இந்துஜா சிறுகதைகள்: தெப்பக்குளத்தில் தேங்கிய நீர்

இந்துஜா ஜெயராமன் மலேசிய தமிழ்ப் புனைவுலகத்தின் அண்மைய வரவு. மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து நாவல் ஒன்றையும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுத் தனக்கென இலக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் என ஒரு சிலரால் புகழ் மாலைகள் சூட்டப்பட்டும் வருகிறார்.

இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஜெ.இந்துஜா ஜெயராமன் சிறுகதைத் தொகுப்பு’ 2021இல் வெளியீடு கண்டது. 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. இத்தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் அனைத்தும் பிரபலமான கதைக் கருக்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.

சிறுகதைகள் குறித்த பொதுப் பார்வை.

புனைவுகளில் இது நல்ல புனைவு இது கெட்ட புனைவு என்றெல்லாம் இல்லை. அனைத்துமே புனைவுகள்தான். அதுபோல திறனாய்வுகளும் ஒரு படைப்பை நல்லது அல்லது கெட்டது என வகைப்படுத்துவதில்லை. ஒரு வாசகனின் வாசிப்புத் தரத்தைப் பொறுத்தே திறனாய்வின் தரமும் அமைகிறது. தீவிர வாசிப்பும் ஆழமான இலக்கியப் புரிதலும் கொண்ட வாசகனின் திறனாய்வு தீட்டப்பட்ட கத்தியாக  அமைந்து துல்லியமாக அனைத்தையும் பதம் பார்க்கும். வெகுஜன ரசனைக் கொண்ட ஒரு வாசகனின் பார்வையானது மிக மேலோட்டமாக அமையும். வெறும் கதை எழுப்பும் மெல்லுணர்ச்சிகளில் களித்துக் கொண்டாடும் தன்மை கொண்டதாக இருக்கும்.

உலக திரைப்பட விழாக்களைக் காணச் செல்லும் தேர்ந்த சினிமா ரசிகர் ஒருவரிடம் நமது சின்னத்திரை சீரியல்களை அறிமுகப்படுத்தினால் என்ன நிகழும்? எளிய ரசிகன் ஒருவருக்கு சீரியலைப் பார்த்து வரும் கண்ணீர் தேர்ந்த உலக சினிமா ரசிகனுக்கு வராது அல்லவா? அதுபோல சீரியல் ரசிகர்களுக்கு உலக சினிமாவில் உள்ள குறியீடும், படிமமும் அதில் காட்டப்படும் அசல் வாழ்க்கையும் புரியாமல் போகலாம். இங்கு இரு தரப்புக்குமே அவரவர் படைப்புகளை முன் வைப்பதில் முழு சுதந்திரம் உண்டு. அதே அளவுக்கான சுதந்திரம் திறனாய்வாளன் எது உலக சினிமா எது சீரியல் என வகை பிரிப்பதும் இலக்கியச் சூழலில் பெறப்பட்ட உரிமைதான். 

புனைவுலகத்தின் காலம் மிக நெடியது. அதன் வளர்ச்சியில்  பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு காலக்கட்டத்தின் தாக்கமும் புனைவுலகத்தின் வடிவங்களையும் கருப்பொருள்களையும் கதைச் சொல்லும் மரபுகளையும் மாற்றியே வந்துள்ளது. அந்தந்தக் கால கட்டத்தில் எழுந்த இலக்கியப் போக்கை அடிப்படையாகக் கொண்டே புனைவுகளுக்கு வரையறைகளும் வகுக்கப்பட்டு வருகின்றன. புனைவுகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதுப்பிக்கப்பட்டு வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஒரு காலத்தில் சிறப்பென போற்றப்பட்டது அடுத்த வளர்ச்சிக்குள் நுழையும்போது ஒருவகை உலுக்கலுக்குள்ளாகிறது. ஒரு காலக்கட்டத்தின் மரபு, தொன்மம், செவ்வியல் என்ற அடையாளங்கள் அடுத்த வளர்ச்சியில் கேள்விக்குறியாக்கப்படும்போது இலக்கிய அதிர்வுகள் நிகழ்கின்றன. இவற்றில் சில மாற்றங்களை ஏற்று புத்தெழுச்சியோடு நகர்கின்றன. பல முரண்டு பிடித்து தேங்கி விடுகின்றன.

நவீன புனைவுலக காலத்தில் தேங்கிய சிந்தனை கொண்ட இலக்கற்றவாதிகளின் படைப்புகள் தெப்பக் குளத்தின் நீர் போன்றதுதான்.  

காலாவதியான விழுமியங்களைத் தூக்கிப்பிடிக்கும் புனைவுகளை வழிப்பாட்டுப் பொருளாக வைத்து அதையே கொண்டாடி கொண்டாடி அதன் அச்சுப் பிசகாமல் புதிய வார்ப்புகள் செய்வதும் இலக்கிய வளர்ச்சியின் அபத்தங்களில் ஒன்றாகும் 

இவ்வகை புனைவுகள் காலங்காலமாகப் பேசி சோர்ந்துவிட்ட விடயங்களையே எந்த வளர்ச்சியும் மீளாய்வும் இல்லாமல் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருக்கும். சிறுகதையின் கருப்பொருள்கள் காலந்தோறும் ஒன்றாக இருக்கலாம், ஆனால் கதைப்பின்னல் மாறவேண்டும். கதைச் சொல்லும் முறையில் புதுமை வேண்டும்.

தமிழின் சிறுகதை இலக்கியம் செழுமையானது. அது தொடங்கியபோதே புதுமைப்பித்தன், மௌனி போன்ற மாபெரும் மேதைகள் உருவாகி, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணான், சுந்தர ராமசாமி என வளர்ந்து இன்று  ஷோபா சக்தி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், அ.முத்துலிங்கம் என உலகின்  எந்த மொழி சிறுகதைக்கும் தமிழ் சிறுகதைகள் நிகரானது என்ற இடத்தைப் பிடித்துள்ளன. மலேசியாவிலும் சீ.முத்துசாமி, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, ரெ.கார்த்திகேசு என எழுபதுகளில் உருவான சிறுகதை அலைக்குப் பிறகு இன்றளவும் அடுத்தடுத்த தலைமுறையால் வலுவான சிறுகதைகள் உருவாகி தொடர்கின்றன. இத்தனை வலுவான அழுத்தமான இடத்தை வைத்துள்ள தமிழ்ச் சிறுகதை சூழலில் ஐம்பது அறுபதுகளில் மலேசிய நாளிதழ்களின் தேவைக்கு ஏற்ப எழுதப்பட்ட கருவை எடுத்து அதே முறையில் கதை சொல்வது என்பதில் என்ன வளர்ச்சி இருக்கிறது? அதை அப்படியே மீண்டும் மீண்டும் அச்சடித்துக் கொடுத்துப் புளங்காகிதம் அடைவதில் என்ன விளைந்துவிடப் போகிறது.

