கே.பாலமுருகன் கவிதை

 தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்

 

இதற்கு முன்

இங்கே தூக்கிலிடப்பட்டவர்களின்

கதைகள் இவை.

குற்றங்களை விலைக்கு

வாங்கத் தெரியாமல்

தூக்கில் தொங்கியவர்களின்

எளிய மக்களின் வசனங்கள் இவை.

 

கயிற்றில் தொங்கியவனின்

தடித்த நாக்கிலிருந்து வடியும்

எச்சிலில் ஊறிக்கிடக்கின்றன

வாழமுடியாத ஆயிரம் ஏக்கங்களின்

வரைப்படங்கள்.

ஆண்டான் எத்தி உதைத்த

விலை உயர்ந்த காலணிகளின்

அச்சு கரையாத நாக்குகள்

உயிரற்று தொங்கின.

 

வாய்க்குள்ளிலிருந்து அதிகபடியான

நீளத்தில் தொங்கும் நாக்குகள்

போவோர் வருவோரெல்லாம் இழுத்து இழுத்து

அசிங்கப்படுத்தியவை.

கணக்குக் காட்டுவதற்கும் இரக்கம் பெறுவதற்கும்

மேலோரால் வலுக்கட்டாயமாக

வெளியே இழுத்துக்

காட்சிக்கு வைக்கப்பட்டவை.

 

இன்று இந்த நாக்குகள்

துடைத்து துடைத்து ஓய்ந்து

சக்தி இழந்தவைகளாகத்

தூக்கில் தொங்கி

வெளியே தள்ளிப்போகவே

இலாயிக்கற்றவைகளாக இருந்தன.

 

இந்த நாக்கால் பயனடைந்தவர்கள்

பரிதாபத்துடன் நாக்குகளுக்குச்

சடங்கு செய்கிறார்கள்.

இரக்கத்துடன் நாக்கைத்

தொட்டுக் கன்னத்தில் அடித்துக் கொள்கிறார்கள்.

பரிதாபத்திற்குரிய நாக்குகள்

என லேபலிடுகிறார்கள்.

அதிகபட்சமான வேடதாரிகள்

தொங்கிய நாக்குகளை ஒருமுறை

தன் நாக்கால் நக்கி சாதனை படைக்கிறார்கள்.

நாக்குகளுக்கு மரணமில்லை என்பார்கள்

நாக்குகள் தியாகம் செய்தவை என்பார்கள்

நாக்குகள் போராட்டமிக்கவைகள் என்பார்கள்

நாக்குகள் அடுத்த ஜென்மத்தில்

மூக்காகப் பிறக்கட்டும் என்பார்கள்.

நாக்கிருந்தும் வக்கற்றவர்களாய்

இருப்பதை விரும்புபவர்கள்

ஒவ்வொருநாளும் தன் சுரணையற்ற நாக்கைப்

பத்திரமாக உள்ளே வைத்துப் பூட்டிக்கொள்கிறார்கள்.

தொங்கிய நாக்குகளைப் பற்றி

நன்றியுள்ள பிராணிகளாக வாக்குமூலம் கொடுத்துவிட்டு

பதுங்கிக் கொள்கிறார்கள்.

 

குற்றங்களை விலைக்கு வாங்கத் தெரியாதவன்

ஓரங்கட்டப்பட்டே பழகியவன்

ஒதுக்கப்பட்டு சிதைக்கப்பட்டவன்

குரலற்று ஒடுங்கியவன்

வாய்க்குள் கைகளையும் அதிகாரத்தையும் விட்டு வார்த்தைகள்

பிடுங்கப்பட்டவன்

கீழமட்டத்தில் அன்றாடங்களுக்காக அலைந்து திரிபவன்

தூக்கிலிடுவதற்கும் குற்றம் சுமத்தப்படுவதற்கும்

சமூகக் குப்பை என அடையாளம் காட்டப்படுவதற்கும்

நன்றி மிகுந்த சொந்த மக்களின் எச்சிலை

விழுங்குவதற்கும்

தகுதியுடையவனாகின்றான்.

 

அவனுடைய வெட்டப்பட்ட நாக்குகள்

பலரின் துரோகங்களுக்குச் சாட்சியாய்

தொங்கிக் கொண்டிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...