மேக்க கருமலையில் இருந்து இறங்குற வெள்ளம் அந்தக் கெடங்குலதான் வந்து தேங்கும். இன்னொன்னு இந்த சவக்காடு. இதுவும் ஒரு பள்ளம் மாதிரிதான். பொறந்த நம்மாளுக அத்தனை பேரும் கடைசியா இங்க வந்துதான் சேரணும். கருமலை வெள்ளங்கணக்கா. எங்க தாத்தாரு இறந்தப்போ எனக்கு எட்டு வயசு. ஆணி மாசம். வானத்த கிழிச்சிக்கிட்டு மழை அருவிகணக்கா இறங்கி அறையிது. வழியில ஓடை நெறைஞ்சு வெள்ளம் பாயுது. இப்பவாவது ஓடையத் தாண்டுறதுக்கு பாலமிருக்கு. அப்போ பனந்தடியத்தான் பதிச்சிருந்தாங்க. ஒத்த மூங்கில் கம்புல தூளியா கட்டிக்கொண்டு வந்து இறக்குனாங்க. இப்போமாதிரி கிடையாது. ஒரு ஆளு இறந்தா அன்னைக்கே வீட்டுல இருந்து எடுத்துறணும். ஒரு ராத்திரிகூட தாண்ட விடக்கூடாது. இதோ உன் மாமன மாதிரி ரெண்டு நாள் வெச்சு எடுக்குற வளக்கமெல்லாம் அப்போ இல்லை. மழையோ வெள்ளமோ அடுத்தநாள் விடியறப்போ எறந்த உடல் வீட்டுல இருக்கக்கூடாது.”

தங்கமணிக்கு கட்டத்தாத்தா சொல்வது சரியெனப்பட்டது. சாவகாசமாக எடுக்கப்படுகிற பிணம் தன்னில் கொஞ்சத்தை வீட்டிலுள்ளவர்களிடம் ஏக்கமாக விட்டுப் போய்விடுகிறது போலும். நேற்று பின்மதியம் வரை விக்கி அழுதவாறு இருந்த பாஸ்கரண்ணாச்சி சிதைக்கு தீமூட்டிவிட்டு பின்புறம் பார்க்காமல் திரும்பி வந்ததிலிருந்து அவர் உடம்பில் திடீரென ஒரு தத்தளிப்பும் அலைபாய்தலும் கூடிவிட்டதாக உணர்ந்தான். முத்தண்ணன் தோட்டத்துப் பம்புசெட்டில் குளித்துவிட்டு இரவு வந்தபோது வீட்டின் முன் விளக்கின் மஞ்சள் ஓளியில் உயரமான வாசற்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தார். அவரது பார்வை எதிர்பக்கமிருந்த மரநாற்காலியில் இருந்தது. அவரின் அப்பா விரும்பி உட்காரும் நாற்காலி. அங்கு உட்கார்ந்துதான் அவரைப் பார்க்க வரும் வெளியாட்களிடம் பேசிக்கொண்டிருப்பார். இறந்த பின்னும் அதில் அமர வைத்துதான் எண்ணெய்வைப்பு முதல் அனைத்து காரியங்களும் செய்யப்பட்டன. இப்போது அதைப் பார்க்கையில் கழுவி வைக்கப்பட்டு ஈரம் கொண்ட அடர்பழுப்பு சருமத்துடன் வெறுங்கை விரித்து முற்றத்தில் இருந்தது. அலைபாயும் கண்களுடன் அதில் தன் அப்பாவை அவர் தேடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. மறுநாள் காலை நீரமர்த்தல் சடங்கிற்காக வந்தபோதும் அவரிடம் அந்தத் தத்தளிப்பு அப்படியே இருந்தது. பாஸ்கரண்ணாச்சியிடம் மட்டுமல்ல வீட்டின் அனைவரிடத்திலும் அதைக்கண்டான் தங்கமணி. அவருக்கும் தாயாதிக்காரர்களுக்கும் காபி கொண்டுவந்து கொடுத்த அவரின் மனைவியிடம் துக்கத்தைவிட திகைப்பே இருந்தது. வெறுந்தட்டைக் கையில்வைத்துக்கொண்டு பாதி தூரம் வந்தவள் பின்னால் யாரோ கூப்பிட உள்சென்று மீண்டும் காபித் தம்ளர்களுடன் வந்தாள்.