இந்துஜாவின் கதைகளும் தெப்பக் குளத்தில் தேங்கிய நீர்ந்தான்.  பல காலமாகப் பலர் பேசிவிட்ட அதே கருப்பொருள்களையும் கதைச் சொல்லும் முறையையும் கையாண்டுள்ள இவரின் கதைகளை வாசிக்கும்போது சோர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற கதைகளைப் படித்த முன்னறிவு இருப்பதால் இப்படித்தான் இக்கதை முடியும் என்று நம் மூளை அனுமானித்துவிடுகிறது. கதையும் நினைத்தபடியே முடியும்போது வாசகனின் நிலையில் எந்தத் தாக்கமும் பாதிப்பும் ஏற்படுவதில்லை. தேர்ந்த வாசகனின் மனநிறைவு என்பது ஒரு புனைவைப் படித்ததும் அதன்வழி அவன் கண்டடையும் புதுமைகள்தான். அவ்வகை புனைவுகள்தான் கதையைத் தாண்டியும் உரையாடல்களை ஏற்படுத்துகின்றன. அப்படி இல்லாமல் ஒரு நூலின் பக்கங்களுக்குள்ளேயே மடிந்துவிடுகின்ற படைப்புகள் என்றுமே காலத்தால் நிலைப்பதில்லை.

இந்துஜாவின் சிறுகதைத் தொகுப்பில் உள்ள 11 கதைகளில் ஒன்பது கதைகள் அந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலின் பக்கங்களைத் தாண்டி வெளியில் வந்து பேச முடியாத ஊமைக் கதைகள். ஆரம்பம் என்ற கதை கோரோனா காலத்தில் குடும்ப வன்முறையை மையமாகக் கொண்ட கதை. கருப்பொருள் என்ற அளவில் இக்காலத்தில் கவனப்படுத்த வேண்டிய ஒன்றுதான். இந்நோயின் தாக்கங்கள் அகத்தளவும் புறநிலையிலும் மக்களைக் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கி இருக்கின்றன. நோய்தொற்று, மரணம், பணநெருக்கடி, மன உளைச்சல், விளிம்பு நிலை எனச் சராசரி மனிதனின் வாழ்க்கையை நலியச் செய்கிறது கொரோனா. இந்தத் தாக்கம் ஏற்படுத்துகின்ற வலியின் எல்லைகளை அதைக் கடந்தவர்கள் மட்டுமே அறிவர். இந்நோயின் தாக்கத்திலிருந்து மீள எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்த மனித மனங்களின் குரூரங்களையும்  செயல்பாடுகளின் தீவிரத்தன்மையையும் பேசுவதற்கு இந்தக் காலம் போதாது. எழுதுவதற்கு அத்துணைக் கதையாடல்கள் கொட்டிக் கிடக்கும் வேளையில், ‘ஆரம்பம்’ என்ற கதையில் கோரோனாவைக் கொலை செய்திருக்கிறார் இந்துஜா. வழக்கம் போல் கோவில் திருவிழாவில் சந்தித்துக் காதல் கொண்டு, குடும்ப எதிர்ப்பால் ஊரை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்ளும் இளசுகளின் கதைதான். கொஞ்ச நாட்களிலே அது கசந்துவிட போதை பித்துக்கு அடிமையாகிய ஆண் கூட்டி வந்தவளை அடித்துத் துன்புறுத்துகிறான். அந்த ஆணுக்குக் கொரோனா தொற்றுக் கண்டு தனிமைப்படுத்தும் நிலை வந்ததும் குடும்ப வன்முறையிலிருந்து தற்காலிகமாக மீளுகிறாள் அப்பெண். இதுதான் கதை. யாருக்கும் தெரியாமல் ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டு பின்பு துன்பப்படும் அபலைப் பெண்ணின் துயர்களைப் பலரும் பலவாறு பேசி அலுத்துவிட்ட நிலையில் மீண்டும் அலுத்துக் கொண்டு பேசுகிறார் இந்துஜா. கதையின் தொடக்கமே முழுக் கதையையும் காட்டி விட்டது. அடிவாங்கி பயந்து நடுங்கி நிற்கும் அபலைப் பெண்ணும் அவரின் தோழியும் பேசிக் கொள்வதிலேயே முழுக் கதையையும் அனுமானித்துவிட முடிகிறது. அதற்கு மேல் அக்கதையை வாசிக்க தேவையில்லை. கதை எங்குமே வாசகனை இறுக்கிக் பிடிக்கவில்லை. அடுத்தடுத்துச் சம்பவங்கள் அடுக்கப்பட்டுக் கதை பல வெற்றிடங்களை விட்டு பல்டி அடித்துத் தாவி முடிகிறது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரிக்கின்றன என்ற ஊடகச் செய்திகளைக் கொண்டு புனையப்பட்டதுதான் இக்கதையின் அடிப்படையாக இருக்க வேண்டும். கொரோனா கால குடும்ப வன்முறைகள் குறித்துப் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுத்தாளரின் சமூக அக்கறையைக் காட்டுகிறது. அதற்குப் பாராட்டுகள். ஆனால் ஏற்கெனவே செவிவழிச் செய்தியாகவும், ஊடகத் தகவல்களாகவும், அறிவுரையாகவும், ஆய்வுகளாகவும், கதைகளாகவும் வாசகனைச் சென்று சேர்ந்துவிட்ட செய்தியை மீண்டும் சிறுகதையாகக் கொடுக்க வேண்டும் என்பதன் ஏரணம் என்ன? ஒரு சமூகச் சிக்கலுக்குள் பல கோணங்களும் அதன் அடி ஆழத்தில் பலர் காண மறந்த மறுத்த மெய்யியல்களும் படிந்து கிடப்பதென்பது வாழ்க்கைப் பற்றிய ஆழமான தரிசனத்தின் இயல்பு. இதன் அடிப்படையில் தான் எடுத்துக் கொண்ட கருவிற்குள் பேசப்படாத கோணங்களைக் கண்டறிந்து எழுதியிருக்கலாம்.  ஆனால்  ஏற்கெனவே பலர் அரைத்து நைந்துவிட்ட கதையையே மீண்டும் அரைத்துள்ளார் இந்துஜா.

அடுத்த கதை ‘நமக்கிட்டப்படி என்றிரு மனமே’. இக்கதையில் சொல்ல வந்த செய்தியைத் தலைப்பே மிக அழுத்தமாகச் சொல்லிவிட்டபடியால், இந்தக் கதையையும் வாசிக்கத் தேவையில்லை.

தன் வாழ்வாதாரத்தை நிறுவிக் கொள்வதற்குக் கடுமையாக உழைக்கும் திறம் கொண்ட பெண் எதிர்நோக்குகின்ற சிக்கல்களை மையமாகக் கொண்டுள்ளது. பொதுவாகவே கணவனை இழந்த பெண்கள், இந்தியச் சமூகத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு ஒரு வட்டத்திற்குள் வாழ்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பர் என்ற பழைமைவாதக் கருத்துகளைப் புறந்தள்ளிப் படைக்கப்பட்ட கதை இது. கரு அளவில் சிறப்புப் பெறுகிறது இக்கதை.

ஆனால், மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசப்பட வேண்டிய கருவைக் காற்றில் பறக்கும் இலவம் பஞ்சாகக் கதையில் பறக்க விட்டிருக்கிறார் எழுத்தாளர். கதை நகர்ச்சி வாசகனை எங்கும் ஆழப் பதிய வைக்காமல் அள்ளித் தெளித்து நகர்கிறது.

இக்கதையும் மிக அவசரமாகத் தாவுகிறது. ஏன் இந்த அவசரத் தாவல்? சிறுகதை சொல்ல வந்த செய்தியின் ஆழத்தை வளமாகப் பதிவு செய்ய வேண்டும். அதன் நுண் சித்தரிப்புகள் கதையை உயிரோட்டமாகக் காட்டும். இதுபோன்ற கூறுகள் எதிலும் கவனம் செலுத்தாமல் எதையோ சொல்லிச் சென்றுவிடவேண்டும் என்ற இந்துஜாவின் அவசரம் அவர் கதைகளில் தெரிகிறது.

இக்கதையில் ஆழமாகவும் அழுத்தமாகவும் காட்டவேண்டிய சில தருணங்களை இந்துஜா தவற விட்டிருக்கிறார். படிப்பறிவு இல்லாத கம்பத்துப் பெண்ணாக வரும் சாந்தியின் நுண் உணர்வுகளின் வெளிபாடும் அவளைச் சந்திக்கும் ஆண்களின் ஆதிக்கப் போக்கின் உச்சங்களையும் வெளிக்கொணராமல் சம்பவங்களை மட்டும் அடுக்கிச் செல்கிறது இக்கதை. சம்பவங்களை அடுத்தடுத்து அடுக்கி சமூகத்தில் காணப்படும் பலவீனமான ஆண்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் ஆழமே இல்லாமல் சித்தரிப்பதைக் கதையில் பரவலாகக் காண முடிகிறது. தன் வாழ்க்கையில் அடுத்தடுத்துச் சந்திக்கும் ஆண்களின் சேர்க்கையும் விலகலும் அவள் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளைக் கொண்டு வருகிறது. கணவன் இறந்து போவது, பின் தனக்கு வேலை தந்த சுந்தரம் கிராணி மாரடைப்பால் இறந்து போவது, தொடர்ந்து தன் வேலையாள் சூலையன் மரணமடைவது என ஆண்களின் மரணங்களும் இயலாமைகளும் கதை நெடுகிலும் காண முடிகின்றது. கதையில் பெண்ணின் ஆளுமையையும் போராட்ட குணத்தையும் காட்டவேண்டும் என்பதற்காகக் ஆண்கள் அடுத்தடுத்துச் சாகடிக்கப்படுவதும் இழிவானச் செயல்கள் செய்பவர்களாகக் காட்டுவதும் கதையில் வலிந்து புகுத்திய சம்பவங்களாகவே அமைகின்றன. 

சிறுகதை இலக்கணத்தின் மிக முக்கியமானது கதையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லும் காட்சியும் சம்பவமும் கதையின் அவயங்களாகச் செயல்பட வேண்டும். கதையோடு ஒட்டாமல் இயற்றப்படுகின்ற கூறுகள் அனைத்தும் கதையின் கருவையும் வடிவத்தையும் சிதைக்க வல்லது. அவ்வகையில் இக்கதையின் தொடக்கத்தில் பூனை ஒன்று எட்டிப் பார்க்கிறது. பின் சாந்தியின் கெட்ட வார்த்தையைக் கேட்டதும் அதுவாகவே உறங்கிப் போகிறது. இந்தப் பூனையைக் குறியீடாகவோ, படிமமாகவோ, உருவகமாகவோ கதையில் எங்குமே பொருத்திப் பார்க்க முடியவில்லை.

அடுத்த கதை ‘ஜாகா பண்ணுங்க!’ இக்கதையில் என்ன இருக்கிறது? இரு தோழிகளுக்கிடையே நிகழும் உரையாடல்தான். உடலை ‘ஜாகா பண்ணாமல்’  பருமனாக இருப்பதால் கணவன் அன்பு செலுத்த மறுப்பதாகச் சுகந்தியிடம் குறைப்பட்டுக் கொள்கிறாள் ஜோதி. இதையே காரணம் காட்டி கணவன் தன்னை விவாகரத்துச் செய்து விட்டால், சுகந்தியையே தன் கணவரைத் திருமணம் செய்துகொள்ளக் கேட்கிறாள். திடுக்கிட்ட சுகந்தி அவளுக்கு அறிவுரை சொல்லி அனுப்பும் வேளையில் ஜோதியின் கணவரிடமிருந்து சுகந்திக்கு கொஞ்சலாக ஒரு குறுஞ்செய்தி வருகிறது. கதை முடிகிறது.

மிகச் சிறிய கதை. வெகுமக்கள் ரசனைக் கொண்ட கதை. இக்கதையின் வாசிப்பில் ஒரு வாசகன் கண்டடைவது என்ன? சுகந்திக்கும் ஜோதியின் கணவருக்கும் உள்ள கள்ளத் தொடர்பை மட்டும்தான். அதைக் தாண்டி இக்கதையில் என்ன இருக்கிறது என்றால் கணவனைக் கைக்குள் வைத்துக் கொள்ள உடலை ‘ஜாகா பண்ணுங்கோ’ என்ற பரப்புரை மட்டும்தான். கணவன் மனைவிக்கிடையே நிகழும் பிணக்குகளின் மிக நுட்பமான மனத்தின் வெளிபாடுகளையும் முரண்பட்ட செயல்பாடுகளையும் காலங்காலமாகத் தமிழ்ப் புனைவுலகம் மிக ஆபாரணமாக அள்ளிச் சேர்த்துள்ளது. ஆனால் இந்துஜா எந்த அலட்டலுமில்லாமல் எதையோ சொல்லிச் செல்கிறார். இதற்கு நம் தொலைக்காட்சி விளம்பரங்கள் போதுமானவை அல்லவா? சிவப்பாக இருந்தால் கணவன் கட்டுண்டு கிடப்பான் என அழகு கிரீம்களை விற்கவும் உடல் வடிவாக இருந்தால் காதலன் மயங்கி கிடப்பான் எனச் சொல்லவும் வணிகர்களின் வியாபார உத்தி போதுமல்லவா? சிறுகதையும் அப்பணியைத்தான் செய்ய வேண்டுமா?

அழுத்தமில்லாத அடுத்த படைப்பு ‘பகை’. இது பழி வாங்கும் பேயின் கதை. கொலை செய்யப்பட்ட  கிச்சானின் ஆவி பானா ரமேசைப் பழிவாங்குகிறது. இதுதான் கதை. இதற்குமேல் இந்தக் கதை குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை.  அடித்துக் காயப்படுத்திப் பள்ளத்தில் தூக்கிப் போட்ட ரவுடி மாணிக்கத்தை விட்டுவிட்டு ஏன் பானா ரமேசைப் பழி வாங்குகிறது கிச்சானின் ஆவி? ஆவிக்குக் கண்ணில்லை போலும். தன் சட்டவிரோத வணிகச் செயல்பாடுகளுக்கு வலது கரமாக விளங்கிய பானா ரமேஷ் இறந்து கிடந்ததைக் கண்ட சீனத் தவுக்கே எந்த அதிர்ச்சியும் இல்லாமல் ஆசிட் தொட்டியில் முங்கி அழிக்கச் சொல்கிறான்.