அவர்கள் அரசமர முக்கைக் கடந்ததும் வடபுறத்தில் சிமெண்ட் கூரை கொண்ட கொட்டகை தெரிந்தது. அதுவரை பின்னாலிருந்த தாத்தா விறுவிறுவென நடந்து அனைவருக்கும் முன்னே சென்றார். கொட்டகைக்குள் சிதைச்சாம்பல் மெல்ல புகை விட்டுக்கொண்டிருந்தது. உள்ளே சென்று காலை அகலமாக வைத்து ஆள்காட்டி விரல் நுனியால் பட்டும் படாமல் கிளறி ஏழு எலும்புத் துண்டுகளை எடுத்து சொம்பில் போட்டார். அருகிலிருந்த சிறிய தகரத் தட்டில் கொஞ்சமாகச் சாம்பலை அள்ளி சொம்பில் கவிழ்த்தார். சின்ன சீறலுடன் சாம்பல் எலும்புகளின் மேல் பரவியது. தன்ராஜைக் கூப்பிட்டுக் குடத்தில் தண்ணீரை நிரப்பச் சொன்னார். கொட்டகைக்கு எதிர்புறமிருந்த வெள்ளிநிற அடிபம்பில் குடத்தை வைத்து விரைவாக நிரப்பி அவரின் அருகில் வைத்தான்.

இலகுவாகத் தூக்கிக் குடத்தின் வாயில் விரல்களை வைத்து விசிறித் தெளித்தார் தாத்தா. நீர் சரங்களாகப் போய் சாம்பலில் விழுந்து குதித்து சூட்டில் ஆவியாகின. முழு இரவு உடல் வெந்தும் இன்னும் தகிப்புக் குறையவில்லை. திரும்பி ராமனிடம் “உங்க பெரியப்பாவுக்கு சீவனப்பிடிப்பு அவ்வளவு இருக்கு. லேசுல குளுர மாட்டிக்காரு,” என்றபடி தன்ராஜிடம் மேலும் இரு குடங்களை நிரப்பச் சொன்னார்.

மேலும் இருமுறை இரு குடங்களிலும் தண்ணீரை நிறைத்து சாம்பல் மேட்டில் தெளித்தார். ஒவ்வொரு துளியும் சூட்டை உறிஞ்சி எடையிழந்து மேலே சென்றது.

புகைத் திரளாக எழுந்த ஆவிப் படலத்தை நோக்கிப் “போயிட்டு வா சாமி. இங்க உன் வேலை முடிஞ்சது. போயி உங்க அப்பம்மாருக கூட இரு,” எனக் கூறி மீண்டும்  இம்முறை மரியாதையாக “போயிட்டு வாங்க,” என்றார். கொட்டகைக்குள் நுழைந்ததிலிருந்து அவரின் பேச்சிலும் செய்கையிலும் நளினம் கூடிவிட்டதை உணர்ந்தான் தங்கமணி. ஒரே செயலைத் திரும்பத்திரும்ப செய்வதால் கூடும் நளினம். தலைமுறைகளாக அவர்களது குடும்பமே நீர் அமர்த்தல் சடங்குகளைச் செய்து வருகிறது. எத்தனை உடல்களில் சூட்டைத் தணித்திருக்கும் அந்தக் கைகள்.

குளிர்ந்த சாம்பல் பரப்பு அடர்ந்து சுற்றியிருந்த மண்நிறத்துக்கு மாறியது. மண்ணிற்கும் அதற்கும் வித்தியாசம் இல்லாததாக தோன்றியது. முருகனுடைய சைக்கிளில் சொருகி வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து வந்து குளிர்ந்த பரப்பைக் கொத்தினார். கடைவாயில் அரைபடும் மாட்டுக்கூளத்தின் ஓசையுடன் மண் வெளிவந்து சாம்பலுடன் முற்றாகக் கலந்தது.

கிளறி விடப்பட்ட மண்ணை மண்வெட்டியால் குவித்து பின் பிரிக்கத் தொடங்கினார். மெதுவாக உருவமற்ற குவியலில் இருந்து தொடையும் கால்களும் உருப்பெற்று வந்தன. பின்னர் அகலமான வயிறு எழுந்து வந்தது. அடுத்து தடிமனான கைகள் இருபக்கமும் வளர்ந்தன.