இக்கதையின்வழி இந்துஜா இருள் உலக தாதாக்களின் நிலையைக் காட்ட முயற்சி எடுத்திருக்கிறாரா? என்றால் கண்டிப்பாக இல்லை.  தமிழ்ப் பேய்ப்படங்களில் வரும் திகிலூட்டும் காட்சிகளைத் தழுவி கதையென சொல்லிச் திகைப்படைய வைக்க முயற்சி எடுத்திருப்பதாகத்தான் தெரிகிறது. வாசகனைக் கிளர்ச்சியூட்டும் முயற்சி மட்டுமே. ஆம்! ஒரு வெகுசன படைப்புக்கான அதிக பட்ச நோக்கம் அது மட்டுமே. ஆனால் ஒரு வெகுசன சிறுகதைக்கான தகுதியும் இல்லாமல் இக்கதை உருவாகியுள்ளதுதான் வியப்பு. கதையே இல்லாமல் வாசகனிடம் கதைக்க முயற்சித்திருக்கிறார்.

அடுத்து வாசகனைப் புண்படுத்திய கதை ‘புண்பட்ட நெஞ்சம்’. இதைக் கதை என்பதைவிட காலியான இடத்தை நிரப்பும் பயிற்சி எனலாம். இக்கதையைப் படித்து முடித்ததும் ‘புண்பட்ட நெஞ்சம்’ என்ற தலைப்பில் விடப்பட்ட அடுத்த இரு சொற்களுக்கான இடங்களை ‘புகைவிட்டு ஆத்துங்கோ…’ என்று நிரப்பிக் கொள்ள வேண்டியதுதான். அவ்வளவுதான். அதற்குமேல் இதைப் பற்றி பேச எதுவுமே இல்லை. இருந்தாலும் ஒரு விடயம் இங்கு உறுத்துகிறது. தலைப்பைப் ‘புண்பட்ட நெஞ்சம்’ என்று வைத்து விட்டு கதையில் எங்குமே சுதா புண்பட்டதாகக் காட்டாமல் புகையை மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறாள். சம்பவங்களை மட்டுமே கோர்வையாக எழுதுவது சிறுகதை அல்ல. சம்பவங்களை மையமாக வைத்துச் சிறுகதைகள் படைக்கப்படுகின்றன. அதில் கதை ஊடுருவி அச்சம்பவத்தின் இன்னொரு கோணத்தைக் காட்டி நிற்கும். இவ்வாறான கதைகள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் பாரம்பரியமான புரிதலை மாற்றிக் காணாத இருள்வெளிகளை காட்டி நிற்கும்.

‘எண்ணப்பறவை’ என்ற தலைப்பில் எண்ணங்களில் அசாத்திய வலிமையையும் அதன் எல்லையற்ற நீட்சியையும் பேசப் போகிறார் என்ற உந்துதலில்தான் கதைக்குள் நுழைந்தேன். ஏமாற்றம்தான். எத்தனையோ கதைகளில் வாசித்து அலுத்துவிட்ட அதே பின்நோக்கி பார்க்கும் நிலை. இக்கதை தன் பிறந்த இடத்தை விட்டுவிட்டுச் சிங்கைக்கு வந்து வேலை பார்க்கும் ஓர் இளைஞனின் எண்ண ஓட்டம்.

வேலனின் ‘எண்ணப்பறவை’ 20 தசாப்தங்களைப் மீட்டு பின்நோக்கிச் சென்று உடல் நலம் குன்றியிருக்கும் தன் பாட்டியின் வாழ்க்கையைப் பின்நோக்கி பார்க்கிறது. அதில் பாட்டியோடு வாழ்ந்த சில கணங்களை நினைத்துப் பார்க்கிறான். பாட்டி இறந்து விடுகிறாள். கதை முடிகிறது.

இருப்பினும் இக்கதையில் ஆறுதலாக அமைந்த விடயம் ‘பருந்து கொண்டு வருகிற சஞ்சீவி வேர்’ பற்றிய செய்திகள்தான். இந்தச் செய்திகளை வலுவாக்கும் வகையில் கதையை வேறொரு தளத்தில் நகர்த்திச் செல்ல வாய்ப்பிருந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார் இந்துஜா. தனக்குத் தெரிந்த சஞ்சீவி வேர் பற்றிய செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே எண்ணப்பறவையை ஓடவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இறுதியாக, எண்ணப்பறவையே பறக்க முடியாமல் சிறகொடிந்த நிலையில் இருக்கும்போது, கதையின் இறுதியில் ஏன் ‘பிராந்து’ பறக்கிறது என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. 

‘சதுரங்க ஆட்டம்’ சிறுகதையில் ஆசையாசையாய் சீராட்டிப் பாராட்டி வளர்த்தப் படித்த பெண் வேலை வெட்டி இல்லாத ஆணை காதலிக்கிறாள். அது ஈஸ்வரியின் பெற்றோர்களுக்கும் பிடிக்கவில்லை. தன் மகளுக்கு அறிவுரை கூறித் திருத்த முயற்சிக்கிறார்கள் பெற்றோர்கள்; முடியவில்லை. பிறகு சினிமாவில் வருவதுபோல் அந்த ஆணுக்குப் பெண்ணின் தந்தை பரீட்சை வைக்கிறார். ஓர் ஆண்டுக்குள் நல்ல வேலையில் அமர்ந்தால் திருமணம் செய்து வைப்பதாக வாக்களிக்கிறார். அந்த ஆண் ஒராண்டில் தனக்கென நல்ல வேலையைத் தேடிக் கொள்ளாததால் ஈஸ்வரியை மறந்துவிடச் சொல்கிறார்கள். ஈஸ்வரி விஜயனை மணப்பதிலே விடாப்பிடியாக இருக்கிறாள். இறுதி ஆயுதமாக ஈஸ்வரியின் பெற்றோர்கள் மாந்திரீகன் ஒருவனைச் சந்தித்து வழிகேட்கின்றனர். மாந்திரீகன் கொடுத்த கலவையை உணவில் கலந்து கொடுக்கிறார்கள். மறுநாள் ஈஸ்வரி இனி விஜயனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறுகிறாள். பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இறுதியில், ஈஸ்வரி விஜயன் தன் அத்தை மகளுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றாள்.

இக்கதையும் சம்பவங்களின் அடுக்குகளில்தான் நிகழ்கிறது. எழுத்தாளர் கதையில் எங்கும் வாசகனுக்கு இடைவெளி விடாமல் மிக மேலோட்டமாகக் கதை நகர்த்திச் செல்கின்றார். அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதலில் வாசகப் பங்கேற்பை மறுதலித்துவிட்டு கதைச் சொல்கிறார் இந்துஜா. கதையின் வாழ்வனுபவத்தை எழுத்தாளன் சிருஷ்ட்டிக்கும் சொற்கள் வழங்கவேண்டும். சொற்களின்வழி கதை காட்டப்பட வேண்டுமே தவிர சொல்லப்படக் கூடாது. சொல்லும் கதைகள் என்றுமே வாசகனுக்குப் பெருந்தாக்கத்தைத் தராது.  ஏற்கனவே பார்த்த, கேட்ட, சலித்த கதைப் போக்கை மீண்டும் அப்படியே இவரின் கதைகள் பேசுகின்றன.

‘குற்றம் புரிந்தவள்’ வாசகனின் மெல்லுணர்ச்சியைத் தட்டுகின்ற கதைதான். முழுமைப் பெறாத கதையில் முன்னுக்கும் பின்னுக்கும் சில முடிச்சிகளைப் போட்டு வாசகனின் மெல்லுணர்ச்சிகளுக்குத் தீனி போடுகிறார் இந்துஜா. நடேசனின் எட்டாம் நாள் துக்கத்தில் தொடங்குகிறது கதை. பருவ வயதில் சுந்தரத்திடம் ஏமாந்து தோட்டத்தை விட்டு ஓடிய  ராஜம்மா தன் தந்தைக்கு ஏற்படுத்திய அவப்பெயரை எண்ணி குற்ற உணர்ச்சியால் வருந்துகிறாள். இதுதான் கதை. ராஜம்மா பருவ வயதில் திருமணமாகாமலே கருவுற்றதால் தோட்டத்தை விட்டு ஓடுகிறாள். பின்பு குழந்தையைப் பெற்றெடுத்து ஊருக்குத் திரும்புகிறாள். தந்தை நடேசன் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ராஜம்மாவை ஏற்றுக் கொள்கிறார். சுந்தரம்தான் ராஜம்மாவைக் கெடுத்தவர் என்பதை அறியாமல் அவருக்கே பேசி ராஜம்மாவைத் திருமணம் செய்து வைக்கின்றார். கதையின் இறுதியில் நடேசன் உயிர்விடும்போது சுந்தரம்தான் ராஜம்மாவின் வாழ்க்கையைக் கெடுத்தவன் என்ற உண்மையை உணர்ந்திருக்கக் கூடும் என்பதோடு கதை முடிகிறது. ராஜம்மா வீட்டை விட்டு ஓடியது, தனியாக நின்று வாழ்க்கையை எதிர்கொண்டது, வீட்டுக்குக் கைக்குழந்தையோடு திரும்பியது, தன்னைக் கெடுத்த சுந்தரத்துக்கே திருமணம் செய்து வைத்தது போன்ற கதைச் சம்பவங்களில் கதைப்பாத்திரங்களின் மன உணர்வுகளையும் அதை எதிர்கொள்ளும் விதத்தையும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் கடத்தியிருப்பது இக்கதையின் மிகப்பெரிய பலவீனம்.  மனித மனங்கள் அசாத்திய தன்மைகளையும் விசித்திர செயல்பாடுகளையும் கொண்டது. தன்னைச் சுற்றிக் கட்டமைத்த எந்த எல்லைகளையும் மீறி விடுதலை உணர்வோடு செயல்படக்கூடியது. அதேவேளை, அதே கட்டுக்குள் அடங்கி ஒடுங்கி சிறைபட்டும் அழியக் கூடியது. இந்த இரண்டு நிலைகளையும் மிகத் தாராளமாகப் பேசுவதற்கு இடம் இருந்தும் அதைப் பேசாமல் கதையைப் பலவீனப்படுத்தி இருக்கிறார் இந்துஜா.  வலியும் வன்மமும் வஞ்சமும் நிறைந்திருக்க வேண்டிய கதை சப்பென்று முடிந்து போகிறது.  

‘பாலை’ வழக்கமான அறிவுரைக் கதை. இந்த உலக மக்களின் செய்லபாடுகள் வளமற்ற பாலை நிலத்தை ஒத்தது என்ற மதிப்பீடு இக்கதையின் கருவாக அமைகிறது. மனிதன், விலங்கினம், சுற்றுச் சூழல் என்ற முப்பொருள்களுக்கிடையில் ஏற்படுகின்ற போராட்டக் களத்தைக் காட்ட விழைகின்றார் எழுத்தாளர். இதில் மனிதன் பாலை நிலத் தலைவனாக நின்று தன்னைச் சுற்றி இருக்கின்ற அனைத்தையும் சுயநலத்தால் நாசப்படுத்துகிறான். அனைத்திற்கும் பொதுவான இடமாக அமைந்த பூமியை  மனிதன் மட்டும் தனதாக்கிக் கொண்டு பிறவற்றை எல்லாம் அழிக்கும் நிலையை இக்கதையில் இரண்டு சம்பவங்களைத் தொடர்பில்லாமல் பின்னி அறிவுரை வழங்குகிறார் இந்துஜா. எங்கிருந்தோ வந்து சேர்ந்த இரு நாய்க்குட்டிகளின் மேல் அக்குடியிருப்பு மக்கள் காட்டும் புறக்கணிப்பும் எல்லை மீறிய வன்முறைகளும் முதல் பகுதியில் சொல்லப்படுகிறது. (காட்டப்படவில்லை) சட்டென அடுத்தப் பகுதியில் ஆற்றில் நீர் தூய்மைக்கேடு சிக்கலால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அக்குடியிருப்பு மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டுச் செல்கின்றனர். அப்போது ரேகாவிடம் ‘நிலம் வெறும் மண்ணல்ல’ என்ற துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது. கதை முடிகிறது. இக்கதையில் அறிவுரை சொல்லும் நிலையைத் தவிர்த்து, நிகழும் இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சரியான கோர்வையை ஏற்படுத்தியிருந்தால் கதை அதன் நோக்கத்தை அடைந்திருக்கும்.

அடுத்த கதை ‘தீட்டுத் துணி’. இந்துஜாவின் கதைத் தொகுப்பை வாசித்ததில் ஆறுதலாக அமைந்த கதை. யாரும் பேசத் துணியாத கருவை முன்வைத்து எழுதப்பட்டது.  மாதவிடாய் சிக்கலை முன்வைத்து எழுதப்பட்ட கதை. பெண்கள் பருவமடைந்தது முதல் மாதவிடாய் போக்கால் எதிர்நோக்கும் சிக்கல்களைப் பள்ளிச் செல்லும் பெண் பிள்ளைகளை மையமாக்கி இச்சிறுகதையினைப் படைத்துள்ளார். பள்ளிச் செல்லும் மாணவிகள் இச்சிக்கலால் எதிர்நோக்கும் வலி, அசௌகரியங்கள், மன உளைச்சல்கள், புறக்கணிப்புகள், அவமானங்கள் போன்றவைகளை எந்தப் பூடகமும் இல்லாமல் உள்ளதை உள்ளவாறே சொல்லிச் செல்வது கதைக்கு வலு சேர்க்கிறது. சராசரி குடும்பத்தில் பிறந்த வயதுக்கு வந்த பள்ளிப் பிள்ளைகள் பணநெருக்கடியால் சந்தையில் விற்கப்படுகின்ற வசதியான அணையாடை வாங்க இயலாமல் பருத்தியிலான கைலிகளைப் பயன்படுத்தி அணிகின்ற குறிப்பு வாசகனை உலுக்குகிறது. மேலும், வகுப்பறைகளிலும் பள்ளி வளாகத்திலும் இச்சிக்கலைச் சமாளிக்க பெண் மாணவர்கள் படும்பாட்டையும் இக்கதை துல்லியமாக உணர்த்துகிறது. இருப்பினும், இக்கதை மூன்றாம் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுச் செல்வதால் உயிரோட்டமின்றியும் சில இடங்களில் விமர்சனப் போக்கும் தென்படுகிறது.