மண்வெட்டியின் அடிப்பாகத்தால் மொத்த உருவத்தையும் ஒருமுறை மெதுவாக அழுத்தியும் நீவியும் வழவழப்பாக்கினார்.

அருகில் கைகளில் தாம்பாளத்தை வைத்துக்கொண்டு பாஸ்கரண்ணாச்சி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகம் ஒவ்வொரு செயலுக்கும் ததும்பிக்கொண்டிருந்தது. கண்கள் இலக்கில்லாமல் அலைந்துகொண்டிருந்தன. சிலசமயம் கூர்ந்து பார்ந்தன. சாம்பல் குவையிலிருந்த மண்ணுருவம் எழுந்து வரவர உடல் பரபரப்படைந்தது. புஜம்வரை உருவாக்கிவிட்டுக் கட்டைத்தாத்தா விலகினார்.

பாஸ்கரன் நிமிர்ந்து அவரை குழப்பமாகப் பார்த்தார். “இனி அவருக்கு முகம் கிடையாதுய்யா. செத்த தாத்தங்களோட அவரும் சேர்ந்துட்டாரு. இதோ இங்க வந்துருக்கிறது மொத்தமா எல்லாருந்தான்,” என்றார் கட்டைத்தாத்தா.

அவரின் தீர்க்கமான குரலைக்கேட்டு அங்க இருந்த அனைவருக்குள்ளும் மெல்லிய நகர்வு ஏற்பட்டது. அது தங்கள் முன்னோர்கள் அனைவரின் நினைப்பையும் அவர்களிடத்தில் கொண்டுவந்தது. ஒவ்வொரு இறப்புக்குப் பிறகும் இவ்வாறு மண் கிளறப்பட்டிருக்கும். விளைச்சலுக்கும் பின் நிலத்தை திருத்துவதுபோல. செத்து உதிர்ந்த ஒவ்வொரு வைக்கோல் திரியும் மண்ணில் மறையும். மறைந்து சத்தாகி அடுத்து விதைக்கப்படும் நாற்றுக்கு உயிரூட்டும்.

முருகனைக் கூப்பிட அவன் அடியில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் கவரால் கட்டப்பட்டிருந்த துளசிச் செடியை கொண்டுவந்து அவரிடம் கொடுத்தான். நரம்பு புடைத்த சுள்ளிக் கைகளால் அதை வாங்கி கவரை உருவி வீசினார். அடியில் ஈரம் கொண்ட ஒருப்பிடி அடர் கரிசல் மண்ணை வேர் கவ்வியிருந்தது. அன்று காலைதான் முருகன் சைக்கிளில் சென்று சிறிக்குளம் கண்மாய் திட்டிலிருந்து பிடுங்கி வந்தான். கண்மாயின் வடகரையோரம் துளசிச் செடிகள் மண்டிய புதர்க்குவை இருந்தது. ஒவ்வொரு இறப்புக்கும் ஒரு துளசிச் செடி அங்கிருந்து பிடுங்கப்பட்டு சவக்காட்டுக்கு கொண்டு செல்லப்படும்.

கைகளால் தோண்டப்பட்டிருந்த சிறிய குழியில் செடியை வைத்து மண் நிரப்பினார். தங்கமணி கண்ணசையாமல் பார்த்துக்கொண்டிருந்தான். மெல்லிய நடுத்தண்டின் இருபக்கமும் விரிந்து கிளைகள் கொண்டு துளசிச் செடி நின்றிருந்தது. காலடியில் அதன் பிரமாண்டமான நிழலுருவமாக முகமற்ற மண்மனிதன் கிடந்தான்.

பாஸ்கரண்ணாச்சி தன் கையிலிருந்த தாம்பாளத்தை மண்ணுருவத்தின் கால்களுக்குக் கீழே வைத்தார். மூடியிருந்த துணியை விலக்க அதன் ஒரு பாகத்தில் பூரணசாந்தி அன்னம் இருந்தது. பருப்பும் குழம்பும் காயும் சாதத்துடன் கலந்து வண்ணக்கலவையாக இருந்தது. இன்னொரு மூலையில் பூஜைப் பொருட்கள் இருந்தன. கட்டத்தாத்தா அதிலிருந்து பசுமஞ்சள் பொடியை கைகளில் கொட்டி அதை முழுவுடலுக்கும் தெளித்தார். ஈரமண்ணில் அவை ஈர்ப்புடன் ஒட்டிக் கொண்டன. அதேபோல் அடுத்து குங்குமத்தையும் சுற்றி வந்து தூவினார். கொத்தாக ஊதுவத்தி குச்சிகளைப் பொருத்தி அருகில் நிலத்தில் ஊன்றி நிறுத்தினார்.

கரும்பழுப்பு மண்ணில் அப்பொடிகள் வண்ணக் குழம்புகளாக கரைந்து படர்ந்திருந்தன. “சீலித்தூர் தேரோட்டக் கூட்டத்தைப் பாத்துருக்கியா? சொசைட்டி ஆபீஸ் மாடியில நின்னு பாத்தா இப்படித்தான் இருக்கும். மொத்தமா ஒத்த ஆள் மாதிரி. எல்லா கலர் உடுப்பும் சேத்து போட்டிருக்குற ஒத்த முரட்டு ஆள் கணக்கா.”

தன் மெல்லிய கரங்களால் உணவை உருளைகளாக ஆக்கி தட்டில் வைத்து பாஸ்கரனிடம் தந்தார். சற்று தள்ளி பம்ப் ஸ்டேஷனை ஒட்டியிருந்த மரஉச்சியில் கருமையின் தீற்றலாக காகங்கள் அமர்ந்து கரைந்து கொண்டிருந்தன. தெருமுனை சாமியூர்வலத்தின் நாதஸ்வர ஓசையைப்போல் அந்தக் காகங்களின் கூச்சல் அனைவரையும் பரபரப்பு கொள்ளச் செய்தது.

ராமன் கிண்டலாகப் “பெரியப்பா, பசி பொறுக்கமாட்டாரு போலயே, துணைக்கு எல்லா மூத்தாளுகளையுமில்லா கூட்டிட்டு வந்துருக்காரு,” என்றார். “பின்ன, எத்தனை பேருக்கு வட்டிக்கடன் கொடுத்தவரு, தனியா வந்து நிக்க சங்கடமால்ல இருக்கும்,” என்றார் கதிரேசன். வேண்டுமென்றே அனைவரும் பலமாகச் சிரித்தனர்.

ஒருக்கணம் யோசித்த பாஸ்கரண்ணாச்சி தட்டை அனைவரையும் நோக்கி நீட்டினார். முதன்முறையாக அவர் முகத்தில் புன்னகை எழுந்தது. “எந்த விசேஷத்துக்கு எங்க வீடு தனியா சாப்பிட்டிருக்கு? கூட்டங்குறையாத அடுப்பாங்கரை பந்தி இருக்கப்பட்டது லோகய்யா வீடு. அவரோட கடைசி இடம் இது. இங்கயும் அதே வழக்கந்தான்.”

அனைவரும் ஆர்வமாக ஆளுக்கொரு உருண்டையை எடுத்துக்கொண்டனர். கதிரேசன் மாமா அவரைக்காய் அதிகமாய் இருந்த  உருண்டையை எடுத்துக்கொண்டு பம்ப் ஸ்டேஷன் மதில் சுவரை அணுகினார். அவர் அப்பா சுந்தரத்திற்கு அவரைக்காய் என்றால் உயிர். இருப்பதிலேயே கருமையான காகம் நோக்கிச் சென்றார். அத்தனை வெளிச்சத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் கறுப்பு நிறம் கொண்டவர் சுந்தரம்.

ராமன் ஒருபக்கம் சாய்ந்தவாறு தத்தி நடக்கும் காக்கையை நினைத்து சோற்றை வைத்தான். ஒவ்வொருவரும் ஏதோவொரு காகத்தில் தன் முன்னோர்களைக் கண்டுகொண்டனர். கழுத்தின் அசைவில், கண்ணின் உருட்டலில், அலகின் கோதலில், கால் நகத்தின் மினுப்பில் என அவை வெளிப்பட்டன.