இந்தத் தொகுப்பில் ஆறுதலாக அமைந்த இன்னொரு கதை 11:11. பெண்களை மையப்படுத்துவதிலிருந்து விலகி, எண் உளத்தியல் சார்ந்த தத்துவார்த்த அலசலாக இக்கதை அமைகிறது. வாழ்க்கை என்பது எண்களால் பின்னப்பட்டது. பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் வயது மட்டும் எண்களால் கணக்கிடப்படுவதில்லை. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும் எண்களால் ஆனது. இறப்பு ஒன்றே எண்ணிக்கையில் அடங்கும் வாழ்க்கையை விடுவிக்கும் என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.

பாலன் 11:11 என்ற எண்களின் கட்டுக்குள் சிக்கிக் கொண்டு தன் வாழ்க்கையில் தடுமாறும் தருணங்களைக் காட்டுகின்றது. கணினித் திரையில் தற்செயலாகக் கண்ட 11:11 என்ற எண் தொடர்ந்து பல தருணங்களில் அவனுக்கு முகம் காட்டுகிறது. இதை உணர்ந்தபோது பாலன் 11 எண் பற்றிய தேடலில் தீவிரமாக இறங்குகிறான். அந்த எண் குறித்த சாதகப் பாதக நிலைகளைக் கண்டறிகின்றான். அதன்படி வாழ்க்கையை நகர்த்தும் முயற்சியில் இறங்குகிறான். ஆனால், அவன் கணித்த எண் கணிதத்தின் வரைவுகளையும் மீறி இயங்குகிறது வாழ்க்கை என்ற கருத்தோடு கதை நிறைவு பெறுகிறது. வாசிப்பில் புதியதொரு அனுபவத்தைக் கொடுத்த இக்கதை சொல்லப்பட்டு நகர்த்தப்படுவதை விட காட்சிப்படுத்தப்படிருந்தால் மேலும் சிறந்திருக்கும்.

சிறுகதைகள் திரைப்படக் கதைகள் அல்ல. பொதுவாகத் திரைப்படக் கதைகள் வெகுசன ரசனைகளின் கூட்டாக அமைந்திருக்கும். தன்னை நோக்கியிருக்கும் பார்வையாளனை அது மிகை உணர்ச்சிக்கு உட்படுத்திக் கிளர்ச்சியைத் தூண்ட வல்லதாக அமையும். பார்வையாளன் எதை விரும்புகிறான், அவன் உள்ளம் எதை எதிர்பார்க்கிறது என்பதை மிகை உணர்ச்சி ரசனையோடு வழங்கியிருக்கும் சினிமா கதைகள். அவற்றுள் இயல்பு வாழ்க்கையின்  சமநிலைத் தன்மை இருக்காது. வாழ்க்கையின் பல இயல்புகளை மறைத்து ஒன்றின் பக்கங்களை மட்டும் மிகை உணர்ச்சியோடு புரட்டியிருக்கும். அதைப் பார்க்கின்ற பார்வையாளன் அது மட்டுமே வாழ்க்கையின் இன்பியல் பகுதி அல்லது துன்பியல் பகுதி என வரித்துக் கொண்டு படம் முடிந்ததும் வெளியில் செல்கிறான். இது வெகுஜன கலை நுகர்ச்சி.

சிறுகதைகளைத் திரைப்படங்கள் ஏற்படுத்தும் தூண்டலில் எழுதுவது படைப்பை பலவீனப்படுத்தும். சிறுகதை, நாவல் போன்ற யாதார்த்த வாத புனைவுகளில் மிகை உணர்ச்சிக்கான அழுத்தங்கள் இருக்காது. மிகச் சமநிலைத் தன்மையோடு சொல்லுகின்ற செய்தியை அழுத்தமாகவும் ஆராய்ந்தும் உரைத்திருக்கும். சொல்லுகின்ற கதைகளில் தனிமனித தரிசனத்தையோ அல்லது சமூகத்தின் பிரக்ஞையையோ பேசும்போது முழுமையான சித்திரம் காட்சியாகியிருக்கும். அதில் ஓர் அடர்த்தி இருக்கும். அவ்வடர்த்தியானது சொல்லுகின்ற செய்தியின் அத்தனை கூறுகளையும் கொண்டு வந்து வாசகனுக்குப் படைத்து முழுமையையும் ஓர்மையையும் கொடுத்திருக்கும். இது நவீன கலைப் படைப்பின் அடிப்படை. 

இந்துஜாவின் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் அத்தனை கதைளும் திரைப்படத் தாக்கம் கொண்ட அடர்த்தியில்லாத வெகுஜன ரசனைக் கதைகளே. இங்கு வெகுஜன ரசனைக் கதைகள் என்பது ஏற்கெனவே திரைப்படங்களிலும் நெடுந்தொடர் நாடங்களிலும் வெகுஜன பிரதிகள் வாசிப்பிலும் பேசிப் பேசி அலுத்துவிட்ட செய்திகளை மீண்டும் தன்னுணர்ச்சிக் கிளர்ச்சியில் சிறுகதையென்று சொல்லிக் கொண்டு எழுதுவது. இவர் கதைகள் சினிமாத்தனம் மிக்கதுதான் என்பற்கு உச்சச் சான்றாக அமைவது ‘ஆரம்பம்’ என்ற கதையின் முடிவுதான். கணவனின் அடி உதையிலிருந்து தற்காலிகமாக விடுபட்ட சுமதியின் வாழ்க்கை புதிதாகத் தொடங்குகிறது என்பதைக் காட்ட “அம்மா டிவீயில அஜித்தோட ‘ஆரம்பம்’ படம் போட்டுட்டாங்கம்மா…” எனக் கத்துவது தெளிவாகக் கேட்டது’ எனக் கதையை முடிக்கிறார் இந்துஜா.

மனதின் நுட்பமான திரிபு நிலை, மேலே தெரியும் உணர்வுகளுக்கு அப்பால் அடியாழத்தில் நடக்கும் இன்னொரு நுண் உணர்ச்சி, தகவல்களைப் புனைவாக்கும் கலை, வாழ்க்கை சார்ந்த விமர்சனத்தன்மை, அறிந்த வாழ்க்கையில் அறியாத நுட்பத்தைத் தொடும் திறன், குறியீடுகளால் காட்சியை விரிவாக்கும் பாங்கு, காலத்தின் மாற்றங்களைச் சித்தரிப்புகளால் காட்சிப்படுத்தும் நடை, இவற்றை உள்ளடக்கிய விரிந்த வாழ்க்கைச் சித்திரம் போன்றவற்றை அடுத்தடுத்து எழுதும் தம் படைப்புகளில் இந்துஜா அவசியம் கவனிக்க வேண்டும், இல்லாவிட்டால் முன்பே சொன்னதுபோல அது தெப்பக்குள நீராகவே மிஞ்சும்.