மதில் சுவரில் பிண்ட வரிசை உருவானது. சிறுதும் பெரிதுமான காகங்கள் சிறகொடுக்கி வந்து அமைந்தன. வளைந்த அலகால் உணவை அள்ளி பின் தலையை மேல்நோக்கித் தூக்கி அண்ணாந்து விழுங்கின. கடைசியாக பெரிய அளவிலான அண்டங்காக்கா வந்து மதிலை ஒட்டிய மரக்கிளையில் அமர்ந்தது. தவிப்புடன் நடந்து தன்னுடைய கவளத்தை வைத்தார் பாஸ்கரன். அம்பைப்போல அலகை முன்செலுத்தி வந்து சில நொடிகளில் அனைத்தையும் உண்டு முடித்தது. இடம் வலமாகக் கழுத்தைச் சொடுக்கித் திருப்பி உலோகம் போலிருந்த அலகைக் கால் நகத்தில் ஒருமுறை தேய்த்துத் தீட்டிக்கொண்டது. மீண்டும் ஒரு சொடுக்கலை நிகழ்த்தி வந்த திசை நோக்கி பறந்துவிட்டது.

அனைத்து காகங்களும் உண்டு திரும்பிச் செல்வதுவரை அங்கிருந்தனர். மிக இயல்பாக அந்த எண்ணம் தங்கமணியைத் தொட்டது. மெல்லிய திகைப்புடன் கூட்டத்தில் தன் கண்களை ஓட்டினான். கட்டத்தாத்தா அதில் இல்லை. சுற்றிலும் ஒருமுறை நோட்டம் விட்டு மீண்டும் கொட்டகையை நோக்கிச் சென்றான்.

பாதை வளைந்து திரும்பும் இடத்திலேயே அவரின் உருவம் தென்பட்டது. தனியாகக் குழாய் பம்ப்பை அடித்துக் குடத்தை நிரப்பிக் கொண்டிருந்தார். அருகில் தாம்பாளம் சுத்தமாகக் கழுவி வைக்கப்பட்டிருந்தது. தங்கமணி அவரிடம் சென்றான். நிமிர்ந்து பார்த்தவர் அப்பால் சென்று மண்வெட்டியை எடுத்து வந்தார். மண்வெட்டி அவர் இடுப்பு உயரம் இருந்தது. அதன் கூர்விளிம்பில் கெட்டியாக மண் படிந்திருந்தது.

புரிந்துகொண்டு அவன் குடத்தைச் சாய்க்க மண்வெட்டியை தன் சிறிய விரல்களால் தேய்த்துக் கழுவினார். மண்கட்டிகள் கரைந்து வழிய தகரம் ஈரம் கொண்டு மினுத்தது. அதன் விளிம்புகள் புடவையின் வெள்ளிச் சரிகையை போல் நிறம் மங்காமல் தனித்து ஒளி கொண்டிருந்தது.

கழுவிய மண்வெட்டியைச் சாய்த்து நீர்வழியச்செய்து அதைத் தரைமண் படாமல் அருகிலிருந்த கருங்கல் பாறைக்கு எடுத்துச் சென்றார். அதில் நிறுத்தி தன் கால்பெருவிரல்களை இரும்பு வளையத்தில் அழுத்தினார். ஒரே இழுப்பில் வளையத்திலிருந்து மரக்கைப்பிடியை உருவி எடுத்தார்.

புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த அவனிடம் திரும்பி “சவக்காட்டு மம்பட்டி அதே வெட்டுக்கூரோட ஊர் நுழையக்கூடாது,” என்றவர் இரும்புத் தகட்டை மல்லாக்க திருப்பிப் போட்டார். கவிழ்க்கப்பட்ட தகட்டில் மீண்டும் கைப்பிடியை நுழைத்து விட்டு சைக்கிள் கேரியரில் சொருகினார். அதன் கூர் விளிம்பு இப்போது வான்நோக்கி விரிந்து கிடந்தது. முருகனுக்காக காத்திராமல் சைக்கிளைக் கிளப்பி முத்தண்ணன் தோட்டம் நோக்கி குளிக்கச் சென்றார்.

பின்னால் இருந்து கதிரேசன் மாமாவும் ராமனும் பேசிக்கொண்டு வரும் சத்தம் கேட்டது. “இருந்தவரைய அவரு ஒன்னும் உருப்படியா செய்யலை. வெச்சிருந்த கொஞ்ச பூமியையும் வித்து அழிச்சாரு. இந்தப் பங்குனியோட ஒம்போது வருஷமாச்சு. சவம் போயிசேந்தா போதும்னு தான் இருந்துச்சு. ஆனா இப்போ அது எதுவும் தங்கல பாத்துக்க. என் அப்பன் பின்ன எப்படி இருப்பாருன்னுதான் தோணுது,” குரலில் தங்கமணி அதுவரை கேட்டிராத குழைவு இருந்தது. “அவருக்கு இப்போ சோறு வெக்குறப்போ மனசெல்லாம் ஒரு நினைப்புதான் இருந்தது. என் பையனோட நெனப்பு. கருத்தாளு சுந்தரம் பேரன் அவங்கிற நினைப்பு. அவ்வளவுதான்,” அதற்கு மேல் அவர் பேச விரும்பவில்லை. மற்றவர்கள் வரும்வரை பீடியைப் பற்ற வைத்து ஊதிக்கொண்டிருந்தார்.

“பெருசு எங்கடா?” நினைவு வந்தவராக ராமன் கேட்டார்.

தங்கமணி “இப்பத்தான் கெளம்பிப் போனாரு.” என்றான்.

“அவரு சோறு வைக்கலையாடா?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“சரி, அவருக்கென்ன, குடும்பம் வீடுன்னு அடங்கிக் கெடக்குற ஆளா? இன்னைக்கு எந்தத் தெரு வாசமோ?”

தங்கமணி நகர்ந்து சென்று பாதையோரம் நின்றுகொண்டான். அன்று அனைவருடனும் பம்புசெட்டில் குளித்து முடித்து வீட்டுக்குச் செல்லும்போது வழிமுழுக்க கட்டத்தாத்தாவுக்குப் பின்னால் கேரியலில் குதித்துச் சென்று கொண்டிருந்த தலைகீழ் மண்வெட்டியின் சித்திரமே மனதில் நிலைகொண்டிருந்தது.


பாலாஜி பிருத்விராஜ், கோவை மாவட்டத்தில் பணிபுரிகிறார். சொல்முகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். அவ்வமைப்பின் வழி மாதம் தோறும் இலக்கிய கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார். இவரது பெரும்பாலான சிறுகதைகள் தமிழினி இணையத்தளத்தில் வந்துள்ளது.

முகநூல் : balajiparthee@gmail.com

3 comments for “அனல் அவித்தல்

  1. Niranjana Devi
    September 4, 2021 at 3:11 pm

    தோழர் நவீன்,

    பாலாஜி பிரித்விராஜின் கதை மலேசியா சூழலுக்கு புது வரவு என நினைக்கிறேன். இவரின் கதைகளில் தனி வசீகரம் உண்டு. ஒரு சிறுகதையில் மையமான ஒரு படிமத்தை எடுத்து அதன் மூலம் கதையை வளரச் செய்வார். இந்த கதையில் வந்த தலைகீழ் மண்வெட்டி போல. இந்த கதையில் அந்த தலைகீழ் மண்வெட்டி கொண்டு என்னால் கட்டந்தாத்தாவை உருவகப்படுத்தக் கொள்ள முடிந்தது. இதனையே அவரின் முந்தைய கதைகளான தூளி, உமையொருபாகன் கதைகளிலும் செய்துள்ளார். மேலும் இவரது கதைகளின் காட்சி பலமே இவர் ஒரு தெளிவான கதைச் சொல்லி எனக் காட்டுகிறது. “சீலித்தூர் தேரோட்டக் கூட்டத்தைப் பாத்துருக்கியா? சொசைட்டி ஆபீஸ் மாடியில நின்னு பாத்தா இப்படித்தான் இருக்கும். மொத்தமா ஒத்த ஆள் மாதிரி. எல்லா கலர் உடுப்பும் சேத்து போட்டிருக்குற ஒத்த முரட்டு ஆள் கணக்கா.” என்பது போன்ற துல்லியமான விவரணைகள் கொண்ட கதை.
    மொத்தமும் லௌகீகத்திற்கும், நாம் நிகழ்த்தி வைத்திருக்கும் வாழ்வியல் முறை என்ற சட்டகத்திற்கும் அப்பாற்பட்ட கட்டந்தாத்தா அந்த ஊரின் அனைவருள்ளும் எப்படி குடியேறியிருக்கிறார் என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த தலைகீழ் மண்வெட்டிக் கொண்டு.

    நன்றி,
    நிரஞ்சனாதேவி.

  2. September 5, 2021 at 12:20 am

    கட்டதாத்தா நினைவில் நிற்பார். சாவுச் சடங்குகள் துல்லையமாக வந்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...