தெப்பக்குளம் என்பது கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட நீர் தேக்கம். அது பொது பார்வையில் கோயிலுக்கு அருகில் அமைந்த, தெய்வீக காரியங்களுக்குத் தேவையான நீரைக் கொடுக்கும் ஒரு இடம். கோயிலின் புனிதம் அதற்கும் ஒட்டிக் கொள்கிறது. தெப்பத் திருவிழா கூட உண்டு. ஆகவே அந்த தெப்பக் குளம் பற்றியும் அதன் நீர் பற்றியும் வெகுமக்கள் பெருமிதமாக நினைத்துக் கொள்வர். ஆனால் கூரிய பார்வை உடைய ஒருவனுக்கு தெப்பக்குளத்தின் நீர் தன் ஓட்டத்தை இழந்த, நீண்ட காலம் தேங்கிக் கிடக்கும் நீர் என்பது புரியும். கோயிலின் பக்கத்தில் இருப்பதால் மட்டும் அதன் நீரைச் சிறப்பானது என்று சொல்லிவிட முடியாது. அது தேங்கிய நீர்தான். இந்துஜாவின் சிறுகதைகளின் கருத்துகள் எல்லாம் வெகுமக்களைக் கவரும் அல்லது அவர்கள் சிறந்த சமூகக் கருத்து என்று நம்பும் கருக்கள்தான். ஆனால் அவை எந்தச் செழிப்பும் இல்லாமல் பழைய நீர்தேக்கமாக இருக்கின்றன.   

முகநூல்: https://www.facebook.com/ilampuranan.kiramany

3 comments for “இந்துஜா சிறுகதைகள்: தெப்பக்குளத்தில் தேங்கிய நீர்

  1. Viji
    September 1, 2021 at 12:07 pm

    சிறுகதை எழுத்தின் நுண்ணிய பார்வையினை எடுத்தியம்பிய அற்புத கட்டுரை. குறிப்பாக இந்த வரிகளை நான் பலமுறை வாசித்து வாசித்து உள்வாங்கினேன். //மனதின் நுட்பமான திரிபு நிலை, மேலே தெரியும் உணர்வுகளுக்கு அப்பால் அடியாழத்தில் நடக்கும் இன்னொரு நுண் உணர்ச்சி, தகவல்களைப் புனைவாக்கும் கலை, வாழ்க்கை சார்ந்த விமர்சனத்தன்மை, அறிந்த வாழ்க்கையில் அறியாத நுட்பத்தைத் தொடும் திறன், குறியீடுகளால் காட்சியை விரிவாக்கும் பாங்கு, காலத்தின் மாற்றங்களைச் சித்தரிப்புகளால் காட்சிப்படுத்தும் நடை, இவற்றை உள்ளடக்கிய விரிந்த வாழ்க்கைச் சித்திரம்//

    • Ipoh Shree
      September 1, 2021 at 2:59 pm

      இந்துஜா என்பவர் தனது கதை வாசகர்களை சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் எழுதுகிறாரா அல்லது சக எழுத்தாளர்களுக்கு அவரது எழுத்து எண்ணிக்கையை காட்ட எழுதுகிறாராவென உண்மையில் புரியவில்லை.

      கடந்த மே 1-ம் தேதி நடந்து முடிந்த தென்றல் வாசகர் விழாவில், இவரது, நமக்கென என்றிரு மனமே” சிறுகதை சிறந்த கதையாக தேர்வு பெற்று அதற்கு பரிசு பணமாக 300வெள்ளியை வாங்கினார். இப்போது இந்தக் கட்டுரை எழுப்பிய இதே கேள்வியை தான் அன்று எனது மனமும் எழுப்பியது….

      இவருக்கு, நாமும் பெரிய எழுத்தாளர்னு பெயரெடுக்கனும் என்கிற வேட்கையில் பேனா பிடிக்கிறார் போல…அதோடு அவர் யாரோடு தற்போது இணைந்து இருக்கிறார் என பார்த்தால்,ஏன் எதனால் இந்துஜா இப்படி குப்பையை வண்டி வண்டியாக கிறுக்கி தள்ளுகிறார் என்பது எல்லோருக்கும் புரியும்….

      – ஈப்போ ஸ்ரீ.

  2. September 3, 2021 at 11:43 pm

    இந்துஜா சிறுகதைகள் பற்றிய இளம்பூரணனின் விமர்சனம் – ஓர் எதிர்வினை.

    எனது இந்த எதிர்வினை முழுக்க முழுக்க இளம்பூரணனின் விமர்சனத்துடன் அறிவுப்பூர்வமாக முரண்படும் ஒர் எதிர்வினை மட்டுமே. யாருக்குப் பின்னாலோ போய் அணி சேர்வதாக இதை யாரும் கொச்சைப் படுத்தும் அநாகரிகத்தை செய்யமாட்டீர்கள் என்ற நல்லெண்ணத்தில் இதை எழுதத் துணிகிறேன். அணி என்றால், நான் ஏற்கனவே வல்லினம் பாணி எழுத்தாளர் என்று முத்திரைக் குத்தப்பட்டவன்தான். ஆக, நான் ஓர் எழுத்தாளன் என்ற முத்திரை ஒன்றே எனக்குப் போதுமானது.

    முதலில், விமர்சனம் என்றால் என்ன என்ற எனது புரிதலை சொல்லி விடுகிறேன். விமர்சனம் என்பது ஒரு துறை!.. கலை!.. எந்த துறைக்குமே எப்படி ஆழ்ந்த அறிவும் பரந்த வாசிப்பும் கடின உழைப்பும் அவசியமோ அவை எல்லாமே விமர்சனத்துறைக்கும் தேவை என்பதே எனது புரிதல். அதற்கும் மேலாக துறை அறிஞர்களின் கருத்தைத் தேடியபோது, க. நா. சு இப்படி சொல்லியிருப்பதை அறிய நேர்ந்தது.

    “இலக்கிய விமர்சனத்துக்கான அடிப்படையைத் தருவது நூல்களை அனுபவித்து அனுபவித்துப் பண்பட்ட உள்ளமும் அறிவும்தான். விமர்சனத்தில் மிகவும் பயனுள்ளது என்று சொல்லக்கூடியது, ‘நான் படித்து இதை அனுபவித்தேன். நீங்களும் படித்து அனுபவியுங்கள்’ என்று சொல்வதுதான்”. – க. நா. சு (இலக்கிய வட்டம் இதழ் – 14)

    அப்படியாயின் விமர்சனத்தில் ஒரு படைப்பின் குறைகளை எடுத்துச் சொல்வதற்கு இடமில்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறது. அதுதானே அப்படைப்பை மேம்படுத்தப் போகிற ஆலோசனைகள். எனினும் ஒரு படைப்பை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னர், க. நா. சு. சொல்லும் “நான் படித்து இதை அனுபவித்தேன். நீங்களும் படித்து அனுபவியுங்கள்..” என்று சொல்கிற விஷயமொன்று இருக்கிறதல்லவா, அதுவன்றோ ஒரு படைப்பை முதலில் விமர்சனத்திற்கு தேர்வு செய்துகொள்ளத் தூண்டும் பிரமாணம்.

    அந்த வகையில் இந்துஜாவின் சிறுகதைகளை விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்ட அளவுகோல்தான் யாது என்ற கேள்வி எழுகிறது.

    இளம்பூரணன் தனது விமர்சனத்தில் இந்தப் புத்தகத்தை இப்படிச் சொல்கிறார்.

    “இந்துஜாவின் சிறுகதைத் தொகுப்பில் உள்ள 11 கதைகளில் ஒன்பது கதைகள் அந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலின் பக்கங்களைத் தாண்டி வெளியில் வந்து பேச முடியாத ஊமைக் கதைகள்.” – இளம்பூரணன்

    11 கதைகளில் 9 கதைகள் ‘வெளியில் வந்து பேச முடியாத ஊமைக் கதைகள்” ஆயின் அவற்றை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம்தான் என்ன? அத்தகைய அவசியம் ஏதும் இல்லாததால்தானே,

    – ஆரம்பம் – கதை எங்குமே வாசகனை இறுக்கிக் பிடிக்கவில்லை. அடுத்தடுத்துச் சம்பவங்கள் அடுக்கப்பட்டுக் கதை பல வெற்றிடங்களை விட்டு பல்டி அடித்துத் தாவி முடிகிறது.
    – அடுத்த கதை ‘நமக்கிட்டப்படி என்றிரு மனமே’. இக்கதையில் சொல்ல வந்த செய்தியைத் தலைப்பே மிக அழுத்தமாகச் சொல்லிவிட்டபடியால், இந்தக் கதையையும் வாசிக்கத் தேவையில்லை. – இளம்பூரணன்
    – அடுத்த கதை ‘ஜாகா பண்ணுங்க!’ இக்கதையில் என்ன இருக்கிறது? இரு தோழிகளுக்கிடையே நிகழும் உரையாடல்தான். – இளம்பூரணன்
    – அழுத்தமில்லாத அடுத்த படைப்பு ‘பகை’. . – இளம்பூரணன்
    – அடுத்து வாசகனைப் புண்படுத்திய கதை ‘புண்பட்ட நெஞ்சம்’. இதைக் கதை என்பதைவிட காலியான இடத்தை நிரப்பும் பயிற்சி எனலாம். – இளம்பூரணன்

    என, விமர்சனம் என்ற பெயரில் வார்த்தை வியர்த்தனம் செய்ய வேண்டி வந்திருக்கிறது. இத்தகைய சொல்லாடல்கள் எந்த வகையிலாவது அந்த இளம் எழுத்தாளரைப் பண்படுத்தும் என்று நம்புகிறாரா? அல்லது இவையாவும்கூட விமர்சனத்திற்கு தேவையே என்று நினைக்கிறாரா தெரியவில்லை!

    இங்கே, அரவின் குமாரின் சிறுகதைகளை ஒட்டி ஸ்ரீதர் ரங்கராஜ் எழுதிய மூன்று விமர்சனப் பத்திகளை இளம்பூரணின் மேலானப் பார்வைக்கு கொண்டுவர விரும்புகிறேன். அவை கீழே…

    – இக்கதைகளுள் பதில், எலி, அணைத்தல் மூன்றும் சிறுகதை என்பதற்கான வடிவத்தில் பெருமளவு அடங்குகின்றன. மற்றவை சிறுகதைகள் அல்ல என்று நான் கூறவில்லை. நான் குறிப்பிடுவது வடிவ நேர்த்தி. ஆனால், ‘நல்ல கதை’ எழுதுவதற்கு வடிவக்கச்சிதம், உத்தி, கூறுமுறை போன்றவை உதவி செய்யும் என்றாலும் அவையே பிரதானமல்ல. – ஸ்ரீதர் ரங்கராஜ்

    – ஏற்கெனவே குறிப்பிட்டபடி, அரவின் குமாரால் இந்த எதிர்மறை உணர்வுகளையும் சுவாரசியமான மொழியில் சொல்ல முடிகிறது. இருப்பினும் முதல் கதையையும் ஐந்தாவது கதையையும் ஒப்பிடும்போது அவருக்கான தனித்துவமான மொழி என்பது இன்னமும் வளர்ச்சி நிலையிலிருக்கிறது என்றே யூகிக்கிறேன். – ஸ்ரீதர் ரங்கராஜ்

    – மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயமாகக் குறிப்பிட விரும்புவது சிண்டாய் கதையின் கதைசொல்லி பெண்ணாக இருப்பது. ஆணாக இருந்துகொண்டு பெண்ணுடைய உணர்வுநிலைகளைத் துல்லியமாகச் சொல்லிவிடமுடியுமா என்பதில் எனக்கு எப்போதுமே சந்தேகம் உண்டு. தவிர்க்கமுடியாத சூழலில் மட்டுமே அந்தக் கோணத்திலிருந்து கதையைச் சொல்லவேண்டும் என்று நினைப்பவன் நான். தன்னுடைய மூன்றாவது கதையில் அதை முயற்சி செய்திருக்கிறார் அரவின். அது எந்தளவுக்குச் சரியாக வந்திருக்கிறது என்பதை எழுத்தாளரே தீர்மானித்துக் கொள்ளட்டும். – ஸ்ரீதர் ரங்கராஜ்

    ஸ்ரீதர் ரங்கராஜ் வைத்த விவர்சனத்தில்தான் என்ன நேர்த்தி!.. என்ன அழகு!.. என்ன Class!.. ஒரு நல்ல விமர்சனத்திற்கான மொழியும் தொனியும் இவருக்கு நன்கு கைவந்துள்ளது. இந்த அணுகுமுறையே ஒரு நல்ல விமர்சனத்திற்கான முகம் என நான் நினைக்கிறேன்.

    இளம்புரணன் தனது விமர்சனத்திலேயே கீழ்காணுமாறு ஓரிடத்தில் சொல்லியிருந்தார்.

    – ஒரு வாசகனின் வாசிப்புத் தரத்தைப் பொறுத்தே திறனாய்வின் தரமும் அமைகிறது. தீவிர வாசிப்பும் ஆழமான இலக்கியப் புரிதலும் கொண்ட வாசகனின் திறனாய்வு தீட்டப்பட்ட கத்தியாக அமைந்து துல்லியமாக அனைத்தையும் பதம் பார்க்கும். வெகுஜன ரசனைக் கொண்ட ஒரு வாசகனின் பார்வையானது மிக மேலோட்டமாக அமையும். வெறும் கதை எழுப்பும் மெல்லுணர்ச்சிகளில் களித்துக் கொண்டாடும் தன்மை கொண்டதாக இருக்கும். – இளம்பூரணன்

    இதற்கும் மேல் எனக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

    A book read by a thousand different people is a thousand different books. By – Andrei Tarkovsky

    நன்றி

    ஸ்ரீகாந்தன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...